கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: August 2, 2025
பார்வையிட்டோர்: 15,088 
 
 

(1945ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10

முதல் அத்தியாயம்

பரீக்ஷித்தும் தருமதேவதையும்

பாண்டவர் ஐவருள் அர்ச்சுனன் என்பவனுக்கு அபிமன்யு என்று ஒரு புத்திரன் இருந்தான். அவன் விராடபூபதியின் பெண்ணாகிய உத்தரை என்பவளை மணம் செய்துகொண்டான். தந்தையைப் போலவே அபிமன்யு நிகரற்ற வீரன்; அதி சுந்தர ரூபன். அவன் பாரத யுத்தத்தில் கடுமையான போர்புரிந்து அரிய வெற்றி பெற்று முடிவில் பகைவரின் வஞ்சனையினால் இறந்தான். அந்த யுத்தத்தில் பதினெட்டாம் நாள் இரவில் இளம் பஞ்சபாண்டவர் பாசறையில் தூங்குகையில் அசுவத் தாமா என்பவன் அவர்களைக் கொன்றுவிட்டான். அசுவத்தாமா பாண்டவர்களின் குருவினுடைய புதல்வனாகையால் அவர்கள் அவனைக் கொல்லாமல் பிடித்துவந்து அவனது குடுமியை அறுத்துச் சிரோரத்தினத்தை மாத் திரம் வாங்கிக்கொண்டு விட்டுவிட்டனர். அசுவத்தாமா பாண்டவப் பூண்டே உலகில் இல்லாமல் ஒழியும்படி ஓர் அஸ்திரப் பிரயோகம் செய்தானாகையால், அந்த அஸ்திர மானது அப்பொழுது கர்ப்பமாயிருந்த உத்தரையைத் தொந்தரவு செய்தது. அவள் நல்ல விவேகமுடையவ ளாதலால், ஆபத்துக் காலத்தில் ரக்ஷிப்பவர் பகவானே யென்று அறிந்து கிருஷ்ண பகவானைச் சரணம் அடைந் தாள். பகவான் உடனே அவளுடைய கருப்பையினுட் புகுந்து, தமது கதாயுதத்தால் அந்த அஸ்திரத்தைத் தடுத்து அங்கிருந்த ஆண்சிசுவைக் காப்பாற்றினார். 

பிறகு அவள் வயிற்றில் இருந்த அந்தச் சிசு ஒரு நல்ல சுபதினத்தில் பிறந்தது. பிறந்த சிசுவானது அஸ்தி ரத்தின் மகிமையால் வெறும் கரிக்கட்டையாக இருந்தது. அதனை ஸ்ரீகிருஷ்ண பகவான் ஓர் அழகிய குழந்தையாகச் செய்தார். இச்சிசு பாண்டுகுலத்தை உத்தாரணஞ் செய்ய உதித்த குழந்தை யாகையால், பாண்டவர்கள் அன் றைத் தினத்தில் திருவிழாக் கொண்டாடினார்கள்; பரம சந்தோஷத்துடன் தானதருமங்களைச் செய்தார்கள். பிராம் மணர்கள் இக்குழந்தைக்கு விஷ்ணுராதன் என்று பெய ரிட்டார்கள். விஷ்ணுராதன் என்றால் விஷ்ணுவால் ரக்ஷிக்கப்பட்டவன் என்பது பொருள். இச்சிசுவைப் பகவான் உத்தரையின் கர்ப்பத்தில் அசுவத்தாமாவின் அஸ்திரத்தினின்றும் காப்பாற்றினார் அல்லவா? இதனா லேயே பெரியோர்கள் இக்குழந்தைக்கு இப்பெயர் இட்டனர். 

குழந்தை பிறந்தது முதல், தன்னைக் கர்ப்பத்தில் காப்பாற்றியவனை அறிய விரும்பியது; அவனது உருவத்தை நினைத்தபடியே, தன்னை வந்து காண்பவரை யெல்லாம் கவனித்துக்கொண்டே வந்தது. இதனால், அத னைக் கவனித்துவந்த சில மகான்கள், விஷ்ணுராதன் என் னும் இச்சிசுவுக்குப் பரீக்ஷித்து எனப் பெயரிட்டார்கள். 

பரீக்ஷித்து என்னும் உத்தமனைக் கண்ட பெரியோர் கள், ‘இவன் இக்ஷுவாகுவைப்போல் தருமம் தவறாமல் அரசுபுரிவான்’ என்றார்கள்; தசரத புத்திரனாகிய ஸ்ரீராமச் சந்திரனைப்போல் சத்தியம் தவறாதவனாக விளங்குவான் என்று சொன்னார்கள்; சிபிச் சக்கரவர்த்திக்குச் சமான மான கொடையாளியாய் இருப்பானென்றும், அர்ச்சுன னைப்போலவும் கார்த்தவீரியார்ச்சுனனைப் போலவும் வில் லாளியாக விளங்குவானென்றும், பூமியைப்போல் பொறு மையையும் பிரமனைப்போல் சாந்தத்தையும் கொண்டு தைரியத்தில் மகாபலியைப்போல விளங்குவானென்றும் கூறினார்கள்; கடைசியில் பிராம்மண குமாரனுடைய சாபத்தினால் தக்ஷகனாலே மரணம் அடையப் போகிறா னென்றும் கூறிச் சென்றார்கள். இவற்றையெல்லாம் தரும ராஜாவுக்கு அவர்கள் இரகசியமாய்க் கூறியபடியால், அவர் கேட்டு மனத்திருப்தி யடைந்து அவர்களுக்கு வேண்டிய வெகுமானங்களைக் கொடுத்தனுப்பினார். 

தருமராஜாவினுடைய ஸந்நிதியில் பரீக்ஷித்து சுக்கில பக்ஷத்துச் சந்திரனைபோல் வளர்ந்துவந்தான். அவன் இவ்வாறு வளர்ந்துகொண் டிருக்க, தருமபுத்திரர், யுத்தத் தில் தம் உறவினரெல்லோரையும் கொன்றதை எண்ணிப் பெரும் துக்கத்துக்கு ஆளானார். அதனால் அவருக்குப் பக வான் பீஷ்மர் மூலமாக அவருக்குப் பல தருமநியாயங் களை உபதேசம் செய்தார். அப்படியும் அவர் மனம் தேறுதல் அடையவில்லை. 

அவர் அப்படியிருக்கையில் விதுரர், திருதராஷ்டிரன் முதலியவர்களுக்கு வைராக்கியம் முதிர்ந்து நற்கதி அடை யும்படியான வழியைச் சொல்லிவிட்டுத் தாம் பரமபதம் அடைந்தார். இது தருமபுத்திரருக்குத் தெரிந்தது. அவ ருடைய துக்கம் பின்னும் அதிகரித்தது. சில நாளைக்கெல் லாம் திருதராஷ்டிரன் முதலியவர்கள் காலஞ்சென்றனர். துவாரகையிலிருந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவும் இந்தக் காலத்தில் தம் அடிச்சோதியுள்ள வைகுண்டலோகம் சென் றார். யாதவர்கள் தமக்கு நேர்ந்த சாபத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மடிந்தனர். இவற்றையெல்லாம் அப்பொழுது அங்கே போயிருந்த அர்ச்சுனன் வந்து தருமபுத்திரருக்குச் சொல்லி விசனப்பட்டான். 

இவ்வாறு எல்லாம் மாறுவதனால், கலியுகம் பிறந்து விட்டதென்று தருமபுத்திரர் அறிந்து தம்முடைய பேரனாகிய பரீக்ஷித்துக்குப் பட்டாபிஷேகம் செய்வித்துத் தாம் வடக்குத் திக்கை நோக்கிச் சென்று தம்முடைய தம்பிமார் மனைவி எல்லோரையும் விட்டுவிட்டுச் சுவர்க்கம் அடைந்தார். பின்னர் அவர் தம்பிமார்களும் திரௌபதியும் குந்திதேவியும் உத்தமர்கள் அடையும் கதியை அடைந்தனர். 

பரீக்ஷித்து பட்டம் பெற்றதும் விராடதேசத்து அரசனாயிருந்த உத்தரனுடைய புத்திரி இராவதியை மணம் செய்துகொண்டு தருமம் தவறாமல் அரசு புரிந்துவந்தான். பரீக்ஷித்துக்கு ஜனமேஜயன் முதலிய நான்கு புதல்வர்கள் பிறந்தனர். அவன் மூன்று அசுவமேத யாகங்களைச் செய்தான். அவனுக்குக் கிருபாசாரியர் குருவாயிருந்தார். ஆகவே, பரீக்ஷித்து சகல நன்மைகளையும் முன்னரே தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்துவந்தான். 

அவன் ஒரு சமயம் திக்கு விஜயஞ் செய்யப் புறப்பட்டு, பத்ராசுவ வருஷம், கேதுமால வருஷம், பாரத வருஷம், குரு வருஷம், இரைவிரதம், இரம்மியகம், இரண்மயம், ஹரிவருஷம், கிம்புருஷமென்னும் பெயர் கொண்டிருந்த இடங்களையெல்லாம் ஜயித்து அங்கங்கிருந்த அரசர்களிடம் பகுதி வாங்கிக்கொண்டு ஜயசீலனாகத் திரும்பினான். அவன் சென்ற தேசங்களில் எல்லாம் ஜனங்கள் ஸ்ரீகிருஷ்ணபகவானுடைய மகத்துவத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசினர்; அந்தக் கிருபாநிதியினால்தான் இந்த ராஜசிகாமணி அசுவத்தாமாவினுடைய அஸ்திரத் தினின்றும் காக்கப்பட்டாரென்று பரீக்ஷித்தைக் குறித்த செய்தியையும் சொன்னார்கள்; பாண்டவர்கள் கிருஷ்ண மூர்த்தியினிடம் வைத்திருந்த பக்தியையும் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு உயிர்த்துணையாயிருந்து உதவியதையும் கூறி வியந்தார்கள், இவற்றையெல்லாம் கேட்ட பரீக்ஷித்து மகிழ்ச்சி அடைந்து கிருஷ்ணபகவானிடம் அன்புகொண்டு, அவரையே சரணமாக அடைந்தான்; இவ்வாறு பேசிய அவர்களுக்கெல்லாம் அநேகவிதமான வெகுமதிகளைத் தந்து அவர்கள் தன்னை வாழ்த்த இந்திரப்பிரஸ்தத்திற்குத் திரும்பினான். 

பரீக்ஷித்து மகாராஜா திரும்பிவருகிற வழியில் ஒரு விசேஷம் நடந்தது. தருமதேவதை ஓர் எருதின் உருக் கொண்டு ஒரு காலால் நடந்துவந்து, கன்றையிழந்த தாயைப்போல் கதறியும், கண்ணீர் சொரிந்தும், மாறு வர்ணம் கொண்டும் இருந்த பூமிதேவியாகிய பசுவைக் கண்டு, “நீ இவ்வாறு துயரடைவதற்குக் காரணமென்ன?” என்று கேட்டது. பூமிதேவி, “என்ன செய்வேன்! எல்லா நன்மைகளுக்கும் காரணமான பகவான் என்னை விட்டு விலகினார். இனிமேல் இங்கே கலிபுருஷனுடைய அநியாயம் மேலிடப்போகிறது. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பக்தர்களுக்கும் கேடு உண்டாகப் போகிறது. வர்ணாசிரம தர்மம், ஸத்தியம், தவம் முதலியவைகளுக்கும் அழிவு நேரப் போகிறது. இதனால் உன்னுடைய நான்கு பாதங்களில் மூன்றுக்குக் கேடு வந்திருக்கிறது. இதைக் கண்டுதான் துக்கப்படுகிறேன்” என்று கூறிற்று. 

இச்சமயத்தில் அங்கே கலிபுருஷன் ஓர் அரச குமாரனைப்போல் வந்து, அந்த எருதையும் பசுவை யும் தன் கைத்தடியால் அடித்தான். இதனை அங்குற்ற பரீக்ஷித்து மகாராஜா கண்டு பரிதாபத்துடன் நின்று, அந்த அரசகுமாரனைத் தடுத்தான்; எருதையும் பசுவையும் நோக்கி, அவற்றிற்குத் தைரியம் உண்டாகும்படியாக, “துஷ்டர்களைச் சங்கரிக்க நான் காத்துக்கொண்டிருக்கை யில் நீங்கள் ஏன் இவ்வாறு துக்கப்படவேண்டும்? எந்த ராஜ்யத்தில் பிரஜைகள் துஷ்டர்களால் துன்பம் அடைகிறார்களோ, அந்த ராஜ்யத்தை ஆளும் வேந்த னுடைய புகழ்ச்சியும் ஆயுளும் பாக்கியமும் அவனுடைய பரலோக கதியும் அவன் தன் ராஜ்யத்தில் துன்பப்படுகிற ஜனங்களைக் காக்கும் தருமமாக இருக்கின்றன.ஆகையினால் உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் இவனை இதோ வதைக்கிறேன்” என்று கூறினான். அப்பொழுது தரும தேவதையாகிய எருது, அவனுக்குச் சில தரும நியாயங்களை எடுத்துச் சொல்லிற்று. அதைக் கேட்டதும் பரீக்ஷித்து அதைத் தருமதேவதையென்றும், பசு ரூபத்துடன் இருப்பதைப் பூமிதேவியென்றும், ராஜகுமாரனைப்போல் வந்தவனைக் கலிபுருஷனென்றும் தெரிந்துகொண்டான். மேலும். ‘தவம், சௌசம், தயை, சத்தியம் என்னும் நான்கும் தருமதேவதைக்கு நான்கு கால்கள்; இவற்றில் மூன்று கர்வம், ஈனசங்கம், மதம் என்னும் தீயகுணங் களினால் ஒழிந்தன. மீதியிருப்பது ஸத்யம் என்ற ஒன்றே. அந்த ஒன்றையும் இந்தக் கலிபுருஷன் வெட்டப் பார்க் கிறான். ஸ்ரீ ஹரியினுடைய திருவடி முத்திரைகளாகிய அலங்காரத்தினால் பாவங்கள் ஒழியப் பெற்றுச் சுகமா யிருந்த பூமிதேவி, அவர் நீங்கியதனாலும் இப்போது கலி புருஷன் தொந்தரவு செய்வதனாலும் துக்கப்படுகிறாள் என்பதையும் உணர்ந்தான். 

தன் சூக்ஷ்ம புத்தியினால் இவ்வாறு உணர்ந்த பரீக்ஷித்து, கலிபுருஷனைக் கொல்வதற்காகத் தன் உடைவாளை உருவி ஓங்கினான். கலிபுருஷன் உடனே பரீக்ஷித்தின் காலில் விழுந்து சரணமடைந்தான். பரீக்ஷித்து மிகுந்த இரக்கம் உடையவனாதலால் அவனிடம் கருணை கொண்டு அவனைப் புன்முறுவலோடு பார்த்து, கலிபுருஷ! நீ அதருமத்தின் துணை; ஆகையினால் எனது தேசத்தில் வாழ்வது கூடாது. கேசவனுடைய கீர்த்தியைப் பாடுகிற பக்தர்களிடம் அன்புடையவனாய் அவர்களை அப்பொழுது உனக்குப் பயமிராது. ஆனால் ஒன்று கூறுவேன்: சூது, குடி, பொறாமை, பொன் ஆகிய இவற்றை நீ இருப்பிடமாகக் கொள். இவற்றிலன்றி வேறு எங்கேயாவது நான் உன்னைக் கண்டால் சிறிதும் இரக்கமில்லாமல் கொல்வேன்” என்றான். கலிபுருஷன், “ஆணைப்படியே நடக்கிறேன் என்று கூறி வணங்கி விடைகொண்டான். 

கலிபுருஷன் சென்ற பின்பு பரீக்ஷித்து, தரும் தேவதையாகிய எருதுக்குத் தவம், சத்தியம், தயை ஆகிய மூன்று பாதங்களையும் திரும்பவும் கூட்டினான். அப்பால் பூமிதேவியையும் சமாதானம் செய்துவிட்டுத் தன் அரண்மனைக்குச் சென்றான். 

இரண்டாம் அத்தியாயம்

பரீக்ஷித்து சாபமடைதல்

பரீக்ஷித்து மகா பக்திமானாய் எல்லோருக்கும் நல்லவனாய்த் தருமம் தவறாமல் அரசுபுரியும் காலத்தில் ஒரு நாள் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றான். வனத்தில் நெடுநேரம் அலைந்து திரிந்து மிருக வேட்டையாடிக் கடைசியில் களைப்படைந்து, மிகவும் பரிதாபத்துடனே ஒரு முனிவரின் ஆசிரமத்திற்குப் போய்ச் சேர்ந்தான். அந்த ஆசிரமத்தில் ஓர் ஆசனத்தில்,இடையில் மான்தோல் உடுத்து, நீண்ட தாடியும் நீண்ட சடையும் வற்றிய கபோலமும் உடைய ஒரு முனிவர், கண்களை மூடிக்கொண்டு தவம் செய்துகொண்டிருந்தார். அவரைக் கண்ட பரீக்ஷித்து கைகுவித்துக்கொண்டே அவரிடம் சென். தாகத்திற்குத் தண்ணீர் வேண்டுமென்று கேட்டான். அவர் இந்திரிய நிக்கிரகஞ் செய்துகொண்டு சாக்கிரம், சொப்பனம், சுஷுப்தி என்கிற மூன்று அவஸ்தைகளும் இல்லாதவராய்ப் பிரமநிஷ்டையிலிருந்த படியால் அவருக்கு அரசன் கூறியது செவியிற் படவில்லை. ஆகையினால் அவர் அரசனுக்கு ஒரு மறுமொழியும் கூறாமல் இருந்தார்.இதனால், அரசன் தன்னை முனிவர் அசட்டை செய்ததாகக் கருதி, சினங்கொண்டு அங்கே இறந்து கிடந்த ஒரு ஸர்ப்பத்தைக் கோல் நுனியால் எடுத்து அம்முனிவரின் கழுத்தில் போட்டுவிட்டு நகரத்திற்குத் திரும்பினான்.இந்த முனிவர் இந்திரியக்கிரகம் செய்து நிஷ்டையில் இருக்கிறாரா அல்லது பொய்யாகச் சமாதியில் இருந்துகொண்டு, க்ஷத்திரியனாலே நமக்கு ஆகவேண்டியது என்னவென்று நினைத்திருக்கிறாரா என்று அறியவே அவன் இவ்வாறு செய்தான். செய்தானாயினும் நகரத்துக்குச் செல்லும் வழியில், “நான் பெரியவர்களுக்கு இவ்வாறு ஏன் குற்றம் செய்தேன்? இதற்காக எனக்குத் தண்டனை யில்லாமற் போகுமா? தண்டனை யிருந்தே தீரும். அவருடைய தண்டனை கிடைத்தால்தான் நான் அவருக்குச் செய்த குற்றத்தினால் உண்டான பாவம் தீர்ந்தவனாவேன் ” என்று எண்ணிக் கவலையோடு அரண்மனை போய்ச் சேர்ந்தான். 

அரசன் சென்ற பிறகு முனிவருடைய புத்திரனாகிய சிருங்கி என்பவன் தன் தோழர்களோடு அங்கே வந்தான். தகப்பனாரின் கழுத்தில் செத்த பாம்பு இருப்பதைக் கண்டு கோபம் மிகக்கொண்டு, “இவ்வாறு செய்த கொடியவனுக்கு இதோ சாபம் கொடுக்கிறேன். என் தவப்பயனைப் பாருங்கள்” என்று கூறி, நண்பர்கள் முன்னிலையில் கவுசிகை என்னும் நதியின் ஜலத்தை ஸ்பரி சித்து, “தன் குலக்கொள்ளியாயும் என் தந்தைக்குத் துரோகியாயும் இருக்கிற இவன், இன்று முதல் ஏழுநாட் களுக்குள் தக்ஷகன் என்ற கொடிய ஸர்ப்பம் தீண்டி இறக்கக்கடவன் ” என்று கடுஞ்சாபம் தந்தான்; உடனே தன் தந்தையாரிடம் வந்து அவரை நோக்கித் துக்கமடைந்து கண்ணீர்விட்டு அழுதான். அந்த அழுகுரலைக் கேட்டதும் சமீகர் என்னும் அம்முனிவர் கண்ணை விழித்துக்கொண்டு தம் தோளின் மீதிருந்த பாம்பைத் தள்ளிவிட்டு மகனை நோக்கி, “நீ ஏன் அழுகிறாய்? காரணம் என்ன?” என்று கேட்டார். சிருங்கி நடந்ததை யெல்லாம் தன் தந்தை யாருக்குச் சொன்னான். 

அதைக் கேட்டதும் சமீகர் வருத்தமடைந்து, “ஆகா, என்ன காரியம் செய்தாய்? அந்தோ! பரம மூடனாக அல்லவா இருக்கிறாய்? அப்பனே, நான் என்ன சொல்வேன்! ஒரு சிறு குற்றத்திற்காக நீ இவ்வளவு பெரிய தண்டனை விதித்தது என் மனத்தை வருத்துகிறது. பரீக்ஷித்து மகாராஜா தருமம் தவறாத பரம புருஷன் அவன் நரதேவன். அவனை மற்றவர்களுக்குச் சமானமாக நினைப்பது கூடாது. அவன் பெருமை பெரிது.சக்கரவர்த்தி யானவன், ஜனங்கள் கண்ணாலே பார்ப்பதற்கு அரியவனாய் இருப்பானானால், இந்த உலகமானது ரக்ஷிக்கப்படாத செம்மறியாட்டு மந்தையைப் போல் திருடர்களினால் உபத்திரவமடைந்து ஒரு கணத்தில் நாசமாகும். அந்த அரசன்,பசிதாகத்தினால் களைப்பை அடைந்து தீனனாகி நம்முடைய ஆசிரமத்திற்கு வந்தான். அவனுக்குச் சாபம் கொடுத்தது பெருந்தவறு. அரசனே தவத்திற்கு ஆதாரமாய் இருப்பவன். அரசனில்லா ஊர் பாழ் என்பதை நீ உணராமற் போனாய். ஆலோசியாமல் சிறுபிள்ளைத் தனமாய்த் தகாத செய்கையைச் செய்துவிட்டாய்!” என்று கடிந்துகொண்டு உடனே தம் சீடர் ஒருவரை அழைத்து, அரசனிடம் போய் அவனுக்கு நேரிட்டுள்ள சாப வரலாற்றைக் கூறிவிட்டு வரும்படி ஆக்ஞாபித்தார். 

பரீக்ஷித்துக்கு இச்செய்தி தெரிந்ததும் அவன், “இது பகவானுடைய திருவருளினால் உலகப்பற்றை விரைவில் ஒழிப்பதன்பொருட்டு ஏற்பட்ட உபகாரமாகும்” என்று கருதிச் சந்தோஷமடைந்தான். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா வைத் தியானஞ்செய்து உடனே தன் புத்திரன் ஜனமேஜய னுக்குப் பட்டாபிஷேகஞ் செய்வித்து அவனிடம் அரசை அன்றே ஒப்பித்தான்; பிராயோபவேசம் செய்து தேகத்தை விடுவதென நிச்சயித்து உடனே கங்கைக்கரை சென்றான்; அங்கே வடக்கு நோக்கி உட்கார்ந்து ஸ்ரீ முகுந்தனுடைய திருவடித் தியானம் செய்துகொண்டு மனத்தை வேறிடத்தில் செலுத்தாமல் மரணத்தை ஏற்றுக் கொள்ளச் சித்தமாய் இருந்தான். 

இப்படியிருக்கும் இந்த வைபவத்தைக் காணும் பொருட்டு வந்த விசுவாமித்திரர், வசிஷ்டர், சவுனகர், பிருகு, பராசரர், பரசுராமர் முதலிய மஹரிஷிகளை யெல்லாம் பரீக்ஷித்து தகுந்த மரியாதைகளோடு வர வேற்றான்; அவர்களிடம் தனக்குச் சாபம் நேரிட்ட வரலாற் றைக் கூறி, “இதனைக் கடவுளின் அனுக்கிரகம் என்று கொண்டேன். இனி நான் எப்பிறவியை எடுத்தாலும், அந்தப் பிறவிகளிலெல்லாம் பெரியோர்களிடத்தில் எனக்கு விசுவாசம் இருக்கும்படி நீங்கள் அருள் புரியவேண்டும். 

கடவுளிடத்திலே பக்தி செலுத்தும் அன்பர்களிடத்தில் எனக்கு எப்போதும் அன்பிருத்தல் வேண்டும். பூததயை உண்டாகும்படியான மனம் இருக்கவேண்டும் ” என்று வேண்டிக்கொண்டான். மகரிஷிகள், “உன் விருப்பப் படியே உனக்கு எல்லா நலனும் உண்டாகும். உன் குலத் தவர்களின் குணம் உன்னிடம் விளங்கக் காண்பதே அதற்குச் சான்றாகும். உனக்கு மரணம் வரும்வரையில் நீ தெய்வ சிந்தனை உடையவனாக இருக்கக்கடவாய். நீ பரம பதம் அடையும் சிறப்பைப் பார்த்துவிட்டே நாங்கள் இவ்விடம் விட்டுச் செல்வோம்” என்று திருவாய்மலர்ந் தருளினர். 

பரீக்ஷித்து, “பரோபகார சிந்தை யுடையவர்களாகிய தங்களுக்கு நான் இச்சமயம் என்ன சொல்லப்போகிறேன்! உங்களுடைய வரவாலும், உங்களுடைய கருணையாலும், ஆசீர்வாதத்தாலும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். என் பிறவி பயன் அடைந்தது. மரணத்தை அடையப்போகும் ஒருவன் அச்சமயத்தில் செய்யவேண்டியது என்ன?” என்று கேட்டான். மகரிஷிகள் அதைப்பற்றி ஒருவர்க் கொருவர் பலவிதமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். 

இச்சமயத்தில் அந்த இடத்திற்கு வியாஸ குமாரரான சுகப்பிரம்ம ரிஷி எழுந்தருளினார். அவர் பதினாறு பிராயம் வாய்ந்த சிறுவராய், அழகிய திருமேனியை உடையவராய், அவதூதராய் விளங்கினார். அவரைப் பல சிறு பிள்ளைகளும் பல ஸ்திரீகளும் சூழ்ந்து பரிசாசம் முதலியன செய்து கொண்டு வந்தனர்; கல் மண் முதலியவற்றை அவர்மீது வாரி இறைத்து விளையாடினர். அவர் அதிவருணாசிரமி யாயும் பிரம்மஞானியாயும் இருந்தபடியால் பிள்ளைகளும் ஸ்திரீகளும் இவ்வாறு விளையாடுவது அவருக்குத் தெரியவில்லை. 

மூன்றாம் அத்தியாயம்

பரிக்ஷித்துக்குச் சுகர் உபதேசம் செய்தல்

பரீக்ஷித்தினுடைய ஞான நிலையைக் கண்டு சுகப் பிரம்ம ரிஷி மகிழ்ந்து, “இவனே சீடனாகக் கொள்ளத் தக்கவன்” என்று கருதி மகிழ்ந்தார். அவர் பரீக்ஷித்தை அன்போடு பார்த்து, “ராஜனே! உன்னுடைய கேள்வி லோக ஹிதமானது. இதை எல்லா ஜனங்களும் கேட்க வேண்டும். ஜனங்கள் பணத்தில் ஆசைகொண்டு, அதைத் தேடுவதிலும், தேடி ஸம்ஸாரத்திற்குச் செலவழிப்பதிலும், இன்னும் பலவழியிலும் காலத்தைக் கழிக்கிறார்கள். நிலையற்ற சரீரத்திலும் மனைவி மக்களிடத்திலும் மிக விருப்பங்கொண்டு மரணமென்ற ஒன்று இருப்பதை அடி யோடு மறந்து எல்லாவற்றையும் நியமிப்பவனாகிய ஸ்ரீ ஹரியையும் மறந்திருக்கிறார்கள். ஆகையினால் இந்த ஸம்ஸார பயம் நீங்கவேண்டுமென்கிற விருப்பமுடைய வர்கள், பகவானை எப்போதும் தியானித்து வரவேண்டும். முடிவில் நாராயணத் தியானமே சிறந்த பயனைத் தரும். அதற்கு மேலான பலன் ஒன்றுமே இல்லை. அந்த ஹரி பக்தியையும், ஹரி தாரணையையும் விளக்கிக் காட்டும் பாகவதம் என்கிற புராணத்தை உனக்குக் கூறுகிறேன்; கேட்பாயாக. இந்தப் புராணத்தை என் தந்தையாராகிய வியாஸரிடமிருந்து நான் அத்தியயனம் செய்தேன். அவரிடமிருந்து நான் கேட்டபடி இப்போது கூறுகிறேன். சிரத்தையோடு கேட்பவர்களுக்கு முகுந்தனிடத்தில் பரம பக்தி உண்டாகும் ” என்றார். 

இதைக் கேட்டதும் பரீக்ஷித்து, “நாம் இன்னும் ஏழுநாள்தானே உயிருடன் இருக்கப் போகிறோம்? இதற்குள் நாம் என்ன செய்யமுடியும்?” என்று மனத்தில் எண்ணிச் சிறிது முகவாட்டம் அடைந்தான். இதை அறிந்த சுகப்பிரம்மரிஷி, ‘அரசனே ! இப்பொழுதுள்ள உன் மன நிலையை உணர்ந்தேன். கவலைப்படாதே. ஸம்ஸாரத்தில் இச்சைகொண்டு தம் ஆயுளை அறியாதவர்களுக்கு வெகு காலம் இப்பூமியில் ஆயுள் இருந்தும் பயன் இல்லை. மோக்ஷமாகிற ஸம்பத்தைக் கொடுப்பதற்குக் காலம் கொஞ்சமாக இருந்தாலும் அது சிறந்ததாகும். இதைப் பற்றி முன் நடந்த கதை ஒன்று உண்டு; கேட்பாயாக”’ என்று சொல்லத் தொடங்கினார். 

“முன் காலத்தில் கட்வாங்கர் என்று ஓர் ராஜரிஷி இருந்தார். அவர் ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர் களுக்கும் யுத்தம் நடந்தபொழுது தேவர்களுக்குச் சகாயம் செய்தார். தேவர்கள் அவரிடம் சந்தோஷம் அடைந்து, “வேண்டிய வரத்தைப் பெற்றுக்கொள்” என்றார்கள். ராஜரிஷி, “எனக்கு என் ஆயுள் இன்னும் எவ்வளவு: காலம் இருக்கிறதென்று தெரியவேண்டும். இதைத் தவிர வேறு ஒரு வரமும் எனக்கு வேண்டாம்” என்றார். அவர்கள், “இன்னும் ஒரு முகூர்த்தந்தான் உனக்கு ஆயுட் காலம் இருக்கிறது” என்று கூறினார்கள். கட்வாங்கர், ‘சந்தோஷம்’ என்று கூறி அவர்களிடம் விடைகொண்டு தமது தேசத்துக்கு வந்து, வெகு விரைவில் தம் ராஜ்யம் மக்கள் மனைவி எல்லோரையும் துறந்து தம் முழுமனத்தை யும் ஸ்ரீ ஹரியினிடம் செலுத்தித் தாரணைசெய்து தாம் இறக்கும்வரையும் வேறு எந்த நினைவும் இல்லாமலிருந்து முத்தியை அடைந்தார். முத்தி இன்பம் ஒரு முகூர்த்த காலத்தில் கைகூடியதென்றால் உனக்கு ஏழுநாள் இருக்கும் போது ஏன் கவலைப்பட வேண்டும்? இதற்குள் நீ எவ்வளவோ சிறந்த நிலையை அடையலாமே” என்று உரைத்து அரசனைத் தேற்றிக் கூறுகிறார்:- 

முடிவு காலத்தில், அதாவது சாகுந்தருணத்தில் பயத்தை விட்டுவிடவேண்டும். வைராக்கியம் என்கிற கத்தியினால், தேகத்திலும் தேகத்தைக் கட்டுப்படுத்தும் பொருள்களிலும் கொண்டிருக்கும் ஆசையை அறுக்க வேண்டும். சுத்தஜல ஸ்நானம் செய்து பரிசுத்தனாகி நல்ல ஆசனத்தில் இருந்து மூச்சை அடக்கி மனத்தைப் புத்தியினால் அடக்க வேண்டும். ஆஸன ஐயம், சுவாஸ நிரோதம், மனோ நிரோதம் இவை மூன்றும் கிட்டுமாயின், அப்பொழுது பகவானிடம் மனத்தைச் செலுத்துவது எளிதில் கைகூடும். பலவிதமான ஆராதனைகள் உண்டு. எல்லாம் பரம்பொருளாகிய ஹரியையே அடைகின்றன. ஆகையினால் மரணத்தறுவாயில் ஸ்ரீ ஹரியையே தாரணை செய்யவேண்டும். ஆசனத்தையும் சுவாஸத்தையும் ஜயித்து, விஷயங்களில் சம்பந்தத்தை விட்டு ஞான கருமேந்திரியங் களையும் ஐயித்துப் புத்தியினால் மகத்தான பகவானது சொரூபத்தில் மனத்தை நிறுத்தவேண்டும். இதுவே தாரணையாகும். 

நான்காம் அத்தியாயம்

தாரணையின் விவரம்

தாரணை இரண்டு வகைப்படும். பகவானுடைய திருவுருவத்தைத் தியானம் செய்வது ஒருவிதமாகும். சுவாஸ நிரோதம் மனோ நிரோதம் மூலமாக அவரை அறிய முயல்வது மற்றொரு விதமாம். பகவானுடைய திருவுருவத் தியானம் இரண்டு விதமாகச் செய்யப்படுகிறது. முதலாவது அவரை இருதய குகையில் தியானிப்பது; இரண்டாவது, அவரைப் பிரபஞ்ச ரூபமாகத் தியானிப்பது. 

பிரபஞ்சரூபத் தியானமாவது, ஒருவன் உலகத்தையும் உலக சராசரங்களையும் பகவானுடைய ஸ்தூல ரூபமாகப் பாவித்து யாவும் அவரே என எண்ணித் தியானிப்பது. இருதய குகையில் பகவானுடைய திருவுருவத்தைத் தியானிப்பதாவது, ஒருவன் பகவானைச் சங்குசக்கர கதாதரராயும், சதுர்புஜ முடையவராயும், தாமரை இதழ் போன்ற கண்களை உடையவராயும், திவ்விய ஆபரணங் களை அணிந்தவராயும் பாவனை செய்து தியானிப்பது. 

இப்படியான இந்தத் தாரணைகளில் ஏதாவது ஒன்றன் மூலமாகப் பகவானைத் தாரணைசெய்து பழகவேண்டும். இரண்டுவிதமான தாரணைகளும் நல்ல பயனைத் தரக் கூடியனவேயாம். பகவான் பிரபஞ்சத்தினுள் அந்தர்யாமி யாக இருக்கிறார்; சகல ஜீவராசிகளிலும் பகவான் விளங்குகின்றார். ஆகையினால், பகவானைப் பிரபஞ்சத் துள்ளிருக்கும் அந்தர்யாமியாகவாவது உயிர்க்குயிராய் இலங்கும் பரஞ்சோதியாகவாவது பாவனை செய்யலாம். இது மேலான கதியைத் தரும். 

சுவாஸ நிரோத மனோ நிரோதமூலமாகச் செய்யும் தாரணை சிறந்த யோகிகளாலேதான் செய்யத் தக்கது. இந்தத் தாரணை செய்து பழகுகிற பக்தன் இந்திரிய ஜயம் பெறுவான். சிறந்த தைரியசாலியாய்ச் சகல ஐசுவரியங் களும் தன்னை வந்து அடைய விளங்குவான். பிரபஞ்ச முழுவதும் அவனுக்கு அடங்கி நடக்கும். அந்தப் பக்தன் எப்போதும் ஸ்ரீ ஹரியைத் தியானிப்பவனாகவே இருப்பான். அவன் உலகப்பற்று அற்றவனாகவும், விஷய சுகங்களை மறந்தவனாகவும் இருப்பான். அவன் எல்லாவற்றையும் வெறுத்திருப்பானாதலால் அவனுக்குக் கஷ்டமே இராது. அவன் வீண்காலம் கழிக்கவே மாட்டான். சதாகாலமும் பகவானைத் தியானம் செய்துகொண்டே இருப்பான். 

இவ்வாறு பக்தி புரிந்துவரும் பக்தனுக்கு நிரதிசய ஆனந்தம் கைகூடும். பகவான் அவனைத் தன் திருவடி நிழலில் சேர்த்துக்கொள்ளத் திருவுள்ளம் கொள்ளுங் காலத்தில் அவன் தேகம் விடும் தருணம் ஏற்படும். அப்பொழுது அவனது ஜீவன் பிரம்மரந்திரத்தின் வழியே வெளிப்பட்டு எல்லா உலகங்களையும் கடந்து சென்று பகவானுடைய உலகம் போய்ப் பரமானந்தத்தை அநுபவிக்கும். 

சாகும் தருணத்தில் இருப்பவனுக்கு எந்த ஆசை உண்டாகிறதோ அந்த ஆசைக்கு ஏற்றபடி ஆராதனை செய்யவேண்டும். பிரம்மண்யத்தில் ஆசை இருந்தால் வேதத்தை ஆராதனை செய்தல் வேண்டும். இந்திரிய பலத்தில் ஆசையிருந்தால் இந்திரனை ஆராதனை செய்தல் வேண்டும். மக்கட்பேற்றில் ஆசையுண்டானால் சிருஷ்டி கர்த்தாக்களையும், சக்தி வேண்டுமானால் அக்கினியையும் பொருளில் ஆசையுண்டானால் வஸுக்களையும், அரசியலில் விருப்பமிருந்தால் வசுதேவர்களையும், பூர்ணாயுள் வேண்டு மானால் அசுவினி தேவர்களையும் ஆசிரயிக்க வேண்டும். 

இவ்வாறாக ஆசைக்குத் தக்க அதிதேவதைகளை ஆசிரயித்தலே முறையாகும். இந்த ஆராதனை செய்ப வருக்குப் பகவத்பக்தி உடையவனது நட்பு இருக்குமானால், அந்தப் பகவத்பக்தி விரைவில் கிட்டும். ஆயினும் புத்தி யுடையவன் உலகப் பற்றுக்களில் ஆசைகொண்டு விஷ்ணுபக்தியைக் கைவிடமாட்டான். ஆகையால் மோக்ஷ மடையப் பரம்பொருளினிடம் பக்தி செலுத்தித் தாரணை முதலிய தியானத்தில் அந்தப் பக்தியை விருத்தி செய்து கொள்ளவேண்டும். 

இங்ஙனம் சுகப்பிரம்மரிஷி கூறவே, பரீக்ஷித்து விரைவில் தனக்கு மரணம் நேரிடுமென்று தெரிந்ததனாலே கிருஷ்ணபகவானைத் தியானம் செய்யத் தொடங்கினான். 

அப்பொழுது அவன் சகல ஆசைகளையும் துறந்து முத்தியடைய வேண்டுமென்கிற ஆசை மாத்திரம் கொண்டவனா யிருந்தான். அச்சமயம் அவன் மனத்தில், “ஒரு பந்தத்திலும் கட்டுப்படாத பரமாத்மா எவ்வாறு பிரகிருதியோடு சம்பந்தப்பட்டுப் பிரபஞ்சத்தை உண்டாக்கினார்? அவர் ஏன் அவதாரம் செய்தார்?” என்கிற சந்தேகம் தோன்றியது. அதைப்பற்றிச் சுகப்பிரம்மத்தினிடம் வினவினான். 

சுகப்பிரம்மரிஷி, உடனே பரம்பொருளைத் தியானித்து, பரீக்ஷித்தினுடைய பக்தி விசேஷத்தை நினைத்து சந்தோஷ மடைந்து கூறுகிறார்:- 

“அப்பனே, சிருஷ்டி- விஷயம் இரகசியம். அது மானிடர்களாலே அறிதற்கரியது. பிரம்மாவால் சிருஷ்டி உண்டாயிற்று. அந்தச் சிருஷ்டியில் தோன்றிய நாரதர் பிரம்மாவைப் பார்த்து, ‘நீரே அனைத்திற்கும் ஆதிகாரணம் போலத் தோற்றுகிறீர். ஆயினும் நீர் தியானத்தில் இருக்கிறீரே; இதைக் கவனித்தால் உமக்கு மேலான பரம்பொருள் ஒன்று உண்டெனத் தெரிகிறதே” என்று கேட்டார். 

“பிரம்மா, ‘ எனக்கு மேலாக நாராயணர் என்னும் பரம்பொருள் ஒன்றுண்டு. அவருடைய திருவருளாலேதான் நான் இந்தச் சிருஷ்டி செய்கிறேன். அவர் குணங்குறி கடந்தவர். அவரிடம் யாவும் அடங்கிக் கிடக்கின் றன. அவர் ஜீவராசிகளினுடைய நன்மைக்காகவே சிருஷ்டியைத் தொடங்க நினைத்துக் காலம், விதி, குணங்கள் முதலிய வற்றை வெளியிட்டார். அவர் எண்ணின மாத்திரத்தில் முக்குணங்களில் ஏற்றத்தாழ்வும் சலனமும் ஏற்பட்டன. இதனால் முறையே யாவும் உண்டாயின. முதலில் கால தத்துவத்திலிருந்து மகத் தத்துவம் உண்டாயிற்று. பின் அகங்காரம் உண்டாயிற்று. தாமஸ குணத்தால் ஆகாசம், வாயு, அக்கினி, பிருதிவி முதலியவை உண்டாயின. ராஜஸ குணத்தால் மெய், வாய் முதலியன வும், சாத்விக குணத்தால் இந்திரிய சக்திகளும் உண்டா யின. பகவானுடைய அங்கங்களிலிருந்து உலக விசித்திரங் கள் யாவும் வெளிவந்தன. நானும் அவரிடமிருந்துதான் வெளிவந்தேன். நான் அவருடைய அங்கங்களிலிருந்து ஸூக்ஷ்மமாக வெளிவந்தவற்றை ஸ்தூலமாக வெளிப் படுத்தினேன்’ என்று இவ்வாறு சிருஷ்டி இரகசியத்தைக் கூறினார். 

“இப்படி சிருஷ்டிக்கப்பட்ட உலகத்தில் தருமத்திற்கு லோபம் ஏற்பட்டு அதருமம் மேம்படுங் காலத்தில் பகவான் அவதாரம் செய்கிறார். அவர் சாதுக்களை ரக்ஷிக்கிறார்; துஷ்டர்களைச் சங்கரிக்கிறார்” என்று கூறிப் பகவானுடைய அவதார மகிமைகளையும் விளக்கியருளினார். 

பரீக்ஷித்து பின்னும் பிரபஞ்ச சிருஷ்டி விஷயமாயும், தேகம், ஆத்மா, கல்பம், திரிகாலம் இவற்றைப் பற்றியும் கேட்டான். சுகப்பிரம்மரிஷி யாவற்றையும் விவரமாய்ச் சொல்லிக்கொண்டு வந்து, “”விஷ்ணுவின் மாயா வைபவங் கள் அடங்கிய பாகவதத்தைப் பிரம்மா நாரதருக்குச் சொல்ல, நாரதர் வியாஸருக்குக் கூறினார்” என்றார். பரீக்ஷித்து, பாகவத புராணத்தில் அடங்கியவை யாவையென, சுகர் இந்தப் புராணத்தில் அடங்கியவற்றை விஸ்தாரமாகச் சொன்னார். பிறகு ஸூக்ஷ்ம சிருஷ்டியை ஒருவாறு சுருக்கிச் சொல்லுகையில், “ஆதிபுருஷர் முதலில் பிரளயஜலத்தை உண்டாக்கி அதைத் தமக்கு இருப்பிட மாகக் கொண்டார். இதனாலேதான் பரம்பொருளுக்கு நாராயணன் என்னும் பெயர் உண்டாயது. சிருஷ்டி விசித்திரம் பகவானுடைய ஸந்நிதான மாத்திரத்தில் ஏற்படுவது” என்று கூறியருளினார். 

ஐந்தாம் அத்தியாயம்

விதூர் மைத்திரேயரை அடைவது

சுகர் பரீக்ஷித்தைப் பார்த்து, ”அரசே, நீ கேட்ட கேள்விகளையெல்லாம், முன்னர் விதுரர் பூத பவிஷ்ய வர்த்தமான ஞானமுடையவரான மைத்திரேயர் என்னும் மகரிஷியைக் கேட்டிருக்கிறார். அவற்றைச் சொல்லு கிறேன்” என்று சொல்லத் தொடங்கினார். பரீக்ஷித்து, “ஸ்வாமி, விதுரருக்கு மைத்திரேயர் இருக்கும் இடமும் அவருடைய மகிமையும் எவ்வாறு தெரிந்தன ?” என்று கேட்டார். சுகர் கூறலானார்: 

அரசனே, கேள் : திருதராஷ்டிரன் அதருமத்தினால் விவேகமிழந்து துஷ்டர்களான தன் மக்களை ஆதரித்தும், தன் தம்பி மக்களாகிய பாண்டவர்களைப் புறக்கணித்தும் வந்தான். பாண்டவர்களைத் துரியோதனாதியர் அரக்கு மாளிகையில் வைத்துக் கொளுத்தினார்கள். பகவானுடைய கிருபையினால் அவர்கள் அந்த ஆபத்திலிருந்து தப்பி னார்கள். பின்பு அந்தக் கௌரவர்கள் பெரியோர்கள் நிறைந்திருந்த சபையில் திரௌபதியை மானபங்கம் செய்யத் தலைப்பட்டார்கள்; சூதிலே பாண்டவர்களை வஞ்சகமாக ஜயித்து அவர்களைப் பதின்மூன்று வருஷம் காட்டிற்குத் துரத்தினார்கள். இவற்றையெல்லாம் திருத ராஷ்டிரன் தடுக்கவில்லை. இவையன்றிப் பாண்டவர்கள் வனவாசம் கழித்து வந்து தங்களுக்குரிய பங்கைக் கேட்டபோது, துரியோதனாதியர் அதைக் கொடுக்க மறுத்துவிட்டார்கள். இந்த அநியாயத்தையும் திருத ராஷ்டிரன் பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு அவன் ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய பேச்சையும் கேட்கவில்லை. இதனால் விதுரர் அவனை அழைத்து, “பொறுத்தற்கரிய உம்முடைய குற்றத்தைப் பொறுத்துக்கொண்டு தருமபுத் திரர் தமக்குரிய பாகத்தைக் கேட்கிறார். அதைக் கிரமப்படி கொடுத்து விடவேண்டும். கொடுக்க மறுப்பது நீதியன்று. நீர் துரியோதனனைப் பிள்ளை யென்கிற புத்தியினால் ஆத ரிக்கிறீர். ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு விரோதியான பாப மானது, சரீரம் எடுத்துக்கொண்டு உம்முடைய வீட்டிலே வந்து வாசம் பண்ணிக்கொண்டிருக்கிறது. ஆகையினால் துரியன் குலநாசத்திற்குக் காரணமானவன்” என்று நற் புத்தி கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த துரியோ தனன், “தாசி புத்திரனும் வஞ்சகனுமாகிய இவனைச் சபைக்கு அழைத்தவர் யார்? உண்ட வீட்டிற்கு இவன் இரண்டகம் நினைக்கிறவனாயிருக்கிறான்; பகைவர்களிடம் பரிவு காட்டுகிறான். ஆகையினால் இவனை இவனிடமிருக்கும் பொருளைப் பிடுங்கிக்கொண்டு கொல்லாமல் ஊருக்கு வெளியே துரத்திவிடுங்கள் ‘ என்று கடிந்துகொண்டான். விதுரர் இதற்காக வருந்தாமல், உடனே தம் கையிலிருந்த வில்லை ஒடித்து எறிந்துவிட்டுத் தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டுவிட்டார். 

இவ்வாறு புறப்பட்ட விதுரர் நெடுகச் சென்று தீர்த்த யாத்திரை செய்துகொண்டு வருகையில் யமுனா நதிக்கரை யில் பதரிகாசிரமம் நோக்கிப் போய்க்கொண்டிருந்த பகவத் பக்தரான உத்தவஸ்வாமியைக் கண்டார். கண்டதும் இரு வரும் ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்துகொண்டு க்ஷேமம் விசாரித்துக்கொண்டனர். அப்பொழுது உத்தவர், ரிஷி சாபத்தால் யாதவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இறந்ததையும், முற்பிறப்பில் வாலியாக இருந்து இப்பிறப்பில் வேடனாக வந்த ஒருவனுடைய அம்பினால் பக வான் பரமபதம் சென்றதையும் கூறினார். இதைக் கேட்ட தும், விதுரர் பெருந்துயர மடைந்து உத்தவரை நோக்கி, பகவான் உலகத்தை விட்டுப் போகும்போது சொல்லிய ரகசியங்களைத் தமக்குச் சொல்லும்படி கேட்டார். உத்த வர், “நான் பகவானுடைய ஆக்ஞைப்படி ஒரு விரதத்தை மேற்கொண்டு இப்போது பதரிகாசிரமத்திற்கு அவசர மாய்ப் போகிறேன். பகவான் பரமபதம் போகும்போது எனக்குச் சில ரகசியங்களை உபதேசித்தார். அந்தக் காலத் தில் என்னையும் உம்மையுந்தான் அவர் நினைப்பில் வைத் திருந்தார்.நீர் அப்பொழுது இல்லாமையால் தாம் கூறிய உபதேசங்களை யெல்லாம் உமக்குக் கூறும்படி மைத்திரேய ருக்குப் பகவான் ஆக்ஞை செய்திருக்கிறார். மைத்திரேயர் இப்பொழுது ஹரித்துவாரத்தில் இருக்கிறார். ஆகையால் நீர் அவரிடம் போய்ச்சேரும். நான் பதரிகாசிரமம் போய் வருகிறேன் ” என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டார். பிறகு, பதரிகாசிரமம் போய் அங்கே சமாதியினாலே ஸ்ரீ ஹரியை ஆராதித்துக்கொண் டிருந்தார். விதுரர் கங்காநதி தீரத்தில் இருந்த மைத்திரேய மகரிஷியிடம் போய்ச்சேர்ந்தார். 

– தொடரும்…

– ஸ்ரீமத் பாகவத ஸாரம் (நாவல்), முதல் பதிப்பு: 1945, விவேக போதினி ஆபீஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *