இப்படியும் சிலபேர்
 கதையாசிரியர்: புலோலியூர் செ.கந்தசாமி
 கதைத்தொகுப்பு: 
                                    குடும்பம் 
 கதைப்பதிவு: July 2, 2025
 பார்வையிட்டோர்: 935  
                                    (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“தம்பி நான் இனி அதிக காலம் நின்று பிடிப்பன் என்ற நம்பிக்கை துளிகூட இல்லை. எனக்கு அந்திம காலம் நெருங்கிவிட்டது.”
“அப்பா ஏன் இப்ப தேவையில்லாம அலட்டிக் கொண்டிருக் கிறிங்கள். பேசாம படுத்துத் தூங்குங்கோ”
“இல்ல மோன! நான் சாவுக்கு அஞ்சயில்ல. ஆனால் நான் உங்களையெல்லாம் அந்தரத்திலே விட்டு விட்டுப் போகிறேனோ என்றுதான்
“நீங்கள் அதிகம் கதைக்க இருமும், இளைக்கும் சும்மா இருங்கோ!”
“இல்லை தம்பி என்னவோ இன்றைக்கு எல்லாவற்றையும் உன்னோடு சொல்லி என்ர மனப் பாரத்தை இறக்க வேணும் போல ஒரு அவா! என்ர மூச்சு அடங்க முன்பு என்ர ஈறல் எல்லாம் கொட்டித் தீர்க்க வேணும் போல துடிப்பாய் இருக்கு!”
“அந்தக் காலத்தில் நானும் உன்னைப் போல வாட்ட சாட்டமான ஆண்தான். ஆறடிக்கு ஒரு அங்குலம் குறைவு. ஆளும் சிவலை, நல்ல உத்தியோகம், கை நிறைய சம்பளம். ஒரு பொறுப்பும் இல்லை, பின்னை கேட்க வேணுமே! என்னை மாப்பிளையாக எடுக்க ஊரில கடும் போட்டி. எல்லாரும் தங்கள் தங்கள் மகள்மாருக்கு கல்யாணம் பேசிக்கொண்டு மல்லுக் கட்டிக் கொண்டு நிற்க ஒரு கியாதியும். கெப்பரும் எழும்பியிட்டுது. என்னை அறியாமலேயே அகம்பாவம் கொள்ள வைச்சதை நான் அப்ப உணர்ந்தேனில்லை. கல்யாணம் பேசி வருகிற பெண்களை எல்லாம் அவள் கறுப்பி, இவள் கட்டை, அவள் நெட்டை, இவள், குட்டை என்று சொட்டை சொல்லிக் கொண்டு திரிந்தேன். ஒரு சுமாரான பெண் அகப்பட்டால் கூட அவர்கள் நினைத்தும் பார்க்க முடியாத வகையில் சீதனமும், சீர்வரிசையும் கேட்டுத் திணறடிப்பேன். இப்படி ஒவ்வொரு காரணம் கற்பித்து ஒவ்வொன்றையும் தட்டிக் கழித்து வந்தேன். இந்த விளையாட்டிலேயே என்னைக் குஷிப்படுத்தி ஊரில் எனக்கொரு இமேச் சை உருவாக்கி உலாவிக் கொண்டிருந்தேன். இதற்கு வேறு காரணமும் இருக்கத்தான் செய்தது. அப்பொழுது எனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த சாரதாவை நான் விரும்பியிருந்தேன். ஆனால், அதற்குத் தடையாக சில காரணங்களும் முளைத்தன”.
“உனது அப்பாச்சி, அதுதான் எனது அம்மா, படு பிடிவாதமாக இருந்தார். நீ ஊரிலை உன்ர ஆசை போல சீதனம் வாங்கி ஆமான பொடிச்சியைப் பார்த்துக் கட்டு. அதை விட்டுட்டு காதல் கீதல் எண்டு கண்ட ஊதாரியை மருமகளாகக் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தீரோ! தெரியும்தானே ஆத்தையின்ர குணம். என்னைப் பேந்து ஊயிரோடு காணமாட்டாய் கேட்டியோ! புற்றளைக் கிணற்றுக்குள்ளை தான் என்ர சவம் கிடக்கும் சொல்லிப் போட்டன்.” என்று சந்நதம் ஆடிக்கொண்டு நின்றது மனுசி”.
“அப்பர் ஒரு சேமிப்பும் வையாமல் எங்களை அனாதரவா விட்டுட்டு செத்துப் போக உரல் இடித்தும், பனை ஓலைப் பெட்டி பாய் இழைத்துச் சம்பாதித்து எங்களைப் படிப்பித்து ஆளாக்கின வைராக்கியம் கொண்ட பிறவி. சொன்னதைச் செயலிலும் காட்டி விடும். அப்பிடி ஒரு நெஞ்சழுத்தக்காரி. அப்போதைய நிலையிலை அவ கீறின கோட்டைத் தாண்ட முடியல”.
“அத்தோடு என்ர காதலைக் கை கழுவி விட்டிட்டன். ஆனால், அவள் சாரதா கட்டினால் என்னைத்தான் கட்டுவேன் என்று சபதம் செய்தவள் இன்றுவரை திருமணம் ஆகாமலேயே இருக்கிறாள் என்று சமீபத்தில்தான் அறிந்து, அதிர்ந்து போனேன். என்னை மனமாரக் காதலித்தவளுக்கு நான் செய்த துரோகத்தை எண்ணி இன்றைக்கும் குமைகிறன். இனி என்ன செய்ய!”
“அப்பொழுதுதான், அத்தான்காரன் ஒழுங்குபண்ணிக்கொண்டு வந்த சம்பந்தத்திற்கு நானும் ‘ஓம்’ பட்டிட்டன். பொம்பிளை-ஆள் ஒன்றும் சொப்பன சுந்தரி என்றில்லாவிட்டாலும் அசிங்கம் என்றில்லை. சுமார்தான்! நான் கேட்டபடியே கல்வீடு, காணி, நகை நட்டு என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள். பெயர் கூட வள்ளிநாயகி என்றிருந்ததை நாயும் வேண்டாம் கிளியும் வேண்டாம் என்று நக்கல் அடித்துவிட்டு, பெயரை வசந்தி என்று சட்டப்படி மாற்றிய பின் தான் கல்யாணத்திற்கே சம்மதித்தேன்”.
“கடமைக்காக நடந்தேறிய கல்யாணத்தில் எனக்குத் துளி கூட விருப்பமில்லை.. என்றாலும் வேண்டா வெறுப்பாகத்தான் காலம் நகர்ந்தது. வேண்டாப் பெண்டாட்டி தானே! கைபட்டாலும் குற்றம்! கால்பட்டாலும் குற்றம்! என்ற போக்கில் வீட்டிலே பெற்றோருக்கு செல்லமகளாக வளர்ந்திருந்தாளே ஒழிய வெளிநடப்பு, விவேகம், இங்கிதம், ஒன்றும் தெரியாது. வெகுளி! நாகரிகம் கொஞ்சமும் அறியாத கர்நாடகம்!”
“திருமணம் முடிந்து, கொழும்புக்குப் போன நான் ஆரம்பத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கொழும்பில் இருந்து லீவில் வந்து அதிக நாட்கள் வீட்டில் தங்காது திரும்பிவிடுவேன். எப்படியோ, தம்பி, தங்கச்சி மூவரும் பிறந்தீர்கள். உங்களைப் பராமரிப்பதிலேயே தன் நேரத்தையும் மனதையும் செலவிட்டாள் உங்கள் அம்மா. போகப் போக எங்கள் இருவருக்கும் இடையில் இடைவெளி மேலும் கூடிக்கொண்டே போயிற்று. அவளை ஒரு கோயில் குளமென்றோ. சினிமா, கூத்தென்றோ எதற்கும் அழைத்துப் போனது கிடையாது. அவளும் என்னைக் கேட்டதும் இல்லை. நான் செய்ததும் இல்லை. நான் அவளுடன் இணையாக எங்கும் செல்வதைத் தவிர்த்தே வந்தேன். அவள் ஒரு கிணற்றுத் தவளையாக வீடே கதியென்று இருந்து காலத்தைக் கடத்திவிட்டாள்”.
“கல்யாணப் பேச்சின் போது உங்கள் அம்மம்மா கொடுத்த சீர் வரிசையில் திருப்திப்பட்டிருந்த நான் காலம் செல்லச் செல்ல அவளின் பெயரில் உள்ள காணி, பூமி, காசிலும் கண் வைக்க முற்பட்டேன். வந்ததே வினை!”
“உங்களுக்குத் தரவேண்டிய சீதனமெல்லாம் தந்துதானே விட்டனான். இனிப்பின்னால் இருக்கிற ஆண்பிள்ளைகள் இரண்டையும் நான் என்ன கிணற்றுக்குள் தள்ளி விடவா சொல்லுறியள். அதுகளுக்கு இனி ஒருவழி கோல வேண்டாமே! இருக்கிற மிச்ச மீதியையும் உங்களுக்குத் தந்திட்டு நான் கடலிலப் போய் விழவே! இனி ஒரு வெள்ளைச் சல்லி கூடத் தர முடியாது.” என்று கெம்பி எழும்பியிட்டா உங்கள் அம்மம்மா. எனக்கும் இருந்த கொழுப்பினால் “நீ தந்த வீட்டிலே ஆம்பிளைப் பிள்ளைகளோட அம்பாளிச்சுக் கொண்டிரு” என்று உரப்பிச்சுவிட்டு உங்கள் அம்மாவையும் கூட்டிக்கொண்டு வந்திட்டன்.
“எனக்குச் சொந்தமான காணிதான் இப்போ நாங்கள் இருக்கிற வளவு ஒரு அறையும், நீளவளப் பக்கமாக ஒரு குதிரை மால் ஒன்று போட்டு கிடுகு கொண்டு வேய்ந்தோம். ஒருபக்க வளையில் இருந்து ஒரு ஒத்தாப்பு இறக்கி பக்கமெல்லாம் பனைமட்டை வரிந்து ஒரு அடுப்படி உண்டாக்கினோம். பெரிய அறையை விட மற்றெல்லா நிலத்துக்கும் மண் அடித்து, சாணம் மெழுகினோம். அன்று செய்த அமைப்பு இன்றுவரை அப்படித்தானே இருக்கு”.
“சொந்தமான சீதன வீட்டை விட்டு விட்டு வந்து இந்தக் குச்சு வீட்டுக்குள்ளை ‘சில்’ எடுக்க எனக்குத் தலையெழுத்தோ!” என்று உங்கள் அம்மா தலை தலையாக அடித்தா. இந்தக் குடிசை வீட்டில் அன்று இருண்ட உங்கள் அம்மாவின்ர முகாரவித்தம் இதுவரையில் மலரவில்லை. அத்துடன் அம்மாவுடன் சங்கார்த்தமே இல்லாமல் போச்சு.
“இந்த வீட்டில் அம்மாவுக்கு ஒரு நிம்மதியில்லாமல் போச்சு. உங்கள் மாமியும் அம்மாவும் எப்பொழுதும் நாய்கடி பூனை கடிதான்”.
நானும் மாமியின்ர சொல்லைக் கேட்டு அம்மாவை அடக்கி வைச்சேன். “அக்காவின்ர தாளத்திற்குத்தான் இவர் ஆட்டம் போடுகிறார்” என்று மாமி மேல் விரோதம் பாராட்டத் தொடங்கிவிட்டா. மாமியும் இந்த உறவை வேண்டாமென்று வேறு வீட்டுக்குப் போய்விட்டார்.
“அதுவரை தடதடத்துக் கொண்டு போன வாழ்க்கை ‘பென்சன்’ எடுத்து வந்து வீட்டில் நிலையாக இருக்கத் தொடங்க தடம் புரள ஆரம்பித்தது. வீட்டில் எப்பொழுதும் சண்டை சச்சரவு தான். கோயில், குளம், திருவிழா என்றாலும் உங்களை நான்தான் அழைத்துச் செல்வேன். உங்கள் அம்மா என்னுடன் சேர்ந்தும் இல்ல, நான் நிர்ப்பந்தித்ததும் கிடையாது. ஊருக்குப் பேருக்கு குடும்பம் நடத்தினோமே தவிர இதில் உப்பில்லை, சப்பில்லை”.
“அம்மாவின்ர ஆக்கினை தாங்காமல் எனக்கு ஆறுதல் தேடி மாமி வீட்டிற்குப் போய்விட்டேன். அதாவது, இந்த வளவில் அண்டை அயல் குழந்தைகளைக் கூட்டி வைத்து ரியூசன்’ சொல்லிக் கொடுத்தேன். இதை இங்கேதான் செய்தேன். ஊர் சனசமூக நிலையத்தில் செயலாளராக இருந்தேன். பாடசாலை பழைய மாணவர் சங்கத்தில் நான் தலைவர். இப்படி ஊர் தொளபாரம் எல்லாம் குத்தகை எடுத்துச் செய்து கொண்டு வந்த நான் கூடிய நேரம் மாமி வீட்டில் கழித்தேன். “நான் அவிச்சு வைக்க விழுங்க மட்டும் வரவேணுமே! அக்கா வீட்டிலேயே அடுகிடையாகக் கிடக்கிறது.தானே!” என்று உன்ர அம்மா எகத்தாளமாகப் பேசிப் போட்டா.
“அதன் பிறகு கொஞ்ச நாள் அக்காவுக்கும் சொல்லாமல் கடைச் சாப்பாட்டோட காலம் போக்கினேன். எத்தினை நாளைக்குத் தாங்கும்? உனக்குத் தெரியாதே! ஏற்கனவே இரண்டு தரம் ‘ஹாட் அற்ராக்’ வந்திட்டுது. இனியும் தாங்காது என்றெண்ணி இங்கேயே, மாமி வீட்டிலேயே தங்கிவிட்டேன். நீ இடைக்கிடை வந்து என்னைப் பார்க்கிறதுதான் ஒரு மன நிறைவு. ஆனால், அம்மாவும் தம்பி தங்கையும் என்னை எட்டிப் பார்க்கிறதே இல்லை”.
“நான் ஓய்வு நேரத்தில் என்றாலும் உங்கள் அம்மாவுக்கு ஆதரவாக இருக்கலாம். என் அகம்பாவம் விடவில்லை. எனக்குச் சுய விளம்பரம் தேடி. ஊர்த் தொளபாரம் எல்லாம் குத்தகைக்கு எடுத்து காலம் போக்கத் தெரிந்த எனக்கு வீட்டு விருத்தியிலோ பிள்ளைகளாகிய உங்கள் படிப்பிலோ முன்னேற்றத்திலோ அக்கறை காட்டத் தெரிந்திருக்கவில்லை”.
“அம்மாவை என்ன ஒரு சாதாரண பெண்ணாகக்கூட அக்கறை காண்பிக்கவில்லை. நான், என்ர ஆணவம், மலிவான விளம்பரம் தேடல் என்று என் சீவியத்தையே மண்ணாக்கிப் போட்டேன். கடைசியிலேயே பிள்ளைகளாகிய உங்களை நட்டாற்றிலே தத்தளிக்க விட்டுவிட்டுப் போகிறேன். நான் சாரதாவுக்கு ஒரு நல்ல காதலனாகவோ உனது அம்மாவுக்கு ஒரு நல்ல கணவனாகவோ இருக்க இல்லை. உங்கள் மூவருக்கும் ஒரு பொறுப்புள்ள அப்பாவாகவோ நடக்கவில்லை”.
தொண்டை கரகரக்க ஹீனமாக அனுங்குகிறார் இரு கண்ணோரம் நீர் அரும்பு கட்டுகிறது. நீண்ட நெட்டுயிர்ப்பு!
“அப்பா அதிகம் மனதை அலட்டாமல் இருங்கோ!” என்று இரண்டு கரண்டி நீர் பருக்குகிறான். மீண்டும் அவர் பேசுகிறார்.
“தம்பி மனோகரன்! இனி நான் அதிக நாள் இருப்பேன் என்று நம்பவில்லை. என்னை எங்கள் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போ. என்ர உயிர் பிரிய முன்பு அம்மா தங்கச்சியவையைப் பார்க்க வேணும். அம்மாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். என்று சோட்டையாக இருக்கு. செய்வியா?” என்றபடி இருமுகிறார்.
மாமிக்காரியின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஒரு முச்சக்கர வண்டியை வாடகைக்கு எடுத்து அவரை அழைத்துக்கொண்டு மனோகரன் செல்கிறான். அன்று அவரின் நிலைமை கவலைக்கிடமாகவே இருந்ததை அவனால் அவதானிக்க முடிந்தது. அடிக்கடி நினைவு தப்புவதும், திரும்புவதுமாக இருந்தது. வாயைத் திறப்பதும் ஏதோ சொல்ல உன்னுவதும் பின் கண் அயர்வதுமாய்..
மனோகரனுக்குப் பயம் தொற்றிக் கொண்டது. பயந்தது போலவே அவர்கள் வீட்டைப் போய் சேரு முன்பே அவரின் ஆவி வழியில் பிரிந்து போனது.
“உனது கண்ணில் விழிக்கமாட்டேன்” என்று சொன்னது போலவே, மனைவியைக் காணுமுன்பே அவர் போய்விட்டார்.
கணவனைச் சடலமாகக் கண்டதும் கலங்கிப் போனாள் வசந்தி. அவள் சோகமே உருவாக இருந்தாளே தவிர ஒருதுளி கண்ணீர் விடவில்லை. அவள்தான் வாழ்நாள் பூராவும் கண்ணீர் விட்டுத் தீர்த்து விட்டாளே! கல்லுப்போல் விறைத்தபடி இருந்தாள்.
தினகரனுக்கும் அப்பா மீது அடங்காத வெறுப்பு இருப்பினும் காட்டிக் கொள்ளாமல் மேலும் நடக்க வேண்டிய கருமங்களை மனோகரனுடன் சேர்ந்து செய்தான். பாவம் சித்திரா! அப்பாவின் சடலம் மீது விழுந்து அலறிக் கொண்டிருந்தாள்.
சமூகசேவகர் செல்வரத்தினம் என்றால் சும்மாவா? ஊரே கூடி விட்டது.
“பாராட்டு விழா நடந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. மனிதனைக்கொண்டு போட்டுது! ஆர் வைத்த கண்ணூறோ!” என்று சிலரும்
“என்ன இருந்தாலும் சீமானுக்கு குடும்ப வாழ்வு சரியாக அமையவில்லை. பார்க்கவில்லையோ கல்லுப் போல உட்கார்ந்திருக்கிறாள் அவர் பெண்சாதிக்காரி, ஒரு கண்ணீர்த்துளி கூட விழவில்லை” என்று வேறு சிலரும்
“எல்லாம் அவரவர் செய்த வினைப் பயன்” என சூசகமாகச் இன்னும் வேறு சிலரும்
“ஐயோ! இனி இந்தப் பிள்ளைகளின்ர கதி!” என்று அனுதாபம் தெரிவிப்போருமாக…
கிரிகைகள் தொடங்கிவிட்டன. அப்பொழுதுதான் அக்காக்காரி தலையில் இரு கைகளையும் வைத்தபடி “ஐயோ! தம்பி! என்னை விட்டுட்டு போட்டியே! நான் ஆரை நம்பி இருப்பேன்.” என ஒப்பாரி வைத்தபடி நுளைந்தாள்.
“கிரிகைகள் நடக்குது கொஞ்சம் சத்தம் வைக்காமல் இருங்கோ!” என்று அவளை அடக்கினர் சில பெண்கள். மனோகரனும், தினகரனும் சேர்ந்து பொற்சுண்ணம் இடித்தனர். கிரியைகள் நடந்து கொண்டிருந்தது. கடைசியில் புரோகிதர் மனைவியின் தாலியைக் கழற்றிப் போடும்படி சொன்னார்.
வசந்தி இதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையெல்லாம் சேர்த்து அலறியபடி தாலியைக் கழற்றி சவத்தின் மார்பில் போட்டதுதான் தாமதம்…. தாலியைக் கழற்றிப் போடும் வரை காத்திருந்தவள் போல அக்காக்காரி எழுந்து வந்து தாலியை ‘இறாஞ்சி’ எடுத்து தனது மடிக்குள் கட்டிவிட்டாள்.
“இதென்ன வேலையடி! சவத்திலை போட்ட நகைகள் சுடலையிலே போய்த்தானே கழற்றி எடுக்கிறது. இதென்ன சீலம்பாய் வேலை!” பெண்களில் சிலர் சப்தமிட்டனர்.
“ஆ! அது கல்யாண சமயத்திலை, தாலி செய்ய நான் தான் காசு கொடுத்தனான். நீங்கள் உங்கள். உங்கள் வேலைகளைப் பாருங்கோ!” பெண்டுகள் எல்லோரும் வாயடைத்துப் போய் நின்றனர். காரியமெல்லாம் முடித்து சவம் பன்னாங்கில் வைக்கப்பட்டு பாடைக்குள் வைத்துச் தூக்கிச் செல்லப்பட்டது. பறை மேளம் உச்ச ஸ்தாயியில் ஒலித்தது. செல்வரத்தினம் அவர்கள் இறுதிப் பயணத்தைத் தொடங்கிவிட்டார்.
– வடமராட்சி வடக்கு கலாசாரப் பேரவை வெளியீடான நிதர்சனம் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட சிறுகதை.
– தரிசனம், 2012.
– என்னுயிர் நீ தானே! (சிறுகதைத் தொகுதி), முதலாம் பதிப்பு: மார்கழி 2018, கவிதா நிலையம், தும்பளை.