பெண்
(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மழைத் தூறல்கள் இங்கொன்றும் அங்கொன்று மாகப் பொட்டுப் பொட்டாக விழுந்து கொண்டிருந்தன. இரவு முழுவதும் பொழிந்துதள்ளிய பேய் மழையை அவை இன்னும் ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தன. தெரு வோரமாக உள்ள தமது அறையில் உட்கார்ந்து ‘வெண் சுருட்டு’ ப் புகைத்துக் கொண்டிருந்த எழுத்தாளர் ஏகாம்பரநாதன் முன், ஒரு கட்டுக் கடிதங்களைப் போட்டுவிட்டு வெளியே நடந்தான் தபாற்காரன். உடம்பு முழுவதும் போர்த்துக் கொண்டுகிடந்த போர் வையை மெல்ல நீவிவிட்டு கடிதங்களில் கண்ணோட்ட மிட்டார் எழுத்தாளர். பத்திரிகைகள், சில கடிதங்கள், பத்திரிகை ஆசிரியப் ‘பெரியார்களால்’ தமது திற மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் எனத் திருப்பி விடப்பட்ட சில கதைப் பிரதிகள் என்பன அக் கடிதக் கும்பலில் சங்கமமாகிக் கிடந்தன.

எழுதுவதுதான் அவர் தொழில்! பொழுது போக் கிற்காகவோ, முற்போக்கு, பிற்போக்கு இலக்கியம் பண்ணுவதற்காகவோ அவர் எழுதுவதில்லை. எழுது வது நின்றுவிட்டால் அவருக்கு வாழ்வில்லை. எனவே எழுதுகிறார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதுகிறார். எழுத்துலகில் அவர் பெயர் நன்கு அறிமுகமாகி விட்ட பொழுதிலும் அதற்கேற்ற மதிப்பு அவருக்கில்லை. பாவம், எந்தப் பத்திரிகையாசிரியரையும், பிரபல எழுத்தாள அதிதியையும் ‘பாதபூசை’ பண்ணிப் பிரபல மடையத் தெரியவில்லை அவருக்கு, அதனால் இன்றைக் குக்கூட அவர் கதைகளிற் சில பத்திரிகை ஆசிரியர் களால் திருப்பியனுப்பப்படத்தான் செய்கின்றன. தரத் தில் குறைந்த கதைகள் அளவுக்கு மீறிய விளம்பரத் துடன் முக்கிய பத்திரிகைகளில் பிரசுரமாகும்போது தரமுள்ள அவர் கதைகள் திரும்பி வந்தால் மனம் வருந்தத்தானே செய்யும். அது தமிழ் வாசகர்களுடைய துரதிட்டம்! ஏகாம்பர நாதனுக்கு இதெல்லாம் பழக் கப்பட்ட சங்கதிதான்! எனவே, ‘அரசினரின்’ மேற் பார்வையில் பட்டணப் பிரவேசம் பண்ணிவந்த கதைப் பிரதிகளை ஒதுக்கிவிட்டுக் கடிதங்களைப் படிக்கத் தொடங்கினார். அந்த ஒரு கடிதம் மாத்திரம் – அதி லுள்ள வசனங்கள் மாத்திரம், அவர் மனதில் குத்திட்டு நின்றன. ஏன் என்பது அப்பொழுது அவருக்கே தெரியவில்லை!
எழுத்தாளர் ஏகாம்பர நாதனுடைய எழுத்துக்க ளைச் சிலர் மதிக்கிறார்கள், சிலர் மிதிக்கிறார்கள் என்பது உண்மைதான். இந்தப் புகழ்ச்சி, இகழ்ச்சிகள் அவர் மனதை ஒருபோதுமே திணறவைத்ததில்லை. ஆனால் அந்தப் பெண் எழுதிய கடிதம் என்னவோ அவர் மன தில் ‘கிசு, கிசு’மூட்டி, உற்சாகமதுஊற்றி அந்தரத்தில் பறக்க அல்லவா வைக்கிறது. திரும்பவும் அந்தக் கடிதத்தைப் படித்தார்!
“அன்பார்ந்த…ஆசிரியருக்கு,
உங்கள் படைப்புக்கள் அனைத்தையும் தவறாது படிப்பவள் நான். “மல்லிகை” மாத இதழில் தாங்கள் அண்மையில் எழுதியுள்ள ‘மனிதன்’ சிறு கதை என்னைக் கவர்ந்து விட்டது. இத்தகைய பண் புள்ள எழுத்தாளரான தங்களை நேரிற்கண்டு என் பாராட்டுக்களைத் தெரிவிக்கவும், பேசவும் மிக்க ஆவலுடனிருக்கின்றேன்.
-“சுலோ எம். ஏ”
இரசிகர்களுக்கு பதில் எழுவது என்றாலே ‘எவரெத்துக்கு’ ஏறுவதாக நினைத்துக்கொண்டு காலம் கடத் தும் ஏகாம்பரநாதன் கையோடு கையாய் அன்றைக்கே அவரது அபிமான இரசிகை சுலோ எம். ஏக்கு கடிதம் எழுதினார். “உங்கள் இதயங் கவர்ந்த எழுத்துக்களை நான் எழுதவில்லை. உங்கள் போன்றோர் தரும் உற்சாகமே அதை எழுதுகிறது. ஏழை எழுத்தாளனான என்னைக் கண்டு பேச எண்ணியமைக்கு நன்றி. எப்பொழுதும் எனது ‘அலுவலக’த்தில் தங்களை (வீடும் அது தான் என்பதை எழுதவில்லை) வரவேற்கக் காத்திருக் கிறேன்!” தபாலில் கடிதத்தைச் சேர்த்ததும், நிம்மதி யான பெருமூச்சொன்றுடன் தமது எழுத்து வேலைகளில் ஈடுபட்டார் ஏகாம்பரநாதன்!
எழுத்தாளர் ஏகாம்பரநாதன் என்னவோ அனுபவ சாலி, முதிர்ந்தவர் என்று எண்ணினால் அது அவரை நாம் சரியாக அறியவில்லை என்றாகிவிடும். வயது முப் பதிற்கு மேலாகியும் ‘பிரமச்சரிய’ விரதங்காத்து வரு பவர் அவர். எங்கோ ஒரு ஒதுக்குப்புற ஊரிலே பிறந்து வளர்ந்து இன்று, வாழும் ஊருக்கு வந்து சேர்ந்தவர். அவர் சுபாவமே அலாதியானது! ஊரிலே அவரை ஒரு ‘விநோதப் பிறவி’ யாகவே கருதினார்கள். அதனால் அவர் தமது பிறந்த ஊர்ப்பக்கமே போவது அரிது! பாவம், நன்றாகப் படித்து ஆசிரியனாக வேலைபார்த்துச் சுளை. சுளையாகப் பணம் உழைக்கும் நிலையிலுள்ள அவர் எழுதித்தான் பிழைப்பேன் என்றால் அவரை யார் மதிக்கப் போகிறார்கள்? எழுதுகிறவர் எல்லாம் இலட்சாதிபதியாக வாழவேண்டாம். முடையின்றி வாழ இந்த நாடு என்ன அமெரிக்காவா? இங்கிலாந்தா? ஏகாம்பரநாதன் இதையெல்லாம் சட்டை செய்யவில்லை. அவரும் அவர் எழுத்துமாகப் புறப்பட்டுவிட்டார். எப் படியோ எழுத்துலகில் அறிமுகமாகியும் விட்டார்.
தெருவில் ‘ஊதுகுழல்’ சத்தம் கேட்டது. அதில் என்ன புதுமை தினசரி நிகழ்வதுதானே! ஏகாம்பர நாதன் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். யாரோ அறைக் கதவைத் தட்டுவதுபோல, வெறும் பிரேமையா …..? தெரு ஓரமாக அறை எடுத்திருந் தால் இப்படித்தானிருக்கும். தெருவால் போகிற ஆடு மாடுகள் எல்லாம் அவர் அறைக்கதவைத் தட்டிப் பார்த்துச் செல்கின்றன.
“திருவாளர் ஏகாம்பரநாதன்..!”
“ஆம்……”
எழுத்தாளர் துள்ளிப் பாய்ந்துசென்று அறைக் கத வைத் திறந்தார்.
‘நீங்கள்……….?’
“செல்வி சுலோ எம். ஏ, உங்கள் இரசிகை” ‘முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியோ என்ற ஐயம் எழுத்தாளருக்கு! அவரென்ன கவிஞரா? கவிஞராக முடியவில்லையே என்றதுக்கம் ஏகாம்பரநாதனுக்கு அப்பொழுதுதான் ஏற்பட்டது. ‘சுலோ’ என்ற வார்த்தையில் இந்த அகிலத்து அழகெல்லாம் அடக்கம். ஆச்சரியம் அவர் வாயை அடைத்தது. மகிழ்ச்சி அவர் மனதை நிறைத்தது. அவள் அவர் இரசிகை அல்லவா?
“ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள்? சுலோ கேட் டாள்.
“ஒன்றுமில்லை சுலோ, வா! இப்படி இருந்து கொண்டே பேசலாம்.”
எழுத்தாளரது ஏகாசமான அந்த நாற்காலியில் சுலோ அமர்ந்தாள். எழுத்தாளர் மேசையோடு நின்றார். அவளது அழகும் பேச்சும் அவருக்குச் ‘சொர்க்கானுப வமாக இருந்தது. அவரது குழந்தைப் போக்குச் சுலோவுக்கு வியப்பாக இருந்தது! என்ன மனிதரிவர் என்று அவள் தனக்குள் அதிசயித்தாள்.
அவர்கள் என்னவெல்லாமோ பேசினார்கள். அவ ளுக்கு அவரை மிகவும் பிடித்தது. அவரும் அவளை விரும்பினார். நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்த அவர்கள் ஒருவாறு பேச்சை முடித்தார்கள்.
‘போய் வருகிறேன்’ எனச் சுலோ விடைபெற்ற போது ஏகாம்பரநாதன் கண்கள் கலங்கின. அவள் முகமும் என்னவோ விகாரப்பட்டுத் தானிருந்தது. ஒரு ‘புதுவித’ உறவு. அவர்கள் மத்தியில் முகிழ்த்திருந்தது என்பதற்கு அவை சான்றாமோ?
இப்பொழுதெல்லாம் சுலோவும் ஏகாம்பரநாத னுஞ் சந்தித்துப் பேசுவது சகசமாகிவிட்டது. சுலோ பக்கத்து ஊர்க்கல்லூரி ஒன்றில் ஆசிரியையாக இருந்தாள். படித்த பெண்ணல்லவா? அதிலும் எம். ஏ. பட்டதாரியான அவள் கார் ஓட்டிச் செல்வதற்கும் நினைத்தபோது நினைத்த இடங்களுக்குச் செல்வதற்கும் கட்டுப்பாடு ஏது………? அவள் மனத்திலே எழுத்தாளர் ஏகாம்பரநாதன் தனியிடம் பெற்று விளங்கினார். பெண்மனம் ஒரு புதிர் என்பது உண்மையோ, பொய்யோ! எப்படியானாலும் ஏகாம்பரநாதன்மீது அவளுக்கிருந்த கவர்ச்சி நாளடைவில் வலுத்து வந்ததது என்பதுண்மைதான். காதலைப்பற்றி அவள் படித் திருக்கிறாள் முன்னமே என்றாலும், இப்பொழுதுதான் அதன் மகத்தான சக்தியை அவளால் உணரமுடிகிறது. சுலோ மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறினாள். ஏகாம்பரநாதனிடம் எப்படித் தன் காதலைக் குறிப்பிடுவது என்று அவளுக்குத் தெரியவில்லை. அப்படி அவள் குறிப்பிட்டாலும் அந்த விநோதமனிதர் என்ன சொல்கிறாரோ என்ற அச்சம் ஒருபுறம்! நேரிற் கண்டு பேசினாற்றானே பயம். கடிதமாக எழுதினால்………! என்னவோ ஒரு துணிவு அவள் மனதில்.
கடிதத்தை எழுதி அனுப்பிவிட்டு மறு நாள் மாலை அவரைக் காணச் செல்லவேண்டுமென்று இருந்தாள். அவள் அவரைக் காணச் சென்றபோது அவர் முன்னமே போலத்தான், எவ்வித மாற்றமுமில்லாமல் இருந்தார். சிரித்துச் சிரித்துப் பேசினார். அவள் மாத்திரம் பயந்து, பயந்து பேசினாள். அவர் ஒன்றும் கண்டிப்பாக இல்லை என்று கண்டபின்னர் ‘அந்தக் கடிதம்’ என்று தொடங்கினாள். ‘பத்திரமாகக் கிடைத்தது’ என்றார் ஏகாம்பரநாதன்.!
“கிண்டல் செய்கிறீர்களா…?”
சுலோவின் குரலிலே வேதனை தொனித்தது. ஏகாம்பரநாதன் சிரித்தார்.
சுலோ அழுதாள்!
“குழந்தை மாதிரி அழுகிறாயே சுலோ! வெட்கமில்லையா…”
அவர் கரங்கள் அவள் கண்ணீரைத் துடைத்தன. அந்த மெல்லிய கரங்களை இறுகப்பற்றியபடியே சுலோ கேட்டாள்…!
“என்னை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா?”
ஏகாம்பரநாதன் மீண்டுஞ் சிரித்தார். சுலோவுக்கு பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. ‘ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கத்தினாள்.
“சுலோ, அவசரப்படாதே. அசாதாரண அழகினைப் பெற்றுள்ள நீ அற்ப உணர்ச்சிகளுக்காளாகி அந்த அமர அழகை அழித்துவிடாதே. நீ பெண்ணல்ல. அழகின் தெய்வம். உனது பரிசுத்தமான அழகை மனிதக் கரங்களால் கறைப்படுத்திக் கொள்ளாதே. நான் உன்னைக் காதலிக்கிறேன். ஆம் உன்னையல்ல, உன் அழகை, அதனை எனக்கு விளையாட்டுப் பொருளாக்க அல்ல, எனது மனதார்ந்த, பூசனைக்குரிய புனிதப்பொருளாக, தெய்வீக தீபமாகக் காதலிக்கிறேன் சுலோ!”
அவர் கண்களிலிருந்து வடிந்த நீர் கன்னங்களில் முத்துக்களாகப் பளபளத்தது. அவர் மெலிந்த உடல் மெல்ல நடுங்கியது.
சுலோ விம்மினாள்! “என்ன சொல்கிறீர்கள்? நானும் பெண்தானே, எனக்கு இதயமில்லையா, உணர்ச்சிகளில்லையா? உயிரில்லையா? சிற்பி வடித்த கற்சிலையா நான்? ஏன் என்னை இப்படிக் கொல்லாமற் கொல்கிறீர்கள்?” வெறி பிடித்தவள்போலக் கத்தினாள்.
அந்த விநோத மனிதர் மௌனமாக இருந்தார். சுலோவின் வேதனைக்குரல் அவர் இதயத்தைத் தொட வில்லையா? அல்லது வேண்டும் என்றுதான் மௌனஞ் சாதிக்கிறாரா?
விம்மல் ஒலி அடங்கியபாடாக இல்லை. தீர்க்கமான குரலில் ஏகாம்பரநாதன் பேசினார்.
“சுலோ, என்னுடைய முடிவு இதுதான். இந்த முடிவினை நான் உயிருள்ளவரை மீறமாட்டேன். கடவுளின் அழகுக் கரங்களை என் புன்மை மனதால், உடலால் கறைப்படுத்துவதைக் காட்டிலும் நாம் என்றுமே சந்திக்க முடியாத தூரத்தில் வாழ்வது நன்று!”
காரின் கதவுகள் படாரென்று சாத்தப்படும் ஒலி ஏகாம்பரநாதனின் செவிப்பறைகளை மோதி மடிந்தது. நெஞ்சப் பொருமலை எதிரொலிப்பதுபோல் தார் மெழுகிய வீதியில் கார் ஒன்று பேயிரைச்சல் கிளப்பியபடியே வேகமாகப் பறந்தது. எங்கோ? ஏகாம்பரநாதன் ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடுவதில், தன்னறை முழுவதும் நிரம்பி வழிந்த அச்சுப்பதித்த கடதாசிக் கும்பலில் மூழ்கினார்.
– வாழ்வு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).
![]() |
நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: October 3, 2024
பார்வையிட்டோர்: 2,810
