ஸ்ரீமத் பாகவத ஸாரம்






(1945ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25
பதினாறாம் அத்தியாயம்
விருத்திராஸுர வதம்

பரீக்ஷித்துக்கு இந்த வரலாறு கூறிய சுகர், தேவ சபையைப்பற்றி இயம்பத் தொடங்கினார்:
ஒரு சமயம் தேவகுருவாகிய பிருஹஸ்பதி தேவேந்திரனுடைய சபைக்குப் போனார். தேவேந்திரன் ஐசுவரியச் செருக்கினால் அவரைத் தக்கபடி உபசரியாமல் இருந்தான்.அதனால் பிருகஸ்பதி அந்தச் சபையை விட்டுச் சென்றார். பிறகு தேவேந்திரன் தன் குருவிற்குத் தான் செய்த குற்றத்தை உணர்ந்தான். “என்ன காரணத்தினால் சபையிலே வந்த என் குருநாதருக்குச் செய்யவேண்டிய உபசாரங்களைச் செய்யாதொழிந்தேன்? அது செல்வச் செருக்கினால் அல்லவா? இப்படிப்பட்ட செல்வத்தை அறிவுடையவன் விரும்புவானா? இப்போதே குருவைத் தேடி அடைந்து வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன்’ என்று தன்னை நிந்தித்துக்கொண்டு குருவைத் தேடினான் ; குருவைக் காணவில்லை. ஆகையினால் பெருந்துக்கம் அடைந்தான்.
இவ்வாறு பிருஹஸ்பதி இந்திரனை விட்டு நீங்கியதை அறிந்த அசுரர்கள், தேவர்களை எதிர்த்துத் தாக்கினார்கள். தேவர்கள் அசுரர்களுடைய உபத்திரவம் பொறுக்க மாட்டாமல் பிரம்மாவினிடம் போய் முறையிட்டார்கள். பிரம்மா தேவேந்திரனைப் பார்த்துச் சொல்லலானார்: குருவை அநாதரவு பண்ணியதால் வந்த சங்கடம் இது! ஆயினும் ஒன்று கூறுகின்றேன். அப்படிச் செய்யுங்கள் :-
துவஷ்டா என்னும் ஒரு பிராம்மணன் இருக்கிறான். அவனுக்கு விசுவரூபன் என்கிற ஒரு பிள்ளை இருக்கிறான். அவன் நல்ல சிஷ்டன். அவ்வந்தணனை நீங்கள் குருவாக அடையுங்கள். அவனுக்கு அசுரர்களிடம் சிறிது அன்பு உண்டு. அவன் இந்தச் சமயம் உங்களுக்குக் குருவாயிருந்து வேண்டிய உதவி செய்வான்” என இவ்வாறு கூறி அனுப்பினார்.
தேவேந்திரன் பிரம்மா சொன்னபடியே விசுவரூபன் என்னும் அந்த அந்தணனையே குருவாக அடைந்தான். அந்தக் குரு சுக்கிராசாரியருடைய வித்தையினாலே இரக்ஷிக்கப்பட்டிருக்கிற அசுரர்களுடைய சம்பத்தை நாராயண கவசமென்கிற வித்தையினாலே பிடுங்கித் தேவேந்திரனுக்குக் கொடுத்தான்; கொடுத்ததுமல்லாமல் அந்த நாராயண கவசத்தை இந்திரனுக்கு உபதேசமும் பண்ணினான். இதனால் இந்திரன் அசுரர்களை வென்றான்.
இப்படியான பிறகு விசுவரூபன் யாகஞ்செய்தான். அந்த யாகத்தில் அவன் தேவர்களுடைய மேன்மையைக் குறித்து ஆகுதி கொடுப்பதாக வெளிக்குக் காட்டிக் கொண்டே வந்தான். மறைவாக அசுரர்களுடைய மேன்மையை உத்தேசித்து ஆகுதி கொடுத்து வந்தான்.
இந்த வஞ்சகத்தை அறிந்த இந்திரன் அவனைத் தன் குருவென்றும் பாராமல் ஒரே வெட்டாக வெட்டிக் கொன்றுவிட்டான். வெட்டுண்ட விசுவரூபன் பிராம்மண னாதலால் இந்திரனைப் பிரம்மஹத்தி பிடித்துக்கொண்டது. அந்தத் தோஷத்தை அவன், பூமி, மரம், ஜனம், ஸ்திரீ இவர்களுக்குப் பகிர்ந்துகொடுத்துப் பரிசுத்தனானான். அவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்துத் திருப்தி செய்வித்தான்.
விசுவரூபன் இவ்வாறு இறந்த செய்தியை அறிந்த அவன் தந்தை துவஷ்டா இந்திரன்மீது கோபங்கொண்டு, அவனைக் கொல்லத்தக்க ஒருவனை உண்டாக்கக் கருதி ஆபிசார ஹோமம் செய்தான். அதிலிருந்து பயங்கர ரூபமுடைய ஒரு புருஷன் பிரளய காலத்திலே லோகங்களைச் சங்கரிக்கிற யமன்போலத் தோன்றினான். அவனைக் கண்ட எல்லோரும் பயந்து திக்குகள்தோறும் ஓடினார்கள். அவன் விருத்திராஸுரன் என்னும் பெயர் பெற்றான். அவன் தேவர்களைத் துரத்தித் துரத்தி அடித்தான். தேவர்கள் பிரயோகிக்கும் அஸ்திரசஸ்திரங்களை யெல்லாம் விழுங்கி விட்டான். தேவர்கள் இன்னது செய்வதென்று தெரியாதவர்களாய் இவனிடமிருந்து எப்படித் தப்புவ தென்று கலங்கித் துக்கப்பட்டார்கள்; வேறு கதியைக் காணாமற் பகவானைச் சரணமாக அடைந்து துதித்தார்கள்.
பகவான் அவருக்குப் பிரத்தியக்ஷமானார். தேவர்கள், அவரிடம் தங்கள் குறைகளைச் சொல்லிக்கொண்டார்கள். பகவான், “பூலோகத்தில் ததீசி யென்றொரு முனிவர் இருக்கிறார். அவரிடம் போய் அவரைப் பணிந்து உபசரித்து அவருடைய உடலைக் கேளுங்கள். அவர் தம் உடலைக் கொடுப்பார். அந்த உடலின் முதுகெலும்பினால் ஓர் ஆயுதம் செய்து கொள்ளுங்கள். அந்த ஆயுதம் உங்களுக்கு ஐயத்தைக் கொடுக்கும்” என்று கூறி அனுப்பினார்.
தேவேந்திரன், பகவான் திருவாய்மலர்ந்தருளியபடியே ததீசி முனிவரிடம் போய் அவரை வணங்கி, “ஸ்வாமி, தேவர்களுடைய நன்மையின் பொருட்டுத் தங்கள் உடலைக் கொடுத்தருள வேண்டும் ” என்று கேட்டான். கதீசி முனிவர் சகல தருமங்களையும் உணர்ந்தவர். ஆகையால் பலருடைய நன்மையின் பொருட்டுத் தாம் இறந்துபோதல் உத்தமமாகும் என்று கருதித் தம் சரீரத்தை விட்டு ஹரிசரணாரவிந்தம் அடைந்தார். இந்திரன் அந்த முனிவருடைய முதுகெலும்பினால் தேவதச்சனைக்கொண்டு வச்சிராயுதம் ஒன்று உண்டாக்கி விருத்திராஸுரனை எதிர்த்து அவனோடு கோர யுத்தம் புரிந்தான். அப்பொழுது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும்போர் மூண்டது. அந்த யுத்தத்தில் விருத்திராஸுரன் எல்லோரும் தன்னைப் புகழும்படியாய் விசித்திரமான யுத்தஞ் செய்தான். முடிவில் அவன் இந்திரனை விழுங்கிவிட்டான். தேவர்கள் துக்கமடைந்து கதறினார்கள். விருத்திராஸுரனுடைய வயிற்றுக்குள்ளே போன இந்திரன் நாராயண கவசத்தினாலும் யோகமாயாப் பிரபாவத்தினாலும் தன்னைக் காத்துக்கொண்டு வச்சிராயுதத்தினால் அவனுடைய வயிற்றைப் பிளந்துகொண்டு வெளியே வந்தான். பிறகு விருத்திராஸுரன் மரணமடைந்தான். அவனுடைய ஆத்மா எல்லோருடைய முன்னிலையிலும் ஜோதி ரூபமாக வெளிவந்து பகவானிடம் லயமடைந்தது.
விருத்திராஸுரன் சிறந்த பிராம்மணனாகையினால் அவனைக் கொன்றதனால் இந்திரனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் உண்டாயது. அதற்குப் பயந்த இந்திரன் ஆயிரம் வருஷகாலம் வரையில் தாமரைத் தண்டினுள்ளே வாசம் பண்ணிவந்தான். அகண்ட பூமண்டலாதிபதியாய் விளங்கிய நகுஷன் இந்திரனுடைய ஸ்தானத்திற்கு வந்து அந்த ஆயிர வருஷகாலமும், வித்தை, தவம், யோகம் இவற்றின் பலத்தினால் சுவர்க்கத்தை ஆண்டுவந்தான். முடிவில் அவன் தன்னுடைய கெட்ட நடத்தையினால் இந்திராணியினுடைய சாபத்திற்கு ஆளாகிப் புவியில் மலைப்பாம்பாகப் பிறந்தான்.
பிறகு தேவர்கள் அசுவமேத யாகஞ் செய்து இந்திரனைப் பிரம்மஹத்தி தோஷத்தினின்றும் விடுவித்தார்கள்.
இந்திரன், அப்பால் சுவர்க்கலோகம் போய்த் தன் பதவியை ஏற்று அரசுபுரிந்துகொண்டு சுகமாக வாழ்ந்து வந்தான்.
பதினேழாம் அத்தியாயம்
சித்திரகேதுவின் வதை
குருவை அவமதித்த இந்திரனுக்கு இவ்வாறான இடர்கள் வந்தனவெனக் கூறியபின், பரீக்ஷித்து ஸ்ரீ சுகரைப் பார்த்து, “ஸ்வாமி, விருத்திராஸுரனுக்கு இப்படிப்பட்ட மகிமை எப்படி ஏற்பட்டது ?” என்று கேட்டான். ஸ்ரீ சுகர் கூறுகிறார்:-
சூரசேன தேசத்தில் சித்திரகேது என்னும் ஒரு வேந்தன் இருந்தான். அவன் அகண்ட மண்டலாதிபதியாய் விளங்கினான் ; அவனுக்கு அநேக மனைவிமார்கள் இருந்தார்கள். இருந்தும் புத்திர பாக்கியம் இல்லாமற் போயிற்று. உதாரகுணம், அழகு, இளமை, வித்தை, ஐசுவரியம், ஞானம் முதலிய சகல சம்பத்தும் நிறைந்திருந்தும் அவனுக்குப் புத்திரன் இல்லாக் குறையே பெருங்குறையானபடியினால் சந்தோஷம் இல்லாதவனாய் இருந்தான்.
அப்படியிருந்த அரசனுடைய அரண்மனைக்கு ஒருநாள், ஆங்கிரஸ மகாமுனிவர் எழுந்தருளினார். சித்திரகேது மகாபுத்திமானாகையினால் பெரியோர்களை வரவேற்கத்தக்க முறையிலே வரவேற்று மிகவும் பணிவோடு வேண்டிய உபசரணைகளைச் செய்து மகிழ்வித்துத் தானும் தன் ஆசனத்தில் அமர்ந்தான். அப்பொழுது அந்த மகரிஷி அரசனுடைய முகத்தைப் பார்த்து, ” வேந்தே, ஏதோ மனோரத மொன்று நிறைவேறப்பெறாமல் கவலைகொண்டிருப்பதாக அறிகிறேன். அப்படி ஏதேனும் உண்டா?” என்று கேட்டார்.
அரசன் உடனே எழுந்து அடிபணிந்து தனக்குள்ள குறையைச் சொல்லிக்கொண்டான். மகரிஷி அவன்மீது இரக்கங்கொண்டு அவனிடம் யக்ஞசேஷமான சருவை (மந்திரித்த சோற்றைக்) கொடுத்து, வேந்தே, இதனை உன் பட்டமகிஷியான கிருதத்யுதி என்பவளுக்குக் கொடு; கொடுத்தால் உனக்குப் புத்திரபாக்கியம் உண்டாகும்” என்று அநுக்கிரகஞ் செய்து விடைகொண்டு சென்றார்.
அரசன் மகரிஷியின் ஆக்ஞைப்படி சருவைத் தன் பட்டமகிஷிக்குக் கொடுத்தான். பிறகு அவள் கருப்பந் தரித்து உரிய காலத்தில் ஒரு புத்திரனைப் பெற்றாள். சித்திரகேது பிள்ளையைப் பெற்ற அந்த மனைவியினிடம் மாத்திரம் அத்தியந்த அன்பு பாராட்டிவந்தான்; மற்றவர்களிடத்தில் அவ்வளவு அன்பு பாராட்டவில்லை. இதனால் மனம் நொந்த அவர்கள், ஒருநாள் அந்தப் பிள்ளைக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டார்கள். அதனால் அந்தப் பிள்ளை மரணமடைந்தது. அந்தோ ! அவ் விறைவனும் அவன் மனைவியும் என்ன செய்வார்கள், பாவம்! அளவற்ற துயர்க்கடலில் மூழ்கிக் கரை காணாதவர்களாய்த் தவித்தார்கள்.
அப்படித் தவித்த அந்த வேந்தனிடம் ஆங்கிரஸ மகரிஷியும் நாரதரும் வந்து அவனுக்குப் பலவாறு சமாதானங் கூறித் தேற்றிப் பார்த்தார்கள். புண்ணிய பாவத்தின் ஸ்வரூபம், ஜீவாத்மாவின் ஸ்வரூபம் முதலியவற்றை எடுத்து விரிவாகக் கூறினார்கள். என்றாலும் அரசன் தேறவில்லை. இது கண்ட நாரதர் இறந்துபோன அந்தப் பிள்ளையை! உயிர்ப்பித்து, ”உன்னைப் பெற்றவர்கள் அடையும் துக்கத்தைப் பார். நீண்ட ஆயுளுடன் நீ இருந்து உன் தந்தையினுடைய செல்வத்தை அநுபவி ” என்று சொன்னார்.
“விட்டுவிட்ட சரீரத்தில் மீண்டும் வந்து நான் பொருந்தமாட்டேன். புண்ணிய பாபரூப கர்மங்களினாலே தேவர்கள், விலங்குகள், மனிதர்கள் என்கிற பிறவிகளிலே சுழலாநின்ற எனக்கு எந்தப் பிறவியிலே இவர்கள் மாதா பிதாக்கள்? சகல பிராணிகளும் ஒன்றுக்கொன்று கிரமமாகப் பந்துவென்றும் ஞாதியென்றும் பகைவ ரென்றும் வாழ்கின்றன. எவனுக்கு எந்தப் பிராணி எதுவரையில் சம்பந்தப்பட்டிருக்கிறதோ அதுவரையில் அது அவனுடையது என்கிற சம்பந்தம் இருக்கிறதே யொழிய மற்றப்படி ஏது சம்பந்தம் ?” என்று கூறி அந்தச் சிசு ஆவி பிரிந்தது. இதுகண்ட எல்லோரும் ஆச்சரியம் அடைந்தார்கள். சித்திரகேதுவும் அவன் மனைவியும் அந்தக் குழந்தையினிடம் வைத்திருந்த பாசத்தையும் சோகத்தை யும் விட்டொழித்து அதை எடுத்துக் கொளுத்தி, செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்தார்கள். அந்தச் சிறுவனைக் கொன்ற ஸ்திரீகளெல்லோரும் தங்களுடைய பிழையை எண்ணி வருந்தி வெட்கமடைந்தார்கள்; பாலஹத்தி தோஷம் நீங்குவதற்குரிய விரதம் அநுஷ்டித்தார்கள். நாரதரும் ஆங்கிரஸ மகரிஷியும் அந்தச் சித்திரகேதுவுக்குப் பிரம்மவித்தையை உபதேசித்துச் சென்றனர். பிறகு அவனுக்குப் பகவான் தரிசனம் தந்து திவ்யஞானம் உண்டாகும்படி அனுக்ரஹம் செய்தார்.
திவ்யஞானம் பெற்ற சித்திரகேது ஒருவராலும் தடுத்தற்கரிய வீரமும் இந்திரிய பலமும் உடையவனாய், சித்தர், சாரணர், முனிவர்கள் ஸ்தோத்திரம் செய்ய மகாயோகியாய் விளங்கினான். அவன் ஒரு சமயம் தனக்கு மகாவிஷ்ணு தந்த விமானத்தின்மீது திக்குகள்தோறும் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது, பரமசிவம் பார்வதிதேவியைத் தமது மடியில் வைத்துக்கொண்டு மகரிஷிகளின் மத்தியில் வீற்றிருப்பதைக் கண்டான். கண்டதும், “உலகங்களுக்கெல்லாம் குருவாக விளங்கும் இவர், சிறிதும் வெட்கமின்றிச் சபையில் தம் மடியில் ஸ்திரீயை வைத்துக்கொண்டு உலகத்து மனுஷனைப்போல் இருப்பது வெகு அழகாய் இருக்கிறது! நன்று நன்று இவர் பிரபாவம்! இவர் மஹா யோகியாம்” என்று கூறி நகைத்தான். இதனால் கோபங்கொண்ட பார்வதிதேவி, “அடே வணக்கமில்லாத் துஷ்டா, நீ அசுர ஜன்மத்தை அடையக்கடவாய் ”
என்று சபித்தாள். உடனே சித்திரகேது விமானத்தினின்றும் இறங்கிவந்து பார்வதி தேவியை விணங்கி, அவள் தந்த சாபத்தை ஏற்றுக் கொண்டான். பிறகு அவனுக்கு அசுரஜன்மம் உண்டா யிற்று. சித்திரகேது சிறந்த பக்தனானதனால் இந்த அசுர ஜன்மத்திலும் மகா மகிமையோடு விளங்கினான் என்று சுகர் கூறினார்.
பிறகு பரீக்ஷித்து ஸ்ரீ சுகரை நமஸ்கரித்து, மருத்துக்கள் தேவதைகளான வரலாற்றைக் கூறும்படி பிரார்த்தித்தார்.
ஸ்ரீ சுகர் கூறுகிறார்:-
காசியபரிஷியினுடைய பத்தினியாகிய திதியென்பவள் ஒரு சமயம் அவரைப் பார்த்து, “ஸ்வாமி, என் மக்களைக் கொன்ற விஷ்ணுவுக்குச் சகாயனான இந்திரனைக் கொல்லத் தக்க புத்திரனை அடைய விரும்புகிறேன்” என்று கேட்டாள். காசியபர் இதைக் கேட்டதும் துக்கமும் பரிதாபமும் அடைந்து, மனைவியை நோக்கி, “அதற்கு நீ ஒரு வருஷ காலம் ஒரு விரதம் அநுஷ்டித்தல் வேண்டும். நடுவில் விரத பங்கம் ஏற்படுமானால் உனக்குப் பிறக்கும் அந்தப் புத்திரன் தேவேந்திரனுக்கு உறவினனாய்விடுவான்’ என்று கூறி அந்த விரதம் அநுஷ்டிக்கவேண்டிய வழியைத் தெரிவித்தார்.
திதி அவ்வாறே விரதமிருந்தாள். இந்திரன் திதியி னுடைய அபிப்பிராயத்தை உணர்ந்து அவளுடைய விரதத்திற்குப் பங்கஞ் செய்யக் கருதி அவளிடம் வந்து அவளுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்துகொண்டு தன் எண்ணத்தை முடிக்கச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். ஒருநாள் மாலை வேளையில் திதி, விரதத்தால் உண்டாகிய இளைப்பினால் நித்திரைபோனாள். அதுசமயம் பார்த்து இந்திரன் அவளுடைய கருப்பத்தைத் தன் வச்சிராயுதத்தின் வன்மையினாலே ஏழு கண்டமாக அறுத்து மறுபடி ஒவ்வொரு கண்டத்தையும் ஏழு ஏழாக அறுத்தான். இவ்வாறு அறுபட்டும் அந்தக் கருப்பம் பகவானுடைய கிருபையினால் மரித்துப்போகாமல் இருந்து இந்திரனைப் பார்த்து,”உன்னுடைய உடன்பிறப்பை ஏன் தொந்தரை செய்கிறாய்?” என்று கேட்டது.இந்திரன், “இனி அஞ்ச வேண்டாம்” என்று கூறினான். பிறகு அந்த மருத்துக்கள் நாற்பத்தொன்பது கூறும் நாற்பத்தொன்பது தேவர்கள் ஆனார்கள். பிறகு திதிதேவி விழித்துக்கொண்டு தன் கருப்பம் இவ்வாறானதற்குத் தன் விரதபங்கமே காரணம் என்று அறிந்தாள். ஆயினும் தேவர்களாக விளங்குவது கண்டு சந்தோஷமடைந்தாள். இந்திரனும் திதியினிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மருத்துக்களுடனே தன் உலகம் சென்றான்.
பரீக்ஷித்து இவ்வாறு சுகர் கூறிய இப்புண்ணிய கதையைக் கேட்டு மகிழ்ந்தார்.
பதினெட்டாம் அத்தியாயம்
பிரகலாதன் சரித்திரம்
“எல்லாப் பிராணிகளுக்கும் அடைக்கல ஸ்தானமா யும் அநுகூலராயும் பரமகாருண்ய மூர்த்தியாயும் விளங்கும் பகவான், இந்திரன் பொருட்டு அசுரர்களை யெல்லாம் ஏன் கொன்றார்? பரமானந்த சொரூபராகிய அவருக்குத் தேவர்களால் ஆவதென்ன? அசுரர்களால் ஆகாமற்போனதென்ன? இதனை எனக்கு விளக்கியருளல் வேண்டும்” என்று பரீக்ஷித்து மகாராஜா சுகரைக் கேட்டான்.
ஸ்ரீ சுகர் கூறலானார்:-
பகவான் விருப்பும் வெறுப்பும் இல்லாதவர். ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்கிற மூன்றும் பிரகிருதியினுடைய குணங்கள். பகவான் இவ்வண்டகோடிகளைப் படைக்கும் போது ராஜஸகுணப் பிரதானரான பிரம்மாவா யிருப்பர். படைத்தவற்றை ரட்சிக்குங்காலத்தில், சத்துவகுணப் பிரதானரான விஷ்ணுவாக இருப்பர். அழிக்கவேண்டிய காலத்தில் தாமஸகுணப் பிரதானரான ருத்திரராக இருப்பர்.இவ்வாறு பரப்பிரம்மத்தினிடம் ஆரோபிக்கிற இவ்விகாரங்க ளெல்லாம் அந்த மூன்று குணங்களினாலே அமைந்தனவாம்.
சத்துவகுணம் விருத்தியாகும் காலத்தில் தேவர் களையும், ராஜஸம் விருத்தியாகுங்காலத்தில் அசுரர் களையும், தாமஸம் விருத்தியாகுங்காலத்தில் ராக்ஷஸர் களையும் அந்த அந்தக் காலா நுகூலங்களைக்கொண்டு பகவான் அந்த அந்தத் தேகங்களிலே பிரவேசித்து அவரவர்களை விருத்திபண்ணுகிறார். கட்டை முதலிய வற்றில் தீயானது அவற்றையன்றி வேறாக அறியப் படாததுபோல் பகவானானவர், தேவாதி சரீரங்களைக் காட்டிலும் வேறாக அறியப்படுவதில்லை. ஆயினும் ஞானிகள், தேவாதி சரீரங்களிலே பிரவேசித்திராநின்ற அந்தப் பரமாத்மாவைக் காரியத்தினாலே அறிகின்றனர். ஈசுவரன் தாம் நியமித்த பிரதான புருஷர்களின்பொருட்டு முக்குணங்களுக்கு ஆசிரயமான காலத்தைத் தாமே உண்டாக்குகிறார். எந்தக் காரணத்தாலும் எந்தக் காரியத்திலும் பகவான் பிரகிருதி புருஷருடைய சம்பந்தம் அடைவதில்லை. காலமானது சத்துவகுணத்தை விருத்தி பண்ணுகிறது, ஆகையினாலே பகவானும் சத்துவகுணப் பிரதானர்களான தேவகணங்களை ரட்சிக்கிறார்; தேவதைகளுக்குப் பகைவர்களாயும், ராஜஸ தாமஸ குணங்களை இயல்பிலேயே உடையவர்களாயும் இருக்கிற அசுரர்களைச் சங்கரிக்கிறார். வேந்தே, ‘விருப்பு வெறுப் பில்லாத பகவானுக்குத் தேவர்களிடத்தில் அன்பும், அசுரர்களிடத்தில் சினமும் உண்டாதல் எவ்வாறு பொருந்தும்?’ என்ற இதே கேள்வியை முன்னொரு காலத்தில் தருமபுத்திரர் கேட்க, நாரதர் கூறுகிறார்:-
சேதி தேசாதிபதியாகிய சிசுபாலன் என்பவன் ஸ்ரீ கிருஷ்ணபகவானிடம் பெரும் பகைகொண்டு அவரைத் திட்டினான்.முடிவில் அவன் பகவானுடைய சக்கராயுதத் திற்கு இரையானான். அவனுடைய ஆத்மா ஜோதி சொரூபமாய்க் கிருஷ்ணபரமாத்மாவிடம் லயமடைந்தது. இதைக்கண்ட தருமபுத்திரர், “மகா கொடிய பாதகனாகிய இந்தச் சிசுபாலனுக்கு இந்த நல்ல பதவி எவ்வாறு கிடைத்தது?” என்று சந்தேகங் கொண்டு நாரதரைக் கேட்டார்.
நாரதர் சொல்லுகிறார்:-
“பகவானுக்கு நான் எனது என்னும் அபிமானம் இல்லை. ஆகையினால் அவரிடத்தில் எந்தவிதமான பக்தியை யும் செய்யலாம். கோபிகள் ஸ்நேகரூபமான பக்தியைச் செய்தார்கள். கம்ஸன் பயத்தினால் பக்தி செய்தான். சிசுபாலன் பொறாமையினால் பக்திசெய்தான். விருஷ்ணி யாதவர்கள் உறவு ரூபமான பக்தியைச் செய்தார்கள். நீங்கள் அன்பினால் பக்தியைச் செய்தீர்கள். நாங்கள் தியானரூபமான பக்தியைச் செய்கிறோம், தருமராஜனே, உங்கள் சிறிய தாயார் மக்களான சிசுபால தந்தவக்திரர்கள் இருவரும் பூர்வம் விஷ்ணுவினிடத்தில் பாரிஷித சிரேஷ்டர்களாயிருந்தவர்கள். பெரியோர்களுக்குச் செய்த அபராதத்தினால் சாபமடைந்து இவ்வாறு பூலோகத்திற் பிறந்தார்கள்” என்று கூறி, மேலே பேசுவதற்குள் தரும புத்திரர், ” ஸ்வாமி, ஹரிதாஸர்களுக்குத் தீமை தரும்படியான அந்தச் சாபம் யாருடையது? அது எத்தகையது?” என்று கேட்டார். நாரதர், “வேந்தே, ஒருகால் பிரம்மபுத்திரர்களான ஸநகாதி மகரிஷிகள் பகவானைத் தரிசிக்கும்பொருட்டு வைகுண்டம் போனார்கள். அங்குத் துவாரபாலகர்களாய் இருந்தவர்கள் இவர்களைத் தடுத்தார்கள். அதனால் ஸநகாதிகள் சினங்கொண்டு, “நீங்கள் இருவரும் மகாவிஷ்ணுவினுடைய ஸந்நிதானத்தில் வாசம் பண்ணுவதற்குத் தகுதியுடையவர்களல்லர். ஆகையினால் நீங்கள் அசுர ஜன்மத்தை அடையக் கடவீர்கள்’ என்று சாபம் தந்தார்.இந்தச் சாபத்தின்படி துவாரபாலகர்கள் இரணியகசிபு, இரணியாக்ஷன் என்னும் இரண்டு அசுரர்களாகப் பிறந்தார்கள். இவ்வாறு சபித்த ஸநகாதிகள் கிருபைகூர்ந்து அவர்களை நோக்கி, ‘மூன்று ஜன்மத்துக்குப் பிறகு நீங்கள் மீண்டும் இந்த விஷ்ணு பதத்துக்கு வருவீர்கள் ‘ என்று அநுக்கிரகமும் செய்தார்கள். இரணியகசிபுவை நரசிங்கமூர்த்தி சங்கரித் தார். இரணியாக்ஷனை வராகமூர்த்தி சங்கரித்தார். இரணியகசிபு நாராயணனிடத்தில் துவேஷங்கொண்டான்; அதனால், ஹரிபக்தனாக விளங்கிய தன் புத்திரன் பிரகலாதனைக் கொல்லத் தன்னால் இயன்றவரையில் முயன்றும் சாமர்த்திய மில்லாதவனானான்.
“இப்படிப்பட்ட அந்த அசுரர்களிருவரும் அப்பால் இராவண கும்பகர்ணர்களாகப் பிறந்தார்கள். அவர்களைப் பகவான் இராமாவதாரம் எடுத்து வதஞ்செய்தார். அப்பால் அவர்கள் இப்போது சிசுபாலன், தந்தவக்திரன் என்கிற க்ஷத்திரியர்களாகப் பிறந்தார்கள். இந்தப் பிறவியில் அவர்கள் கிருஷ்ணபகவானுடைய சக்கரத்தினால் சகல பாபங்களினின்றும் விடுபட்டுத் துவேஷமாகிற யோகத்தினாலே அச்சுதனுடைய சாரூப்பியத்தை அடைந்து விஷ்ணு பாரிஷிதர்களாய் அவருடைய சமீபத்தை அடைந்தனர்” என்றார்.
இவ்வாறு கூறிய நாரதரைப் பார்த்து, தருமபுத்திரர், “ஸ்வாமி, பரமபக்தனாகிய அந்தப் பிரகலாதனுடைய சரித்திரத்தைக் கிரமமாகச் கேட்க விரும்புகிறேன்” என்றார்.
நாரதர் கூறலானார்:-
தருமபுத்திரனே, இரணியாக்ஷனாகிய தன் தம்பியைப் பகவான் வராகாவதாரம் எடுத்துச் சங்கரித்தாரல்லவா? அதனால் பகவானிடம் இரண்யகசிபு கோபங்கொண்டு, அவரை ஒழித்துவிடுவதெனத் தீர்மானித்தான். விஷ்ணு வானவர் பிராம்மணர்கள் செய்யும் யக்ஞ சொரூபர்; தர்மமயமான புருஷர்; தேவர்கள், ரிஷிகள், பிதிர்களுக்கும் தருமத்துக்கும் பரகதியாயிருப்பவர் என்னும் இந்த உண்மையுணர்ந்து, பிராம்மணர்களையும் தேவர்களையும் இம்சிக்கத் தொடங்கினான். தேவர்களெல்லோரும் அவனுடைய இம்சை பொறுக்கமாட்டாமல் சுவர்க்க லோகத்தை விட்டுப் பூமியிலே வந்து ஒருவருக்கும் தெரியாமல் சஞ்சரிக்கலாயினர்.
இவ்வாறு செய்தபின் இரணியகசிபு தான் ஒருவராலும் ஜயிக்கப்படாத பலத்தையும், மரண மில்லாமையையும், ஜகத்துக்கெல்லாம் தானே ஏகசக்கராதிபதியாக இருக்கும் தன்மையையும் பெறக் கருதி மந்தர பர்வத்தினுடைய தாழ்வரையில் கால் பெருவிரலை மாத்திரம் பூமியில் ஊன்றிநின்று, கைகளை உயரத் தூக்கிக்கொண்டு விண்ணோக்கிய பார்வையுடன் கடுமையான தவம்புரிந்தான். அந்த அசுரனுடைய சிரசிலிருந்து தபோமயமான அக்கினி புகையுடனே தோன்றி லோகமெங்கும் பரவித் தகித்தது. அதனால் நதிகளும் கடல்களும் கொதிப்படைந்து கலங்கின. தீவுகளும் பர்வதங்களும் உள்ள பூமி நடுங்கியது. கிரகங்களுடனே நட்சத்திரங்கள் விழுந்தன. தேவர்கள் எல்லோரும் பிரம்மலோகம் போய் முறையிட்டார்கள். பிரம்மதேவர் உடனே இரணியனுடைய ஆசிரமம் வந்து அவனுக்குக் காட்சி கொடுத்து, “உனக்கு வேண்டும் வரமென்ன? நீ எதைக்குறித்து இப்படிப்பட்ட கடுமையான தவம் புரிகின்றாய்? நீ செய்த இந்தத் தவம் பூர்விகர்களான ரிஷிகளும் செய்ததில்லையே!” என்று கூறினார்.
இரணியகசிபு உடனே பிரம்மாவை வணங்கி, “நீர் சிருஷ்டித்த பொருள்களுள் எதனாலும் எனக்கு மரணம் உண்டாகாதபடி அருள் புரிய வேண்டும். உள்ளும் புறம்பும், பகலிலும் இரவிலும், புவியிலும் விண்ணிலும், உம்மாலே சிருஷ்டிக்கப்படாத வேறு எந்தப் பொருள் களாலும், ஆயுதங்களாலும், மனிதர்களாலும் மிருகங் களாலும், உயிரில்லாத வஸ்துக்களாலும் உயிருடனே கூடிய வஸ்துக்களாலும், சுரர்களினாலும் அசுரர் களினாலும் எனக்கு மரணம் உண்டாகாமல் இருக்கவேண் டும். யுத்தத்திலே எனக்குச் சமானமாக எவரும் இருத்தல் கூடாது. சகலப் பிராணிகளுக்கும் நான் ஒருவனே தலைவனாக இருத்தல்வேண்டும். உமக்கிருப்பது போல அணிமாதி ஐசுவரியமும் எனக்கு இருக்கவேண்டும் ” என்று கேட்டான். பிரம்மதேவர், “இரண்ய, உனது தவம் எமக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தபடியால் நீ விரும்பியபடி உனக்கு எல்லா வரங்களையும் தந்தோம்!” என்று கூறித் தமது உலகம் போய்ச் சேர்ந்தார்.
இரணியகசிபு தவம்புரியச் சென்றிருந்த பொழுது தேவேந்திரன் தேவர்களுடன் படைதிரட்டிச் சென்று அசுரர்களை வென்று இரணியகசிபுவின் மனைவி லீலாவதி என்பவளைச் சிறைசெய்து தன் ரதத்தின்மீது எடுத்துக் கொண்டு சென்றான். லீலாவதி அப்பொழுது கர்ப்பமாக இருந்தாள். இதனை அறிந்த நாரதர், வழியில் இந்திரனைச் சந்தித்து, “நீ ஏன் இந்தக் காரியம் செய்கிறாய்?” என்று கேட்டார். இந்திரன், “ஸ்வாமி, இவள் கர்ப்பமா யிருக்கிறாள். இவளுக்குப் பிள்ளை பிறக்குமாயின், அவன் அந்த இரணியனைவிடக் கொடியனாய் இருப்பானாதலால் இவள் பிரசவிக்கிற வரையில் என்னிடம் வைத்திருந்து பிரசவித்தவுடன் அந்தப் பிள்ளையைக் கொன்றுவிட்டு எமது பகையைத் தீர்த்துக்கொள்ளக் கருதி இவ்வாறு இம்மாதைக் கொண்டுபோகிறேன். இவளை நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. பிரசவித்தபின் இவளை இவள் கணவனிடம் அனுப்பிடுவிடுவேன்” என்றான். நாரதர், இதைக்கேட்டதும் நகைத்து, “அடடா! என்ன காரியஞ் செய்தாய்? இவள் வயிற்றில் இருக்கும் பிள்ளை மஹா ஹரிபக்தன். இவனாலேதான் உங்களுக்கும் உலகங்களுக்கும் க்ஷேமம் உண்டாகப்போகிறது ஆகையினால் நீ எண்ணியபடி செய்வது நன்றன்று. இந்த மாதை என்னிடம் விட்டுச்செல். நான் தக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார். இந்திரன் வேறு பேசாமல் அவ்வாறே லீலாவதியை முனிவரிடம் விட்டுச் சென்றான். நாரதர் லீலாவதியைத் தமது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று, அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையினுடைய க்ஷேமத் திற்காக அவளுக்குப் பரம உபதேசங்களைச் செய்தார்.
அந்தக் குழந்தைதான் பிரகலாத னென்கிற ஹரிபக்த சிரோமணியாய்ப் பிறந்தது.
தான் இல்லாத சமயத்தில் இவ்வாறு இந்திரன் சிறை செய்துகொண்டு போன செய்தியை நாரதரால் கேள்விப்பட்ட இரணியன், இந்திரனிடத்திலும் தேவர் களிடத்திலும் மகா உக்கிரமான கோபங்கொண்டான். ஹரியினிடத்திலும் அவனுக்குக் கோபம் அதிகரித்தது. ஆகையால் அவன் ஹரிபக்தர்களைக் கண்டால் கண்ட விடத்திலேயே கொல்வதைத் தன் தொழிலாகக் கொண்டான். இப்படிப்பட்ட அவனுக்குப் பிறந்த பிரகலாதன், பிறக்கும்போதே ஹரிபக்த சிரோமணியாக இருந்தமையினால் அவனைச் சரிப்படுத்துவது இரணியனுடைய முதல் வேலையாய் முன்னின்றது. ஆகவே அவன், தன் மகனைத் தங்கள் குருவாகிய சுக்கிராசாரியரிடம் ஒப்பித்து, ”இவனை நம்முடைய வழிக்குத் திருப்புங்கள்; இவன் எப்போதும் என் பகைவனுடைய பெயரையே கூறுகிறான்” என்று சொல்லி அனுப்பினான்.
பின்பு ஒருநாள், இரணியகசிபு தன் மகன் பிரகலாதனைத் தன் மடியில் எடுத்துவைத்துக்கொண்டு, “குழந்தாய், நீ நல்ல மார்க்கமெனக் கற்றுத் தேர்ந்தது எது ?” என்று கேட்டான். பிரகலாதன், “அன்புள்ள தந்தாய்! அகங்கார மமகாரங்களையுடைய ஜீவர்களுக்கு ஸ்ரீ ஹரியை வழிபடுவதே நல்ல மார்க்கமெனக் கற்றேன் ” என்றான். இதைக் கேட்டதும், “ஓ சுக்கிராசாரியருடைய சாமர்த்தியம் நன்று; நன்று ” என்று கூறிச் சினங்கொண்டு நகைத்தான். பிரகலாதனோடு சேர்ந்த பையன்கள் இருவர், “பெருமானே, ஒன்றைச் சொல்லிக்கொடுத்தால் உம் புத்திரன் வேறொன்று சொல்லுகிறான்; அதற்கு என்ன செய்வது?” என்றார்கள்.
அசுரன், “பாலனான இவனுக்குச் சொல்லிக் கொடுத்ததை விட்டு, ஹரிவிஷயமான மற்றொன்றைச் சொல்வதற்கு எப்படித் தெரியும்? மறைந்து திரியும் ஹரி பக்தர்களுடைய காரியமாயிருக்கும் இது. இனி இவனை எவருடனும் சேரவிடாதீர்கள். நம்முடைய தர்மங்களைச் சொல்லும்படி செய்யுங்கள் ” என்றான்.
சுக்கிராசாரியர் தம்மால் இயன்றவரையில் பலவாறான் உபாயங்களால் பிரகலாதனது புத்தியை மாற்றுவதற்குப் பார்த்தார். ஒன்றாலும் அவனுடைய புத்தியை மாற்ற முடியவில்லை. பிரகலாதன், “காந்தத்தினிடம் இரும்பு எப்படிச் சுழலுமோ, அவ்வாறே என்னுடைய மனமானது நாராயணனுடைய ஸந்நிதானத்தில் தானாகவே பேதிக்கின்றது” என்று எப்போதும் மறுமொழி சொல்லிக் கொண்டு வந்தான்.
பிரகலாதன் இப்படி இருந்துவகையில் ஒருநாள் அவன் தந்தை அவனை அழைத்து, “நீ இதுவரையில் உன் குருவினிடம் கற்ற வித்தைகளின் சாராம்சமான ஒன்றைச் சொல்” என்று கேட்டான். பிரகலாதன், “நாராயண னுடைய புண்ணிய சரித்திரங்களைச் சிரவணஞ்செய்து அவனுடைய திருவடி முடிசூடி அவனை நல்ல மலர்களால் அர்ச்சித்து வழிபடுவதல்லவா அறிவுடைமை யாகும்?” என்று கூறினான். இதைக் கேட்டதும் இரணியகசிபு சுக்கிராசாரியரை வருவித்து அவரைக் கோபித்துக் கொண்டான். சுக்கிராசாரியர், “உம்முடைய புத்திரன் நான் சொல்லிவைத்ததையும் சொல்வதில்லை. அயலார் சொல்வதையும் சொல்வதில்லை. இவனுக்கு விஷ்ணுத் தியானம் சுபாவத்திலேயே ஏற்பட்டிருக்கிறது” என்றார். அசுரன் பிரகலாதனை நோக்கி, “இப்படியெல்லாம் சொல்ல உனக்கு யார் சொல்லிக்கொடுத்தது?” என்று கேட்டான். பிரகலாதன், “துஷ்ட சித்தமுடையர்களுக்குப் பகவானி டத்தில் பக்தி குருவினாலும் உண்டாகாது; சுபாவத்திலேயும் ஏற்படாது” என்று கூறினான். இதைக் கேட்டதும் இரணியன் கோபங்கொண்டு ஏவலாளர்களை அழைத்து, “இந்தத் துஷ்டனைக் கொல்லுங்கள். இல்லாவிட்டால் இவனை ஊரைவிட்டுத் துரத்துங்கள். பகைவனானாலும் மருந்துபோல் இதத்தைச் செய்பவனன்றோ புத்திரன்? தன் சரீரத்திலே பிறந்த பிள்ளையானாலும் நோயைப்போல் பிரதிகூலத்தைச் செய்பவன், எப்படிப் புத்திரனாவான்? அவனே பகைவன். சரீரத்திற்கு உபத்திரவத்தைத் தரும் அவயவத்தைச் சேதிக்க வேண்டுமல்லவா? ஆகையினால் மித்திரன்போல வேஷதாரியாகவும் சத்துருவாயும் இருக்கிற இவனை, விஷப் பிரயோகம் முதலிய எந்த உபாயங்களினாலாவது கொல்லுங்கள் ” என்றான்.
அசுரன் ஆணைப்படி அந்த ஏவலாளிகள் பிரகலா தனைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய்க் குத்தியும் அடித்தும் வெட்டியும் பார்த்தார்கள்; மலைமேலிருந்து உருட்டிவிட்டார்கள் ; நெருப்பில் வீழ்த்தினார்கள், பாம்பை விட்டுக் கடிக்கும்படி செய்தார்கள்; இன்னும் இவை போல்வன பலவும் செய்தார்கள். ஒன்றாலும் அவன் சாக வில்லை. நாராயணாவென்னும் நாம உச்சாரணமே அவனைக் காத்தது.
பகவானுடைய பாதாரவிந்தத்தை நம்பிய பிரகலாதன் இவ்வாறு இருப்பதனால் இரணியன் பெரு வருத்தத்தில் ஆழ்ந்து அப்பால் அவனை அழைத்து, “அடே! பிரகலாதா! நீ என் இவ்வாறு இருக்கிறாய்? நீ துஷ்டன் ! என் ஆணை கடந்து நடக்கும் உன்னை யமலோகத்துக்கு அனுப்புவேன். எனக்குப் பயந்து மூன்று உலகங்களும் நடுங்கிக்கொண் டிருப்பதை நீ அறியாயோ? இப்படி அறிந்திருந்தும் நீ எந்தப் பலத்தினால் இப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான்.
பிரகலாதன், “தந்தையே, நாராயணனுடைய பலந் தான் எனக்கு. அவர் எனக்கு மாத்திரம் பலமாக இருக்கி றார் என்பதில்லை. உம்மைவிடப் பலசாலிகளான மற்றவர்க ளுக்கும் பலமாக இருக்கிறார். காலரூபியாயும் இருக்கிறார். அவரே சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணுகிறார். ஆதலினால் எல்லோருக்கும் அவரே கதி என்றான்.
இரணியன், “அடா அறிவில்லாதவனே, மரணம் கிட்டியிருக்கிறவர்களுக்கே இப்படிப்பட்ட துர்ப்புத்தி உண்டாகும். என்னைக்காட்டிலும் இன்னுமொரு கடவுள் எங்கே இருக்கின்றான்?” என்று கேட்டான்.
பிரகலாதன்:-
“கடலினு முளனே வண்டு கஞலலால் வீழு மந்தண்
மடலினும் உளனே ஓங்கு மலையினும் உளனே மன்னா
உடலினுள் உயிர்போ லெல்லா வுலகினு முளனே வெய்ய
அடலுடை யாழி தாங்கு மமலனென் றழைத்தா னம்மா.”
இறைவன் எங்கும் உளன் என்று பிரகலாதன் சொன்ன மாத்திரத்தில் இரணியன் கோபங்கொண்டு எழுந்து கத்தியை ஓங்கியவாறே பிரகலாதன் கரத்தைப் பிடித்து இழுத்து, “அடே, நீ சொல்லுகிறபடி அவன் எங்கும் இருப்பது உண்மையானால் இந்தத் தூணிலும் அவன் இருக்கவேண்டுமே? இங்கே இருக்கின்றானா?” என்று கேட்டு அங்கிருந்த தூணில் அறைந்தான். அவன் அறைந்த அக்கணமே அந்தத் தூணைப் பிளந்துகொண்டு,
“இடித்ததோர் அசனி என்ன எறுழ்வலிக் கனகன் சீறி
அடித்ததூ ணத்து நின்றும் ஆடகப் பசும்பொன் அண்டம்
வெடிப்பமால் வரைப னிப்ப வெடிப்பட நகைத்து வெய்தின்
வடித்தபூந் துளவ மாலை வாளரி முளைத்த தம்மா ”
என்றபடி அண்டம் வெடிக்கவும் பெரிய மலைகள் நடுங்க வும், எல்லோரும் அஞ்சும்படி நகைத்துக்கொண்டு துளவ மாலைதரித்த பிரகாசம்பொருந்திய ஒரு நரஹரி ரூபம் தோன்றியது. அதைப் பார்த்த இரணியன், ‘என்ன இது! மிருகமும் அல்ல ; மனிதனும் அல்ல. காணுதற்கரிய நரஹரி ரூபம் பெற்றிருக்கிறது’ என நினைத்துப் பின் தைரியங் கொண்டு கதையைச் சுழற்றி, வீர அட்டகாசஞ் செய்து அந்த நரஹரியை எதிர்த்தான். தம்மை எதிர்த்த அந்த இரணியனைப் பகவான், கருடன் பாம்பைப் பிடிப்பதுபோல் பிடித்துத் தமது தொடையின் மேல் கிடத்திக்கொண்டு, கூரிய நகங்களினாலே அவனுடைய மார்பைப் பிளந்து சங்கரித்தார்.
அந்த நரசிங்கமூர்த்தியினிடம் போகத் தேவர்களும் அஞ்சினார்கள்; அவர் அவ்வளவு உக்ரமாக விளங்கினார். எல்லோரும் அஞ்சவே, பிரகலாதன் அவரிடம் போய்க் கைகுவித்து நின்று துதித்தான். பகவான் சாந்தம் அடைந்து பிரகலாதனை நோக்கி, “உனக்கு வேண்டும் வரமென்ன? உன் பக்திக்கு உகந்தோம்” என்றார். பிரகலாதன் பணிந்து, “ஜகதீசா, சர்வக்ஞராகிய தேவரீர் அறியாத தொன் றுண்டோ? நான் உலக இன்பங்களைக் கருதிப் பக்தி செய்தவனல்ல வென்பதைத் தேவரீர் அறிவீர்கள். நான் நிராசையாகவேதான் பக்தி செய்தேன். ஆதலின் எனக்கு வேண்டுவது ஒன்றுமில்லை. ஆயினும்,புல்,பூண்டு முதலிய மிகத் தாழ்ந்த பதவியை நான் அடைந்தாலும், தங்களிடம் பக்தி மாறாதிருக்க அனுக்கிரகஞ் செய்தல்வேண்டும். எனக்கு வேறு எந்த விதமான ஆசையும் இல்லாதிருக்க வேண்டும். கஷ்டங்களுக்குக் காரணம் ஆசையல்லவா ?” என்றான்.
பகவான், “பிரகலாத, நீயே என் பக்தர்களுள் சிறந்தவன். நீ ஒரு விருப்பமும் இல்லாமல் பக்தி செய்தவ னானாலும் முற்பிறப்பில் செய்த புண்ணியத்திற்குத் தக்க பலனை இப்போது அநுபவிக்கவேண்டியவ னாகையினால் நீ இவ்வுலகிலிருந்து என்னைப் பக்தி செய்துகொண்டிரு. ஆனால் உலக சுகங்கள் எதிலும் பற்றற்று இருக்கக் கடவாய்; பிறகு காலக்கிரமத்தில் என்னை வந்து அடைவாயாக ” என்றார்.
இவ்வாறு கூறிய பகவானைப் பிரகலாதன் பணிந்து, “ஆண்டவனே, என் தந்தையார் உமது மகிமையை அறியாமல் உம்மை நிந்தித்ததுமல்லாமல் உம்மிடம் பக்தி செலுத்திய என்னையும் இம்சித்தார். ஆனாலும் உமது கடைக்கண் பார்வையினால் புனிதரானார். ஆதலால் அவர் பிழையைப் பொறுத்துக் கடைத்தேறும்படி அநுக்கிரகஞ் செய்யவேண்டும்” என்று வேண்டிக்கொண்டான். பகவான், “அன்ப, நீ இந்த இரணியனுடைய கிருகத்தில் பிறந்தமையினால், உன் தந்தையான அவன் கடைத்தேறி விட்டான். அவனையன்றி உன் குடும்பம் இருபத்தொரு தலைமுறையும் கடைத்தேறிவிட்டது. ஆகையினால் நீ உன் தந்தைக்குச் செய்யவேண்டிய பிரேத கிருத்தியங்களைச் செய்” என்று கூறி யனுப்பினார். பிறகு பகவான் தம் அருகே வந்து நின்ற பிரம்மதேவரைப் பார்த்து, “சதுர் முகனே, அசுரர்கள் குரூரமான சுபாவம் உடையவர்க ளல்லவா? அவர்களுக்கு இப்படிப்பட்ட வரங்கொடுத்தது பெரிய தவறு. இனி அவ்வாறு செய்யவேண்டாம். துஷ்டர் களுக்கு இடங்கொடுப்பது பாம்புக்குப் பால் வார்ப்பதுபோ லாகும் ” என்று கூறி மறைந்தருளினார்.
இப்படிப்பட்ட மகிமை வாய்ந்த பிரகலாதனது சரித் திரத்தைக் கேட்டு மனமகிழ்ந்த தருமபுத்திரர் நாரதரை வணங்கி, “ஸ்வாமி, வர்ணாசிரம தர்மங்களையும் அவற்றிற் குரிய ஆசாரங்களையும் விளக்கியருளவேண்டும்” என்று கேட்டார். நாரதர் அவ்வாறே அவற்றைத் தெளிவாய்க் கூறினார். முடிவில், “உலக இன்பம் தீங்கை விளைவிக் கும். அதற்காக, மானிடர் நற்சகவாசஞ் செய்யவேண்டும். நல்லோர் உறவினால் பகவத்கிருபை உண்டாகும். பக்தியி னால் கடைத்தேறலாம் ” என்று கூறி, “தருமராஜனே, நான் பூர்வ ஜன்மத்தில் கந்தர்வனாயிருந்தேன். அப்பொழுது நான் மனம்போனபடி நடந்து வந்தேன். பாப புண்ணியம் தெரியாமல் அலைந்தேன். அப்பொழுது தேவர்கள் ஒரு பெரிய யாகஞ்செய்தார்கள். அதற்கு நானும் போயிருந் தேன். அங்கு அப்ஸர ஸ்திரீகள் பாடி ஆடினார்கள்.நானும் அவர்களோடு பாடி ஆடிக் குதித்தேன். அதனால் யாக அதிபதிகள் சினங்கொண்டு, ‘நீ பரிகாசஞ் செய்தாய், ஆதலால் நீ ஈன ஜன்மத்தை அடையக்கடவாய்’ என்று சபித்தனர். அவர்கள் சாபத்தின்படி நான் ஒரு தாஸிக்குப் பிள்ளையாகப் பிறந்தேன். நான் அந்த ஈனப்பிறவியை அடைந்தேனாயினும், எப்போதும் பிரம்மஞானிகளுக்கு வேண்டிய பணிவிடைகள் புரிந்துவருவேன். அவர்களோடு கூடவே இருந்துவருவேன். இப்படி ஸத்ஸங்க ஸகவாசஞ் செய்தபடியினால் நான் திரும்பவும் பிரம்ம புத்திரனானேன். ஆதலின் ஸத்ஸங்கத்தைத் தேடி அடைவதுதான் அறி வுடைமையாகும். உங்களுக்கு ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய சகவாசம் ஏற்பட்டிருக்கிறபடியால் நீங்களே தன்யர்கள், புண்ணிய புருஷர்கள் ” என்று தெரிவித்தருளினார். தரும புத்திரர் பரம சந்தோஷம் அடைந்து நாரதரைப் பணிந்து வேண்டிய உபசரணைகள் செய்து ஆசீர்வாதம் பெற்றார். நாரதர் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு தம்மிடம் சென்றார்.
பத்தொன்தாம் அத்தியாயம்
கஜேந்திர மோக்ஷம்
இவ்வாறு பிரகலாதனுடைய சிறப்பைப் பரீக்ஷித் துவுக்குக் கூறி முடித்தபிறகு ஸ்ரீ சுகர், ஸ்வாயம்பு முதலிய ஆறு மந்வந்தரங்களைப்பற்றிப் பேசினார். அவைகளில் நான்காவது மந்வந்தரதைப்பற்றிச் சொல்லுகையில், பகவான் கஜேந்திரனை ஒரு முதலை வாயிலிருந்து விடுவித்து ரட்சித்தார் என்று கூறினார். பரீக்ஷித்து அந்தச் சரித்திரத்தை விரிவாக அறிய விரும்பினார். ஸ்ரீ சுகர் மனமகிழ்ச்சியுடன் கூறுகிறார்:-
திரிகூடம் என்ற ஒரு பெரிய மலையின் சாரலிலே பல யானைகளுடன் கஜேந்திரன் (யானையரசு) சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அப்படியிருந்த அந்த யானையரசு தன் பரிவாரங்களுடன் அந்தச் சாரலில் இருந்த ஒரு பெரிய தடாகத்தில் இறங்கி நீர் விளையாடிக்கொண்டிருந்தது. அநேக யானைகள் இறங்கிக் கலக்கியபடியால் அந்தத் தடாகத்தில் இருந்த நீர்ப்பிராணிக ளெல்லாம் மிகுந்த தொந்தரவடைந்தன. இப்படித் தொந்தரவடைந்த முதலை அந்தக் கஜேந்திரனுடைய காலைக் கவ்விக்கொண்டு தன் முழுப் பலத்துடன் உள்ளுக்கிழுத்தது. யானையும் தன் முழுப் பலத்தையுங்கொண்டு காலைப் பிடுங்கிப்பார்த்தது. இதைப் பார்த்துப் பயந்த மற்ற யானைகளெல்லாம் கரை யேறி நின்று வீரிட்டுக் கத்தின. முதலைக்கு வரவரப் பலம் அதிகரித்தது. யானைக்குப் பலம் குறைந்தது. குறையவே அது மனந்தளர்ந்து, இனி நமக்குப் பகவானைத் தவிர வேறு துணையில்லை யென்று தீர்மானித்து, தன் துதிக் கையை மேலே தூக்கிக்கொண்டு, “ஆதிமூலமே ! அநாதை யான என்னைக் காக்கவேண்டும்” என்று வீரிட்டுக் கத்தியது.
கஜேந்திரன் தம்மை அழைப்பது கேட்ட பகவான் அதன்மீது இரக்கங்கொண்டு, கருடவாகனத்தின்மேல் அந்தத் தடாகக்கரையிலே தோன்றிக் காட்சி தந்து சக்கரா யுதத்தைப் பிரயோகித்து முதலையின் வாயைக் கிழித்து யானையை விடுவித்தார்.
ஹுஹு என்னும் பெயர்கொண்ட கந்தர்வன் ஒரு முனிவருடைய சாபத்தினால் இவ்வாறு முதலையானபடியால் அவன் இப்பொழுது சாபம் நீங்கப் பெற்றான். ஆகையினால் இறந்த அந்த முதலையினின்றும் அந்தக் கந்தர்வன் தோன்றிப் பகவானைத் துதித்துக்கொண்டே தன் உலகம் அடைந்தான்.
கஜேந்திரனும் முன்ஜன்மத்தில் இந்திரத்யும்னனென் னும் ஒரு வேந்தனாயிருந்தது. இந்திரத்யும்னன் என்ற அந்த அரசன் சிறந்த பக்திமானா யிருந்தான். அவன் வானப்பிரஸ்தாசிரமம் பூண்டு காட்டில் வந்து ஆசிரமம் ஏற்படுத்திக்கொண்டு தவம் புரிந்துவந்தான். அப்பொழுது அவனிடம் அகஸ்தியர் வந்தார். அவன் அவரை மதியாமலே நிஷ்டையில் இருந்தான். அதனால் அவர் கோபங்கொண்டு, “நீ காட்டானை ஆகக்கடவாய்!” என்று சாபங்கொடுத் தார். அவர் சாபம் தந்ததும் வேந்தன் பயந்து அவரைப் பணிந்து, “ஸ்வாமி ! என்னை மன்னித்து எனக்கு அந்த யானை ஜன்மத்திலும் பகவானுடைய நினைப்பு இருக்கும் படியாய் அநுக்கிரகம் செய்தல்வேண்டும்” என, அகஸ்தியர், “அப்படியே யாகும்” என்று அநுக்கிரகம் செய்து சென்றார். பிறகு அரசன் யானை ஜன்மம் அடைந்து யானைகளுக்குத் தலைவனானான். அதனால் கஜேந்திரன் என்று பெயர்பெற்றான்.
இப்பொழுது பகவானுடைய தரிசனங் கிடைக்கப் பெற்றமையால் கஜேந்திரன் தன் சாபம் நீங்கப்பெற்று பகவானுடைய சாரூப்யத்தை அடைந்தது.
நான்காவது மந்வந்தரம் இவ்வாறு முடிந்தது. இனி ஐந்தாவது மந்வந்தரம் கூறுகிறேன். இதில் இத்தகைய விசேஷம் ஒன்றும் இல்லையாயினும், ஸர்வதமநு என்கிற அரசன் மகாப் பிரசித்தவானாக விளங்கினான். ஆறாவது மநுவாக வந்தவன் சாட்சுஸ மநு வென்று விளங்கினான். இவனுடைய காலத்திலே பகவான் வைராஜனுடைய மனைவியான சம்பூதியினிடம் அசிதரென்கிற பெயரை உடையவராய் அவதரித்துச் சமுத்திர மதனஞ்செய்து தேவர்களுக்கு அமிர்தம் கொடுத்தார். அப்பொழுது பகவான் கூர்மாவதாரங்கொண்டு பாற்கடலிலே மந்தர பர்வதத்தைத் தாங்கினார்.
இங்ஙனம் கூறிய சுகரைப் பார்த்து, பரீக்ஷித்து, ” ஸ்வாமி! பகவான் கூர்மாவதாரங் கொண்ட வரலாறு அறிய விரும்புகிறேன் ” என்று கேட்க, அவர் கூறுகிறார் :-
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கொடிய போர் நடந்தது. அதில், துர்வாஸ மகரிஷியினுடைய சாபத்தினால் தேவர்கள் நிர்ஜீவர்களாய் விழுந்து எழுந்திருக்கமாட் டாமற்போயினர். இவ்வாறு விழுந்தவர், பிரம்மாவிடம் போய் முறையிட்டார்கள். பிரம்மா அவர்களை அழைத்துக் கொண்டு மகாவிஷ்ணுவினிடம் போய் அவரைத் துதித் தார். மகாவிஷ்ணு அவர்களுக்குப் பிரத்தியட்சமாகி, “பிரம்மாதிதேவர்களே! உங்களுக்கு மங்கள முண்டாகக் கடவது. நீங்கள் யாவரும் அசுரருடன் கொண்டிருக்கும் பகைமையை விட்டுவிடுங்கள். நீங்கள் இருவருமாகச் சேர்ந்து பாற்கடலைக் கடையுங்கள். மந்தரபர்வதத்தை மத்தாகவும் வாசுகி யென்கிற நாகராஜனை நாணாகவும் கொள்ளுங்கள். அதினின்றும் பெருகும் அமுதத்தினால் உங்களுக்கு நன்மை உண்டாகும். அதற்கு வேண்டிய உதவியை நானும் செய்கிறேன்’ என்று கூறி மறைந்தார்.
பிறகு தேவர்கள் அசுரேசனிடம்போய்ச் சமாதானம் செய்துகொண்டனர்; சமுத்திர மதனம் செய்வதாகவும் தெரிவித்தனர். அசுரவேந்தனும் அதில் விருப்பங் கொண்டான். பிறகு இருதிறத்தவரும் சேர்ந்து மந்திர பர்வதத்தைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு வந்தார்கள். கொண்டுவரும் வழியில் தூக்கமுடியாமல் கடலில் போட்டு விட்டார்கள். அப்போது பகவான் அங்கே தோன்றி அம் மலையை ஒரு மத்தால் எடுத்துக் கருடன்மீது வைத்துத் தாமும் அதன்மேல் ஏறிக்கொண்டு, தேவாசுர கணங்கள் சூழப் பாற்கடல் வந்து பர்வதத்தை அதிலே தள்ளினார். பிறகு தேவர்கள் நாகராஜனாகிய வாசுகியைக் கயிறாகும்படி வேண்டினார்கள். வாசுகி அமுதத்தில் ஆசைகொண்டு அவ்வாறே துணைபுரிய உடன்பட்டு வந்தான். அப்பால் தேவர்கள் வாசுகியைக் கயிறாக மந்தரகிரியில் கட்டிக் கடையத் தொடங்கினார்கள். பகவான் அப்பொழுது வாசுகியின் தலைப்பக்கம் பிடித்துக்கொண்டார். அதைப் பார்த்துத் தேவர்களும் தலைப்பக்கமே பிடித்துக்கொண்டார் கள். அசுரர்கள் நிஷித்தமான வால்பக்கத்தைப் பிடிக்க மாட்டோமென்று சொன்னார்கள். அப்பால் பகவான் சிரித்துக்கொண்டே நாகராஜனுடைய தலைப்புறத்தை விட்டு வாலைப் பிடித்துக்கொண்டார். தேவர்களும் வால்பக்கத்தைப் பிடித்துக்கொண்டார்கள். ஆகவே தேவர்கள் வால்பக்கமும் அசுரர்கள் தலைப்பக்கமும் பிடித்துக்கொண்டு கடைய ஆரம்பித்தார்கள்.
கடையும்போது மந்தர பர்வதமானது மேலே மிதக்காமல் உள்ளே முழுகியது. தேவாசுரர்கள் அது மேலே மிதக்கப் பலவாறான முயற்சிகளைச் செய்துபார்த் தார்கள். ஒன்றும் பயன்படாமற் போகவே பயந்தார்கள். அப்பொழுது பகவான் பெரிய கூர்மரூபம் எடுத்துக் கொண்டு கடலில் பிரவேசித்து அந்தப் பெரிய மந்தர பர்வதத்தை முதுகிலே தாங்கினார். தமது அம்சங்களால் தேவர்களுள்ளும் அசுரர்களுள்ளும் பாம்பினுள்ளும் பிரவேசித்துப் பலம் விருத்தியாகும்படி செய்தார். பிறகு சமுத்திர மதனம் நடந்தது. அதனால் வாசுகிக்குக் கஷ்டம் அதிகமாயிற்று. ஆகவே அவன், அக்கினி ஜ்வாலைகளையும் விஷத்தையும் கக்கத் தொடங்கினான். வாய்ப்பக்கமிருந்த அசுரர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். தேவர்கள் அஞ்சி னார்கள். கடல் தத்தளித்தது. ஜலஜந்துக்களெல்லாம் வருந்தின. இப்படியிருக்கையில் கடலிலிருந்து திடீரென்று ஆலகால விஷம் உண்டாயிற்று. அந்த விஷம் எல்லோரை யும் தகித்தது. ஒருவராலும் தாங்கமுடியவில்லை. என்ன செய்யலாமென்று எல்லோரும் ஆலோசித்துக் கைலையங்கிரி வாசராகிய பரமசிவத்திடம் சென்று அடைக்கலம் புகுந்தார்கள். சிவபெருமான் மனமிரங்கிப் பாற்கடலுக்கு வந்து உலக க்ஷேமத்தின்பொருட்டு அந்த விஷத்தைப் பானஞ் செய்து எல்லோரையும் காப்பாற்றினார்.
பிறகு தேவர்களும் அசுரர்களும் சந்தோஷித்து மறுபடியும் கடலைக் கடைந்தார்கள், அப்பொழுது காமதேனு வெளிவந்தது. அதனை ரிஷிகள் அடைந்தார்கள்.
அப்பால் உச்சைசிரவசு என்ற பெயருடைய வெண்மையான குதிரை தோன்றிற்று. அசுரர்கள் அதனைக் கைக்கொண்டார்கள். பிறகு ஐராவதமென்கிற யானை வெளிப்பட்டது. இதனை இந்திரன் அடைந்தான்.
அதன்பின் பாரிஜாதமென்ற விருக்ஷம் உண்டாயிற்று. பின்பு அப்ஸரஸ்திரீகள் உண்டானார்கள். பாரிஜாதத்தை யும் அப்ஸரஸ்திரீகளையும் தேவர்கள் அடைந்தனர். அப்பால் பகவானிடம் அன்புடைய ஸ்ரீமகாலட்சுமி உண்டானாள். மகாலட்சுமிக்குத் தேவர்கள் சகல மரியாதை களும் செய்தார்கள். மகாலட்சுமி மகாவிஷ்ணுவுக்கு மாலை இட்டாள். பகவான் லட்சுமி தேவியைத் தம்முடைய மார்பிலே வைத்துக்கொண்டார். பிறகு வாருணி தேவி உண்டானாள், அந்த வாருணியை அசுரர்கள் அங்கீகரித்தனர். பின்னர் விஷ்ணுவின் அவதாரமாகிய தந்வந்தரி கையில் அமுத கலசத்துடன் பாற்கடலிலிருந்து வெளியாகி அமுதத்தைக் கீழே வைத்தார்.
அந்த அமுத கலசத்தைத் தாமே அடையவேண்டு மென்கிற எண்ணங்கொண்டு அசுரர்கள் பலாத்காரமாக எடுத்துக்கொண்டார்கள். இதனால் தேவர்கள் பரம துக்கம் அடைந்து மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார்கள். பகவான், “விசனப்படாதீர்கள், அதனை உங்களுக்கு எப்படியாவது வாங்கித் தருகிறேன் ” என்று கூறி மறைந்தார்.
அவ்வாறே மறைந்த பகவான் பின்பு மறுகணத்திலே எல்லோருடைய மனத்தையுங் கவரக்கூடிய சகல லட்சணங் களும் அமைந்த ஜகந்மோகினியாக வந்து அசுரர் இருக்கும் இடம் சென்றார். அசுரர்கள் அந்த ஜகந்மோகினியைக் கண்டதும் வியப்படைந்து, அவளிடம் வந்து சூழ்ந்து கொண்டு அவளைப் புகழ்ந்து, “அம்மணி, நல்ல சமயத்திற்கு வந்தாய்; இந்த அமுத கலசத்தைப்பற்றி எங்களுக்கும் தேவர்களுக்கும் விவாதம் உண்டாயிருக்கிறது. நீ இதனை எங்களுக்குப் பங்கிட்டுக் கொடு’ என்று அவளிடம் கொடுத்துவிட்டு அவள் கையைப் பார்த்துக்கொண்டு மயங்கி நின்றார்கள்.
மோகினி ரூபங்கொண்ட ஹரியானவர் அவர்களை நோக்கி, “நான் செய்யும் காரியத்தில் நீங்கள் குற்றம் கூறாமல் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படியானால் நான் இந்த அமிர்தத்தைப் பங்கிடுகிறேன்” என்றார். அசுரர்கள் அந்த மோகினியின் அழகில் மயங்கியிருந்தபடியால்,”சரி, அப்படியே செய்கிறோம்” என்று ஒப்புக்கொண்டனர்.
பிறகு அந்த மோகினி அசுரர்களையும் தேவர்களையும் தர்ப்பாஸனங்களிலே இரண்டு வரிசைகளில் உட்கார வைத்துத் தேவர்களுக்கு முதலில் அமுதங்கொடுத்தாள். அசுரர்கள் அந்த மோகினி தங்களை வஞ்சிக்கிறாளென்பதை அறிந்தும் அவளுடைய நட்பைக் கெடுத்துக்கொள்ள மனமில்லாமல் மௌனமாயிருந்தார்கள்.
இப்படி நடக்கையில் ராகு என்ற ஓர் அசுரன் மாத்திரம் மெதுவாய் எழுந்து தேவர்களிருந்த வரிசையில் சூரியசந்திரர்களுக்கிடையே போய் உட்கார்ந்துகொண் டான். மோகினி அவனுக்கும் அமுதம் அளித்துவிட்டாள். அவனும் அதனை வாயில் போட்டுக்கொண்டான். அந்த அசுரனைக் கண்டுபிடித்த சூரியனும் சந்திரனும், “அசுரன் பந்தி மாறி அமுதம் கொள்கிறான்” என்று கூறி அவனை வெளிப்படுத்தினர். மோகினியாகிய பகவான் உடனே தம் சக்கராயுதத்தை ஏவி அவன் தலையைக் கொய்துவிட்டார். அவன் தலை அறுப்பட்டதாயினும் அமுத சம்பந்தத்தால் அதற்கு அழிவுண்டாகவில்லை. முடிவில் அது ராகு கேதுக் கிரகங்களாயிற்று. பிறகு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. பகவான் அவர்கள்முன் தோன்றி அசுர மாயைகளைச் சிதறவடித்தார். அசுரர் தலைவர்களைத் தமது சக்கரத்தால் வதஞ்செய்தார். பின்னர் இந்திர னுக்கும் பலிக்கும் உக்கிரமான யுத்தம் நடந்தது. பலி பலவாறான மாயங்கள் செய்து இந்திரனைச் சோர்வடை யும்படி செய்தான். இந்திரன் அஞ்சாமல் தன்னுடைய வச்சிராயுத பலத்தினால் அவனை எதிர்த்துப் போராடினான். அப்பொழுது நமுசி என்ற அசுரனொருவன் இந்திரனை எதிர்த்து அவன்மீது சூலாயுதத்தை எறிந்தான்.இந்திரன் அவன்மீது தன் வச்சிராயுதத்தைப் பிரயோகித்தான். அது அவன்மீது பாயமாட்டாமற் போயிற்று. அதனால் இந்திரன் துக்கமடைந்து பகவானைத் தியானித்தான். அப்போது, இந்திரனே, இந்த நமுசி, உலர்ந்த ஆயுதத்தினாலும் ஈரமாயிருக்கிற ஆயுதத்தினாலும் கொல்லத்தக்கவ னல்லன். ஏனெனில் ஒருகால் இவனுக்கு நாம் அப்படி வரம் கொடுத்திருக்கிறோம். ஆகையினால் இவனைக் கொல்வதற்கு வேறோர் உபாயம் சிந்திக்கத்தக்கது’ என்று அசரீவாக்கு உண்டாயது.
இதைக்கேட்ட இந்திரன் மனக்கவலை நீங்கி, உடனே நுரையினாலே ஆயுதஞ்செய்து அதனை விடுத்து அவ்வசுரன் தலையை வெட்டிச் சாய்த்தான். உடனே நாரத பகவான் அங்கே தோன்றிச் சண்டையை நிறுத்திவிட்டார். அப்பொழுது சுக்கிராசாரி, யுத்தத்தில் மடிந்த அசுரர்களை யெல்லாம் ஸஞ்சீவினி மந்திரத்தாற் பிழைக்கும்படி செய்து அழைத்துக்கொண்டு போய்விட்டார்.
இருபதாம் அத்தியாயம்
வாமன திரிவிக்ரம அவதாரங்கள்
பாற்கடலில் தேவாசுரர்கள் அமுதமெடுத்த இந்த வரலாறு கூறிய பின்பு, ஸ்ரீசுகர் ஏழாவது மந்வந்தரத்தைப் பற்றிக் கூறுகிறார்.
பரீக்ஷித்து மகாராஜனே! ஏழாவது மந்வந்தரத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு பலியென்னும் அசுரனுடைய வல்லமையை அடக்குவதற்காக வாமன வடிவமாக அவதாரம் செய்தார். இந்தச் சரித்திரம் கேட்கத்தக்கது.-
மகாபலி யென்பவன் ஓர் அசுரராஜன். இவன் தவத்தினால் அதிக பலவானாக விளங்கினான். அதனால் இவன் மூன்று உலகங்களையும் தன் வசப்படுத்திக் கொண்டான். இந்திர பதவியையும் பிடித்துக்கொண்டான். தேவர்களெல்லோரும் இவனுக்குப் பயந்து எங்கேயோ ஓடிப்போய் மறைந்துவிட்டனர். இவன் இவ்வாறு தேவர்களை அடக்கியாண்டானென்றாலும், இவன் ஏனைய அசுரர்களைப்போல் இராமல் மகா பக்திமானாகவும் நீதிமானாகவும் விளங்கினான். இவன் பிரகலாத வம்சத்திலே உதித்தவனல்லவா ?
அதிதிதேவியின் மக்களல்லவா தேவர்கள்? அவர்கள் மறைந்துபோகவே, அந்தத் தேவி பெருந்துயர மடைந்து தன் நாயகனாகிய காசியபரிடம் போய் முறையிட்டாள். காசியபர் அதிதிதேவிக்கு ஒரு மந்திரோபதேசம் செய்து அதனை ஜபித்து மகாவிஷ்ணுவை வழிபடும்படி ஆணை யிட்டார். அவள் அப்படியே செய்துவந்தாள். அவளுக்குப் பகவான் பிரத்தியக்ஷமாகிக் குறையைக் கேட்டுத் தெரிந்து கொண்டு. “நீ கவலைப்படாதே. நான் தவத்தினால் கட்டுண்டேன். உன்னிடம் நான் அவதாரஞ்செய்து தேவர்களுக்கு உதவி செய்கிறேன்” என்று வரந்தந்து மறைந்தருளினார். இதைக் காசியபர் அறிந்து சந்தோஷம் அடைந்தார்.
பிறகு பகவான் அதிதி தேவியின் கர்ப்பத்தில் வந்தார். அப்பொழுது பிரம்மதேவர் பகவானை மிகுந்த உருக்கத்துடன் துதித்தார். பகவான் நான்கு புஜங்களுடன் சங்கு சக்கர பீதாம்பரதாரியாய் அவதாரஞ்செய்தார். அப்போது பிரபஞ்சமெல்லாம் பரமானந்தமடைந்து துதித்தன. காசியபரும் அதிதி தேவியும் என்றும் அடையாத ஆனந்தமடைந்து பகவானைத் துதித்தார்கள். பகவான் உடனே தம்முடைய நிஜஸ்வரூபம் மாறி வாமன ரூபமெடுத்துக்கொண்டார். அதைக்கண்டு வியப்படைந்த அவர்களெல்லோரும் ஈசன் செயல் என்றெண்ணி அக்குழந்தைக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து திருப்தியடைந்தார்கள்.
இவ்வாறு பகவான் இங்கே அவதரித்திருக்கையில், பலியானவன் ஒரு சிறந்த வேள்வி செய்தான். அந்த வேள்விக்கு எல்லோரும் சென்றனர், அப்பொழுது வாமன ரூபராய் விளங்கும் பகவானும் சென்றார். மகாபலி இவரைக் கண்டதும் அன்போடும் பணிவோடும் வரவேற்று ஆசனத்திருத்தி, ‘தங்களுக்கு வேண்டுவது எதுவோ அதனைக் கேட்கலாம் ” என்றான். பகவான் இதனையே தேவர்களுக்குச் சகாயம் செய்வதற்குரிய நல்ல சமயமாய்க்கொண்டு மகாபலியை நோக்கி, “கொடை யாளியே! நான் உன்னிடம் விரும்புவது இந்த எனது காலால் மூன்றடி பூமியேயன்றி வேறொன்றும் இல்லை” என்றார். இதைக்கேட்டதும் மகாபலி ஆச்சரியமடைந்தான். “என்ன இந்த அற்பமானதை இவர் யாசிக்கிறார் ‘ என்று எண்ணி, “இன்னும் என்ன வேண்டும்?’ என்று கேட்டான். வாமனதேவர், “வேந்தே, மூன்றடி மண் போதும்” என்று சொன்னார். மகாபலி, “ஸ்வாமி. அப்படியே யாகட்டும்” என்று கூறி மனமகிழ்ச்சியுடன் தானஞ்செய்ய ஆரம்பித்தான்.
அப்பொழுது அவனுடைய குருவாகிய சுக்கிராச்சாரி யார், பலியை அணுகி,”இங்கே வந்து உன்னை மூன்றடி மண் கேட்பவர் மகாவிஷ்ணு. இவர் எப்போதும் தேவர்களுக்கு நன்மை செய்வதிலேயே கண்ணாயிருப்பவர். அவர் மூன்றடி மண், பிடிவாதமாய்க் கேட்கிறாரல்லவா? அதில் ஏதோ சூதிருக்கிறது என்பதில் ஐயமில்லை.
ஆகையால் இந்தத் தானத்தை நீ கொடாதே. கொடுப்பா யானால் உனக்குப் பெரிய ஆபத்து வரும். என் சொல்லை மீறி நடவாதே ” என்று கூறினார்.
மகாபலி இதைக் கேட்டதும் நகைத்து, “நான் என்ன வென்று சொல்லட்டும்! கொடுத்த வாக்கை மறுப்பதற்கு ஆகுமா? மகாவிஷ்ணுவே என்னிடம் வந்து இவ்வாறு தானம் ஏற்கும்போது நான் ஏன் கொடுப்பதுகூடாது? இவருக்கு நான் தானம் கொடுப்பேனானால் கிருதார்த்தனா வேன் ” என்று கூறி, “ஸ்வாமி ! விரும்பியபடியே மூன்றடி மண் கொடுத்தேன்” என்றுரைத்து வாமனர் திருக்கரத்தில் மகாபலி தீர்த்தம் வார்த்தான்.
தீர்த்தம் வார்த்தவுடனே பகவான் விசுவரூபம் எடுத்துக்கொண்டு, ஓர் அடியால் மேல் ஏழுலகத்தையும் அளந்தார்; இரண்டாவது அடியால் கீழ் ஏழுலகத்தையும் அளந்தார். இப்படி அளக்கவே அசுரர்கள் கோபங் கொண்டு மகாவிஷ்ணுவைத் தாக்கச்சென்றனர். மகாபலி, “இது நமக்கு நல்லகாலமல்ல. ஆதலின் அடங்குங்கள்; தவிரத் தானங்கொடுத்த சமயம் நாம் இவ்வாறு செய்வது கூடாது” என்று கூறி அவர்களைத் தடுத்தான். அப்பால் பகவான் மகாபலியை நோக்கி, “மற்றோர் அடிக்கு இடம் எங்கே?” என்று கேட்டார். மகாபலி எங்கிருந்து கொடுப்பான்? என்ன செய்வான்? அந்தோ ! இதற்கு என்ன செய்வது என்று கஷ்டப்பட்டான். பகவான். மூன்றாவது அடிக்கு இடங்காட்டு’ என்று கூறி, அவனை வருண பாசத்தினால் கட்டி வருத்தினார். மகாபலி ஒன்றுஞ் செய்யமுடியாமல் பகவானையே துதித்துக்கொண்டு தலை வணங்கி நின்று, “ஸ்வாமி! நான் என் சொல்லை உண்மையாகச் செய்துகொள்கிறேன். மூன்றாவது அடிக்கு இடமாக என் சிரசைக் கொள்ளலாம்” என்று குனிந்து கொண்டு தன் சிரசைக் காட்டினான். பகவான் உடனே அவனை வருணபாசத்திலிருந்து விடுவித்து அவனுடைய சிரசில் தமது அழகிய திருவடிமலர் சூட்டினார். அவன் அப்பொழுதே பாதாள உலகம் போனான். பிரகலாதனும் பகவானுடைய ஆக்ஞையால் அவன் கூடவே சென்றார். பகவான் மகாபலியை நோக்கிச் சந்தோஷத்துடன்,”நீ இங்கேயே இரு. உன்னை நாம் என்றும் காப்பாற்றுகிறோம். இனி மறு மந்வந்தரத்தில் உனக்கு இந்திரபதவி தருகிறோம்” என்று வரமளித்தார். மகாபலி பகவானுடைய கருணையை எண்ணி மகிழ்ந்தவனாய், “இறைவன் செய்வதெல்லாம் நமது நன்மைக்கே” என்றுணர்ந்து திருப்தியடைந்து பாதாள உலகத்திலே வசித்துவருவானா னான். பிறகு பகவான் இந்திரனுக்கு மூன்று உலகங்களையும் கொடுத்தார். தேவர்கள் எப்போதும்போல் தங்கள் நிலைமையை அடைந்து சுகமாய் இருந்தார்கள். பகவான் வாமனரூபத்திலிருந்து விசுவரூபங் கொண்டதைத்தான் திரிவிக்கிரம அவதாரம் என்பார்கள்.
– தொடரும்..
– ஸ்ரீமத் பாகவத ஸாரம் (நாவல்), முதல் பதிப்பு: 1945, விவேக போதினி ஆபீஸ், சென்னை.