கதையாசிரியர்:
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 16, 2025
பார்வையிட்டோர்: 7,012 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாமியார் மருமகள் ஒற்றுமைக்கு அந்த வீட்டைத்தான் எடுத்துக் காட்டு சொல்வார்கள். தங்கம்மைக்கும் கனகத்துக்கும் அவ்வளவு சொருமிப்பு. இரண்டு பேருக்கும் இடையில் போட்ட வைக்கோல் கூளம் பற்றி எரியும். இரண்டுபேர் பார்வையிலும் தழல் கனன்று கொண்டிருக்கும். சண்டை ஆரம்பித்துவிட்டால் இருவரும் நான்கு சிவபெருமான்களுக்குச் சமம்.

இப்போது இன்ன காரணம் பற்றித்தான் சண்டை மூளும் என்று தீர்மானமாய்ச் சொல்லிவிட முடியாது.

காலையில் எழுந்து முற்றம் தெளிக்க நேரமாகிவிட்டால், மாமியா ருக்குக் கொடுக்கும் காப்பியில் ஒரு எறும்பு கிடந்தால், புதிதாகப் போகும் ஆளையார் என்று தெருவில் எட்டிப் பார்த்தால்….

‘உலகெலாம்’ என மாமியார் அடி எடுத்துக் கொடுக்க, மருமகள் தொடுப்பாள்.

வசவுகள் வசன கவிதையாய், உக்கிரமாய் வெளிச்சாடும்.

“தேவ்டியா முண்டைகறி வச்சிருக்காஉப்பே இல்லை… வீட்டிலே எளவு உப்புக்கும் பஞ்சமா? இல்லே அப்பன் வீட்டிலே இருந்து கொண்டாந்த முதலு கொறஞ்சு போகுமா?”

“தேவ்டியா கீவ்டியாண்ணு பேசுனா இருக்கு பார்த்துக்கிடுங்கோ… உப்புக் காணாதுண்ணா ரெண்டு பரலு போட்டுக்கிடப்பிடாதா? ஒரு நாளைக்கு முன்னப்பின்னே தான் இருக்கும்… சாகப்போற வயசாச்சு நாக்குத் துடிப்பு நிண்ணுருக்கா பாரேன்…”

“மூளி யாருக்குட்டி சாக வயசாச்சு? வந்தம்ணா அரிமாணையை எடுத்துக் கொண்டையை அறுத்துப் போடுவேன். எவளுக்க அம்மைக்கு ஆமக்கனுக்க முதலைத் திங்கேன்? என் பிள்ளை சம்பாதிச்சுப் போடு கான்.நான் இன்னும் நூறு வருஷம் காலை ஆட்டிக்கிட்டி இருந்து திம் பேன்… நீ ஆரு மூளி கேக்கதுக்கு? சாகயில்லா சொல்லுகா என்னை? ஒனக்க அம்மையைச் சாகச் சொல்லு…. அப்பனைச் சாகச் சொல்லு… நான் என்னத்துக்கச்சாகணும்?”

”இன்னா பாரு! எங்க அம்மை அப்பாக்க பேச்சை எடுத்தேண்ணா இருக்கு உனக்கு… அவ்வோ உங்கவீட்டு நடையிலே வந்து நிண்ணாளா? என்னமாம் உண்டும்ணா என்னைப் பேசணும். எங்க வீட்டைப் பத்தி பேச் செடுத்தா ஆட்டுக் கொம்பை எடுத்து அலவைக்கிளிச்சிருவேன்…”

“கிளிப்பியாட்டி நீ? நீ கிளிச்சிருவியா?”

“இன்னொருக்க சொல்லிப்பாரு, நீ பொம்பிளை…”

திடீரென பேச்சு நிற்கும். ஒரு ‘சில்’லென்ற அமைதி கொஞ்சும். இரண்டு உப்புப்பரலைப் போட்டுக்கொண்டு மீதிச் சாப்பாடு ஒப்பேறும். அக்கம்பக்கத்தாருக்கு இது பழகிப் போயிற்று.

”சவங்க ரெண்டும் கொணங்கெட்டதுங்கேன்… எந்நேரம் இதே எளவு தாலா” என்று அசட்டையாய் இருக்கத் தொடங்கினர். சிலசமயம் கைமீறிப்போய் ஒருவர் கொண்டையை மற்றவர் பற்றிக்கொண்டு முதுகில் அறைய முயலும்போது மட்டும் இடைபுகுந்து விலக்கிவிடு வார்கள்.

மருமகளின் நடவடிக்கைகளை மாமியார் நம்புவதில்லை. எப்போதும் கண்காணிப்பு. குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீருக்குப் போனால் நேராக ஆற்றுக்குத்தான் போகிறாளா அல்லது எவள் வீட்டி லாவது இருந்து பாடு பேசப்போகிறாளா என்று நோட்டம் விடுவாள். சாயராட்சை கும்பிட வடக்குத் தெரு வழியா மருமகள் போனால், நடுமுடுக்கு வழியாக குறுக்குப் பாதையில் போய் சுவரோரம் மறைந்து நின்று பார்ப்பாள் மாமியார்.

யாரோடு பேசுகிறாள்?

சும்மாதான் பேசுகிறாளா?

‘கொணட்டிக் கொணட்டி’ச் சிரிக்கிறாளா?

வீட்டில் ரொம்பக் கறால். மாமியார்காரிக்கு வெளியே எங்கும் போக்குவரத்து இல்லை. வீட்டில்தான் கிடை. வடிக்க அரிசி மாமியார் தான் எடுத்துக் கொடுப்பாள். தேங்காய் உடைத்து ஒரு முறியைக் கொடுத்துவிட்டு மற்ற முறியை உப்புப் பானையில் போட்டு வைப்பாள். எண்ணிப் பார்த்து மிளகாய் வத்தல், புளி சிறியதாய் ஓர் உருண்டை…

இந்த சிக்கனத்திலும் கொஞ்சம் கொஞ்சமாய்க் கரம்பி, சுரண்டி விற்றுவிடுவாள் மருமகள். தினமும் இரண்டு மிளகாய் வத்தல். ஒரு கை அரிசி என்று ஒளித்து வைத்துச் சேர்த்து, தண்ணீருக்குப் போகும்போது குடத்தினுள்ளோ அடிமுந்தியிலோ கொட்டிக் கொண்டு போய் விற்பாள். இதை வாங்குவதற்கும் சில வீடுகள் இருந்தன.

மாலையப்பனுக்கு இதெல்லாம் பற்றிக் கவலையே கிடையாது. காலையில் தரை வெளுத்ததும் எழுந்து ஆற்றில் போய் குளித்துவிட்டு விடுவிடென வீட்டுக்கு வந்து பிழிந்து வைத்த பழையதைத் தின்று,

மத்தியானச் சாப்பாடு இருக்கும் பித்தளைத் தூக்குவாளியை துணிப் பைக்குள் போட்டுப் பிடித்தபடி நெசவுக்குப் புறப்படுகையில் ஆறரை மணி அடிக்கும். ஆற்றங்கரைக் குறுக்குப் பாதையில் நடந்தால் வட சேரிக்கு இரண்டரை மைல். மாலையப்பனுக்கு நாகமணி நெசவு ஆபீசில் நெய்த்து வேலை. ஏழரை மணிக்கு தறியில் ஏறி உட்கார்ந்தால் இறங்கும் போது நான்கு டர்க்கி டவல்களாவது நெய்யப்பட்டிருக்கும். ஒருத்தரைப் போல் தேயிலை குடிக்க, வெற்றிலைபோட, பீடி குடிக்க, பொடிபோட என்று மாலையப்பன் நேரம் சுணங்குவதில்லை. மத்தியானம் தறியை விட்டு இறங்கியதும் ஆபீசில் இருந்து வெளியே வந்து பக்கவாட்டில் இருக்கும் வேல் விலாஸில் நாலணாவுக்குப் பக்கோடா அல்லது ஆமவடை வாங்கிக்கொண்டு உள்ளே போவான். தூக்குவாளியைத் திறந்துபார்த்தால் – பிழிந்த பழையது. இரண்டு, உப்புப்பரல், நாரத்தங் காய்த் துண்டு. வாங்கி வந்ததைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு சாப் பிட்டு முடிந்து மீண்டும் தறியில் ஏறினால், இறங்க ஆறுமணி ஆகும்.

எட்டுத் துண்டுகளுக்குக் குறையாமல் மடி அறுத்துக் கொடுத்து விட்டு வெளியே வர ஆறரை அடித்துவிடும். காலையில் வீட்டில் இருந்து புறப்படும்போது அம்மா தரும் எட்டணாத்துட்டில் மீதி நாலணா சேப்பில் கிடந்தாலும் பஸ்ஸில் போகத் தோன்றாது மாலையப்பனுக்கு. வழியில் காதரின் பூத் ஆஸ்பத்திரி எதிரே இருக்கும் காப்பிக்கடையில் ஒரு காராச்சேவு வாங்கித் தின்று சுக்குக் காப்பி குடித்துவிட்டு வீடு வரை நடப்பான். யாரோடும் அவனுக்குக் கூட்டு கிடையாது. எவரோடும் சினிமாவுக்கு, திருவிழாவுக்கு என்று அலைவதும் கிடையாது.

பண்டம் பலகாரம் என்றெல்லாம் வீட்டில் செய்வதில்லை. மரு மகளுக்கு ஆசை இருந்தாலும் மாமியார் கயிற்றை இழுத்துப் பிடித்திருப் பாள்.அமாவாசைகளில் ஒடுக்கத்திய வெள்ளிகளில்தான் தோசைக் குப்போட அனுமதி. இது தவிர தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்திரை வருஷப் பிறப்பு, வைகாசி விசாகம் என்று மாதத்திற்கு ஒன்றாய் வரும் விசேட நாட்கள், பூ தோறும் வரும் கதிர்நிறை, புத்தரிசி நாட்களில் பலகாரத்துக்குப் போடுவார்கள். அது கொழுக்கட்டையாகவோ, உப்புமாவாகவோ, பச்சரிசி ரொட்டியாகவோ, புட்டு ஆகவோஇருக்கும். இந்தச் சந்தர்ப்பங்கள் தவிர மற்ற நாட்களில் தலைகீழாக நின்றாலும் பலகாரத்துக்குப் போடுவதில்லை. யாருக்காவது உடம்பு சரியில்லாமல் போனால், எல்லோருக்கும் பொதுவாக வைக்கும் சுடுகஞ்சியைக் கணக்கில் சேர்க்க முடியாது.

மாலையப்பனுக்கு இதெல்லாம் முக்கியப்பட்டவை அல்ல. பசிக்கும் வேளையில் முன்னால் ஏதாவது வந்தால் சரிதான். அது வேண்டும் இது வேண்டும் என்றோ அது நன்றாக இருக்கிறது இது நன்றாக இல்லை என்றோ பேதஅபேதங்கள் கிடையாது.

மாலையப்பனுக்கும் கனகம்மைக்கும் கல்யாணம் ஆகி நாலைந்து ஆண்டுகள் ஆகி இருந்தன. ‘சவம் மலட்டு மூதிங்கேன்’ என்று தங்கம்மை பெண்டுகளிடம் பராதி சொல்ல ஆரம்பித்து மூன்று வருடங்களுக்கும் மேலாயிற்று. கனகம்மைக்கும் அது பற்றி விசேடமாய் வருத்தம் ஒன்றும் இருந்ததாகத் தெரியவில்லை. யாரும் எதிர்பார்த்திராத ஒருமாதம், கனகம்மைக்கு விலக்கு வரவில்லை. மறு மாதமும் வரவில்லை.

கொஞ்ச நாட்களாய் எது தின்றாலும் கனகம்மைக்கு வயிற்றில் தங்கு வதில்லை. ‘ஒவ்,ஒவ்’ என்று ஓங்கரிப்பு வயிற்றைப் புரட்டிப் புரட்டி எடுத்தது. எதையும் தின்னப் பிடிக்கவில்லை. விருப்பமாய்த் தின்னும் மீன் முகத்தில் அடித்துவிட்டது. கத்திரிக்காயைக் கண்டாலே ஆக வில்லை. ‘சாக்கோட்டிக்காரிக்கு’ இதெல்லாம் சகஜம்தான் என மாமியார்க்காரி அனங்கவில்லை.

இருந்தாற்போல கனகத்துக்கு கொழுக்கட்டை அவித்துத் தின்றால் ‘கொள்ளாம்’ என்று தோன்றியது. புழுங்கல் அரிசியை நொறுங்க அரைத்து, வறுத்த உளுந்தம் பருப்பும் திருவிய தேங்காய்ப் பூவும் உப்பும் போட்டு பிசைந்து கொதித்த நீரில் பிடித்துப் போட்டு கொழுக்கட்டை வேகும்போது உண்டாகும் மணம் மூக்கின் முனையில் நிழல்போல் ஆடியது. நாவில் நீர் ஊறிப் பெருகியது.

மாமியாரிடம் சொன்னால் ஒருவேளை செய்துகொள்ளச் சொல்லு வாள். இல்லையேல் படிப்புரையில் உட்கார்ந்து பக்கத்து வீட்டு அக்கா தங்கச்சிகளிடம் ‘பவுருசம் கொழிப்பாள். அம்மாவிடம் சொல்லிச் செய்துகொண்டு வரச்சொல்லலாம். தெரிந்தால் மாமியார்க் கிழவிக்கு வசை சொல்ல வகையான தொக்கு கிடைத்துவிடும்.

இரண்டு மூன்று நாட்களாக யோசித்து யோசித்துப் பார்த்தாள். ஒரு குறுக்கு வழி தோன்றியது. தோசைக்குப் போடும்போது மாமியார் எடுத்துக் கொடுத்த உளுத்தம் பருப்பில் சேமித்த ஒரு கை, வடிக்கக் கொடுத்த புழுங்கலரிசியில் மூன்று கை, திருவிய தேங்காய்ப் பூவில் ஒரு குத்து, தேவைக்கு உப்பு.

வெள்ளியோடு வெள்ளி தான் மாமியார்க்காரிக்கு குளிப்பு. ஒரு குடம் தண்ணீரை செம்புப் பானையில் ஊற்றி குளியலை ஒப்பேற்றி னோம் என்பது அங்கு வழக்கமில்லை. நிதானமாய் ஆற்றுக்குப்போய், ஆவாரங்கொழுந்து பறித்து படிக்கல்லில் வைத்து அரைத்து தலைக்குத் தேய்த்து, தேங்காய்ச் சவரி கொண்டு குளிக்கும் பெண்களிடம் முதுகு தேய்க்கச் சொல்லி ஒரு முந்தியை உடுத்து மறுமுந்தியை அடித்து சேலை துவைத்து….அது விஸ்தாரமான ஒன்றரை மணிக்கூர் வேலை.

மாமியார் தங்கம்மை குளிக்கப்போனதும் மருமகள் முன்வாசல் கதவை அடைத்தாள். பித்தளைப் போணியில் கொவரப் போட்டிருந்த அரிசியை அம்மிமேல் வைத்து அவசர அவரசமாய் நுணுக்கினாள்.

நுணிக்கியதை வழித்து எடுத்து தேங்காய் திருவலோடு சேர்த்து உப்புக் கரைத்து ஊற்றினாள். கொடி அடுப்பில் சீனிச் சட்டியை வைத்து சொட்டுப்போல் எண்ணெய் விட்டு அதில் உளுத்தம் பருப்பை வறுத்து எடுத்து மாவோடு சேர்த்துப் பிசைந்தாள்.

முன் அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருந்தது. அரிசியைக் களைந்து போட்டாள். கொடி அடுப்பில் புளிக்கறி வைப்பதற்கான சக்கையை அவியப் போட்டுவிட்டு முன்னடுப்பில் அரிசியோடு சேர்ந்து கொதித்த உலைத் தண்ணீரில் கொழுக்கட்டை மாவை உருட்டியுருட்டிப் போட்டாள். பெரிய புன்னைக்காய் தண்டியில் ஐந்து இருந்தன.

புளிக்கறிக்கு அம்மியில் மிளகாய் வத்தலும், மஞ்சள் துண்டும் கொத்துமல்லியும் வைத்து அரைக்கும்போது கொழுக்கட்டை வேகும் மணம் மெலிதாக எழுந்தது. கன்றுள்ளிக் கனைக்கும் தாய் எருமையின் பால் மடியாய் வாய்க்குள் உமிழ்நீர் சுரந்தது. எழுந்து கண்ணகப்பையால் ஒரு கொழுக்கட்டையை எடுத்து சூடு பொறுக்க விரலில் இரண்டாக பிளந்துப் பார்த்தாள். உள்ளே முழுதும் வேகாமல் மாவாக இருந்தது. உப்புப் போதுமா என்று பார்க்க ஒரு துண்டை ஊதி ஊதி வாய்க்குள் போட்டாள். தாடை நரம்பு வெட்டி வாங்கியது. சூடும் சுவையும் மணமும்… கலவியில் களைத்த கண்கள்போல் ஒரு போதை கண்ணில் ஏறியது.

சற்றுநேரம் பொறுத்து வெந்திருக்கும் தீர்மானத்தில் ஒவ்வொரு கொழுக்கட்டையாய் எடுத்தாள். மூன்று முழுசாக வந்தது. ஒன்று பாதிதான் வந்தது. அகப்பையைப் போட்டுக் கலக்கியதில் கரைந்து போயிருக்கும் என்று நினைத்துக்கொண்டு மாமியார்க்காரி வருமுன்னால் அவசரமாய் தின்று முடித்தாள்.

தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் உடைமாற்றி, ஒரு துவர்த்தை உடுத்திக்கொண்டு மாலையப்பன் ஆற்றங்கரைக்குப் போவான். மேல் கழுவிவிட்டு வீட்டுக்கு வந்ததும் சாப்பிடுவான். சாப்பிட்டு முடிந்ததும் பெருமாள் கோவிலுக்குப் போவான். பெருமாள் கோயில் முகப்பில் இரவு எட்டுமணி முதல் பன்னிரண்டு மணிவரை சீட்டுக்களி உண்டு. மாலையப்பன் எட்டரை மணிக்குப்போய் ஏதாவது ஒரு கையின் விலாப்பக்கத்தில் உட்கார்ந்து விளையாட்டைக் கவனித்துக் கொண்டிருப்பான். பத்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து படுத்து விடுவான்.

அன்றும் வழக்கம் போல் வீட்டுக்கு வந்து மேல் கழுவி சாப்பிட உட்கார்ந்தான். தட்டத்தில் சோறுபோட்டு மரவையில் சக்கைப் புளிக்கறி கோரிவைத்து ஒரு அகப்பையையும் அதில் போட்டாள் கனகம். சிறிய தட்டில் தொடுகறியாய் கொடுப்பைக் கீரைத்துவரன். கொடுப்பைக் கீரைத்துவரனை சோற்றில் போட்டுப் பிசைந்து நாலைந்து கவளம் விழுங்கிவிட்டு புளிக்கறி ஊற்றுவதற்காக சோற்றைத் தள்ளினான் மாலையப்பன். சோற்றுப் பருக்கைகளின் நடுவே ஒரு துண்டுக் கொழுக் கட்டை. சந்தேகத்தோடு கொழுக்கட்டையை கையில் எடுத்துப்பார்த் தான். அது கொழுக்கட்டை துண்டுதான் என உறுதிபடுத்திக் கொள்ள மாலையப்பனுக்கு சில நொடிகள் பிடித்தன. புத்தியில் ஒன்றும் உறைக்காமல் அம்மாவைப் பார்த்தும் அல்லாமல், பெண்டாட்டியைப் பார்த்தும் அல்லாமல், படைத்த கடவுளைப் பார்த்தும் அல்லாமல், பொதுப்படையாய் ஒருகேள்வியைக் கேட்டான்.

”கொளுக்கட்டை அவிச்சேளா இண்ணைக்கு?’

“கொளுக்கட்டையா? ஏது கொளுக்கட்டைலே? சவம் வெளை யாடுகதைப் பாரேன்.”

‘நானா? நானா ராட்டே வெளையாடுகேன்? இன்னாபாரு. சோத்திலே கெடக்கு.’

கனகம் ஈரக்குலையை கையில் பிடித்துக்கொண்டு பரிதவிக்கையில், சந்திரக்கல்லை ஆராயும் விஞ்ஞானியின் நுணுக்கத்தோடு தங்கம்மை கொழுக்கட்டையை ஆராய்ந்தாள்.

“இது எப்படி சோத்துக்குள்ளே வந்து?….ம்…”

பட்டென்று புரிந்தது தங்கம்மைக்கு.

“ம்… சம்பிராயக் கோழி சாமம்போல முட்டையிட்டாம். கொள்ளாம்மா கூத்து… வேண்டிய லெட்சணந்தான். பொம்பளைக்கு நாக்கு அப்பிடித் துடிக்குமா? சவத்து நாக்கை சுட்டுப் பொசுக்கணும். இப்படி கள்ளத் தீத்தி திண்ணா வீடு உருப்பட்ட மாதிரிதான்…”

அடுத்த எடுப்புக்காக மூச்சு வாங்கிக் கொள்ள தங்கம்மை நிறுத் தினாள். மாலையப்பனுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. கனகம் குன்றிப் போய் நின்றாள்.

“நிக்கதைப் பாரேன் நல்லபிள்ளை கெணக்க. ஒண்ணுந் தெரியாத பாப்பா ஒரு மணிக்குப் போட்டாளாம் தாப்பா… எத்தனை நாளா இந்தக் கள்ளத் தீத்தி நடக்கு? உனக்கு அம்மைக்கு ஆமக்கனுக்கு மொதலு கெடக்குண்ணா இப்படிப் பொறப்பட்டிருக்கே…”

மாலையப்பன் இப்போது தான் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான். மகனிடம் ஒரு சலனமும் இல்லாது இருந்ததைக் கவனித்த தங்கம்மை ஏவுகணைகளின் இலக்கை மாற்றினாள்.

“பாத்துக்கிட்டு இருக்கியேலே பொண்ணையா? பொண்டாட் டியைத் தட்டிக் கேக்கத் தெரியாது ? உப்பு போட்டுத்தாலாசோறு திங்கே? செம்மான் கெணக்க இருக்கான். பொண்டாட்டியை ஏமுட்டி அப்படிச் செய்தேண்ணு கேக்க நாக்கு வருகாபாரேன்? வாயிலே நாபறிச்ச மண்ணா கெடக்கு?”

இப்போது தான் செய்யவேண்டியது இன்னதென்று புரிந்துகொண் டது போல் வேகமாக எழுந்தான் மாலையப்பன்.

“பலவட்ற தேவ்டியா… உனக்கு கொழுப்பு கூடிப்போச்சா?” என்று கேட்டவாறு வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

மறுநாள் அதிகாலையில் கனகத்துக்கு ‘காய்’ விழுந்தது. பகலெல் லாம் தங்கம்மையின் புலம்பல் கேட்டுக்கொண்டே இருந்தது.

“இந்த மோணையன் இப்படிச்செய்துபோட்டானே… அஞ்சு வருசத்துக்குப் பொறகு பிள்ளை உண்டாயிருக்காண்ணு நான் அவளை பூப்போல் இல்லா வச்சிருந்தேன். இந்த சண்டாளப்பாவி இப்படிச் செய்து போட்டானே…”

– கணையாழி, டிசம்பர் – 1980.

நன்றி: https://nanjilnadan.com

நாஞ்சில்நாடன் நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *