வாழ்வதற்கு ஏற்ற ஊர் எது?





(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
புறாக் குடும்பம் ஒன்று வனத்தில் வசித்துவந்தது. தாய், தந்தை புறா தவிர, அந்தக் குடும்பத்தில் மேலும் நான்கு சிறிய புறாக்கள் இருந்தன. அவை தனித்தனியே குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சென்று, வாழ வேண்டிய பருவம் வந்துவிட்டது.
ஒருநாள் பெரிய புறாக்களிடம், “நாங்கள் தனியே சென்று வசிப்பதற்கான இடம் தேடிப் போகிறோம். எங்களை ஆசிர்வதியுங்கள்” என்றன சிறிய புறாக்கள்.
“நீங்கள் நல்ல நீர்வளம் உள்ள இடத்தைத் தேர்வு செய்து, அங்கே வசியுங்கள்” என்றது தந்தைப் புறா.

சிறிய புறாக்கள் முதல் நாள் வடக்குத் திசை நோக்கிப் பறந்து சென்றன. தந்தைப் புறாவும் அவற்றுடன் போனது. சிறிய புறாக்கள் இடத்தைத் தேர்வு செய்யட்டும் என அது அமைதியாக இருந்தது.
சிறிய புறாக்கள் நான்கும் முதல் நாள் தேடலில் ஓர் ஊரைத் தேர்வு செய்தன. அவை தந்தையிடம், “இந்த ஊரில் பெரிய குளம் இருக்குது. தண்ணீர் இருக்குது, இது நாங்க வசிப்பதற்கு ஏற்ற ஊர்தானே? என்று கேட்டன.
“குளத்தோட மேற்பரப்புல எங்கேயாவது நீர் கொப்பளிச்சு வர்ற மாதிரியான இடங்களைப் பார்த்தீங்களா?”
“நாங்க அப்படி எதுவும் கவனிக்கலையே…”
“இந்தக் குளத்துக்கு நீர் ஊற ஊற்றுகள் ஏதும் கிடையாது. இது மழையில் நிறைஞ்ச குளம், மழைப் பருவம் தப்பினால் இந்தக் குளம் வற்றிப் போகும். வேண்டாம் இந்த ஊர்” என்றது தந்தைப் புறா.
அடுத்த நாள் பறவைகள் நான்கும் தெற்குத் திசை நோக்கிப் பறந்து சென்றன. அப்போதும் அவை ஓர் ஊரை மனத்தில் வைத்துக்கொண்டன. அவை தந்தைப் புறாவிடம், “இந்த ஊரில் பெரிய கண்மாய் இருக்கு. அதுல நீர் நிறைஞ்சு இருக்கு. இது நாங்க வசிப்பதற்கு ஏற்ற ஊர்தானே?” என்று கேட்டன.
“இல்லை. இந்தக் கண்மாய்க்கு வரக்கூடிய நீர்வரத்துக் கால்வாய்கள்ல களைச் செடிகள் மண்டிக் கிடக்குறதைப் பாருங்க. பல வருஷம் ஆகி இருக்கும்னு நினைக்குறேன். அப்பப்ப நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர் வாரணும். அடுத்த கோடையில் கண்மாய்ல தண்ணி சுத்தமா வற்றிப் போயிரும். வேண்டாம் இந்த ஊர்” என்றது தந்தைப் புறா.
மறுநாள் அந்தச் சிறிய புறாக்கள் நான்கும் மேற்குத் திசையில் பறந்து சென்றன. அங்கே அவை ஒரு பெரிய ஏரி இருப்பதைக் கண்டன.
“இந்த ஏரிப் பகுதி நாங்க வசிக்குறதுக்கு ஏத்த இடமா இருக்கும்தானே?” என்று கேட்டன.
சிறிய புறாக்கள் ஏரியைச் சுற்றிப் பறந்துகொண்டிருந்தபோது, தந்தைப் புறா தண்ணீரை ருசித்துப் பார்த்துவிட்டது. ஏரியைச் சுற்றியிருந்த மரங்களையும் ஒரு நோட்டம் விட்டது.
“இது நன்னீர் ஏரி அல்ல. உவர் நீர் ஏரி. இதுல இருக்குற மீன்கள் எல்லாம் வளர்ப்பு மீன்கள். அதிக உவர் நீரால, ஏரியைச் சுத்தி இருக்குற மரங்கள் எல்லாம் பழுப்பாகி நிக்குது. இங்க வசிக்குற பறவைகளும் ஆரோக்கியமா இல்ல. வேண்டாம் இந்த ஊர்” என்றது தந்தைப் புறா.
தங்கள் கண்ணில் படாத விஷயங்கள் எப்படித் தந்தைக்கு மட்டும் தெரிகின்றன என
அந்தச் சிறிய பறவைகள் ஆச்சரியப்பட்டன. அவை தந்தையிடம், “நாம புறாக் கூட்டம். பொந்துல வசிக்குறோம். நமக்குத் தண்ணீர் தேவை குறைவுதான். நாம எதுக்காகத் தண்ணீர் வசதி தேடி இவ்வளவு அலையணும்?” என்று கேட்டன.
“நீர்வளம் நல்லா இருந்ததுனா அங்க மண்வளமும் நல்லா இருக்கும். நல்ல மண்ணில் விளைச்சலும் அதிகமா இருக்கும். அங்கே உணவுப் பஞ்சம் இருக்காது. வறுமைனால் நடக்குற கொடிய குற்றங்கள் நிகழாது. அங்க எல்லா ஜீவராசிகளும் மகிழ்ச்சியா வாழ முடியும். அதனால நீர்வளம் இருக்குற இடத்தைத் தேட வேண்டியது அவசியம்தான்” என்றது தந்தை.
மறுநாள் அந்தச் சிறிய புறாக்கள் கிழக்குத் திசை நோக்கிப் பறந்து சென்றன. அப்போது அவை ஓர் ஊரைத் தேர்வு செய்து, தந்தையிடம் கூறின.
“இந்த ஊர் நாங்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம்தானே?”
“இந்த ஊரில் மலையில இருந்து உற்பத்தி ஆகி வர்ற ஆறு இருக்கு. ஆற்றோட வண்டல் மண்வளம் இருக்கு. ஊரைச் சுத்தி பச்சைப்பசேல்னு வயல்வெளிகள் இருக்கு. அதுல இறைஞ்சு கிடக்குற தானியங்களைக் கொறிச்சுட்டு, ஆத்துல ஆனந்தமா நாம் ஒரு குளியல் போட முடியும். ஊர் நடுவுல நிறைய மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் இருக்கு. அது இந்த ஊரோட வளத்தைக் காட்டுது. இது நீங்க வசிக்குறதுக்கு ஏற்ற இடம்தான்!” என்றது தந்தை.
சிறிய புறாக்கள் தந்தையிடம் விடைபெற்றுக் கொண்டு ஊரின் நடுவே கம்பீரமாக எழுந்து நின்ற கோபுர மாடங்களில் சென்று தஞ்சமடைந்தன.
– இது ‘தி இந்து மாயா பஜாரில்’ 01.02.2023 இல் குறிஞ்சி என்ற எனது புனைப்பெயரில் வெளிவந்த கதையாகும்.
![]() |
எனது பெயர் மா.பிரபாகரன். மதுரையில் வசித்து வருகிறேன் சித்த மருத்துவத்தில் பி.எஸ்.எம்.எஸ் இளங்கலைப் பட்டம் பெற்றவன்@ அரசு மருத்துவர். கடந்த ஆறு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராகப் பணியாற்றி ஜீலை - 2024 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். பெரியவர்களுக்கான எனது படைப்புகள் தினமணிகதிரில் பல வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான எனது முதல் படைப்பு சிறுவர்மணியில் 2006 ஆம் ஆண்டு வெளியானது. எனது சிறுவர் சிறுகதைகள் குழந்தை…மேலும் படிக்க... |