பிறை நிலவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 1, 2025
பார்வையிட்டோர்: 343 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராசாத்தி மல்லாக்கப் படுத்திருந்தாள். ஐந்து மணிக்கே அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது. அதற்குப்பின் தூக்கமே வரவில்லை. சென்னைப்பட்டிணத்தில் அதிகாலை ஐந்து மணிக்கு விழிப்பது என்பதே பாவம். காய்கறி, மீன் வியாபாரம் செய்பவர்களும் வயிறு பெருத்தவர்களும் மட்டுமே அந்த நேரத்தில் எழுந்திருப்பார்கள். வியாபாரம் செய்பவர்கள் கொள்முதல் செய்வதற்கும் வயிறு பெருத்தவர்கள் கொண்டமுதலை இறக்கு வதற்கும் எழுந்திருப்பார்கள். ‘இரண்டையும் நான் செய்யவில்லை. பிறகெதற்கு நான் விழித்துக்கொண்டேன்’ என நினைத்துக் கொண்டாள்.

வயிற்றைப்போட்டுப் புரட்டியது அவளுக்கு. வாந்தி வருவது போலவும் இருந்தது. நேற்று என்ன சாப்பிட்டோம் என நினைத்துப் பார்த்தாள். ஒருவேளை வயிற்றைப்போட்டு புரட்டுவதற்கு அதுவும் கூட காரணமோ என நினைத்தாள். ஒரு பக்கம் பசிப்பதுபோலவும் இருந்தது. கமலா கல்யாணத்திற்கு சென்றவள் நேற்று இரவுதான் திரும்பி வந்தாள். வரும்போது கமலா அம்மா கொடுத்தனுப்பிய பண்டங்களையும் கொண்டுவந்திருந்தாள். அதுதான் இரவு உணவாகியது அவளுக்கும் அவனுக்கும்.

‘கல்யாணமா அது? யப்பா! பெரிய திருவிழா மாதிரி அல்லவா இருந்தது. கமலா கொடுத்து வைத்தவள்தான். அவருடைய கணவருக்குத்தான் எவ்வளவு தெரிந்தவர்கள்? உதவி இயக்குன ரென்றால் சும்மாவா!’ என நினைத்துக்கொண்டாள்.

கமலாவும் அவளைப்போலத்தான். ஆனால் நல்ல நிறம். கதா நாயகிக்கு அருகில் நின்று ஆடும் தகுதி படைத்தவள். சில சமயங்களில் கதாநாயகியைவிட அழகாய் இருப்பதால் அங்கிருந்து கொஞ்சம் தள்ளி நிற்கவைப்பார்கள். நன்றாகவும் நடனமாடுவாள். அதனால்தானே இந்த கிருபாவுக்குப் பிடித்துப்போய்விட்டது.

கிருபா சமீபத்தில் வந்த ஒருசில படங்களின் உதவி இயக்குனர். ஒரே இயக்குனரிடம் உதவி இயக்குனராய் சில வருடங்கள் இருந்தாலும் அந்த இயக்குனரின் எல்லாப் படங்களும் வெற்றிப்படங்களாகவே இருந்தன. எல்லாவற்றிற்கும் காரணம் உதவி இயக்குனரான கிருபா தான் என்பது தயாரிப்பாளர்களுக்கு விளங்கியது. கதை விவாதங் களில் கலந்துகொள்ளும்போது அதைக் கவனித்திருக்கிறார்கள் அவர்கள். காட்சியைப் புட்டுப்புட்டு வைப்பான். திரைக்கதையின் தொய்வுகளைத் தயங்காமல் சொல்வான். புதிதாக நல்ல ஐடியாக் களைச் சொல்லி அதைச் செலவில்லாமல் செய்வதற்கும் திட்டம் சொல்வான். சமீபத்தில் வந்து வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படத்தின் உச்சகட்ட முடிச்சை அழகான திரைக்கதையாக்கி அவிழ்த்தது அவன்தான் என்பது அச்சினிமா சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும்.

இப்படிப்பட்ட புத்திசாலிக்கு இன்னொரு திறமையானவளை பிடித்துப்போவதில் என்ன அதிசயம் இருக்கிறது? அவனது படங்களின் பாடல்கள் ஒன்றிரண்டுக்கு நடனமாடச் சென்றாள் கமலா. அப்படி இப்படி பார்த்தார்கள். பிடித்துப்போய்விட்டது. ராசாத்தியிடம்தான் முதலில் சொன்னாள் கமலா. அக்கா அக்கா என்று அன்போடு பேசுவாள். அப்படித்தான் கிருபாவும்.

கல்யாணத்திற்கு இரண்டு நாளைக்கு முன்னே வந்துவிட்டாள் ராசாத்தி. ஏறக்குறைய எல்லா வேலைகளையுமே அவள்தான் செய்தாள். கல்யாணத்திற்கு வரும் சொந்தக்காரப் பெண்களெல்லாம் இப்படி சரசரக்க பட்டுச்சேலை கட்டிவந்து உட்கார்ந்து கொண்டால் வீட்டு வேலைகளையெல்லாம் யார் பார்ப்பது? அங்குமிங்கும் ஓடினாள். எல்லோரையும் வரவேற்று உபசரித்தாள். சமையல றைக்கும் சென்றாள். மணவறைக்கும் அவ்வப்போது வந்து சென்றாள்.

கமலாவும் அவள் அம்மாவும் அவள் கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டார்கள். ‘என் மூத்த பொண்ணு மாதிரி எல்லா வேலைகளையும் நீதாம்மா பாத்தே’ன்னு அவள் வீட்டுக்கு வரும் போது நிறைய பண்டங்களும் ஒரு சேலையும் கொடுத்தாள் கமலாவின் அம்மா.

கிருபாவும் மனப்பூர்வமாக நன்றி சொன்னான்.

ராசாத்திக்கு இன்னும் வயிற்றுப்புரட்டல் நின்றபாடில்லை. தலை மாட்டில் வைத்திருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள். மணியைப் பார்த்து என்ன ஆகப்போகிறது. எழுந்து பாத்ரூம் சென்றாள். அடிவயிற்று நாடாக்களைக் கொஞ்சம் தளர்த்திவிட்டாள். கொஞ்சம் தண்ணீர் அள்ளி வயிற்றின் மேல் தேய்த்துக்கொண்டாள். இப்போது புரிந்தது வயிற்றுப் புரட்டலுக்குக் காரணம்.

‘அட மடச்சியா நான்? எப்படி இவ்வளவு தாமதமாக உணர்கிறேன். நன்றாகத் தூங்கிய அசதியில் தெரியவில்லை போலும் என்ன? இரண்டு நாட்கள் சீக்கிரமாக! அப்போ நாளைக்கி கோயிலுக்குப் போகமுடியாதா?’ மனதுக்குள் சின்னதொரு வேதனை வந்து விட்டது அவளுக்கு.

எழுந்து படுக்கைகளை ஒதுக்கிவைத்தாள். வீட்டைக் கழுவ வேண்டுமா? அய்யோ இதுவேறு இம்சை! அப்புறம் கழுவலாம் என முடிவெடுத்தாள். குளித்துவிட்டு வந்தாள்.

சாரு இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான். கால்வரை போர்வையை இழுத்துவிட்டாள். குனிந்து உட்கார்ந்து அவன் தலைமுடியைக் கோதிவிட்டாள். தலைமுடி பஞ்சு போல இருந்தது. செம்பட்டை நிறத்தில். கடைவாயோரம் ஓடிய எச்சிலைத் துடைத்துவிட்டாள். படுக்கையிலே ‘ஒண்ணு’க்குப் போயிருந்தான் அவன்.

அண்ணன் ஞாபகம் வந்தது அவளுக்கு.

‘அவனும் இப்படித்தான், பத்தாவது படிக்கும்வரை! நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் எழுந்து தான் போட்டிருந்த ஈரமான கால் சட்டையைக் கழட்டி ஒரு ஓரத்தில் வீசிவிட்டு இன்னொன்றை எடுத்து மாட்டிக்கொண்டு தந்திரமாக வந்து பேசாமல் படுத்துவிடுவான். யாருக்கும் தெரியாதா என்ன? அவனைத்தவிர நான் மட்டுமே இருக்கிறேன். நான் கால்சட்டை போடுவேனா என்ன?’

இதழோரம் சிரிப்பு வந்தது அவளுக்கு. ‘சாருவும் அப்படித்தான் இருக்கிறான். எட்டு வயசுதானே ஆகிறது’ என நினைத்துக் கொண்டாள்.

சாமிபடத்தின் எதிரே இருந்த திரையை மூடி வைத்தாள். ‘இவ்வளவு நேரம் திறந்தா இருந்தது.’ சாருவுக்கு அருகிலே திரும்பவும் படுத்துக் கொண்டாள். நீரோடும் வாய்க்காலின் அக்கரைப்பகுதியில் நீர் கசிந்து நழுவி வருவது போலிருந்தது அவளின் மனநிலை.

திரும்பவும் ஒரு பதினெட்டு வயது வருமா என ஏங்கியது மனசு.

பதினெட்டு வந்தாலும் பசுபதி வருவானா? பசுபதி ராசாத்தியின் நாயகன். பதினெட்டுப்பட்டியின் காடுமலைகளுக்கெல்லாம் அவர்களைத் தெரியும்.

ராசாத்தியைக் காதலித்தான் அவன். சினிமாவின் நடனக்குழு ஆட்களில் அவனும் ஒருவன். ஊருக்கு வந்தபோது மூக்கும் முழியுமாக இருந்த அவளைப் பார்த்தான். சாடையில் பேசினான். விவரங்களைப் பரிமாறிக்கொண்டார்கள். விவரம் தெரிந்தபோது கிராமத்து அப்பா கொதித்தார். அம்மா அழுதாள். ஒருநாள் ஊரை விட்டு ஓடிவந்தார்கள்.

சென்னையின் சினிமா பாக்கம் அது. ஒரு ஓட்டு வீட்டின் இன்னொரு பாதியை வாடகைக்குப் பிடித்தார்கள். சந்தோசமாக இருந்தார்கள். சாரு பிறந்தான். அப்புறம்தான் விதி விளையாடியது. சாலை விபத்து ஒன்றில் அவன் காலமாகிப்போனான். கதறி அழுதாள். அழும்போது கூட அனாதையாக அழுகிறோமே என்ற வெறுப்பு அவளுக்கு. அதுக்காகவும் அழுதாள்.

கமலாவின் அம்மாதான் அடைக்கலம் கொடுத்தாள். வாழ்வதற்கு வழி சொன்னாள். சினிமா நடனக்குழுவில் சேர்ந்தாள். ஐம்பதாவது ஆளாக ஆடினாள். ஏதோ கொஞ்சம் பிழைப்பு ஓடியது. அப்படி இப்படி என்று முன்னேறினாள். முப்பதாவது ஆளாகினாள். என்னதான் ஆனாலும் ஊருக்குப் போவதில்லை என முடிவெடுத்திருந்தாள். அதையே ஒருபக்கம் அரணாக்கிக்கொண்டு அலையில் போராடிக் கொண்டிருந்தாள்.

பெருமூச்சு வந்து வெளியேறியது ராசாத்தியிடமிருந்து.

பால்காரன் சத்தம் கேட்டது. எழுந்து வெளியே வந்தாள். அதிகாலை யிலே குளித்திருப்பதைப் பால்காரன் பார்த்துக்கொண்டான். ஒரு மாதிரியாக சிரித்தான். அவன் புத்தி அது.

அடுப்பைப் பற்ற வைத்தாள். பாலைக் கொதிக்க வைத்தாள். அரிசி டப்பாவில் இன்னும் அரைக்கிலோ இருந்தது. ஒரு மாதத்திற்கு முன் வாங்கியது. பரவாயில்லை இன்னும் ஓரிரு நாட்கள் பிழைப்பு ஓடும். அப்புறம் என்ன செய்வது?

பால் பொங்கி வந்தது. எடுத்து டீ கலந்து கொண்டாள். முதல் துளி உள்ளே செல்லும்போது அப்பாடா என்றிருந்தது. சாருவுக்கு தனியே பாலை எடுத்து வைத்தாள்.

காலை மணி ஒன்பதாகியது. சென்னையின் பரபரப்பு வாழ்க்கை பாம்பாட்டமாய்த் துவங்கிவிட்டது. வாகனங்களின் சத்தம் அவ்வப் போது பேரிரைச்சலாகவும் கேட்டுக்கொண்டிருந்தது. சாருவை எழுப்ப நினைத்தாள். வேண்டாம் என விட்டு விட்டாள். இன்றைக்கு பள்ளி இல்லை என நினைவு வந்ததால்.

யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.சுந்தரம் நின்றிருந்தார். கடவுளைக் கண்டது போலிருந்தது அவளுக்கு.

சுந்தரம் திரைப்படங்களுக்கான துணை நடிக நடிகையர் சப்ஏஜண்ட். இருபக்கமும் தொங்கிய கடாமீசையில் ஒரு கோபக்காரனும் ஒரு பயமுறுத்துபவனும் தெரிவார்கள். திரைப்படங்களுக்கு செய்வதைப் போல இப்போது சின்னத்திரை நாடகங்களுக்கும் செய்துவருகிறார். சின்னத்திரைக்கு செய்ய ஆரம்பித்ததில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இப்போது அவளை திருவான்மியூருக்கருகில் வாடகைக்கு வைத்திருக்கிறார். அவளும் சிலமாதங்களாய் முழுகாமலிருப்பதால் இன்னும் கடினமாக வேலை செய்யவேண்டியிருந்தது அவருக்கு.

ஆரம்பத்தில் சினிமாத்துறையில் துணைநடிக ஏஜண்டாய் இருந்த காளியண்ணனிடம் பொறி உருண்டை விற்றுக்கொண்டிருந்த இவர் போய்ச்சேர நேர்ந்தது 55 வயதில் ஹீரோவாய் நடித்துக் கொண்டிருந்தவர் தந்த திடுக் திருப்பம். அந்த ஹீரோவின் வயதை முப்பது என திரையில் சமன்படுத்தத் தேவையான ஆட்களைத் திரட்டும் பொழுது இவருக்கு அடித்தது யோகம். ஹீரோவுக்கு அடுத்த வரிசையில் நிற்க வாய்ப்புக் கிடைத்து அப்படியே பிடித்துக் கொண்டார். பிறகு காளியண்ணனிடம் நம்பிக்கைக்குரியவராகி சப் ஏஜண்டாகிவிட்டார். அண்மையில் வந்த திரைப்படத்தில் 1000 பேர் ஆடும் ஒரு பாடலுக்கு மொத்த ஆட்களையும் இவரது கம்பெனிதான் சப்ளை செய்தது.

சுந்தரத்திற்கு பசுபதி நல்ல பழக்கம். பசுபதி திருமணத்தைக்கூட தைரியமாய் கோயிலில் வைத்து முடித்துவைத்தவரும் இவர்தான். பசுபதி இறந்தபின் அதே அன்பும் அக்கறையும் ராசாத்திமீது நிற்கிறது. ராசாத்தியை பாடலுக்கு நடனமாட அழைத்து வந்து உதவி புரிந்தவரும் இவர்தான். இப்போது எடுக்கப்போகும் ஒரு திரைப் படத்தின் பாடலுக்கும் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் 5000 பேர் அடங்கிய கூட்டத்திற்கும்தான் இப்போது அவர் மெனக்கெடுகிறார்.

ராசாத்தியை நேரில் பார்த்துச் சொல்லவேண்டும் என்று அவருக்கு அவசியம் கிடையாது. அத்தெருவில் இருந்த இன்னொரு சண்டை துணைஇயக்குனரையும் பார்க்கவேண்டியதிருந்தது அவருக்கு. பார்த்து ரொம்ப நாளாகிவிட்டதே என்று ராசாத்தி வீட்டுக்கு வந்தார். பாடல் காட்சிகளில் கிராபிக்ஸை பயன்படுத்த ஆரம்பித்ததும் ‘சோலோ சாங்’ குகளை சில இயக்குனர்கள் முழுவதுமாக தங்களது பாணியாகக் கொண்டதும் ராசியான துணைநடிகர்கள் ஏஜண்ட் என்று ஒரு கூட்டம் வெற்றிப்படத்துக்குப் பின் பிரிந்துகொண்டு தொழில்செய்வதும் என அவருக்கும் நிறையப் பிரச்சினைகள் இருந்துகொண்டுதான் இருந்தன.

பொதுவாய் நலம் விசாரித்து சாருவைப் பார்த்துவிட்டு ஷுட்டிங் தகவல்களையும் சொல்லிவிட்டு எழுந்து நகர்ந்தார்.

‘யப்பா! எப்படியும் நான்கைந்து நாளுக்காவது வேலை இருக்கும். நாளுக்கு சாப்பாடு போக நூறு வைத்தாலும் நானூறு கிடைக்கும். சாருவை குப்பாயிக் கிழவியிடம் விட்டுவிட்டு அல்லது சீக்கிரமாக பள்ளிக்கு அனுப்பிவிட்டே செல்லலாம். ஒன்றும் பிரச்சினை இல்லை. மனம் கொஞ்சம் சமாதானமடைந்தது.


முதல் பாடல் ஷுட்டிங் ஆரம்பமாகியது. ராசாத்தி சீக்கிரமாகவே அங்கு இருந்தாள். நடன இயக்குனரின் மூவ்மெண்ட்ஸ்களுக்கு கூட்டம் கூட்டமாக ஒத்திகை நடந்தது. பெண்கள்கூட்டமும் ஆண்கள் கூட்டமும் சிநேகமாய் பேசியபடியும் சிரித்தபடியும் இருந்தார்கள். பயிற்சிகள் முடிந்து பாடலில் காலறைக்காவாசி ஷுட்டிங் செய்யப் பட்டது. வீட்டுக்குக் கிளம்பும்போது சுந்தரத்திடம் சொல்லி அவளைத் தன் அறைக்கு வரவழைத்தார் படத்தின் இயக்குநர். ‘எத்தனை வருஷமா டான்ஸ் குரூப்லே இருக்கீங்க?”

“வணக்கம் சார். நாளு வருஷமா சார்.”

“இந்த சாருமோருலலாம் வேண்டாம் விடுங்க. அருமையான ஒரு கேரக்டர் ரோல் இருக்கு. பண்றீங்களா?”

“என்ன டென்ஸ்டா இருக்குறீங்க. இருங்க, மொதல்லே நான் கேரக்டர் பத்தி சொல்லிடுறேன். உங்க வயசுடைய ஒரு பொண்ணு மீன் விக்கிற பொண்ணா படத்துல வருது. கதையிலெ வர்ற பணக்கார ஹீரோயினுக்கு பிரண்ட். மத்ததெல்லாம் அப்புறம் சொல்லுறேன். எப்படியும் படம் முழுக்க நீங்க வர ஸ்கோப் இருக்கு. படத்தோட ஷெட்யூல் அறுபது நாள். எப்படியும் முப்பது நாளுக்கு உங்களுக்கு ஷுட்டிங் இருக்கும். நல்ல பேரும் கிடைக்கும். என்ன சொல்றீங்க?” ராசாத்தி ஆடிப்போனாள். குரூப் டான்ஸில் கூட இடம் கிடைக்குமா என்றிருந்த அவளுக்கு படத்திலேயே வேடம். அதுவும் ஹீரோயினுக்கு தோழியாக படக்கென்று அவர் கால்களில் விழலாமா என்றிருந்த அவளுக்கு கைகள் தானாக கூப்பிக் கொண்டன. பேச வார்த்தைகள் வராமல் “நன்றி சார்” என்றாள் காலில் விழுவதாக நினைத்துக்கொண்டு.


“என்ன டயரெக்டர் சார்? அந்தப்பொண்ணுக்குப்போயி இப்படி ஒரு ரோலு? அப்ப நாம மொதல்லெ பாத்தோமே அவளுக்கு என்ன சொல்றது?” தயாரிப்பாளர் கடுப்பாகத்தான் பேசினார்.

“எந்தப் பொண்ணு சார்?”

“என்ன இப்படிக் கேக்குறீங்க? டிஸ்கஷன்னுக்கு கூப்பிட்டு அன்னக்கே ஒண்ணு பண்ணியாச்சி அவளை. அப்பவே சொன்னோம் அவதான் ஹீரோயின்னு. அப்பறம் அப்படி இப்படி மாத்தி அவளத் தூக்கி இதுக்குப் போட்டோம். இப்போ அதுவும் இல்லைன்னா?’

“என்ன சார் பண்ணுவா அவ? மூஞ்சி வேணாமா சார்? ஒடம்பக் காட்ட தொறந்துட்டு வந்துட்டா போதுமா? ஒரு எக்ஸ்பிரஷன் வேணாம்? இவங்க மொகத்தைப் பாருங்க. இயல்பாவே அப்படி ஒரு பீலிங் ஓடுறதா எனக்குத் தோணுது. இல்லே சார், என்னை மன்னிச்சுடுங்க. இவங்க இல்லாமே இந்தப் படம் பண்றது கொஞ்சம் கஷ்டம்.”

தயாரிப்பாளர் கொஞ்சம் அடக்கி வாசித்தார். அவருக்குத் தெரியும் இது அருமையான கதை என்று. ‘எப்படியும் இப்பேர்தெல்லாம் கதை உள்ள படங்கள்தான் ஓடுகின்றன. இவனுடைய முதல் படம் வேறு நல்ல ஹிட். செம வசூல். நமக்கென்ன? அப்படியே வந்தால் அவளுக்கு இரண்டாம் படத்திலே ஒரு வாய்ப்புன்னு சொல்லிற வேண்டியதுதான். இல்லாட்டி கொஞ்சம் பணம். கழுதைங்க. பணத்துக்கு மடங்காதது கெடக்கா என்ன?’


ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தாள் ராசாத்தி. கதவு திறந்தே கிடந்தது.

உள்ளே சாரு உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தான். அவனருகில் அவர்.

திக்கென்று இருந்தது அவளுக்கு.

“என்ன இவ்வளவு லேட்டா வரீங்க. வெளியே எங்காவது போனீங்களா?”

இதயத்தின் ஓட்டம் இரண்டு மூன்று மடங்காய் அதிர்ந்தது.

என்ன பதில் பேசுவதென்றே அவளுக்குத்தெரியவில்லை.

“ம்ம். வாங்க சார். எப்போ சார் வந்தீங்க? என்ன இந்தப் பக்கம் சார்? சுந்தரம் அண்ணன் கூட எதுவும் சொல்லலியே!”

“அட! ஏன் இப்படி படபடக்குறீங்க? அமைதியா உள்ளே போயி மொகத்தையெல்லாம் கழுவிட்டு வாங்க. நான் வந்து அரைமணி நேரம் ஆகுது. சாரு கூட உக்காந்து படிச்சிக்கிட்டு இருக்கேன்.”

“இல்லே சார்.”

“அட! ஒண்ணுமில்லே… போங்க.”

முகத்தை அலம்பிவிட்டு வெளியே வந்தாள். மனதின் படபடப்பு அடங்கவே இல்லை.

என்ன சொல்லப் போகிறாரோ?

“உட்காருங்க ராசாத்தி. மொதல்லே ஒரு விஷயத்தை நான் தெளிவா சொல்லிடுறேன். இதுக்கு நீங்க ஒத்துக்காட்டி கூட உங்களை அந்த ரோல்லே இருந்து நான் எடுக்க மாட்டேன். சரியா?”

அப்பாடா என்றிருந்தது. ஆனால் வேறு ஏதோ பூதத்தைக் கிளப்புகிறாரே?

“சரி. இப்போ என் மனசிலே உள்ளதெ நான் சொல்லலாமா? மொதல்லே உங்களை நான் ஒரு ஷுட்டிங்லேதான் பார்த்தேன். அப்புறம் அப்படி இப்படி அங்கெ இங்கேன்னு. கிருபாவும் உங்களப் பத்தி சொன்னான். அப்புறம் ரெண்டு நாளைக்கி முன்னாடி கிருபா கல்யாணத்துலே.. பாத்ததும் பிடிச்சுப்போச்சி. உடனே சொல்லணும்ன்னு அவசியமில்லை. அப்புறமாக்கூட…”

அவர் தொடர்ந்து பேசப்பேச ராசாத்திக்கு என்னவோபோல் இருந்தது. கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழத் தொடங்கினாள்.

சாரு நடப்பது ஒன்றுமறியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

– மருதம், முதற் பதிப்பு: டிசம்பர் 2006, எம்.கே.குமார் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *