புலியால் மாய்ந்த பார்ப்பனன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 703 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காட்டில் ஒரு கிழட்டுப் புலி இருந்தது. அது போதுமான பலம் இல்லாததால் உணவு தேட முடிய வில்லை. ஓர் ஏரிக்கரையில் போய் நீராடிவிட்டுக் கை யில் தருப்பைப் புல்லும் ஒரு தங்கக் காப்பும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. அப்போது வேதம் படித்த பார்ப்பனன் ஒருவன் அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்தான். அவனை அந்தப் புலி கூப்பிட்டது. 

‘அந்தணா, இதோ பார்! இந்தக் காப்பை உனக்குத் தருகிறேன். இங்கே வா!’ என்று புலி கூறியது. 

தங்கக் காப்பைக் கண்டவுடன் பார்ப்பனனுக்கு ஆசையுண்டாகி விட்டது. ஆனால், புலியின் அருகில் செல்லவும் பயமாயிருந்தது. 

‘புலியாரே, நீர் மிகவும் கொடியவராயிற்றே. மனிதர்களைக் கொன்று தின்பதே உமது தொழிலா யிற்றே, அதை விட்டுவிட்டு எப்போது தானம் செய் யக் கிளம்பினீர்!’ என்று தூரத்தில் நின்று கொண்டே பார்ப்பனன் கேட்டான். 

அதற்கு அந்தப் புலி, ‘ஏ, பார்ப்பனனே, என்னைப் பார், நானோ கிழப்புலி ஆகி விட்டேன். எனக்குப் பல்லும் இல்லை; நகமும் இல்லை, பாவம் செய்வதை விட்டுவிட்டு இப்போது தானம் செய்து புண்ணியம் தேட ஆசை கொண்டு விட்டேன். பயப் படாதே! இதோ இந்த ஏரியில் இறங்கித் தலை  முழுகிச் சுத்தமாக வந்து இந்தக் காப்பை வாங்கிக் கொண்டு போ!’ என்று கூறியது. 

நல்லதென்று பார்ப்பனன் ஏரிக்குள் இறங்கினான். ஏரி ஒரே சேறும் சகதியுமாக இருந்தது. 

சேற்றில் கால்கள் அழுந்திச் சிக்கிக் கொண்டான் பார்ப்பனன். என்ன செய்வதென்று தெரியாமல் அவன் திகைத்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட புலி, ‘ஆ! சேற்றில் சிக்கிக் கொண்டாயோ? இதோ நான் உன்னை வெளியில் எடுத்து விடு கிறேன்’ என்று சொல்லி அவன் மீது பாய்ந்தது. தன் முன்னங்காலால் அவனை அறைந்து கொன்றது. 

அவனுடைய இரத்தத்தைக் குடித்து அது பசி பாற்றிக் கொண்டது. 

முன் யோசனை பில்லாமல் கண்டவற்றில் ஆசை கொள்வது ஆபத்தையே உண்டாக்கும். 

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 2 – நட்பு உண்டாக்குதல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா.நாச்சியப்பன் நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *