ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்





(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4
1. படுமட்டமான ஒரு பிறந்தநாள்

அன்று பிரைவிட் தெருவின் நான்காம் எண் வீட்டில் காலை உணவின்போது வெடித்துக் கிளம்பிய விவாதம் ஒன்றும் புதிதல்ல. அன்று அதிகாலையில், வெர்னன் டர்ஸ்லீயை, அவர்களது வீட்டில் வசித்து வந்த, அவரது மனைவியின் சகோதரியின் மகனான ஹாரியின் அறையிலிருந்து வந்த ஒரு பெரிய அலறல் சத்தம் தூக்கத்திலிருந்து எழுப்பியிருந்தது.
“இந்த வாரத்தில் இப்படி நடைபெறுவது இது மூன்றாவது முறை,” என்று சாப்பாட்டு மேசையின் மறுபுறம் இருந்து வெர்னன் கர்ஜித்தார். “ஹாரி, உன்னால் அந்த ஆந்தையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அது இனியும் இங்கு இருக்கக்கூடாது!”
ஹாரி மீண்டும் ஒருமுறை நிலைமையை எடுத்துரைக்க முயன்றான்.
“அந்த ஆந்தைக்குச் சலிப்பாக இருக்கிறது,” என்று அவன் கூறினான். “எப்போதும் வெளியே பறந்து திரிந்துதான் அதற்குப் பழக்கம். இரவு வேளையில் மட்டுமாவது நான் அதை வெளியே பறக்கவிட நீங்கள் அனுமதித்தால் . . .”
‘உனக்கு என்னைப் பார்த்தால் மடையன்போலத் தோன்றுகிறதா?” என்று வெர்னன் சீறினார். காட்டுத்தனமாக வளர்ந்திருந்த அவரது மீசையில், பொரித்த முட்டை கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. “அந்த ஆந்தையை வெளியே விட்டால் என்ன நடக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.”
பிறகு அவர் திரும்பித் தன் மனைவி பெட்டூனியாவை அர்த்தத்துடன் பார்த்தார்.
ஹாரி அதற்கு பதிலளிக்க முனைந்தான். ஆனால் அப்போது வெர்னனின் மகன் டட்லீ விட்ட நீண்ட, சத்தமான ஏப்பத்தின் ஒலியில் ஹாரி கூறிய வார்த்தைகள் யாருடைய காதுகளையும் எட்டவில்லை.
“எனக்கு இன்னும் கொஞ்சம் இறைச்சி வேண்டும்,” என்று டட்லீ கூறினான்.
“கண்ணா, உள்ளே அடுப்படியில் வேண்டிய மட்டும் இருக்கிறது,” என்று கூறிய பெரியம்மா பெட்டூனியா, பளபளத்தத் தன் கண்களை, நன்றாகத் தின்று கொழுத்துப் போயிருந்த தன் மகனை நோக்கித் திருப்பினார். “சந்தர்ப்பம் கிடைக்கும்போது உனக்கு நாங்கள் நன்றாகச் சாப்பாடு போட்டாக வேண்டும். உன் பள்ளி விடுதி உணவை நினைத்தாலே எனக்கு ஏதோ செய்கிறது. . .”
“பெட்டூனியா, உனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி எதையாவது உளராதே. டட்லீ படித்துக் கொண்டிருக்கும் அதே ஸ்மெல்டிங்ஸ் பள்ளியில் நான் படித்தபோது ஒருநாள்கூட நான் பட்டினி கிடந்ததில்லை,” என்று வெர்னன் திருப்தியுடன் கூறினார். “டட்லீ, அங்கு உனக்குத் தேவையான அளவுக்குச் சாப்பாடு கிடைக்கிறது, இல்லையா?”
டட்லீ படுகுண்டாக இருந்தான். அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியின் இருபுறமும் அவனது சதை பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது. அவன் பல்லிளித்துக் கொண்டே ஹாரியை நோக்கித் திரும்பினான்.
“அந்த இறைச்சிப் பாத்திரத்தை எடுத்து எனக்குத் தா.”
“உனக்கு அந்த மாயாஜால வார்த்தை மறந்துவிட்டது,” என்று ஹாரி எரிச்சலுடன் கூறினான்.
மிகச் சாதாரணமான அந்த வாக்கியம் அக்குடும்பத்தினரிடம் ஏற்படுத்திய தாக்கம் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. டட்லீ மூச்சு வாங்க மறந்து தடாலென்று தன் நாற்காலியில் இருந்து கீழே விழுந்தான். அந்த அறையே அதிர்ந்தது. பெரியம்மா பெட்டூனியா ‘வீல்’ என்று கத்திவிட்டுத் தன் கைகளால் தன் வாயைப் பொத்திக் கொண்டார். வெர்னன் தன் நெற்றி நரம்புகள் புடைக்கத் துள்ளி எழுந்தார்.
“‘தயவு செய்து’ என்ற வார்த்தையை உபயோகி என்றுதான் நான் கூற வந்தேன்,” என்று ஹாரி அவசர அவசரமாகக் கூறினான். “நான் ஒன்றும் …”
“நான் உன்னிடம் என்ன கூறியிருந்தேன்?” என்று வெர்னன் உறுமினார். அவரது வாயிலிருந்து மேசை முழுக்க எச்சில் தெரித்தது. “மாயாஜாலம்’ என்ற என்ற வார்த்தையை எங்கள் பயன்படுத்தக்கூடாது என்று நான் கூறியிருந்தது உனக்கு மறந்து வீட்டில் போய்விட்டதா?”
“இல்லை. நான் வந்து . . .
“இது குறித்து நான் ஏற்கனவே உன்னை எச்சரித்திருந்தேன், இல்லையா? நீ ஒரு விசித்திரப் பிறவியாக இருப்பதை இந்த வீட்டில் காட்டிக் கொள்ள முனைந்தால் நான் அதை ஒருக்காலும் பொறுத்துக் கொள்ள மாட்டேன்!”
முகம் சிவந்து போய் பெரியப்பாவையும், முகம் வெளுத்துப் போய் உட்கார்ந்திருந்த தன் நின்று கொண்டிருந்த தன் பெரியம்மாவையும் ஹாரி உற்றுப் பார்த்தான். பெரியம்மா பெட்டூனியா, கீழே விழுந்து கிடந்த டட்லீ எழுந்து உட்கார்வதற்கு அவனுக்கு உதவிக் கொண்டிருந்தார்.
“சரி, சரி. இனிமேல் நான் அந்த வார்த்தையைப் பயன்படுத்த மாட்டேன்,” என்று ஹாரி கூறினான்.
பெரியப்பா வெர்னன் மீண்டும் தன் இருக்கையில் உட்கார்ந்தார். பயங்கரமாக ஓடிக் களைத்துப் போயிருக்கும் ஒரு காண்டாமிருகத்திற்கு மூச்சிறைப்பதுபோல அவருக்கு மூச்சு வாங்கியது. அவர் ஹாரியைத் தன் ஓரக் கண்களால் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஹாரி தன் கோடை விடுமுறைக்காக டர்ஸ்லீயின் வீட்டிற்குத் திரும்பி வந்ததிலிருந்தே, அவன் எந்த நேரத்திலும் வெடித்துவிடக்கூடிய ஒரு குண்டு என்பதுபோல அவர் அவனை நடத்தி வந்தார். ஏனெனில் ஹாரி சாதாரணமான ஒரு சிறுவன் அல்ல.
ஹாரி பாட்டர் ஒரு மந்திரவாதி. ஹாக்வார்ட்ஸ் மந்திர தந்திர மாயாஜாலப் பள்ளியில் முதல் வருடப் படிப்பை முடித்துவிட்டுக் கோடை விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்த ஒரு மந்திரவாதிச் சிறுவன். அவன் தங்களிடம் திரும்பி வந்தது குறித்து டர்ஸ்லீ குடும்பத்தினர் மகிழ்ச்சியற்று இருந்தனர் என்றாலும், ஹாரி அது குறித்து அடைந்திருந்த மனவேதனையை அதோடு ஒப்பிடவே முடியாது.
ஹாக்வார்ட்ஸ் பள்ளியை விட்டுவிட்டு வந்த பிரிவுத் துயர் அவனை வாட்டியதில் அவனுக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. ஹாக்வார்ட்ஸ் பள்ளிக் கோட்டை, அதன் ரகசியப் பாதைகள், அங்கிருந்த ஆவிகள், அங்கு கற்றுக் கொடுக்கப்பட்டப் பாடங்கள் (மாயத்திரவ ஆசிரியர் ஸ்னேப்பை இங்கு கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியாது), ஆந்தைகள் கொண்டு வந்த கடிதங்கள், பேரரங்கில் நடைபெற்ற விருந்துகள், கோட்டைக் கோபுரத்தில் இருந்த பொதுப் படுக்கையறையில் இருந்த தனது படுக்கை, மாணவர்கள் செல்லத் தடை செய்யபட்டிருந்த காட்டின் ஓரம் வசித்து வந்த கோட்டைப் பாதுகாவலர் ஹாக்ரிட், எல்லாவற்றுக்கும் மேலாக, மந்திர தந்திர உலகில் மிகப் பிரபலமாக விளங்கிய குவிடிச் விளையாட்டு (உயரமான ஆறு கோல்போஸ்ட்டுகளுடனும் நான்கு பறக்கும் பந்துகளுடனும் மந்திரத் துடங்களில் பறந்தபடி விளையாடப்படுகின்ற, பதினான்கு வீரர்கள் அடங்கிய ஒரு விளையாட்டு) ஆகியவற்றை மறக்க முடியாமல் ஹாரி தவித்தான்.
வீட்டிற்குள் ஹாரி அடியெடுத்து வைத்த உடனேயே, ஹாரியின் மந்திர தந்திரப் புத்தகங்கள், அவனது மந்திரக்கோல், அங்கிகள், கொப்பரை, அதிநவீன மந்திரத் துடப்பமான நிம்பஸ் 2000 ஆகிய அனைத்தையும், அவனது பெரியப்பா வெர்னன், மாடிப்படிக்குக் கீழே இருந்த சிறிய அறைக்குள் போட்டுப் பூட்டி வைத்துவிட்டார். கோடை விடுமுறை முழுவதும் குவிடிச் விளையாட்டை விளையாடிப் பயிற்சி செய்யாததால் ஹாரி தனது கிரிஃபின்டார் அணியின் குவிடிச் குழுவில் சேர்க்கப்படாமல் விட்டுவிடப்பட்டால், டர்ஸ்லீ குடும்பத்தினருக்கு அதைப் பற்றி என்ன அக்கறை? வீட்டுப் பாடங்கள் எதையும் செய்து முடிக்காமல் அவன் ஹாக்வார்ட்ஸுக்குத் திரும்பிச் சென்றால், பிரச்சனை அவனுக்குத்தானே? மந்திரவாதிகள் டர்ஸ்லீ போன்றோரை மகுள்கள் (தங்களது உடலில் ஒரு துளிகூட மந்திரஜால ரத்தம் இல்லாதவர்கள்) என்று அழைத்தனர். டர்ஸ்லீயைப் போன்ற மகுள்கள் தங்கள் வீட்டில் ஒரு மந்திரவாதியை வைத்திருப்பதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினர். ஹாரியின் ஆந்தையான ஹெட்விக், மந்திர தந்திர உலகில் இருந்த மற்ற எவரொருவருக்கும் தகவல்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக, வெர்னன் அதை அதன் கூண்டிற்குள் வைத்துப் பூட்டிவிட்டிருந்தார்.
ஹாரி அக்குடும்பத்தில் இருந்த மற்ற எவரொருவரையும்போல இருக்கவில்லை. பெரியப்பா வெர்னன் பூதாகாரமாக இருந்தார். அவருக்குக் கழுத்து இருந்ததே வெளியே தெரியவில்லை. அவர் கருப்பான, மிகப் பெரிய மீசை ஒன்றை வைத்திருந்தார். குதிரை மூஞ்சியுடன் இருந்த பெரியம்மா பெட்டூனியா எலும்பும் தோலுமாக இருந்தார். பன்றியைப்போல நன்றாகக் கொழுத்திருந்த அவர்களது மகன் டட்லீ, இளஞ்சிவப்பு நிறத்தில் தங்க நிறத் தலைமுடியுடன் இருந்தான். ஆனால் ஹாரியோ, சிறிய உருவத்தைக் கொண்டிருந்ததோடு மெலிந்தும் காணப்பட்டான். அவனது கண்கள் பச்சை நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தன. அவனது கருநிறத் தலைமுடி எப்போதும் வணங்காமுடியாகவே இருந்து வந்தது. அவன் வட்ட வடிவ மூக்குக்கண்ணாடி ஒன்றை அணிந்திருந்தான். அவனது நெற்றியில் மின்னல் கீற்று வடிவில் ஒரு மெல்லிய தழும்பு இருந்தது.
அந்தத் தழும்புதான் அவனை வித்தியாசமானவனாகக் காட்டியது. மந்திரவாதிகளின் உலகில்கூட அத்தழும்பு அவனை மற்றவர்களிடம் இருந்து வெகுவாகப் பிரித்துக் காட்டியது. ஹாரியின் மர்மமான கடந்தகாலத்தின் ஒரே ஓர் அடையாளமாக அத்தழும்பு விளங்கியது. பதினோரு வருடங்களுக்கு முன்பு டர்ஸ்லீ குடும்பத்தினரின் வீட்டு வாசலில் அவன் விடப்பட்டதற்கும் அதுதான் காரணமாக இருந்தது.
ஹாரிக்கு ஒரு வயதாக இருந்தபோது, தீய மந்திரவாதிகளில் தலைசிறந்தவனாகக் கருதப்பட்ட வோல்டமார்ட்டின் மந்திரத் தாக்குதலில் இருந்து எப்படியோ அவன் தப்பியிருந்தான். இன்றுகூட வோல்டமார்ட்டின் பெயரைச் சொல்வதற்குப் பல மந்திரவாதிகளும் மந்திரவாதினிகளும் பயப்படுகின்றனர். வோல்டமார்ட்டின் தாக்குதலில் ஹாரியின் பெற்றோர் இறந்துவிட்டிருந்தனர். ஆனால் ஹாரி, அந்த மின்னல் கீற்று வடிவத் தழும்புடன் தப்பியிருந்தான் ஏன் என்று யாருக்கும் தெரியவில்லை முடியாமல் போன அதே கணத்தில், வோல்டமார்ட்டின் ஹாரியைக் கொல்ல ஒட்டுமொத்த சக்தியும் வோர்டமார்ட்டைவிட்டு மாயமாய் மறைந்துவிட்டிருந்தது.
அதனால், ஹாரியை, இறந்து போன அவனது தாயாரின் சகோதரியான பெரியம்மா பெட்டூனியாவும் அவரது கணவரான வெர்னனும் வளர்த்து வந்தனர். தன் நெற்றியில் இருந்த தழும்பு தனது பெற்றோரைப் பலி வாங்கிய கார் விபத்தில் ‘தனக்கு ஏற்பட்டது என்று டர்ஸ்லீ தம்பதியினர் கூறியதை நம்பிக் கொண்டும், தன்னை அறியாமலேயே தன்னைச் சுற்றிப் பல வினோதமான விஷயங்களைத் தான் ஏன் நிகழ்த்திக் கொண்டிருந்தோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமலும், ஹாரி பாட்டர், டர்ஸ்லீ குடும்பத்தினருடன் பத்து வருடங்களைக் கழித்து வந்திருந்தான்.
பிறகு, சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, ஹாக்வார்ட்ஸ் பள்ளி, தங்கள் பள்ளியில் பயில ஹாரி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்து அழைப்புக் கடிதம் ஒற்றை அனுப்பியபோது, மொத்தக் கதையும் வெளியே வந்தது. ஹாரி அந்த மந்திர தந்திர மாயாஜாலப் பள்ளிக்குப் படிக்கச் சென்றான். அங்கு அவனைப்போலவே அவனது தழும்பும் பிரபலமாக விளங்கியது . ஆனால் கோடை விடுமுறைக்காகப் பள்ளி மூடப்பட்டதால், ஹாரி இப்போது மீண்டும் டர்ஸ்லீ குடும்பத்தாருடன் வசிப்பதற்காக வந்திருந்தான். அவர்கள் அவனைச் சாக்கடையில் புரண்டு வந்திருந்த ஒரு நாயைப்போல நடத்துவதும் தொடர்ந்தது.
இன்று ஹாரிக்குப் பன்னிரண்டாவது பிறந்தநாள் என்பதுகூட டர்ஸ்லீ குடும்பத்தினருக்கு நினவில் இருக்கவில்லை. ஹாரியும் பெரிதாக எதையும் அவர்களிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் அவனது பிறந்தநாளின்போது சொல்லிக் கொள்ளும்படியான எந்தவொரு பரிசையும் ஒருபோதும் கொடுத்திருக்கவில்லை. கேக் வெட்டுவதைப் பற்றி அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் அவனது பிறந்தாளை ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டதைப் பற்றி என்ன சொல்ல?
அந்தக் கணத்தில் பெரியப்பா வெர்னன் தன் தொண்டையைச் செருமிக் கொண்டதன் மூலம் தனக்குத் தானே முக்கியத்துவம் எல்லோரும் ஏற்கனவே கொடுத்துக் கொண்டு, “நாம் அறிந்துள்ளதைப்போல, இன்றைய தினம் ஒரு முக்கியமான நாள்,” என்று கூறினார்.
ஹாரி நிமிர்ந்து பார்த்தான். அவனுக்குத் தான் கேட்டதை நம்பத் துணிவு பிறக்கவில்லை.
“என் வாழ்நாளிலேயே நான் நடத்தப் போகும் மிகப் பெரிய வியாபாரப் பரிவர்த்தனை இன்றுதான் நடக்கப் போகிறது,” என்று வெர்னன் கூறினார்.
ஹாரி ஏமாற்றத்துடன் மீண்டும் தன் சாப்பாட்டில் கவனம் செலுத்தினான். இதைத் தான் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டான். உருப்படாத இரவு விருந்தைப் பற்றித்தான் பெரியப்பா வெர்னன் பேசிக் கொண்டிருந்தார். கடந்த இரண்டு வாரங்களாக இதைத் தவிர வேறு எதையும் அவர் பேசியிருக்கவில்லை. கட்டிடத் தொழிலில் இருந்த ஒரு பணக்காரரும் அவரது மனைவியும் இன்று இரவு விருந்திற்கு வரவிருந்தனர். பெரியப்பா வெர்னன் அவர்களிடமிருந்து பெரிய தொகைக்கான ஆர்டர் ஒன்றைப் பெற்றுவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தார் (பெரியப்பா வெர்னனின் நிறுவனம் துளையிடும் கருவிகளை உற்பத்தி செய்து வந்தது).
“இன்றிரவு நாம் வரிசைக்கிரமமாகச் செய்ய வேண்டியவற்றை மீண்டும் ஒருமுறை சரி பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன்,” என்று வெர்னன் கூறினார். “நாம் எல்லோரும் இரவு எட்டு மணிக்கு அவரவர் இடத்தில் தயாராக இருக்க வேண்டும். ‘பெட்டூனியா, நீ எங்கே இருப்பாய்?”
“வருபவர்களை இங்கிதமாக வரவேற்பதற்காக நான் வரவேற்பறையில் காத்திருப்பேன்,” என்று பெட்டூனியா உடனடியாகக் கூறினார்.
“சபாஷ்! டட்லீ, நீ?”
“நான் கதவைத் திறப்பதற்காக அதனருகே காத்திருப்பேன்,” என்று கூறிய டட்லீ, ஓர் அசட்டுச் சிரிப்பைத் தன் முகத்தில் தவழவிட்டவாறே தொடர்ந்தான். “நான் அவர்களிடம், ‘மேசன் தம்பதியரே, நான் உங்களுடைய கோட்டுகளை எடுத்துக் கொள்ளலாமா?’ என்று கேட்பேன்.”
பெட்டூனியா தன் குரலில் பேரானந்தம் கூத்தாட, “அவர்கள் டட்லீயைக் கொண்டாடப் போகிறார்கள்,” என்று உற்சாகமாகக் கத்தினார்,
“பிரமாதம், டட்லீ,” என்று கூறிய வெர்னன், ஹாரியை நோக்கித் தன் தாக்குதலைத் துவக்கினார். “ஹாரி, நீ?”
“நான் என் படுக்கையறையில் எந்தவிதமான சத்தமும் ஏற்படுத்தாமல், நான் இந்த வீட்டிலேயே இல்லாததுபோல பாவித்துக் கொண்டு அமைதியாக இருப்பேன்,” என்று ஹாரி சுரத்தே இல்லாமல் கூறினான்.
“மிகச் சரியாகச் சொன்னாய், ஹாரி,” என்று வெர்னன் வஞ்சகமாகக் கூறினார். பிறகு அவர் பெட்டூனியாவை நோக்கித் திரும்பி, “நான் அவர்களை வாசலில் வரவேற்று அழைத்து வந்து வரவேற்பறைக்குள் நுழைந்தவுடன் உன்னை அவர்க அறிமுகப்படுத்துவேன். பிறகு அவர்களுக்கு மது வகைகளை ஊற்றிக் களுக்கு கொடுப்பேன். எட்டு மணி பதினைந்து நிமிடங்களுக்கு . . ?
“சாப்பாடு தயாராகிவிட்டதாக நான் கூறுவேன்,” என்று பெட்டூனியா கூறினார்.
“டட்லீ, நீ என்ன சொல்வாய்?”
“நான் அவர்களிடம், ‘திருமதி மேசன் அவர்களே, நான் உங்களைச் சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் செல்லலாமா?” என்று கேட்பேன்,” என்று கூறிய டட்லீ, அப்போது அங்கு ஒரு பெண்மணி இருந்ததாகக் கற்பனை செய்து கொண்டு தன் பருத்தக் கரங்களை நீட்டினான்.
“என் செல்லமே, என் கண்ணே பட்டுவிடும்போல இருக்கிறதே!” என்று பெட்டூனியா புளகாங்கிதத்துடன் கூறினார்.
ஹாரியை நோக்கித் திரும்பிய வெர்னன், விஷமத்தனமாக அவனிடம், “ஹாரி, நீ?” என்று கேட்டார்.
“நான் என் படுக்கையறையில் எந்தவிதமான சத்தமும் ஏற்படுத்தாமல், நான் இந்த வீட்டிலேயே இல்லாததுபோல பாவித்துக் கொண்டு அமைதியாக இருப்பேன்,” என்று ஹாரி மீண்டும் ஒப்பித்தான்.
“பிரமாதம்! நாம் இப்பொழுது விருந்தின்போது அவர்களைப் புகழ்ந்து ஒருசில வார்த்தைகளை எப்படிக் கூறலாம் என்று பார்க்கலாம். பெட்டூனியா, உனக்கு ஏதாவது தோன்றுகிறதா?”
“திரு மேசன் அவர்களே, நீங்கள் அபாரமாக கோல்ஃப் விளையாடுவீர்கள் என்று வெர்னன் கூறினார் … திருமதி மேசன் அவர்களே, உங்கள் உடையலங்காரம் பிரமாதமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் ஆடைகளை எங்கு வாங்குகிறீர்கள்? .
“சபாஷ்! டட்லீ, நீ?”
“இப்படிக் கூறினால் எப்படி இருக்கும்? ‘எங்கள் பள்ளியில் எங்களுக்குப் பிடித்தக் கதாநாயகர்களைப் பற்றி எழுத வேண்டும் என்று கூறியிருந்தார்கள். திரு மேசன் அவர்களே, நான் உங்களைப் பற்றி எழுதினேன்.””
பெட்டூனியாவிற்குப் பெருமை தாங்க முடியவில்லை. அவர் கண்ணீர் மல்கத் தன் மகனைக் கட்டியணைத்துக் கொண்டார். ஹாரிக்கு அது கொஞ்சம் அதிகப்படியாக இருந்ததாகத் தோன்றியது. தனக்குள் பொங்கி எழுந்த அடக்க முடியாத சிரிப்பை அவர்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக ஹாரி மேசைக்குக் கீழே குனிந்து கொண்டான்.
“ஹாரி, நீ?”
மேசையிலிருந்து தலையைத் தூக்கிய ஹாரி தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு சாதாரணமாகத் தோற்றமளிக்கப் பிரயத்தனப்பட்டான்.
“நான் என் படுக்கையறையில் எந்தவிதமான சத்தமும் ஏற்படுத்தாமல், நான் இந்த வீட்டிலேயே இல்லாததுபோல பாவித்துக் கொண்டு அமைதியாக இருப்பேன்,” என்ற பழைய பல்லவியை ஹாரி மீண்டும் பாடினான்.
“சொல்வதுபோல நடந்து கொள்,” என்று வெர்னன் கறாராகக் கூறினார். “ஹாரி, மேசன் தம்பதியினருக்கு உன்னைப் பற்றி எதுவும் தெரியாது. அது அப்படியே நீடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பெட்டூனியா, அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன், காபி குடிப்பதற்காகத் திருமதி மேசனை மீண்டும் வரவேற்பறைக்கு அழைத்துச் செல். நான் என் பேச்சை மீண்டும் துளையிடும் கருவிகள் பக்கமாகத் திருப்ப முயல்வேன். நம் பக்கம் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால், இரவு பத்து மணித் தொலைக்காட்சிச் செய்திக்கு முன்பாகவே, நான் விரும்புகிற ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டிருக்கும். நாளை இதே நேரம் மஜோர்க்காவில் விடுமுறை இல்லம் ஒன்றை வாங்கும் முயற்சியில் நாம் இறங்கலாம்.”
இது குறித்து ஹாரி பெரிதாகப் பரவசம் அடையவில்லை, ஏனெனில் இங்கு பிரைவிட் தெரு வீட்டில் அவர்கள் தன்னை நடத்துவதைவிட மேலாக ஒன்றும் மஜோர்க்காவில் அவர்கள் தன்னை நடத்திவிடப் போவதில்லை என்று அவன் நினைத்தான்.
“சரி, நான் எனக்கும் டட்லீக்கும் இரவு விருந்திற்காக அணியும் கோட்டுகளை வாங்கி வருவதற்காக நகரத்திற்குப் போகப் போகிறேன்,” என்று கூறிய வெர்னன் ஹாரியிடம் உறுமினார். “ஏய், உன் பெரியம்மா இப்போது வீட்டைச் சுத்தம் செய்யும்போது அவரைத் தொந்தரவு செய்யாதே!”
வீட்டின் பின்வாசல் வழியாக ஹாரி வெளியேறினான். அன்று வானிலை அற்புதமாக இருந்தது. அவன் நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்த புற்களின் ஊடாகச் சென்று, அங்கிருந்த ஒரு பெஞ்சில் சரிந்தான். “ஹாரி, உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான்.
பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் இல்லை, பிறந்தநாள் பரிசுகள் ல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இன்று மாலை தான் இல்லாததுபோல பாவித்துக் கொள்ளவும் வேண்டும். அவன் புதர்ப் பக்கம் பரிதாபமாகப் பார்த்தான். அவன் ஒருபோதும் இவ்வளவு தனிமையாக உணர்ந்ததில்லை. ஹாக்வார்ட்ஸில் சேர்ந்த பிறகு அவனுக்குப் பழக்கமான அவனது அருமை நண்பர்கள் ரானையும் ஹெர்மயனியையும் அவனுக்கு அப்போது வெகுவாகத் தேடியது. ஆனால் அவர்கள் இருவருக்கும் தன்னைத் தேடியதுபோல அவனுக்குத் தோன்றவில்லை. கோடை விடுமுறையின்போது தன் வீட்டிற்கு வந்து தன்னுடன் தங்குமாறு ஹாரியை அழைக்கப் போவதாக ரான் அவனிடம் கூறியிருந்த போதிலும், இக்கோடை விடுமுறை முழுவதும் ரானிடமிருந்து ஹாரிக்கு ஒரு கடிதம்கூட வந்திருக்கவில்லை. ஹெர்மயனியிடமிருந்தும் ஹாரிக்கு எந்தக் கடிதமும் வந்திருக்கவில்லை.
ஹெட்விக்கின் கூண்டைத் தன் மந்திர சக்தியால் திறந்து ரானுக்கும் ஹெர்மயனிக்கும் அதன் மூலம் கடிதம் அனுப்பலாம் என்று ஹாரி எண்ணற்ற முறை யோசித்துக் கிட்டத்தட்ட அதைச் செயல்படுத்த முனைந்தபோதும், அது, தேவையில்லாமல் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பானது என்று கருதி அவன் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மந்திரவாதிகளுக்குத் தங்கள் பள்ளிக்கு வெளியே மந்திர சக்தியைப் பயன்படுத்த அனுமதி கிடையாது. இக்கட்டுப்பாடு குறித்து டர்ஸ்லீ தம்பதியினருக்கு எதுவும் தெரியாது. தான் தனது மந்திர சக்தியை உபயோகித்துத் தங்களைக் குப்பைமேட்டு வண்டுகளாக மாற்றிவிடக்கூடும் என்று அவர்கள் பயந்து போயிருந்த காரணத்தால்தான், தனது பொருட்களோடு சேர்த்துத் தன்னையும் அவர்கள் அந்த மாடிப்படிக்குக் கீழே இருந்த சிற்றறைக்குள் அடைத்து வைக்கவில்லை என்பதை ஹாரி அறிந்திருந்தான். ஒருசில வாரங்களுக்கு முன்புவரை, ஹாரி, டட்லீயை நோக்கி அர்த்தமற்ற வார்த்தைகளை உச்சரித்து அவன் தலைதெறிக்க ஓட்டம் எடுத்ததைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். ஆனால் ரானிடம் இருந்தும் ஹெர்மயனியிடம் இருந்தும் தகவல்கள் ஏதும் வராததால் மாயாஜால உலகில் இருந்து தான் முழுவதுமாகக் கத்தரித்துவிடப்பட்டு இருந்ததுபோல அவன் உணர்ந்தான். அதனால் டட்லீயைச் சீண்டும் செயல்களும் ஹாரிக்கு சுவாரசியம் ஏற்படுத்தத் தவறின. ஆனால் இப்பொழுது ரானும் ஹெர்மயனியும் அவனது பிறந்தநாளையே மறந்து போயிருந்தனர்.
ஹாக்வார்ட்ஸில் இருந்து இப்போது அவனுக்கு ஏதேனும் ஒரு தகவல் கிடைக்கக்கூடும் என்றால் அவன் அதற்கு எந்த விலை வேண்டுமானாலும் கொடுக்கத் துணிவான். அல்லது ஏதாவது ஒரு மந்திரவாதியிடம் இருந்தோ அல்லது மந்திரவாதினியிடம் இருந்தோ ஒரு தகவல் வந்தால்கூட அவனுக்கு அது போதுமானதாக இருக்கும். தனக்கு நடந்தவை எல்லாம் வெறும் கனவு அல்ல என்பதை நிரூபிக்கும் என்றால், தனது பரம எதிரியான டிராகோ மால்ஃபாயைச் சந்தித்தால்கூட ஹாரி மகிழ்ச்சியடைவான்.
அதற்காக அவன் ஹாக்வார்ட்ஸில் கழித்த மொத்த வருடமும் வேடிக்கையும் விளையாட்டுமாக இருந்தது என்று அர்த்தமாகிவிடாது. பள்ளியின் கடைசிப் பருவத்தின்போது அவன் சாட்சாத் வோல்டமார்ட்டையே நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்திருந்தது. வோல்டமார்ட் தன் சக்திகள் அனைத்தையும் இழந்து பரிதாபமான நிலையில் இருந்தபோதிலும், இன்னும் பயங்கரமானவனாகவே தோற்றமளித்தான்; அவனது குள்ளநரித்தனம் அப்படியே இருந்தது; இழந்த சக்தியையும் அதிகாரத்தையும் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற வெறி அவனிடமிருந்து மறைந்திருக்கவில்லை. ஹாரி இரண்டாவது முறையாக வோல்டமார்ட்டின் பிடியிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியிருந்தான். அது நடந்து பல வாரங்கள் கழித்து இப்போதுகூட, வோல்டமார்ட்டின் வெளிறிய முகமும், அகன்ற, கோபம் கொப்பளித்தக் கண்களும் தத்ரூபமாக நினைவுக்கு வர, அவன் இப்போது எங்கிருப்பானோ என்று பயந்தபடி, ஹாரி அடிக்கடி நடு இரவில் வியர்வையில் தொப்பலாக நனைந்து கண்விழித்துக் கொண்டிருந்தான்.
ஹாரி அந்த பெஞ்சிலிருந்து சடாரென்று நிமிர்ந்து உட்கார்ந்தான். அவன் குருட்டாம்போக்காகச் சற்றுத் தள்ளி இருந்த புதர்களை வெறித்துக் கொண்டிருந்தான். ஆனால் அப்புதரும் பதிலுக்கு அவனை வெறித்துப் பார்த்தது. அதன் இலைகளில் இரண்டு மிகப் பெரிய பச்சை நிறக் கண்கள் தோன்றின.
ஹாரி அந்த பெஞ்சிலிருந்து கீழே குதித்த அக்கணத்தில், ஏளனம் பொங்கி வழிந்த ஒரு குரல் புல்தரையின் மறுபக்கத்தில் இருந்து வந்தது. அவனை நோக்கி வந்து கொண்டிருந்த டட்லீ அவனிடம், “இன்று என்ன நாள் என்று எனக்குத் தெரியும்,” என்று கூறினான்.
புதர்களுக்கிடையே காணப்பட்ட அந்தப் பெரிய கண்கள் ஒருமுறை இமைத்துவிட்டு மறைந்தன.
ஹாரி அக்கண்கள் இருந்த இடத்தைவிட்டுத் தன் பார்வையை அகற்றாமல், “என்ன கூறுகிறாய்?” என்று டட்லீயிடம் கேட்டான்.
ஹாரியை நோக்கி நேராக வந்த டட்லீ, “இன்று என்ன நாள் என்று எனக்குத் தெரியும்,” என்று மறுபடியும் கூறினான்.
“சபாஷ்! அப்படியானால் வாரத்தின் நாட்கள் எவையெவை என்பதை ஒருவழியாக நீ கற்றுக் கொண்டுவிட்டாய் என்று நினைக்கிறேன்,” என்று ஹாரி கூறினான்.
“இன்று உன் பிறந்தநாள்,” என்று இகழ்ச்சித் ததும்ப டட்லீ கூறினான். “உனக்கு ஏன் வாழ்த்து அட்டைகள் ஏதும் வரவில்லை? அந்த விசித்திரமான இடத்தில் உனக்கு ஒரு நண்பன்கூடக் கிடைக்கவில்லையா?”
“நீ என் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேசுவது உன் பெற்றோர் காதுகளில் விழாமல் இருந்தால் உனக்கு நல்லது,” என்று ஹாரி அலட்சியமாகக் கூறினான்.
தனது பருத்த உடலிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த தனது காற்சட்டையை டட்லீ தூக்கிவிட்டுக் கொண்டான்.
பிறகு, “நீ ஏன் அந்தப் புதர்ச்செடியையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று சந்தேகமாகக் கேட்டான்.
“அதை எரியச் செய்வதற்கு எது சரியான மந்திரம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று ஹாரி கூறினான்.
தன் கொழுத்த மூஞ்சியில் கிலி சூழ்ந்து கொள்ள, டட்லீ தட்டுத்தடுமாறி உடனடியாக அங்கிருந்து பின்வாங்கத் துவங்கினான்.
“அது உன்னால் முடியாது. இந்த வீட்டில் இருக்கும்வரை மாயாஜாலம் எதையும் நீ செய்யக்கூடாது என்று அப்பா கூறியிருக்கிறார். அப்படி ஏதாவது நடந்தால், அவர் உன்னை இந்த வீட்டைவிட்டுத் துரத்திவிடுவார். உனக்கு வேறு போக்கிடம் எதுவும் கிடையாது. உன்னை உடன் வைத்துக் கொள்ள உனக்கு நண்பர்களும் கிடையாது!”
“ஜிக்கரி போக்கரி!” என்று கடுமையான தொனியில் ஹாரி கூறினான். “ஹோகஸ் போகஸ் . . . ஸ்குயிக்லி விக்லி…”
“அம்மா” என்று அலறிக் கொண்டே டட்லீ தன் வீட்டை நோக்கி ஓடினான். போகிற வழியில் எழே விழுந்து தட்டுத்தடுமாறி எழுந்து, “அம்மா, அவன் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறான் என்று பாரேன்!” என்று கூச்சல் போட்டான்,
அந்தக் கணநேர வேடிக்கைக்கு ஹாரி ஒரு பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று. டட்லியோ அல்லது அந்தப் புதரோ எவ்வித பாதிப்பும் அடைத்திருக்கவில்லை என்பதால், ஹாரி எந்தவித மாயாஜாலத்தையும் பயன்படுத்தவில்லை என்பதைப் பெட்டூனியா அறிந்து கொண்டார். ஆனாலும், சோப்பு நுரையில் குளித்துக் கொண்டிருந்த வாணலிச் சட்டியை அவர் அவனை நோக்கி வீசியபோது ஹாரி தன் தலையைக் குனிந்து கொள்ள வேண்டியிருந்தது. பிறகு அவர் அவனுக்கு நிறைய வீட்டு வேலைகளைக் கொடுத்தார். அதைச் செய்து முடிக்கும்வரை அவனுக்குச் சாப்பாடு கிடையாது என்றும் அவர் அவனிடம் கூறினார்.
டட்லீ ஹாரியைக் கண்காணித்துக் கொண்டும் சோம்பலாகத் திரிந்து கொண்டும் ஐஸ்கிரீமைத் தின்று கொண்டும் இருந்தான். ஹாரி சன்னல்களைத் துடைத்தான், காரைக் கழுவினான், புல்தரையைச் சீராக்கினான், பூந்தோட்டத்தில் இருந்த பூச்செடிகளை நேர்த்தியாக வெட்டினான், ரோஜாச் செடிகளின் தேவையற்றக் கிளைகளை வெட்டி அச்செடிகளுக்கு நீர் வார்த்தான், தோட்டத்தில் இருந்த பெஞ்சிற்கு மீண்டும் வண்ணம் தீட்டினான். உச்சி வெயில் அவனை வாட்டியெடுத்தது. சுள்ளென்று அடித்த வெயிலில் அவனது கழுத்து எரிந்தது. டட்லீயின் தூண்டிலில் தான் வலியப் போய் மாட்டியிருக்கக்கூடாது என்று ஹாரி நினைத்தான். ஆனால் எந்த விஷயம் அவனது மனத்தை அரித்துக் கொண்டிருந்ததோ, சரியாக அதையே டட்லீ கூறியிருந்தான் ஒருவேளை தனக்கு ஹாக்வார்ட்ஸில் நண்பர்கள் இல்லை என்பது உண்மையாக இருக்கக்கூடுமோ? . . .
அவன் பூச்செடிகளுக்கு உரமிட்டுக் கொண்டே, “இவர்கள் மட்டும் இப்போது ‘ஹாக்வார்ட்ஸில் பிரபலமாக இருக்கும் ஹாரி பாட்டரை’ப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,” என்று நினைத்தான். அவனுக்கு முதுகு கடுமையாக வலித்தது. அவனது முகத்தில் வியர்வை வெள்ளமாக ஓடியது.
மாலை ஏழரை மணிக்கு, முற்றிலும் களைத்துத் துவண்டு போயிருந்த ஹாரியை அவனது பெரியம்மா பெட்டூனியா கூப்பிட்டார்.
“இங்கே வா! இந்தச் செய்தித்தாள்களின்மீது நடந்து வா!”
பளபளப்பாக மின்னிக் கொண்டிருந்த சமையலறையினுள் ஹாரி மகிழ்ச்சியாக நுழைந்தான். ஃபிரிட்ஜின் மேல் அன்றைய இரவு விருந்தின்போது பரிமாறப்படவிருந்த மிகப் பெரிய கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அடுப்பில் இறைச்சி வெந்து கொண்டிருந்தது.
சமையலறை மேசை மேல் இருந்த இரண்டு துண்டுகள் ரொட்டியையும் ஒரு சீஸ் கட்டியையும் ஹாரிக்குச் சுட்டிக்காட்டியவாறு, “சீக்கீரமாகச் சாப்பிடு! மேசன் தம்பதியினர் எந்த நேரத்திலும் வந்துவிடுவர்,” என்று பெட்டூனியா படபடத்தார். இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த, இரவு விருந்திற்கான உடைக்கு அவர் ஏற்கனவே மாறியிருந்தார்.
ஹாரி தன் கைகளைக் கழுவிவிட்டு அந்தப் பரிதாபமான இரவு உணவை உண்டு முடித்தான். அவன் சாப்பிட்டு முடித்த மறுகணம் பெட்டூனியா அவனது தட்டைப் பிடுங்கிக் கொண்டு, “மாடிக்கு வேகமாகப் போ,” என்று விரட்டினார்.
ஹாரி வரவேற்பறையைக் கடந்து சென்றபோது, கோட்டுகள் மற்றும் ‘டை’கள் அணிந்திருந்த வெர்னனும் டட்லீயும் அவனது பார்வையில் பட்டனர். அவன் மாடிப்படியின் உச்சியை அடைந்திருந்தபோது வாசல் மணி ஒலித்தது. பெரியப்பா வெர்னனின் சீற்றமான முகம் மாடிப்படியின் கீழ்ப்படியில் தோன்றியது.
“ஏய் ஹாரி, இதை ஞாபகம் வைத்துக் கொள்! ஏதாவது சத்தம் வந்தது என்றால்..”
ஹாரி மெதுவாக அடிமேல் அடியெடுத்து வைத்துத் தன் படுக்கையறைக்குள் நுழைந்து, கதவைச் சாத்திவிட்டுப் படுக்கையில் விழுவதற்காகத் திரும்பினான்.
ஆனால் அங்கு ஏற்கனவே ஓர் உருவம் அமர்ந்திருந்தது.
2. டாபியின் எச்சரிக்கை
ஹாரி கிட்டத்தட்டப் பெருங்கூச்சல் போட்டிருந்திருப்பான், ஆனால் எப்படியோ தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அவனது படுக்கையில் இருந்த அந்த விசித்திரப் பிராணிக்கு வௌவால்போலப் பெரிய காதுகளும், டென்னிஸ் பந்து அளவுக்குப் புடைத்துக் கொண்டிருந்த பச்சை நிறக் கண்களும் இருந்தன. அன்று காலையில் தோட்டத்தில் இருந்த புதர்ச்செடியில் இருந்து தன்னைக் கண்காணித்துக் கொண்டிருந்தது இதுதான் என்பதை ஹாரி உடனடியாகப் புரிந்து கொண்டான்.
ஹாரி அதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் அவனை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது கீழே ஹாலில் டட்லீயின் குரல் ஒலித்தது. “மேசன் தம்பதியரே, நான் உங்களுடைய கோட்டுகளை எடுத்துக் கொள்ளலாமா?”
படுக்கையில் உட்கார்ந்திருந்த அந்த விசித்திரப் பிராணி கீழே இறங்கி, தனது நீண்ட மெல்லிய மூக்கு அங்கு போடப்பட்டிருந்த தரைவிரிப்பைத் தொடுமளவுக்குக் குனிந்து வணங்கியது. தலையணை உறை போன்ற ஒன்றில் கைகளையும் கால்களையும் நுழைப்பதற்காக ஓட்டைகள் போட்டுவிட்டு அதை அந்த விசித்திரப் பிராணி அணிந்திருந்ததுபோல ஹாரிக்குத் தோன்றியது.
“உம் . . . ஹலோ!” என்று ஹாரி பதற்றத்துடன் கூறினான்.
“ஹாரி பாட்டர்,” என்று அந்த விசித்திரப் பிராணி கூறியது. அதன் குரல் உச்சஸ்தாயியில் இருந்தது. அது கண்டிப்பாகக் கீழேவரை கேட்டிருக்கும் என்று ஹாரி பயந்தான். அந்த விசித்திரப் பிராணி மேலும் இவ்வாறு கூறியது: “சார், உங்களைச் சந்திக்க இந்த டாபி வெகுகாலமாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தது… உங்களைச் சந்தித்ததை நான் எனக்குக் கிடைத்தப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன் …”
“உம். நன்றி,” என்று ஹாரி கூறினான். அவன் மெதுவாகச் சுவரோரமாக நகர்ந்து சென்று அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தான். அருகே இருந்த பறவைக் கூண்டிற்குள் ஹெட்விக் தூங்கிக் கொண்டிருந்தது. ஹாரி அந்த விசித்திரப் பிராணியிடம்,
“ஏய், விசித்திரப் பிராணியே, நீ யார்?” என்றுதான் முதலில் கேட்க நினைத்தான். ஆனால் அப்படிக் கேட்பது நாகரீகமாக இருக்காது என்று கருதிவிட்டு வெறுமனே, “நீ யார்?” என்று கேட்டான்.
“டாபி. வெறும் டாபி. வீட்டு வேலை செய்யும் எல்ஃப்;” என்று அது பதிலளித்தது.
“அப்படியா?” என்று கேட்டுவிட்டு ஹாரி தொடர்ந்தான்: “உம் நான் உன்னை அவமதிப்பதாக நீ எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால் வீட்டு வேலை செய்யும் எல்ஃப் ஒன்றை என் படுக்கையறையில் சந்திப்பதற்கு இது சரியான தருணமில்லை என்று நான் நினைக்கிறேன்.”
அந்த எல்ஃப் தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டது. பெரியம்மா பெட்டூனியாவின் உயர்ந்தொலித்தப் போலியான சிரிப்பு, கீழே வரவேற்பறையில் இருந்து கேட்டது.
“நான் உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடையவில்லை என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதே,” என்று ஹாரி அவசர அவசரமாகக் கூறிவிட்டு, “ஆனால் நீ இப்போது இங்கு வந்ததற்கு ஏதாவது குறிப்பிடத்தக்கக் காரணம் இருக்கிறதா?” என்று கேட்டான்.
“ஆமாம் சார், இருக்கிறது,” என்று டாபி ஆர்வமாகக் கூறியது. “டாபி இதைச் சொல்வதற்காகத்தான் இங்கு வந்தது சார், ஆனால் அது கொஞ்சம் சிக்கலானது.. எங்கு ஆரம்பிப்பது என்று டாபிக்குத் தெரியவில்லை . . .
மரியாதையுடன் தன் கட்டிலைச் சுட்டிக்காட்டிக் கொண்டே, “இதில் உட்கார்,” என்று ஹாரி கூறினான்.
அவனுக்கு அதிர்ச்சி ஏற்படும் விதத்தில், அந்த விசித்திரப் பிராணி, உரத்தக் குரலெடுத்து அழுதது.
“உட்கார்!” என்று கூறி அது ஒப்பாரி வைத்தது. “இதுவரை ஒருபோதும் . . .ஒருபோதும்..”
கீழே ஏதோ சத்தம் கேட்டதுபோல ஹாரிக்குத் தோன்றியது.
“என்னை மன்னித்துவிடு,” என்று ஹாரி கிசுகிசுத்தான். “நான் உன்னைப் புண்படுத்துவதற்காக அப்படிக் கூறவில்லை.”
“டாபியைப் புண்படுத்துவதா?” அந்த எல்ஃபுக்கு மூச்சுத் திணறியது. “டாபியை இதுவரை எந்தவொரு மந்திரவாதியும் உட்காரும்படிக் கேட்டுக் கொண்டதே இல்லை… அவர்களுக்குச் சரிநிகர்ச் சமானமானவன்போல!”
ஹாரி “உஷ்” என்று கூற முயற்சித்த அதே வேளையில், டாபிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அதை மீண்டும் படுக்கைக்கு அழைத்துச் சென்று அதில் உட்கார வைத்தான். அது அதில் உட்கார்ந்து விம்மத் துவங்கியது. அப்போது அது அருவருப்பான ஒரு பெரிய பொம்மையைப்போலத் தோற்றமளித்தது. ஒருவழியாக அது தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பிரமிப்புக் கலந்த பார்வையுடன் தன் பெரிய கண்களால் ஹாரியையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது.
“நீ நாகரீகமான மந்திரவாதிகளை அவ்வளவாகச் சந்தித்திருக்கவில்லைபோலத் தெரிகிறது,” என்று கூறி, ஹாரி அதைக் குஷிப்படுத்த முனைந்தான்.
இல்லை என்பதுபோல டாபி தன் தலையை அசைத்தது. பிறகு திடீரென்று எவ்வித எச்சரிக்கையுமின்றித் துள்ளிக் குதித்து, சன்னலில் தன் தலையை முரட்டுத்தனமாக மோதிக் கொண்டே, “மோசமான டாபி, மோசமான டாபி!” என்று கத்தத் துவங்கியது.
ஹாரி வேகமாகத் துள்ளியெழுந்து பாய்ந்து சென்று, அதை மீண்டும் படுக்கைக்குக் கொண்டு வந்து, “ஏய், நிறுத்து, நீ என்ன காரியம் பண்ணிக் கொண்டிருக்கிறாய்!” என்று கிசுகிசுத்தான், ஹெட்விக் ஆந்தை பலத்த அலறலுடன் கண் விழித்தது. அது தன் இறக்கைகளைத் தனது கூண்டுக் கம்பிகளின்மீது படபடவென அடிக்கத் துவங்கியது.
“சார், டாபி தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று அந்த எல்ஃப் கூறியது. அதன் கண்கள் கொஞ்சம் மேலே செருகத் துவங்கின. “சார், டாபி கிட்டத்தட்டத் தன் குடும்பத்தாரைப் பற்றி மோசமாகப் பேசிவிட்டது
“உன் குடும்பத்தாரைப் பற்றியா?”
“சார், டாபி சேவகம் புரிந்து வரும் மந்திரவாதியின் குடும்பத்தாரைப் பற்றி… வீட்டு வேலைகளைச் செய்யும் ஒரு எல்ஃப் இந்த டாபி . . . எல்ஃபுகளாகிய நாங்கள் ஒவ்வொருவரும் காலாகாலத்திற்கும் ஒரே ஒரு குடும்பத்தாருக்கு மட்டுமே சேவை செய்து வர வேண்டும் . .”
“நீ இங்கு வந்திருப்பது அவர்களுக்குத் தெரியுமா?” என்று ஹாரி ஆர்வத்துடன் கேட்டான்.
டாபிக்கு உடல் வெலவெலத்தது.
“இல்லை சார், இல்லை … சார், உங்களைப் பார்க்க வந்ததற்காக டாபி தன்னைக் கடுமையாகத் தண்டித்துக் கொள்ள வேண்டும். டாபி இதற்காகத் தன் காதைச் சூடான அடுப்பின்மீது வைத்துக் கொள்ள வேண்டும். சார், அவர்களுக்கு மட்டும் இது தெரிந்துவிட்டால் . . .”
“நீ உன் காதை அடுப்பின்மீது வைத்துவிட்டால் அவர்கள் கண்டுபிடித்துவிட மாட்டார்களா?”
“டாபி அப்படி நினைக்கவில்லை . சார், டாபி எப்போதும் ஏதாவது ஒன்றிற்காகத் தன்னைத் தண்டித்துக் கொண்டே இருக்கும். சார், டாபி அப்படிச் செய்வதை அவர்கள் தடுப்பதில்லை . . . சில சமயம், கூடுதலான தண்டனையை மேற்கொள்ளுமாறு அவர்கள் எனக்கு நினைவுபடுத்துவதும் உண்டு.”
“அப்படியானால், நீ அங்கிருந்து சென்றுவிட வேண்டியதுதானே? நீ தப்பி ஓடிவிடலாமே?”
“சார், வீட்டு வேலைகள் செய்யும் எல்ஃபுகள் தாங்கள் சேவகம் செய்கின்ற குடும்பத்தாரால் விடுவிக்கப்பட்டாலொழிய அது சாத்தியமில்லை. ஆனால் அந்தக் குடும்பத்தார் என்னை ஒருபோதும் விடுவிக்க மாட்டார்கள் … சார், டாபி சாகும்வரை அவர்களுக்காக மாடுபோல உழைத்துக் கொண்டே இருந்தாக வேண்டும்…”
ஹாரி வெறித்துப் பார்த்தான்.
“பள்ளி திறக்கும்வரை நான் இன்னும் நான்கு வாரங்களுக்கு இந்த வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும் என்பது நியாயமல்ல என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் உன் கதை, டர்ஸ்லீ குடும்பத்தினரே மேல் என்பதுபோலத் தோன்றச் செய்கிறது. ஆமாம், உனக்கு யாராலேனும் உதவி செய்ய முடியுமா? என்னால் உனக்கு உதவ முடியுமா?” என்று ஹாரி கேட்டான்.
ஹாரி அதைக் கூறி முடித்த அடுத்தக் கணமே, தான் அதைக் கூறாமல் இருந்திருக்கலாம் என்று நினைத்தான். ஏனெனில், டாபி மீண்டும் நன்றி மழையில் விம்மத் துவங்கியது.
“தயவு செய்து நிறுத்து!” என்று ஹாரி படபடப்புடன் கிசுகிசுத்தான். “தயவு செய்து நிறுத்து! ஏதேனும் சத்தம் டர்ஸ்லீ குடும்பத்தினரின் காதுகளில் விழுந்துவிட்டால் நீ இங்கிருப்பது மட்டும் அவர்களுக்குத் தெரிந்துவிட்டால் . . .”
“டாபிக்குத் தன்னால் உதவ முடியுமா என்று ஹாரி பாட்டரே கேட்கிறார் சார், உங்களது மகத்துவம் பற்றி டாபி கேள்விப்பட்டுள்ளது அதை நேரில் உணரும் பாக்கியம் இப்போதுதான் எனக்குக் கிட்டியுள்ளது.”
வெட்கத்தால் முகம் சிவந்து போன ஹாரி, “என் மகத்துவம் பற்றி நீ கேள்விப்பட்டுள்ள அனைத்தும் கதைக்கு உதவாதவை. ஹாக்வார்ட்ஸில் நான் என் வகுப்பில் முதல் மாணவன்கூட இல்லை. ஹெர்மயனிக்குத்தான் முதலிடம்…”
அவன் அவசர அவசரமாக அதோடு நிறுத்திக் கொண்டான். ஹெர்மயனியைப் பற்றிய நினைப்பே அவனுக்கு வலியேற்படுத்துவதாக இருந்தது.
“ஹாரி பாட்டர் எளிமையின் உருவம், அடக்கத்தின் வடிவம்,” என்று டாபி பயம் கலந்த மரியாதையுடன் கூறிக் கொண்டது. அதன் பெரிய கண்கள் பிரகாசித்தன. “பெயர் சொல்லப்படக்கூடாதவனை வெற்றி கொண்டதைப் பற்றி ஹாரி பாட்டர் கூற மாட்டார், இல்லையா?”
“வோல்டமார்ட்?”
டாபி தன் வெளவால் காதுகளுக்கு அருகே தன் கைகளை பலமாகத் தட்டியபடியே, “ஐயோ, அவனுடைய பெயரைச் சொல்லாதீர்கள், தயவுசெய்து அவன் பெயரை மட்டும் சொல்லாதீர்கள்!” என்று முனகியது.
“மன்னித்துக் கொள்,” என்று ஹாரி அவசர அவசரமாகக் கூறினான். “நிறையப் பேருக்கு இது பிடிக்காது என்று எனக்குத் தெரியும். என் நண்பன் ரான்கூட…”
ஹாரி தன் பேச்சை மீண்டும் பாதியிலேயே நிறுத்திக் கொண்டான். ரானைப் பற்றிய நினைப்புக்கூட அவனுக்கு வலி ஏற்படுத்துவதாக இருந்தது.
டாபி ஹாரியை நோக்கிச் சாய்ந்தது. அதன் கண்கள் இரண்டும் காரின் முகப்பு விளக்குகளைப்போல ஒளிர்ந்தன.
“டாபி இவ்வாறு கேள்விப்பட்டது,” என்று அது கரகரப்பான குரலில் கூறியது. “ஒருசில வாரங்களுக்கு முன்னால், ஹாரி பாட்டர் அந்தத் தீய மந்திரவாதியை இரண்டாவது முறையாக நேருக்கு நேர் எதிர்கொண்டார் என்றும், இம்முறையும் ஹாரி உயிரோடு தப்பிவிட்டார் என்றும் கேள்விப்பட்டது.”
ஹாரி தன் தலையசைத்து அதை ஆமோதித்தான். டாபியின் கண்களில் இருந்து திடீரென்று தாரை தாரையாக நீர் கொட்டியது.
டாபி தான் அணிந்திருந்த தலையணை போன்ற அந்த முரட்டு ஆடையின் ஓரத்தில் தன் முகத்தை ஒற்றிக் கொண்டே, “ஓ, சார்,” என்று கூறிப் பெருமூச்செறிந்தது. “ஹாரி பாட்டர் தைரியமும் மன உறுதியும் கொண்டவர்! அவர் இவ்வளவு சிறிய வயதிற்குள் இவ்வளவு அதிக ஆபத்துக்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றி பெற்றுவிட்டார். ஆனால் டாபி ஹாரி பாட்டரைப் பாதுகாக்க வந்துள்ளது, அவரை எச்சரிக்க வந்துள்ளது, தான் பின்னர் அடுப்பில் தன் காதுகளைப் பொசுக்கிக் கொள்ள வேண்டியிருந்தாலும்கூட ஹாரி பாட்டர் கண்டிப்பாக ஹாக்வார்ட்ஸுக்கு மீண்டும் திரும்பிப் போகக்கூடாது.”
அங்கு நிலவிய மௌனத்தை, கீழ்த்தளத்தில் இருந்து வந்த, கத்திகளும் முட்கரண்டிகளும் தட்டுக்களின்மீது உராய்ந்த சத்தமும் பெரியப்பா வெர்னனின் குரலொலியும் கூறு போட்டன.
“நீ என்ன உளறுகிறாய்?” ஹாரி தடுமாறினான். “நான் கண்டிப்பாக அங்கு மீண்டும் போயாக வேண்டும். செப்டம்பர் முதல் தேதியன்று வகுப்புகள் ஆரம்பமாகின்றன. அந்த எண்ணம்தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. இங்கு என் நிலைமை எப்படி என்பது உனக்குத் தெரிய வாய்ப்பில்லை. இது எனக்குப் பொருத்தமான இடமில்லை. நீ சார்ந்துள்ள உலகம்தான் ஹாக்வார்ட்ஸ்தான் எனக்குப் பொருத்தமான இடம்.
“வேண்டாம், வேண்டாம், வேண்டாம்,” என்று டாபி கிறீச்சிட்டது. அது தன் தலையை ஆட்டிய வேகத்தில் அதன் காதுகள் படபடவென்று அடித்துக் கொண்டன. “ஹாரி பாட்டர் எந்த இடத்தில் இருந்தால் அவருக்குப் பாதுகாப்போ அந்த இடத்தில்தான் அவர் இருக்க வேண்டும். அவர் மிகவும் மேன்மையானவராகவும் மிகச் சிறப்பானவராகவும் இருப்பதால் அவரை இழக்க முடியாது. ஹாரி பாட்டர் மீண்டும் ஹாக்வார்ட்ஸுக்குத் திரும்பிச் சென்றால், அவரது உயிருக்கு அது ஆபத்தாக முடியக்கூடும்.”
ஹாரி மிகுந்த ஆச்சரியத்துடன், “ஏன்?” என்று கேட்டான்.
“சார், ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இவ்வருடம் ஹாக்வார்ட்ஸ் மந்திர தந்திர மாயாஜாலப் பள்ளியில் படுபயங்கரமான நிகழ்வுகளை நிகழ்த்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது” என்று கிசுகிசுத்த டாபியின் உடல் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நடுங்கியது. “சார், டாபிக்கு இது பல மாதங்களாகவே தெரியும். ஹாரி பாட்டர் தன்னைப் பெரும் ஆபத்திற்கு ஆட்படுத்திக் கொள்ளக்கூடாது. சார், அவர் மிகமிக முக்கியமானவர்.”
ஹாரி உடனடியாக, “எந்த மாதிரியான பயங்கரமான விஷயங்கள்?” என்று கேட்டான். “யார் அந்தச் சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளனர்?”
டாபி வினோதமான மூச்சுத் திணறல் ஒலி ஒன்றை ஏற்படுத்திவிட்டு, தன் தலையைச் சுவரின்மீது முரட்டுத்தனமாக மோதத் துவங்கியது.
“சரி, சரி,” என்று ஹாரி கத்திவிட்டு, அந்த எல்ஃபின் கையைப் பிடித்தான். “சரி, உன்னால் சொல்ல முடியாது. எனக்குப் புரிகிறது. ஆனால் நீ ஏன் என்னை எச்சரிக்க வேண்டும்?” வெறுப்பை ஏற்படுத்திய ஓர் எண்ணம் திடீரென்று அவனுக்குத் தோன்றியது. “ஒரு நிமிடம் பொறு! ஆமாம், இது வோல்ட . . மன்னித்துக் கொள்! பெயர் சொல்லப்படக்கூடாதவனுக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?” டாபியின் தலை மீண்டும் சுவரை நோக்கிச் சாய்வதைக் கவலையுடன் கவனித்த ஹாரி, வேகவேகமாக, “ஆமாம் அல்லது இல்லை என்று நீ தலையசைத்தால் மட்டும் போதும்,” என்று கூறினான்.
இல்லை என்பதுபோல டாபி மெதுவாகத் தன் தலையை அசைத்தது.
“இல்லை, இல்லை. சார், பெயர் சொல்லப்படக்கூடாதவனுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை.”
ஆனால் டாபியின் கண்கள் அகலமாக விரிந்திருந்தன. அது ஹாரிக்கு ஏதோ ஒரு தகவலைத் தெரிவிக்க முயன்றதுபோலத் தோன்றியது. ஆனால் ஹாரி குழப்பத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தான்.
“அவனுக்குச் சகோதரர்கள் யாரும் இல்லை, சரிதானே?”
இல்லையென்று டாபி தலையசைத்தது. ஆனால் அதன் கண்கள் இன்னும் அகலமாக விரிந்தன.
“சரி, போகட்டும். ஆனால் ஹாக்வார்ட்ஸில் படுபயங்கர விஷயங்களை நிகழ்த்தக்கூடிய வேறு யாரும் என் நினைவுக்கு வரவில்லை,” என்று ஹாரி கூறினான். “டம்பிள்டோர் இருக்கிறார். ஆமாம், உனக்கு டம்பிள்டோர் யாரென்று தெரியும்தானே?”
ஆமாம் என்று டாபி தலையாட்டியது.
“ஆல்பஸ் டம்பிள்டோர் ஹாக்வார்ட்ஸின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த தலைமை ஆசிரியர். சார், அது டாபிக்கு நன்றாகவே தெரியும். பெயர் சொல்லப்படக்கூடாதவன் முழு ஆற்றலுடன் விளங்கியபோது அவனுக்கு நிகரான சக்தி படைத்தவராக அவர் இருந்திருக்கிறார் என்று டாபி கேள்விப்பட்டிருக்கிறது. சார், ஆனால் .. .” பின் டாபி தன் குரலை அவசர அவசரமாக ஒரு கிசுகிசுப்பான தொனிக்கு மாற்றிக் கொண்டது. “டம்பிள்டோரிடம் இல்லாத சில சக்திகள் . எந்தவொரு பண்பார்ந்த மந்திரவாதியிடமும் இல்லாத . . ”
ஹாரி டாபியைத் தடுத்து நிறுத்துவதற்குள், அது படுக்கையிலிருந்து தாவிக் குதித்து, ஹாரியின் மேசை விளக்கை எடுத்து, காதைத் துளைக்கும் படுபயங்கரக் கூச்சலுடன் தன் தலையில் கடுமையாக அடித்துக் கொள்ளத் துவங்கியது.
கீழ்தளத்தில் திடீரென்று மயான அமைதி நிலவியது. இரண்டு வினாடிகளுக்குப் பிறகு பெரியப்பா வெர்னன் ஹாலுக்குள் நுழைந்த சத்தம் கேட்டது. அவர், “டட்லீ தன் தொலைக்காட்சியை அணைக்காமல் வந்துவிட்டான் என்று நினைக்கிறேன். சரியான வாண்டுப் பயல்!” என்று தன் விருந்தினர்களிடம் கூறினார்.
“சீக்கிரமாக அந்த பீரோவுக்குள் ஒளிந்து கொள்,” என்று ஹாரி கிசுகிசுத்துவிட்டு, டாபியை அதனுள் தள்ளி, கதவை வெறுமனே சாத்திவிட்டுப் படுக்கையில் தாவிக் குதித்தான். அடுத்தக் கணம் அவனது அறைக் கதவு திறந்தது.
“இங்கு – என்ன – ரகளை – பண்ணிக் – கொண்டு – இருக்கிறாய்?” என்று பெரியப்பா வெர்னன் தன் பல்லைக் கடித்துக் கொண்டு இரைந்தார். அவரது முகம் ஹாரியின் முகத்திற்கு வெகு அருகே இருந்தது. “ஜப்பானிய கோல்ஃப் ஆட்டக்காரர் ஒருவரைப் பற்றிய நகைச்சுவை ஒன்றை நான் சொல்லி முடிக்கும் தருவாயில் இருந்தேன். அதை நீ கெடுத்துவிட்டாய் . . . அடுத்து ஏதாவது சத்தம் வந்தால் தொலைத்துவிடுவேன், தொலைத்து! ஏய்! நாம் ஏனடா பிறந்து தொலைத்தோம் என்று நீ ஒப்பாரி வைக்கும் நிலைக்குப் போய்விடுவாய்!”
தரையில் தாம்தூம் என்று சத்தம் ஏற்படுத்தியவாறு அவர் அங்கிருந்து அகன்றார்.
ஹாரி நடுங்கியவாறே பீரோவின் கதவைத் திறந்து டாபி வெளியே வர அனுமதித்தான்.
“இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நீ இப்போது பார்த்துவிட்டாய் அல்லவா? நான் ஏன் ஹாக்வார்ட்ஸ் போகத் துடித்துக் கொண்டிருக்கிறேன் என்று உனக்குப் புரிகிறதா? எனக்கு இருக்கும் ஒரே இடம் அதுதான் – அங்கு எனக்கு நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.”
“ஹாரி பாட்டருக்குக் கடிதம்கூட எழுதாத நண்பர்களா?” என்று டாபி கேட்டது.
“அவர்கள் வேறு ஏதாவது வேலையில் மும்முரமாக இருந்திருக்க…” என்று துவங்கிய ஹாரி, “இரு, இரு! ஆமாம் என் நண்பர்கள் எனக்குக் கடிதம் எழுதவில்லை என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான்.
டாபி நிலை கொள்ளாமல் தவித்தது.
“ஹாரி பாட்டர் டாபிமீது கோபப்படக்கூடாது… நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் டாபி…”
“அப்படியானால் நீதான் என் கடிதங்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தாயா?”
“சார், டாபி அவற்றை இங்குதான் வைத்திருக்கிறது,” என்று அது கூறியது. ஹாரியின் பிடியில் அகப்படாமல் துள்ளிக் குதித்தவாறு, தான் அணிந்திருந்த தலையணை உறைக்குள் கையைவிட்டு ஒரு குத்துக் கடிதங்களை அது வெளியே எடுத்தது. ஹெர்மயனியின் அழகான கையெழுத்தையும், ரானின் கோழிக் கிறுக்கல் கையெழுத்தையும், ஹாக்வார்ட்ஸின் கோட்டைப் பாதுகாவலர் ஹாக்ரிட்டின் கன்னாபின்னாவென்று இருந்த கையெழுத்தையும் ஹாரியால் நன்றாகவே அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.
டாபி ஹாரியை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
“ஹாரி பாட்டர் கோபப்படக்கூடாது … தன் நண்பர்கள் தன்னை மறந்துவிட்டார்கள் என்று ஹாரி பாட்டர் நினைத்தால் . . . அவர் மீண்டும் ஹாக்வார்ட்ஸுக்குச் செல்ல விரும்ப மாட்டார் என்று டாபி நம்பியது சார் . . .”
அது கூறியதை ஹாரி கேட்டுக் கொண்டிருக்கவில்லை. அவன் தனக்கான கடிதங்களை அதன் கைகளில் இருந்து பிடுங்குவதற்காகத் தாவினான். டாபி அவனது பிடிக்குள் அகப்படாமல் துள்ளிக் குதித்தது.
“ஹாரி பாட்டருக்கு இக்கடிதங்கள் கிடைக்கும் … தான் மீண்டும் ஹாக்வார்ட்ஸுக்குத் திரும்பிப் போகப் போவதில்லை என்று அவர் டாபிக்கு வாக்குக் கொடுத்தால் . சார், நீங்கள் இந்த ஆபத்தை எதிர்கொள்ளத் தேவையில்லை சார், நீங்கள் மீண்டும் அங்கு போகப் போவதில்லை என்று கூறுங்கள்!”
“முடியாது!” என்று ஹாரி கூறினான். “என் நண்பர்களின் கடிதங்களை என்னிடம் கொடுத்துவிடு!”
“அப்படியானால், டாபிக்கு இதைத் தவிர வேறு வழி கிடையாது,” என்று டாபி வருத்தத்துடன் கூறியது.
ஹாரி நகர்வதற்குள், டாபி அந்த அறைக் கதவை நோக்கி ஓடி, அதைத் திறந்து, மாடிப்படிகளில் தலைதெறிக்கக் கீழே ஓடியது.
ஹாரிக்கு வாய் உலர்ந்து போய்விட்டது. அவனுக்கு வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் ஹாரி டாபியைப் பின்தொடர்ந்து ஓடினான். சத்தம் ஏதும் ஏற்படுத்திவிடாமல் இருக்க அவன் பெருமுயற்சி எடுத்துக் கொண்டான். கடைசி ஆறு படிகளை ஒரே தாவலில் தாவிக் குதித்தான். கீழே பூனைபோலச் சத்தமில்லாமல் தரையில் குதித்த அவன் டாபியைத் தேடினான். சாப்பாட்டு அறையிலிருந்து பெரியப்பா வெர்னனின் குரல் ஒலித்தது அவனுக்குக் கேட்டது. அவர், “. . மேசன் அவர்களே, பெட்டூனியாவிற்கு அந்த அமெரிக்கப் பிளம்பர்களைப் பற்றிய வேடிக்கையான கதையைச் சொல்லுங்களேன் அதைக் கேட்க அவள் வெகு ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறாள் …” என்று கூறிக் கொண்டிருந்தார்.
ஹாரி ஹாலைக் கடந்து சமையலறைக்குள் நுழைந்தான். தனது வயிறு அப்படியே காணாமல் போய்விட்டிருந்ததுபோல அவனுக்குத் தோன்றியது.
பெரியம்மா பெட்டூனியாவின் அன்றைய கைவரிசையின் மகுடமாகத் திகழ்ந்த கேக், உத்தரத்தின் பக்கத்தில் அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தது. டாபி சமையலறையின் மூலையில் இருந்த அலமாரியில் பதுங்கியிருந்தது.
“வேண்டாம்.” ஹாரிக்குத் தொண்டை அடைத்தது. “தயவு செய்து அதை ஒன்றும் செய்துவிடாதே . . . அவர்கள் என்னைக் கொன்று போட்டுவிடுவார்கள்
“அப்படியானால், மீண்டும் அந்தப் பள்ளிக்குத் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று ஹாரி பாட்டர் கூற வேண்டும் . . .”
“டாபி… தயவு செய்து . .”
“அப்படியானால், போக மாட்டேன் என்று சொல்லுங்கள், சார்!”
“என்னால் முடியாது!”
டாபி அவனைத் துயரத்துடன் நோக்கியது.
“அப்படியானால், ஹாரி பாட்டருடைய நன்மைக்காக டாபி இதைச் செய்தாக வேண்டும் சார்!”
இதயத்தையே நிறுத்தி வைக்கக்கூடிய பெரும் சத்தத்துடன் அந்தப் பெரிய கேக் தரையில் விழுந்து சிதறியது. கேக் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பாத்திரம் விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த கிரீம், சுவர்களையும் சன்னல்களையும் அபிஷேகம் செய்தது. சொடுக்குப் போட்டாற்போல டாபி மாயமாக மறைந்தது.
சாப்பாட்டு அறையிலிருந்து கூச்சல்கள் எழுந்தன. பெரியப்பா வெர்னன் சமையலறைக்குள் புயலென நுழைந்தார். உச்சி முதல் உள்ளங்கால் வரை கேக்கின் கிரீமில் குளித்திருந்த ஹாரி அதிர்ச்சியில் உறைந்து போய் அங்கு நின்று கொண்டிருந்ததை அவர் கவனித்தார்.
முதலில் பெரியப்பா வெர்னன் அச்சூழ்நிலையைத் தன் வாய்ச் சாமர்த்தியத்தால் சமாளித்துவிடுவார் என்று ஹாரிக்குத் தோன்றியது (“ஓ! இதுவா ? இது எங்களுடைய உறவினர் பையன் . அவனுக்குக் கொஞ்சம் மனநிலை சரியில்லை . அன்னியர்களைக் கண்டால் அவனுக்கு அறவே பிடிக்காது … அதனால்தான் நாங்கள் அவனை மாடியில் பூட்டி வைத்திருந்தோம் . . .”) அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாதிருந்த மேசன் தம்பதியினரை மீண்டும் சாப்பாட்டு அறைக்குள் ஒருவழியாக விரட்டிவிட்டு, அவர்கள் இருவரும் வீட்டைவிட்டுப் போனதும் ஹாரியை ஒரு கை பார்த்துவிடுவதாக அவனை மிரட்டிவிட்டு, ஹாரியின் கையில் ஒரு துடப்பத்தைக் கொடுத்துவிட்டு டர்ஸ்லீ அங்கிருந்து அகன்றார். ஹாரியின் பெரியம்மா, குளிர்பதனப் பெட்டியில் இருந்த ஐஸ்கிரீமை வழித்தெடுத்து அதைத் தன் விருந்தினர்களுக்கு எடுத்துச் சென்றார். இன்னும் நடுங்கிக் கொண்டிருந்த ஹாரி, சமையலறையைச் சுத்தம் செய்யும் வேலையில் இறங்கினான்.
பெரியப்பா தான் திட்டமிட்டிருந்தபடி ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருந்திருப்பார் – அந்த ஆந்தை மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால்!
சாப்பிட்டு முடித்தவுடன் சுவைப்பதற்கான புதினா மிட்டாய்களைப் பெரியம்மா பெட்டூனியா எல்லோருக்கும் வழங்கிக் கொண்டிருந்தபோது, பெரிய கூகை வகை ஆந்தை ஒன்று சாப்பாட்டு அறையின் சன்னல் வழியாகப் பறந்து வந்து திருமதி மேசனின் மடிமீது ஒரு கடிதத்தைப் போட்டுவிட்டு மீண்டும் வெளியே பறந்து போனது. திருமதி மேசன் பேய்போல அலறிவிட்டு, பைத்தியக்காரர்களைப் பற்றி ஏதோ கூப்பாடு போட்டுக் கொண்டே வீட்டைவிட்டு வெளியே ஓடினார். தன் மனைவிக்குப் பறவைகள் என்றாலே – அவை எந்த அளவில் இருந்தாலும் சரி, எந்த வடிவில் இருந்தாலும் சரி – குலை நடுக்கம் என்று கூறிவிட்டு, அப்போது நடந்த நிகழ்ச்சி டர்ஸ்லீ குடும்பத்தினருக்கு வேடிக்கையாகத் தோன்றியதா என்று கேட்டுவிட்டுத் திரு மேசன் கோபமாக அவ்விடத்தைவிட்டு அகன்றார்.
தனது இடுங்கிய கண்களில் அரக்க வெறித் தாண்டவமாடத் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த பெரியப்பா வெர்னனை எதிர்கொள்வதற்காக, ஹாரி, துடப்பத்தைத் தன் ஆதரவுக்காகத் தாங்கிப் பிடித்தபடி அந்தச் சமையலறையில் நின்று கொண்டிருந்தான்.
அந்த ஆந்தை கொண்டு வந்து போட்டிருந்த கடிதத்தை அவனுக்கு முன்னால் ஆட்டியபடி, வெர்னன் அவனிடம், “இதைப் படி!” என்று சீறினார். “போ, போய்ப் படி!”
ஹாரி அதை வாங்கினான். அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.
அன்புள்ள ஹாரி பாட்டருக்கு,
இன்று இரவு ஒன்பது மணி பன்னிரண்டு நிமிடங்கள் ஆகியிருந்தபோது உன் வீட்டில் பொருட்களை அந்தரத்தில் ஊசலாட வைக்கும் ‘மிதவை மந்திரம்’ பயன்படுத்தப்பட்டதாக எங்களுக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.
வயது முதிராத இளம் மந்திரவாதிகளுக்குப் பள்ளிக்கு வெளியே மாய மந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது என்பது உனக்குத் தெரிந்த விஷயம்தான். இனியும் தொடர்ந்து மாய மந்திரங்களை நீ பயன்படுத்தினால், பள்ளியிலிருந்து நீ நீக்கப்படுவாய் (இளம் வயது மந்திரவாதிகளின் மந்திரவித்தைப் பயன்பாடுகளின் நியாயமான கட்டுப்பாடுகள் சட்டம், 1875, மூன்றாம் பத்தி).
சர்வதேச மகா மந்திரவாதிகள் கூட்டமைப்பின் ரகசிய விதிகள், பிரிவு 13ன் கீழ், மந்திரவாதிகளின் சமூகத்தைச் சாராதவர்கள் (மகுள்கள்) கண்டுபிடித்துவிடக்கூடிய விதத்தில் மேற்கொள்ளப்படும் மந்திரவித்தைகள் குற்றச் செயல்களாகும் என்பதை நீ நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும் நாங்கள் உன்னை மேலும் கேட்டுக் கொள்கிறோம்.
உன் விடுமுறையை உல்லாசமாகக் கழிக்க வாழ்த்துக்கள்!
உண்மையுடன்,
மஃபல்டா ஹாப்கர்க்
மந்திரவித்தைத் துஷ்பிரயோக அலுவலகம்
மந்திரஜால அமைச்சகம்
ஹாரி அக்கடிதத்திலிருந்து தன் தலையை நிமிர்த்தி மென்று விழுங்கினான்.
“பள்ளிக்கு வெளியே மந்திரவித்தைகளைப் பயன்படுத்த உனக்கு அனுமதி இல்லை என்பதை நீ எங்களிடம் கூறியிருக்கவில்லை,” என்று பெரியப்பா வெர்னன் கூறினார். அவரது கண்களில் ஒரு பைத்தியக்கார வெறி தாண்டவமாடிக் கொண்டிருந்தது. “சொல்ல மறந்து விட்டேன் எனக்குத் தோன்றவே இல்லை,’ என்று கூற உனக்குத் துணிச்சல் இருக்கிறதா?”
அவர் தன் அனைத்துப் பற்களும் வெளியே தெரியும் விதத்தில் ஒரு பெரிய வேட்டை நாயைப்போல ஹாரியை நோக்கிப் பாய்ந்து வந்து, “இதை நீ கவனமாகக் கேட்டுக் கொள் . . . நான் உன்னை உன் அறைக்குள் வைத்துப் பூட்டப் போகிறேன்… இனி நீ அப்பள்ளிக்குத் திரும்பிச் செல்லப் போவதில்லை… மீண்டும் ஒருபோதும் நீ அங்கு செல்லப் போவதில்லை … நீ உன் மந்திர வித்தைகளை உபயோகித்து வெளியே வந்தால், அவர்களே உன்னை வெளியேற்றிவிடுவார்கள்!” என்று உறுமினார்.
வெறி கொண்டவரைப்போலச் சிரித்துக் கொண்டே அவர் ஹாரியைத் தரதரவென்று மாடியை நோக்கி இழுத்துச் சென்றார்.
பெரியப்பா வெர்னன் தான் கூறியபடியே நடந்து கொண்டார். அடுத்த நாள் காலையில் ஹாரியினுடைய அறையின் சன்னலின் குறுக்காக இரும்புக் கம்பிகளைப் பொருத்த அவர் ஒருவரை ஏற்பாடு செய்தார். வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் வெளியே போவதற்கும், மீண்டும் உள்ளே வருவதற்கும் வசதியாக அறைக் கதவுகளின் கீழ்ப்புறம் போடப்படும் சிறு துவாரம் போன்ற ஒன்றை, அவனுக்குத் தினமும் மூன்று வேளையும் உணவை உள்ளே தள்ள வசதியாக இருக்கும் விதத்தில் அவனது அறைக் கதவில் அவரே தன் கைப்படப் போட்டார். காலையிலும் மாலையிலும் குளியலறையை உபயோகிக்க அவன் அனுமதிக்கப்பட்டான். அது தவிர, நாள் முழுவதும் அவன் அந்த அறையில் பூட்டி வைக்கப்பட்டான்.
மூன்று நாட்கள் கடந்த பிறகும் டர்ஸ்லீ தம்பதியினர் மசிவதாக இல்லை. தனது இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க ஹாரிக்கு எந்த வழியும் தோன்றவில்லை. அவன் தன் படுக்கையில் படுத்துக் கொண்டு சன்னலின் குறுக்காகப் பொருத்தப்பட்டிருந்த கம்பிகளின் வழியாகச் சூரியன் கீழிறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டு, தனக்கு என்ன நிகழப் போகிறதோ என்று கழிவிரக்கத்தோடு கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.
அவன் தனது மந்திர வித்தையை உபயோகித்துத் தன் அறையில் இருந்து தப்பித்து வெளியேறும் பட்சத்தில் ஹாக்வார்ட்ஸே அவனைப் பள்ளியில் இருந்து நீக்கிவிடும் என்றிருந்தபோது, அதனால் என்ன பிரயோஜனம்? ஆனால் பிரைவிட் தெருவில் வாழ்க்கை இந்த அளவு ஒருபோதும் மோசமாக இருந்ததில்லை. காலையில் எழுந்திருக்கும்போது பழந்தின்னி வௌவால்களாகத் தாங்கள் மாறியிருக்கப் போவதில்லை என்பதை டர்ஸ்லீ குடும்பத்தினர் இப்போது அறிந்து கொண்டிருந்ததால், ஹாரி தன் கைவசம் வைத்திருந்த ஒரே ஓர் ஆயுதத்தையும் இழந்துவிட்டிருந்தான். தன்னை ஹாக்வார்ட்ஸுக்குப் போகவிடாமல் தடுத்ததன் மூலம், அங்கு நிகழவிருந்த படுபயங்கரமான சம்பவங்களிலிருந்து டாபி தன்னைக் காப்பாற்றி இருக்கக்கூடும் என்றாலும், நிலைமை இப்படிப் போனால், தான் எப்படியும் பட்டினியில் இறந்து போகக்கூடும் என்று ஹாரி நினைத்தான்.
அவனது அறைக் கதவில் இருந்த துவாரத்தில் ஒரு சத்தம் கேட்டது. பெரியம்மா பெட்டூனியாவின் கை ஒன்று அங்கு தோன்றியது. ஒரு கோப்பை சூப் அந்த துவாரத்தின் வழியாக உள்ளே தள்ளப்பட்டது. பசியால் துடித்துக் கொண்டிருந்த ஹாரி துள்ளிக் குதித்து அதைக் கையில் எடுத்துக் கொண்டான். அது ஆறிக் குளிர்ந்து போயிருந்தாலும், ஹாரி அதில் பாதியை ஒரே மடக்கில் குடித்து முடித்தான். பின் அறையின் மறு மூலையில் இருந்த ஹெட்விக்கின் கூண்டிற்கு அருகே சென்று, அதனுள் காலியாக இருந்த அதன் உணவுப் பாத்திரத்தில், சூப்பின் அடியில் கிடந்த காய்கறித் துண்டுகளை எடுத்துப் போட்டான். ஹெட்விக் தன் இறக்கைகளை லேசாகச் சிலுப்பிவிட்டுக் கொண்டு அவனைக் கடும் வெறுப்புடன் பார்த்தது.
“இதைப் பார்த்து முகம் சுளிப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இப்போதைக்கு நம் கைவசம் உள்ளது இது மட்டும்தான்,” என்று ஹாரி கண்டிப்புடன் கூறினான்.
அவன் அந்தக் காலிக் கோப்பையைத் தனது அறைக் கதவிலிருந்த துவாரத்தின் அருகே வைத்துவிட்டு, படுக்கையில் மல்லாந்து படுத்தான். சூப் குடித்தப் பிறகு முன்பிருந்ததைவிடப் பசி அதிகரித்திருந்ததைப்போல அவனுக்குத் தோன்றியது.
அவன் நான்கு வாரங்களுக்குப் பிறகும் உயிருடன் இருக்கப் போவதாக வைத்துக் கொண்டாலும், அவன் ஹாக்வார்ட்ஸுக்குத் திரும்பாவிட்டால் என்ன நடக்கும்? அவன் ஏன் பள்ளிக்குத் திரும்பி வரவில்லை என்று பார்த்து வருவதற்காக இங்கு யாராவது அனுப்பி வைக்கப்படுவார்களா? அப்படி வருகின்றவர்களால், டர்ஸ்லீ தம்பதியினரை மீறித் தன்னை ஹாக்வார்ட்ஸுக்கு அழைத்துச் செல்ல முடியுமா?
அறையில் மெதுவாக இருள் சூழத் துவங்கியது. சோர்ந்து போயிருந்த, பசியால் துவண்டு போயிருந்த, பதில் கிடைக்காத கேள்விகளால் மனம் குழம்பிப் போயிருந்த ஹாரி, சஞ்சலமான தூக்கத்திற்குள் தஞ்சம் புகுந்தான்.
தான் ஒரு விலங்குக் காட்சிச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்ததுபோலவும், தனது கூண்டின் வெளியே ‘வயது முதிராத மந்திரவாதி’ என்ற பெயர்ப் பலகை தொங்கியதுபோலவும் அவன் ஒரு கனவு கண்டான். ஒரு வைக்கோல் படுக்கையில் பசியோடும் பலவீனமாகவும் படுத்துக் கிடந்த அவனை மக்கள் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தில் அவனுக்கு டாபியின் முகம் தெரிந்தது. அவன் உதவி கேட்டுக் கத்தினான். ஆனால் டாபி, “சார், ஹாரி பாட்டர் இங்கு பாதுகாப்பாக இருக்கிறார்,” என்று கூறிவிட்டு மறைந்துவிட்டது. பின் டர்ஸ்லீ குடும்பத்தினர் தோன்றினர். டட்லீ அக்கூண்டின் கம்பிகளைப் பிடித்துக் கடுமையாக ஆட்டிக் கொண்டே ஹாரியைப் பார்த்துச் சிரித்தான்.
“நிறுத்து,” என்று ஹாரி முணுமுணுத்தான். கம்பிகள் ஆட்டப்பட்டுக் கொண்டிருந்த சத்தம், கனத்துப் போயிருந்த அவனது தலைக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது. “என்னைத் தனியாக விட்டுவிடுங்கள் . . . நிறுத்துங்கள் . . . நான் தூங்க வேண்டும் . . .”
அவன் தன் கண்களைத் திறந்தான். சன்னலின் தடுப்புக் கம்பிகளின் வழியாக நிலவொளி பாய்ந்து கொண்டிருந்தது. அக்கம்பிகளின் வழியாக யாரோ ஒருவன் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தில் புள்ளிகள் நிறைந்திருந்தன. அவனது தலைமுடி செம்பட்டையாக இருந்தது. அவனது மூக்கு நீண்டிருந்தது.
ஹாரியின் சன்னலுக்கு வெளியே ரான் வீஸ்லீ இருந்தான்.
– தொடரும்…
– ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், மூலம்: ஜே.கே.ரோலிங், தமிழில்: பி.எஸ்.வி.குமாரசாமி, முதற் பதிப்பு: 2013, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், மும்பை.