கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 19, 2026
பார்வையிட்டோர்: 123 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பஜ்ரங்பலி என்றால் என்னவென்று யாருக்குமே தெரியவில்லை. ராம்லால் கன்னங்களை உப்ப வைத்துக் காட்டினான். அப்போதும் புரியவில்லை. பொன்னுக்கு வீங்கியா? உள்ளேயிருந்து பாட்டி குரல் கொடுத்தாள். இப்போது குழம்புவது ராம்லாலின் முறையாகிவிட்டது. நல்லவேளையாக ராம்லாலிடம் செந்தூர நிறத்தில் பஜ்ரங்பலியின் புகைப்படம் இருந்தது. அதை வாங்கிப் பார்த்ததும் அனைவருக்குமே குழப்பம் தீர்ந்தது. மாருதி, ஆஞ்சனேயன், வாயுபுத்திரன், வானரவீரன் என்றெல்லாம் அனந்தகோடி பெயர்களில் அழைக்கப்படும் சாட்சாத் ஹனுமாரின் வடக்கத்திப் பெயர் பஜ்ரங்பலி! 

விஷயம் இதுதான். எங்கள் காலனியில் நுழைந்ததும் வலதுபக்கம் முதல் வீட்டில் இருப்பவன் ராம்லால். மெயின்ரோட்டில் டிராவல்ஸ் கம்பெனி வைத்திருக்கிறான். ஆரம்பத்தில் ஒரு கார்தான் இருந்தது. அதற்கு ராம்லால்தான் டிரைவர். பெட்டிக்கடை பிபி நம்பரில் தொடர்பு கொண்டால் வீடு தேடி கார் வரும். 

பளிச்சென்ற வெள்ளை உடையில் ராம்லால் கார் துடைப்பான். ஜனனம், மரணம், கல்யாணம், ஆஸ்பத்திரி, ராம்லாலைக் கூப்பிடு. திருப்பதி, திருவண்ணாமலை, திருவேற்காடு என்று நாடெங்கிலும் தழைத்த பக்தியில் ராம்லாலின் தொழிலும் தழைத்தது. தற்சமயம் மெயின்ரோட்டில் ராம்லாலின் மாருதி டிராவல்ஸ் வெகு பிரபலம். ஏ.ஸி. அறையில் ஹனுமார் படத்தில் பல்ப் எரிகிறது. ‘இவ்விடம் பஸ்கள், வேன்கள், கார்கள் குறைந்த வாடகையில் கிடைக்கும்! 

தன்னை வளர்த்துவிட்ட சாட்சாத் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு ராம்லால் நன்றிக்கடன் செலுத்த உத்தேசித்திருக்கிறான். தொழில் துவக்கத்தில் அவன் வேண்டிக் கொண்டதுபோல் பஜ்ரங்பலிக்கு காலனியிலேயே ஒரு கோயில் கட்ட வேண்டும். அதற்கு அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டி வந்திருக்கிறான். 

“நன்னாயிருக்கு. வீட்டுக்குப் பக்கத்துலே ஆஞ்சனேயர் கோயில் வர்றதுன்னா அதைப் போய் யாராவது வேணாம்னு சொல்வாளா?” 

கதவுக்குப் பின்னால் அசரீரி ஒலித்தது. பாட்டிக்குத் தெரிந்தது அவ்வளவு தான். முதல் ஆட்சேபம் ஆராவமுத ஐயங்காரிடமிருந்து வந்தது. “காலனி என்பது நானாவித மனிதர்கள் வசிக்கிற இடம். நடுவே ஒரு கோயில் என்றால் நிறைய யோசிக்க வேண்டும். அதுவும் விஷயம் ஆஞ்சனேயர் சம்பந்தப்பட்டது என்பதால் சுத்தம் அதிமுக்கியம். இவ்வளவு பேர் புழங்குகிற இடத்தில் அது கஷ்டம்.. முடியாது.. சாத்தியப்படாது.” 

செவ்வரியோடிய அகலக் கண் களில் ஆராவமுது ஐயங்கார் எழுந்து கொண்டார். அவருடன் பேசச் சென்ற சமாதானக் குழு அவரைக் கோயில் நிர்வாகி என அறிவித்ததும் அன்னாரின் ஆட்சேபணை காணாமல் போனது. 

வரவிருக்கிற கோயில் பற்றி பற்றி காலனியின் பிற மதத்தவர்கள் சமாதானக் குழுவிடம் மிதமான எதிர்ப்பு தயக்கம் காட்டினார்கள். சிறுபான்மை நலன் கருதி விஷயம் அப்படியே ஸ்தம்பித்து நின்றது. 

“கிடக்கா, அவங்களை என்ன கேக்கறது? எதுவானாலும் நான் பார்த்துக்கறேன்.” 

நிர்வாகியாகப் பதவியேற்றதும் முதற்கண் தன் மைத்துனன் நம்பியை அர்ச்சகராக நியமனம் செய்து முடித்த திருப்தியில் ஆராவமுத ஐயங்கார் புஜம் தட்டினார். அனைத்துத் தடைகளையும் மீறி ஆஞ்சனேயர் பிரதிஷ்டைக்கு நாள் குறிக்கப்பட்டது. 

கோடை விடுமுறை சமயம்.. காலனி யில் கூடுதலாக உறவினர் குழந்தை களின் கும்மாளம். காம்பௌண்ட் பூராவும் சவுக்கு முளைத்து ஷாமியானா மூடியிருந்தது. ஆங்காங்கே ராட்சத ஃபேன்கள் நிறுவப்பட்டன. 

“டேய் வெங்கட்… கை பத்திரம்.. ஃபேன்கிட்டே போகாதே.” 

பட்டுப்புடவை சரசரக்க தாய்மார்கள் இங்கேயும் அங்கேயும் இருந்தார்கள். யார் வீட்டிலும் சமையல் கிடையாது. பரஸ்பரம் சங்கடம் தவிர்க்க விடுமுறையில் சிறுபான்மையினர் வெளிநடப்பு செய்துவிட்டார்கள். ஸ்பீக்கரில் தவில் சத்தம் காதுகளைப் பிளந்தது. 

மேலே போர்த்திய அங்கவஸ்திரத் தில் ஆண்கள் மார் நரையை ரோஜாப்பூ உதிர்ந்திருந்தது. விசேஷ மறைத்தார்கள். ஜமுக்காளத்தில் வடிவில் செங்கல் அடுக்கி ஹோமம் தொடங்கியது. எழுந்த புகையில் +2 பெண்கள் தேவகன்னிகைகளாக வலம் வந்தார்கள். பரீட்சை முடிந்து ரிசல்ட் வருகிற நேரமென்பதால் பையன்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். 

உரலில் வெண்ணெய் கலந்து அஷ்டபந்தன மருந்து இடித்தார்கள். புதிய சிமெண்ட் நடுவே ஆஞ்சனேயர் கைகூப்பி நின்றார். திருமேனியில் எண்ணெய் தடவியிருந்தது. விளக்கு ஒளியில் வேலைப்பாடுகள் துல்லிய மாகப் பளபளத்தன. பிரதான வைதீகர் கள் தேஜோமயமாக இருந்தார்கள். 

மந்திரம் ஓதி பிரதிஷ்டை முடிந்ததும் அபிஷேகம் ஆரம்பித்தது. ஆஞ்சனேயர் உச்சியிலிருந்து தேன் வழிந்தது. வாழ்வில் மதுரம் வேண்டுமென்று கற்பூரம் சுற்றினார்கள். சிறிய வெள்ளிக்குடத்தில் சில்லென்ற தண்ணீர் ஹனுமன் சிரசில் இறங்கியது. அடுத்தாற்போல் சந்தன அபிஷேகம். கூடை கூடையாக புஷ்பங்கள் வந்து இறங்கியிருந்தன. காற்றில் கும்மென்று பன்னீர் மணத்தது. 

‘வாயுபுத்திரா… மனதை சந்தனம் போல் குளிரச் செய்’ 

கண்களை மூடி அனைவரும் பிரார்த்தித் துக் கொண்டார்கள். பக்தியில் திளைத்த கூட்டம் திடீரென்று பரபரப்படைந்தது. 

“என்ன….என்ன?” 

அனைவரின் தலைகளும் உயரே பார்த்தன. பொத்தல் விழுந்த மழைக்குடை போல மேலே ஷாமியானாவின் சிறிய துவாரங்களில் சூரியன் கசிந்தது. சவுக்கின் உச்சியில் கம்பீரமாக ஆண்குரங்கு ஒன்று எங்கிருந்தோ வந்து கீழே கூட்டத்தை ஆர்வமாகப் பார்த்தது. 

“பஜ்ரங்பலிக்கி..” 

ராம்லால் உணர்ச்சிப்பெருக்கில் அடித்தொண்டையில் கத்தினான். 

“ஜே..!” 

ஒலித்த பதில் குரலில் குரங்கு சற்றுத் திகைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கீச்சிட்டபடியே அருகருகே வேறு கம்பங்களுக்குத் தாவி கீழே கூர்மையாகப் பார்த்தது. நடுங்கும் குரலில் பாட்டி ஒருத்தி ஆஞ்சனேயர் மேல் பாட ஆரம்பித்தாள். குரலின் இனிமைக்குக் குரங்கு இறங்கி வந்தது. கூட்டம் விலகி வழிவிட, நேரே கோயிலுக்கு நடந்தது. 

“மாமா… அதுக்குக் கொஞ்சம் பால் வையுங்கோ..” 

வைதீகர் நடுங்கும் கைகளில் கீழே கிண்ணத்தை வைத்தார். குரங்கு அனைவரையும் சந்தேகமாகப் பார்த்து பக்க வாட்டில் பாலை நெருங்கியது. “ஜெய் ஹனுமான் கி..” 

“ஜெய்..!” 

ஆராவமுத ஐயங்காரின் தம்பி மேல் ஆஞ்சனேயர் வந்து விட்டார். நெற்றிநரம்பு புடைத்துவிட்டது. கன்னங்கள் உப்பி கர்ஜனை செய்து சவுக்குக் கம்பத்தில் ஏற முயன்று அவர் ஆடிய ஆட்டத்தில் சிறப்பு விருந்தினரான குரங்காரே ஆடிவிட்டார். 

பிரதிஷ்டை நேரத்தில் நடந்த இந்த அற்புதங்கள் மீண்டும் மீண்டும் பேசப்பட்டுச் சாயங்காலம் செர்ரிப்பழமும் திராட்சையும் மாதுளைமுத்துக்களும் பதித்த வெண்ணெய் காப்புக்கு கூடிய கும்பலுக்கு போலீஸ் தேவைப்பட்டுவிட்டது. 

ஆச்சரியம் அன்றுடன் நின்றுவிடவில்லை. ஆஞ்சனேயர் வருகை அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தது. காலையில் சிறிய தூக்கில் ராவ் வீட்டு மாமி அபிஷேகத்துக்குப் பால் கொண்டுவந்தாள். இன்னும் நாலு எட்டு வைத்தால் சந்நிதி. திடீரென்று அவள் முன்னே குரங்கு தோன்றி நின்றது. 

“ராமா!” 

பயத்தில் மாமி அலறிவிட்டாள். குரங்கு அசையாமல் மௌனமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. 

ராவ் மனைவி செய்வதறியாமல் சிறிய தூக்கைக் கீழே வைத்தாள். குரங்கு மூடியைத் திறந்து பாத்திரத்தின் குறுகிய வாயை ஒரு கணம் பார்த்தது. அதே வேகத்தில் பாத்திரத்தைச் சாய்த்து பாலை சொட்டு விடாமல் நக்கியது. 

“ஹை… சூ…” 

ஆராவமுத ஐயங்கார் ஆசாரம் கருதி ஆட்சேபித்துக் கையசைத்தார். 

“குர்..” 

கோபமாக தாவுகிறாற்போல் ஒரு பாவனை. 

ஐயங்கார் அப்புறம் குரங்கு விஷயத்தில் தலையிடுவதே இல்லை. 

மாலையில் ராவ் வீடு திரும்பிய போது ஸ்வீட் வாங்கி வந்தார். ஒரு சந்தோஷச் சமாசாரம். ரொம்ப வருடங்களாக அவர் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிரமோஷன் உத்தரவு அன்றுதான் கிடைத்தது. எல்லாம் ஆஞ்சனேயர் காலையில் மாமி கையில் பால் வாங்கிச் சாப்பிட்ட விசேஷம். 

காலனியில் விஷயம் பரவியது. அடுத்த நாள் காலை விடியும்போதே வாழைப்பழம், வேர்க்கடலை, காட்பரீஸ் சாக்லெட், குட் டே பிஸ்கட் என்று பலவிதப் பொருள் களோடு காலனிவாசிகள் காத்திருக்க ஆரம்பித்தார்கள். 

தொலைந்துபோன வைரமூக்குத்தி ஒரே ஒரு வாழைப்பழத்தில் கிடைத் தது. வரவிருந்த கஷ்டங்கள் கைப்பிடி வேர்க்கடலையில் கடுகளவு சுருங்கிப் போயின. காட்பரீஸ் கொடுத்த பையன் தெம்பாகிவிட்டான். அவனும், பரீட்சையில் அவனைப் பார்த்து எழுதிய குட்டே பிஸ்கட் பையனும் பாஸாவது உறுதியாகிவிட்டது. 

யாருக்கும் பிரச்னை வேண்டாம் என்று சீக்கிரமே ஆஞ்சனேயர் வீடு வீடாக வர ஆரம்பித்தார். காலை ஏழு மணி. ராம்லால் வீட்டில் கதவு சட்டத்தில் வந்து நிற்பார். வீட்டில் இதற்கென்றே ஒரு பித்தளைப் பாத்திரம் தயார்செய்து விட்டார்கள். பருத்த தேகத்தில் ராம்லால் மனைவி வாசலுக்கு வருவாள். அதற்குள் குளித்துவிட்டு ராம்லால் அவள் சார்பாகக் குனிந்து பாலை வைப்பான். மெயின்ரோடு தவிர பஸ் ஸ்டாண்ட் அருகிலேயும் ராம்லாலின் மாருதி டிராவல்ஸ் தனது கிளையைச் சமீபத்தில் திறந்தது. 

ஆராவமுத ஐயங்காரும்கூட சந்தோஷமாக இருந்தார். அவருடைய மைத்துனன் ஆஞ்சனேயருக்குப் பால் கொடுத்த அருளால் தட்டுக்காசில் தன்னிறைவு பெற்று தனிக்குடித்தனம் போய்விட்டான். விளைவாக அவர் வீட்டுச் செலவு பாதியாகக் குறைந்து விட்டது. 

பொதுவில் குரங்குகள் மனிதர் களைப் போலவே கூட்டம் கூட்டமாகத் தான் வசிக்கும். ஆனால், கோயில் குரங்கு ஒண்டியாகத்தான் இருந்தது. தனிமை யில் பொழுதுபோக காலனியின் தெரு நாய்கள்தான் அதற்குத் துணை. 

எப்போது, எப்படி நண்பர்கள் ஆனதென்றே தெரியவில்லை. ஒரு சமயம் நாய்க்கு ஆஞ்சனேயர் பேன் பார்ப்பார். முதுகில் ஏறித் தாவிக் குதிப் பார். பார்க்காதபோது அடித்துவிட்டு ஓடுவார். நாய் மூச்சிரைக்க துரத்திப் பிடிக்கும். கடைசியில் பரஸ்பரம் அணைத்து இரண்டும் செல்லமாகச் சிணுங்கி விளையாடும். காலனியின் சிறுபான்மையினரிடம் மற்றவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறார் போலிருக்கும். 

“பஜ்ரங்பலிக்கி…”

“ஜே!” 

பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க பூமியில் பிரத்தியட்சமாக அருள்பாலிக்கிற ஆஞ்சனேயன், அந்த மரியாதையுடன் கடைசிவரைக்கும் இருந்திருக்கலாம். நடுவே குரங்குப்புத்தி வந்து தொலைந்தது. 

“நேத்து என்ன ஆச்சு தெரியுமோ?”

“சொன்னாத்தானே தெரியும்?” 

“வெங்கடேச மாமா வீட்டிலே தேங்காயைத் தூக்கிண்டு போயிடுத்து..” 

“யாரு?” 

“சனியன் பிடிச்ச குரங்குதான்.” 

“சொல்றேளே… பயமாயிருக்கு… கதவை மூடிட்டு வந்துடறேன்.” 

“சொச்சத்தையும் கேட்டுட்டுப் போங்கோ” 

“உம்.” 

“கார்த்தாலே எல்லோரும் ஆபீஸ் போயாச்சேன்னு ‘ஈ’ பிளாக் சரோஜா பாத்ரூம் கதவை மூடாம குளிச்சிண்டிருக்கா.” 

“அப்புறம்?” 

“இதுபாட்டுக்கு நேரா கதவைத் தள்ளிண்டு உள்ளே வந்திருக்கு.” 

“ஐயையோ…” 

மொத்தத்தில் குரங்குக்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொழுதுபோகாமல் டார்ஜான் மாதிரி எதையோ பிடித்துத் தொங்கப் போக, கேபிள் கனெக்ஷனும் டெலிபோன் ஒயரும் பிய்ந்து காலனியே கூடிவிட்டது. கேஷியர் ரங்கராஜன் வீட்டில் குழந்தை கையிலிருந்து முறுக்கைப் பிடுங்கியது. ராஜம் மாமி வீட்டில் புரொவிஷன் காரன் இறக்கிய அட்டை டப்பாவில் இருந்து பொட்டுக்கடலையைத் தூக்கிச் சென்றது. அடுக்கடுக்காக வந்து குவிந்த புகார்களில் விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. 

“மயக்கமருந்து வெச்சுக் கொன்னுடலாம்.” 

“சீ… அதை நாம செய்யக்கூடாது.” 

“பின்னே?” 

முனிசிபாலிட்டி அலுவலகத்துக்கு புகார் போனது. கூடவே ஒரு கும்பல் ஆணையரைச் சந்தித்தது. சோதனையாக ராம்லால் ஊரில் இல்லை. அவன் இருந்திருந்தாலும் குரங்குக்கு எதிரான வெகுஜன அபிப்பிராயத்தின் முன் எதுவும் செய்திருக்க முடியாது. 

மறுநாள் காலையில் அரைநிஜாரில் முனிசிபாலிட்டி ஆட்கள் வந்தார்கள். ராம்லால் வீட்டுத்திண்ணையில் கிண்ணம் பாலை வைத்துவிட்டு மறைவில் காத்திருந்தார்கள். சரியாக காலை ஏழு மணி. காலனியின் காம்பௌண்ட் கதவில் குரங்கு முளைத்தது. ராம்லால் வீட்டைக் கடக்கும்போது ஆள்தான் ஊரில் இல்லையே என்ற அலட்சிய நடை. திடீரென்று அசட்டுக் குரங்கு திகைத்து நின்றது. பித்தளைக்குப் பதிலாக ராம்லால் வீட்டுத்திண்ணையில் கிண்ண விளிம்பில் சூரியன் பிரகாசித்தது. சுற்றிலும் யாருமில்லை… ஜன்னலில் ஒளிந்து காலனிவாசிகள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். குரங்கு கள்ளமில்லாமல் படிக்கட்டில் ஏறியது. பசியில் ஆசையாக கிண்ணத்தை நோக்கிக் குனிந்தது. 

முனிசிபாலிட்டி ஆட்கள் வலையை வீசினார்கள். ஆஞ்சனேயர் திகைத்துப் போனார். மனிதர்கள் நன்றி மறப்பவர்கள். அவர்தான் எவ்வளவு நல்லது செய்திருப்பார்? அனைத்தும் ஒரு மூடி தேங்காய் திருடியதில் மறந்து விட்டது. சுற்றிலும் வலை சூழ்ந்துவிட்டது. போதும் மனிதர்கள் சகவாசம்.

வலைக்குள் ஆஞ்சனேயர் கண்களை மூடிக்கொண்டார். 

“ராம், ராம்..!” 

முனிசிபாலிட்டி ஆட்கள் திகைத்துப் போனார்கள். வலையில் சிக்கியது தப்பிப்போனது இதுதான் முதல் தடவை. 

“அட.. வுடு… நாளைக்குப் பாக்கலாம்.” 

அரைநிஜார் ஆட்கள் வெறும் கையுடன் புறப்பட்டுப் போனார்கள். 

அடுத்த நாள் என்றில்லை. காலனி பக்கம் ஆஞ்சனேயர் அப்புறம் வரவேயில்லை! 

– 18.6.2000, ஆனந்த விகடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *