தோணி ஏத்திவிட்ட தொக்கம்பய..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2025
பார்வையிட்டோர்: 120 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முழிக்கும்போதே மனதில் தோன்றிவிட்டது இன்று ஏதோ நடக்கப்போகிறது என்று. அந்த எண்ணம் எப்படி வருகிறது என்று தெரியவில்லை. வரும்போது வெறுமனே வராமல் தனக்குத்தானே இன்னொரு மனநிலையையும் சேர்த்துக்கொண்டு வருகிறது. இனம்புரியாத ஒருவித நெருக்கடி மனநிலை அது. இயல்பைத் தொலைக்கும் அந்த ஒன்றுதான் இந்த எண்ணத்தை தீவிரமாக்கிக்கொண்டு எல்லா வழியிலும் யோசிக்கவைத்து வெப்பமூட்டி என்னை வியர்க்கவைத்து மனத்தை இப்போது இருளாக்கிக் கொண்டிருக்கிறது.

கட்டிலில் படுத்திருந்தவாறே கைகளை இரண்டு பக்கமும் நீட்டி படக்கென்று சோம்பல் முறித்தேன். ‘அம்மா’ என்றொரு திடீர் வேதனைக்குரல். என்னதுதான். கதவு திறந்திருந்ததுபோல! வலது கையின் விரல்மொழிக்கட்டில் இடித்துக்கொண்டேன். நல்ல வலி. விரலிலோ அல்லது முழங்கையின் மணிக்கட்டிலோ நங்கென்று இடித்துக்கொள்ளும்போது ஒட்டுமொத்த உயிரும் ஒரு நிமிடம் துடித்து இழந்து திரும்பி வருகிறது. அதுவும், சுத்தியலால் ஓங்கி உயிர் ஆணியின் தலையில் அடித்ததைப்போல ஒரு வலி. ஒரு நிமிடம் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். இந்த திடீர் வலியில், மனதிலிருந்த அந்த எண்ணம் கொஞ்சம் மறைந்திருந்தது. ஆனால் இதோ மீண்டும் வந்துவிட்டது.

“என்னாச்சி?” என்றாள் என் தாம்பத்யதாரிணி, ஏதோ துடித்தெழுந்து உடனே கேட்பதுபோல.

“என்ன?” என்றேன் ஆர்வம் இல்லாமல்.

“அம்மான்னு ஏதோ உங்க அம்மாவைக் கூப்பிட்டது மாதிரி இருந்தது. பால்குடி ஞாபகம் இன்னும் மறக்கலியா?”

“ஏண்டி… புருசன் ஏதோ அம்மான்னு அடிபட்டு கத்துறான். படக்குன்னு என்னாச்சிங்கன்னு ஒரு வார்த்தை நெஞ்சிலேயிருந்து வரவேண்டாமா? இப்படி ஆடி ஓஞ்சி கேக்குறே. பாத்தா நீதான் கதவைத் தொறந்து வெச்சிருப்பே போலயிருக்கு… நல்லா அடிபடட்டுமுன்னு..”

“ஆமா… நல்ல கதையாயிருக்கெ இது. அம்மான்னு கூப்பிட்டா நான் எதுக்கு என்னன்னு கேக்கணும்? அஞ்சு இல்லாட்டி அஞ்சலின்னு கூப்பிட்டிருந்தா பாஞ்சி எழுந்திருச்சி வந்திருப்பேன். நீங்க உங்கம்மாவை கூப்பிட்டீங்க. அதான் அவங்க அடுத்த ரூம்லெதானே படுத்திருக்காங்க எழுந்திரிச்சி வரட்டுமேன்னு இருந்தேன். கதவுன்னா, விடிஞ்சிபோச்சி, பாத்ரூம் போகலாமுன்ன எழுந்திருச்சி இப்பொதான் பொயிட்டு வந்து படுத்தேன். அதுக்காக திறந்தேன்.

அதிகாலை அஞ்சி மணிக்கே ஆரம்பிச்சிட்டியா உன் புராணத்தை. ஒன்னச்சொல்லி குத்தமில்லே. அந்த புரோக்கர் நாயி கையிலெ கெடைக்கட்டும். ‘நல்ல பொண்ணுங்க. சீமை அழகி மாதிரி. சிரிச்சா சில்லறையா கொட்டும். தங்கத் தேன்குடங்க..’ என்று என்னென்னவோ சொன்னான். மதி மயங்கிப் போயிட்டேன். ‘ஒன்னச் சொல்லி என்ன பண்ணெ. தோணி ஏத்தி விட்டானெ அந்தத் தொக்கம்பய… அவனச் சொல்லணும்.’ மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

இந்தப் பழமொழிக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. அம்மா அடிக்கடி சொல்வாள். நானோ என் அண்ணன்களோ ஏதாவது தப்பு செய்து விட்டு திட்டு வாங்கும் சூழ்நிலையில் நின்று கொண்டிருக்கும்போது அம்மா இப்படிச் சொல்வாள். ‘இனி அவ்வளவுதான்’ என்று அர்த்தம் போல. இந்தத் திட்டு எங்களுக்கு மிகவும் பழகிப்போன ஒன்று. என்ன அர்த்தம் என்று தெரியாமல் அதை நாங்கள் ரசித்தோம்; வணங்கினோம். பின்னே.. அம்மாவின் அடி உதையில் இருந்து அதுதானே தப்பிக்க வைத்தது.

அம்மா இதை சீக்கிரமாக சொல்லிவிட்டாள் என்றால் ‘சரி இது சின்ன தப்பு போல’ என்று மனது சந்தோசப்படும். ஆனால் அவளே பயங்கரமாகத் திட்டி கையில் கம்பு, கரண்டி எதையாவது எடுத்துக் கொண்டு இதைச் சொல்லிக்கொண்டிருந்தால் நாங்கள் கொஞ்சம் ஒதுங்கி அடக்கமாக பாவமாக நின்று கொண்டிருந்துவிட்டு மெதுவாக வீட்டுக்குள் நுழைய வேண்டும். அதுவும் நேரே அடுப்பங் கரைக்குள். ஏனெனில் அங்குதான் அம்மா என்னை அடிக்க மாட்டாள். அங்கு வந்தாலெ ‘பொகையிலெ நிக்காதெடா போ. போயி திண்ணையிலெ உக்காரு’ என்பாள். அப்பாடா தப்பியாகி விட்டது என்று வெளியே வந்துவிடலாம்.

இதிலிருந்து எப்படி தப்பி வெளியே வர? ஒன்னையச் சொல்லி என்ன பண்ண? தோணி ஏத்தி விட்டானே தொக்கம்பய! அவனைச் சொல்லணும். சலித்துக்கொண்டேன்.

‘என்ன? சத்தத்தையே காணோம். எனக்குக் கேட்காமெ என்னைத் திட்டுறீகளா? வாய்க்குள்ளேயே..’

வேண்டாம். ஏற்கனவே என் மனநிலை இன்று ஏதோ நடக்கக்கூடாது நடக்கப்போகிறது என்பதாக மருண்டு போயிருக்கிறது. அந்தப் பிரச்சனையை தெரிந்தே இப்போதிலிருந்தே நான் உருவாக்கிக் கொள்ளக்கூடாது என முடிவு செய்துவிட்டு, ‘என்னடா… கோபமா?’ என்றேன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீங்க பண்றதுதான் ஒண்ணுமே பிடிக்கலை. ஆவூன்னா உங்க அம்மாவையே கூப்பிடுறீங்க? பக்கத்துலெதானே நா படுத்திருக்கேன். என்னை ஒரு வார்த்தை சொல்லி கூப்பிடுறீங்களா செல்லமா? அஞ்சுன்னு கூப்பிடாட்டியும் நீங்க வெச்ச செல்லப் பேரையாவது சொல்லி கூப்பிடலாமுல்லே… ஆஷான்னு. அதுவுமில்லை” என்று சொல்லிவிட்டு நெஞ்சு முடிகளை வேரோடு பிடித்து இழுத்தாள்.

“ஆ” என்றேன்.

“பாத்தீங்களா.. பாத்தீங்களா? இப்பக்கூட ஆங்குறீங்கெ. அஞ்சுன்னு சொல்லலை. இல்லாட்டி ஆஷான்னு கூட!”

‘ஒன்னையைச் சொல்லி என்ன பண்ண? தோணி ஏத்தி விட்டானே அந்தத் தொக்கம்பய… ம்ம்.’

“இல்லெடா.. மொதல்லெ கூட அஞ்சுன்னுதான் சொல்ல வந்தேன். அது அம்மா ஆயிடுச்சி. இப்போ நான் ஏன் ஆன்னு சொன்னேன்? ஆஷான்னு சொல்லவந்தேன். அது சுருங்கி ஆன்னு ஆயிடுச்சி. இதுக்குப் போயி கோச்சிக்கிறீயே?”

“அதானெ பாத்தேன்.”

கால்களை அவள் மேலே போட்டுக்கொண்டு இழுத்து அவளை என் முகத்துக்கெதிரே வைத்துக்கொண்டு கைகள் அவள் பின்னால் அவளுடைய பின்னலை அவிழ்த்துக்கொண்டிருக்க, அவள் கண்களைப் பார்த்தேன்.

“என்ன? அஞ்சு மணிக்கு ரொமான்ஸா? எந்திரிங்க. நேரமாச்சி. இந்த ஜெமினித்தனம் எல்லாம் அதிகாலையிலெ வரணும் இல்லாட்டி அர்த்தராத்திரியில் பன்னெண்டு மணிக்கி வரணும். அஞ்சுமணிக்கி வரக்கூடாது. இப்போ வந்தா ஒண்ணும் நடக்காது. எனக்கு வேலையிருக்கு. மாட்டெ அவுத்துக்கட்டணும். சாணி தெளிக்கணும். பாத்திரமெல்லாம் கழுவணும். கொல்லக்கிப் பொயிட்டு வரணும். அதுனாலெ எந்திரிங்க.”

இதுதான் அவள். பழிப்புக்காட்டுவாள். பந்தா பண்ணுவாள். நானும் எப்படியும் ஒரு அரைமணி நேரமாவது ஆளை தாஜா பண்ணி காரியம் சாதிக்கவேண்டியிருக்கும். ஆனால் அட்டகாசமானவள். வேகமாக ஈடுகொடுத்து போரிடும் ஒரு முழு வீரனின் சாமர்த்தியம் தெரியும் அவளிடம்.

“சரி. ஏதோ கவிதை எல்லாம் எழுதினியே அதையெல்லாம் என்கிட்டே காட்டவே இல்லை. கள்ளப்புருஷன்ட்டெ காட்டலா முன்னு வீட்டுக்குள்ளே ஒளிச்சி வெச்சுருக்கியா?”

“ஆமா. நேத்து நைட்டுகூட வந்தாரு அவரு. நீங்க நல்ல தூக்கம். சரி கட்டிக்கிட்ட புருஷனாச்செ எழுப்பி அவரை அறிமுகப்படுத்தி வைக்கலாமேன்னு பாத்தா வந்து படுத்தவொடன்னே நிம்மதியா தூங்க ஆரம்பிச்சிட்டிங்க நீங்க. சரி பார்ட்டிக்கி நல்ல டயர்டு போல, இதுதான் சமயமுன்னு அவரோட ஜாலியா இருந்துட்டு அனுப்பி வெச்சுட்டேன். சும்மா சொல்லக்கூடாது ஆளு. சூப்பருதான்.”

செல்லமாக அவள் மார்பகங்களை முட்டினேன். பின்புறமிருந்த கைகளால் அழுத்தி நடுமுதுகில் கோடு இழுத்தேன்.

“இப்படியே செத்துப்போகலாம்போல இருக்கு!” என்றவள் என்னை இறுக்கமாக அணைத்துக்கொண்டு “எனக்கு மனசே செரியில்லீங்க, காலையிலெ இருந்து” என்றாள்.

“அய்யோ என்னாச்சி? உனக்குமா?”

“ஏன் உங்களுக்குமா?”

“ம்ம். காலையில் ஏதோ கனவு. அது முடியும் போது எனக்குள் இருந்த மனநிலை என்னை அப்படி யோசிக்கவைத்தது” என்றேன்.

“அப்படியா!” என்றவள், தொடர்ந்து “எனக்கும் அதேதான். ஆனால் கனவெல்லாம் இல்லை. அதிகாலை எழுந்து பாத்ரூம் போனேனா… ஜன்னலுக்கு வெளியிலெ ஏதோ கோட்டான் கத்துற மாதிரி சத்தம். இந்தக் கோட்டான் இப்படி கத்தக்கூடாதுங்க. நல்லதில்லைன்னு பெரியவுங்க சொல்லுவாங்க. அதான் மனசே செரியில்லை” என்றாள்.

இரண்டு பேருமே எதையோ நினைத்துக்கொண்டு அப்படியே இருக்க, அம்மான்னு ஒரு அழைப்புக்குரல். தூக்கக் கலக்கத்தில்.

“எந்திரிங்க. ஆகாஷ் வந்திட்டான் பாருங்க. அத்தை மாமா எந்திரிச் சிட்டாங்க போல. விடுங்க.”

ஆகாஷ் என் ஐந்து வயது மகன். எழுந்துவந்து என்னிடம் படுத்துக் கொண்டான். மெல்ல அவன் தலையை வருடியபடி படுத்துக் கிடந்தேன். ஒருநிமிடம் அவளும் அப்படியே படுத்துக்கிடந்துவிட்டு என் கைகளைக் கிள்ளிவிட்டு எழுந்து போய்விட்டாள்.

“இன்னும் கிளம்பலியா நீங்க? என்னதான் பண்றீங்க? நானும் காலையிலெ எந்திரிச்சி எல்லா வேலையையும் முடிச்சிட்டு கெளம்பிட்டேன். அத்தை மாமா கூட ரெடி. நீங்க அப்படி என்னதான் பண்றீங்க?”

“இதோ வந்துட்டேன்டி. அம்மா அப்பால்லாம் எங்கெ? பையன் எங்கெ? மணி ஒன்பது ஆச்சி. எந்த பஸ்சு நமக்கு?”

“ம்ம். இவ்வளோ நேரம் வெட்டி முறிச்சிட்டு இப்போ வந்து கேக்க வேண்டியது ஆயிரத்தெட்டு கேள்வி. எல்லாம் முக்கத்துக்கு போயிட்டாங்க. ‘எஸ்விஎஸ்’ தான் நமக்கு. மத்த எல்லா பஸ்சும் போயிருச்சி.”

சனீஸ்வரன் கோயிலுக்குப் போகிறோம். தொடர்ந்து ஒன்பது வாரம் அங்கே சென்றால் எல்லாத்துக்கும் நல்லது என்று எவனோ ஒரு ஜோசியக்காரன் சொல்லிவிட்டான் அவளிடம். இதோ இன்று வரை மூன்று வாரமாகிவிட்டது. இன்னும் ஆறு வாரமிருக்கிறது.

கோயிலுக்கெல்லாம் சென்று திரும்பும்வரை மனது அந்த அதிகாலை எண்ணங்களைப்பற்றி எதுவும் நினைக்கவில்லைதான். சாமி கும்பிட்டுவிட்டு திரும்பும்போதுதான் என்னமோ தெரியவில்லை மனதுக்குள் அது திடுமென மிகுந்த அழுத்தமாக வந்து அமர்ந்து கொண்டது.

கோயில் வாசலில் இருந்தான் ஒரு கிளிஜோசியக்காரன். பையனும் அவளும் அடம்பிடித்து என்னை அழைத்துச்சென்று விட்டார்கள். எனக்கு, இதிலிருந்து ஏதும் அந்தப் பிரச்சனை வந்து விடக்கூடாதே என்று பயம். யோசித்தேன். சரி என்று அவளோடு சென்றேன்.

அவளுக்கென்று எப்போதும் கிளி ஜோசியமோ இல்லை வேறு எதுவுமோ அவள் பார்த்துக்கொள்வது கிடையாது. எனக்குத்தான். எனக்கு மட்டுமே எப்போதும் பார்ப்பாள்.

கிளியைப் பார்த்தால் பாவமாக இருந்தது எனக்கு. ‘ஒன்னையச் சொல்லி என்ன பண்ண? தோணி ஏத்திவிட்டானெ அந்த தொக்கம்பய… அவனைச் சொல்லணும்.’

கிளி ஜோசியக்காரன் என்னைப் பார்த்தான். பாவமாக பார்ப்பது போலிருந்தது. என்ன? இவனும் சொல்கிறானா? உன்னையச் சொல்லி என்ன பண்ண. தோணியேத்திவிட்ட தொக்கம்பயலெச் சொல்லணும்ன்னு.

கிளி வெளியே வந்தது. ஆறு கார்டுகளைத் தள்ளி ஏழாவதை எடுத்து அவன் கையில் போட்டது. ஆஷாவுக்கு சந்தோசம். பாத்தீங்களா? ஏழு என் ராசி நம்பர் என்று தன் கண்களால் எனக்கு ஞாபகப் படுத்தினாள்.

கார்டை பிரித்தான் அவன். உள்ளே முருகர் தன் இரண்டு மனைவிகளோடு சிரித்து சந்தோசமாயிருந்தார். ‘பரவாயில்லை இரண்டையும் அருகில் வைத்துக்கொண்டு சந்தோசமாக வேறு இருக்கிறார்; கொடுத்துவைத்தவர்தான்’ என்றேன்.

சிரிக்க முற்பட்ட என் மனைவிக்கு, காதில் விழுந்த அந்த வார்த்தைகள் அதிரடியாய் அதிர்ச்சியளித்திருக்க வேண்டும். முகத்தைக் கூர்மை யாக்கினாள். நானும் காது கொடுத்துக் கேட்டேன்.

முதல் வார்த்தையே என் காதுக்குள் இடியைப் போட்டுவிட்டது. மற்றதெதுவும் எனக்குக் கேட்கவில்லை.

அவன் சொன்னது இதுதான். ‘இவருக்கு இரண்டு சம்சாரம் இருக்க வேண்டுமே…’

காசை எடுத்து அவனிடம் எறிந்துவிட்டு என்னிடம் வந்தாள். பார்வையில் பத்திரகாளியாய்த் தெரிந்தாள்.

பையன் சித்தி சமாச்சாரத்தைக் கவனித்துக் கேட்டுவிட்டு வேகமாக ஓடினான், கோயில் பிரகாரத்தில் அமர்ந்திருந்த தாத்தா பாட்டியிடம் அதைச் சொல்ல! அவ்வளவுதான்!

“டேய்….நில்லுடா.” நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அது நடந்து விட்டது.

வளைவில் வந்து திரும்பிய ஓர் காரின் முன் அடிபட்டுக் கீழே விழுந்து விட்டான். நல்லவேளை. கார்க்காரன் கொஞ்சம் மெதுவாக வந்ததாலும் பார்த்தவுடன் காரை மெதுவாக்கியிருந்ததாலும் கீழே விழுந்த சிராய்ப்புகளோடு விழுந்து அழுதுகொண்டிருந்தான்.

எனக்குக் கோபம் தலைக்குமேலே ஏறிக்கொண்டிருந்தது. அதற்குள் அவளும் வந்த, கார்க்காரனைத் திட்டிக்கொண்டே அவனைத் தூக்கினாள். பக்கத்தில் இருக்கும் ஏதாவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்றால் அந்த கார்க்காரனே அந்த மருத்துவ மனையைக் காட்டி எங்களை அழைத்துக்கொண்டு சென்றான்.

காலையிலிருந்தே நினைத்து பயந்துகொண்டிருந்தது நடந்துவிட்டது. அவள் முகத்தில் பயக்களை. இருண்டு போயிருந்தாள்.

கடுகடுப்பாயும் இருந்தது. அவள் தோளில் கைவைத்து ‘இதெல்லாம் ஒண்ணுமில்லேடா… லேசான அடி அவ்வளவுதான்.’

அம்மா அப்பா பதறினார்கள். ‘ஒண்ணுமில்லெம்மா. சின்ன சிராய்ப்பு அவ்வளவுதான்.’

உள்ளிருந்து டாக்டர் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் முகத்தில் சின்னதாய் சில ஐய அலைகள் பரவியடித்தன.

“அட, நீ, நம்ம பாபு இல்லே.. எப்படிடா இருக்கெ? நல்லாயிருக்கியா?” என்றவர், “சாரி எப்படி இருக்கீங்க?” என்றார்.

எனக்கும் முதலில் அந்த மின்னல் விசிறியது. ஆனால் அடுத்த வினாடியே எனக்குள் கரைந்துபோய் வீட்டுக்கோயில் ஞாபகம் வந்துவிட்டது. பன்னிரெண்டு வயதில் கொடுத்தது. இன்னுமா ஞாபகம் இருக்கும்?

“ம்ம். பாபுதான். எப்படியிருக்கீங்க? என்ன இங்கே. டாக்டர் ஆயிட்டீங்களா? இங்கே எப்போ வந்தீங்கெ?” ஆர்வமாகக் கேட்டேன்.

“இங்கே வந்து அறு மாதம் ஆச்சு. சொல்லுங்க நீங்க எப்படியிருக் கீங்க? இதான் உங்க ஒய்பா? அறிமுகப்படுத்துங்களே. ஆகாஷ்தான் உங்க பையனா பாபு? அப்படியே உங்களை மாதிரியே இருக்கான். அதே அந்த கருவக்காய் உதடு. கலக்குறீங்க. ஆமா. உங்க பேரு..?” என்றார் என் மனைவி பக்கம் திரும்பி.

“ம். நான் ஆஷா. இல்லெ.. அஞ்சலி.”

“என்ன? ஆஷாவா இல்லை அஞ்சலியா? ரெண்டையும் சொல்லுறீங்க?”

“அஞ்சலிதான். ஆஷான்னு நான் செல்லமா கூப்பிடுவேன் அதை சொல்லுறா. பிஎஸ்சி படிச்சிருக்கா. கவிதையெல்லாம் கூட எழுதுவா.’

“வெரிகுட். அசத்துறீங்க. பாபுக்குக்கூட கவிதையெல்லாம் ரொம்ப பிடிக்குமே. ம்ம். நல்ல ஜோடிதான். பையன் நல்லாயிருக்கான். ரெண்டு இஞ்செக்சன் போட்டுருக்கேன். ஒண்ணும் பிரச்சனை இல்லை. கூட்டிட்டுப்போங்க, ஒரு நாளைக்கி பிரீயா இருக்கும் போது கண்டிப்பா எங்க வீட்டுக்கு வாங்க. இப்போ நேரம் இல்லெ. சாரி பாபு. பாப்போமா… பணமெல்லாம் குடுக்கவேண்டாம். ஓகேயா. பை பா.”

படபடவென்று பேசுகிறார். கொஞ்சம் கூட மாறவில்லை.

‘ஏண்டா இப்படிப் பண்ணினே? கொரங்கு. கோயிலு வீட்டுக்குள்ளெ வெச்சு இப்படில்லாம் பண்ணலாமா? தப்புல்லே.. சாமி கண்ணைக் குத்திடும். போயி பத்துகாசுக்கு ஒரு காசு முட்டாயி பத்து வாங்கி ஒனக்கு படைக்கிறேன்னு சாமிகிட்டே வேண்டிக்கிட்டு வா. போ. போ கொரங்கு. வாயைப் பாரு. கருவக்கா ஒதடு.’

பஸ்சில் வரும்போதெல்லாம் நான் எதையோ நினைத்துக்கொண்டு வந்தேன். பையன் அவள் மடியில் படுத்துக்கிடந்தான். அப்பா அம்மா பின்னிருக்கையில் அமர்ந்திருந்தார்கள்.

கட்டிலில் அமர்ந்து விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“இனிமே அந்த சனி கோயிலுக்கு போகவேண்டாம். அந்தக் கோயிலு சரியில்லே.. வேற கோயிலுக்குப் போகலாம்” என்றவள், “அந்த டாக்டர் ரொம்ப அழகாயிருக்காங்கல்லெ, பேரு கூட ஆஷாவாமே! உங்களுக்குத் தெரியுமா?” என்றாள் என் கண்களைப் பார்த்து.

காலையில் இருந்த மனநிலை இப்போதுதான் முழுமையாக மனதுக்குள் வந்து குடி அமர்ந்தது.

இனி பேசாமல் ஒரு தட்டி எழுதி வைத்துவிட வேண்டியதுதான்.

“என்னையச் சொல்லி என்ன பண்ண? தோணி ஏத்திவிட்டானே அந்த தொக்கம்பய…..”


இந்தக் கதைகளை வாசித்து வரும் போதே கதை சொல்லியின் முகம் மெல்ல மெல்லத் தெளிந்து வருவது வாசகனாகிய எனக்கு மகிழ்வூட்டும் அனுபவமாக இருந்தது. பதினைந்து கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பின் கதைகள் எல்லாம் புத்தம் புதியனவாக இருக்கின்றன. எனக்கு இவர்மீது நல்ல நம்பிக்கை ஏற்படுகிறது. சிறுகதை வடிவம் கூடி வருகிறது. செய்நேர்த்தி தெரிகிறது. சமூக அக்கறை புலப்படுகிறது. மொழி கைவசம் இருக்கிறது. முனைப்பும் ஊக்கமும் தேடல்களும் இவரை மேற்கொண்டு நல்ல உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் எனும் நம்பிக்கை பிறக்கிறது. – நாஞ்சில் நாடன்

– மருதம், முதற் பதிப்பு: டிசம்பர் 2006, எம்.கே.குமார் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *