விழிப்பு
(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்
நள்ளிரவின் மரண அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்த அந்த வார்த்தைகள் திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளின் செவிப்பறைகளைத் தாக்கி மடிந் தன. மாதொருபாகன் விழிப்பு நிலையடைந்தான். கருப்பக் கிருகத்தின் இருள் மண்டிய மூலையில் ஒளிக் கதிர் உமிழப் போராடிக் கொண்டிருக்கும் திரு விளக்கின் தேய்ந்த பிரகாசத்தில் ஆதிதேவன் சோம்பல் முறித்துக் கொண்டான். உமை அவன் பரந்த மார்பில் இன்னும் அறிதுயில் கொள்ளுகின்றாள். யுகயுகாந்தரமான காலப் பெருவெளியில் கோடானு கோடியில் ஒரு கணம், அந்த மனிதப் புழுக்களைப் பற்றிச் சுடலை யாண்டி எண்ணுகிறானா? “நிச்சயமாக மன்னிப்பார்!” அந்த வார்த்தைகள் அமராவின் தொண்டைக் குழிக்குள் நின்று சுழன்றன.

விடிய ஆறு மணிக்குக் கோயிலில் முகூர்த்தம்! அந்த நினைவுச் சுழலில் என்னென்னவோ கனவுகள் கண்டு கொண்டிருந்த மனிதப் பிறவிகள், தூங்காமல், தூங்கிக்கொண்டிருந்த அந்த இல்லம் இப்பொழுது விழித்துக் கொண்டது. ஒரே ஆரவாரம், வைகறைப் போதின் நிசப்தம் கரைந்தது. மேளமும், நாதசுரமும் ஒலித்தன. ஆட்கள் அங்குமிங்குமாகப் போய்க்கொண் டிருந்தனர். ஊர்வலத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தியாகி விட்டன. முகூர்த்தவேளை கிட்டிவிட்டது. சுகந்த நறுமணம் எங்கும் பரவியது. பன்னீரும், சந்தனமும், குங்குமமும் கலவையிட்டன. பட்டாடை கள் ‘சரசர’த்தன! குதூகல உரையாடல்கள் கிளம்பின. ஊர்வலம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது, கோவிலை நோக்கி!
மணிகள் ஒலிக்கின்றன. குருக்கள் வேத மந்திரங் களை முணுமுணுக்கிறார். அகிலும், நெய்யும், அறுகும் தர்ப்பையும் சேர்ந்து கனன்ற புகையெழுந்து, பரந்து, மண்டலமிட்டு, வளைந்து, வளைந்து மேலே செல்கிறது. விவாகச் சடங்குகளின் உச்சக்கட்டம். கொட்டு மேளம் முழங்கியது. மாப்பிள்ளை தாலியைக் கையில் வாங்கி மணமகளின் கழுத்தில் சூட்டுகிறான். அவன் கரத்தில் கொதிநீரின் வெம்மை படர்கிறது. என்ன அது? அவள் முகத்தைப் பார்க்கிறான். உயிரற்ற, உணர்ச்சி யற்ற பொம்மையாக, அவள் ஏனிப்படி மிரள மிரள விழிக்கிறாள்? அவனுள்ளத்தில் ஆயிரமாயிரம் எண்ணங் கள் வியப்பு, வேதனை, விரக்தி இத்தியாதி உணர்ச்சிச் சேர்க்கைகளின் கலவைகளாக உருவெடுக்கின்றன!
அதற்குள், கலியாண ஊர்வலம் ஆரம்பித்து விடு கிறது. சுடலையாண்டி மெல்லச் சிரித்தான். ‘ஏனிப் படிச் சிரிக்கிறீர்கள்!’ என அதட்டிக் கேட்பவள்போல உமை அவன் கழுத்தைச் சுற்றித் தன் கரங்களைப் படரவிடுகிறாள், வெகுளித் தனத்துடன். ஊர்வலம் மேலே, மேலே செல்கிறது.
வாழ்க்கைத் தோட்டத்தில் காலச் சருகுகள் உதிர் கின்றன. அவனும் அவளும் வாழ்கின்றார்கள்! ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்ட நினைப்பில், எங்கே நிறைவு மலரப்போகிறது? அவனுக்கு அவளைத் தெரி கிறது. ஆனால் வாய்திறந்து…கேட்க முடியவில்லையோ! பாவம்; அவன் நேரமில்லாதவன். அரசியல், இலக்கி யம், சமூக சேவையென்று ஓய்வு ஒழிச்சலில்லாமல் ஓடித்திரிகிற அவனுக்கு இதையெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்கும் வாய்ப்பெங்கே? சில சமயங்களில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் அவன் வீட் டுக்கே வராமலிருந்து விடுவதுண்டு. அந்த வேளைகளி லெல்லாம் அவள் குமுறுவாள். மனச்சாட்சி அவளைத் துளைத்தெடுத்து விடும்! “பாவம் ஞானி, எவ்வளவு நல்லவராக இருக்கிறார்! போயும் இவருக்குத் துரோகஞ் செய்தேனே!” என்று வாய்விட்டுப் புலம்புவாள்!
கணவனின் பாராமுகம் கடவுள் தன்னை மன்னித்து விடாததன் எதிரொலியா? இல்லையே; அவர் வீட்டி லிருந்தாற்கூட அவருடன் தன்னாற் சரியான முறை யில் பழகமுடியவில்லையே. உலகம் புகழும் கவிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என்னும் பெருமைக்குரிய அவரை மணந்து கொண்டதன் பயன்தான். என்ன? என்னால் அணுவளவு இன்பம் கூட அவரடைவதில் லையே! அவர் என்ன துறவியா? தத்துவஞானியா? எண்ணங்கள் அவளைக் குடைந்தெடுத்துக்கொன்று கொண்டிருந்தன.
“அமரா……!”
அந்தச் சொல் நாராசமாக ஒலித்தது அவள் செவி களில்! அவன் அவள் முன் நின்றான். அதே பழைய வார்த்தைகள், பழைய கதைகள்…! அவளுக்குப் பிர பஞ்சமே வெறுத்துவிட்ட நிலை. மனச்சாட்சியைக் கொன்று கொண்டு எத்தனை நாளைக்கு வாழ்வது?
“அமரா உன்னை மறந்து என்னால் வாழமுடியாது அமரா, வாழமுடியாது!”
‘அதற்காக…!” கிரகண காலத்துப் பைத்தியம் ஒன்று பேசுவது போலவிருந்தது அவள் பேச்சு.
“அமரா மறந்து விட்ட அந்தக் காதல் விரகத்தை, உன்மணநாளின் முதல்யாமத்தில் நீ வளர்த்துக் கொள்ளவில்லையா? அந்தக் கண நேர வாழ்வில் உலக இன்பமனைத்தும் சுவைத்துவிட்ட பெருமிதத்துடன் நாம் கண்மூடிக் களிக்கவில்லையா? எதற்காக அமரா இப்பொழுது என்னை வெறுக்கிறாய்…?” சந்திரனின் குரலில் மோகாவேசம் குமுறியது!
“சந்திரன், என்னை வாழவிடுங்கள்! வாழ்வா…? எனக்கு இனி இல்லையே! இளமை மயக்கத்தின் உணர் வுப் போதையில் அழியாக் களங்கத்தை அறுவடை செய்து கொண்ட இந்தப்பாவிக்கு இனி வாழ்வு எங்கே? சந்திரன், அந்தச் சில நிமிட நேரங்கள் மட்டும் நீங் கள் மனிதனாக மாறியிருந்தால், காமத்தால் கண்ணி ழந்த இக்கபோதியின் வாழ்வில் வளஞ் சேர்த்திருக்க லாம். ஆனால்…!” அவளால் மேலே பேசமுடியவில்லை.
அலறினாள்! அவள் உடல் நடுநடுங்கியது. தலை யிலும்மார்பிலும் கைகளாற், படார், படார் என அறைந்து கொண்டாள்.
‘அமரா’, உனது கழிவிரக்கத்திற்காக நான் இரங்கு கிறேன். ஆனால், அதனால் நீ வாழ்ந்துவிட முடியுமா? காலமெல்லாம் கண்ணீர் சிந்திக் கருகுதற்காகவா நாம் காதலை வளர்த்தோம்? அமரா, வீணாக வருந்தாதே! வாழ்வைச் சுவைப்போம்! ஒழுக்கம், உண்மை, கற்பு, கடமை, எல்லாம் நமது இன்பவாழ்வைத் தடுக்கும் தடைக்கற்கள். அவை வெறும் கானல் நீர்த்தோற்றம் காதல் ஒன்றே நித்தியமானது!” சந்திரன், சந்திரனா கவே விளங்கினான். அவள் நெஞ்சம் பொருமியது.
“காதல்! அது வெறும் பிரமை! வாழத்துணிபவரை வாழாமற்றடுக்கும் வன் கூற்றம். சந்திரன் உங் கள் வஞ்சப் பேச்சில் மயங்கி என் கற்பைப் பலி கொடுத்தேன்; அறிவிலி, இனித்தவறமாட்டேன். என் அறிவு, உள்ளம் இப்பொழுது விழித்துக்கொண்டது. காதலிக்கத்தெரிந்த உங்களுக்கு என்னை மணமுடிக்க வலியில்லை, துணிவில்லை! பழியையும், தவறையும் பழைய சந்ததி மேற் சுமத்திவிட்டு நாம் செய்தபச்சை விபச்சாரத்திற்குப் பரிகாரமுண்டோ? உலகை நாம் ஏமாற்றிக் கொள்ளலாம். உண்மையை, மனச்சான்றை ஏமாற்றமுடியுமா?
ஞானி! என் கணவரைப் பாருங்கள்! எவ்வளவு நல்லவர். உங்களைப் பார்க்கிலும் எவ்விதத்திலும் குறைந்தவரல்லர். மிகச்சிறந்தவர். அழகில், அறிவில், ஆற்றலில்……! ஆனால் ஆண்டவனே, களங்கப்பட்ட உடலும் உள்ளமும் கொண்ட எனக்கு அவரைக் கண வர் என்று கூறுகிற அளவுக்குத் தகுதில்லையே!” அமரா தேம்பினாள்.
”அமரா, மிகக் கிழவியாகி விட்டாய்! வேதாந்தம் பேசுகிறாய். பல்கலைக் கழகத்திலே நாம் படித்த நூல் களிலே இவையுமுண்டென்று எனக்குத் தெரியவில் லையே!” அவன் என்ன பரிகசிக்கிறானா…? அவள் வாய் குழறினாள்……!? நாம் படித்த மாப்பசானும், எமிலி சோலாவும் எழுதிக் காட்டுகிற பாத்திரங்களைவிட நாம் மிகமோசம்! வைதீகம் மிக்க பழைய சந்ததி புதுயுகத்தின் நல்வாழ்வுக்குத் தடைக்கல்லென்று கூறிய நாம், அந்தக்கண நேர வாழ்வுக்குக் கொடுத்த மதிப் போடு அந்தப் பழைய சந்ததியினரையே மிக நல்லவர்களாக்கி விட்டோம்! பெண் மிகப் பலவீனமானவள் என்பது முழு உண்மைதான். அந்தப் பலவீனத்திற்கு நானாளாகி விட்டபோது நீங்கள் மிகமிகச் சின்ன மனிதராகி விட்டீர்கள். என் நல்வாழ்வையே குழி தோண்டிப் புதைத்து விட்டீர்கள்.
சந்திரனாற் பொறுக்க முடியவில்லை. “தமிழ்ப்பெண் களே இப்படித்தான். கலியாணமானதும் மெத்தமாறி விடுகிறார்கள்!” அவன் முணுமுணுத்தான்.
“அதெல்லாம் சரிவராது அமரா, என்றும் என்னிட மிருந்து உன்னைப் பிரிக்கமுடியாது!” வெறி கொண்ட வனைப்போல அமராவை அணைக்கத் தாவினான். “சந் திரன்” அச்சத்தால் அவள் அலறினாள். அவன் பிடிக் குள் அகப்படாமலிருக்க அறையின் மூலைக்கு, மூலை ஓடினாள். அவன் தன்னைப் பலாத்காரமாக அணைத்த போது திமிறினாள், நெட்டித் தள்ளினாள், எப்படியோ அவன் அறைக்கு வெளியேபோய் விழுந்தான். எழுந்து உழறிக்கொண்டு போனான்.
‘பிசாசு!’ அவள் தன்னைத்தானே வெறுத்தாள். வேதப் புத்தகத்திலிருந்து சாத்தான் உவமை கூறுவது போலவா இவ்வளவு நாளும் இவன் பேசினான்…? எவ்வளவு பயங்கரமானவன்? அவன் மட்டுமா பயங் கரமானவன்? நான்…? எத்தனைமுறை தொல்லை தந்து விட்டான்…! ஞானி என்றேனும் இந்த நீச நாடகத்தை நேரடியாகக் கண்டுவிட்டால்…?
அவளிதயம் எரிமலையாய்க் கனன்று, புகைந்து, கருகிக் கொண்டிருந்தது!
இப்பொழுது உமை சிரித்தாள்! நீலகண்டன் எதற் காகச் சிரிக்கிறாய் என்று அவளை அதட்டினான், குறும் புப்பார்வையுடன்.
ஆன்மா தனக்குத்தானே எதிராகப் போராடத் தொடங்கிவிட்டால் உலக ஆசாபாசமனைத்தும் அழிந்து விடும். மனச்சாட்சியின் அதீதத் தாக்குதலுக்குட்பட்ட மனிதப்பிறவி யாரும் அமைதியடைய முடியாது. மூன்று வருடங்களாக மனச்சாட்சியைக் கொன்று கொண்டு வாழ முயற்சித்த அமராவுக்கும் அதே நிலை தான் ஏற்பட்டது. அவளுள்ளத்தில் அமைதியில்லை, வாழ்வில் இன்பமில்லை, யாரையுமே அவளுக்குக் காணப் பிடிக்கவில்லை, மனம் உந்தித் தள்ளிக்கொண்டிருந்தது. “போ, போ, எங்காவது போய்த்தொலை! உனக்கென்ன வாழ்வு? சாவைத்தவிர வேறு எதுவுமே சாந்தியளிக் காது…போ, போ…!”
அமராவினால் முடியவில்லை. பதைபதைத்தாள். “சாகவா…? சாகத்தான் வேண்டுமா? சமாதானம் கிடைக்குமென்றாற் செத்தொழிந்தாற்றான் என்ன?” தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்று கிறித்தவ வேதநூலில் வாசித்த பகுதி அவள் நினைவில் மிதந்தது. சந்தேக மில்லை; அவள் ஒரு பாவிதானே!
இரவு பத்து மணிக்கு மேலாகி விட்டிருந்தது. ஞானியின் கார் அசுரவேகத்தில் வீட்டுவாசலில் வந்து நின்றது. எந்தக் கூட்டத்திற்குப் போய்ப் பேசிவிட்டு வருகிறானோ? வீட்டு ஞாபகமென்ற ஒன்று அவனுக் கிருப்பதே பெரிய அதிசயம். வீடு ஒரே இருள் கப்பிக் கிடந்தது. மின்விளக்குகள் இருந்த அடையாளமே தெரியவில்லை. ‘அமரா, அமரா!” அவளை அழைத்து அலுத்துவிட்ட அவன், கார் முன் விளக்குகளை எரிய விட்டுக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான். மின்விளக்குகளை எரியச்செய்து பின்னர் காரை நிறுத்து. மிடத்துக்கு எடுத்துச் சென்றான்.
‘அவள் எங்கே?” என்ற கேள்வி அவனிதயத்தில், தானே தோன்றியது. எத்தனையோமுறை அழைத்து அலுத்துவிட்டான். வீடு முழுவதும் சல்லடை போட் டான்; காணவில்லை. பக்கத்து வீடுகள் அமைதியி லாழ்ந்துகொண்டிருந்தன. யாரிடம் விசாரிப்பது? ஒருதடவை மீண்டும் தேடுகை. வீடு, முற்றத்துப் பூஞ் சோலை. பின்வளவு, எல்லாம் தேடிக் கிணற்றடிக்கு வந்தான். எட்டி உள்ளே பார்த்தான், அங்கே அவள் கிடந்தாள்; பிணமாக, ஆ…!’ அலறியே விட்டான். அந்தக் கூச்சலுடன் ஆட்கள் வந்தனர். ஞானி உள்ள படியே விவரித்தான். கிணற்றுக்கட்டில் கைவைத்த ஒருவர் ‘கடிதம்’ ஒன்றை எடுத்துக்காட்டினார், நின்ற வர்களிடம். யாவுமுணர்ந்தவர் தம் உள்ளங்கள் விழித் தன.? பிறகென்ன சம்பிரதாயமாக நடக்கவேண்டியவை எவையோ, அவை நடந்து முடிந்தன.
“ஞானி-அப்பாவி,” என்றாள் உமை. அப்படியா? என்று கேட்டுச் சிரித்தான் திரிசூலன். அவன் முகத் தில் திரிபுரமெரி செய்த காலாக்கினி கனன்று மடிந்தது ஒரு கணம்!
– வாழ்வு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).
![]() |
நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க... |