கோயில் வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 1, 2025
பார்வையிட்டோர்: 342 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வரலாமா…”

“வரலாமா..”

“வரலாமா…வாறேன்…வந்துட்டேன்.”

கெரகச்சாரமுடா இது. மண்டயப்பொளக்குற இந்த வெயில்லெ இப்புடி ஓடி பிடிச்சி ஒளிஞ்சி வெளையாடுறது இந்த உலகத்துலே நானாத்தான் இருப்பேன். அதுவும் கிடா மாதிரி வளந்தும் இன்னும்.

சந்தோசமாத்தான் இருக்கு. சும்மாவா. இன்னக்கி லீவாச்செ. திடு திப்புன்னு இன்னக்கி லீவுன்னு சொன்னா சந்தோசம் வராமெ சளுக்கமாவா இருக்கும்? அதுவும் காலங்காத்தால பள்ளிக் கொடத்துக்குக் கெளம்பிப் போயி பாதி வழயிலெ, ஸ்கூலு லீவுன்னா அதைவிட எதுப்போய் சந்தோசம்? நா பரவால்லே. நம்ம சரவணப்பயதான் சட்டையைக் கழட்டிப் போட்டுட்டு மணல்லெ விழுந்து ஹா ஹான்று சிரிச்சுக்கிட்டே கத்துறான். ஆய் ஊய்ன்னு சத்தம் போடுறான். கை நெறய மணலை அள்ளி ‘ஓம் குண்டா நமஹ ஓம் கோவிந்தா நமஹ’ன்னு சுத்தி முத்தி நாலு பக்கமும் வீசுறான். மணல்லெ மல்லாக்கப் படுத்துக்குட்டு செத்த பொணம் மாதிரிக் கெடக்குறான்.

நா, ராசாத்தி, முத்தழவு, முருவேஷ் எல்லோருந்தான் ஒண்ணா ஸ்கூலுக்குப் போயிக்கிட்டிருந்தோம். திடீர்ன்னு ஒத்தப்பன் மரத்துக்குப் பின்னாடிஇருந்து பாஞ்சி வந்தான் சரவணப்பய. எல்லாரும் மொதல்லெ பயந்துட்டோம். சிரிச்சிக்கிட்டே கிட்ட வந்தவன், திடீர்ன்னு நாக்கை வெளியே தள்ளிக்கிட்டு கண்ணெ மெரட்டி முழிச்சிக்கிட்டு ‘ஹெ..ஹெ’ன்னு பேய் மாதிரி பயம் காட்டுறான். மொதல்லெ சந்தோசமா இருந்தாலும் அப்புறம் ஒடம்பு ஒதறலாயிருச்சி. ஒத்த பனமரத்து பேயி ஏதாவது புடுச்சிக்குச்சா இவனைன்னு, யேலே சரவணா நில்லுடெ.. என்ன பண்ணுதேன்னு கேக்க கேக்க இன்னும் பண்ணுறான். திடீர்ன்னு ‘ஏய் மூதேவி நில்லு. ஏம் இப்புடிக் கத்துறே’ ன்னு கேட்டா பாருங்க ராசாத்தி. அப்பொத்தான் நின்னு மூச்சி வாங்கி அசால்ட்டா சொல்லுறான். ‘இன்னக்கி ஸ்கூலு லீவு’ன்னு. ஏன்னு கேட்டா கதையைச் சொல்லுறான்.

மொதல்லெ அந்த நாயி மேல எங்களுக்கு நம்பிக்கையில்லெ. பொய் சொல்லுப்பய. பேசுறதுலெ பாதி பொய்யி. மீதி கெட்ட வார்த்தை. அதுமட்டுமில்லாமெ போன வருஷம் அஞ்சாவது படிக்கும்போதும் இப்புடித்தான். ஒத்த பனமரத்துக்குப் பின்னாடி இருந்து வந்து எங்க எதிரே நின்னு இதே மாதிரி ஆய் ஊய்யின்னு கத்திக்கிட்டு எல்லாரையும் பயமுறுத்திட்டான். நெறையப்பேருக்கு அன்னக்கி பேயி புடிச்சி அப்பத்தாக்கிட்டெ வெள்ளிக்கெழம அன்னக்கின்னு சாமியாடி துன்னூரு வாங்கிப் போட்டாய்ங்க. எனக்கும் அம்மா கொஞ்சம் வாங்கிப்போட்டது. மொகமெல்லாம் பேயறஞ்ச மாதிரி இருந்ததுன்னு அன்னக்கி அம்மா சொல்லும்போது யாருக்கும் தெரியாமெ வீட்டுக்குள்ளெ போயி கண்ணாடியெ எடுத்துப் பாத்தேன். அது வேற வெசயம்.

அதுனாலெ அவென் மேலெ நம்பிக்கை இல்லாமெ, ராசாத்திதான் சொன்னா. இவென் சொல்லுறதை நம்ப முடியாதுடோய். வாங்க நாம போயி நேரப் பாத்துறலாம்ன்னு. நேரெப் போனோம். கொட்டு சத்தமுல்லாம் கேட்டது. ஒரு ஓரமா நின்னு பாத்தோம். கூட்டமாத்தான் இருந்தது. ஆம்பளைகளா வெளியிலெ உக்காந்திருந்தாக. பொம்பளங்கெ உள்ளெ கூடிக்கூடி அழுதுகிட்டு இருந்தாக.

கோவிந்தப்பன் சார் வாயிலெ துண்டை வெச்சிக்கிட்டு பெஞ்ச் பக்கத்துலெ அழுதுகிட்டு நின்னாரு. சரி சரி நடந்தது உண்மைதான்னு நெனச்சிக்கிட்டு நிக்கும்போது சாத்தப்பன் சித்தப்பாதான் வந்து ‘போங்கடெ.. இன்னக்கி ஸ்கூலு லீவு. வாத்தியாரு சம்சாரம் செத்துப் போயிருச்சி’ன்னார்.

மனசுக்குள்ளெ ஓய்யின்னு சந்தோசமா இருந்தாலும் கோவிந்தப்பன் சாரை பாக்கும்போது வருத்தமா இருந்தது. வாத்தியாரு அழுது பாக்கும்போது பாவமாத்தான் இருக்கு. நா அழும்போது அவரு என்னை இப்படி பாத்துருப்பாரான்னு சந்தேவம். நா அழும்போது மட்டும் இன்னும் சிரிச்சிக்கிட்டெ அடிப்பாரே. ஆனா நா இப்பொ அவருக்காக வருத்தப்படுறேன்னு நெனச்சிக்கிட்டெ நின்னேன். அப்புறம் எல்லாரும் திரும்பி வந்துட்டோம்.

அப்போத்தான் சரவணப்பய சட்டைய கழட்டிப் போட்டுட்டு கோவிந்தாய நமஹன்னு கத்துனது. ஆனா இந்த முருவேசுப்பயதான் சோகமா இருந்தான். என்னடான்னு கேட்டேன். ‘ச்சை. வாத்தியாருக்கு ஒரு சம்சாரந்தான் இருக்கணுமா? அஞ்சாறு சம்சாரம் இருந்திருந்தா அஞ்சாறு நாள் லீவு கெடைக்குமுல்லெ’ அப்படிண்ணான்.

சரவணப்பயலுக்கு சந்தோசம் தாங்கமுடியலெ. மண்ணுலெ விழுந்து பொரண்டவன் திடீர்ன்னு எந்திரிச்சி அவென் எப்பவும் சொல்லுத கெட்ட வார்த்தையை சொல்லிக் கத்திக்கிட்டே ஓடிப்போயி படக்குன்னு முருவேசு மூக்கைத் தொட்டுப்புட்டான். வந்தது வெனை.

முருவேசு ரொம்ப நல்ல பய. அப்பா இல்லாத பய. அவுங்கம்மா பெரிய குண்டுப்பொம்பளை. ஊர்லெ அவென் வீட்லெ மட்டுந்தான் பன்னி வளக்குறாவொ. சாயங்காலம் ஸ்கூலு விட்டு வந்து முருவேசு பன்னிகளைக் கூட்டியாந்து அடைக்கிறதைப் பாத்துருக்கேன். அந்த இடமே ஒரு மாதிரி நாறும். அவென்ட்டெ உள்ள கெட்ட பழக்கம் இது ஒண்ணுதான். மூக்கத் தொட்டா யாராயிருந்தாலும் விட மாட்டான். என்னமோ தெரியலை. கன்னாப்பின்னான்னு கோவம் வரும் அவனுக்கு. அன்னக்கிம் இப்புடித்தான்.

எங்க சாத்தப்பன் சித்தப்பாவுக்கு இதான் வேலை. எவனையாவது கூப்பிட்டு, வாங்கடா.. வந்து இந்த முருவு மூக்கத் தொடுங்க பாக்கலா முன்னு பந்தயம் வெப்பாரு. பத்துக்காசு. இருவது காசு. ஒரு காசு முட்டாயி இருவது வாங்கலாம். எப்போதும் சரவணப்பயதான் போய்த் தொடுவான். அதே மாதிரி ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சிக்

கிட்டு உருண்டு சண்டை மூக்கமா போகும்போது வேணாமுடா விடுங்க. இந்தாங்க ஆளுக்கு பத்துக்காசுன்னு பிரிச்சிக் குடுத்துரு வாரு. ரெண்டு பேரும் சந்தோசமா போயிருவானுங்க. இது எப்புடித்தான் முடியுதோ. சண்டை போட்டவனுங்க சேர்ந்து ஒடனே ஒண்ணாயிடுறது. நமக்கு தோதுப்படாது. ஒரு தரம் சண்டை போட்டேன்னா அவென் எப்பவுமெ எனக்குப் பகை. வயிரி. உள்ளெ பொகஞ்சிக்கிட்டே இருக்கும். எப்பவாவது புடுச்சி வாங்கி விட்டுருவேன்.

ஒரு நாளு இப்பிடித்தான் சித்தப்பா, முருவேசு மூக்கைத் தொட பந்தயம் வெச்சாரு. அன்னக்கி சரவணப்பய ஊருக்குப் போயிருந்தான். காசு ஏறிக்கிட்டெ போச்சி. பத்துக்காசிலெ ஆரம்பிச்சி இருவரு முப்பது அம்பதுலெ வந்து நின்னுருச்சி. எனக்குப் பயங்கர ஆச தொடலாமான்னு. ஆனா ரெம்பவே பயம். இன்னக்கி அவனை நாம் அடிச்சிப்போட்டாலும் பெல்லாப்பய அவென். நாளக்கி யாருமே இல்லாத நேரம் பாத்து படக்குன்னு என்னை அடிச்சிப்போட்டுடுவான். என்னக்கிம் மறக்கமாட்டான். யோசிச்சிக்கிட்டே நின்னேன். சித்தப்பா என்னடெ.. இந்தப் பொடிப் பயலெ அடிக்கெ எவனுக்கும் தெகிரியம் இல்லையாவெ? சின்னப்பய இவென். எலி மாதிரி இருக்கான். சுண்டெலி மாதிரி இவனப்போயி அடிக்க முடியலியான்னு கேட்டுக்குட்டே இருந்தாரா, அவனுக்குக் கோவம் வந்துருச்சி போல. படக்குன்னு கை நெறய மண்ணள்ளி சித்தப்பா கண்ணுலெ தூவிட்டு ஓடிப் போயிட்டான். அவ்வளவுதான். அன்னயிலேர்ந்து சித்தப்பா இந்த வௌயாட்டுக்கு வாரதேயில்லை.

இதெல்லாம் நடந்து ரெம்ப நாளு கழிச்சி இன்னக்கித்தான் திருப்பி அவென் மூக்கத் தொட்டான் சரவணப்பய. எத்தினி வருசம் போனாலும் ஒண்ணுமாகாது போல இருக்கு இந்தக் கோவத்துக்கு. இன்னும் அவனுக்கு அந்த மூக்குக்கோவம் கொறையவேயில்லை. படக்குன்னு பையத் தூக்கி எறிஞ்சிட்டு சரவணப்பய சட்டையைப் புடிச்சிட்டான் முருவேசு. பயங்கர சண்டை. எல்லாரும் பாஞ்சி பாஞ்சி வெலக்குறானுவெ. நா பேசாமெ நின்னேன். எவனுக்கு மண்டை ஒடஞ்சாலும் எனக்கு நல்லதுதான்னு. ரெண்டு பேருமே எனக்கு வில்லங்கெ. ஒருத்தன் அடிக்க முடியாத வகையிலென்னா, இன்னொருத்தன் ஒளிஞ்சி வெளையாடுற வகையிலெ.

வெலக்கலாமான்னு யோசிச்சேன். ஏன்னா இன்னக்கி நா அவங்கள வெலக்கி விடாட்டின்னா இன்னொரு நாளக்கி நா சண்டை போடும் போது என்னை வந்து அவெங்கெ வெலக்க மாட்டானுவெ. அதுவும் நாம தோக்குற மாதிரி இருந்து எவனாவது வந்து வெலக்கி விட்டான்னா, அப்பொ அவந்தான் நமக்கெல்லாம் சாமி மாதிரி இருப்பான். அதுனாலெ எதுக்கு வம்புன்னு வெலக்கி விட்டேன். பேசாமெ பையத் தூக்கிட்டு எல்லாரும் வந்துட்டோம்.

சரவணப்பய நல்ல பயதான். என்ன, நெறயப் பொய்யி சொல்லுவான். திருடுவான். அதுவும் அவங்க வீட்டுலெயே திருடுவான். அதுதான் சிரிப்பு. நாங்கள்லாம் நாடாயி வீட்டு மாமரத்துலெ மாங்கா திருடித் திங்கும்போது அவென் மட்டும் அவங்க மாமரத்துலெ திருடி எங்களுக்குக் குடுப்பான். நல்ல பயதான், என்ன எனக்கு மட்டும் ஒண்ணே ஒண்ணுதான் தருவான். அதிலேயும் அந்த அணிக்கடிச்ச மாம்பழமுன்னா அவ்வளவுதான். சசிக்கி சசிக்கின்னு ஒதுக்கி வந்து கொடுப்பான். அதுனாலெதான் அவனைப் புடிக்காது எனக்கு.சசி அவென் சித்தப்பாரு பொண்ணு. வேற ஊரு. அப்பப்போ வருவா போவா.

ஒருநாளு இப்புடித்தான். அணிக்கடிச்ச மாம்பழம் ரெண்டு வெச்சிருந்தான் அவென். அன்னக்கி சசி அவுங்க ஊருக்குப் போயிருந்தா. அதுனாலெ எவனுக்குக் குடுக்கலாமுன்னு யோசிச் சிக்கிட்டே இருந்தான். திடீர்ன்னு அவென் மொகம் பிரகாசமா ஆயிடுச்சி. எனக்குத் தெரிஞ்சி போச்சி. ஆரம்பிச்சிட்டான்ய்யான்னு நெனச்சேன். இந்த மாதிரி அவென் மொகம் பிரகாசமா ஆயிட்டா கெட்ட வார்த்தை சொல்லப்போறான்னு அர்த்தம். இல்லாட்டி நம்மளை சொல்லச் சொல்லிப் பாக்குறதுதான் ரெம்ப சந்தோசம் போல. அணிக் கடிச்ச மாம்பழம் வேணுமான்னு கேட்டான். நாக்குலெ அதுக்குல்லேயும் எச்சி ஊறிருச்சி. இந்த அணிக்கடிச்ச மாம்பழந்தாண்டோய் ருசி.

ஆமா வேணுமின்னேன். செரி வா. இந்தான்னு சொல்லிட்டு ஆனா ஒண்ணுன்னான். புரிஞ்சி போச்சி. இதானே இந்த நாயி ஸ்டையிலுன்னு எனக்குத் தெரியாதா? என்னன்னேன். ஒரு கெட்ட வார்த்தை சொன்னான். அதை மூணு தடவை சொல்லிட்டு எடுத்துக் கோன்னான். கவனிச்சிக் கேட்டேன். கெட்டவார்த்தை ஒண்ணே ஒண்ணுதான். ஆனா ஒரு பாட்டா வந்தது அது. அண்டங்காக்காக்கி மண்டை பெரிசுன்னு ஆரம்பிச்சது அது. மவனேன்னு மனசுக்குள்ளே திட்டிக்கிட்டேன்.

ரெண்டு தடவை சொன்னேன். அதே போதும்னான். பயங்கர சந்தோசம் அவனுக்கு. அணிக்கடிச்ச மாம்பழத்துலெ எனக்கு, அதுக்கு மேலெ சந்தோசம். அப்புறந்தான் தெரிஞ்சது அது முருவேசு அம்மா பத்தின பாட்டுன்னு.

இதுவேற தொந்தரவு. முருவேசுக்குத் தெரிஞ்சா கொன்னே போட்டுடுவான். அதைவிட அப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவு தான். இந்த சுரேசுப்பயதான் பக்கத்துலெ இருந்தான். அவென் சொன்னாத்தான் உண்டு. மத்த பயலுவ நா அடிப்பேன்னு பயப்படுவானுவெ. அதுனாலெ சொல்ல மாட்டானுவெ. சுரேசு சொன்னாலும் சொல்லுவான். என்னமோ தெரியலை. அவனையும் எனக்குப் பிடிக்காது.

நொண்டி ஆட்டத்துக்கு வருவான். ஆட்டம் பாதி வெளையாடி நா நொண்டியடிச்சு எல்லாரையும் பிடிச்ச பின்னாடி அவம்பங்கு வரும் போது யோசிச்சிக்கிட்டே நிப்பான். சொல்லி வெச்சமாதிரி திடீர்ன்னு அவென் அப்பா கூப்பிடுவாரு. எலேய்.. சுரேசு இங்க வா. அந்த முக்கா இஞ்சி உளிய எடுத்துக்குட்டு வாடான்னு. அவ்வளவுதான். பேசாமெப் போயிடுவான். திரும்பி வருவானா மாட்டானா நா ஆடவேண்டிய ஆட்டம் என்னாச்சி ஒரு எளவும் தெரியாது நமக்கு. சொல்லாமெக்கொள்ளாமெ ஓடிப்போயிடுவான்.

சொன்னா சொல்லட்டும் டோய். பெரிய இவரு அவரு. இப்போ ஒழுங்கா வெளையாட்டைப் பார்ப்போம்.

“வாறேன்…….. வாறேன்.”

வெக்கப்படப்பு மேலெதான் இருப்பான் முருவேசுப்பய. எப்பவும் அங்கெ இல்லாட்டி அந்த புளியமரத்து மேல தான் ஒளிஞ்சிருப்பான் அவென். ஆனா இந்த சரவணப்பய, வீட்டுக்குள்ளெ புளிப்பானை இல்லாட்டி அரிசிப்பானைக்கி பின்னாடி பூனை மாதிரி படுத்துருப்பான். முத்தழவு சொல்லவே வேணாம். எப்பவும் கருவெ மரத்துக்குப் பின்னாடிப்போயி ரெண்டுக்குப் போயிக்கிட்டிருப்பான். எப்புடியோ தெரியலை. ஒளிஞ்சி வெளையாடும் போதுதான் அவெனுக்கு எப்பவும் ரெண்டுக்கு வருது.

நடந்து போனேன் வக்கெப் படப்பைப் பாத்துக்குட்டே. பின்னாடி இருந்து ஏய்ன்னு சத்தம். திரும்பினேன். சசி. சிரிச்சா! ‘எப்போ வந்தே’ன்னேன்.

‘இப்போத்தான். என்ன பண்ணுறீங்கெ? எங்க அண்ணன் எங்கேன்னா.’

சரவணப்பயலைக் கேக்குறா. ஒளிஞ்சி வெளையாடுறோம். அவென் ஒளிஞ்சி இருக்கான். நாந்தான் கண்டு பிடிக்கிறேன்னேன்.

‘நானும் வரட்டா’ ன்னா.

அடுத்த ஆட்டத்திலேயிருந்து வா’ ன்னேன்.

முதல்லெ சரவணப்பயலத்தான் நா கண்டுபிடிக்கணும். அப்போத் தான் அடுத்த வெளையாட்டுலெ அவன் போலீசா இருப்பான். எங்களைக் கண்டுபிடிக்கணும்.

அப்படித்தான் நடந்தது. சசியும் நானும் கோயில் வீட்டுக்குள்ளெ ஒளிஞ்சிக்கிட்டோம். முத்தழகு கருவெ மரத்துக்குள்ளெ போயிருப்பான். முருவேசு வக்கெப்படப்புலெ. இல்லாட்டி புளியமரத்துலெ.

‘வரலாமா…
வரலாமா….
வரலாமா… வாறேன்…”

சரவணப்பய கண்டிப்பாய் என்னைத் தேடித்தான் மொதல்ல வருவான். எப்பிடியும் அடுத்த ஆட்டம் கழிச்சி திரும்பவும் நானும் சசியும் ஒளிவோம்.

கையை அவ தோள் மேல போட்டு சிரிச்சேன். கம்முன்னு இருந்தா. கன்னத்திலிருந்த பூனை முடியைப் பிடிச்சு இழுத்தேன். அவ கண்டுக் கல்லை. வாயை அவ கன்னத்துக்கிட்டெ மெதுவாய்க் கொண்டு போனேன்.


சிங்கப்பூரிலிருந்து வந்து ஒருவாரம் ஆகிறது. கையில் ‘சோனி டிவிடி’ யின் ‘ரிமோட்’ இருக்க டிவியில் ஒரு நடிகையின் பூனை முடிகள் ‘குளோசப்பில்’ வந்து போயின. உள்ளிருந்து நண்டு வருவலின் மணம்! அம்மாவும் அப்பாவும் வெளியே போயிருந்தார்கள்.

“ராஜி…. என்னடா சமையல். மணமெல்லாம் பட்டைய கெளப்புது?”

“மூக்குல புண்ணாக்கும். நண்டு வாசம் வரலையா?”

‘வருது..வருது. ஆமாம், நித்தி எங்கே போயிட்டா.. காலையிலிருந்து அவளைப் பார்க்கவேயில்லை!”

“இங்கேதான் கொழந்தைகளோட ஒளிஞ்சி வௌயாடிக்கிட்டு இருக்கா.”

“என்ன..? ஒளிஞ்சி வெளையாடுறாளா? எங்க ஒளிஞ்சி வெளையாடுறா?”

“ஏன் இப்படி ஹிஸ்டீரியா பேஷண்ட் மாதிரி கத்துறீங்க? எங்கேயும் போகலை அவ. கோயில் வீட்டுக்குள்ளேதான் ஒளிஞ்சி வெளயாடுறா!”

“என்னது கோயில் வீட்டுக்குள்ளேயா? என்ன எௗவைப் பண்ணிக் கிட்டிருக்கே நீ? அவளை அங்கெ விட்டுட்டு?”

கையிலிருந்த ரிமோட் நழுவிக் கீழே விழுந்தது என்னையுமறியாமல்.

– மருதம், முதற் பதிப்பு: டிசம்பர் 2006, எம்.கே.குமார் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *