கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2024
பார்வையிட்டோர்: 6,171 
 
 

(1975ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-10

பொதுவாக ஒருவர் அணிந்த மாலையைப் பிறர் அணியக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. கல்யாணத்தின் போது பெண்ணும் பிள்ளையும் மாலை மாற்றிக் கொள்ளுகிறார்கள். இந்த நிகழ்ச்சி அவர்கள் ஒன்றாகி விட்டவர்கள் என்பதைக் குறிக்கிறது. -மாலை மாற்றிக் கொள்ளுவதன் கருத்து.


கோபி வரவில்லை. அதோடு மட்டுமல்ல. அவளை அங்கே வரச் சொல்லியிருக்கிறான். பால்கனியிலிருந்து திரும்பிய வசுவின் மனத்தில் ஆத்திரம் மேலோங்கியது.

அவள் கோபிக்காக அறையை முழுதும் சுத்தம் செய்தாளே! கீழே தோட்டத்திலிருந்து புத்தம் புதுப் பூக்களைப் பறித்துத் தன் கையாலேயே டீப்பாயின் மேல் வைத்தாளே! அவனுக்காகப் பிற்பகல் முழுதும் அங்குமிங்குமாக ஓடி விளையாடி வேலை செய்தாளே! அவனே…

வசு முகத்தில் பவுடர் இருக்கிறதா கலைந்து விட்டதா என்று கண்ணாடியைப் பார்க்க நிற்கவில்லை. இந்தப் புடவை போதுமா, வேறு கட்டிக் கொள்ள வேண்டுமா என்று மனத்தை ஓடவிடவில்லை. கைப்பையில் எவ்வளவு பணம் இருக்கிறது. நடுவில் பெட்ரோல் இல்லாமல் கார் நின்றுவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்க அவளுக்குத் தோன்றவில்லை.

கிளம்பினாள்.

உடனே கோபியிடம் சூடாக நாலு கேள்வி கேட்காவிட்டால் அவளுக்குத் தலை வெடித்துவிடும் போலிருந்தது.

ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருந்த ராஜலட்சுமியையும் லட்சியம் செய்யாமல் அவள் வெளியேறினாள்.

நாகராஜனின் வீட்டு வாசலில் யார் யாரோ நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் அவனோ அவனுடைய தாயாரோ, மனைவியோ இல்லை. வசு அவசர அவசரமாக ரேழியைக் கடந்து கூடத்தை அடைந்து, மாடி ஏறினாள்.

கோபி சுவாமி படத்துக்கு மல்லிகைச் சரம் சாத்திக் கொண்டிருந்தான். பக்கத்திலே ஊதுபத்தி தயாராக இருந்தது.

“வா வசு, நல்ல சமயத்தில் தான் வந்திருக்கிறாய்!” என்றான்.

அவன் மௌனமாக நின்றாள். அவனுடைய நிதானம் எரிச்சலை அதிகமாக்கியது. அவன் பத்திகளை கொளுத்தி, படத்துக்குக் காட்டிவிட்டு சுவரின் துவாரத்தில் செருகும் வரையில் காத்திருந்தாள்.

“உட்கார், வசு.”

“நான் உட்கார வரவில்லை.”

“ஏன் கோபமாயிருக்கே?”

“கார் அனுப்பியிருந்தேனே?”

“இப்போ நேரேயே வந்திருக்கிறாய்!” சிரித்த கோபி, மீண்டும் “முதலில் உட்கார் வசு. உட்கார்ந்தாலே மனசுக்கு ஒரு நிம்மதியும் அமைதியும் கிடைக்கும்,” என்றான்.

வசு கோபத்துடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“கிளம்பலாமா?” என்றான் அவன் சிரித்துக் கொண்டு. அவள் சீற்றம் சற்றுக் குறைந்தது.

“ஆமாம். பெட்டியை இங்கேயே வைத்தால் எப்படி? அதில் தானே உங்கள் துணிமணிகளெல்லாம் இருக்கிறது?” என்றாள்.

“இப்போ உன்னை ஒரு புது இடத்துக்கு அழைத்துக் கொண்டு போகப் போகிறேன். அப்புறம் நானும் நீயும் நல்ல ஓட்டலுக்குப் போய்க் காப்பி சாப்பிடப் போகிறோம்.”

அவன் அறையை வீட்டு வெளியேறி நடக்க, வசு பின் தொடர்ந்தாள்.

அவள் காரை நகர்த்தியதும் –

“மேற்கு மாம்பலம்,” என்றான் கோபி.

“அங்கே யார் இருக்கிறார்கள்?”

“நீ ஆச்சரியப்படும்படியாக நான் ஒரு காரியம் செய்திருக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக இரு.”

“மயிலாப்பூர் வழியாகப் போகலாம். போகிற வழியில் வீட்டில் இறங்கி…”

“நோ ப்ளீஸ்.. நான் சொல்லுகிற வழியில் போ.. மவுண்ட்ரோட்.. ஃப்ளை ஓவர்… ஸன் தியேட்டர் வழியாக டி.நகர், துரைசாமி ரோட் ஸப்வே… அசுவமேத மண்டபம்… அப்புறம் சொல்றேன்.”

“அசுவமேத மண்டபத்தில் காலட்சேபம் ஏதானும் நடக்கிறதா? அங்கே என்னை அழைத்துக் கொண்டு போகிறீர்களா?”

அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை.

“நீ என்னிக்கு பொள்ளாச்சியிலிருந்து திரும்பினே?” என்று கேட்டான்.

“இன்னிக்கு”

“பொள்ளாச்சி எப்படி இருக்கிறது?”

அவளுக்கு எரிச்சலாக வந்தது.

“ஊட்டி மாதிரி ரொம்ப அழகா இருக்கு… ஒரு பெரிய க்ளாஸ் ஹவுஸ், ஒரு ஏரி, பொடானிகல் கார்டன்ஸ். எல்லாம் இருக்கு… எங்கே பார்த்தாலும் யூகலிப்டஸ் மரங்கள் தான்…” என்றாள்.

அவன் கிண்டல் செய்தான்.

“பொள்ளாச்சி ரொம்ப மாறியிருக்கு… ஏரியை எங்கே எப்போ வெட்டினார்கள்? அதிலே போட்டிங் போனாயா?”

“ஏன் என் வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறீர்கள்?”

“நீதானே. சொன்னாய், பொள்ளாச்சி ஊட்டி மாதிரி இருக்கிறது என்று? அதான் கேட்டேன்.”

“ஊட்டியில் உங்ககிட்ட என்ன சொல்லியனுப்பினேன்?. நான் சொன்னதை மீறி எப்படித் திருவல்லிக்கேணி அறையிலே தங்கப் போச்சு?”

“அதுதான் என் வீடு. அதுதான் எனக்குப் பிடிக்கிறது.”

“ஏன், என் வீட்டிலே என்ன குறைச்சலாம்?”

”உன் வீடா! உங்க அப்பா வீட்டைச் சொல்கிறாயா?”

“எங்க அப்பாவுக்கு நான் ஒரே பெண்.”

“வசு, நீ இல்லாதபோது அந்த வீட்டில் எனக்கு ஒன்றுமே யில்லை. நீ இருந்தால் எனக்கு அங்கே எல்லாமே இருக்கு..”

“நான்தான் வந்துவிட் டேனே? காரை அனுப்பினால் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வரவேண்டியதுதானே?”

“வாஸ்தவம்தான். நான் அப்படிப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தால், எத்தனை நாட்களுக்கு அங்கேயே பெட்டியை வைப்பது? அதை யோசித்துப் பார்த்தாயா?”

“யோசனைக்கு இடமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.”

“இப்போ நாம் போகிற இடத்தைப் பார்த்ததும், நீயே யோசிக்க ஆரம்பித்துவிடுவாய்.”

அசுவமேத மண்டபத்தை ஓட்டி ஓடிய தெருவில் கார் சென்றது.

“மெதுவாகப் போ!” என்றான் கோபி. பிறகு, “அதோ அந்த வீட்டு வாசல்லே ஒரு அம்மாள் குழந்தையுடன் நிற்கிறாளே அதுக்கு அடுத்த வீட்டுக்கு முன்னால் நிறுத்து,” என்றான்.

கார் நின்றது. கோபி இறங்கினான். வசு உட்கார்ந்த இடத்திலிருந்தே பார்த்தாள். அகலமில்லாத, உயரமான ஒரு வீடு.

“வா, வசு.”

அவள் இறங்கினாள். இந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்? யாரைப் பார்க்கக் கோபி இப்படித் துடிக்கிறான்?

வீட்டின் பக்கவாட்டை நோக்கிக் கோபி நடக்க, அவள் பின் தொடர்ந்தாள்.

பக்கவாட்டில் மூன்றடி அகலத்தில் ஒரு கதவு. பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்த கோபி, “இன்னிக்குத் தான் சாவி கிடைத்தது,” என்று சொல்லிக் கொண்டே பூட்டைத் திறந்தான்.

வசுவுக்குப் புரிந்துவிட்டது. அவளை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணமா என்ன, கோபிக்கு?

குறுகலான மாடிப் படி. அதன் முடிவில் நீள அகலமில்லாத அறை. மூன்று பக்கங்கள் ஜன்னல் ஏதுமின்றி அடைத்துக் கிடக்க, வீட்டின் பின்புறத்தைக் காட்ட நான்காம் பக்கம் வாய்திறந்து கிடந்தது. வசு பார்த்தபோது. கிணற்றடியில் ஒரு பத்து வயதுப் பையன் கன்றுக்குட்டியைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். மாடிப்படி அறையை அடுத்தாற் போல, நீளமான ஒரு அறை. இடது புறத்தில், ஒருவர் மட்டுமே நிற்கக் கூடிய அளவுக்கு ஒரு பால்கனி. (வேறு என்ன பெயரும் வைக்க முடியாததால் பால்கனி என்று குறிப்பிடும் நிர்ப்பந்தம் உண்டாயிற்று.) நீளமான அறைக்கு அடுத்தாற்போல, அறையின் எட்டடி அகலத்துக்கு ஏற்ற ஒரு சமையலறை.

“பாத்திரங்களையும் சமையல் சாமான்களையும் வைத்துக் கொள்ள நிறைய ஷெல்ஃபுகள் இருக்கு,” என்றான் கோபி.

“ஷெல்புதான் இருக்கு, சமையலறையைக் காணோம்!” என்றாள் அவள்.

“ஹால் நீளமாக இருக்கிறது.”

“தென்ன ஓலைகூடத்தான் நீளமாக இருக்கிறது.”

“உனக்குப் பிடிக்கவில்லையா, வசு?”

“இதில் குடியிருக்க வீட்டுக்காரர் எத்தனை ரூபாய் தருகிறார் உங்களுக்கு?”

“உனக்கு நன்றாகப் பேசத் தெரியும் என்கிறது எனக்கும் தெரியும் வசு! மெட்ராஸில் என் சம்பளத்திற்கு அடங்குகிற மாதிரி ஒரு வீட்டைத் தான் நான் பார்க்க முடியும். அட்வான்ஸ் கூடக் கொடுத்தாகிவிட்டது.”

“சிறை வாழ்க்கைக்கு அட்வான்ஸ் கொடுக்கறது அபத்தம்… உங்களுக்கு எங்க பங்களா பிடிக்கலைன்னா சொல்லுங்கள். சாந்தோமிலே ஒரு சின்ன வீடு இருக்கு. மாடியிலேந்து பார்த்தா சமூத்திரம் தெரியும். அங்கே போகலாம்.”

“பிறரிடமிருந்து சலுகைகளை நான் எதிர்பார்ப்பதில்லை.”

“லட்சியங்களை அடுக்கிக் கொண்டே போகாதீர்கள். அது உடம்புக்கு நல்லது இல்லை.”

“இந்தத் தை மாதம் முடியறதுக்குள்ளே, நாம் இங்கே வந்து பால் காய்ச்சிச் சாப்பிடலாம்..”

“சாப்பிட்டுவிட்டு உடனேயே காலி செய்வதானால் எனக்கு ஆட்சேபணை இல்லை.” வசு மாடிப் படியில் தடதடவென்று இறங்கினாள்.

கோபி மாடியிலேயே நின்றான். இருக்கிற ஒரே ஜன்னல் வழியாகப் பார்த்தான்.

அவள் காரில் ஏறிக் கொண்டாள். கதவைச் சாத்தினாள்.

கார் மெதுவாக நகர்ந்தது.

கண்ணை விட்டும் அகன்றது.

கோபி, சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தான். பிறகு நிதானமாக இறங்கினான். கதவைத் தாளிட்டுப் பூட்டினான்.

சாவியைப் பாக்கெட்டில் போடுகையில் தான், அங்கே சில்லறை ஏதும் இல்லை என்ற நினைவு பிறந்தது.

மேற்கு மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு ஐந்து மைலுக்கு மேலே இருக்கும்.

இப்போதே நடக்க ஆரம்பித்தால், இரவு ஒன்பது மணிக்காவது போய்விடலாம்.

அவன் நடக்கலானான்.

அத்தியாயம்-11

முன் கதை

தொழிலதியரும் பணக்காரருமான சிவராமன் தன் பெண் வசுவுக்கு ஏழைப் பையனான கோபியை மணமுடித்த போது வசு மகிழ்ச்சி அடைகிறாள். ஓர் ஏழையைக் கை தூக்கிவிட வேண்டும் என்று அப்பா நினைத்தது எத்தனை பெருந்தன்மை எண்றெண்ணிப் பூரிக்கிறாள். ஆனால், முதலிரவின் போது –

முன்னொரு காலத்தில் அவள் அப்பா, மிக ஏழையாக இருந்ததாயும், அப்போது கோபியின் தாய் தங்கம்மா அவருக்குக் கை கொடுத்ததாயும், அந்த நன்றிக் கடனைத் திருப்பத்தான் இந்தத் திருமணம் என்றும் கோபி சொல்கிறான். வசுவுக்கு நம்பிக்கை யில்லை. எரிச்சல் படுகிறாள்.

தேன் நிலவுக்காக இருவரும் ஊட்டி செல்கிறார்கள். அங்கேயும் கோபியின் சொல்லும், செயலும் தன் அப்பாவின் பழைய வாழ்க்கையைக் குத்திக் காட்டுவதாகவே இருப்பதாகப் பொருமுகிறாள் வசு. கோபி தனியே சென்னை திரும்ப, தோழி நித்யாவைச் சந்திக்கும் சாக்கில் வசு பொள்ளாச்சி செல்கிறாள். அங்கே ஒரு மரக்கடையில் தன் தந்தை குமாஸ்தாவாக இருந்ததாயும், தங்கம்மா என்ற ஒரு தாயில்லாப் பெண்ணும் அவரும் அண்ணன் தங்கை போலப் பிரியமாய்ப் பழகி வந்தார்களென்றும், அந்தப் பெண்ணின் கல்யாணத்துக்காக அவள் அப்பா வைத்திருந்த பதினாயிரம் ரூபாயை வாங்கி, சிவராம் ஒரு காண்டிராக்ட் பிடித்ததாயும், அதன்பின் படிப்படியாய் முன்னுக்கு வந்ததாயும், ஆனால் அவர் அந்தப் பணத்தைத் திருப்பித் தரவேயில்லை என்றும் கேள்விப் பட்டுத் திடுக்கிடுகிறாள், நித்யாவுடன் காரில் உல்லாசப் பயணம் போகும்போது கார் ரிப்பேராகிவிடவே, அமிர்தம்மா என்ற பணக்காரி யின் வீட்டில் போன் செய்ய நுழைகிறார்கள். முதலில் மிகவும் அகம்பாவமாக இருக்கும் அமிர்தம்மா, வசு இன்னாரின் பெண் என்ற தகவல் அறிந்ததும், பிரியம் காட்டுகிறாள்.

வசு சென்னை வருகிறாள். கோபிக்குக் கார் போகிறது. அவன் வராமல், அவளை வரச் சொல்லிச் செய்தி அனுப்புகிறான். அவள் கோபத்தோடு போகிறாள். கோபி அவளை அழைத்துக்கொண்டு மாம்பலத்தில் தனிக் குடித்தனத்துக்காக அமர்த்தியிருக்கும் சிறிய பழைய வீட்டைக் காண்பிக்கிறான். அவள் அவன் முகத்தில் அடித்தாற்போல் பேசிவிட்டு, காரை எடுத்துக்கொண்டு போய் விடுகிறாள். அவன் நடந்தே திருவல்லிக்கேணிக்கு வர வேண்டியதாகிறது.


சினமுற்றிருக்கும்போது எச்சரிக்கையோடு இருங்கள். புயல் அடித்துக் கொண்டிருக்கும்போது. யாரேனும் கப்பலில் பயணத்தைத் துவக்குவார்களா? – டாண்டெமிஸ்


வசு அவனைத் தனியே விட்டுக் காரில் சென்று விட்டதும், கோபி திருவல்லிக்கேணியை நோக்கிக், கால்நடையாகவே செல்ல வேண்டியதாயிற்று.

தன்னை இப்படி அவமானப்படுத்திய வசு மீது, தூக்கி எறிந்து பேசிவிட்ட தன்னுடைய மனைவி மீது, அவனுக்கு ஆத்திரம் ஏற்படாமல் இல்லை. பழைய ஹாஸ்டல் வார்டனை – அவருடைய அன்பு முகத்தையும் ஆதரவான குரலையும் – நினைத்துப் பார்த்துத் தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்.

துரைசாமி ரோடைக் கடந்து பனகல் பார்க்கை நெருங்குகையில் எப்போதோ நடந்த அந்தச் சம்பவம் மனக்கண் முன் தோன்றியது.


அப்போது அவன் கல்லூரியில் முதல் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். என்னதான் சித்தி அவனைத் தன் வீட்டில் வைத்துக்கொண்டு பாதுகாத்தாலும், அவனுடைய வறுமை அவனைப் பிடுங்கித் தின்றது. கல்லூரி முதல்வர் அவனுக்கு இலவச உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஹாஸ்டலில் பிற மாணவர்களுக்கு கோபி இலை போட்டுத் தண்ணீர் கொடுக்கவேண்டும். சிற்சில சமயங்களில் ஹாஸ்டலில் சிப்பந்திகள் இல்லாதபோது சாதம், குழம்பு என்று பரிமாற வேண்டும். இந்த வேலைகளைச் செய்ததால் அவனுக்கு இலவசச் சாப்பாடு. இதை அவன் ஓர் அவமானமாகக் கருதவில்லை. இலவச உணவை ஒரு கண்ணியத்தோடும் கௌரவத்தோடும் பெற்றுக் கொள்ளத்தான் வேலையை அளிக்கிறார்கள் என்று நினைத்தான். ஆனால் எல்லா மாணவர்களும் அதே ரீதியில் நினைக்கவில்லை.

ஒருநாள் மத்தியானம் குழம்பு பரிமாற வேண்டியதாயிற்று. பாகற்காய் சாம்பார்.

“பாகற்காய் இல்லாமல் போடுடா கோபி.” என்றான் சுகுமாரன் என்ற மாணவன்.

சாம்பார் பக்கெட்டைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நின்ற கோபி, அகப்பையில்’ பாகற்காய்த் துண்டுகளை ஒதுக்கி, குழம்பை எடுத்தான். ஓரிரண்டு துண்டுகள் அவனையும் மீறி அகப்பையினுள் இடம் பெற்றுவிட்டன.

சுகுமாரனுடைய கலத்தில் பாகற்காய்த் துண்டுகள் விழுந்தன.

“டேய் தரித்திரம். நான் என்ன சொன்னேன், நீ என்ன செய்கிறாய்?” சுகுமாரன் கத்தினான்.

“ஸாரி, சுகுமார். தவறி விழுந்து விட்டது,” என்றான் கோபி.

“சோத்துக்கு வக்கு இல்லாவிட்டால் ஓட்டல்லே போய் வேலை செய்யறது தானே? இங்கே ஓசிச் சாப்பாடு போடறாங்கன்னு ஏன் காலேஜுக்குப் படிக்கவர்றே?”

சீற்றம் தலைக்கேறிய நிலைவில் கோபி, மீண்டும், “ஸாரி,'” என்றான்.

“என்னடா ஸாரி. எச்சக்கலையைத் தின்ன வேண்டிய நாய் ஹாஸ்டலுக்குள் நுழைந்திருக்கே.. போடா!” சுகுமாரன் பேச்சோடு நிற்காமல், கையையும் அவன் முகத்தை நோக்கி வீசினான். அவன் கையில் பாதி பிசைந்திருந்த சாதத்திலிருந்து பல பருக்கைகள் கோபியின் முகத்தில் சிதறின.

முகத்தில் கோபம் மின்னியது. கண்களில் தீப் பொறி பறந்தது. அடுத்த கணம்…

பாகற்காய் சாம்பாரை அப்படியே சுகுமாரன் தலையில் கொட்டினான். அகப்பையால் மண்டையில் தட்டினான்.

பத்தாவது நிமிடம் அவன் ஹாஸ்டல் வார்டன் முன்னால் இழுத்துச் செல்லப்பட்டான். வார்டன் வயது நிறைந்த பாதிரியார். தீர விசாரித்தார். பிறகு எல்லா மாணவர்களையும் அனுப்பிவிட்டு அவர் சொன்னார்,

”கோபி, நீ ஏழை. உன் ஏழ்மையைச் சுகுமாரன் பரிகாசம் செய்தபோது உனக்குக் கோபம் வந்தது இயற்கை. அந்தச் சாம்பார் சூடாக இல்லாததால் சுகுமாரன் தப்பினான். நீ கொட்டியது மட்டும் சூடாக இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்?”

கோபிக்கு அவர் கூறியது நியாயமாகப் பட்டது.

“என்னை மன்னித்து விடுங்கள் ஃபாதர். நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்,” என்றான்.

“பால் பொங்கும்போது என்ன செய்கிறோம்? இறக்கி வைக்கிறோம். இல்லாவிட்டால் கொஞ்சம் தண்ணீரைத் தெளிக்கிறோம். கோபமும் பால் பொங்குவது போலத் தான். அமைதியாக இருக்கும் போது கோபத்தை அடக்க எல்லாருக்கும் வழி தெரியும். ஆனால் கண்மூடித்தனமான கோபம் வரும்போது? அப்போதுதான் நீ கோபத்தை உணர்ந்து அதைப் பொறுமையென்கிற நீரால் அடக்க வேண்டும்,” என்று அவர் அன்புடன் அறிவுரை சொன்னார்.

அவமான உணர்ச்சியிஞல் சினம் பொங்கும் போதெல்லாம அவர் குரல் கோபியின் காதில் ஒலிக்கும். சினம் தானே தணிந்துளிடும்.


கோபி திருவல்லிக்கேணியை அடைந்தபோது மணி ஒன்பதரை ஆகிவிட்டது. அவன் வழக்கமாகச் சாப்பிடும் ஓட்டலில் ஒன்பது மணிக்கு மேல் ஒன்றும் கிடைக்காது. நேரே அறையை நோக்கி நடந்தான். நாகராஜன் வீட்டில் சாப்பிட வேண்டியதுதான்.

நாகராஜன் சீதாவிடம் இலை போடச் சொன்னபோது, அவன் சமையலறையைக் கழுவிக் கொண்டிருந்தாள். கூடத்தில், அயர்ந்து தூங்கும் வல்லியைக் கொசு கடிக்காமலிருக்க விசிறிக் கொண்டிருந்த பாகீரதி, “என்னடா கோபி, இப்படிச் சாப்பிடாமல் வந்து நிக்கறியே? இப்பத்தான் சாதத்தில் தண்ணீர் ஊத்தினாள். அதை எப்படியடா உனக்குப் போடறது?” என்று கேட்டாள்.

“பரவாயில்லை. மோர் சாதம்தானே?” என்றான் கோபி.

கையைக் கழுவி விட்டு இலையைப் போட்ட சீதா, தன் கணவனிடம், “உங்க சிநேகிதர் முகம் ஒரு மாதிரியாக இருக்கு.” என்றாள்.

“உன் பெண்டாட்டியை அழைச்சுட்டுப் போனியே. அவளுக்கு வீடு பிடிச்சுதா?” என்று கேட்டாள் பாகீரதி.

சாதத்தைப் பிசைந்த கோபி பதில் சொல்லவில்லை.

மோரைப் போட்டுக் கொண்டே சீதா, “பிடித்திருக்காது. பிடித்திருந்தால் தனியே இங்கே வந்து சாப்பிடுவாரா?” என்று கேட்டாள்.

“ஏண்டா, அப்படியா?” என்றான் நாகராஜன்.

“வேறு. விஷயம் பேசுடா, நாகராஜா,” என்றான் கோபி.

அப்புறம் ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. கோபி தன் அறைக்குப் படுக்கச் சென்றபோது நாகராஜன் அவனுடன் போய்க் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வந்தான்.

“வீடு ஏன் பிடிக்கலையாம் அந்தப் பெண்ணுக்கு?” என்று அவனைக் கேட்டாள் பாகீரதி.

அவன் சும்மா இருந்தான்.

“வசுவுக்கு அந்த வீடு பிடிக்கலைன்னா, நான் அவள் பேரிலே குற்றம் சொல்லமாட்டேன். கோட்டை மாதிரி பங்களாவில் இருந்தவளைக் கொண்டு போய் ஒரு சின்ன வீட்டில் குடி வைத்தால்? எலிப் பொந்து மாதிரி இருக்கும் அவளுக்கு.” என்றாள் சீதா.

“எலிப் பொந்தோ புலிக்குகையோ, புருஷன் எங்கே இருக்கானோ அங்கேதான் பெண்டாட்டியும் இருக்கணும். அதுதான் தர்மம்,” என்றாள் பாகீரதி.

“என்னைக் கேட்டால், கொஞ்ச நாட்களுக்குக் கோபி வசுவின் வீட்டிலேயே இருந்துவிட்டு, அப்புறமா வேறு வீடு பார்த்துக்கொண்டு போகலாம்,” என்றாள் சீதா.

யோசனையிலிருந்த நாகராஜன், “அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்.” என்றான்.

“கொஞ்ச நாள் இருக்கறதுன்னு ஆரம்பிச்சா அவ்வளவுதான். அங்கேயே டேரா அடிக்க வேண்டியது தான்! என்றாள் பாகீரதி. “கோபிக்கும் என்னதான் தனியே வரணும்னு மனசு தவிச்சாலும், வரமுடியாத நிலை உண்டாகிவிடும். பெரிய பணக்காரர் வீட்டுப் பெண். அதுவும் ஒரே பெண். சிணுங்குவாள். அம்மாவை விட்டு வர்றது கஷ்டம்னு சொல்லுவாள். மாமனார்க்காரர் வேறே வந்து உபதேசம் சொல்வார். கோபியால் இந்தண்டையும் நகர முடியாது; அந்தண்டையும் நகர முடியாது. தாலியைக் கட்டினான்; இரண்டு நாள் இருந்தான், ரொம்பச் சரி. ஆனா இனிமே பெட்டி படுக்கையோட மாமனார் வீடு ஏறினானோ. அப்புறம் கடைசி வரை மாமனார் வீடே கதின்னு ஆயிடும்.” பாகீரதி மூச்சு விடாமல் பேசினாள்.

தூங்கும் லல்லி அசைந்து படுத்தாள்.

“கோபிக்கு மனசிலே வலு இருந்தா நீங்க சொல்றபடி ஒண்ணும் நடக்காது. இப்பத்தான் கல்யாணமாயிருக்கு. அவள் மனசை நோக அடிப்பானேன்?” என்ற சீதா, “வீட்டை என்ன செய்தாராம்? வேண்டாம்னு சொல்லி அட்வான்ஸைத் திருப்பிக் கேட்டாராமா?” என்றாள்.

நாகராஜன், “வீடு எடுத்தது எடுத்ததுதானாம். ‘அவள் மனசு மாறி வரும் வரையில் பூட்டிக் கிடக்கும்,’ என்கிறான். ‘என்னடா, இடியட் மாதிரிப் பேசறே? வீடு பிடிக்கலைன்னா வேறு வீடு பார்க்கலாமே’, என்றேன். ‘அவளுக்கு எந்த வீடும் பிடிக்காது நாகராஜா. அவளுடைய அப்பாவின் பங்களாதான் பிடித்திருக்கு. ஆனா அது எனக்குப் பிடிக்கவில்லை,’ என்கிறான்,” என்றான்.

“வசு என்னதான் சொன்னாளாம்?” என்று கேட்டாள் சீதா.

“இவனை விட்டு விட்டுத் தன் பாட்டுக்குக் காரை ஓட்டிக்கு கொண்டு போய் விட்டாளாம். இதை விட அழுத்தமா அப்படி அவள் என்ன சொல்லிவிட முடியும்?”

“சே, வசு நல்ல பொண்ணு. அன்னிக்கு நம்ம வீட்லே எப்படிப் பழகினாள். இவன் ஏதானும் அவளுக்குக் கோபம் வரும்படியா பேசியிருப்பான்,” என்றாள் பாகீரதி.

“சீதா, உன்னைத்தான் வசு அழைத்திருக்கிறாளே… அவளைப் போய்ப் பார்த்துவிட்டு வா. இவன் என்ன சொல்லி அவள் என்ன அழுது கொண்டிருக்கிறாளோ?” என்றன் நாகராஜன்.

“நாளைக்குப் போகிறேன்,” என்றாள் சீதா.


ம றுநாள் முழுதும் காரியாலயத்தில் வேலை கடுமையாக இருந்ததால், கோபி வேறு எதிலும் கவனத்தைச் செலுத்தவில்லை. திருவல்லிக்கேணிக்குத் திரும்பும்போது, மணி எட்டு அடித்து விட்டது.

வீட்டு வாசலில் நாகராஜனின் மனைவி சீதா லல்லியுடன் நிற்பதை கோபி கண்டான். சீதா அவனைப் பார்த்ததும் சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு வீட்டினுள் விரைந்தாள்.

அவனுக்குப் புரியவில்லை. நின்று இரண்டு வார்த்தை பேசும் அவள், என்றுமில்லாதபடி ஏன் இப்படி உள்ளே விரைகிறாள்?

அத்தியாயம்-12

எட்டுவித விவாகங்களில், காந்தர்வ விவாகம் ஒருவிதம், ஆணும் பெண்ணும் இச்சையால் ஒன்றுகூடி, பிறகு விவாகம் செய்து கொள்ளுவது காந்தர்வ விவாகம், காமமே இதில் பிரதானமாகும். –சம்ஸ்காரத்திலிருந்து.


ராஜலட்சுமி போர்டிகோவுக்கு வந்தபோது மாலை மணி ஏழு. கணவர் சிவராமன் இன்னும் வரவில்லை. கோபியை அழைத்துவர, திருவல்லிக்கேணிக்குப் போன வசுவையும் இன்னும் காணோம். கோபிக்காக அவள் விருந்து தயார் பண்ணச் சொல்லியிருந்தாள். அவனுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று இன்னும் அவள் புரிந்து கொள்ளாததால், வசுவுக்குப் பிடித்ததையெல்லாம் செய்யச் சொல்லியிருந்தாள். பொரித்த கூட்டும், பன்னீர் ரசமும் தயாராகிக் கொண்டிருந்தன. கணவர் சிவராமன் அன்று இரவு காரில் கோயமுத்தூர் போக இருக்கிறார். அதற்கு முன் எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும்.

அதோ, வசுவின் கார்!

கார் வந்து நின்றது. கோபி இல்லாததைக் கண்டதும் ராஜலட்சுமி மனம் துணுக்குற்றாள்.

காரிலிருந்து இறங்கி, கதவைப் படாரென்று சாத்திவிட்டுத் தன்னை நோக்கிவரும் வசுவுக்காக நின்றாள்.

அவள் தன் அருகே வந்ததும், “வசு!” என்றாள்.

“என்னம்மா?”

“மாப்பிள்ளை வரலியா!”

“காருக்குள்ளே ஒளிஞ்சுட்டிருக்காரா, பாரு.”

இதுமாதிரித் தூக்கி எறிந்து பேசும் குணம் வசுவுக்கு இயற்கையாக வரக்கூடியதுதான் என்றாலும், சாதாரணமாகத் தாயிடம் அப்படி நடந்து கொள்ளமாட்டாள். இன்று இப்படிப் பேச வேண்டும் என்றால் ஏதோ நடந்திருக்க வேண்டும்.

ராஜலட்சுமி தன்னைத் தயார் செய்து கொண்டு பக்குவமாகக் கேட்க ஆரம்பிப்பதற்குள், வசு மாடிப் படி ஏறிவிட்டாள்.

ராஜலட்சுமி மாடியை அடைந்தபோது, வசு புடவை மாற்றிக் கொண்டிருந்தாள்.

“வசு.”

“உம்…”

“ஏன் மாப்பிள்ளை வரலே?”

“நான் அழைச்சிட்டு வரலே.”

“ஏன்… உங்க ரெண்டு பேருக்காக ஸ்பெஷலாகச் சமைக்கச் சொன்னேன்.”

“நான் இருக்கேனே, சாப்பிட.”

“என்ன நடந்தது?”

“ஏதோ நடந்தது.”

மேற்கொண்டு எப்படிக் கேட்பது என்று ராஜலட்சுமி யோசித்துக் கொண்டிருக்கையில், சிவராமன் வருவதை உணர்ந்தாள்.

“உன் அப்பா வருகிறார்.”

“அதுக்கு என்ன செய்யணும் என்கிறே?”

“ஏன் இன்னிக்கு இப்படிக் கோபமா இருக்கே, வசு?”

“நான் சரியாத்தான் இருக்கேன்.”

சிவராமன், ”ராஜி, என்ன நடந்தது? வசு என்ன சொல்லுகிறாள்?” என்று கேட்டார்.

ராஜலட்சுமி, மகள் சொன்னதைக் கூறினாள்.

“வசு, என்னம்மா நடந்தது? கோபி ஏதானும் கோபித்துக் கொண்டானா?”

அப்பாவை ஒருதரம் ஏற இறங்கப் பார்த்த வசு, அம்மா பக்கம் திரும்பினாள்.

“அம்மா, மாப்பிள்ளை எனக்கு வீடு பார்த்திருக்கிறார்.”

“அப்படியா!” என்றார் சிவராமன். பிறகு தொடர்ந்தார். “கல்யாணத்துக்கு அப்புறம் அவன் நம்ப வீட்டுக்கே வந்துவிட வேண்டும் என்று தான் முதல்லே நினைச்சேன். திருவல்லிக்கேணி ரூமைக் காவி பண்ணவும் சொன்னேன். ஆனா அவன் இப்போ வீடு பார்த்ததிலிருந்து தனிக்குடித்தனத்தைத்தான் விரும்புகிறான்னு தெரியறது. நீ என்ன சொன்னே?”

“மூஞ்சியிலே அடிச்ச மாதிரி சொல்லிட்டேன். மேற்கு மாம்பலத்திலே கொசுவுக்கும் ஆடு மாடுகளுக்கும் நடுவே ஒரு பொந்திலே என்னைக் குடியேற்றப் பார்த்தார். நான் காரை எடுத்துட்டு, ‘உங்கள் வீட்டில் நீங்களே இருங்கள்’னு வந்துவிட்டேன்,” சிவராமனும் ராஜலட்சுமியும் கலவரத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அன்றிரவு சிவராமன் மனைவியிடம் சொன்னார்.

“வசுவுக்குப் பாவம் ஒண்ணும் தெரியவில்லை. ராஜி. நீதான் அவனைப் பக்குவமாக நம்ம வழிக்கு மெள்ளக் கொண்டு வரணும், எப்போ கோபி தன் எண்ணத்தைத் தெரியப் படுத்தினானோ, அப்போ இவள்தான் தாழ்ந்து போகணும். அவனாக இங்கே வந்து நம்ம கூட இருந்தா, எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் நாம் வற்புறுத்தக்கூடாது.”

அன்றிரவு சிவராமன் கோவை செல்வதாகப் புறப்பட்டுச் சென்றார்.

மறுநாள் காலை சந்தர்ப்பம் கிடைத்தபோது மகளிடம், “வசு, நான் உன் அப்பா கூட எப்படி இருக்கிறேன், எப்படி நடந்து கொள்ளுகிறேன்னு உனக்குத் தெரியும். இந்த இருபத்தஞ்சு வருஷ தாம்பத்தியத்திலே நாங்க ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒரு மனவேற்றுமை இல்லாம இருக்கோம். இதைப் பார்த்துக்கூட நீ ஏதும் கற்றுக்கொள்ளவில்லை.. போனால் போறது… இனிமேயாவது நீ ஒழுங்காக நாங்க சொல்றதைக் கேளு…” என்று சொல்வதென்று தீர்மானம் செய்து கொண்டாள்.

ஆனால் சந்தர்ப்பம்தான் கிடைக்கவில்லை. காலையிலிருந்தே ராஜலட்சுமி கண்ணில் வசு தென்படவில்லை. காப்பி குடிக்க வந்தவள், உடனே தினசரிப் பேப்பர்களை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றுவிட்டாள்.

சிவராமனும் முந்தின இரவு கோயமுத்தூர் போய்விட்டார். ராஜலட்சுமிக்கு வீடே வெறிச்சோடுவதாகத் தோன்றியது.

காலைச் சாப்பாடு ஆனதும் ஹாலுக்கு வந்தாள். அதே சமயம், இருபத்து நாலு அல்லது இருபத்தைந்து வயது மதிக்கத் தகுந்த ஒரு பெண் படி ஏறி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. முகத்தில், தாய்மையின் ரத்தம் கொட்டி நிற்பதையும், பூசினாற் போன்ற உடற்கட்டையும் கண்ட ராஜ லட்சுமிக்கு வருகிறவள் யார் என்று புரியவில்லை.

“நமஸ்காரம்,” என்று கை கூப்பிக்கொண்டே பிரவேசித்த அந்தப் பெண், “என் பெயர் சீதா. உங்கள் மாப்பிள்ளையின் சினேகிதருடைய மனைவி,” என்றாள்.

ராஜலட்சுமிக்கு சீதாவைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது.

“வாம்மா, நாகராஜன் மனைவியா? உன்னைப்பத்தி வசு வாய் நிறையச் சொன்னாள். அவளுக்குப் பெரிய விருந்தா பண்ணிப் போட்டீர்களாமே. வா…உட்கார்ந்து கொள்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஒரு பச்சடியும் சாப்பாடும் ரசமும் எல்லார் வீட்டிலேயும் வைக்கிறதுதானே…. வசு இருக்கிறாளா?”

“உம். இருக்கா…மாடியிலே இருக்கா…கூப்பிடறேன்.”

“வேண்டாம். நானே போய்ப் பார்த்துக்கறேன்…”

“இப்ப எத்தனை மாசம் உனக்கு?”

“அஞ்சு.”

“என்ன சாப்பிடறே, காப்பியா, கூல் ட்ரிங்க்கா…”

ராஜலட்சுமி: அம்மாளின் உபசாரம் சீதாவின் உள்ளத்தைக் குளிர்வித்தது.

“ஒண்ணும் வேண்டாம். உங்களைப் பார்த்தப்புறம்தான், வசுவுக்கு அவ்வளவு நல்ல குணம் யார்கிட்டே யிருந்து வந்திருக்குன்னு தெரிகிறது.”

ராஜலட்சுமி சிரித்தாள். “அப்படி என்ன குணத்தை அவளிடம் நீ கண்டுட்டே?”

“எனக்கு, சின்ன வயசிலிருந்தே பணக்காரர்கள்னா ஒரு பயமாக்கும். எப்போதும் அதிகாரமா, திமிரா, ஏழைகளைத் தூக்கி எறிஞ்சு பேசுவார்கள் என்று ஒரு எண்ணம் உண்டு. ஆனா, அதெல்லாம் எவ்வளவு தப்புன்னு இப்பத்தான் தெரிய ஆரம்பிச்சுருக்கு. வசு எப்படி நடந்துகொள்ளுவாளோன்னுகூட நான் முதல்லே பயந்தேன்….ஆனா, ஒரு நொடியிலே என் பயத்தை அவள் போக்கிட்டா.”

‘வசுவா இவ்வளவு நல்ல பெயர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறாள்!’ ராஜலட்சுமிக்கு வியப்பாகவும் பூரிப்பாகவும் இருந்தது.

தன் பெண்ணைப் பற்றி இவ்வளவு உயர்வாகப் பேசும் சீதாவைப் பார்த்து அவள் மிகவும் நெகிழ்ந்து போனாள். அவள் ஏதோ கேட்க வாயெடுக்கவும், வசு மாடியிலிருந்து இறங்கி ஹாலுக்குள் பிரவேசிக்கவும் சரியாக இருந்தது.

“ஹலோ வசு.. நீ என்னை இன்வைட் பண்ணி ஒரு வாரம் ஆயிட்டுது. இன்னிக்குத்தான் வர முடிஞ்சுது,” என்றாள் சீதா, உரிமையுடன்.

“ஓகோ,” என்றாள் வசு.

அவள் நின்ற தோரணையும் பார்த்த பார்வையும் சீதாவைக் குழப்பின.

“எங்கேயாவது புறப்பட்டுக் கொண்டிருக்கிறாயா, வசு?” என்றாள்.

“என் டிரெஸ்ஸைப் பார்த்தா தெரியலையா?” என்றாள் வசு, பட்டென்று.

சீதாவுக்கு முகத்தில் அறைபட்டாற் போலிருந்தது. எழுந்துகொண்டாள்.

“அப்போ நான் வரேன்.”

சீதா எழுந்து நிற்பதைக் கண்டபோது, ராஜலட்சுமியின் இதயம் வேதனைப்பட்டது. வசுலைப் பற்றி இந்தப் பெண் மனம் திறந்து பேசினாள். புகழ்ந்தாள். ஆனால் வசு? சே, என்ன பெண் இவள்?

“வசு, சீதாவுக்குக் குங்குமம் கொடு. போய் அவளைக் காரில் இறக்கி விட்டுவிட்டு வா!” என்றாள் அவள்.

சீதா, “நான் வந்த மாதிரி, பஸ்ஸிலேயே போய்க் கொள்ளுகிறேன்,” என்றாள்.

ராஜலக்ஷ்மி குங்குமம் எடுத்துக் கொடுத்தாள். கண்களில் நீர் முட்டி நிற்க, சீதா குங்குமத்தை வாங்கிக் கொண்டாள். வசு காரில் ஏறிக் கொண்டு எங்கோ போய்விட்டாள்.

“நீ எதையும் மனசிலே வைச்சுக்காதே அம்மா.”

“இல்லே…. இந்த வசு என் கண்ணுக்குத் தெரியலே. ஏன்னா, அன்னிக்குப் பார்த்த வசு தான் என் மனசிலே பதிஞ்சிருக்கா… நான் வரேன்.”

அவள் போகும் கோலத்தைக் கண்டபோது, ராஜலட்சுமியின் நெஞ்சு வெடித்தது.


சீதா போன பிறகு ராஜலட்சுமிக்கு இருக்கை கொள்ளவில்லை. வசுவின் போக்கு அவளுக்கு ஒரு புதிராகத் தோன்றியது. கோபி மீதுள்ள ஆத்திரத்தையும் கோபத்தையும் சீதா மீது காட்டியிருக்கிறாள். கோபி மீது ஏன் ஆத்திரமும் கோபமும் உண்டாக வேண்டும்?

இன்னொரு உண்மையும் அவளுடைய மனத்தை நோகச் செய்தது. பொள்ளாச்சியிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து வசு அப்பாவிடம் முன்னைப் போலப் பழகுவதில்லை. தினமும் அவரிடம் சிரித்துச் சிரித்துப் பேசுகிறவள், அவர் மாதிரி யாருமே இருக்க முடியாது என்று பூரித்துப் போகிறவள், ஏன் அப்பாவிடம் பேச்சுக் கொடுப்பதில்லை?

இதற்குக் காரணம், கோபியின் தாயார் தங்கம்மாளை சிவராமன் பத்தாயிரம் ரூபாய்க்கு ஏமாற்றிவிட்டார் என்று யாரோ சொன்ன செய்தி தானோ? ராஜலட்சுமி அவ்வளவு தூரம் பெண்ணிடம் அடித்துச் சொல்லிய போதும், சிவராமன் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார், தங்கம்மாளை ஏமாற்றி இருக்கிறார் என்றே நம்புகிறாள். அவளுடைய இந்தப் பிடிவாத எண்ணத்தின் காரணமாக, ராஜலட்சுமிக்கே சந்தேகம் பிறந்துவிட்டது. இந்தச் சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும் தன் மனத்துக்குச் சமாதானம் தேடிக்கொள்ளவும் தான், தன் அண்ணன் ராஜாமணிக்குக் கடிதம் எழுதி, அவரை வரச் சொன்னாள். ராஜாமணியி _மிருந்து பதில் வரவில்லையாயினும் அவர் கூடிய சீக்கிரம் வந்துவிடுவார் என்ற நம்பிக்கை குறையவில்லை.

அவளுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அன்று மத்தியானம் மூன்று மணிக்கு ராஜாமணி வந்தார்.

“என்ன ராஜி, காலியான சினிமா கொட்டகை மாதிரி இருக்கு வீடு. சிவு எங்கே? வசுவையும் காணோம்?” என்று கேட்டுக் கொண்டே ராஜாமணி வந்தார்.

“வாருங்கள், அண்ணா. ஏன் பதில் கடிதமே போடலை? அவர் கோயமுத்தூர் போயிருக்கார்…வசு வெளியே போனா.”

“அறுவடை மும்முரமாக நடக்கிறது. நீ அவசரம்னு எழுதினாயே என்று வந்தேன். இன்னிக்குச் சாயங்காலமே திரும்ப வேண்டும்.”

சிறிது நேரம் கழித்துப் பேச்சு மெல்லத் தொடர்ந்து கடைசியில் அந்தக் காலத்துக்குத் தாவியது.

“ஏன் அண்ணா, நீங்கள் அவரைப் பார்ட்னரா சேர்த்துக் கொண்டீர்களே அப்போ அவர் எவ்வளவு ரூபாய் மூலதனமாப் போட்டார்?” என்று ஆரம்பித்தாள் ராஜலட்சுமி,

“ஏன், எதுக்குக் கேட்கிறே?”

“கேட்கிறேன். சொல்லுங்கள். எனக்குத் தெரியணும்.”

“முதல்லே வேலைன்னுதான் சிவு வந்தார். நல்ல புத்திசாலி, நிறையச் சுறுசுறுப்பு. பார்க்கறதுக்கும் ஜோரா இருந்தார். எல்லாத்தையும் கணக்குப் போட்டுப் பார்த்தேன். வேலைக்கு வைச்சுக்கறதைவிட, கூட்டாளியா வைச்சுக்கறது நல்லதுன்னு தோன்றிற்று. என் தங்கையை என் கீழே வேலை செய்கிறவருக்குக் கொடுக்கறதைவிட, கூட்டாளிக்குக் கொடுக்கறது மேல் இல்லியா?”

அவள் அதையெல்லாம் கேட்கத் தமையனை வரவழைக்கவில்லை. “அவர் வந்தபோது அவர் கையிலே பத்தாயிரம் ரூபாய் இருந்தது. அதை என்ன செய்தார்?” என்றாள்.

ராஜாமணி உஷாரானார்.

“அவர் கையிலே என்ன இருந்தது, மடியிலே என்ன இருந்ததுன்று தான் பார்க்கலை. கேட்கலை..”

அண்ணனின் பதில், ராஜலட்சுமிக்குச் சந்தேகத்தை ஊட்டியது.

“அவர் யார் கிட்டேயிருந்தோ பத்தாயிரம் கடன் வாங்கியிருக்கிறர். அதை உங்களோடு நடத்திய பிஸினஸில் போட்டதாகக் கேள்விப் பட்டேன்.”

“ஊஹும்.”

“பிஸினஸில் பத்தாயிரம் போடலியா?”

“இல்லை.”

“அப்போ அதை என்ன செய்தார்னும் உங்களுக்குத் தெரியாது?”

ராஜாமணி, “ராஜி, கொஞ்சம் தண்ணீர் தாயேன்,” என்றார்.

அவள் போனதும், இந்த வீட்டில் ஏதோ விபரீதம் நடக்கிறது என்று அவர் ஊகித்தார். அமிர்தம்மா என்கிற அங்கலக்குறிச்சி பெண்ணிடமிருந்து சிவராமனை மீட்டு, தன் தங்கையின் கணவனாக்கிய கதை இப்போது ராஜிக்குத் தெரிந்துவிட்டதா?

சிவராமனை அமிர்தத்திடமிருந்து ஒரே அடியாய்ப் பிரிக்க தேவையாக இருந்தது பணம் ஒன்று தான். பதினைந்தாயிரம் கொடுத்தால் தன் பெண் அமிர்தத்தை வேறு இடத்தில் கல்யாணம் செய்து கொடுப்பதாக அவளுடைய தாயார் வாக்குறுதி அளித்தாள், கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் உணர்த்தினாள்.

சிவராமனிடம் பத்தாயிரம் இருந்தது. ராஜாமணி கூட ஓர் ஐயாயிரம் போட்டு தாம் எடுத்த காரியத்தை முடித்தார். சிவராமன்- அமிர்தம் தொடர்பை பணம் எனும் கத்திரி மூலம் அறுக்க உதவி செய்தார்,

சிவராமனுடைய பத்தாயிரம் ரூபாய் இப்படித்தான் செலவாயிற்று என்று எப்படி இப்போது தங்கையிடம் சொல்ல முடியும்? மழுப்பி விட்டார்.

ராஜாமணி பழைய அமிர்தம்மாவைக் கொண்டுவந்து ராஜலட்சுமி முன் நிறுத்த ஆசைப்படவில்லை. ஆனால் சினிமாக் கதைபோல, அன்று சாயந்தரமே எழும்பூர் ஸ்டேஷனில் அவளைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

அவர் டிக்கெட் வாங்கிக் கொண்டு திரும்புகையில், நடுத்தர வயது உள்ள ஒருத்தி, பட்டுப் புடவையும், வைரத்தோடுமாக முதல் வகுப்புப் பிரயாணிகள் நுழையும் வாசலருகே நின்று கொண்டிருந்தாள். பழைய அமிர்தம், இப்போது எப்படி மாறியிருக்கிறாள்! ராஜாமணி வியந்தார்.

அவருடைய வியப்பு திகைப்பாக மாறியது, எங்கிருந்தோ வந்த சிவராமனைப் பார்த்ததும்.

“ஏங்க இவ்வளவு நேரம்?” அமிர்தத்தின் குரல், தூணுக்குப் பின்னாலிருந்து ராஜாமணி காதில் விழுந்தது.

“பிளாட்பாரம் டிக்கெட்டுக்குப் பெரிய ‘க்யூ’, போகலாமா?” என்றார் சிவராமன்.

இருவரும் ராஜாமணியைப் பார்க்கவில்லை.

– தொடரும்…

– குமுதம் வார இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.

– டைவர்ஸ் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: பெப்ரவரி 1975, குமுதம் வார இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *