கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை நாடகம் முல்லை
கதைப்பதிவு: November 7, 2025
பார்வையிட்டோர்: 30 
 
 

(1946ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி – 1 

இடம் – அரச அவை 

நடிகர்கள் : சேரலாதன் – புலவர்கள்- செங்குட்டுவன் – இளங்கோ. 

சேரலாதன் : தண்டமிழ் நாட்டின் தனிச் சிறப்புடைய புலவர் பெருமக்களே! இன்று என் உள்ளக் கருத்தினை எடுத்துச் சொல்லி உங்கள் வாழ்த்துரைகளைப் பெற விருப்புற்றுள்ளேன். நானோ நரைதிரை மூப்பு எய்தி, நாடாளும் உரம் இழந்து நலிவுற்றுள்ளேன். இந் நாளிலே எனது அரச வுரிமையை என் மகனுக்குத் தந்து நான் ஓய்வு பெறலாம் என்ற எண்ணம். உங்கள் கருத்தென்ன? 

புலவர் : வேந்தே! கோல்கோணாது செங்கோலோச்சி மலர்தலை உலகினில் மக்கள் இன்புற நீதி வழுவாது நீண்டகாலம் ஆட்சி செலுத்தினீர்! மன்பதையெல்லாம் அறநெறியோங்கி இன்பம் எய்தின. தாங்கள் அரசு துறப்பது எங்களுக்கு வருத்தமெனினும் ஒரு புடை மகிழ்ச்சியே! தங்களைப் போலவே தங்கள் இரு மைந்தர்களும் எல்லாத் திறமைகளும் ஒருங்கே பெற்றுள்ளார்கள். இனியும் சேரன் ஆட்சி சிறந்தோங்கும் என்பதில் ஐயமில்லை. 

மற்றொரு புலவர் : யானொன்று கூற விரும்புகின்றேன். தங்கள் இளைய மைந்தன் இளங்கோ அரச இலக்கணம் யாவும் பெற்றிருக்கிறார். அவரே ஆட்சிக்கு இலக்கானவர். 

இளங்கோ: புலவரே! யாது புகன்றீர்! நீர் சொல்வது சிறிதும் முறைமையன்று. மூத்தோனிருக்க இளையோனுக்கு முடி சூடுவது முறையோ? தமிழ் நாட்டு மன்னர்கள் எக்காலத்திலும் முறை தவறிய துண்டோ? இம்மையில்-உலக வாழ்க்கையில் பற்றற்றவனாகிய எனக்கா இப்பேரரசு! 

செல்வத்துட் செல்வம் அருட்செல்வம் அன்றோ? அருள் சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள் சேர்ந்த இன்னாவுலகம். நில்லாதனவற்றை நிலையென எண்ணுவது புல்லறிவன்றோ! பற்றினை விடாதவர்க்கு இடும்பைகள் பற்றுமன்றோ! ஆரா வியற்கை அவா நீப்பின் அந்நிலையே பேராவியற்கை தரும். 

எல்லா அறங்களிலும் துறவறமே சிறந்ததெனக் கொண்டுள்ள எனக்கா இவ்வரசாட்சி வேண்டும்? 

(தந்தையை நோக்கி) தந்தையே! தவம், ஞானம், ஒழுக்கம், அவாவறுத்தல் இவைகளையே பேரின்பம் எனக்கொண்டுள்ள என் உள்ளம் எப்படி இவ்வரசுரிமையை ஏற்றுக்கொள்ளும்? வேண்டாம். என் அண்ணா செங்குட்டுவரே இந் நாட்டை ஆள உரியவர். 

(அண்ணாவை நோக்கி) அண்ணா! மன்னிக்கவும் இப்பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள். 

சேரலாதன் : மைந்தா! இளங்கோ! மெச்சினோம். ஆண்டிலே முதிர்ந்தவ னாகிவிடினும் அறிவிலே முதிர்ந்தவனாகிவிட்டாய். வாழ்க்கையில் உழண்டு புறண்டுள்ள என துள்ளம் வாழ்க்கையின் இறுதியில் உனது அறிவு நிறைந்த மொழிகளைக் கேட்டு அமைதியடைகிறது. 

புலவர் : அரசே! இன்றுமுதல் இவர் இளங்கோவடிகள் என்று அழைக்கப்படுவார். இவரது அறிவின் விளக்கம் இத்தமிழ் நாடெங்கும் பரவுக! எக்காலத்தும் விளங்குக! 

(செங்குட்டுவரை நோக்கி) ஐயனே! இனித் தாங்கள்தான் மன்பதை காக்கும் மன்னன். 

(முடிசூடல்-ஆரவாரம்) 

எல்லோரும் : வாழ்க செங்குட்டுவன்! வாழ்க சேரன்! வாழ்க தமிழ்நாடு! வாழ்க இளங்கோ! 

காட்சி – 2 

இடம் : மலைநாடு. மலைவளங் காணுதல். 

செங்குட்டுவன் : (மக்கள் இட்ட காணிக்கையை ஏற்றுக் கொண்டு) மகிழ்ச்சி! உங்கள் விருப்பம் என்ன? 

ஒருவர் : அரசே! வாழ்க நின் கொற்றம்! நாங்கள் கூற வியப்பான ஓர் நிகழ்ச்சியுண்டு: அதோ அக்கான வேங்கையின் கீழோர் காரிகை தான் ஒரு முலை இழந்து தனித்துயரெய்தி வானவர் போற்ற மன்னொடும் கூடி வானகம் பெற்றனள். எந்நாட்டாள் கொல் யார் மகள் கொல்லோ! நிந் நாட்டில் யாங்கள் நினைப்பினும் அறியோம்.

செங்குட் : என்ன இது? என்றுங் காணா நிகழ்ச்சி! 

சாத்தனார் : அரசே! நான் அறிவேன். சோழன் மூதூர் பேராச் சிறப்பின் புகார் நகரத்துக் கோவலன் என்பானோர் வணிகன்; அவ்வூர் நாடக மேத்தும் நாடகக் கணிகையொடு ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுற கண்ணகி என்பாள் அவன் மனைவி அவள் கால் பண்ணமைச் சிலம்பு பகர்தல் வேண்டிப், பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெருஞ்சீர் மாடமதுரை புகுந்தனன். அது கொண்டு, மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன் பொன்செய் கொல்லன் தன் கைக் காட்டிக் கோப்பெருந் தேவிக் கல்லதை இச் சிலம்பு யாப்புறவில்லை, ‘ஈங்கு இருக்க’ என்று ஏகி, பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக் கண்டனன் பிறனோர் கள்ளவன் கையென, வினைவிளை காலம் ஆதலின் சினையலர் வேந்தன் தேரானாகிக் கன்றிய காவலர்க்கூய் ‘அக் கள்வனைக் கொன்று அச் சிலம்பு கொணர்க ஈங்கென’ கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி நிலைக்களங்காணாள் நெடுங்கண்ணீர் உகுத்துப் பத்தினியாகலின் பாண்டியன் கேடுற, முத்தாரமார்பின் முலை முகந்திருகி நிலை கெழு கூடல் நீளெரி ஊட்டிய பலர் புகழ் பத்தினியாகும். 

மதுரை மாதெய்வம் வந்து தோன்றி வாரொலி கூந்தல் நின் மணமகன்றன்னை ஈமாழ் நாளகத்தெல்லை நீங்கி வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவிற் காண்ட லில்லென மதுரை மூதூர் மாநகர் மன்னன் மாய்ந்தனன். தன்னுயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல் பெருங்கோப்பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள். 

தன்னொடு தனிமையிற் செல்லாது நின்னாடு அடைந்தனள்; நங்கை கண்ணகி. ஊழி ஊழி வாழி நின் வலம்படு கொற்றம்! 

செங் : செம்மை முறை தவறினன் என்ற சொல் செவிப் படாமுன் உயிர் நீத்தான் பாண்டியன். தீவினையின் காரணமாக வளைந்த மன்னவன் கோல் உடம்பினின்றும் உயிர் நீங்கியதும் நிமிர்ந்தது. 

எம்மைப் போன்ற மன்னர்க்கு வாழ்வு எப்பொழுதும் துன்பம் நிறைந்தது. 

வானம் பொய்த்து வாரி வளங்குன்றின் மன்னன் குற்றம். கொடு விலங்குகளானும், பகைவர்களானும் உயிர்கள் வருத்தமுறின் மன்னன் குற்றம். 

மக்கள் முறை தவறின் மன்னன் குற்றம். 

கள்வர் மிகின்-கொலையுரின் மன்னன் குற்றம். 

குகைகளைக் காத்து கொடுங்கோலுக்கு அஞ்சி மக்கட் கூட்டத்தைப் புரக்கும் நல்ல அரசர் குடியில் உதித்தல் துன்பம் அல்லது இன்பம் எது? 

தேவி : பாண்டியன் பத்தினி வானுல கடைந்தனள். வானோர் போற்றுக! மன்னா! நம் நாட்டில் வந்தடைந்து இழந்த கணவனை அடைந்து விண்ணுலகேகிய கண்ணகிக்கு கோவில் கட்டுங்கள். கண்ணகியின் கற்பின் சிறப்பை உலகறியட்டும். “பெண்ணிற் பெருந்தக யாவுள கற்பென்னுந் திண்மை யுண்டாகப் பெறின்”.

செங் : பொருத்தம்! உன் விழைவை நிறைவேற்றுவேன். நீயன்றோ பெண்ணிற் பெருந்தகையள். (புலவர்களைப் பார்த்து) நீங்கள் என்ன சொல்கிறீர்கள். 

புலவர்கள் : அரசே! தேவி சொல்லியது மிகமிக மகிழ்ச்சிக் குரியது. விரைவினில் முடிக்கவேண்டும். பொதியமலையினின்று கற் கொணர்தல் எளிதே! ஆனால், அதிற் பெருமையில்லை. தமிழ் நாட்டு வேந்தர்கள் புலி, கயல், வில் பொறித்த இமயத்தினின்று கற் கொணரவேண்டும். 

செங் : சரியான யோசனை! அப்படியே செய்வோம். (யாவரும் போகிறார்கள்) 

காட்சி – 3 

இடம் : அவை 

நடிகர்கள்: அரசர்-புலவர்-அமைச்சர்-காவலன்-முனிவர்கள். 

காவலன் : வேந்தே! இமயமலைச் சாரலிலிருந்து சில முனிவர்கள் தங்களைக் காணவந்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 

செங்குட் : வரச்சொல். 

முனிவர்கள் : செங் கொற்றக் குடைச் சேரனே! வாழி! வாழி நின் வளநாடு!

செங் : அமருங்கள். வடநாடு சென்று வருவதாகக் கேள்வியுற்றேன். செய்தி யாதேனும் உளதோ? 

முனிவர்கள் : அரசே! அதைச் சொல்லத்தான் நின் அவை புகுந்தோம். ஆரிய அரசர்கள் ஆணவம் கொண்டு ஆர்பாட்டம் செய்கிறார்கள். தென்னாட்டவரை அவர்கள் படுத்தும் பாடு கொஞ்சமல்ல. முன்னாள் தமிழரசர்களால் முறியடிக்கப்பட்தை மறந்து இகழ்ந்துரைக்கின்றனர். அவர்களுள் கனகனென்பானும், விசயனென்பானும் தங்களைத் தாக்கிப் பேசித் தறாக் கொண்டிருக்கிறார்கள். 

புலவர் : அரசே! நெடுநாட்களாகப் போர்த் தொழிலற்றுத் தோள்கள் துடித்துக் கொண்டிருக்கும் உங்கள் படைக்கு இது ஓர் நல்ல செய்தி;

விழுப்புண் படாத நாளெல்லாம் வீணாளென வீரர்கள் வருந்துகின்றனர். வடநாட்டிற்குப் படையெடுத்துப் 
பன்னாட்களாயின. 

செங் : புலவரே! நன்றாகச் சொன்னீர்! அமரகத்து வாள் வீசிப் போர்செய்யும் என் கைகள் வாடியிருக்கின்றன. வாய்ப்பற்று, வடநாடு! ஆம்! தமிழ் நாட்டு முடியுடை வேந்தர் சேர சோழ பாண்டியர் மூவரு;ம் முறை முறையே அந்நாளில் ஆரியரை வென்று இமயத்தில் தங்கள் வெற்றிச் சின்னங்களைப் பொறித்த அந்நாளை நினைத்திடில் என் தோள்கள் துடிக்கின்றன. தமிழ் வேந்தர்களின் திறம் தெரியாத ஆரியரை-அவர்கள் ஆட்சியை ஒழிப்பேன். செங்குட்டுவனை யாரென நினைத்தார்கள். நாளையே படையெடுத்து வெற்றி மாலையுடன் திரும்பேனாகில் “செங்குட்டுவன் புலி நிகர் வேந்தன் என்ற பெயர் ஒழிக! போர்! போர்! ஆகா! ஆகா! போர்! செல்லுங்கள்! கண்ணகியின் சிலைக்குக் கனகவிசயன் தலையிலேற்றிக் கல் கொணர்வோம். 

காட்சி – 4 

இடம் : கங்கைக்கரை 

பாத்திரங்கள்: செங்குட்டுவன் – வீரர்கள். 

ஒற்றன் : வாழி வேந்தே! வாழி! வடதிரை மன்னவரெல்லாம் தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாமெனக் கனகவிசயன் பெரும் படையொடு நம் பாசறை நோக்கி வருகின்றனர். 

செங் : முரசறையுங்கள்! கூற்றுடன்று மேல்வரினுங்கூடி எதிர் நிற்கும் ஆற்றல்சால் தமிழ்நாட்டு வீரரே! பாயுங்கள். 

(யுத்தம். செங்குட்டுவனுக்கு வெற்றி. கனக விசயர் தப்பி ஓட்டம்) 

காட்சி – 5 

(வெற்றி பெற்ற செங்குட்டுவன் பாசறையில் நிற்கிறான். படைத்தலைவர் தூரத்தில் யாரோ இருவர் செல்லுவதைக் கண்டுவிடுகிறார்) 

படைத்தலைவர் : யாரடா போர்க்களத்தில்? முனிவர்களா? எங்கே ஓடுகிறீர்கள் ! நில்லுங்கள்! 

கனகன் : ஐயா ! நாங்கள் முனிவர்கள். எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? நாங்கள் ஏதும் அறியோம். 

படைத்தலைவர்: இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. நான் நம்பமுடியாது. வாருங்கள் இப்படி (கொண்டு வந்து செங்குட்டுவன் முன் நிறுத்தி) வேந்தே! இவர்கள் முனிவர்களாம். போர்க்களத்திலிருந்து ஓட்டம் பிடித்தார்கள். பிடித்து வந்தேன். 

செங் : யார் நீங்கள்? 

இருவரும்: அரசே! நாங்கள் வேதமோதும் அந்தணர்கள். 

செங் : வேள்வி ! வேதம்! அடிமையில் ஆழ்த்துவதற்கு ஏற்ற அருஞ் சூழ்ச்சி! உண்மையைச் சொல்கிறீர்களா … உயிர் இழக்கிறீர்களா?

படைத்தலைவர் : ஏன் பேசாமல் நிற்கிறீர்கள்? சொல்லுங்கள். தாடியைப் பிடித்து ஆட்டுகிறார். (தாடி கையோடு வந்துவிடுகிறது) ஆ ! கனகன்! யாரிடம் இந்தச் சூழ்ச்சி! 

விசயன் : (தானாகவே தாடியை எடுத்துவிட்டு) அரசே! அபயம் ! எங்களைக் காக்கவேண்டும். ஆணவம் பிடித்துத் தமிழர்களை அல்லற்படுத்தினோம். எங்களை மன்னிக்கவும். 

செங் : உயிர் பிழைத்தீர் ! (படைத்தலைவரை நோக்கி) படைத்தலைவரே! இவ்விருவரையும் சிறை செய்து இவர்கள் தலையில் கண்ணகிச் சிலைக்குக் கல்லேற்றிச் செல்லுங்கள். தமிழ் வீரர்களுக்கு வாகை சூடுங்கள். 

எல்லோரும் : வெற்றி ! வெற்றி ! வாழ்க சேரன் ! வாழ்க தமிழர்! 

காட்சி – 6 

இடம்: அந்தப்புரம் 

பாத்திரங்கள் : அரசி – தோழி 

தேவி : உள்ளத்தில் புத்துணர்ச்சி ! என் கணவரை வெற்றி மாலையுடன் காண்பேன். 

(எங்கும் பரபரப்பு – மகிழ்ச்சி) 

தோழி : தேவி! ஆரியப் படையை வென்று இமயத்தில் விற்கொடி பொறித்த வெற்றி வேந்தன் தேவியை நாடி வந்துகொண்டிருக்கிறார். 

(தேவி எதிர்கொண்டழைத்து முன் ஓடி செங்குட்டுவனைத் தழுவிக்கொள்கிறாள்) 

செங் : தேவி ! வீரத் தமிழரசியாகிய உனை மணந்து, நான் ஆரியப்படையை வென்று, ஆரிய அரசர்களால் காணிகையாகக் கொடுக்கப்ட்ட பொருள்களையுங் கொண்டுவந்துள்ளேன். அதுமாத்திரமல்ல ! நம்மை இகழ்ந்த கனக விசயர்களையும் சிறைசெய்து கொண்டுவந்திருக்கிறேன். 

தேவி : வெற்றிமாலை திகழும் உங்கள் மார்பு எனக்கு எவ்வுலகினுங் காணாத இன்பத்தை தருகிறது. பகைவரை வாளேந்தி வீழ்த்திய உங்கள் கைகள் என்னைப் பற்றியதும் உள்ளம் பூரிக்கிறது. 

செங் : ஆம் ! உன் மலரொத்த மேனி என் புண்பட்ட மார்புக்குச் சஞ்சீவிதான் தேவி! 

– முல்லை – 8, 9, முல்லை இலக்கியக் களஞ்சியம், 1946-1947இல் வெளிவந்த முல்லை இதழ்களின் முழுத் தொகுப்பு, பதிப்பும் தொகுப்பும்: முல்லை மு.பழநியப்பன், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, முல்லை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *