புன்னகைச் சன்னதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 1, 2025
பார்வையிட்டோர்: 328 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உள்ளே வந்து அமர்ந்துவிட்டேன். நானாய் எழுந்து வெளி வரும்வரை யாரும் என்னைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். இது எனக்கு மட்டுமேயான இடம். எல்லோ ருக்கும் தெரியும் எனக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது என்று. கெட்ட பழக்கம் என்றவுடன் நீங்கள் முகம் சுழிக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். முகம் சுழிக்காதீர்கள் அது நம்முடைய எல்லையை வரையறுத்துவிடும். இதுவரைதான் நாம் என்று எல்லோருக்கும் சொல்லிக்காட்டிவிடும். நமது மனம் கொண்ட நல்ல கெட்ட எண்ணங்களின் நீட்சியை வெளிச்சம் போட்டு உணர்த்திவிடும்.

அந்த ஆறு செவ்வக முகங்களும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தன. சிரிக்கின்றனவா என மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்தேன்; சிரிக்கின்றன. இவை எப்பவும் இப்படித்தான். நான் சந்தோசமாக இருந்தால் அவையும் மெல்லிய புன்னகையுடன் இருக்கும். நான் வருத்தமாக இருந்தால் அவைகளும் ஆழ்ந்த யோசனையில் இருக்கும். படக்கென்று ஏதாவது நான் பேசி விட்டால் அக்கறையுள்ள மனைவி போல முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளும்.

விடாமல் அவற்றின் கண்களையே பார்த்தேன். சிரிப்பது தெரிந்தது. சிரிப்பல்ல அது; புன்னகை! எதுவுமே இல்லாமல் எல்லாம் இருப்பது போன்ற புன்னகை. எல்லாம் இருந்தும் எதுவும் என்னதில்லை என்பது போன்ற புன்னகை. அவற்றிற்கு எதுவுமில்லை. ஏன் கண்கள் கூட இல்லை. காது மூக்கு எதுவும் இல்லை. ஆனால் முகம் இருக்கிறது. முகத்தில் ஆங்காங்கு சிறுசிறு பருக்கள். மேலிருந்து கீழாய் இடமிருந்து வலமாய் நிறைய கோடுகள். நெற்றியில் இருந்து தாடை வரை எங்கேயும் அவற்றிற்கு அடையாளம் இல்லை. இதுதான் கண் என்றோ இதுதான் மூக்கு என்றோ உங்களால் சொல்ல முடியாது. என்னால் முடியும். அதன் மூக்கைச் செல்லமாய்க் கிள்ள முடியும். காதைத் திருக முடியும். கன்னத்தில் அறைந்துவிட்டு கண்களில் முத்தமிட முடியும்.

பார்த்துக்கொண்டேயிருந்தேன். அதன் புன்னகை குறையவே யில்லை. கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து கொண்டே வந்தது. ஆறு முகங்களிலும் புன்னகை. நீளமான புன்னகை. கண்களை மூடி விட்டேன். புன்னகை தவழ்கிறது. மெல்ல மெல்ல வந்து என் முகத்தினில் அது குடியமர்ந்து படர்ந்துகொண்டே வருகிறது. நானும் புன்னகைக்கிறேன். என் முகம் முழுதும் புன்னகை. உடல் முழுதும் புன்னகை. மனம் முழுதும் புன்னகை. ஒரு குழந்தையின் பிஞ்சு விரல்களின் தொடல் போன்ற ஸ்பரிசம், கள்ளமில்லா அந்த ஸ்பரிசம் உடலெங்கும் பரவுகிறது.

ஆறு. தண்ணீர் வருகிறது இப்போது. நீண்ட காலம் வராமல் காய்ந்து கிடந்து தண்ணீரைப்பார்க்கிறது. தண்ணீர் பெரியதொரு பாம்பு போல பரவி வருகிறது. முகமில்லாத பாம்பு. உடல் முழுதும் அதன் முகம். முதற்பரவலை உறிஞ்சுக்கொள்கிறது மணல். மொத்தமாய் வரும் அவ்வலையில் முதற்படர்வுகள் மூச்சை இழந்தாலும் மறுபடி பிழைத்து உறிஞ்சியவைகளை மூழ்கடித்து புதுத்தரையைத் தடவி ஆரவாரத்தோடு போகின்றன அவை.

மூளிச்சிலை இப்போது புன்னகைக்க, மனம் இருபது வருடங்களை விழுங்கி முன்னே சென்று கொண்டிருக்க, காட்டாற்று வெள்ளமாய் அது உள்ளே பாய்கிறது.

ஊரே கலவரப்பட்டுக்கிடந்தது. அடித்துப்பிடித்து ஓடிவந்து கொண்டிருப்பாள் அம்மா. யாரேனும் சொல்லியிருக்கக்கூடும். அவளது மகனுக்கு இப்படியா நேர்ந்தது என்பதில் உடைந்து போயிருக்கக்கூடும் அவள். எனக்கேதாவது என்றால் அவளுக்குத் தாங்காது. அழத்தெரியாத, கத்தி கூப்பாடு போடத்தெரியாத அம்மா. பார்வையில் கரைத்துக்கொள்வாள். வேதனையை மலைப் பாம்பென மெலிது மெலிதாக விழுங்கிக்கொள்வாள். வேகமாக சுழன்று ஓடும் ஆற்றின் அடியில் கிடக்கும் கூழாங்கற்களைப் போல அவைகளால் பண்படுத்தப்பட்டவள் அவள்.

அப்பா இறந்த அன்று அவள் அழவே இல்லை. கால் மாட்டில் உட்கார்ந்து கொண்டு காலை அழுத்தி விட்டுக்கொண்டே இருந்தாள். ‘பாவம்…. பித்துப்பிடிச்ச மாதிரில்லெ உக்காந்துருக்கா..’ என்று பேசிக் கொண்டு வெளியில் சென்ற பெண்கள், ‘பாத்தியாடி.. தெக்குச் சீமைக்காரின்னா சரியாத்தானெ இருக்கு. கல்லாட்டமிள்ளெ உக்காந்துருக்கா..’ என்றவாறே நடந்தார்கள். வெளியில் வந்த நான் அதைக் கேட்டேன். அம்மா அடிமனதுக்குள் அமர்ந்துவிட்டாள்.

நான் மொக்கைக்கோயிலுக்குள் இருந்தேன். எப்போது எவர் கட்டியதோ தெரியவில்லை. கூரையில் ஏராளமான செடிகள் முளைத்துப் படர்ந்திருக்க, நான்கு சுவர்களும் கரைந்து சரிந்துவிடும் நிலையிலிருந்தன. எனக்குத் தெரிந்து எவரும் அங்கு வந்ததே கிடையாது. சுற்றிலும் கருவேலம் மரங்கள். ஆங்காங்கு நிறைய காட்டாமணக்குச்செடிகளும் எருக்கஞ்செடிகளும். கணக்கற்ற பட்டாம் பூச்சிகள் எருக்கம் பூக்களில். வண்டுகளும் தும்பிகளும் மிகுதி. யாரும் வராத இதற்குள் எதற்கு நான் வரவேண்டும்? எப்படி இப்படியெலலாம் நடக்கிறது? இவ்விடத்தினை எனக்கு அளித்தவர் யார்? பாம்பு பேய் பூச்சி என்று மனிதமக்கள் வரத் தயங்கும் இக்கோவிலுக்குள் நான் இன்று ஏன் ஒளிந்திருக்க வேண்டும்? ஏன் இதைப் பார்க்கவேண்டும்? எது என்னை ஆட்டுவிக்கிறது?

இரண்டு கைகளையும் நெஞ்சோடு இறுக்கிக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். இந்நேரம் என்னைத் தேடி ஆட்களை ஏவி விட்டிருப்பார்கள். கூட போலீஸும் வரும்! அதிகாரமிருக்கிறது. நான் மாட்டினால் எப்படியும் ‘உள்ளே’ தள்ளிவிடுவார்கள். பஞ்சாயத்தும் வைப்பார்கள். அப்பா அம்மாவின் கௌரவ வாழ்க்கையின் முடிச்சுகளை எரித்து தண்டனை தருவார்கள். சாம்பல் மிச்சமாய் மிஞ்சும்போது அதை அள்ளிப் பூசிக்கொண்டு சந்தோசமாய் சிரிப்பார்கள். நான் அழ வேண்டும். என்னைக் கண்கலங்காமல் வளர்த்த என் தாய் அழவேண்டும். இதுதான் அவர்களது குறிக் கோளாய் இருக்கும்.

எப்படி இருக்கும் அந்த இடம் இப்போது? எல்லோரும் போயிருப்பார்களா? வெளி ஊர் ஆட்கள் இருக்கலாம். உள்ளூரில் எவரும் இருக்க மாட்டார்கள். செல்வமூர்த்தி இருப்பான். ஈஸ்வரநாதன் இருப்பான். பிச்சைக்கார நாய்கள். மானம் விற்று உயிர் வாழ்பவர்கள். அந்நாய்களுக்கு எலும்புத்துண்டை எடுத்துப்போட்டு விட்டு அவர்களுடைய வீட்டுக்குள்ளும் புகுந்து ஈஷி விட்டுப் போவான் அவன். அவர்களுக்கு இதெல்லாம் தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை. வாசம் முழுவதும் அவனுடன்தான். நடு வீதியில் வைத்து சட்டையைப் பிடித்து இழுத்து என் கன்னத்தில் அறைவார்கள். ‘ஒன்னை அடிச்சா யாருடா இருக்கா கேக்க, அனாதைப் பயலே’ என்பார்கள். அன்றிரவு அவர்களுக்கு ‘சரக்கு’ கிடைக்கும்.

தனபால்தான் என்னை இங்கு அழைத்து வந்தான். முதலில் அவன் வீட்டிற்குத்தான் நான் செல்வதாக இருந்தேன். வழியில் திரும்பி இங்கே வந்துவிட்டோம். அதுவும் சரிதான். எனக்கு ஒன்று என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை. அம்மா மட்டும்தான். எப்படியாவது பிழைத்துக்கொள்வாள். அவனுக்கு? அப்பா இல்லாதவன். வயதான அம்மாவும் மூன்று தங்கைகளும். அங்கே வந்து இவர்கள் ஏதாவது செய்தால்? பாவம். சொல்லமுடியாது இந்நேரம் அவன் வீட்டிற்கும் போயிருப்பார்கள். அவன்தான் என் கூட்டாளி என்று ஊருக்கே தெரியும். அவனை ஒன்றும் செய்துவிடக்கூடாது.

அவனும் நானும் ஒன்றாகப் படித்தவர்கள்தான். இருவருமே கணக்குப்பாடத்தில் இறுதித்தேர்வில் நூறு மதிப்பெண்கள். வீட்டுச் சூழ்நிலை காரணமாக துடுப்பு போடப் போய்விட்டான் அவன். நான் மேலே படிக்கப்போனேன். விடுமுறைக்கு வந்தபோதுதான் இது நடந்துவிட்டது.

தனபால் வீட்டிற்குப் போனாலும் அவனை ஏதும் செய்யப் பயப்படுவார்கள். அவர்களுக்குத் தெரியும் அது ஆபத்து என்று. மீனவசாதி அவன். யாரை நம்பியும் வாழாதவர்கள்; எதிலும் கலந்து கொள்ளாதவர்கள். அவர்களிடம் பிரச்சனை வைத்துக்கொண்டால் நாளைக்கு இவருக்குத்தான் அது பேராபத்து. சாதிப் பிரச்சனையாகக் கூட மாறலாம். ஓட்டும் கிடைக்காமல் போகலாம்.

காலை ஏதோ நுணுக்கி கடிப்பது போலிருந்தது, காலை இழுத்துக் கொண்டேன். வெடிப்புகளில் பூச்சிகளும் எறும்புகளும் மிகுந்திருந்தன. ஒரு சுவர் வெடித்து வெளிப்பக்கம் சாய்ந்து நின்றது. இடுக்கில் ஆலங்கன்று வேரையிறக்கியிருந்தது. தரையில் கரையான் புற்றுகள் சிறுசிறு மணற்குன்றுகளாய்! மூலையில் எலிப்பொந்துகள்! நிமிர்ந்தால் என் தலையைத் தட்டிவிடக்கூடும் கூரை. சட்டத்தின் பல இடங்களில் பின்னலாடைகள். நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன். எனக்கு எதிரே இருந்தது அது. பல ஆண்டுகளாய் பராமரிக்கப்படாத மூளிச்சிலை. நின்று கொண்டிருக்கும் அதற்கு ஒரு கால் உடைந்திருக் கிறது. இன்னொரு கால் மண்மேட்டில் புதைந்திருக்கிறது. மார்பை விரித்து கைகளை உயர்த்தி உறுப்புகளற்று உருவமாய் நின்றது அது. கண்குழிகள் தாழ்ந்துகிடக்கின்றன. மூக்கு வாய் மற்றவை எதுவுமற்று முகம் சமதளம். முகத்தில் கண்குழிகளைப் பார்த்தேன். சிரித்தது அது! வாயைத் திறக்காமல் மெல்லிய கோடாய் வந்ததுஅந்தப் புன்னகை. எல்லாம் தெரிந்தும் பயமொன்றறியாத புன்னகை. அச்சு அசலாய் அதே புன்னகை. அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னாலிருந்து அரவம்.

‘அப்பா..’

‘அம்மா.. எப்போமா வந்தே? யாரும் ஒன்னை எதுவும் சொல்லலியே. யாராவது திட்டுனாங்களாமா? அழாதேம்மா பிளீஸ்.’ அவள் கைகளை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு முகத்தைத் துடைத்துவிட்டேன்.

‘அம்மா.. என்னை நம்பும்மா. எம்மேல எந்தத் தப்பும் இல்லைம்மா. நேர்மையால வந்த பிரச்சனம்மா அது. அப்போக்கூட நா சும்மா தாம்மா இருந்தேன். தப்பாப் பேசிட்டாங்கம்மா. ஒன்னைத் தப்பாப் பேசிட்டாங்கம்மா. அதாம்மா அப்படிப் பண்ணிட்டேன். நாஞ் செஞ்சது தப்பாமா..? தப்புன்னா மன்னிச்சுடும்மா!’

அம்மா எதுவும் பேசவில்லை. கண்கள் விசும்பின. என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘நாந்தாண்டா கூட்டி வந்தேன். யாரும் பாக்கலை. என் வீட்டுக்கும் போயிருப்பாங்க போல; தங்கச்சி சொன்னா. எல்லாரும் பயந்துட்டாங்களாம். விஷயத்தை சொல்லிட்டு வந்தேன். நல்ல வேளை ஒன்னை அங்கெ கூட்டிட்டுப் போகலை. சாப்பிட ஏதாவது கொண்டு வரவாடா..?’

‘வேணாந் தனபால். கொஞ்ச நேரம் இங்கேயே இரு. வெளியிலே இப்போ போக வேண்டாம். உங்க வீட்லெ ஒண்ணும் பிரச்சனை யில்லையே…?’

‘ஒண்ணும் பிரச்சனையில்லை. அவங்கதான் போலீசுலெ கம்ப்ளைண்ட் குடுத்துட்டாங்களாம். அதுவும் தேடிக்கிட்டுருக்காம். என்னடா பண்ணுறது இப்போ?’

‘ஒண்ணும் தோணலை தனபால். ராத்திரியாகட்டும். இங்கேயே இருக்கேன். ஒரு பத்து நிமிஷம் கழிச்சி நீ கெளம்பு.’

அம்மா ஆழமான மௌனத்துடன் இருந்தாள். நான் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். புன்னகை மறையவில்லை. அதே புன்னகை. பேப்பரின் ஒரு ஓரத்தில் பிடிக்கும் தீ அதன் மற்ற பாகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் தின்னுவதைப்போல அப் புன்னகை பரவுகிறது. என் சட்டையின் ஒரு ஓரத்தை எரிக்க ஆரம்பித்திருந்தது அது. ஒரு பக்கம் குளிரும்போது மறு பக்கம் தகித்துக்கொண்டிருந்தது. வேகமாகப் பரவியது அது. வெப்பமும் குளுமையும் உடல் முழுவதும் ஆக்கிரமிக்க, மனம் புன்னகைத்துக் கொண்டே இருந்தது. புன்னகை. புன்னகை. புன்னகை!

திடுமென யாரோ குரல்வளையை நெறித்தார்கள். மூச்சுக்குழாய்க்குள் தீப்பந்தை எரிந்தார்கள். குரல்வலையின் மேல் பெரிய கல்லைத் தூக்கி வைத்துவிட்டு, என் உடல், மேலேயும் கீழேயும் ஏறி இறங்குவதை வேடிக்கை பார்த்தார்கள். துடித்து அழுதேன். அம்மா அம்மா என்று கதறினேன். விடவில்லை அவர்கள். காலைப் பிடித்துக் கொண்டார்கள். கைகளின் விரல்களில் துணியைச் சுற்றி தீ வைத்தார்கள். எரிந்தது. மொத்தமாய் எரிந்தது. உயிர் கடைசியாய் அங்குமிங்கும் கதறி ஓடியது. நிற்க இடமில்லை. எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு வலி. வெப்பமாய் வலி. சூடாய் வலி. குளிராய் வலி. காற்றுக்காய் வலி. காற்றைத் தேடி வலி. பாரமாய் வலி.

‘அம்மா.. அம்மா.. அம்மா. என்னைக் காப்பாற்றம்மா. விட மாட்டேண்டா உன்னை. என்னைக் கொல்ல நினைக்கும் உன்னை பழிவாங்கியே தீருவேன். விடமாட்டேன் உன்னை. இது சத்தியம். என் தாய் மீது சத்தியம். விடமாட்டேன் உன்னை. என்னை அடித்தாய் அல்லவா. ஆள் வைத்து அடித்தாய் அல்லவா. விடமாட்டேன் உன்னை!’

அப்பா.. அப்பா என்று அம்மா கதறுவது கேட்டது கடைசியாய் எனக்குள். மூச்சு மிகவும் கஷ்டப்பட்டு உள்ளிருந்து வெளியே போய் மறுபடியும் உள்ளே வந்தது. மயங்கி விழுந்தேன். அந்தப் புன்னகை மறையவேயில்லை. கண்களை விட்டு அது அகலவேயில்லை!

அன்றிரவு நானும் அம்மாவும் ஊருக்கு வெளியில் ஒதுக்குப்புறத்தில் கஞ்சியைக் கரைத்துக் குடித்துவிட்டு அந்த டிரையினில் ஏறினோம். அந்த ஆறு செவ்வக முகங்களும் இன்னும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தன. அதே புன்னகை. மூளிச்சிலையிடம் நான் கண்ட புன்னகை. என் அப்பாவிடம் நான் கண்ட புன்னகை. மெல்ல புன்னகைத்தேன். மனது முழுவதும் அதே புன்னகை நிரம்பி இருந்தது.

இழுத்து மூச்சு விட்டேன்.

இன்று அந்த ஊருக்குப் போகிறேன். நான் பிறந்த ஊருக்குப் போகிறேன். என் தாயின் புதைகுழியில் விழுந்து அழுவேன். மூளிச் சிலையை நன்றியோடு பார்ப்பேன். அப்படியே அந்த நாய் வீட்டிற்கும் போவேன். என்ன செய்யலாம் அவனை? இழுத்து பளாரென்று அவன் கன்னத்தில் ஒன்று விடலாமா? கன்னம் சிதறி விடாது? கிழட்டு நாயே! என்னைத்தானே அடித்தாய். என் அம்மாவைத்தானே அசிங்கமாகத் திட்டினாய்.

எதிர்க்கட்சி பூத் ஏஜெண்டாக இருந்த நான், கள்ள ஓட்டுப்போட வந்த உன் ஆட்களைத் தடுத்த போதுதானே என்னைப் பளாரென்று அறைந்தாய். எதிர்த்துக் கேட்டபோதுதானே உள்ளேயே உன் ஆட்களை வைத்து அடித்தாய். முகத்தில் மிதித்தாய். கேவலமாகத் திட்டினாய். போலீசில் புகார் செய்து என்னை என் தாயை ஊரெல்லாம் தேடி எங்களை நாட்முழுக்க பட்டினி போட்டு பிறந்த ஊரை விட்டு வெளியனுப்பிவைத்தாய். அப்போது ஆளுங்கட்சி மந்திரி நீ.

இன்று…இதோ நான் மந்திரி. போக்குவரத்து மந்திரி. நாற்பது வயதில் இந்த அமைச்சகத்துக்கு வந்திருக்கும் மந்திரி. அன்று நடந்ததிற்குப் பிறகு மிகவும் நான் கஷ்டப்பட்டேன். எப்படியோயார் செய்த புண்ணியமோ அன்று எனக்கு நடைபெற்ற சம்பவங்கள் எதிர்க் கட்சி மேலிடத்துக்குத் தெரிந்து என்னை இளைஞர் அணியில் சேர்த்துக்கொண்டார்கள். கடுமையாக உழைத்தேன். நாய்களிடம் நாயாக இருந்தேன். பூனைகளிடம் பூனைபோல பழகினேன். ஆனால் என்னளவில் எப்போதும் நேர்மை தவறவில்லை. இன்று வரை தவறவில்லை.

அதற்குப் பரிசு இன்றைய பதவி. மந்திரி பதவி. இது இன்றே முடியலாம். நாளையும் முடியலாம். நேர்மையின் மதிப்பு அவ்வளவு தான். எனக்குத் தெரியும். அதனால்தான் இன்றே போகிறேன். என் தாயை அவள் மடியில் விழுந்து அழுது புரண்டு பாதங்களை வணங்குவேன். அந்த மண்ணை அள்ளிப் பூசிக்கொள்வேன். அப்படியே மூளிச்சிலை. இன்றும் எனக்குக் குருவாய் நடக்கும் அம்மூளிச்சிலை. என்றும் மாறாத எவரும் உணரத் தராத புன்னகை வழங்கிய அம்மூளிச்சிலை; வணங்குவேன்! கடைசியாய் அவன். என் வெறியைத் தீர்த்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.

வெளியே என் மனைவி இருப்பாள். அவளின் அண்ணன் தனபால் இருப்பான். என் அந்தரங்க காரியதரிசி கையில் கோப்புகளோடு காத்திருப்பான். நிறைய வேலை இருக்கிறது. வருகிறேன்! புன்னகை புரியும் அந்தரங்கக் கழிவறையை விட்டு வெளியே வருகிறேன், ஆறுமுகங்களும் இப்போதைக்கு விடை கொடுக்கின்றன. வெற்றி யோடு வர வாழ்த்துகின்றன. வருகிறேன்..! வெற்றியோடு மீண்டும் உன்னிடம் வருவேன்!

– மருதம், முதற் பதிப்பு: டிசம்பர் 2006, எம்.கே.குமார் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *