+1 உலகம்
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 20, 2026
பார்வையிட்டோர்: 3,632
(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ஏலேய்… ரெங்கராசு! எங்கே கௌம்பிட்டே, தூரமாவா?”
“அயத்துட்டீகளா அய்யா? நேத்து ஐந்நூறு ரூவா குடுத்தீகள்லே? சைக்கிள் ஒண்ணு பாத்து வாங்கிட்டு வரணும்.”
“இன்னைக்கு வேண்டாம்டா. நாளைக்கு வேணும்னா போ.”
“என்ன அய்யா?”
“உங்க அக்காவைப் பொண்ணு பாக்க இன்னைக்கு வாராக, திருத்தங்கல்லேயிருந்து.”
“எப்ப?”
“சாயங்காலம். வேன்லே வாராக. பேச்சு வார்த்தை நல்லபடியா முடிஞ்சிட்டா… இன்னைக்கே பூ வைச்சிரணும்னு அபிப்பிராயத்தோட வாராக. நீ இருந்தாத்தான் எனக்கு ஒத்தாசையாயிருக்கும்.”
“….”
“என்னலே… உம்முன்னு இருக்கே?”
“இல்லே… ஞாயித்துக்கிழமை. இன்னைக்குப் போனாத்தான் சைக்கிள் வாங்க முடியும். அதான்…”
“ஏண்டா, அக்காவைவிட ஒ-னக்கு சைக்கிள் முக்கியமா?”
“போய்ட்டு நா மதியத்துக்குள்ளே வந்துருதேன்யா.”
“கரெக்டா வந்துருவீயா?”
“ஆட்டும்யா.”
“அப்ப சரி… போய்ட்டு வா.”
ரெங்கராசு ப்ளஸ் ஒன் படிக்கிறவன். ஒன்பது கிலோ மீட்டர் தள்ளி மேல்நிலைப் பள்ளிக்கூடம். ஒரே டவுன் பஸ். அடிக்கடி காலை வாரி விட்டுவிடும். எங்காச்சும் கோயில் திருவிழா கூட்டம் என்றால், ‘ஸ்பெஷல்’ போட்டு வண்டி போயிடும். போதாக் குறைக்கு அடிக்கடி பிரேக்டவுன். அதை நம்பி படிக்க முடியாது. ஆக, சைக்கிள் இல்லாமல் கதை நடக்காது என்கிற கெடுபிடி.
அய்யாவிடம் சொல்லி நச்சரித்தால்… ‘பார்ப்போம், பார்ப்போம்’ என்று மூன்று மாசத்தை இழுத்து விட்டார். பாவம், அவருக்குச் சிரமம். மண்ணை நம்பிய பிழைப்பு. வானம் பார்த்த பூமியில் விளையாது. விளைந்தால் வியாபாரிகளின் கொள்ளை. நாளும் பொழுதும் இழுபறிப் பிழைப்பு. கைக்கு எட்டினால் வாய்க்கு எட்டாத போராட்டம் நிரந்தரம்.
அதுக்காக? சைக்கிள் இல்லாமல் படிப்பை நிறுத்துவதா? பஸ் வராத அன்றைக்கெல்லாம் லீவ் போட்டால்… படிப்பு நாறிப் போகும்.
கடைசியில்…
‘சைக்கிள் இல்லேன்னா ஸ்கூல் போக மாட்டேன்’ என்ற ஸ்டிரைக் அறிவிப்பு. அதிலும் பருப்பு வேகவில்லை. ஸ்டிரைக்கை ரெண்டு நாள் நடத்திய பிறகு தான், சிறு அசைவு! நேற்று ஐந்நூறு ரூபாயை இவன் கையில் கொடுத்தார். “என்னத்தையாச்சும் வாங்கித் தொலை… எப்படியும் நாசமாய்ப் போ” என்று வயிற்றெரிச்சலோடு ஆசீர்வதித்தார்.
ராத்திரி பூராவும் ரெங்கராசுவுக்கும் இருப்புக் கொள்ளவில்லை. கண்ணில் உறக்கம் ஒட்டவேயில்லை. ஓசி டி.வி-க்களில் ஓயாமல் பார்த்த விளம்பரங்கள். விதம் விதமான பளபளப்பு சைக்கிள்கள்… விர்விர்ரென்று புயலாய்ப் பாய்கிற நவநவ மாடல்கள். புது மாதிரியான ஹாண்டில்பார். படுத்துக் கொண்டு மிதிக்கிற மாதிரியான லேட்டஸ்ட் வண்டிகள்!
கலர் கலராகக் கனவுகள். றெக்கை கட்டிப் பறக்கிற கனவுகள். ஐந்நூறு ரூபாய் என்கிற அற்பக்கூட்டை பார்த்ததும், கனவுகளின் றெக்கை ஒடிந்து, இறகு இறகுகளாக உதிர்ந்து..
‘இந்தக் கொலுவாய்லே (குறை ரூபாய்) ஓட்டை வண்டி, கெழட்டு வண்டி மட்டும்தா வாங்க முடியும்…!’
***
திருவேங்கடம் மேலபஜாரில் ஒரு சைக்கிள் கடை, சுற்றுப்பட்டிப் பத்து ஊர் ஜனங்களும் சைக்கிள் வாங்க, விற்க விரும்பினால் இங்கு தான் வருவார்கள். அறிவிக்கப்படாத சைக்கிள் சந்தை!
ரெங்கராசு ஆவல் ததும்ப பார்த்தான். ஏழெட்டு வண்டிகள் விற்பனைக்கு வந்திருந்தன. எல்லாமே துருவேறிய வண்டிகள். செங்கழிஞ்ச கறுப்பாக முழித்தன. எண்ணெய்க் குளிப்பு போட்டு வந்திருந்தன. ஹாண்டில் பாரில்கூட நிக்கல் பாலிஷ்கிடையாது. அவலட்சணங்கள்.
கொஞ்சநஞ்ச ஒரிஜினல் பெயிண்ட்டோடு, சற்றுக் கண்முழிப்பாக ஒரு வண்டி வந்திருந்தது. அந்த வண்டிக்காரர் எண்ணூறுக்கும் மேலே விலை சொன்னார். அவ்வளவுக்குத் தாவி ஏற. இவனுக்குச் சக்தியில்லை.
ஒடிந்து சோர்ந்த மனசுக்கு ‘முட்டைப்பசை’ போட்டு ஒட்டுக்கட்டு போட்டுச் சமாளித்தான். துருவேறிய சைக்கிள்களை ஆய்ந்தான்… வேறு புகல்? ஏழை சம்சாரி மகன், யானைச் சவாரிக்கு ஆசைப்பட முடியுமா?
அந்தப் பச்சை கலர் ஸீட் வண்டிதான் இவனுக்குக் கொஞ்சம் பிடித்தது. ரிம்களில் நிக்கல் மினுக்கியது. டயர் டியூப் இன்னுடம் ஆறு மாசத்துக்குத் தாக்கு பிடிக்கும். பெடல் பரவாயில்லை. முக்கோணத்தில் கம்பெனிப் படம் தெரிகிறது. செயின் தேய்ந்திருந்தாலும் ஃபிரீவீலில் உயிர் இருந்தது. பெடலைப் பின்பக்கமாகச் சுற்றினால் சத்தம் வந்தது.
தரகர் இவனிடம் ஏற்கெனவே நிலவரத்தை விசாரித்திருந்தார்.
“சைக்கிள் வேணும்னா… எம்புட்டுக்குள்ளே பாக்கே தம்பி?”
“சும்மா.. ஒரு ஐந்நூறுக்குள்ளே.”
“அம்புட்டுத்தானா?”
தரகர் எத்தனை தான் பெருஞ்சத்தமாகச் சிரித்து மழுப்பினாலும், ஏளனம் துருத்திக்கொண்டு உறுத்தியது முள்ளைப் போல. ‘வக்கத்த பயலாயிருக்கான். இவன் தரத்துக்கு இது போதும்’ என்ற முடிவில்… அந்த ஓட்டை வண்டியை ஓகோ ஆகாவென்று புகழ்ந்து தள்ளினார்.
“தம்பி… வண்டி பழசுதான். ஆனா கனத்த வண்டி. ஸ்ட்ராங்கான ஸ்பேர் சாமானங்க. நல்லா ஒழைக்கும். எளவட்டபுள்ளே நீ ஒன்னோட முரட்டடிக்கு இந்த வண்டிதான் ஈடுகொடுக்கும். தோதான அயிட்டம்.”
அவர்பாட்டுக்கு அள்ளி விட்டார். எதுவும் இவன் மனசில் ஒட்டவில்லை. ‘இந்த லட்சணங் கெட்ட சைக்கிளைக் கட்டி மாரடிக்க வேண்டியதாகி விட்டதே!” என்ற அவலத்தில் சிணுங்குகிற மனசு. வேறு வழியற்று, சூழலுக்குப் பணிகிற நிர்ப்பந்தம்.
ரெங்கராசு சைக்கிளை வெவ்வேறு கோணங்களில் நின்று பார்த்தான். அடிக்கடி பெடலைச் சுற்றினான். வீல்களில் ‘ஆச்சல்’ இருக்கிறதா என்று நுட்பமாகப் பார்த்தான். பிரேக்கைச் சரிபார்த்தான். சீட்டை அமுக்கிப் பார்த்தான். உற்று உற்றுப் பார்த்தான் ஒவ்வொன்றையும். ரெண்டு மூன்று தடவை ஓட்டிப் பார்த்தான்.
சைக்கிள்காரர் அந்த ஓட்டைச் சைக்கிளுக்கு ‘அறுநூற்றைம்பது ரூபாய்’ என்று விலையின் உச்சி முகட்டில் ஏறி நின்றார். இவன் சார்பாகத் தரகர் பேரம் பேசினார். மடித்த துண்டுக்குள் இருவரும் உள்ளங்கைகளை இணைத்து மறைத்துக் கொண்டு வாதாடினர். பெரிய வாதாட்டம்… சண்டை போடுகிற மாதிரி கோபமும் சீற்றமு மான வாதாட்டம்… தொண்டை கிழியக் கத்துவார்கள். சட்டென்று காதுக்குள் கடித்துக் கொள்வார்கள். பார்த்திருக்க குபீரெனக் கத்துவார்கள். பயங்கரமான வாதாட்டம்!
‘பேரம் பேசி ஒரு வியாபாரத்தை முடிப்பது என்றால், இத்தனை பெரிய மல்லுக்கட்டா?’ – ரெங்கராசு திகைத்துக் குழம்பி விட்டான்.
வாங்கப்போகிற தரகு பத்தோ, பதினைந்தோ தெரிய வில்லை. அதற்காக இந்த ஆளிடம் இத்தனை சத்தம்! நடிப்பு, பாய்ச்சல், கொஞ்சல்… பத்து ரூபாய்க்கு ஒரு மனுஷனுக்கு இத்தனை பாடுகளா?
வாழ்க்கையின் மூர்க்கம் லேசாகத் திரைவிலக்கி முகம் காட்டுவதைப் போல அவனுக்குள் ஒரு பிரமை.
கடைசியில்…
நானூற்றி எழுபத்தைந்து என்று விலை தகைந்தது.
தரகருக்கு பதினைந்து ரூபாய். வெள்ளை பேப்பர்கள் ரெண்டு வாங்க வேண்டியிருந்தது. பத்திரம் எழுதுவதுபோல, பழகிப்போன வாசகத்தை யந்திரமாகத் தரகர் சொல்ல… இவன் எழுதினான்.
‘இன்ன ஊரைச் சேர்ந்த இன்னார் மகன் இன்னார்… இன்ன வருஷம், இன்ன மாதம், இன்ன தேதியில்.. இன்னார் மூலம் இன்ன விலைக்கு… இன்ன சைக்கிளை இன்னார் மகன் இன்னாரிடமிருந்து..’ என்று நீள நீளமான வாக்கியம். தரகர் உட்பட மூவர் கையெழுத்து. சாட்சிக்கு பக்கத்திலிருந்து ஒருவர்!
‘களவு சைக்கிள் என்று நாளைக்கு ஒரு வம்பு வந்துவிடக்கூடாதே’ என்ற வழக்கமான முன்னெச்சரிக்கை!
சைக்கிளை வாங்கி, எல்லாச் சடங்குகளும் முடிந்து புறப்படும்போது ரெங்கராசு சட்டைப் பையைத் தட்டிப் பார்த்தான். முப்பத்தைந்து பைசா மட்டுமே கிடந்தது. பூராவும் காலி.
மதியம் வந்து விட்டது. சைக்கிளின் நிழல் சக்கரங்களுக் குள்ளே இழுபட்டது. மிதித்துக் கொண்டே யிருந்தவனுக் குள் சைக்கிள் கவலைகள்.
இந்தக் கெழட்டு சைக்கிள் இன்னும் என்னென்ன செலவுகளை இழுத்து வைக்கப் போகுதோ… அய்யா கூவக்காடு (எண்ணற்ற கூப்பாடு) போடுவாரு… “இந்த ஓட்டை உடைசலுக்கா ஐந்நூறு ரூவா? இளிச்வாயன்னு நெனைச்சு ஒந்தலையிலே எவனோ மொளகா அரைச்சுட்டான்… போ” என்று ‘தங்கு, புங்’ கென்று குதிப்பார்.
வசவு நாறிப்போகும்.
வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழி?
இந்தக் கவலைகள் ஒரு பக்கம் அரித்தாலும் ரெங்கராசு மனசில் ஒரு திருப்தி. ஒரு காரியம் முடித்த சந்தோஷம். மலையைப் புரட்டித் தோளில் சுமந்து விட்ட மாதிரியொரு சாகச உணர்வு!
***
ஊருக்குள் நுழைகிறபோது…
களத்தில் நிற்கிற சாம்பல் நிற வேன். ‘வந்துட்டாகளா…?”
பக்கென்கிற மனசு. அய்யா கடிச்சுக் குதறிருவாரு. பதைப்புடன் சைக்கிளை மிதித்தான். வீட்டுக் கடவுக்குள் சைக்கிளை நிறுத்திவிட்டுப் பரபரக்கிற மனசோடும் தயங்கிய நிலையிலும் உள்ளே போனான். அய்யா அக்கினிப் பிழம்பாக இவனைப் பார்த்தார். நெற்றிக்கண் திறக்காத குறைதான்.
விருந்தாளிகள் வந்திருக்கிற நேரத்தில் எதுவும் சத்தம் போட முடியவில்லை அய்யாவால். ஆத்திரமாக மட்டியைக் கடித்துக் கொண்டார்.
பெண் பார்க்க நிறையப் பேர் வந்திருந்தனர். வீடு நிறைய ஜனம். ஏழெட்டுப் பெண்கள், நாலைந்து ஆண்கள், ஒன்றிரண்டு பட்டுப் பாவாடைகள்.
அக்காவைத் தண்ணீர் எடுக்கக் குடத்துடன் போகும்படிச் சொன்னாள், அம்மா. கூட ரெண்டு திருத்தங்கல் பெண்கள் (நடை பார்க்கிறார்களாம்.)
அக்காவிடம் சாங்கோபாங்கமாகப் பேச்சுக் கொடுக்கின்றனர். கூச்சத்தில் குடையைக் கண்ட பசுவாக வெருளுகிற அக்கா. பேசும்படி நச்சரிக்கின்றனர் (திக்குவாயா இல்லையா என்று பார்க்கிறார்களாம்). ஒரு சிறுமி அக்காவின் சடையை விளையாட்டுப் போல் சிரித்துக் கொண்டே இழுத்துப் பார்க்கிறாள்.
அக்காவை அவர்கள் பாடாய்ப் படுத்துவதாக இவனுள் ஒரு கொதிப்பு. சிக்கிக் கொண்ட கோழிக் குஞ்சை உயிரோடு வைத்துக் கொத்துகிற பருந்தின் குரூரம்.
இவனுக்குள், வாங்க நினைத்த சைக்கிளை அப்படியும் இப்படியுமாகச் சோதித்த ஞாபகம்.
அக்காவும் சைக்கிளும் ஒன்றா? உயிரில்லாத ஒரு பொருளைப் போலவா உயிரும் மனமும் மானமுமுள்ள ஒரு மனுஷியையும் நடத்துவது?
இவனுக்குள் பிடிபடாத குழப்பம். பீரிடுகிற கோபம். தாளமுடியாத எரிச்சல். அய்யா முகத்தைப் பார்க்கிறான். அவர் கண்களிலும் அடிபட்ட பறவையின் சோகம்.
தலையிருக்க வாலாடக் கூடாது. அய்யா இருக்கும்போது இவனாக எதுவும் பேசக்கூடாது. அய்யாவுக்குத் தெரியாத விஷயமா?
சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
கல்யாணமாகி விட்டால்… அக்கா இந்த வீட்டை விட்டு ஒரேயடியாகப் போய் விடுவாள். பிறந்து வளர்ந்து முகர்ந்த வீட்டு வாசத்தை மறந்து விடுவாள். கசப்பான நிஜம். ஓர் இழப்பு உணர்வு உள்ளுக்குள் கற்றைச் சோகமாக அறைந்தது. அக்காவைப் பரிதாபமாகப் பார்த்தான்.
அய்யா இவனைக் கடை கண்ணிகளுக்குப் போய் வரும்படி துரத்தினார். ஓடியாடி வாங்க வேண்டிய சாமான்கள்… அங்கிட்டும் இங்கிட்டுமாகப் பறந்து கொண்டிருந்தான்.
அதற்குள் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. பதினைந்து பவுன் நகை… ரொக்கத்தில்தான் இழுபறி… ஐயாயிரமா ஏழாயிரமா என்கிற பேரம். வாதாட்டம்.
இதை நேருக்கு நேராக, தன் சொந்த அக்காவுக்கே நிகழ்வதைப் பார்த்துணர்ந்தபோது… மனசின் அடியாழம் வரை அதிர்ந்து போய்விட்டது.
ஓட்டை சைக்கிளுக்கு இருக்கும் மதிப்புக்கூட உயிருள்ள அக்காவுக்குக் கிடையாதா? அக்கா என்கிற மனுஷி இழிந்தவளா?
பணத்தை எடுத்து எண்ணிக் கொடுத்த பிறகுதான் சைக்கிள்மீது கைவைக்க முடிந்தது. இங்கு என்னடா வென்றால், அக்காவைத் தரணும்னா, நாமதான் பதினைந்து பவுன் நகையும், ரொக்கமும் தரணுமா? இத்தனையும் தந்து ‘தள்ளி’ விட வேண்டியவளா அக்கா? இது என்னடா கொடுமை! லாப நோக்குள்ள ஏவாரத்தைவிட இழிவான விஷயமாயிருக்கே… இதுவா இங்க வாழ்க்கை முறைமை…? இது மனுசத்தன்மையா?
சமூகத்தின் குரூர முகத்தை நேருக்கு நேராகத் தரிசித்த வேதனையில்… அந்த ப்ளஸ் ஒன் பையன்.
– ஆனந்தவிகடன், 13.11.1994.
– விரல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1995, கங்கை புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
