சிவா மனசு மாறியது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2025
பார்வையிட்டோர்: 4,225 
 
 

அலுவலகத்தில் இருந்து திரும்பிய தன் புருஷன் சரவணனிடம் அரக்க பரக்க ஓடி வந்து அந்தச் செய்தியைச் சொன்னாள் கலா.

“என்னங்க! உங்க நண்பர் சிவா இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களப் பார்க்க வராறாம்…ஞாபக மறதியா உங்க மொபைலை வீட்டுலேயே வச்சிட்டுப் போயிட்டீங்க. அதில்தான் பேசினார்!”

ஏற்கனவே களைத்துப் போயிருந்த சரவணனுக்கு இப்போது மனைவி சொன்ன சேதி அச்சத்தைக் கொடுத்தது. சிவா எதற்கு தன்னைப் பார்க்க வருகிறான் என்பது தெரியும். ஆறு மாதம் முன்னால் இப்போது இருக்கும் வீட்டு அட்வான்ஸூக்காக அவனிடம் ரூபாய் ஐம்பதாயிரம் கடன் வாங்கியிருந்தான் சரவணன். வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஐந்து மாதத்தில் திருப்பித் தருவதாக பேச்சு ! இப்போது மேற்கொண்டு ஒரு மாதம் ஓடிவிட்டது. கடன் கொடுத்த பணத்தை கேட்கத்தான் வருகிறான் என்பது புரிய வேர்த்துக் கொட்டிவிட்டது.

மாதா மாதம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கடனை அடைத்து விடலாம் என்று நினைத்தும் முடியவில்லை. ஜாண் ஏறினால் முழம் சருக்கும் நிலைமை !

திரு திருவென்று முழித்துக் கொண்டிருக்கும் புருஷனைப் பார்க்கப் பாவமாயிருந்தது கலாவிற்கு.

“சரி, நீங்க நம்ம அறைக்குள் போய் இருந்துக்குங்க. நான் ஏதாவது சாக்குச் சொல்லி அவரை அனுப்பி விடறேன்.“ என கூறி சரவணனை அறைக்குள் அனுப்பி கதவைச் சாத்தினாள் கலா. ஐந்தாம் வகுப்பில் படிக்கும் 10 வயதான அவர்களின் மகள் பவித்ரா விளையாடி முடித்து வீட்டுக்குள் நுழைந்தபோது இந்தக் காட்சியைக் கண்டாள். பிறகு பின் கட்டுக்குச் சென்று கை கால், முகம் கழுவிக்கொண்டு ஹாலில் உள்ள சோஃபாவில் வந்து அமர்ந்தாள். ஏதோ நடக்கப் போகிறது என்பது மட்டும் அவளின் உள் மனம் கூறியது. லேசாக உடல் நடுக்கமும் ஏற்பட்டது.

சில நிமிடங்கள் கழிந்தன. “ ஹலோ சரவணன்…” என்ற படி உள்ளே நுழைந்தான் சிவா.

வலுவில் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அடுக்களைக்குள் இருந்து வெளிப்பட்ட கலா, “வாங்க.” இரு கரம் கூப்பியவாறு வரவேற்றாள்.

“எங்கம்மா உம் புருஷன் ? கடன் வாங்கி வட்டியும் முதலுமாக போன மாசமே கொடுத்து செட்டில் பண்ணியிருக்கணும். மேற்கொண்டு ஒரு மாசம் போயாச்சு. இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரியாம நகரமாட்டேன்.” கறாராகச் சொல்லிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான் சிவா. வேர்த்துப் போனாள் கலா. நடப்பதை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.

“வந்து…” மென்று முழுங்கிய கலா, ”அவர் வீட்டுல இல்லீங்களே.. வந்தா நீங்க வந்துட்டுப் போனதா சொல்றேன்.”

“எங்கப் போயிருக்கான்? எப்படியும் வீட்டுக்கு வந்துதானே ஆகணும்!“ வந்த வேலைக்கு ஓரு முடிவு தெரியாமல் நகர மாட்டேன் என்பது போல் இருந்தது சிவாவின் அதிரடியான பேச்சு!

‘சரிதான் இன்னிக்கு வகையாக மாட்டிக் கொண்டோம். தன் புருஷனைப் பார்க்காமல் போக மாட்டான் போல் தெரியறது.’ மனதுக்குள் தவித்தாள் கலா. ‘கடவுளே! இந்த ஆள் சீக்கிரம் கிளம்பிச் செல்லவேண்டுமே’ என வேண்டவும் செய்தாள்.

“ஏம்மா வெளியூர் எங்கன்னா போயிருக்கானா உன்னோட புருஷன்?”

மலங்க மலங்க விழித்தவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

இருவரையும் மாறி மாறி பார்த்தாள் பவி.பிறகு வாய் திறந்தாள்.

“அய்யோ அம்மா ! உனக்கு ஒண்ணுமேத் தெரியல்ல. கொஞ்ச நேரம் முன்னால நீதானே அப்பாவை அறைக்குள் போய் கதவைச் சாத்திக்கச் சொன்னே! இப்போ வீட்டுல இல்லேங்குறே. ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசறே?” பேசிய மகளை சுட்டெரிப்பது போல் பார்த்தாள் கலா. விவரம் தெரியாமல் இப்படி போட்டுக் கொடுக்கிறாளே என்ற சினம் கலந்த வேதனையும் மனதில் எழுந்தது. அறைக்குள் இருந்த சரவணன் காதில் மகளின் பேச்சு விழ வெல வெலத்துப் போனான். நேரம் தெரியாமல் இப்படி காலை வாருகிறாளே என நொந்து கொள்ளவும் செய்தான்.

சட்டென சுறு சுறுப்பானான் சிவா.

“ஓகோ! கதை அப்படி போகுதா?” என ஏளனமாகச் சிரித்தான். “கூப்பிடுமா உம் புருஷனை.” என்றான் சற்று உரத்தக் குரலில்.

கலா அரண்டு போனாள். கால்கள் தரையில் ஒட்டிக்கொண்டாற் போல் நகர மறுத்தன. என்ன நடக்கப் போகிறதோ என்ற பீதியில் உடம்பு வேர்வைக் குளியலில் நனைந்திருந்தது. சில நொடிகளில் சரவணனே அறைக்குள்ளிருந்து தலை கவிழ்ந்தவாறு வெளிப்பட்டான்.

“வாய்யா பெரிய மனுஷா! நீ செய்றது நல்லாயிருக்கா? வாங்கின கடனை இப்போ கொடுக்க முடியாட்டிக் கூட பரவாயில்ல. ஆனா, உன்னை வீட்டுக்குள்ளாற ஒழிச்சு வச்சிக்கிட்டு நீ வெளியே போயிருக்குறதா உம் பெண்டாட்டி சொன்னா பாரு, அது எவ்வளவு பெரிய தப்பு!”

சட்டென உடைந்து போனான் சரவணன். “என்னை மன்னிச்சுடு சிவா! உன்னை ஏமாத்தணுங்குற எண்ணம் எனக்கு துளிக்கூட கிடையாது. பணம் கொடுக்க முடியாத நிலைமையில் உன்னை நேருக்கு நேர் பார்க்கும் துணிவு எனக்கில்லை. அதனால் தான் ஒழிஞ்சுக்கிட்டேன். ஆனா எம் பொண்ணு காட்டிக் கொடுப்பான்னு நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கல்ல…” என பவித்ராவை முறைத்தபடி கூறினான்.

“உம் பொண்ணு காட்டிக் கொடுல்லப்பா. உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துக்கிட்டிருக்கு. நீங்க ரெண்டு பேரும் செஞ்சது பெரிய தவறுன்னு நிரூபிச்சிருக்கு. கடுங்கோபத்தோடு தான் இங்க வந்தேன். ஆனா உம்பொண்ணோட செயல் எங்கோபத்தை அடக்கிடிச்சு. உம்பொண்ணுக்காக இப்போ நான் பேசாம போறேன். ஆனா கூடிய சீக்கிரம் நீ கடனை செட்டில் பண்ற வழியைப் பாரு. வரேன்.” என்றவன் எழுந்தான். பவித்ராவின் அருகில் சென்றான்.

“உம்பேர் என்ன பாப்பா?” அவள் கன்னத்தை வருடியபடி கேட்டான்.

திகிலுடன் சிவாவை பார்த்தவாறு தயங்கியபடி “பவித்ரா” குரல் நடுங்க சொன்னாள் பவித்ரா.

“குட் நேம், அண்ட் குட் கேர்ள் !” எனக் கூறிவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினான் சிவா.

பெருத்த ஆயாசத்துடன் மகள் பக்கத்தில் சென்று அமர்ந்தான் சரவணன்.

தன் தந்தையை உற்று பார்த்தாள் பவி. அவன் முகம் இறுக்கம் தணிந்து இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. ஆசுவாசப்பட்டவள், “ஸாரி டாடி! அந்த அங்கிள் கிட்ட உங்களக் காட்டிக் கொடுத்திட்டேன். அதனாலதானே உங்களுக்கு பிரச்னை..” என்றாள் தேய்ந்த குரலில்.

சட்டென நெகிழ்ந்து போனான் சரவணன். “நோடா பவிக்கண்ணு! உம் மேல தப்பே யில்ல. நீ நேர்மையாக நடந்துக்கிட்டது நல்லதாப் போச்சு. அதைக் கண்டு அந்த அங்கிள் ரொம்பவும் இம்ப்ரெஸ் ஆகிட்டார். சும்மாவாச் சொன்னாங்க குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு! அதுமாதிரிதான் உன்னோட செயலும்!” பவித்ராவின் இரு கரங்களையும் பிடித்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டான் .

கணவன் எதிரில் வந்து நின்றாள் கலா.

“சரி இப்போ தப்பிச்சாச்சு. பணம் கொடுக்க என்ன வழி ?” கொக்கிப் போட்டு இழுத்தாள்.

ஆழ்ந்த பெருமூச்சொன்று விட்டான் சரவணன். “ஏற்கனவே சொஸைட்டி லோனுக்கு அப்ளை பண்ணிவிட்டேன் கலா! சீனியாரிட்டியின் படி இன்னும் ரெண்டு மாசமோ இல்ல மூணு மாசமோ ஆகும் பணம் கைக்கு கிடைக்க! அதை நான் சிவா காதில இன்னும் போடல்ல. மேட்டர் உறுதியானப்புறம் சொல்லலாம்னு இருக்கேன். ..ஆனா மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழும். நீதான் மேனேஜ் பண்ணிக்கணும்.”

“எப்படியோ பிரச்னை தீர்ந்தால் சரி!” என்று கூறிவிட்டு ‘ ரிலாக்ஸ்’டாக கலா நகர்ந்தாலும் துண்டு விழும் பட்ஜெட்டை எப்படி சமாளிப்பது என்கிற பூதாகரமான கேள்வி எழுந்து அவள் மனதை கனக்கச் செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *