வாய்வா? தாய்வா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 13,030 
 
 

அப்புசாமி ‘ஆ!’ என்றார் தோளைப் பிடித்துக் கொண்டு, தோளில் தென் வடலாக நாற்பது டிகிரி கோணத்தில் ஒரு வலி சுரீர் என்று எங்கோ சென்றது. மீண்டும் வடகிழக்காக அது திரும்பி, கிழமேற்காக மையம் கொண்டது. 

அப்புசாமிக்கு நன்றாகத் தெரிந்தது, நிச்சயம் அது வாயுதான் என்று. கொஞ்ச நாளாக, அவர் உடம்புக்குள் ஏதோ ஒரு வாயு, மந்திரி மாதிரி அடிக்கடி சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தது. 

“கடற்கரைக்கு நான் காற்று வாங்க வந்தால், கூடவே இந்த ‘வாயு’வும் காற்று வாங்க வரவேண்டுமா? வாயுவே காற்றுதானே… மட வாயு!” 

திடீரென்று அப்புசாமி நெளிந்தார். மெரினாவில் அவர் உட்கார்ந்திருந்த சிமெண்டுப் பெஞ்சு சுரீரென்று சூடானது போலிருந்தது. சட்டென்று எழுந்தார். விருட்டென்று துண்டைத் தலையில் போர்த்திக் கொண்டார். வேகமாக வாக்கிங் செய்யலானார். வாக்கிங் என்று அதைச் சொல்ல முடியுமா? ரன்னிங். 

நகர்ந்து கொண்டிருந்த ஒரு பஸ்லை நோக்கி அவர் ஓடக் காரணமாக இருந்த உருவம் அமைதியாக சைக்கிளில் அவரைப் பின்பற்றியது – ஈட்டிக்கார அஜ்மல்கான்! 

“அரே அப்போசாமி! அரே அப்போசாமி! அப்போ துட்டு வாங்கினே… இப்போ ஓடறே… ” என்று சைக்கிளில் அந்தத் தடித்த உருவம் கூறியவாறு தன்னை நெருங்கி வந்துவிட்டதை அப்புசாமி உணர்ந்து விட்டார். இன்னும் தன் வேகத்தை அதிகப்படுத்தியிருப்பார் அதற்குள் 

பாழாய்ப்போன வாயுப் பிடிப்பு அபாய அறிவிப்புச் சங்கிலியை ‘அகாரணமாய்’ இழுத்தமாதிரி முழங்காலுக்கு பிரேக் போட்டுவிட்டது. “நாசமாய்ப் போக!” என்று சபித்தவாறு நின்றார். 

ஈட்டிக்காரனும் சைக்கிளுக்கு பிரேக் போட்டான். “பஸ் மேலே ஏறிப் போயிடலாம்னு பார்க்கறே, அரே அப்போசாமி! நம்ப பைசா மூணு மாசமா நிற்கறான்… தப்பு விலாசம் கொடுத்துட்டுத் தலைமறைவாச் சுத்தறான்…” 

அப்புசாமி “ஹி! ஹி!” என்று சலாம் போட்டார். “கொடுத்திடறேம்பா அஜ்மல் நம்பள் உம்பளை மோசம் பண்ணலே. ஒரு நாலு நாள் டைம்… ” 

“நம்பளை டபாய்க்கறே? ரெண்டே நாள் டைம் தர்ரான். அப்புறம் நாம்பள் வூட்டண்டை வந்து கல்ட்டா பண்றான்… வருத்தப்படாதே…” 

அஜ்மல்கான் எச்சரித்துவிட்டுச் சைக்கிளை மிதித்துக் கொண்டு போய்விட்டான். 

இரண்டுநாள் டைம்! 

அப்புசாமிக்கு ஆத்திரமாக வந்தது. அட சீ! முழங் காலில் வாயு மட்டும் பிரேக் போட்டுக் கழுத்தறுப்பு செய்யாதிருந்தால் விருட்டென்று பஸ் ஏறிப் போயிருப்பார் – நம்பள் நிம்பளை ஒண்ணும் பண்ணியிருக்க முடியாது. 

கவலையுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். சீதாப் பாட்டி பரிமாறி வைத்திருந்த உருளைக்கிழங்கு கறி ‘வருக வருக’ என்று அழைத்தாலும் சும்மா போய் சோபாவில் முடங்கிக் கொண்டுவிட்டார். 

ஸ்டடி ரூமிலிருந்து வந்த சீதாப்பாட்டி ஆச்சரியத் துடன், “வாட் ஹாப்பண்ட் டு யூ? வாய்க்கும் கைக்கும் என்று சண்டை நடத்திக் கொண்டிருப்பீர்கள் பார்த்தால்…” 

“சீதே…” முனகினார் அவர். 

கடற்கரையில் முழங்காலுடன் கொஞ்சிக் கொண்டிருந்த வாயு இப்போது மார்பைப் பிடித்துக் கொண்டிருந்தது. 

“எனக்கு என்னவோ செய்கிறது சீதே. வாயு! வாயு;” என்றார். 

“வாயுவா?” என்றாள் சீதாப்பாட்டி- 

“ஆமாம். வாயுதான். கொஞ்ச நாளாகவே மார்பிலே சுரீர் சுரீர் வலி. தோளிலே பளீர் பளீர் வலி. தலை சுற்றல்… முதுகு வலி… கால்வலி… இப்போ நெஞ்சு வலி.. ஈட்டியால் குத்தியது போல் வலி… தினமும் பூண்டு ரசம் சாப்பிட்டால் சரியாகப் போய்விடும். 

“பூண்டு ரசமா?” சீதாப்பாட்டி திகைப்பூண்டை மிதித்தவள்போல் கேட்டாள். அடிக்கடி அப்புசாமி ‘பூண்டு ரசம், பூண்டு ரசம்’ என்று கேட்டுவந்ததும், ஒருநாள் அவளுக்குத் தெரியாமல் அமர்க்களமாக நடுராத்திரி பூண்டு லேகியம் தயாரிக்க முனைந்து கையும் கரண்டியுமாக அகப்பட்டதும் நினைவுக்கு வந்தது. வெள்ளைப்பூண்டு மணம் என்றாலே சீதாப்பாட்டிக்கு அலர்ஜி. ஒரு பர்லாங் தூரம் ஓடிவிடுவாள். 

“ஆமாம். பூண்டு ரசம் பண்ணிவிடு. அதுதான் வாயுவுக்குச் செம்தியான உதை கொடுக்கும்” என்று எழுந்து கொண்டார் அப்புசாமி. 

“நான்ஸென்ஸ்!” என்றாள் சீதாப்பாட்டி. “அந்த மண்ணாங்கட்டி ரசமெல்லாம் எனக்கு ப்ரிபேர் பண்ணத் தெரியாது. உங்களுக்கு உடம்பில் என்னென்னவோ கோளாறு என்கிறீர்கள். அதுவும் நெஞ்சுவலி என் கிறீர்கள்… நெக்லெக்ட் பண்ணக்கூடிய சமாசாரமில்லை இது. பூண்டு ரசமாம்.. வாயுவாம்… பேத்தல்! வாட்யூ நௌ ரிக்வயர் இஸ் எ தரோ மெடிகல் செக்கப்! ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் பதியிடம் ஐ ஷல் ஃபிக்ஸ் யூ அன் அப்பாயிண்ட்மென்ட் டுமாரோ. எக்ஸ்ரே, ஈஸிT, WnT எடுக்கணும் என்றால் உடனே எடுத்துக் கொள்ளுங்கள்.” 

“சீதாஜி!” என்றார் அப்புசாமி பல்லை நறநறவென்று கடித்து. “எனக்கு ஈ. ஸி. ஜி., எறும்பு ஜி எந்த ஜியும் தேவை யில்லை. தினமும் ஒரு கப் பூண்டு ரசம்ஜிதான் வேண்டும். என் வாய்வு பூண்டோடு ஒழிகிறதா இல்லையா பார்?” 

சீதாப்பாட்டி அவரோடு இந்த நிலையில் அதிகமாக ஆர்க்யூ பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம் என்று எண்ணினாள். 

“ஆல் ரைட்…ஆல் ரைட் டோன்ட் கெட் எக்ஸைடட்… இந்த நிலையில் உங்களுக்கு பி. பி… ஐ… மீன்… ப்ளட் ப்ரஷர்… அதிகமாகக் கூடாது.” 

அப்புசாமி முனகினார். “எனக்கு ஏன் அந்த மாதிரியான ரத்த வியாதியெல்லாம் வருது? உன் மாதிரி சோபாவிலேயே உட்கார்ந்திருக்கிறவங்களுக்குத்தான் பி. பியும் டும் டும்மும் வரும். எனக்கு வந்திருப்பது சாதாரண வாய்வு. இதிலே ஒண்ணும் தாய்வு கிடையாது 

அப்புசாமியின் ஆட்சேபத்தைப் பொருட்படுத் தாமல் சீதாப்பாட்டி மறுநாள் அவரை டாக்டர் பதியிடம் கிளப்பி விட்டுவிட்டாள். 

அப்புசாமி பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். கொஞ்ச நேரம் முன்னால் சீதாப்பாட்டி கொடுத்த புதிய நூறு ரூபாய் நோட்டு விடைப்பாக அவர் ஜிப்பாப் பையில் இருந்தது. 

‘ஹூம்… ஒரு பெருமூச்சு விட்டார். பாக்கெட் மணி பத்து ரூபாய் தரக் கணக்குப் பார்க்கிற சீதேக் கிழவி நூறு ரூபாயைத் தாராளமாகத் தந்து வழி அனுப்பி வைத்திருக் கிறாள் – டாக்டர் பதியிடம் போய் உடம்பைக் காட்டிக் காணிக்கை சமர்ப்பிக்கச் சொல்கிறாள். 

அப்புசாமிக்கு மனசாகவில்லை. நூறு ரூபாயா ஒரு டாக்டருக்கு – அதுவும் சாதாரண வாய்வு. இதற்காக நூறு ரூபாய் செலவழிப்பதா? 

‘எக்ஸ்ரே, ஒய்ரே, சத்யஜித்ரே என்று எத்தனை விதமாக இந்த டாக்டர்கள் பணம் பிடுங்குறாங்கடாப்பா;’ என்று வருந்தினார். ‘பணம் போனாலும் பரவாயில்லை. இருதயத்தையே அறுத்து வேறு வைக்கணும் என்று சொன்னால்கூடச் சொல்லுவான்… அவன் பாட்டுக்கு ஏதாவது ஒரு ஆட்டு இருதயத்தை வச்சுத் தைத்து போட்டுக் கையைக் கழுவிவிடுவான். நான் அப்புறம் ‘பே பே பே;’ என்று ஆயுளுக்கும் கத்திக் கொண்டிருக்கணும். இந்தச் சீதேக் கிழவிக்கு ஏற்கனவே என்னிடம் ரொம்ப மதிப்பு …பேபேபேன்னு ஆடுமாதிரி கத்திக்கொண்டு அப்பேசாமி ஆகிவிட்டால், கசாப்புக் கடைக்காரனுக்கு விற்றாலும் விற்றுவிட்டுப் போய் விடுவாள்… ‘ 

அப்புசாமி இப்படியெல்லாம் குழம்பிக் கொண்டிருக்கும் போதுதான் பளிச்சென்று அந்தச் சுவரொட்டி தெரிந்தது. முதலில் அந்த வண்ணச் சுவரொட்டியை யாரோ பிரமுகரின் பிறந்த நாள் சுவரொட்டியாக இருக்கும் என்று எண்ணி அலட்சிய மாகச் சரியாகப் பார்க்கவில்லை. 

அப்புறம் சுவரை ஒட்டி நடந்தபோதுதான் நன்கு கவனித்தார். 

‘மலிவான வைத்தியம்! 

இயற்கை வைத்தியத்தில் சக்ரவர்த்தி!’ என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது. 

அப்புசாமியின் மனம் துள்ளியது. இயற்கை வைத்தியம். ஆகா மலிவு வைத்தியம். 

இயற்கை வைத்தியம்! வாயுவையும் குணப்படுத்திக் கொண்டுவிடலாம். சீதேக்கிழவி மருந்துக்குக் கொடுத்த பணத்தைக் கொண்டு ஈட்டிக்காரனையும் சமாளிக்கலாம். ‘அரே அஜ்மல்கான்! நிம்பள் பாக்கி நம்பள் தீர்த்துக் கட்டறான்!” 

மூக்கை ஜிர்ரென்று ஓர் உறிஞ்சு உறிஞ்சினார் அப்புசாமி. ஆ, எத்தனை வகையான மூலிகை மணம்! தேனாம்பேட்டையில் ஒதுக்குப் புறமாக இருந்தது அந்த இயற்கை வைத்தியசாலை. அது அமைந்திருந்த தோட்டத் துக்குள் வந்ததுமே அவருக்குத் தனது பித்த வாத சிலேத்துமாதி நோய்கள் குணமாகிவிட்டது போன்ற புத்துணர்ச்சி வந்தது. 

மாலையின் பொன் வெய்யிலில் பாத்திகளிலிருந்த கீரைச் செடிகள் தளதளத்தன. அம்மாடி, எத்தனை வகைக் கீரைகள்! எண்ணினார். 21 வகை. 

இயற்கை வைத்தியர் டாக்டர் அகத்தி, அன்போடு வரவேற்று அவருடன் பேசினார். பெயர் முகவரி முதலிய விவரங்களை எழுதிக் கொண்டார். அவரை உள்ளே ஹாலுக்கு அழைத்துச்சென்று ஓர் அறையைக் காட்டினார். “இதுதான் உங்கள் தனி அறை. நீங்கள் வசதியாக இருக்கலாம் சிகிச்சைகள் உங்களுக்குப் படிப்படியாகக் தருவோம். இது ஆங்கில வைத்தியத்துக்கு நேர் எதிர். குணம் தெரிவதற்கு நோயாளி பொறுமையாக ருக்கவேண்டியதுதான் இதில் முக்கியமானது. மறுபடியும் காலையில் சந்திக்கிறேன்.” 

டாக்டர் அகத்தி போய்விட்டார். 

ராத்திரி ஏழு மணிக்கு ஒரு வேலையாள் அப்பு சாமிக்கு எலுமிச்சம்பழ சர்பத் ஒரு டம்ளர் கொண்டு வந்து தந்தான் – உப்பு போட்டது. 

கொஞ்சம் கொஞ்சமாக ருசித்து அதைச் சாப்பிட்ட வாறே, “ஏம்பா, நைட்டுக்கு ஆகாரம் எப்போ கொண்டு வருவே? பசுபசுவென்று ஏதோ காரட் போச்சே… காரட் சாம்பாரா, இல்லே கோசுமறியா?” என்றார். 

வேலைக்காரன் சுருக்கமாக, “டம்ளரைக் குடுங்கோ…” என்று கேட்டு, சில பல துளிகள் அதில் இருக்கும்போதே வாங்கிக்கொண்டு சரேலென்று போய்விட்டான். 

ராத்திரி மணி எட்டாயிற்று. 

‘என்ன, சமையல் வாசனை ஒன்றையும் காணோம்’ என்று மெதுவே தன் அறைக்குள் நடைபோட்டுக் கொண் டிருந்தார். கதவை யாரோ தட்டினார்கள். அப்புசாமி திறந்தார். குள்ளமான ஓர் ஆசாமி நின்றிருந்தார். “நான்தான் பக்கத்து ரூம்காரன். ஓடிகிட்டே இருக்கிறேன். ஆமாம். வெங்காயம் வந்துட்டுதா?” 

“வெங்காயமா?” என்றார் அப்புசாமி. “வரலியே” 

“ஹூம்… முதல் நாளே அது வரலியா?” என்று பெரு மூச்சு விட்டுவிட்டு அந்த ஆசாமி வேக வேகமாக இருளில் மறுபடி ஓடத் தொடங்கினார். 

ஏன் அந்த ஆசாமி ‘வெங்காயம் வந்ததா?’ என்று கேட்டுவிட்டு இருளில் ஓடவேண்டும்? 

அப்புசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. இருட்ட இருட்ட மனத்தை என்னவோ பரபரத்தது. 

அன்பான டாக்டர் அகத்தியையும் காணோம். ஆகாரத்தையும் காணோம். நேரமோ மணி ஒன்பதாகி விட்டது. 

அவர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, அகன்ற ஒரு பெரிய தட்டில் எதையோ வைத்து மூடி எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி சிப்பந்தி அவர் அறைக்கு வந்தான். 

“அப்பாடா! வந்ததுடாப்பா சாப்பாடு…” என்று கட்டிலில் உட்கார்ந்து சாப்பாட்டுத் தட்டின்மேலிருந்த அகன்ற மூடியைத் திறந்தார். 

ஒரு டார்ச் லைட்டும், வட்டமாக நறுக்கப்பட்ட ஒரு வெங்காயத்துண்டும் இருந்தது. வேலையாளும் போய் விட்டான். 

‘இது என்ன விசித்திர ஜோடி! கலப்புத் திருமண ஜோடி மாதிரி டார்ச் விளக்கு – வெங்காயம்! அப்புசாமி திகைத்தார். 

அதற்குள் யாரோ திப்திப்பென்று ஓடிவரும் சத்தம் கேட்டது. கொஞ்சம் முன் கதவைத் தட்டி ‘வெங்காயம் வந்துட்டுதா?” என்று கேட்டவர்தான் ஓடிவந்து கொண்டிருந்தார். 

சட்டென்று “சார்! வெங்காயம் சார்!” என்று ஓடினவரை இழுத்துப் பிடித்து அப்புசாமி நிறுத்தினார். கொஞ்சம் நீங்களாவது விளக்கிச் சொல்லுங்கள். எதற்கு இந்த டார்ச் விளக்கும்… வெங்காயமும்…?” 

அவர் விஷயத்தை விளக்கினார். 

நோயாளிகள் அனைவரும் தினமும் விடி காலையிலும் ராத்திரியிலும் வைத்தியசாலையை சுற்றிக் குறைந்தது ஐந்து ரவுண்டுகளாவது ஓடவேண்டுமாம். “புதிதாகச் சேர்கிற நோயாளிகள் இருட்டில் செடி, மரம், கொடி இவற்றில் முட்டிமோதிக் கொள்ளாமலிருக்க கொஞ்ச நாளைக்கு டார்ச் விளக்கு ஆஸ்பத்திரியிலேயே தருவார்கள். அப்புறம் பழகிப்போனால் தரமாட்டார்கள்” என்று கூறிய அடுத்த ரூம்காரர், அப்புசாமியின் கையிலிருந்த வெங்காயத் துண்டையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். 

அப்புசாமியோ அதை அறியாமல் ஓட்டக் கவலையில் மூழ்கியிருந்தார். தினமும் அவரால் ஓட முடியுமா? “அது சரி… இந்த வெங்காயத்தை என்ன பண்ணணுமாம்!” என்றார் எரிச்சலுடன், அதைத் தரையில் தேய்த்தவாறு. 

எதிரிலிருந்த ஓட்டக்காரர், “அடடே.. அடடே!” என்றார் தன்னையே அப்புசாமி தரையில் தேய்ப்பதுபோல, “அதைத் தேய்க்காதீங்க சார். அதுதான் உங்களுடைய ராத்திரி ஆகாரம்…! எனக்கு அதுவும் இல்லை!” 

“என்னது?” அப்புசாமி துள்ளிக் குதித்தார். “என்ன சார்… விளையாடறீங்க.. ராத்திரி பூராவுக்கும் இந்த வெங்காயத் துண்டுதான் ஆகாரமா?” 

“நீங்க அதிருஷ்டசாலி சார்… சாயந்திரம் வேறு எலுமிச்சம்பழ ஜூஸ் சாப்பிட்டீங்க… இப்போ வெங்காயத் துண்டு வேறு…என் நிலையைப் பாருங்க. நான் மூணு நாளாப் பட்டினி. படுபட்டினி. தண்ணீர் மட்டும்தான் தருகிறார்கள்! நமக்கென்னங்க… உடம்பை சொஸ்தம் பண்றேங்கறாங்க பண்ணட்டும். முடிஞ்ச ஒத்துழைப்பை நாம் தந்துடறது… முடியலியா, எப்படியும் சாகப் போறோம்… இப்படித்தான் செத்துப்போறது… என்ன நான் சொல்றது? வரட்டுங்களா… கொஞ்சூண்டு வெங்காயம் வேணாத் தர்ரீங்களா? நாக்கு ஊறுது… யாரானும் பார்த்துடப் போறாங்க… சீக்கிரம்… 

அப்புசாமிக்கு இரண்டு கண்ணிலும் கடகடவென்று தண்ணீர் கொட்டிவிட்டது. “முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுத்தான் ஒருவன். ஒளவைக்காக அரிய அருநெல்லிக்கனியைத் தந்தான் இன்னொருவன். இதோ இந்த வெங்காயத் துண்டு முழுசையுமே உமக்கு நான் கொடுக்கறேன்!” 

வெங்காயத்தை தின்றுவிட்டு சந்தோஷமாக ஓடி விட்டார் அடுத்த அறை நோயாளி. 

அப்புசாமி தாளம் போட்டவாறே சிந்தித்தார். ‘இங்கே மேலும் இருக்க வேண்டியதுதானா? டாக்டர் பதியே கதி என்று ஓடிவிடலாமா? ஆனால் அஜ்முல்கான் பாக்கி?’ சிந்தித்துக்கொண்டே தூங்கிவிட்டார். 

காலையில் அப்புசாமி கண்விழித்தபோது டாக்டர் அகத்தி புன்முறுவலுடன் அருகே நின்று கொண்டி ருந்தார். “இறைவணக்கம் செய்துவிட்டீர்களோ?” என்று கேட்டார். 

அப்புசாமிக்கு ராத்திரி தன்னைப் பட்டினி போட்டு விட்டதால் அகத்திமீது கோபம். ஆகவே பதில் சொல்லாமல் முகத்தை மட்டும் ஏறிட்டுப் பார்த்துவிட்டு மௌனமாகிவிட்டார். 

“எல்லாவற்றையும் காரில் தூக்கிப் போடப்பா. வீரப்பன் தயாரா? இந்தா, நாயர், வீரப்பன்கிட்டே பேஷண்ட்டை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குப் போகணும் என்று சொல்லு. அவன் ஒரு சரியான தூங்குமூஞ்சி…சீக்கிரம் ரெடியாகட்டும்.” 

அப்புசாமி ஆச்சரியப்பட்டார். ஆனந்தப்பட்டார். தன் ஒருத்தனைக் கடற்கரைக்கு அழைத்துச் செல்ல ஆகா, என்ன தடபுடலான ஏற்பாடு! டாக்டர் அகத்தியின் அன்பு அவர் மனத்தை நெகிழவைத்தது. 

ராத்திரி பத்து மணியாகியும் அப்புசாமி வீடு திரும்பாததால் சீதாப்பாட்டி மிகவும் கவலைப்பட்டாள். டாக்டர் பதியின் கிளினிக்குக்குப் போன் செய்தாள். அங்கே அவர் வரவே இல்லை என்ற தகவல் அவளை ‘ஷாக்’ அடைய வைத்தது. 

மீண்டும் ஏதாவது ஹார்ட் ட்ரபிள் ஏற்பட்டுப் போகிற வழியில் கீழே விழுந்துவிட்டாரா? 

மறுநாள் காலையிலும் அவர் வராதது குழப்பத்தை அதிகரித்தது. * 

இருப்புக் கொள்ளாமல் காரை எடுத்துக்கொண்டு கார் போன வாக்கில் சென்று கொண்டிருந்தாள். 

கார் எலியட்ஸ் பீச்சுக்கு வந்து விட்டதுகூட அவளுக்கு உணர்வில்லை. 

கார் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தது. அவர் மனமோ கேட்டுக்கொண்டிருந்தது – ‘கோவாடிஸ்’ – எங்கே செல்கிறாய்? 

கால் பிரேக்கை மிதித்தது. 

அது என்ன அது! 

சிறிது தூரத்தில் மணலில் ஏதோ மனிதத் தலை கிடப்பது போலத் தெரிகிறதே – அதுவும் அவள் கணவரின் உருவம் போலவே? 

“மை குட்னஸ்!” என்று தன்னை உலுக்கிக் கொண்டாள். ‘என்ன ஒரு இல்யூஷன்! யார் வீசி எறிந்த நசுங்கிப்போன தகர டின்னோ? அவருடைய தலை மாதிரி என் கண்ணுக்குத் தெரிகிறதே’. ரொம்ப ‘டீப்’பாக அவரையே நினைத்துக் கொண்டிருப்பதன் விளைவு போலும்” 

தகர டின் இன்னமும் அவள் கணவனின் தலை மாதிரியே தோற்றம் தந்து கொண்டிருந்தது. 

டால்டா டின்னா? டார்லிங் தலையா? டார்லிங் டின்னா, டால்டா தலையா? அவளுடைய கண்தான் அவளை எப்படித் தொடர்ந்து ஏமாற்றுகிறது. கீழே குனிந்து தேடினாள். ஏதாவது சிறிய கல்லாக் கிடைக்காதா, தகர டின்மீது வீசி எறிந்து பார்க்கலாம் என்று. 

மணலில் கல்லே கிடைக்காததால், காரில் பின்பக்கம் வைத்திருந்த வாழைப்பழங்களில் ஒன்றைப் பிய்த்து தகர டின்னைக் குறி பார்த்து எறிந்தாள். 

என்ன ஆச்சரியம். தகர டின் ‘டங்’ என்று சத்தம் கொடுப்பதற்கு பதில் வாழைப்பழத்தை லபக்கென்று கவ்விக்கொண்டது. 

மெய் சிலிர்த்தது சீதாப்பாட்டிக்கு. 

இயற்கை வைத்தியம் தன்னை இப்படிக் கழுத்து வரை மணலில் புதைத்துவிடும் என்று அப்புசாமி கனவிலும் நினைக்கவில்லை, 

காரிலிருந்து இறங்கியதும் வேலையாள் வீரப்பன் ஒரு நாடாவை வைத்து அவர் உயரத்தை அளந்தான். மண்வெட்டியால் பரபரவென்று மணலைப் பறிக்கத் தொடங்கினான். 

அப்புசாமிக்குப் புரியவில்லை. “தாகமாயிருந்தால் எங்காவது இளநீர் வரவழைக்கலாமே. ஊற்றுப் பறித்துத் தண்ணீர் குடிக்கவேண்டுமா என்ன?” என்றார். 

டாக்டர் அகத்தி மிருதுவான குரலில், “அன்பரே… உமது நன்மைக்காகத்தான் குழி வெட்டுகிறோம், குழியில் ஒரு மணிநேரம் இருந்தால் போதும். அற்புதமான குணம் தெரியும்”, என்றார். 

அப்புசாமிக்குத் தாங்கமுடியாத கோபம் வந்து விட்டது. “யோவ் அகத்திக்கீரை! உம்மை நம்பி வந்ததற்குக் குழியை வெட்டி இறக்கப் பார்க்கிறீரே… நியாயமா…”? என்று கூக்குரலிட்டார். 

குழி வெட்டி முடித்த வீரப்பன். “சாமி…சீக்கிரம் ஆகட்டும்… சட்டையையும் கழற்றுங்க…” என்று அவர் தோலை உரிக்கவிரும்புபவன் போல் சட்டையைப் பற்றினான். 

“அடே அடே. வேண்டாண்டா… அஜ்முல்கான்! அஜ்முல்கான்!” என்று அப்புசாமி அலறினார். அஜ்முல் கானின் பாக்கி தீர்ப்பதற்கான பணத்தைச் சட்டையில் அல்லவா வைத்திருக்கிறார்? 

“யாரது அஜ்முல்கான்”? என்று வினவினார் டாக்டர் அகத்தி, 

“என் குலதெய்வம்!” என்று எரிச்சலுடன் கூறினார் அப்புசாமி. “சட்டையைக் கழற்றாமல் வேணும்ணால் குழியில் இறங்கறேன்… சம்மதமா?” 

டாக்டர் அகத்தி, “சரி அன்பரே… வீரப்பா… ஆகட்டும்….ஐயாவைச் சரியாக ஒருமணி கழித்துக் கூட்டி வந்துவிடு…” என்று கண்ணால் ஒருமாதிரி சாடை காட்டி. விட்டுப் போய்விட்டார். சாடைக்கு அர்த்தம் நாலுமணி நேரம் கழித்துக் கூட்டிவா என்பது. 

வீரப்பன் பரபரவென்று மணலைப்போட்டு மூடினான். 

“வீரப்பா… பயம்மா இருக்குடா…” என்றார் புதை யுண்ட அப்புசாமி. 

“அப்படித்தானய்யா இருக்கும். இங்கேயே பத்திரமா நீ இரு. எங்க சித்தாத்தா ஊடு இங்கே பக்கத்திலேதான் இருக்கு. இதோ தலையைக் காட்டிட்டு வந்தடறேன்… நண்டுகிண்டு வந்தால் பயப்படாதே… எச்சில் துப்பு. ஓடிடும்…என்னா தெரியுதா?” 

“டேய்! டேய்! படுபாவி! படுபாவி!” என்று கத்தக் கத்த வீரப்பன் போயே போய்விட்டான். 

அவனும் டாக்டர் அகத்தியிடம் தினமும் லீவ் கேட்டு அலுத்துப்போயிருந்தான். கிடைத்த சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக்கொண்டுவிட்டான். 

“அடே வீரப்பா, வீரப்பா… ரப்பா… ரப்பா.. ப்பா… ப்பா…பா..பா…” என்று அப்புசாமி தொண்டை வறளக் கத்திச் சோர்ந்துவிட்டார். அப்போதுதான் சீதாப்பாட்டி அங்கு வந்து சேர்ந்தாள். 

மணலில் கிடப்பது கணவரின் அசல் தலைதான் என்று தெரிந்ததும் சீதாப்பாட்டிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தாங்க முடியாததாக இருந்தது. 

“சீதே…”என்றார் அப்புசாமி, சிரமத்துடன் மனைவி யைக் கண்களால் ஏறிட்டுப் பார்த்து. “இப்போதுதான் உன்னைப்பற்றி தியானம் செய்தேன். சீதே, உன்னைக் காரிலே வந்தவளாக நான் நினைக்கவில்லை. கருட வாகனத்திலே வந்த கடவுளாக நினைக்கிறேன்.” 

சீதாப்பாட்டி, “ஸே…வாட் இஸ் ஆல் திஸ்? எப்படி நீங்கள் மணலுக்குள் போனீர்கள்?” என்றாள். 

“நான் போகிறேனாக்கும்? என் தலைவிதி! இயற்கையின் சதி!” 

நடந்த விஷயங்களை அவர் விவரித்தார். 

அவர் சொல்லச் சொல்லச் சீதாப்பாட்டிக்கு ஆத்திரமாக வந்தது. “எவ்வளவோ பாலிஷாக உங்களை நடத்தப் பார்க்கிறேன். நீங்கள் அவ்வளவுக்கு அவ்வளவு ஃபூலிஷாக நடந்துகொள்கிறீர்கள். எனக்கு உங்களோடு என்ன செய்வதென்றே தெரியவில்லை.” 

“சீதே…” என்றார் அப்புசாமி எரிச்சலுடன். “முதலிலே என்னைக் குழியிலிருந்து தோண்டி எடு…” 

பற்றிக்கொண்டு வந்தது சீதாப்பாட்டிக்கு “பெரிய கிம்பர்லி டைமண்ட்! உங்களைத் தோண்டி நான் எடுக்க வேண்டுமாக்கும்? யார் புதைத்தார்களோ அவர்களையே கூப்பிட்டுத் தோண்டச் சொல்லுங்கள்!” 

அப்புசாமிக்குப் படுகோபம் வந்துவிட்டது. “ஏண்டி, குழியில் சிக்கிக்கொண்டு நான் தவிக்கிறேன். இப்போ பார்த்து நீ சத்தாய்க்கிறியா.. வேண்டாம். நம்ம கைலே ‘ராங்’ வச்சுக்காதே…” 

“ஷட்அப்” என்றாள் சீதாப்பாட்டி, “உங்களுக்குக் கோபம் வேறா? ஆமாம். டாக்டர் பதிகிட்டே கொடுக்கச் சொல்லி நான் தந்த பணத்தை என்ன பண்ணினீர்கள்… மசால்தோசை ஐ சப் போஸ்…” 

“மண்ணாங்கட்டி தோசை! கணக்குக் கேட்கிற நேரத்தைப் பார்க்கலை?” 

சீதாப்பாட்டி பெருமூச்செறிந்தாள். கைக்குட்டை யால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். “உங்களை ப்ளேம் பண்ணிப் பிரயோசனமில்லை. ஐயம் என் இடியட். உங்களைத் தனியாக அனுப்பியிருக்கக் கூடாது.” 

“ஆ! பெரிய நண்டு! தாய் நண்டு!” என்று அலறினார் அப்புசாமி. சிறிது தூரத்தில் தரைமட்டத்தில் ஒரு நண்டு மறைவதைப் பார்த்து. அந்தத் தாய் நண்டு தன் குஞ்சு களைத் தேடி சுரங்கப்பாதை வழியாக அவர் இடுப்புக்கு வரக்கூடிய சாத்தியக்கூறு இல்லையென்று எப்படிக் கூற முடியும்? “சீதே… சீதே… சீக்கிரம் தோண்டேன்… நண்டேன்.” 

சீதாப்பாட்டி சீரியஸாகக் கேட்டாள் : “முதலில், நான் கேட்கிறதற்குப் பதில் டாக்டர் பதியிடம் ஒரு அப்பாயிண்ட்மென்ட் ஃபிக்ஸ் செய்திறதென்றால் டு யூ நோ ஹௌ மச் டிஃபிகல்ட் இட் இஸ்? போகட்டும். பணத்தை என்ன பண்ணினீர்கள்?” 

அப்புசாமி பல்லை நறநறத்தார். நண்டு வேறு டைரக்ஷனில் போய்விட்ட தைரியம். “பணம்! பணம்! பணம்! உன் பணம் எங்கேயும் போகாதடி பணப் பிசாசே! என் ஜிப்பாப் பையிலே பத்திரமாயிருக்கிறது. நீ ஒரு ஈட்டிக்காரி. உன்னைவிடப் பெரிய அசல் ஈட்டிக்காரன் இருக்கிறானல்லவா? அவனுக்காக அதைப் பத்திரமாக வைத்திருக்கிறேன்.” 

சீதாப்பாட்டி அதிர்ச்சியுடன், “ஈட்டிக்காரன்? தட் ஸார்ட் ஆஃப் விவகாரம் கூட உண்டா?” என்றாள். 

“என்ன பண்றது? சீட்டாட்டத்திலே தினமும் தோற்றுக் கொண்டே இருந்தால் கிளப்காரங்க விடுவான்களா?” 

“சீட்டாட்டமா? கிளப்பா! வாட் டு யூ மீன்?” 

“அச்சச்சோ! அதையும் சொல்லிவிட்டேனா உன் கிட்டே? வேறொன்றுமில்லை. நம்ம பேட்டையில் புதுசா ஒரு சீட்டாட்ட க்ளப் நடக்கிறது. 

முகம் ஜிவுஜிவு என்று சிவந்தது சீதாப்பாட்டிக்கு “ஈட்டிக்காரன்கிட்டே கடன்வாங்கி… சீட்டாட்டம்.. மை குட்னஸ்… ஐ கான்ட் இமாஜின்…” 

சீதாப்பாட்டி ஒருகணம் ஏதோ யோசித்தாள். பிறகு மலர்ந்த முகத்துடன், “ஐயோ பாவம். யு லுக் ஸோ டயர்ட். உங்களைக் குழியிலிருந்து எடுத்துவிடுகிறேன்,” என்றாள். 

அப்புசாமிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. “சீதேன்னா சீதேதான்… ” 

கைவளையல்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுக் கொண்டாள் சீதாப்பாட்டி புடவைத் தலைப்பை வரிந்து கட்டிக்கொண்டாள். மண்டியிட்டு உட்கார்ந்து மணலைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்தாள். 

இரண்டங்குல ஆழம் பறிப்பதற்குள் அப்புசாமிக்கு நன்றியால் நாக்குத் தழதழத்தது. “சீதே… சீதே! என் செல்லக் கண்ணென்றால் நீதான்… உன்னுடைய பொன்கரம் புண் ஆகும்படி பறிக்கிறாயேடியம்மா… பறி. பறி. நண்டு வரும்… பார்த்துப் பறி… எனக்குத் தெரியும். நீ சும்மாப் படபடன்னு படபடாக் குச்சிமாதிரி வெடித்தாலும் என்னை விட்டு விட மாட்டாய். ஆமாம். ஏன் ஒரே ஸைடாகக் பறிச்சிட்டுப் போறே…நாலு பக்கமாப் பறி… ஐயோ பாவம்! பழக்கம் இல்லையோன்னோ…” 

சீதாப்பாட்டி பறிப்பதை நிறுத்தினாள் புன்னகையுடன். 

அப்புசாமி வீறிட்டார். “சீதே சீதே… சீதே… இது அநியாயம்! அக்கிரமம். அடிப்பாவி! பகல் கொள்ளை ராக்கொள்ளை! அடியே நரகத்துக்குப் போவே; அதுவும் நரகத்துக்கு உட்கார்ந்துகொண்டு கூடப்போக மாட்டாய். 

இடம் கிடைக்காமல் நெரிசலிலே நின்றுகொண்டு போவாய். வேண்டாண்டி.. அடுக்காது!” அப்புசாமி அலறினார். 

சீதாப்பாட்டி கணக்காக அவரது மார்பு வரைக்கும் ஜிப்பாவின் கடியார பாக்கெட் வரைக்கும் – மணலைப் பறித்தாள். அதற்கப்புறம் அவள் பறித்தது அவரது பாக்கெட்டுக்குள்ளிருந்த பணத்தைத்தான். 

“டாடா!” என்றாள் எழுந்து நின்றுகொண்டு. “இந்தப் பணத்தைத்தானே ஈட்டிக்காரனுக்குக் கொடுக்கிறதாக இருந்தீர்கள்?” 

நோட்டைப் பிரித்துக் காட்டியவள், பரபரவென்று பறித்தமாதிரியே மணலை மூடினாள். 

“ஐயம் ஸோ ஸாரி ஜென்ட்டில்மேன். உங்களிட மிருந்து ஒரு கெட்ட பழக்கத்தை ஒழிக்கணும் என்றால் ஐ ஹாவ் டு பி வெரி ஸ்ட்ரிக்ட், நோ அதர் கோ… நான் வருகிறேன்.” 

“அடியே ராட்சஸி! நடமாடும் பணப் பிசாசு! சூர்ப்பனகே! லங்கே! ராவணி! நீ ஒழிந்துபோய் விடுவே.. குள்ள நரியே! பணத்தைப் பறிக்கிறது என்றால் அசலாகப் பறித்துக்கொண்டு போய்விட்டாளே…” அப்புசாமி அலறினார். 

வெய்யில் ஏற ஏற மணல் சூடாக்கிக் கொண்டிருந்தது. கழுத்துவரைக்கும் கதகதவென்று சூடு, கழுத்திலிருந்து இடுப்புவரை ஏர்கண்டிஷன்போல ஒருவித இன்பக் குளுகுளு இடுப்பிலிருந்து முழங்கால்வரை ஒரே சேறு மாதிரி குளகுள. முழங்காலுக்குக் கீழே தண்ணீரின் ஜிலுஜிலு. இத்தனை கோடித் துன்பமா? 

‘ஒரு பயல்கூட இந்தப்பக்கம் வரமாட்டேன் என்கிறார் களே?” என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தபோது – 

ஒரு பயல் அல்ல. இருபது பயல்கள் – ஹைஸ்கூல் மாணவர்களைப் போன்றிருந்தது – ஒரு பெரிய பட்டாளமே மணலை நோக்கி வந்துகொண்டிருந்தது. சடுகுடு கோஷ்டி போலிருக்கிறது. அப்புசாமிக்கு மகிழ்ச்சி மிகுதியில் வாய் வரவில்லை. தொண்டைவேறு வறண்டு விட்டது. மூச்சுப் பேச்சின்றி, கண்ணில் மட்டும் ஒளியுடன் காத்திருந்தார். 

அப்புசாமியை யாரும் முதலில் பார்க்கவில்லை. ஒரு பையன் தனது வேஷ்டியை அவிழ்த்து அவரை நோக்கி வீசினவன், அடுத்த கணம், “ஐயோ! கொலை! கொலை! தலை! தலை!” என்று அலறினான். மீதிப் பையன்களும் கூவினார்கள். அந்தக் கூவல் எலியட்பீச் முழுவதும் மெதுவே பரவி, கடைசியாக ஒத்துக்குப்புறமாக இருந்த ஒரு குடிசையிலிருந்த அரைபிளேடு அருணாசலத்தின் காதிலும் விழுந்தது. 

அரைபிளேடு அருணாசலம் ஒரு ரௌடி. அதிக ஆசைப்படாமல் அன்றைய பாட்டுக்கு அன்றன்று திருடுகிறவன். ராத்திரி பூரா ‘நைட் டியூட்டி’ பார்த்தும் ஒன்றும் தேட்டை கிடைக்காமல் தூக்கிக் கொண்டிருந்த வனைப் பையன்களின் கூச்சல் எழுப்பிவிட்டது. மனைவி, “மணல்லே என்னவோ தலை வுழுந்து கிடக்குதாம்… நீ கீ எதுனாச்சும் வேலை காட்டிட்டியா, கேஸிலே மாட்டிக்கினு என் தாலியை அறுக்க?” என்றாள். 

“தலையா…?” என்று மணல் பக்கம் வந்தான், 

“அட! நம்ப வாத்யாரு!” என்று வியந்தான். “அநியா யமாத் தலையைச் சீவிப்பூட்டானுங்களே… நல்ல வாத்யா ராச்சே…”என்று அனுதாபப்பட்டான். 

அப்புசாமி கஷ்டப்பட்டு, “ஐயோ… அரு. அரு. அருணாசலம்.!” என்று முனகினார். 

அப்புறம்தான் அவர் மணலில் புதைப்பட் டிருக்கிறார் என்பது அவனுக்குத் தெரிந்தது. போங்கடா பயங்களா…” என்று பையன்களை விரட்டிவிட்டு அருணாசலம் அவரை விசாரித்தான். 

அவர் அழமாட்டாக் குறையாகத் தன் கதையைக் கூறியதும், அவன் கபகபவென்று சிரித்தான். “இதுக்கா வாத்யாரே மனசை உட்டுட்டே. குழியிலிருந்து வெளியே கொண்டாந்துறேன். பைசா இன்னா தர்றே! ஆறடி பறிக்கறதுக்குச் சுடுகாட்லே ரேட் நூறு ரூபா வாங்கறான். தெரியுமில்லே?” 

அப்புசாமிக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது “அரைபிளேடு! நான் உன் அண்ணாத்தை மாதிரி…நான் மறக்கவே மாட்டேன்…” 

“அந்தக் கதையே வாண்டாம் நைனா. கையிலே நீ துட்டை வெட்டு அப்புறம் நான் மணலை வெட்டுறேன். நேத்து ராத்திரி பூராப் பட்டினிய்யா. நீ இன்னாவோ வெளையாடறே?” 

“அருணாசலம்.. அருணாசலம். நான் இப்படியே சமாதியாக வேண்டியதுதானா?” 

“யோவ்! என்றான் அருணாசலம் பளீரென்று முகத்தில் பிரகாசம் தெறிக்க, “படா ஷோக்கா ஒரு ஐடியாய்யா…நீ ஒத்துழைக்கிறியா…” 

“கட்டாயம்.தோப்புக் கரணம் போடச் சொன்னால் கூடப் போடறேன்..” 

குடிசைகளிலிருந்தும் கடற்கரைக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்த மாடிக் கட்டிடங்களின் குடியிருப்புக் களிலிருந்தும் மக்கள் திரண்டு வந்து கூடியிருந்தனர். 

அப்புசாமியின் தலையில்தான் கொஞ்ச நேரத்துக்குள் எவ்வளவு மாற்றங்கள். நெற்றியில் தகதக வென்று விபூதி குங்குமம் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. அவர் கண்கள் தூங்குவதுபோல் 

தூங்குவதுபோல் மூடியிருந்தன. கமகமவென்று இரண்டு கட்டு ஊதுபத்திகள் அவர் தலைக்கருகே பக்கத்துக்கு ஒன்றாகக் கொளுத்தி வைக்கப் பட்டிருந்தன. தேங்காய் பழக் குவியல்கள், வெற்றிலை பாக்குகள் குவிந்திருந்தன. பெரிய ரோஜா மாலை ஒன்று அப்புசாமியின் தலைக்கு அணிவிக்கப்பட்டிருந்தது. 

அரைபிளேடு அருணாசலம், குங்குமப் பொட்டு அணிந்த நெற்றியுடன், “சார், மௌனகுருநாதர் சமாதி சார்… தொண்ணூறு வருஷமாத் தவம் கிடக்கும் பெரியவர் சார்… நல்லாக் கும்பிட்டுக்குங்க… போனா வராது. பொயுது போனாத் தர்ஷனம் கெடைக்காது… என்று உரக்கக் கத்திக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு புகைப்படக்காரர் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார். 

அப்புசாமியின் தலை வேதனைப்பட்டது – மட்ட மான ஊதுவத்தி நெடிதாங்காமல். அதுவுமில்லாமல் சில சமயங்களில் கற்பூரம் காட்டுகிறேன் பேர்வழி என்று அரைபிளேடு அவர் மூக்கருகேயே கற்பூர ஜ்வாலையைக் காட்டியது அவருக்குப் பெருத்த வேதனையைக் கொடுத்தாலும், வெற்றிலைப் பாக்குக் குவியல்களுக்கு நடுவே ஒரு தட்டில் கலகலவென்று கணிசமான சில்லறை விழுந்திருப்பதைப் பார்த்து மனத்துள் ஆனந்தம் அடைந்தார். 

இருட்டத் தொடங்கிவிட்டது. “அரை பிளேடு” என்றார் அப்புசாமி, “மோசம் பண்ணிடாதே…என்னை எடுத்து வுடுடா… 

அருணாசலம், “இரு வாத்யாரே … சில்லறையை எண்ணிடறேன்,” என்று எண்ணினான். 

நூறு ரூபாய் பத்துபைசா… 

“பிடி வாத்யாரே உன் பங்கு ஐம்பது ரூபா… அஞ்சு பைசா…” என்று அவர் எதிரில் ரூபாயை வைத்துக் கீழே விழுந்து கும்பிட்டான். “வாக்குத் தவறுகிறவன் நான் இல்லே… அதெல்லாம் உன் சம்சாரம். புரிஞ்சிகினியா?” என்றவன் பரபரவென்று மணலைப் பறித்து அப்புசாமியை விடுதலை செய்தான். “அருணாசலம்!’ என்று அவனைச் கட்டிக்கொண்டு, வசூல் தொகையில் பாதியுடன் அப்புசாமி வீட்டை நோக்கி நடந்தார். 

உள்ளே கம்பீரமாக நுழைந்தார். வாசலிலே ஒரு கணம் நின்றார். 

காரணம், ஈட்டிக்கார அஜ்முல்கான் பாட்டியிடம் ஏதோ உள்ளே சண்டை பிடித்துக் கொண்டிருந்தான். 

“அரே ஈட்டி! அரே பாட்டி! ஏன் லடாய்?” என்றார் அப்புசாமி இடுப்பில் கை வைத்துக்கொண்டு. 

ஈட்டிக்காரன் அவரைப் பார்த்ததும் பிடித்துக் கொண்டான். “இன்னாய்யா நம்ப பைசா?” 

“சீ! சீ! எடு கையை!” என்றார் அப்புசாமி, கரப்பான் பூச்சியை உதறுவதுபோல “என்னாய்யா உன் பணம் பித்ஸாப் பணம்! நாற்பது ரூபாதானே? இந்தாய்யா!” விசிறி அடித்தார் சில்லறை மூட்டை ஒன்றை. 

“எண்ணிக்கோய்யா, நாற்பது ரூபா…” 

“சலாம் சாப்… மனசுலே கோபம் வேணாம்,” என்று அப்புசாமிக்குக் கும்பிடு போட்டுவிட்டு ரூபாயுடன் அவன் புறப்பட்டுவிட்டான். 

சீதாப்பாட்டி ஆச்சரியத்தால் திகைத்து நின்றாள். “எப்படி உங்களுக்கு…” 

“உஸ், ‘ஸ்” என்றார் அப்புசாமி சர்வ அலட்சியத் துடன், “உனக்குக்கூட ஏதோ சில்லறை நான் தரணு மில்லை? இந்தா, பாக்கியைத் தீர்த்துக்கொள்” என்று பத்து ரூபாயை அனாயாசமாகத் தூக்கி எறிந்தார். 

சீதாப்பாட்டி மோவாயில் கை வைத்தாள். “ஹௌ இஸ் தட் யூ?” 

அப்புசாமி கம்பீரமாக, “ஜெய் சமுத்திரசாமி! என் வாய்வும் போயி! அத்தோடு தாய்வும் போயி! சரி. சரி… நான் கொஞ்சம் சீட்டு கிளப்வரை போய்வருகிறேன்,” என்று கிளம்பினார்! விசிலடித்தவாறு. 

சீதாப்பாட்டியின் நெஞ்சு ஏறி இறங்கியது… “ஹூம்… என்ன கொழுப்பு!” 

– அப்புசாமியும் பாரதி நாற்காலியும், முதற் பதிப்பு: 1999, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

ja_raa_sundaresan ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன் (பி:சூன் 1, 1932) பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *