
உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார்.
இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் ‘களம்’ கொடுத்ததும் ‘மணிக்குரலே’. 1961ம் ஆண்டு ‘மலையருவி’ எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும், 48 உருவகக் கதைகளையும், 55 கவிதைகளையும், நூற்றுக்கு மேற்பட்ட பல்வேறுதுறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் படைப்புகள் மணிக்குரல், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, சுதந்திரன், மாலைமதி, ஸாஹிரா போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
1999இல் இலங்கை அரசு ‘கலாபூஷணம்’ விருது வழங்கி இவரை கௌரவித்தது
எழுதிய நூல்கள்
யூ.எல்.ஆதம்பாவா இதுவரை மூன்று நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
- ‘நாங்கள் மனித இனம்’ – உருவகக் கதைத்தொகுதி (1991 நவம்பர்)
- ‘காணிக்கை – சிறுகதைத்தொகுதி’ (1997 ஜனவரி)
- ‘பகலில் ஒரு சூரியனின் அஸ்தமனம்’ – இரங்கல் கவிதைத் தொகுதி (2003)
மனந்திறந்து சில வார்த்தைகள் – காணிக்கை (சிறுகதைகள்)
நான், முப்பத்தைந்து வருடங்களாக, ஆக்க இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருகிறேன்.
இக்காலப்பகுதியில், உருவகக்கதை, சிறுகதை, கவிதை, கட்டுரை என்று இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் எனது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.
அவற்றிலே, உருவகக் கதைத் துறையிலே எனது ஆக்கங்களில் இருபத்தொரு உருவகக் கதைகளைப் பொறுக்கியெடுத்து ‘நாங்கள் மனித இனம் என்ற பெயரில், 1991 நவம்பரில், உருவகக் கதைத் தொகுதி யொன்றினை வெளிக் கொணர்ந்தேன்.
தற்போது, சிறுகதைத் துறையிலே, எனது படைப்பு களில் பன்னிரண்டு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ‘காணிக்கை’ என்ற இத்தொகுதியினை வெளிக்கொணர் கிறேன். இதில், இடம் பெற்றுள்ள சிறுகதைகளில், ‘ஒரு விடிவெள்ளி உதயமாகிறது’, ‘தந்தையை விஞ்சிய தனயன்’ ஆகிய இரு சிறுகதைகளைத் தவிர, ஏனையவை, தினகரன் வாரமஞ்சரி’, ‘தினகரன்’, ‘சிந்தாமணி’, ‘சூடாமணி’ ஆகிய இதழ்களிலே பிரசுரமானவை.
தத்தம் இதழ்களிலே, எனது சிறுகதைகளுக்கு களம் அமைத்துத் தந்து, ஆர்வமூட்டிய முன்னாள் ‘தினகரன்’ பிரதம ஆசிரியர்,திரு.ஆர்.சிவகுருநாதன், உதவியாசிரியர், திரு.எம்.ஆர். சுப்பிரமணியம், தற்போதைய ‘தினகரன்’ பிரதம ஆசிரியர் திரு.எஸ்.அருளானந்தம், முன்னர் வெளி வந்த ‘சிந்தாமணி’ இதழின் பிரதம ஆசிரியராகவிருந்த வரும், தற்போது வெளிவருகின்ற ‘சூடாமணி’ இதழின், பிரதம ஆசிரியராக விருப்பவருமான, திரு.எஸ்.டி.சிவநாயகம் ஆகியவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி.
விஷேடமாக, ‘தினகரன் வாரமஞ்சரி’ மூலமும், தனிப்பட்ட வகையிலும் எனக்கு ஊக்கம் தந்து நான் சிறு கதைத் துறையில், வளர்ச்சிகாண முக்கியமான ஓர் உந்து சக்தியாக விளங்கிய ‘தினகரன்’ உதவியாசிரியர், ஜனாப். ஏ.எச்.சித்தீக் காரியப்பர் அவர்களை நான் மிக்க நன்றி உணர்வோடு எண்ணிப் பார்க்கிறேன்.
எனது இத்தொகுதி, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் வெளிவருவதற்கு, வழி சமைத்த, பணியகத்தினருக்கும், குறிப்பாக, அப்பணியகத்தின், ஸ்தாபகர், கலாசார. சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர், அல்-ஹாஜ் எஸ். எச்.எம். ஜெமீல் அவர்களுக்கும், எனது இதய பூர்வமான நன்றி. இத்தொகு திக்கு வெளியீட்டுரை வழங்கியவர் என்ற வகையிலும் அவருக்கு மேலும் ஒரு நன்றி சொல்வேன்.
அத்தோடு,இக்’காணிக்கை’க்கு அணிந்துரை வழங் கிய, ஓய்வு பெற்ற அதிபர், இலக்கியவேந்தன் மருதூர்க் கொத்தன் – வி.எம். இஸ்மாயில், தகவுரை தந்த, பிரதிக் கல்விப் பணிப்பாளர், மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், அட்டைப்படத்தை அழகுற வரைந்தளித்த, வெஸ்லி உயர்தர பாடசாலை ஆசிரியர், ஓவியர் ருத்ரா, இந்நூல் வெளி வருவதில் மிகவும் தூண்டு கோலாக விளங்கிய அதிபர், ஜனாப்.ஏ.கே.எம். நியாஸ் கியவர்களுக்கும் நான், நன்றி கூறக் கடமைப்பட்டவன்.
மேலும், இந்நூலை நேர்த்தியாக அச்சிட்ட, ஸ்டார் அச்சகத்தினருக்கும், இது, சிறப்பாக வெளிவர உதவிய ஜனாப்.ஏ.எச். ஜஃபர் காரியப்பர் அவர்களுக்கும் எனது இனிப்பான நன்றி.
யூ.எல்.ஆதம்பாவா
546B, ‘ரயீஸா மன்ஸில்’
சாய்ந்தமருது- 16, இலங்கை 07
இலங்கை 07-08-1996
– காணிக்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு : ஜனவரி 1997, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் வெளியீடு, இலங்கை.
சுகப்பிரசவம் கண்ட ஒரு தாயின் நினைவுப் பெருக்கு – சாணையோடு வந்தது… (சிறுகதைத் தொகுதி)
நான், நாற்பத்தாறு வருடங்களாக படைப்பிலக்கியத் துறையில் ஈடுபட்டு வருகிறேன்.
சிறுகதை, உருவகக்கதை, கவிதை, கட்டுரை என்று இலக்கியத்தின் பல துறைகளிலும் நிறையவே எழுதியிருக்கிறேன்.
1991ஆம் ஆண்டு, ‘நாங்கள் மனித இனம்’ என்ற உரு வகக்கதைத் தொகுதியையும், 1997 இல், ‘காணிக்கை’ எனும் சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளேன்.
எனது இவ்விரு நூல்களும் இலக்கிய உலகில் எனது பெயரை மேலும் வலுப் படுத்தின.
தற்போது, ‘சாணையோடு வந்தது…’ என்ற இச்சிறுகதைத் தொகுதியை வெளிக் கொணர்ந்திருக்கிறேன்.
இது, எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியாகும்.
இதிலே, ஒன்பது கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. அனைத்துக் கதைகளுமே, எமது சமூகத்தில் நடந்த சம்பவங்களைக் கருவாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கின்றன.
‘சாணையோடு வந்தது…’ என்ற இச்சிறுகதைத் தொகுதி வெளியீட்டில் எனக்கு பக்க பலமாக அமைந்த, சாய்ந்தமருதுவில் இயங்கும் முகாமைத்துவ தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் நாயகம், எனது அன்புக்குரிய மாணவன், ஜனாப்.ஏ.எம். ஜெமீல் B.Com. அவர்களை நான் மிகவும் நன்றி உணர்வோடு எண்ணிப் பார்க்கிறேன்.
1998 ஆகஸ்ட் முதல், எனது சிறுகதைகளுக்கு ‘தினகரன் வார மஞ்சரி’யில் களம் அமைத்துத் தந்து எனது எழுத்துத்துறை வளர்ச்சியில் கணிசமான பங்களிப்புச் செய்து வருகின்ற ‘தினகரன்’ உதவி ஆசிரியர், திரு. அருள் சத்தியநாதன் அவர்களையும் என்னால் மறக்க முடியாது. அவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
நான், படைப்பிலக்கிய உலகில் முளைவிட்ட காலம் முதல், அத்துறையில் ஓர் ஸ்திரமான நிலையை எட்டும் வரை யுள்ள எனது வளர்ச்சியில் நிறைவான பங்களிப்புச் செய்த ‘தினகரன்’ உதவி ஆசிரியர், ஜனாப். ஏ. எச்.சித்தீக் காரியப்பர் அவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் மிக்க நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
அடுத்து, இச்சிறுகதைத் தொகுதிக்கு அணிந்துரை வழங்கிய, கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் சி. மௌனகுரு, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் றமீஸ் அப்துல்லா ஆகியவர்களுக்கும்,
சிறப்புரை வழங்கிய, ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், அழகும் அர்த்தமும் நிரம்பிய அட்டைப் படத்தை வரைந்துதவிய ஓவியர் ருத்ரா முதலியவர் களுக்கும் நான் நன்றி பகரக் கடமைப்பட்டவன்.
மேலும், இந்நூல் மிகச் சிறப்பாக அமைய வேண்டு மென்பதற்காக அச்சுப்பணிகளுக்கு அப்பாலும் சென்று செயற்பட்ட சாய்ந்தமருது, றோயல் ஓப்செற் அச்சக நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜனாப்.ஏ.எச். ஜௌபர் காரியப்பர் அவர்களையும், இத்தொகு தியில் இடம் பெற்ற ஒன்பது கதைகளையும் கணனியில் நேர்த்தி யாகப் பதிவு செய்த செல்வி. ஏ. சிபானா சிரீன் அவர்களையும் மிக்க நன்றி உணர்வோடு நினைத்துப் பார்க்கிறேன்.
இந்நூல் தொடர்பாக, எனக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்கிய அனார்-இஸ்ஸத் ரீஹானா, அல்-ஹாஜ். அலியார் முஸம்மில், மருதூர் ஏ.ஹஸன், செல்வி.ஏ.சில்மியத்துல் சிறீன் ஆகியவர்களுக்கும் நான் நன்றி சொல்வேன்.
நன்றி.
யூ.எல்.ஆதம்பாவா
680A/02, அஹமது வீதி,
சாய்ந்தமருது -14.
2007-07-15
– சாணையோடு வந்தது… (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2007, முகாமைத்துவ தொழில்நுட்பக் கல்லூரி, இலங்கை.
நெஞ்சத்தைத் தொட்டு வந்த சில வார்த்தைகள் – நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்)
நான் கவிதை மூலமே எழுத்துத் துறைக்குள் பிரவேசம் செய்தேன். 1961 ஆம் ஆண்டு, பண்டாரவளையிலிருந்து வெளிவந்த மணிக்குரல்’ என்ற சஞ்சிகையில், ‘மலை அருவி’ என்ற எனது முதலாவது கவிதை பிரசுரமானது. அன்று தொடங்கி இன்று வரை. அவ்வப்போது மன உந்துதல் ஏற்படும் வேளைகளில், எழுதி வருகிறேன்.
ஆரம்பத்தில் சில ஆண்டுகள், கவிதைத் துறையில் மட்டுமே, அதுவும், சற்றுக் கூடிய அளவிலே, செயற்பட்டு வந்த எனது பேனா, பின்னர், ஏனைய, இலக்கியத்துறை களான சிறுகதை, உருவகக் கதை, கட்டுரை ஆகியவற்றிலே, மிகுதியாகவும், சுவடு பதித்து வந்தது. என்றாலும், இக் காலப் பகுதிக்குள் உருவகக் கதைத் துறையே, என்னை மிகவும் ஈர்த்துக் கொண்டது. அதனால் என்னிடமிருந்து, மற்றைய துறைகளைவிட, உருவகக் கதைத்துறையிலேயே அதிக அளவு படைப்புக்கள். பிரசவமாகின. இவற்றிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட இருபத்தொரு உருவகக் கதை களை உள்ளடக்கியதுதான் இத்தொகுதி.
இதில், இடம்பெற்றுள்ள உருவகக் கதைகளிலே, பதினேழு கதைகளை ‘தினகரன் வாரமஞ்சரி’, ‘தினகரன்’ ஆகிய இதழ்களும், மூன்று கதைகளை, வீரகேசரி வார வெளியீடு’, ‘சிந்தாமணி’, ‘வளர்மதி’ ஆகிய பத்திரிகைகளும் பிரசுரம் செய்திருந்தன. மற்றைய ஒரு கதை இத் தொகுதியிலேயே இடம் பெறுகிறது.
எனக்குக் களம் தந்து மேலும் நான் உருவகக் கதை கள், எழுதுவதற்கு, ஊக்கம் ஊட்டிய, பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, ‘தினகரன்’ பிரதம ஆசிரியர் திரு.ஆர். சிவகுரு நாதன் அவர்களையம், அப்பத்திரிகையின் உதவியாசிரியர்களாகவிருந்த திரு. எம். ஆர். சுப்ரமணியம், ஜனாப். ஏ. எச். சித்தீக் காரியப்பர், ஆகியவர்களையும் என்னால் என்றுமே மறக்க முடியாது.
பத்திரிகை உலகுக்கு வெளியே இருக்கின்ற ஜனாப். எம். எஸ். பீர் முகம்மதுத்தம்பி, அவர்களும் நான் உரு வகக் கதைத் துறையிலே, முன்னேறிச் செல்ல மிகவும் ஊக்கமளித்த ஒருவராவார். அவருக்கும் எனது இதய பூர்வமான நன்றிகள்.
மற்றும், இத்தொகுதியை வெளியிடுவதற்குப் பேரு தவி புரிந்த கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரையும், விசேடமாக, அதன் தலைவர், அதிபர் ஜனாப். ஏ. எம். ஹுசைன் அவர்களையும் என்னால் மறக்க முடியாது. அத்தோடு, சங்கச் செயலாளர், ஜனாப். ஐ. ஹசன் அலி அவர்களுக்கும் நான் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளேன்.
மேலும், எனது உருவகக் கதைத் தொகுதிக்கு, ‘அறிமுகம்’ தந்த கலாநிதி எம்.ஏ. நுஃமான் அவர் களையும், ‘நுகர்வு’ என்ற தலைப்பிலே, கருத்துரை வழங்கிய பழம் பெரும் எழுத்தாளர் அ. ஸ. அப்துஸ்ஸமது அவர் களையும், பின் அட்டையில் என்னைப் பிரதிபலிக்கச் செய்த புலவர் மருதூர். ஏ. மஜீத் அவர்களையும், முன் அட்டை யைத் தனது தனித்துவமான ஓவியத்தினால் அழகுபடுத்திய ஜனாப். மு. மு. மு. பாசீல் அவர்களையும் நான் மிகவும் நன்றி உணர்வோடு எண்ணிப்பார்க்கிறேன்.
எனது உருவகக் கதைகள், ஒரு தொகுதியாக, அச்சிலே, வெளிவர வேண்டுமென்பதில், அதிக கரிசனை காட்டி வந்த, ஜனாப். ஏ. பீர் முகம்மது, ஜனாப். ஏ. கே. எம். நியாஸ் ஆகியவர்களும், இத்தொகுதிக்கு, அழகுற அச்ச மைப்புச் செய்த சாய்ந்தமருது நெஷனல் அச்சக இயக்கு நர்களில் ஒருவரான ஜனாப். ஏ.எச். ஜௌபர் காரியப்பர் அவர்களும் எனது நன்றிக்குரியவர்கள்.
யூ.எல்.ஆதம்பாவா
ஸாஹிறாக் கல்லூரி, கல்முனை, இலங்கை.
01.10, 1991.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.