சின்னு என்கிற சின்னசாமியும் அக்கீ என்கிற அக்கீசியாவும்






அத்தியாயம 1-2 | அத்தியாயம் 3-4
அத்தியாயம் – 1

பெருமழையில் சாலைகளும், விளக்குக்கம்பங்களும் தொப்பலாய் நனைந்து கொண்டிருந்தன. சிதறும் விளக்கு வெளிச்சத்தில் இருள் ஆங்காங்கே பதுங்கிக்கிடந்தது. குறைந்த ஆள் நடமாட்டம். பேருக்கு இரண்டு மூன்று பேர் கையில் குடையுடன்.
விவேகானந்தா நகர் குறுக்குச் சாலையின் திருப்பத்திலிருந்த வீட்டின் முன்பு ஒரு ஆட்டோ வந்து நிற்க.. தலையில் முக்காடு போட்டவாறு, கையில் ஒரு சிறிய சூட்கேசுடன் அவள் இறங்கினாள்.
அவள்தான் அக்கீசியா!
இரும்பு கேட்டுக்கு உட்புறமிருந்த அழைப்புமணியை வேகவேகமாக அழுத்தினாள்.
இந்நேரத்தில்…. மழைப்பொழிவில்… அதுவும் இரவு பதினோரு மணிக்கு யாராயிருக்கும்?
கதவை ஒருக்களித்தவாறு எட்டிப்பார்த்தான்.
அவன்தான் — சின்னு என்கிற சின்னசாமி!
சின்னசாமியைச் சுருக்கி.. அவனே ‘சின்னு’ என்று வைத்துக்கொண்டான்.
அது அவனுக்குப் பிடித்திருந்தது.
அவனுக்கு மட்டுமில்லை. மற்றவர்களுக்கும்தான்!
அவளைப்பார்த்த மாத்திரத்தில்—
அவன் மழையில் நனைந்த பட்சிபோல், கொஞ்சம் சிலிர்த்துப்போனான்.
ஆங்காங்கே வெள்ளைநிறத்தில் மாடர்னாய் டிசைன் போட்ட ஊதா நிறப்புடைவையிலிருந்து சொட்டுப்போடும் மழைத்துளிகளுடன் அவள்!
பேச்சலர் மட்டும் தங்கியிருக்கும் வீட்டுக்கு… அதுவும் நடுச்சாமத்தில்
சின்ன சூட்கேஸுடன் ஓர் இளம்பெண். நல்ல வேளை, கொட்டும் மழை ஒரு பாதுகாப்பு. அக்கம் பக்கம் உறக்கம்.
அவன் மறுபேச்சின்றி கதவைத் திறந்துவிட்டான். போர்டிகோ லைட்டை அணைத்துவிட்டான். மங்கிய இருளில் அவள் விறுவிறுவென்று உள்ளே நுழைய…. கதவு அடைக்கப்பட்டது.
பெட்டியை சோஃபா அருகே வைத்துவிட்டுச் சொன்னாள்:
“சின்னு! நான் வந்து……”
அவன் சைகையில் ‘போதும்’ என்பதுபோல் கரத்தை உயர்த்திவிட்டு,
“அப்புறம் பேசிக்கலாம்… இலேசா நனைஞ்சிருக்கே போலிருக்கு… உள்ளே போயி டிரஸ் மாத்திட்டு வா…நான் காஃபி போடறேன்… உனக்கு ப்ரூ பிடிக்கும்தானே” என்றான்.
ஹாலை அடுத்திருந்த அறைக்குள் நுழைந்த அக்கீசியா கதவைத்
தாழிட்டுக்கொண்டாள்.
பத்து நிமிடம் கழித்து, பச்சையும் மஞ்சளும் கலந்த மாடர்ன் வண்ணத்தைக் குழப்பியடித்தது போன்ற நைட்டியில், தழையத் தழைய வந்தாள். கேசத்தைக் கோதிவிட்டவாறு, பிடரியில் கிடத்தி இருந்தாள்.
சில நிமிடங்களுக்கு அவள் எதுவும் பேசவில்லை. மழைக்குளிருக்கு காஃபி இதமாயிருந்தது.
“தேங்க்ஸ் சின்னு”
அவள் சுவரையொட்டிக்கிடந்த ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்தாள்.
‘எப்படியும் எதையாவது…. பிரச்சனையுடன்தான் வந்திருப்பாள்’
அவன் கணித்தபடியே, அவள் பேச்சும் இருந்தது.
”எனக்கு மாப்பிள்ளை பாக்கறாங்க, சின்னு… எவனோ ஒருத்தனோட ஃபோட்டோவைக் காட்டி அவனைக் கட்டிக்கச் சொல்லி வற்புறுத்தறாங்க…எனக்கு அவனைப் பிடிக்கலே… என்னை ஒரு வார்த்தை கேட்கலாமில்லியா எவனையும் பிடிக்கலே! எப்படியாவது கல்யாணத்தை முடிச்சிரலாம்னு பார்க்கறாங்க!” – நொறுங்கிப் போனாள் அக்கீசியா.
“உங்கம்மாவுமா உன்னைப் புரிஞ்சக்கலே… அம்மாகிட்டே வெளிப்படையாப் பேசிற வேண்டியது தானே?”
“க்கும். அம்மாவாவது… அவங்க அப்பா சொல்றபடிதான் கேட்பாங்க”
வெறுப்பைக் கொட்டிய அவள் முகத்தை சிறிதுநேரம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான் சின்னு.
குடும்பத்தையே உதறிவிட்டு, இன்னொருவனை நம்பிவந்திருக்கிற காரிகையை அவன் விழிகளால் பருகிக்கொண்டிருந்தான்.
“நீ படிச்ச பொண்ணு இல்லியா… இப்படிச் செய்யலாமா? இது உனக்கே நியாயமாப்படுதா?”
சின்னசாமி இப்படிப் பேசுவானென்னு அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் இலேசாக அதிர்ந்தாள்.
முகத்தை சிலுப்பியவாறு, “சரியில்லீங்க தாத்தா! இது தத்துவம் பேசற நேரமா சொல்லுடா” என்றாள், பொய்க்கோபத்துடன்.
“நாளைக்கு என்ன நடக்கும்னு யோசிச்சிச்சுப் பார்த்தியா… நீ பாட்டுக்கு எல்லாரையும் தூக்கி எறிஞ்சிட்டு வந்துட்டே… மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிஞ்சா…”
“அதையெல்லாம் யோசித்துப்பார்த்தா, அப்புறம் எதையும் சாதிக்க முடியாது.. பேப்பர்லே பார்க்கறீங்க இல்லியா”
உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு, காஃபி டம்ளரைக் கழுவுவதற்கு சமையலறைக்குப் போனாள்.
“அக்கீசியா! அப்படியே வச்சிரு… காலைலே வேலைக்காரி வருவா.. அவ பார்த்துக்குவா”
“அதுதான் நான் வந்துட்டேனல்லே!”
அவனுக்கு சங்கடமாக இருந்தது. மனதுக்குள் திட்டம் போட்டான்.
‘எப்படியாவது இவளை விடியறதுக்குள்ளே கிளப்பியாகணுமே’
“நீ ஒரு நிமிஷத்திலே போட்ட ட்ரெஸ்ஸோட வந்துட்டே..! நான் அப்படி முடியாது… கொஞ்சம்கொஞ்சமா பேரண்ட்ஸ்க்கு உன்னைப்பத்திச் சொல்லி… மெதுவாப்புரிய வச்சு… அதுக்கு ஆறு மாசம், ஒரு வருஷம்கூட ஆகலாம்”
“உக்கும்… அப்புறம் நீ என்னை மறந்துற வேண்டியதுதான்! எனக்குப் பிடிக்காத ஒருவனுக்குக் கட்டி வச்சு…”
“அப்படியொண்ணு நடந்தா, அதையும் நீ ஏத்துக்கவேண்டியதுதான்!”
“சின்னு! டோன்ட் டாக் ரப்பிஷ்!”
அவள் சினத்துடன் சன்னலோரம் சென்று வெளியே எட்டிப்பார்த்தாள்.
மழை நின்றிருந்தது . வெளியே ஆளரவம் இல்லை. சுவர்க் —
கடிகாரம் ஒரு மணி காட்டிற்று.
அக்கீசியா குடும்பம் வளமானது என்று சொல்லமுடியாது. அவள் தந்தை தங்கப்பன் வாகனங்களுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஓர் உள்ளூர் கம்பெனியில் டெக்னீஷியனாக வேலை பார்க்கிறார். அம்மா வனிதா ஹோம் மேக்கர். புத்தகம் படிப்பது, நாவல் எழுதுவது அவள் பொழுதுபோக்கு.
ஒரே பெண் அக்கீசியா. உடன்பிறப்பு இல்லை. கல்லூரியில் சைக்காலஜி படிக்கும்போதே அவள் மனம் அலைபாய்ந்தது. குறுக்கே சின்னசாமி என்கிற ‘சின்னு’ வந்து முட்டினான். அவன் தமிழ் இலக்கியம் பயின்று வந்தான்.
சின்னச்சாமியின் தந்தை பரமானந்தம் பூனேவில் இருக்கிறார், ஒரு கெமிக்கல் கம்பெனியில் உயர் பதவி. அவன் அம்மா சுசீலா, ஒரு பிரபலமான ஹாஸ்பிடலில் – நிர்வாகப் பிரிவில் பணிபுரிகிறாள்.
யாருமே எதிர்பார்க்காத… ஆனால் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடந்தது.
அது…….
அன்று கல்லூரியில் அக்கீசியாவைச் சுற்றி பட்டாம்பூச்சிகளைப்போல் சிறு கூட்டம். அதற்குக் காரணம் அவள் கையிலிருந்த ‘பூமா’ மாத நாவல்தான். அவள் தோழிகளிடத்தில் ஆர்வமாகக் காட்டிக்கொண்டிருந்தாள்.
நாவலின் பிரதிகளைச் சிலர் புரட்டிக்கொண்டிருந்தார்கள். அப்புறம் பாய்ஸ், பாய்ஸ்தானே!
டெங்கு கொசுபோல் அவளையே சுற்றிச் சுற்றி வந்தார்கள்.
“அக்கீ! கங்கிராட்ஸ் டி! “
“அக்கீ! படிச்சிட்டு நாளைக்குச்சொல்றேன்!”
போகிறபோக்கில் அவளிடம் சிலர் சொல்லிக்கொண்டே வகுப்புக்குப் போனார்கள்.
சின்னு அங்கில்லாமல் இருப்பானா… அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவளையணுகி “ஹலோ… நீங்க நாவல் கூட எழுதுவீங்களா? ” என்றான்
வியப்புடன். அவனும் அந்த ‘பூமா’ வைத் தாங்கிக்கொண்டிருந்தான். அட்டை வசீகரமாக இருந்தது. யாரோ ஒரு புது நடிகையின் முகத்தைப்போட்டு அப்பியிருந்தார்கள்.
நாவலின் பெயர்: ‘ரசிகாவின் ரசனை ‘
எழுதியவர் பெயர் : வனிதா தங்கப்பன்.
அக்கீசியாவின் அம்மா!
முகப்பிலேயே அவள் முகத்தை சிறு ஃப்ரேமுக்குள் அடைத்திருந்தார்கள்.
“இது… அம்மா எழுதினது” என்றாள் பெருமையுடன் அக்கீசியா.
“வெரிகுட்… கங்கிராட்ஸ்! அவங்க எழுதின சில கதைகளைப் படிச்சிருக்கேன்.. படிச்சு முடிச்ச அடுத்த நிமிஷம், பத்திரிகைக்கு லெட்டர் எழுதிப்போட்டுருவேன்.. நிறைய கதைலே அவங்க பன்ச்வச்சு எழுதறது எனக்கு ரொம்பப்பிடிக்கும்… ஒருவேளை ‘சின்னு’ ங்கற பேரைக்கூட கவனிச்சிருப்பாங்க” என்றான் சின்னசாமி.
“ஆமாமா… ஞாபகத்துக்கு வருது.. யார் இந்த ‘சின்னு? என்னோட கதைகளுக்கெல்லாம் கமெண்ட் பண்ணிட்டிருக்காரேன்னு அடிக்கடி புலம்பிட்டேருப்பாங்க… நான் அதிகமா இன்ட்ரெஸ்ட் காட்டிக்கமாட்டேன்”
“அடப்பாவமே! இது புலம்பலா.. உங்களுக்கு ரசனையே கிடையாதா? ” என்று அவளைக் குற்றப்படுத்தினான் சின்னசாமி.
“ஓ… எம்மேலே தப்புக்கண்டுபிடிக்கிறீங்களா… பிடிக்காத விஷயங்கள் மேலே எப்படீங்க ஆர்வம் காட்டமுடியும்?”
அவள் அதரங்களைப் பிதுக்கியவாறே, விழிகளை சைடில் வெட்டினாள்.
அட! என்ன கோபம்… தன்னோட எழிலை வெளிப்படுத்துவதற்கு, பொண்ணுகளுக்கு இந்தப் பொய்க்கோபம் ஓர் ஆயுதம்!
“அய்யோ…. சாரீங்க! என்னங்க இப்படிக் கோபப்படறீங்க? “
சின்னசாமி கழிவிரக்கத்துடன் அவளைப் பார்த்தான்.
“பரவாயில்லே… இந்தாங்க இதைப்படிச்சிட்டு…”
“நேரிலியே வந்து அவங்களப் பாக்கறேன்… சின்னு தெரியுமான்னு கேட்டுப்–
பாருங்க”
“உக்கும் அதுதானே எனக்கு வேலை!”
முறுவலை பொடிப்பொடியாக உதிர்த்துவிட்டு, கழுத்தை ஓடித்தவாறே கடந்து போனாள், அக்கீசியா.
சின்னு சிலிர்த்துப்போனான், மழைச் சாரலில் நனைகிற பசுந்தளிர்போல.
மழையிரவில், சின்னு வீடு தேடி வந்த அக்கீசியாவை எப்படித் திருப்பியனுப்புவது?
சின்னு தலைமுடியைப் பிய்த்துக் கொண்டான். இந்தப் பெண்களுக்கே பிடிவாதம் அதிகம். அதுவும் இவளைப்போன்ற வயசுப் பெண்களுக்கு? ஆணைச் சோதிப்பதற்கே பெண் படைக்கப்பட்டிருக்கிறாள் போலும்!
“இப்ப வீட்லே என்ன சொல்லிட்டு வந்தே… இருட்டு…மழை… தேடமாட்டாங்களா.. நீ செய்யறதே சரியில்லே, அக்கீ”
“நான் புறப்படறபோது அஞ்சு மணி.. ஃபிரண்டோட பர்த்டே பார்ட்டி… ரொம்ப
லேட்டாயிருச்சுன்னா அவங்களோடவே தங்கிட்டு காலைலே வர்றேன்னு
சொல்லிட்டுதான் வந்தேன்..”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. புறப்படு உன்னையே வீட்லே விட்டுட்டு வந்துர்றேன். அப்புறம் என்ன சொன்னே… நாளைக்குப் பொண்ணுப் பாக்க வர்றாங்களா? வரட்டுமே.. வந்து பார்த்துட்டுப் போகட்டும்.. அப்படி எதுவும் உடனே நடக்காதுல்லே..இன்னும் எத்தனை ப்ராசஸ் இருக்கு…” என்றான் சின்னசாமி.
“அப்பா ரொம்பக் கறாரான பேர்வழி, சின்னு…. புடிச்சதுனா எல்லா
சம்பிரதாயத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு, சட்டுப்புட்டுன்னு முடிச்சுருவாரு மனுஷன்!”
“சரி… நடக்கறது… நடக்கட்டும்… நீ அமைதியா இரு… கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் பாத்துக்கலாம்.. இப்ப நீ எதையாவது சொல்லி சமாளிச்சுக்க”
அப்போதைக்கு தாட்டுவார்த்தையாய் ஏதோசொல்லி சமாளித்தான் சின்னசாமி. வெளியே ஆட்டோ காத்திருந்தது.
நீண்ட பெருமூச்சு. ‘அப்பாடா’ என்றிருந்தது, ‘சின்னு’ என்கிற சின்னசாமிக்கு.
அவள் புறப்பட்டுப் போனத்துக்கப்புறம்—
சின்னு உறங்கப்போனான். தூக்கம்… அது அடம் பிடித்தது.
ஆட்டோவிலிருந்து பூனை மாதிரி மெல்ல இறங்கினாள் அக்கீசியா. இரும்பு
கேட் அருகே வந்ததும் பம்மியவாறு உள்ளே எட்டிப்பார்த்தாள். அவளுக்கு ‘பகீர்’என்றது.
அப்பா!
உறக்கம் வராமல் முற்றத்தில் தாறுமாறாய் நடந்துகொண்டிருந்தார். அவர் கோபத்தில் இருக்கிறார் என்பதை அவர் நடை காட்டிற்று.
‘நன்றாக மாட்டிக்கொண்டோம்… இனி சமாளிக்க வேண்டியதுதான்’
அவள் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு ‘கிரீச்’சிடும் கதவை வெளிப்புறமாய் இழுத்தாள்.
உள்ளே நுழைந்ததும் எந்த உணர்ச்சியையும் காட்டிக்கொள்ளாமல் “என்ன டாடி! தூக்கம் வரலியா” என்றாள் காஸுவலாக. நுரை ததும்பப் பொங்கியெழும் பால், காஸ் ஸ்டவ்விலிருந்து இறக்கியதும் வடிவதுபோல், அவர் உள்ளத்தை இதுகாறும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்த சினம் வடியத் தொடங்கியது.
“இப்ப மணியென்ன… எங்க போயிட்டு வர்றே?”
“டாடி… அம்மா கிட்டேச் சொல்லிட்டுத்தான் போனேன்.. ஃபிரண்டோட பெர்த்டே பார்ட்டி… கொஞ்சம் லேட்டாயிருச்சு … தங்கிக்கலாம்னு பார்த்தேன்.. எல்லாமே கிளம்பிட்டாங்க.. நாங்க மூணு பேரு ஆட்டோவிலே வந்தோம்.. ஒண்ணும் பிரச்சனையில்லே… அவங்க எல்லாம் இறங்கிட்டாங்க.. சாரி டாடி”
“அக்கீ! உனக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கற நேரத்திலே இதெல்லாம் தேவையா.. ஏதாவதொண்ணு ஏடாகூடமா நடந்துச்சுன்னா… கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தியா” அவள் அப்பா தங்கப்பன் செல்லமாய்க் கடிந்து கொண்டார்.
“சரிங்க டாடி, இனிமேல் இப்படியெல்லாம் நடக்காது.. வாங்க உள்ள போலாம்’ என்று அவள் தந்தையைத் தோளோடு தோளாய் அணைத்தவாறு வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
நல்லவேளை, கொண்டுபோன சிறிய சூட்கேஸை சின்னசாமி வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது நல்லதாய்ப் போயிற்று! இல்லையென்றால் நிலைமையை சமாளிக்க முடியாதே!
அத்தியாயம் – 2
அக்கீசியா வீடு.
வனிதா தங்கப்பன் அடுத்த நாவல் எழுதுவதில் மூழ்கிப்போயிருந்தாள்.
டான்ஸ் ஆடிக்கொண்டே வந்த அக்கீசியா, அம்மாவின் பிடரியோரம் பம்மினாள்.
“என்ன கிசுகிசுப்பு?”
“மம்மீ! உங்களுக்கு சின்னுன்னு யாரையாவது தெரியுமா?”
“ஆமாம் அக்கீ… பேரைக்கேட்ட மாதிரிதானே இருக்கு”
“அது வேறயாருமில்லே… என்னோட காலேஜ் மேட்தான்!”
“இஸ் இட்! ஆச்சரியமாயிருக்கே… காலேஜ் பையனா அப்படிப் படிக்கிறான்..”
“ஆமாம் மம்மீ…. அவன் லிட்டரேச்சர் படிக்கிறான்…. சிறுகதை… நாவலெல்லாம் நிறையப்படிப்பானாம்… லூசுப்பய! இன்றைக்கு உங்க ‘பூமா’ நாவலெப் பத்திப் பேசிட்டிருந்தப்ப, அவன் பாட்டுக்கு அளந்து கொட்டிட்டிருந்தான்!”
“போடீ! நீதான் லூசு…. நிச்சயம் அவனும் ஓர் இலக்கியவாதியாகத்தான் இருக்கணும்”
“ஆகாகா! உனக்குத் தோதா வந்தா. அவனைப்பத்தித் தெரிஞ்சிக்காமலே
தலைலே தூக்கி வச்சுக் கொண்டாடுவே”
“எங்கமாதிரி எழுத்தாளர்களுக்கு வாசகர்களோட பாராட்டுகள்தான் டானிக்..
நீங்க ரெண்டு பேரும் இருக்கறீங்களே… தெண்டம்!”
“ரெண்டு பேரா… இன்னொருத்தர் யாரு?”
“கேட்டியே ஒரு கேள்வி… உன் டாடிதான்!”
“பாவம் டாடி… அவருக்கு ஸ்பேர் பார்ட்ஸை கட்டி அழுகறதற்கே நேரம் போதாது.. உன்னோட கதையெல்லாமா படிக்கப் போறாரு”
“ராத்திரி பகலெல்லாமா கடையே கதின்னு கெடக்கறாரு.. எதோ அப்பப்ப
புரட்டிப்பார்த்துட்டு சில ஒப்பீனியன் சொன்னாத்தானே எழுதறவளுக்கு கொஞ்சம் உற்சாகமா இருக்கும்”
“அம்மா! அது தொழில்… வாழ்வாதாரம்… எழுத்து, இலக்கியம் இதெல்லாம் ஒரு தவம்! அது எல்லோருக்கும் சுட்டுப்போட்டாக்கூட வராது”
“வெரிகுட் அக்கீ! இப்பவாவது என்னோட டிராவல் பண்றியே.. அது போதும்!”
அப்போது–
காலிங் பெல் சிணுங்கும் ஒலி.
“அட…. என்ன டாடி இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம்… ஏதாவது ப்ரோக்ராம்
இருக்கா… ரிசப்ஷன் அது இது…”
“அதெல்லாம் ஒண்ணுமில்லே… போய்ப்பாரு… என்றாள் வனிதா தங்கப்பன் – அக்கீசியாவின் அம்மா.
“கெண்ட் ரிப்பேர் பண்றவனா இருக்கும்… காலைலே வரச்சொல்லட்டுமா.. அதுக்கு டாடி பக்கத்திலே இருந்தாத்தான் நல்லது” என்று முணுமுணுத்தவாறே அக்கீசியா கதவை நீக்க— அங்கே… சின்னு நின்று கொண்டிருந்தான்!
அக்கீசியாவுக்கு இன்ப அதிர்ச்சி.
இவ்வளவு சீக்கிரம் அவன் வீடு தேடிவருவானென்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டியதுதான். சின்னு, அம்மாவின்
ரசிகனாகிவிட்டான்!. இது ஒரு தித்திக்கும் ஆரம்பம்தான்.
அம்மாவைப் பொறுத்தளவுக்கு, அவளை யாராவது புகழ ஆரம்பித்துவிட்டால் போதும். இளகி, நழுவி, விழுந்துவிடுவாள். இது, எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கிற பலவீனம்தான். புகழ் நமது சாம்பலுக்குப் பிறகு நிதானமாக வருகிறது என்று சொல்லுவார்கள். ஆனால், அம்மாவுக்கு அப்படியில்லை!
“அலோ…வரலாமா?”
சின்னு இலேசாய்த் திறந்திருந்த கதவைத் தள்ளினான்.
“அதுதான் வந்துட்டீங்களே… அப்புறமென்ன கேள்வி….”
அக்கீசியா முறுவல் ஒழுகும் அதரங்களை மென்றாள்.
“நான் உங்களைப்பார்க்க வர்லேங்க… பிரபல எழுத்தாளரைப் பார்க்கணும்!”
என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாமே.. அப்படியாவது அவள் முகத்தில் ஒரு புதிய ரோஜா பூக்கட்டுமே!
“உக்கும்! தெரியும்…. உட்காருங்க, அம்மாவைக் கூப்பிடறேன்”
வரவேற்பு அறையில் கிடந்த கிரே கலர் சோஃபாவில் படர்ந்தான். கீழே விரிக்கப்பட்டிருந்தது, காஷ்மீர் கம்பளம் போன்ற விரிப்பு. மூலையில்
சுவரோரம் சாய்ந்திருந்த ஷெல்ப்பில், நிறையப்புத்தகங்கள், பைசா கோபுரம்போல் சரிவாய்.
“எழுத்தாளர் வனிதா தங்கப்பன்! யூ ஆர் வான்டெட்!”
அக்கீசியா, மென்னடையில் எழிலைச்சிந்திக்கொண்டே உள்ளறைக்குள்
நுழைந்தாள் அறைக்குள்ளிருந்து, முகமலர்ச்சியுடன் வனிதா தங்கப்பன் வெளியே வந்தாள். அரக்குநிறக் காட்டன் புடவையில் பாந்தமாக இருந்தாள். நடுத்தர வயதில் காட்சியளித்த எழுத்தாளரைக் கண்டதும் எழுந்து முகமன் கூறினான் சின்னு,
“வாப்பா… சின்னு!”
“நீ எழுதற லெட்டர் எல்லாமே பத்திரப்படுத்தி வச்சிருக்கேன்.. இத்தனை நாளாச்சு அது யாருன்னு தெரிஞ்சுக்கறதுக்கு… தேங்க்ஸ் தம்பி!”
‘அய்யோ மதர்! இப்படி வழிறியே… பெரிய ரசிகன்!’
அக்கீசியாவும் இரகசியமாக மனதுக்குள் ரசித்தாள்.
“மேடம்! நீங்க கொஞ்சம்… எனக்கு நேரம் செலவழிக்கமுடியுமா?”
“சொல்லுப்பா… அதுக்கென்ன”
“உங்க ‘ரசிகாவின் ரசனை’ நாவல்லே வர்ற ரசிகாங்கற கேரக்டரப்பத்திக் கொஞ்சம் பேசணும்”
‘ஆகா! மொக்கை போடஆரம்பிச்சுட்டான்!’ அக்கீசியா மனதுக்குள் உரையாடினாள்.
“முதல்லே நீ என்ன சாப்பிடறே… அக்கீ! உள்ளே என்ன பண்றே?”
“இரும்மா… உங்க ரசிகனுக்கு காஃபீ ஸ்னாக்ஸ் எல்லாம் எடுத்திட்டு வர்றேன்”
“வெரிகுட்! மெதுவா வா!”
சிறிது நேரத்தில்—
அக்கீசியா கப் அண்ட் சாஸரில் ப்ரு காஃபீ …. டிரேயில் கொஞ்சம் மிக்ஸர், ஸ்வீட் எல்லாம் எடுத்து வந்தாள்.
“இந்த பார்லிமென்ட் டிஸ்கஸன்லே நானும் கலந்துக்கலாமா… சார்!”
அவள் முறுவலை உதிர்த்தவாறு அம்மாவின் பிடரியோரம் ஒதுங்கினாள்.
“பெரிய பிகு பண்ணாதே… நீயும் உட்காரு.. இப்படித்தான் தம்பி அவ அடிக்கடி விளையாடுவா!”
அவன் சிரித்தவாறே “ஆரம்பிக்கலாமா மேடம் … நான் ரெடி!” என்றான்.
“ஏம்மா… உள்ளேபோய் அந்த நாவல்லே மூணு காபி எடுத்திட்டு வா”
ஆயிற்று. உரையாடலில் தெறிப்பு சூடு.
“மேடம், ஒண்ணு கேக்கறேன்…. நான் சின்னப்பையன்தான்… இருந்தாலும் கேக்கறேன்”
“சும்மா கேளுப்பா… கேள்விலேதானே தெளிவு கிடைக்கும்”
“அந்தக் கதைலே ரசிகா எடுத்த முடிவு, நியாயம்தான்ங்கறமாதிரி நாவலை முடிக்கறீங்களே”
“ஆமாம்பா… இதுலே என்ன இருக்கு…. ஊருலே உலகத்திலே நடந்துட்டுதானே இருக்கு”
“உற்றார் உறவினரையெல்லாம் பகைச்சிட்டு, தனக்குப்பிடிச்சவனோட ஓடிப் போய் பதிவுத் திருமணம் பண்ணிக்கறதை நீங்க நியாயப்படுத்தியிருக்கீங்க”
“அதனாலென்ன.. பெரியவங்க எல்லாருமே மாசக்கணக்குலே கூடிப் பேசி, ஜாதகம் பாத்து, பொருத்தம் பாத்து, சாதி சனம், சடங்கு, நல்லநாள்னு எல்லாக் கருமாந்திரத்தையும் ஒண்ணுவிடாம பார்த்து…. முகம் தெரியாத ஒரு பையனுக்குக் கழுத்தை நீட்டிட்டு காலம் பூரா அல்லல் படணும்ங்கறது என்ன தலையெழுத்தா.. பெண் பிள்ளைகளே சுயாதீனமா சிந்திக்க விடறதில்லே… நல்லதோ கெட்டதோ அவங்களே வாழவிட்றனும்… உங்க மாதிரி இளைஞர்கள்தான் முற்போக்கு சிந்தனையோட மூட நம்பிக்கைகளையெல்லாம் ஒழிக்க முன் வரணும், தம்பி! அதைக் குத்திக்காட்டித்தான் நாவலை நகர்த்தியிருக்கேன்!”
“சூப்பர் மேடம்! என் மனமுவந்த வாழ்த்துகள்”
அக்கீசியா எதுவும் பேசாமல் புத்தர் சிலை கணக்காய் அமர்ந்திருந்தாள்.
“அக்கீசியா மேடம்! உங்க ஒப்பீனியன்…?
“நான் சின்னப்பொண்ணு… எங்கம்மா பெரிய ரைட்டர்… வொரேஷியஸ் ரீடர்… நான் இன்னும் இத முழுசாப் படிக்கலே… எதையும் முழுசாப் படிக்காம எப்படிக் கருத்துக் சொல்றது?”
“ரொம்ப சரி… ஐ அக்ரி வித் யூ” என்றான் சின்னு.
“என்ன தம்பி… நான் கொடுத்த விளக்கத்துக்கு எந்த பதிலையுமே காணோம்”
அவன் அமைதியாக இருந்தான்.
யாரோ வெளியே பஸ்ஸரை அழுத்தினார்கள்.
அக்கீசியா ஓடிப்போய் கதவைத் திறந்தாள்.
அங்கே —
அப்பாவும் இன்னொருவரும் நின்றுகொண்டிருந்தனர்.
அக்கீசியா வியப்புடன் அவர்களைப் பார்த்தாள்.
“வனிதா வாம்மா… இவர்தான் மேரேஜ் புரோக்கர் குமரகுரு!” என்றார் தங்கப்பன்.
“அய்யா.. வாங்க” என்று வரவேற்றாள் வனிதா.
அக்கீசியாவின் முகம் மாறுபட்டது.
“தம்பி யாரு? ” என்று தங்கப்பன் விசாரித்துக்கொண்டிருக்க…
சின்னு எழுந்து, ” மேடம்.. கிளம்பறேன்… இன்னொரு நாளைக்கு வர்றேன்”
என்று சொல்லிக்கொண்டே பூனைக்குட்டிபோல் நழுவினான்.
அன்று இரவு, அக்கீசியா படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள். உறக்கம் கயல்விழிகளைத் தழுவவில்லை. அவள் வீட்டில் அவளுக்கு மாடியில் தனியறை. கல்லூரி மாணவியாயிற்றே! எழுந்து, அறையையொட்டியுள்ள பால்கனிக்கு வந்தாள். குளிர்ந்த காற்று கேசத்தை வருடிற்று. அப்பா ஏன் இப்படிப் பிடிவாதமா யிருக்கிறாரென்று தெரியவில்லை. அம்மா கைகளைப் பிசைந்துகொண்டு நின்றாள். ஏதாவது பிணக்கு வந்தால் நாவல் எழுதப் போய்விடுவாள். புரோக்கர் வழக்கம்போல், பையனைப் பற்றியும், அவன் குடும்பத்தைப் பற்றியும் பெரிய பட்டியல் போட்டுக் கொடுத்து விட்டுப் போய்விட்டார், மளிகைக் கடை லிஸ்ட் மாதிரி!
“என்னப்பா அவசரம்.. ஒரு டிகிரி வாங்கிக்கறேனே…”
அக்கீசியாவின் கெஞ்சலான பார்வை.
“ஏற்கனவே எனக்கு மூணு பிளாக் இருக்கு… டாக்டர் சதாசிவம் சொன்னதை நீயுந்தானே கேட்டுட்டிருந்தே” அப்பாவின் ஆவேசமான பார்வை.
“என்ன வனிதா.. நீ எப்பப் பார்த்தாலும் கதை எழுத்திட்டுதான் இருப்பியா.. நம்ம பொண்ணு இப்ப மேஜர்… ஆகவேண்டியதை நீ அப்பப்ப அவ புத்திக்குள்ளே ஏத்தியிருக்க வேண்டாமா..”
மீண்டும் அப்பாவின் முழக்கம் – அம்மாவை நோக்கி.
“நாங்க ரெண்டு பேரும் உக்காந்து பேசிகிட்டுதாங்க இருக்கோம்… ஆனா, அவ முரண்டு பிடிக்கற மாதிரி தெரிது”
“நல்லா வாட்ச் பண்ணிக்க… இந்தக் காலத்திலே காலேஜ் பொண்ணுகளை நம்ப முடியாது.. நம்ப முத்துராமன் கதை தெரியுமில்லே… அவன் பொண்ணு எவனோ ஒரு ஆகாவழி பின்னாலே ஓடிப்போய்ட்டா! நம்ம பொண்ணுக்கும் ஏதாச்சும் லவ் மேட்டர் வந்து தொலைக்கப் போகுது”
“அதெல்லாம் இருக்காதுங்க… அப்படி ஏதாச்சும் இருந்துச்சுன்னா முதல்லே
என்கிட்டேதா சொல்லுவா… ஏதோ, பசங்க கிட்ட அப்படிஇப்படின்னு காஃப் லவ் ங்கறாங்களே… அதுமாதிரி..”
“கன்னுக்குட்டிக் காதலோ, தடிமாட்டுக் காதலோ… இத பாரு வனிதா,,, அதெல்லாம் உன்னோட நாவலோட நிறுத்திக்க… காலேஜ் படிப்பு முடிக்கறதுக்குள்ளே நல்ல வரன் வந்தா முடிச்சறவேண்டியதுதான்… அதுதான் புரோக்கர்கிட்டச் சொல்லியிருக்கேன் ..”
வனிதா ஊமையாகிப் போனாள்.
“புரோக்கர் சலிச்சுக்குறான்… இது நாலாவது ப்ரபோஸல்!”
“அவன் கெட்டான்! அவனுக்கென்ன… இது இல்லேன்னா அது… கமிஷன்தானே”
“அப்படியில்லே வனிதா… நாள் கடத்தினோம்னா, அவனுக பொண்ணைப் பத்தி எதையாவது தூத்திவிடுவானுக… புரோக்கர் பசங்களைப்பத்திதான் நல்லாத் தெரியுமே”
“அதுக்காக எதையும் விசாரிக்காம, அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரச் சொல்றீங்களா ப்ரொஃபைல் நம்ப பொண்ணுக்குப் பிடிக்கவேண்டாங்களா”
“சரி… இதெ நீயும் பாரு… அப்புறமா உன்னோட ஒப்பீனியனச் சொல்லு.. அக்கிகிட்ட பேசிட்டுச் சொல்லு”
“ஏங்க… நீங்க என்ன நினைக்கறீங்க?”
“நான் பரவாயில்லைன்னுதான் நினைக்கறேன்.. பிசினெஸ் குடும்பம்.. பையன் எம்.பி.ஏ… ஃபோட்டோவிலே பரவாயில்லே.. ஒரு சிஸ்டர்… அவ கான்பூர்லே ஃபாஷன் டெக்னாலஜி படிக்கறா போலிருக்கு.. சொந்த வீடிருக்கு.. கணபதிலே ரெண்டு அபார்ட்மெண்ட் கட்டி வாடகைக்கு விட்டிருக்காங்களாம்.. ஒண்டிப்புதூரிலே ரெண்டு சைட்.. இனியென்ன வேணும்..”
வனிதா புன்னகைத்தாள்.
“நம்ப பொண்ணுதாங்க முடிவு பண்ணனும்… பையனை நேரிலே பார்த்துட்டு..”
அக்கீசியா தன் அறைக் கதவைப் பட்டென்று அடைத்தாள்.
அவள் உதிர்த்த வெப்பக்காற்று பால்கனியில் சிதறி தெறித்தது. மனசு கூட
துணுக்கு துணுக்காய்… எதிர்புறமிருந்த பால்கனியில் ஒலித்த அந்தப் பாடல். இரம்மியமாய்…
‘அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்..’
அவளுக்கு அந்தப் பாடல் பிடித்திருந்தது.
அந்தப் பறவையைப் போல்……?
அதற்கென்று ஒரு மனசு இருக்கிறது. யாரும் கட்டுப்படுத்த முடியாது.
தன்விருப்பம்போல் முடிவு எடுக்கிறது. இன்றைக்கு இதுதான் உன் வழி.. இந்தப் பாதையில்தான் உன் பயணத்தைத் தொடரவேண்டும்… அதற்கு ஆணை பிறப்பிக்க இந்த லோகத்தில் எந்த அரசன் இருக்கிறான்?
அதுமாதிரி வாழ முடியாதா? ஏன் முடியாது?
அந்தப் பட்சியின் சுதந்திரம்தான் இப்பொழுது நம் கையிலிருக்கிறதே!
யாரிடமாவது மனம்விட்டுப் பேசவேண்டும்… அதற்குப் பொருத்தமான ஆள் யார்?
அவன்தான்…சின்னு!
சின்னு பையா! நீ வேண்டுமானால் அம்மாவின் ரசிகனாக இருக்கலாம்.. இருந்துவிட்டுப் போ!
ஆனால், நான் உன் ரசிகைடா… அதைப் புரிஞ்சுக்க முதல்லே!
– தொடரும்…
– 2023
![]() |
சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க... |