கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: August 12, 2025
பார்வையிட்டோர்: 17,213 
 
 

(1945ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35

இருபத்தாறாம் அத்தியாயம்

ஸ்ரீகிருஷ்ணனின் குழந்தைப் பருவம்

யசோதைக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் செய்தி கோகுல முழுவதும் பரவியது. எல்லோரும் சந்தோஷம் அடைந்தார்கள். சந்தோஷத்தில் நந்தகோபர் தான தருமங்களைச் செய்தார். அப்பால் கோகுலம் செழிப் படைந்தது. பல சௌகரியங்கள் உண்டாயின. 

இப்படியிருக்கையில், கம்ஸன் ஏவிய பூதனையென்கிற ராக்ஷஸி, மானிட ஸ்திரீயைப்போல் நெடுகிலும் போய் அநேக குழந்தைகளைக் கொன்றுகொண்டே வந்து, யசோதையின் வீட்டில் வந்து அவள் குழந்தையை எடுத்துப் பால் கொடுத்தாள். எல்லோரும் யாரோ ஓர் இடைச்சி, குழந்தையினிடம் ஆசையாய்ப் பால்கொடுப்ப தாக நினைத்துக்கொண் டிருந்தார்கள். பால் கொடுக்கும் போதே அவள், ”ஆ! ஆ!” என்று அலறிக்கொண்டு கீழே விழுந்தாள். அவள் அக்கணமே ராக்ஷஸரூப மடைந்து உயிரைவிட்டாள். இதைக் கண்டு நந்தகோபர் முதலிய ஆடவர்களும், யசோதை முதலிய ஸ்திரீகளும் ஆச்சரிய மடைந்து குழந்தைக்குத் திருஷ்டி கழித்து, இதன் காரணம் யாதோ தெரியவில்லையே யென்றெண்ணி ஒருவர்க் கொருவர் பலவாறாகப் பேசிக்கொண்டார்கள். அக் குழந்தை, எல்லாம் உணரவல்ல பகவானானபடியினாலே,பூதனை வந்து பால் கொடுத்தவுடன் அவளுடைய வஞ்சக எண்ணத்தை அறிந்து அவளிடம் பால் குடிக்கும்போதே அவள் உயிரையும் சேர்த்து உறிஞ்சிவிட்டது. 

பிறகு கோபாலர்கள் பூதனையின் சரீரத்தைக் கொளுத்தினார்கள். அந்தப் பிணத்திலிருந்து உண்டான புகை நல்ல சந்தனக்கட்டை முதலியவற்றின் புகைபோல் நல்லவாசனை வீசியது. இதனாலே எல்லோரும் பூதனை பாபம் நீங்கப்பெற்றாள் என்று அறிந்து ஆநந்தம் அடைந்தனர். 

அப்பால் வஸுதேவர், கர்க்கர் என்கிற புரோகிதரைக் கோகுலத்திற்கு அனுப்பி யசோதை குமாரனுக்கும் ரோஹிணியின் குமாரனுக்கும் பேர்வைக்கும்படி செய்தார். கர்க்கர், ரோகிணியின் குமாரனுக்கு ராமன் என்றும், யசோதையின் குமாரனுக்குக் கிருஷ்ணன் என்றும் பெயரிட்டு, செய்யவேண்டிய சடங்குகளைச் செய்தார். இப்படி கர்க்கர் வந்து நாமகரணம் செய்தது ஒருவருக்கும் தெரியாது. தெரிந்தால் ஒருவேளை கம்ஸன் இந்தக் குழந்தைகளின் பேரில் சந்தேகம் 

சந்தேகம் கொள்வானென்று வஸுதேவர் இதை வெகு ரகஸியமாக முடித்தார். கர்க்கர் நந்தகோபரை நோக்கி, “இக்குழந்தைகளை அசுரர்களால் கொல்ல முடியாது; ஆயினும் நீங்கள் வெகு ஜாக்கிரதையுடன் இவர்களைக் காப்பாற்றுங்கள் ” என்று கூறிச் சென்றார். 

பிறகு அந்தக் குழந்தைகள் இருவரும் குப்புற்றுத் தவழ்ந்து எழுந்து தளர்நடையிட்டு அப்பால் ஒடி ஆடிச் சிரித்து மழலைபேசிப் பெற்றோர்களுக்குப் பரமானந்தத்தைக் கொடுத்துவந்தனர். அவர்கள் சில சமயம் கன்றுக்குட்டிகளை அவிழ்த்துப் பசுவினிடம் பால்குடிக்கும்படி செய்வார்கள்; சில சமயம், மாடுகளைக் கட்டுத்தறியினின்றும் அவிழ்த்து விட்டுவிடுவார்கள். உரியிலிருந்து வெண்ணெயைத் திருடிக் குரங்குகளுக்குக் கொடுத்து விளையாடித் தாங்களும் உண்பார்கள். அண்டைவீட்டுக் குழந்தைகளை அழவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். தங்களுக்கு எட்டாத உயரத்திலிருக்கும் உரிகளிலுள்ள பால், தயிர். வெண்ணெய்களை உரல் முதலியவற்றின் மீதேறி எடுத்து உண்டுவிட்டு ஓடிவிடுவார்கள். 

இப்படியாக இன்னும் பலவிதமான விளையாடல்களைச் செய்துவந்தனர். ஒரு சமயம் பலராமன் ஓட்டமாக ஓடி வந்து யசோதையைப் பார்த்து, “அம்மா, கிருஷ்ணன் மண்ணைத் தின்றுவிட்டான் ” என்று சொன்னான். அதைக் கேட்டதும் யசோதை, “எங்கேயடா அவன்?” என்று கேட்டுக்கொண்டே போய்க் கிருஷ்ணனைப் பிடித்து, “ஏனடா மண்ணைத் தின்றாய்?” என்று கேட்டாள். கிருஷ்ணன், “இல்லையம்மா! யார் சொன்னது நான் மண்ணைத் தின்றதாக ?” என்றான். யசோதை கையில் கோலை எடுத்துக்கொண்டு, “உண்மையைச் சொல்’ என்று அதட்டிக்கேட்டு, ” வாயைத்திற பார்ப்போம்” என்றாள். கிருஷ்ணன் வாயைத் திறந்தான். யசோதை வாயைப் பார்த்தாள். அந்த அழகிய சிறு வாயில் அவள் பிரபஞ்சங் களிலுள்ள சகல வஸ்துக்களையும் கண்டாள். கண்டதும் பெரு வியப்படைந்து பிரமித்து நின்றுவிட்டாள். அதைக் கண்டு குழந்தையான கிருஷ்ணன் வாயை மூடினான். பிறகு யசோதைக்குத் தன் குழந்தை என்கிற அன்பு உண்டாயிற்று. அதை எடுத்துக் கொஞ்சி முத்தமிட்டாள். 

அப்பால் ஒரு நாள் யசோதை தயிர் கடைந்துகொண் டிருந்தாள்.கிருஷ்ணன் பால்குடிக்க அழுதான். யசோதை குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டே தயிர் கடைந்தாள். அப்பொழுது பக்கத்தில் அடுப்பில் பால் காய்ந்து கொண்டிருந்தது. அது பொங்கியது. அதைக் கண்ட யசோதை குழந்தையைக் கீழே விட்டுவிட்டு அடுப்பண்டை போனாள். குழந்தை தயிர்ப்பானையை உடைத்து வெண்ணெயை எடுத்துக்கொண்டு வேறொரு பக்கம் போய்த் தின்றுகொண்டிருந்தான். யசோதை பாலை இறக்கி வைத்துவிட்டு வந்து தயிர்ப்பானையைப் பார்த்தாள்.தயிர்ப்பானை உடைந்து தயிரெல்லாம் கீழே கொட்டுண்டிருந்தது. கிருஷ்ணனைக் காணவில்லை. என்ன செய்வாள்!கோபம் வந்துவிட்டது. உடனே கிருஷ்ணனைத் தேடிக் கண்டுபிடித்து, “அடே போக்கிரி, உன்னை என்ன செய்தால் ஆகாது” என்று கேட்டு அடிக்கப்போனாள். அடிக்க மனம் வரவில்லை. அதனால் கயிறுகொண்டு கட்டினாள். எவ்வளவு கயிறு கொண்டுவந்து கட்டியும், கிருஷ்ணனைக் கட்டுவதற்குக் கயிறு இரண்டு விரற்கடை குறைவாகவே இருந்தது. பார்த்து யசோதை ஆச்சரியப்பட்டுப் பிரமித்து நின்றாள். பிறகு கிருஷ்ணன் அந்தக் கட்டுக்கு உட்பட்டான். யசோதை கிருஷ்ணனை ஓர் உரலில் சேர்த்துப் பிணித்துவிட்டு, “நீ இனி என்ன செய்வாய், பார்க்கிறேன்” என்று கூறித் தன் காரியம் செய்யப் போய்விட்டாள். 

பிறகு கிருஷ்ணன் அந்த உரலை இழுத்துக்கொண்டே தவழ்ந்து சென்றான். பத்தடி போனதும், அங்கே இரண்டு மரங்கள் சேர்ந்தாற்போல் நெருங்கி வளர்ந்திருந்தன. அந்த மரங்களின் நடுச்சந்தின் வழியே கிருஷ்ணன் சென்றான். உரல் மரத்தில் குறுக்கிட்டு மாட்டிக் கொண்டது. கிருஷ்ணன் ஒருதரம் வலித்து இழுத்தான். மரங்கள் இரண்டும் அடி பெயர்ந்து, இடிமுழக்கம்போல் சத்தங்கேட்கக் கீழே விழுந்தன. நல்ல வேளையாய் அவை கிருஷ்ணன்மீது விழவில்லை. அம்மரங்களிலிருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டு, “நாங்கள் சாபத்தினால் மரமாக இருந்தோம்.எங்களுக்குச் சாபவிமோசனஞ் செய்வித்தாய். ஏ கிருஷ்ணா!உனக்கு அனந்தகோடி நமஸ்காரம்” என்று கூறிவிட்டுப் போய்விட்டார்கள். 

மரங்கள் விழுந்த ஓசையைக் கேட்டு யசோதை முதலியவர்கள் வந்து பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அங்கிருந்த சில இடைப்பிள்ளைகள் நடந்ததைச் சொன்னார்கள். எல்லோரும் கேட்டு இதுவும் கம்ஸனால் ஏவப்பட்ட ராக்ஷஸர்கள் செய்யும் வேலையாக இருக்கும் என்று தீர்மானித்தார்கள். யசோதை குழந்தையை எடுத்து முத்தமிட்டு அதற்கு நந்தகோபரைக்கொண்டு திருஷ்டி தோஷம் போக்கிவைத்தாள். 

அப்பால் நந்தகோபர் முதலிய இடையர்களெல்லோரும் சேர்ந்து ஆலோசனைசெய்து,”இங்கிருந்தால் கம்ஸனுடைய தொந்தரவு நமக்கு அடிக்கடி உண்டாகும். ஆதலின் நாம் வேறிடத்திற்குப் போய்விடவேண்டும் ” என்று தீர்மானித்தார்கள். அதற்கேற்ப வசுதேவரும் “கோகுலத்தில் இருக்க வேண்டாம் ; பிருந்தாவனம் போய் விடுங்கள் ‘ என்று சொல்லி யனுப்பினார். ஆகவே இடையர்களெல்லோரும் மறுநாளே கோகுலம் விட்டுப் புறப்பட்டுப் பிருந்தாவனம் போய்க் குடியேறிவிட்டார்கள். 

இருபத்தேழாம் அத்தியாயம்

ஸ்ரீகிருஷ்ணனின் இளமைப் பருவம்

பிருந்தாவனத்தில் ராமகிருஷ்ணர்கள் பல விளையாட்டுகள் விளையாடினர்; ஒடி நடமாடச் சக்தி வந்ததும், மாடுமேய்க்கும் பிள்ளைகளோடு சேர்ந்து. கொண்டு மேய்ச்சல் துறைக்குப் போய்ப் பசுமாடுகளை மேய்த்து வருவாராயினர். அப்படி அவர்கள் ஒருநாள் மாடுகளை ஒட்டிக்கொண்டு போகையில் கம்ஸனுடைய ஏவலால் ஓர் ராக்ஷஸன் ‘பசுங்கன்றுபோல் உருவங் கொண்டு மாடுகளோடு சேர்ந்துகொண்டான். அதை யறிந்த கிருஷ்ணன், அக்கன்றைப் பிடித்து வழியில் ஒரு தோப்பிலிருந்த விளாமரத்தின்மீது தூக்கி யெறிந்தான். அதிற் பழுத்திருந்த விளாம்பழங்கள் கலகலவென்று உதிர்ந்தன. கன்றும் உயரத்திலிருந்து கீழே தொப்பென்று விழுந்து இறந்தது.மாடு மேய்க்கும் கோபாலர்களெல்லாம் அந்த விளாம்பழங்களைப் பொறுக்கிச் சந்தோஷமாகத் தின்றனர். 

பின்னொரு நாள், எல்லோரும் சேர்ந்து தங்கள் மாடுகளுக்குத் தண்ணீர் காட்டக் குளக்கரைக்கு ஓட்டிக் கொண்டு போயினர். அக்குளக்கரையில் ஒரு கொக்கு உட்கார்ந்திருந்தது. அதோடு கம்ஸனுடைய நண்பனாகிய பகாசுரன் என்பவனும் ராமகிருஷ்ணர்களைக் கொல்ல அங்கே காத்திருந்தான். அவன் கிருஷ்ணனை விழுங்கி விட்டான். இடைச்சிறுவர்க ளெல்லோரும் இதைக்கண்டு பயந்தார்கள். உள்ளே சென்ற கிருஷ்ணன் தீயைப்போல் அசுரனுடைய தொண்டையைச் சுட்டான். சுடவே அவன் கண்ணனைக் கக்கிவிட்டானானாலும் மூக்கினால் குத்திக் கொல்லப்பார்த்தான். கிருஷ்ணன் அவன் மூக்கைப் பிடித்துப் பிளந்து கொன்றான். 

இப்படிக் கிருஷ்ணன் செய்தது பிருந்தாவனத்து யாதவர்களுக்கெல்லாம் தெரியவே, அவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். பிறகு ஒருநாள் யாதவச் சிறுவர்க ளெல்லோரும், காட்டில் வேடிக்கையாக இருந்து விளையாட வேண்டுமென்றெண்ணிக் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு காட்டிற்குச் சென்றனர். எல்லோரும் தத்தம் மாடுகளை மேய விட்டுவிட்டுக் கட்டுச் சோற்றை உண்டு ஓடுவதும், பாடுவதும், பறவைபோலக் கூவுவதும், குதிப்பதும், கூத்தடிப்பதுமாய் விளையாடினார்கள். அப்படியிருக்கையில் கம்ஸனுடைய ஏவலால் வந்த பகாசுரன் என்பவன், ஒரு பெரிய பாம்புருவங்கொண்டு, மேல்வாயை ஆகாயத்திலும் கீழ்வாயைப் பூமி மட்டத்திலும் வைத்துக்கொண்டு ராமகிருஷ்ணர்களுக்காகக் காத்துக்கொண் டிருந்தான். விளையாடிய கோபாலர்கள், பாம்பின் வாயை ஒரு பெரிய குகையின் துவாரமென்று கருதி அதனுட் சென்றனர். கிருஷ்ணன் உள்ளே நுழைந்ததும், தன் வாயை மூடிக்கொண்டான். உள்ளே சென்ற கிருஷ்ணன் தன்னுடைய தேகத்தைப் பெரிதாக்கிக்கொண்டான். அந்தப் பகாசுரன் கண்பிதுங்கி மண்டைபிளந்து,வயிறு கிழிந்து இறந்தான். பிறகு கிருஷ்ணன் வெளிவந்து மற்றவர்களை உயிர்பெற்றெழும்படி செய்தான். 

அப்பால் எல்லோரும் முன்போல் வேடிக்கையாக விளையாடத் தொடங்கினர். கிருஷ்ணன் வேணுகானம் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் எங்கேயோ மறைந்துவிட்டன. கோபாலர்களெல்லாம் மாடுகளைக் காணோமே யென்று கூறி நான்கு புறமும் பார்த்துக்கொண்டு பிரமித்து நின்றனர். கிருஷ்ணன் தான் தேடி மாடுகளைக் கொண்டு வருவதாக அவர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றான்; ; எங்கும் தேடிப்பார்த்தான், காணவில்லை. ஆகவே திரும்பிக் கோபாலர்களிடம் வந்தான். கோபாலர்களையும் காணவில்லை.இது என்ன இப்படி நேர்ந்தது? காரணம் என்னவென்று ஆலோசனை செய்தான். தன்னுடைய லீலையைக் கண்டு மகிழ்ந்த பிரம்மதேவர் இதைவிடச் சிறந்ததான வேறொரு லீலையைப் பார்க்க வேண்டுமென்று இவ்வாறு செய்தார் என்று கண்டுகொண்டான். உடனே கிருஷ்ணன் தானே அந்தப் பசுக்களாகவும் கோபாலர்களாகவும் ரூபங்கொண்டு அவரவர் வீட்டிலிருந்து வந்தான். இப்படி ஒரு வருஷகாலம் இருக்க நேர்ந்தது. பிறகு பிரம்மதேவர் கோகுலம் வந்து பார்த்தார். கிருஷ்ணன் இவ்வாறு மாடுகளாகவும் கோபாலர்களாகவும் விளங்குவதை அறிந்து வியப்படைந்து, காட்டில் முன் போல் மாடுகளும் கோபாலர்களும் இருக்கும்படி செய்தார். கிருஷ்ணனும் அவர்களுக்கிடையில் விளங்கினான். அப்பொழுது பிரம்மதேவர் சாஷ்டாங்கமாகக் கிருஷ்ண பகவானை வணங்கித் துதித்து விடைகொண்டு சென்றார். கோபாலர்களுக்கு இந்த ஒரு வருஷம் போனது தெரியாமலிருக்கும்படி பிரம்மதேவர் செய்துவிட்டபடியால் அவர்கள், ‘கிருஷ்ணா, மாடு தேடப்போனாயே, மாடுகளை எங்கே கண்டுபிடித்துக்கொண்டு வந்தாய்? வா, சாப்பிடுவோம்” என்று கூறி விளையாடினார்கள். பிறகு வீட்டுக்குப் போனதும் தம் பெற்றோர்களுக்கு, “எங்களைப் பெரிய மலைப்பாம்பு விழுங்கிவிட்டது; கிருஷ்ணன் அதைக் கொன்று எங்களைக் காப்பாற்றினான்’ என்று அன்று நடந்ததை விவரமாய்த் தெரிவித்தனர். கிருஷ்ணன் அசுரவதம் செய்தது அவனுடைய ஐந்தாவது வயதில். நடுவில் ஒரு வருஷம் ஆவிட்டபடியால், இப்பொழுது கிருஷ்ணனுக்கு ஆறாவது வயது. 

அப்பால் ஒருநாள் அவர்களெல்லோரும் மாடு மேய்த்துக்கொண்டு கொஞ்சதூரம் சென்றனர். அங்கொரு பனந்தோப்பு இருந்தது. அதில் பழங்கள் பழுத்துக் குலைகுலையாய்த் தொங்கின. கோபாலர்கள் அப்பழங்களைத் தின்ன விரும்பினர். கிருஷ்ணன், “நான் போய்க் கொண்டு வந்து தருகிறேன் ” என்றான். கோபாலர்கள், “இந்தத் தோப்புக்குள்ளே போகாதே; இங்கே தேனுகன் என்கிற அசுரன் இருக்கிறானாம். அவன் யார் போனாலும் அவர்களைக் கொன்றுவிடுகிறானாம் ” என்றனர். 

இதைக்கேட்டதும் கிருஷ்ணனும் பலராமனும் நகைத்து உடனே ஓடிப் பனந்தோப்புக்குள் நுழைந்தனர். பலராமன் பனம்பழங்கள் கலகலவென்று உதிரும்படி மரங்களைப் பிடித்து அசைத்தான். கிருஷ்ணன், “ஓடிவந்து பொறுக்கித் தின்னுங்களடா” என்றான். 

கிருஷ்ணன் பின்னொருநாள் வழக்கம்போல் இடைப் பிள்ளைகளோடு சேர்ந்து மாடு மேய்க்கப்போனான். அன்று பலராமன் போகவில்லை. மாடுகளை மேய்த்துக்கொண்டே எல்லோரும் நெடுந்தூரம் போயினர். கோடைக்கால மாதலால் வெயில் அதிகமாய் அடித்தது. அதனால் அவர்களுக்குத் தாகம் அதிகரித்தது. தாகவிடாய் தீர்த்துக் கொள்ள அவர்கள் அங்கிருந்து கொஞ்சதூரம் போய்க் கங்காநதியை அடைந்து அதிலிருந்து காளிந்தி என்னும் மடுவில் நீரருந்தினர். மாடுகளும் நீரருந்தின. உடனே இடைப்பிள்ளைகளும் மாடுகளும் இறந்துபோக, கிருஷ்ணன் தன்னுடைய அமுத நோக்கினால் அவர்களை உயிர்ப்பித்தான். இந்நீரை யருந்தியதும் எல்லோரும் இப்படி மடிந்துபோகக் காரணம் யாதென்று ஆலோசித்தான். அதில் காளிங்கன் என்று ஒரு ஸர்ப்பம் வசித்துக்கொண் டிருக்கிறதென்றும், அதன் விஷத்தினால் அந்த மடுவின் நீர் விஷத்தன்மை யடைந்திருக்கிறதென்றும் அறிந்துகொண்டான். உடனே அம்மடுவின் கரையின் மேலிருந்து ஒரு கடம்பமரத்தின் மேலேறி அதில் திடீரென்று குதித்து அதைக் கலக்கினான். அதிலிருந்த நாகம் சீறிக்கொண்டு மேலே கிளம்பிக் கிருஷ்ணனைச் சுற்றிக்கொண்டது. இதைக் கண்ட கோபாலர்கள் பயந்து குய்யோ முறையோ என்று கத்திக்கொண்டு கீழேவிழுந்து அழுதார்கள். அப்பொழுது பிருந்தாவனத்தில் பெரிய அபசகுனங்கள் உண்டாயின. அதனால் நந்தகோபர் முதலியவர்கள் கிருஷ்ணனுக்கு என்னவோ ஆபத்து வந்துவிட்டதென்று தீர்மானித்துப் பயந்து அவனைத் தேடுவதற்காகப் புறப்பட்டனர். பலராமன், “கிருஷ்ணனுக்கு ஆபத்து வராது. அவனைப்பற்றி நீங்கள் பயப்படவேண்டாம், அவனை எவராலும் ஏதும் செய்யமுடியாது” என்று கூறித் தடுத்தான். அவர்கள் கேளாமல் காடுகாடாகத் தேடிக்கொண்டுபோய்க் காளிந்தி மடுவிற்குப் போயினர்; கிருஷ்ணனிருக்கும் நிலைமையையும் கோபாலர்கள் கதறுவதையும் கண்டார்கள். என்ன செய்வார்கள் பாவம்! தங்கள் உடலில் உயிரற்றவர்கள் போல் ஆனார்கள். பலராமன் அப்பொழுது நகைத்து, “கிருஷ்ணா, எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்; ஏன் தாமதம் ?” என்று சொன்னான். கிருஷ்ணன் உடனே சிறு நகை செய்து தன் உடலைப் பெரிதாக்கினான். பாம்பு சங்கடப்பட்டுக் கட்டைத் தளர்த்திக்கொண்டது. கிருஷ்ணன் உடனே வெளிப்பட்டுக் குதித்து அப்பாலே போனான். பாம்பு படமெடுத்துக்கொண்டு கடிக்க வந்தது. கிருஷ்ணன் குதித்தோடி அதன் படத்தைக் கையினால் பிடித்து அதன் மேலேறி நின்று நடனமிட்டு அழுத்தினான்; பெரும் பாரமாகக் காட்டினான். அதனால் காளிங்கன் மூச்சுத் திணறிப்போய் பெருந் தொந்தரவடைந்தது. கிருஷ்ணன் அதை விடுகிற வழியைக் காணோம். அதை யறிந்த காளிங்கனுடைய மனைவி வெளிவந்து கிருஷ்ணனைப் பணிந்து தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை தரும்படிக் கேட்டது. கிருஷ்ணன் மனமிரங்கிக் காளிங்கனை விட்டிறங்கி, “இங்கு நீ இனிக் கணமும் தாமதியாதே; இப்பொழுதே நீ முன் இருந்த ரவணகம் என்னும் தீவுக்கு ஓடிப்போ” என்று ஆக்ஞை செய்தான். காளிங்கன் அவ்வாறே அந்தத் தீவுக்குத் தன் குடும்பத்தோடு போய் விட்டது. 

காளிங்கனிருந்த அந்தத் தீவில் நாகர்களிருந்தார்கள். அவர்கள் கருடனுக்குப் பயந்து அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்ஷத்திற் கொருதரம் ஒரு மரத்தடியில் உணவு வைத்துவந்தார்கள். ஒருமுறை அந்த உணவைக் காளிங்கன் தின்றுவிட்டது. அதனால் கருடன் கோபங்கொண்டு காளிங்கனைத் துரத்தியது. காளிங்கன் ஓடிவந்து, இந்த மடுவில் ஒளிந்துகொண்டான். இந்தக் காளிந்தி மடுவிற்குக் கருடன் வருவதில்லை. இந்த மடுவிலிருந்த மீன்களை ஒரு சமயம் கருடன் பிடிக்கவந்தான். அங்கே அப்பொழுதிருந்த ஒரு ரிஷி, “மீன்களைக் கொல்லாதே” என்று கட்டளை யிட்டார். பசி மிகுந்திருந்தபடியால் ரிஷி கூறியதைப் பொருட்படுத்தாமல் மீன்களைப் பிடித்துத் தின்றுவிட்டான். அதனால், ரிஷி கோபங்கொண்டு, “நீ இனி இந்த மடுவுக்கு வந்து எந்தப் பிராணியைக் கொன்றாலும் இறப்பாய் என்று கடுஞ்சாபம் தந்தார். அதனால் கருடனுக்கு இந்த மடுவுக்கு வரப் பயம். பகவானுடைய திருவடிச்சுவடு காளிங்கனுடைய படத்தில் பதிந்திருக்கிறபடியால் கருடன் அதைக் கண்டதும் காளிங்கனை ஒன்றும் செய்யவில்லை. கருடன் பகவானுடைய வாகனமல்லவா? 

இவ்வளவு லீலைகளும் முடிவு பெற, அன்று பகல் நேர முழுவதும் கழிந்துபோய் அஸ்தமனம் ஆய்விட்டது. ஆகையினால் கோபாலர்களெல்லோரும் அன்றிரவு அங்கேயே தங்கிவிட்டார்கள். நடு இரவில் ஒரு பெரிய காட்டுத்தீ அவர்களைச் சூழ்ந்துகொண்டது. எல்லோரும் அஞ்சி நடுங்கினர். கிருஷ்ணன் அந்தத் தீயை விழுங்கி எல்லோரையும் காப்பாற்றினான். 

இப்படியிருக்கையில் நாரதர் கம்ஸனிடம் போய், “உன் பகைவர்கள் பலராம கிருஷ்ணர்களாகப் பிருந்தா வனத்தில் இருந்துகொண்டு அநேக லீலைகளைச் செய்கிறார்கள்” என்று சொல்லிவிட்டார். ஆகவே கம்ஸன், அவர்களைப் பிடித்துவர, பிரலம்பன் என்னும் ஓர் அசுரனை ஏவினான். அவன் இடைப்பையனைப்போல் உருக்கொண்டு இவர்களோடு கலந்துகொண்டான். அவன் வந்துசேரும் போது கிருஷ்ணன் முதலியவர்கள் பலவிதமான விளையாட்டுகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப் பொழுது ஒரு விளையாட்டில் எவன் தோல்வியடைகிறானோ அவன் கெலித்தவனை இவ்வளவு தூரம் தூக்கிக்கொண்டு போவதென்று ஒரு நிபந்தனை ஏற்படுத்திக்கொண்டார்கள். பிரலம்பனும் பலராமனும் சேர்ந்து விளையாடினார்கள், அதில் பலராமன் கெலித்தான். ஆகவே பிரலம்பன் பலராமனைத் தூக்கிச் சென்றான். கொஞ்சதூரம் போனதும் பிரலம்பன் உயரக் கிளம்பி ஓடப்பார்த்தான். பலராமன் தன் உடல் அதிகமாகக் கனக்கும்படி செய்து கொண்டான். அப்போது அந்த அசுரன் தன் சுயரூபத்தை எடுத்துக்கொண்டான். அதைக் கண்டதும் பலராமன், அவன் மண்டையில் ஓங்கி ஒரு குத்துக் குத்தினான்.அவன் உடனே பெருங்குரலிட்டுக்கொண்டு கீழே விழுந்து உயிர் துறந்தான். இதைக் கண்ட எல்லோரும் ஆச்சரியம் அடைந்தார்கள். 

இவ்வாறு கிருஷ்ணன் லீலைகள் செய்துகொண்டு வருகையில் கோபிகைகள் எல்லோரும் கிருஷ்ணனிடம் ஈடுபட்டு அவனைக் கண்டு மகிழ்வதும் அவன் இல்லாத சமயத்தில் அவனைத் தியானித்து ஆனந்த மடைவதுமாய் இருந்தனர். கிருஷ்ணன் அவர்கள் தன்னிடம் கொண்டிருக்கும் அன்பை உணர்ந்து அவர்களுக்கு எப்போதும் ஆனந்தத்தை உண்டாக்கிக்கொண்டிருந்தான். 

பின்பொருநாள் கிருஷ்ணன் இடையர்களோடு மாடு மேய்க்கச் சென்றான். போகும்போது பல பேச்சுகளைப் பேசிக்கொண்டே, அவர்களை வெகுதூரம் அழைத்துக் கொண்டு போய்விட்டான். கோபாலர்களுக்கெல்லாம் பசி உண்டாய்விட்டது. அதை அறிந்த கிருஷ்ணன் அவர்களை யழைத்து, “அதோ அங்கே பிராம்மணர்கள் யாகம் செய்கின்றனர்; அவர்களிடம் போய் எங்களை ஞாபகப் படுத்தி அன்னம் கேளுங்கள் ” என்றான். அவர்கள் அப்படியே செய்தார்கள். பிராம்மணர்கள் அவர்களுக்கு அன்னம் படைக்கவில்லை. பிறகு கிருஷ்ணன் அவர்களை அந்த அந்தணர்களுடைய மனைவிமார்களிடம் போய்க் கேட்கும்படி சொன்னான்; அவர்கள் போய்க் கேட்டார்கள். அவர்கள் பலராம் கிருஷ்ணர்களுடைய மகிமையை உணர்ந்து சந்தோஷத்துடன் போஜனம் சமைத்து எடுத்துக்கொண்டு கோபாலர்களுடன் கிருஷ்ணனிடம் வந்து போஜனத்தை வைத்துத் தரிசித்தார்கள். கிருஷ்ணன் சந்தோஷமடைந்து அவர்களைப் பார்த்து, ‘சந்தோஷம்; உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும்’ என்றான். அவர்கள் கிருஷ்ணனையும் பலராமனையும் கண்குளிரப் பார்த்துவிட்டு விடைகொண்டு சென்றார்கள். அவர் களுடைய கணவன்மார்கள், தஙகள் மனைவியர் செய்ததைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் கம்ஸனுக்குப் பயந்து அவர்கள் கிருஷ்ணனைத் தரிசிக்க வரவில்லை. 

இருபத்தெட்டாம் அத்தியாயம்

கோவர்த்தன தாரணமும் ராஸக்கிரீடையும்

பின்னர் ஒருநாள் கோபாலர்கள் எல்லோரும் சேர்ந்து இந்திரனுக்குப் பூஜைசெய்ய யத்தனித்தார்கள். அதையறிந்த கிருஷ்ணன் அவர்களைப் பார்த்து, இந்திரனுக்கு எதற்காகப் பூஜை போடுவது? அவனால் நமக்கு என்ன உபகாரம்? நாம் பிராம்மணர்களாலும் பசுக்களாலும் பயனை அடைகிறோம். மலை நம்முடைய பசுக்களுக்கு வேண்டிய புல்லைக் கொடுக்கிறது. ஆகையினால் இவைகளைத் தெய்வ மூர்த்தங்களாகக் கொண்டு பூஜிப்போம்” என்று கூறி, அந்த யத்தனத்தைத் தடுத்தான். கோபாலர்கள், கிருஷ்ணன் கூறியபடியே காட்டிற்குப் போய் மலையையும், பசுக்களையும், பிராம்மணர்களையும் பூஜை செய்தனர். இதனால் இந்திரன் சினங்கொண்டு பிருந்தாவனத்தில் ஏழு நாள் வரையில் கல் மழை பொழியும்படி மேகங்களுக்கு ஆக்ஞை செய்தான். அவ்வாறே மழை பொழியத் தொடங்கியது. கோபாலர்க ளெல்லோரும் பயந்து கிருஷ்ணபகவானிடம் சரணம் புகுந்தனர். கிருஷ்ணன் உடனே ஒரு பெரிய உருவங் கொண்டு கோவர்த்தனமென்னும் பெரிய மலையைப் பெயர்த்தெடுத்துத் தூக்கிக் குடைபோல் தாங்கி நின்றான். கோபாலர்களெல்லோரும் அந்த மலையினடியிலே போய்த் தங்கியிருந்தனர். ஏழுநாள் அகோராத்திரம் மழை கொட்டியது. இந்திரன் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதது கண்டு கிருஷ்ணனிடம் வந்து அவனைப் பணிந்து துதித்து, அவனுக்குக் கோவிந்தன் என்னும் பெயர் தந்து சென்றான். கிருஷ்ணனுடைய இந்த அற்புதமான செய்கையைக் கண்ட எல்லோரும் ஆச்சரியம் அடைந்தார்கள்; அவனைப் பகவானென்று அறிந்து மகிழ்ந்தார்கள். 

இப்படியிருக்கையில் ஒருநாள் அசுர வேளையில் நந்தகோபர் காளிந்தியில் அனுஷ்டானம் செய்ய இறங்கினார். வருணதேவனுடைய ஏவலாளாகிய ஓர் அசுரன் அவரைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் வருணதேவனிடம் விட்டான். இதையறிந்த கிருஷ்ணன் வருணலோகம் சென்றான். அங்கே வருணன் கிருஷ்ணனை வணங்கி வரவேற்றுச் சகல உபசாரங்களையும் செய்து, நந்தகோபரையும் கிருஷ்ணனுடன் அனுப்பினான். நந்தகோபர் பிருந்தாவனம் வந்ததும் தாம் வருணனிடம் போனதையும், அங்கே கிருஷ்ணனுக்கு நடந்த மரியாதை களையும் கோபாலர்களுக்குச் சொல்லி மகிழ்ந்தார். கோபாலர்களுக்குக் கிருஷ்ணமூர்த்தியின் உண்மை உருவைக் காண வேண்டுமென்கிற அவா உண்டாயது. கிருஷ்ணன் அவர்களெல்லோரையும் பிரம்மகிதை என்கிற மடுவில் முழுகும்படிச் செய்து அங்கே தன் திவ்யரூப தரிசனம் தந்தான். பிறகு அவர்கள் வெளிவந்து பகவானை வணங்கித் துதித்தார்கள். 

பிறகு கிருஷ்ணன் கோபிகைகளுக்குத் தன் லீலைகளால் திருப்தியை உண்டாக்கக் கருதி ஒருநாள் சரத்கால இரவில் சந்திரன் பிரகாசிக்கிற வேளையில் பிருந்தாவனத்திலிருந்த ஒரு சோலைக்குள்ளே போய் நின்று வேணுகானம் செய்தான். கோபிகைகள் வேணுகானத்தைக் கேட்டுப் பரமானந்த மடைந்து கிருஷ்ணனைச் சூழ்ந்துகொண்டு தங்கள் அன்பு முழுவதையும் அவனிடம் செலுத்தினார்கள். கிருஷ்ணனும் அவர்கள் மகிழும்படி செய்தான். அப்பொழுது கோபிகைகள், தங்களைவிடச் சிறந்தவர்க ளில்லையென்று கர்வங் கொண்டார்கள். அதையறிந்த கிருஷ்ணன் உடனே மறைந்துவிட்டான். எல்லோரும் கிருஷ்ணனைக் காணோமே யென்று தேடத் தொடங்கி னார்கள். தேடிக்கொண்டு காட்டு வழியே போகையில் அங்கே கிருஷ்ணனும் ஒரு கோபிகையும் போனதுபோல் அடிச்சுவடுகள் காணப்பட்டன. அவற்றைக் கண்டு, ‘ஐயோ! இந்தக் கோபிகை பாக்கியஞ் செய்தவள். அந்தப் பாக்கியம் நமக்கில்லாது போயிற்றே’ என வருத்தப் பட்டார்கள். சிலர் தாமே கிருஷ்ணனாக எண்ணிக்கொண்டு அவன் செய்த லீலைகளையெல்லாம் செய்துகொண்டு போயினர். 

அப்படி அவர்கள் கொஞ்சதூரம் போனதும் ஒரு கோபிகை கீழே விழுந்து விசனப்பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவளைப் பார்த்து, ஏனடி அம்மா, இப்படிப்பட்ட கதி உனக்கு ?” என்று கேட்க, அவள், “கிருஷ்ணன் என்னை இங்கே அழைத்துக்கொண்டு வந்து புஷ்பங்களால் என்னை அலங்கரித்து என்னோடு விளையாடினான். நான் கர்வங்கொண்டு நடக்கமுடியவில்லை என்றேன். அவன் என்னைத் தூக்கிக்கொண்டு இங்கே வந்ததும், திடீரென்று மறைந்துவிட்டான். பாவி பகவானை இழந்து இங்கே தவிக்கிறேன் ” என்றாள். இதைக் கேட்டதும் அவர்கள், கர்வங்கொள்ளக் கூடாதென்று உணர்ந்து பகவானைப் பாடித் துதித்தனர். பகவான் அவர்களுக்குப் பிரத்தியக்ஷமாய் அவர்களோடு யமுனைக் கரை போய் அவர்களோடு அங்கே சற்று நேரமிருந்து அவர்களைப் பார்த்து, “உங்களுக்கு என்னிடம் பக்தி மாறாதிருக்கும் பொருட்டே நான் மறைந்தேன் ” என்று கூறி, அவர்களைச் சந்தோஷப்படுத்தினான். கோபிகைகள் வட்டமாகச் சூழ்ந்துநிற்க, தான் அவர்களில் இரண்டுபேருக்கு மத்தியில் ஒவ்வொருவனாக நின்று கொண்டு ராஸக்கிரீடை யென்னும் விளையாட்டு விளையாடினான். அப்பொழுது கோபிகைகள் மெய்ம் மறந்து ஆடிப் பாடினார்கள். அவர்களுக்கு வேறெந்த நினைப்புமில்லை. இவ்வாறு ஆனந்தமடைந்த அவர்களுடன் கிருஷ்ணன் ஜலக்கிரீடை செய்தான். பிறகு பொழுது விடிந்ததும் கோபிகைகள் அவனை விட்டுப் பிரியமாட்டாமல் பிரிந்து தத்தம் வீடு சென்றனர். 

ஒரு நாள் கோபாலர்கள் ஸரஸ்வதி நதிக்கரையி லிருந்து ஒரு விரதம் அனுஷ்டித்தனர். அப்பொழுது நந்தகோபரை ஒரு பெரிய பாம்பு விழுங்கத் தொடங்கி யது. அதைக்கண்ட கோபாலர்க ளெல்லோரும் அதைக் கொள்ளிக்கட்டைகளைக் கொண்டு அடித்துத் துரத்தி னார்கள். அது போகவில்லை. நந்தகோபர், “கிருஷ்ணா, கிருஷ்ணா!” என்று கத்தினார்.கிருஷ்ணன் ஓடிவந்து தன் காலால் அதைத் தீண்டினான். தீண்டிய மாத்திரத்தில், எல்லோரும் ஆச்சரியப்படும்படி அது வித்தியாதர ரூபம் கொண்டது.வித்தியாதரன் கிருஷ்ணனைப் பார்த்து, ‘நான் ஒரு சமயம் கர்வத்தினால் சில ரிஷிகளைப் பரிகசித்தேன். அதனால் இப்படிப்பட்ட தாழ்ந்த பிறவியை அடைந்தேன்” என்று சொல்லிப் பணிந்து துதித்து விடைகொண்டு சென்றான். 

பின்னொரு நாள் கிருஷ்ணன் கோபாலர்களோடு மாடுகளை மேய்க்கக் காட்டுக்குச் சென்றிருந்தான். அங்கே கம்ஸனுடைய ஏவலால் அரிஷ்டாஸுரன் என்பவன் பெரிய காளை யுருக்கொண்டு வந்து மாடுகளை வெருட் டினான். அதை யறிந்த கிருஷ்ணன் ஓடி, அதன் கொம்பைப் பிடித்துக் குலுக்கி முன்னும் பின்னுமாக இழுத்துக் கீழே தள்ளி உதைத்துக் கொன்றான். இதைக்கண்டு கோபா லர்கள் கிருஷ்ணனைப் புகழ்ந்து மகிழ்ந்தனர். 

இப்படியிருக்கையில் நாரதர் கம்ஸனுடைய சபைக்குப் போய், அவனிடம் வஸுதேவர் கிருஷ்ணனைக் கோகுலம் கொண்டுபோய் யசோதையினிடம் விட்டுவந்தது முதல், பிறகு நடந்தவைகள் யெல்லாம் சொன்னார். கம்ஸன் இது கேட்டதும் கடுங்கோபங் கொண்டு வஸுதேவரைக் கொல்ல முயன்றான். நாரதர் தடுக்கவே, அவன் தேவகியையும் வசுதேவரையும் சிறையிலிட்டுக் கேசி என்கிற அசுரனை ஏவிக் கிருஷ்ணனைக் கொன்றுவரும்படி அனுப்பினான். அவன் குதிரையுருக்கொண்டு பிருந்தாவனம் வந்து கனைத்துக் குதித்தான். கிருஷ்ணன் அக்குதிரையை அசுரனென்று அறிந்து ஓடி எதிர்த்தான். அது கிருஷ்ணனை உதைத்தது. உடனே கிருஷ்ணன் அதன் வாயில் கையை விட்டுத் தூக்கிக் கீழே தள்ளினான். அது உடனே உயிர் துறந்தது. 

ஒருமுறை கோபாலர்கள் திருடர்களைப்போலவும் சேவகர்களைப்போலவும் பாவித்துக்கொண்டு விளையாடி னார்கள். சிலர் ஆடுகளைப்போல் கத்திக்கொண்டு விளையாடினார்கள். அப்பொழுது கம்ஸனுடைய ஏவலால் ஓர் அசுரன் அங்கே வந்தான். அவன் திருடனைப்போல் வேடம் பூண்டு நடித்துக்கொண்டே, ஆடுகளைப்போல் நடித்த கோபாலர்களை விளையாட்டுப் போக்கிலேயே அழைத்துக்கொண்டு போய் ஒரு மலைக்குகைக்குள் அடைத்து, மேலே ஒரு பெரிய பாறையை 

பாறையை எடுத்துப் போட்டு மூடிவிட்டான். இது கிருஷ்ணனுக்குத் தெரிந்தது. கிருஷ்ணன் ஓடி அவனைப் பிடித்துக் கறகறவென்றிழுத்துக் கீழே தள்ளி உதைத்துப் புரட்டி ஒரு நொடியிற் கொன் று விட்டுக் குகையில் மூடியிருந்த கல்லைப் புரட்டித் தள்ளிக் கோபாலர்களை மீட்டான். 

இப்படியாகவே கம்ஸன் தன் மந்திரிகளுடனிருந்து பலராம கிருஷ்ணர்களைக் கொல்லுவதற்கு வழி யாது என்று ஆலோசித்தான்; வில்விழா, மல் யுத்தம் இரண்டும் ஏற்படுத்துவதென்றும், அன்றைத்தினம் பலராம கிருஷ் ணர்களை வருவிப்பதென்றும், வந்தவுடன் அவர்களைக் குவலயாபீட மென்கிற யானையை ஏவியாவது, மல்லர்களுடன் மல்யுத்தஞ் செய்யவிட்டாவது கொல்வ தென்றும் தீர்மானம் செய்திருந்தான், அப்படிச் செய்வதே சிறந்த யுக்தியென மந்திரிகளும் கூறினர். உடனே அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற நாள் வைக்கப்பட்டது. கம்ஸன் யாதவ சிரேஷ்டராகிய அக்ரூரர் என்பவரை அழைத்து “நீர் நாளைத்தினமே புறப்பட்டுப் பிருந்தாவனம் போய்ப் பலராம கிருஷ்ணர்களை இங்கே எப்படியாவது அழைத்து வாரும்” என்றான். அக்ரூரர் நல்ல ஞானி; கிருஷ்ண னிடத்தில் பரம பக்தியுடையவர்; அவனை இன்னானென்று உணர்ந்து அவனையே வணங்கும் பக்திமான். அவனுடைய திறமை அவருக்குத் தெரியும். ஆகையினால் அவர், “அப்படியே செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு, இவனுக்கு முடிவுகாலம் கிட்டிவிட்டது’ என்றெண்ணிக் கொண்டே ரதமேறிப் புறப்பட்டுப் பிருந்தாவனம் வந்தார். 

பிருந்தாவனம் வரும்போது சாயங்கால வேளை. நந்த கோபர் வீட்டிற்கருகே தேரை விட்டிறங்கிக் கிருஷ்ணனைத் தியானித்துக்கொண்டே நந்தகோபர் வீட்டிற்குள் பிரவேசித்தார். அங்கே மாட்டுத் தொழுவத்தில் கிருஷ்ண பகவானும் பலராமனும் இருக்கக் கண்டு பரமானந்தம் அடைந்து அவர்களை வணங்கினார். கிருஷ்ணன் அவரை மார்புறத் தழுவிக்கொண்டு மகிழ்ந்தான். பிறகு பலராமன், அவரைத் தான் இருக்கும் இல்லத்திற்கு அழைத்துச் சென்று செய்யவேண்டிய மரியாதைகளைச் செய்தான். 

அப்பால் போஜனம் முடிந்ததும் நந்தகோபர், கிருஷ்ணன், பலராமன் முதலிய யாவரும் ஒருங்கு கூடி மதுரையிலுள்ளார் யோகக்ஷேமங்களை அக்ரூரரிடம் விசாரித்தார்கள். அக்ரூரர் கம்ஸன் செய்யும் அக்கிரமச் செயல்களை எல்லாம் சொன்னார்; வசுதேவரையும் தேவகியையும் அவன் சிறைப்படுத்தி யிருப்பதையும் கூறினார். முடிவில் அவன் பலராம கிருஷ்ணர்களைக் கொல்வதற்காகச் சதியாலோசனை செய்திருப்பதையும், அவர்களை அழைத்துவரும்படி தம்மை அனுப்பி இருப்பதையும் கூறினார். இவற்றை யெல்லாம் கேட்டுப் பலராம கிருஷ்ணர்கள் நகைத்து, “அப்படியே செய்வோம்; புறப்படுவோம் காலையில்” என்றனர். அப்பொழுது எல்லோரும் கம்ஸனை, “மகா பாவி, துரோகி” என்று திட்டினார்கள்; வருத்தப்பட்டார்கள். கிருஷ்ணன் அவர் களுக்குச் சமாதானஞ் சொல்லித் தேற்றி, மறுநாள் காலையில் புறப்பட்டான். அக்ரூரருடைய ரதத்தில் பலராம கிருஷ்ணர்கள் கால்வைத்து ஏறும்போது கோபிகைகளெல்லோரும் அவர்களைப் பிரிய நேர்ந்த துக்கம் பொறுக்கமாட்டாமல் அழுதார்கள். பின்னர் அவர்கள் ஒருவாறு சமாதானமடைந்தார்கள். 

அவர்கள் இவ்வாறு புறப்பட்ட கொஞ்சநேரத்திற் கெல்லாம் நந்தகோபரை முன்னிட்டு யாதவர்கள் எல்லோரும் மதுரைக்குப் புறப்பட்டுவிட்டனர். அவர் களுக்குப் பலராம கிருஷ்ணர்களை விட்டுப் பிரிந்திருக்க மனம் துணியவில்லை. 

இருபத்தொன்பதாம் அத்தியாயம்

கம்ஸ வதம்

பலராம கிருஷ்ணர்களும் அக்ரூரரும் வழியில் காளிந்தி நதியின் கரையிலே தங்கினர். அங்கு அக்ரூரர் நதியிலிறங்கி ஸ்நானஞ் செய்தார். நதிக்குள் பகவானைக் கண்டு அவர் ஆனந்தமடைந்தார். உடனே வியப்புடன் பகவான் இங்கே எப்படி வந்தாரென்று எண்ணிக்கொண்டு எழுந்து ரதத்தை நோக்கினார். அதில் பலராம் கிருஷ்ணர்கள் இருப்பதைக் கண்டு அதிசயத்துடன் பழையபடி மூழ்கினார். அங்கே பலராம கிருஷ்ணர்கள் இருவரையும் தரிசித்தார். இது என்ன ஆச்சரியம் என்று எழுந்து ரதத்தை நோக்கினார். ரதத்தில் அவர்கள் இருப்பதைப் பார்த்து, ஆனந்தத்துடன் பழையபடி மூழ்கினார். அங்கே பகவான் சேஷசாயியாகத் தரிசனம் தந்தார். அதைக் கண்டு அக்ரூரர் தம்மை மறந்தபடி மூழ்கிக்கொண்டே யிருந்தார். உடனே பகவான் மறைந்தார். பிறகு அக்ரூரர், “கண்டேன் காட்சியை; ஆனந்தம் கொண்டேன்!” என்று கூறிக்கொண்டே எழுந்து ரதத்தில் வந்தேறி மதுரையை நோக்கி ரதத்தை நடத்தினார். 

அவர்கள் மதுரைக்குப் போனதும் அங்கே நந்தகோபர் முதலிய யாதவர்கள் வந்திருக்கக் கண்டார்கள். கிருஷ்ணன், அக்ரூரரை விட்டுப் பிரிந்து தம் உறவினரோடு நகரத்துக்குள் பிரவேசிப்பதாகச் சொன்னார். பகவானை விட்டுப்பிரிய மனமில்லாமல் அக்ரூரர் வருந்தினார். அது கண்ட பகவான் அவரை நோக்கி, “நானும் பலராமரும் உமது வீட்டிற்கு வந்து தங்குகிறோம்; போங்கள்” என்று கூறி அனுப்பிவிட்டுத் தங்கள் உறவினரோடு கலந்து கொண்டனர். 

பிறகு கிருஷ்ணன் எல்லாரோடும் நகரப் பிரவேசஞ் செய்தான். ஜனங்கள் பலராம் கிருஷ்ணர்கள்மீது புஷ்பங்களைத் தூவி மகிழ்ந்தனர். வழியில் கம்ஸனுடைய வண்ணான் வந்தான். அவனைக் கண்ட கிருஷ்ணன் அவனிடம் தனக்கு ஆடைவேண்டுமென்று கேட்டான். அவன் கொடுக்க மறுத்தான். கிருஷ்ணன் அவனிடமிருந்து துணிகளைப் பிடுங்கி உடுத்துக்கொண்டான்; பலராமனுக்கும் கொடுத்தான். அப்பால் கம்ஸனுக்குப் புஷ்பம் கொண்டுபோகும் ஆண்டி எதிரில் வந்தான். கிருஷ்ணன் அவனைப் புஷ்பம் கேட்டான். கேட்டதும் அவன் பகவானுக்கு வேண்டிய புஷ்பங்களைத் தந்து அலங்கரித்து மகிழ்ந்தான். பின்னர்க் கொஞ்சதூரம் போனதும், கம்ஸனுக்குச் சந்தனம் கொண்டுபோனாள் ஒரு கூனி. அவளைச் சந்தனம் கேட்டான் கிருஷ்ணன். அவள் பகவானுக்குப் பக்தியோடு சந்தனங் கொடுத்தாள். கிருஷ்ணன் அவளிடம் சந்தோஷங்கொண்டு அவளுடைய கூனை நிமிர்த்தியருளினான். 

இப்படி விளையாடல்களைச் செய்து பலராம கிருஷ்ணர் களிருவரும் தனுசு பூஜை நடக்குமிடம் சென்றார்கள். அங்கே ஒரு பெரிய வில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருப்பதைக் கண்டார்கள். கிருஷ்ணன் உடனே ஓடி அதை எடுக்கப்போனான். காவலாளர்கள் தடுத்தார்கள். அவர்களைக் கிருஷ்ணன் லக்ஷ்யம் செய்யாமல் அந்த வில்லை வெகு சுலபமாய் எடுத்து நிறுத்தி, இடது கரத்தினால் நாணேற்றினான். அப்பொழுது உண்டான சப்தத்தினால் அந்த மதுராபுரி முழுவதும் நடுங்கியது. கம்ஸனும் ஸ்தம்பித்துப்போய் அச்சங்கொண்டு, இப்படிச் செய்தவன் யாரென வியந்தான். 

மறுநாள் கம்ஸனுடைய சபையில் மல்யுத்தக்களம் ஏற்படுத்திக் கம்ஸன் அங்கு எல்லோரையும் வரு வித்தான். நந்தகோபர் முதலியவர்களும் அங்கொரு பக்கம் வந்து உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். பலராம கிருஷ்ணர்கள் அதனுட் பிரவேசிக்கும்போதே அவர்களைக் கொல்லாமல் யுத்தகள வாயிலில் குவலயாபீடம் என்கிற யானையை நிறுத்தி வைத்திருந்தான். 

அந்தச் சபைக்குப் பலராமகிருஷ்ணர்கள் ஆனந்த மாகவும் நிர்ப்பயமாகவும் வந்தார்கள். அவர்கள்மீது யானைப் பாகன் அந்த யானையை ஏவினான். கிருஷ்ணன் அதனோடு விளையாட்டாக யுத்தஞ் செய்து அப்பால் அதைக் கீழே வீழ்த்திக் காலால் உதைத்துக் கொன்றான். பிறகு அதன் கொம்புகளில் ஒன்றைத் தான் எடுத்துக் கொண்டான். இருவருமாகச் சேர்ந்து யானைப்பாகனை எதிர்த்து அவனைக் கொன்றுவிட்டு ஸபைக்குள் பிரவேசித் தார்கள். இவர்களைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் எல்லோரும் இவர்களுடைய பிறப்பையும் விளையாடல் களையும் பற்றிப் பேசிக்கொண்டார்கள். அங்கே சாணூரன், முஷ்டிகன் என்ற மல்லர்கள் மல்யுத்தத்திற்கு ஆயத்தமாய் இருந்தார்கள். அவர்களில் சாணூரன் கிருஷ்ணனை எதிர்த்தான். முஷ்டிகன் பலராமனை எதிர்த்தான். இருவரும் இரண்டு மல்லர்களோடு மல்யுத்த முறைப்படி கொஞ்சநேரம் யுத்தம் செய்தனர். பிறகு யாவரும் வியப்படையும்படி கிருஷ்ணபலராமர் இரண்டு மல்லர்களையும் ஒரு குத்தில் உயிரை வாங்கினர். வேறு சில மல்லகச்செட்டிகள் வந்து எதிர்த்தனர். அவர்களையும் கிருஷ்ணன் யமலோகத்துக்கு அனுப்பினான். 

இவ்வாறு தான் கிருஷ்ணனைக் கொல்வதற்காகச் செய்த முயற்சிகளெல்லாம் வீணாகவே, கம்ஸன் பெருங் கோபங்கொண்டு ஏவலாளர்களைப் பார்த்து, இந்த இரண்டு பையன்களையும் இக்கணமே இந்த மதுராபுரியை விட்டுத் துரத்துங்கள் ; வஸுதேவனையும் தேவகியையும் கொன்றுவிடுங்கள் ” என்று கூறி ஆர்ப்பரித்தான். 

இதைக் கேட்டதும் கிருஷ்ணன் உடனே ஒர் ஓட்டத்தில் கம்ஸனிருந்த ஆசனத்தின்மீது தாவி, அவனை மயிரைப் பிடித்துக் கீழே தள்ளிக் குத்திக் கொன்றான். கிருஷ்ணனிடம் கொண்ட பயத்தினால், கம்ஸன் எப்போதும் அவனையே நினைத்துக் கொண்டிருந்தமையினால், பகவானைப் போன்ற திருவுருவம் பெற்றான். கம்ஸனுடைய தம்பி மார்களைப் பலராமன் சங்கரித்தான். அவர்களுடைய மனைவிமார்களெல்லாம் அங்கே வந்து கதறினார்கள். கிருஷ்ணன் அவர்களுக்குத் தேறுதல் சொல்லி இறந்தவர் களுக்கு ஈமக்கடன் செய்யும்படி செய்துவிட்டுக் கம்ஸனுடைய தந்தையையும், வசுதேவ தேவகிகளையும் சிறையிலிருந்து விடுவித்தான். உக்ரசேனனை மதுராபுரிக்கு அரசனாக்கினான். கம்ஸனுக்குப் பயந்து அந்த ஊர்ப்பக்கம் வராமலிருந்த யாதவர்கள் எல்லோரையும் பகவான் அழைப்பித்து மதுரையில் குடியேற்றினான். 

பலராமகிருஷ்ணர் இருவரும் மதுரையிலேயே இருந்து விட்டார்கள். நந்தகோபர் பகவானிடம் விடைகொண்டு தன் இனத்தவரோடு கோகுலம் போனான். அப்பால் வசுதேவர், பலராமகிருஷ்ணர்களுக்கு உபநயனம் செய்வித்தார். அவர்களிருவரும் அவந்திபுரியில் வசித்த சாந்தீபினி மகரிஷியிடம் போய்ச் சிஷ்யர்களாயிருந்து வேதம் வேதாங்கம் முதலிய சகல கலைகளையும் இரண்டு மாத காலத்திற்குள் ஓதி உணர்ந்தனர். பிறகு கிருஷ்ணன் தன் குருவிற்குத் தக்ஷிணை கொடுக்க விரும்பினான். சாந்தீபினி ஆலோசித்து, கொஞ்ச காலத்திற்குமுன் கடலில் விழுந்து இறந்துபோன தம்முடைய குழந்தையை உயிர்ப்பித்துத் தரவேண்டும் என்று கிருஷ்ணனைக் கேட்டார். 

கிருஷ்ணன், அதற்கு இணங்கிச் சமுத்திரத்திற்குப் போய்ச் சமுத்திர ராஜனை அழைத்தார். அவன் உடனே எதிர் தோன்றிப் பணிந்து, செய்யவேண்டிய மரியாதை களைச் செய்தான். கிருஷ்ணன் தான் வந்த காரியத்தைச் சொன்னான். சமுத்திர ராஜன், “குழந்தை இங்கில்லை. ஓர் அசுரன் பாஞ்சஜன்யம் என்கிற சங்கு ரூபமாக இருக்கிறான். அவன் மறைத்து வைத்திருக்கக்கூடும் ” என்றான். கிருஷ்ணன் உடனே சமுத்திரத்தில் அவ்வசுரனைக் கண்டுபிடித்துக் கொன்று, அவனிடமிருந்த சங்கைப் பார்த்தான். குழந்தை அதில் இல்லை. ஆகவே பாஞ்சஜன்யம் என்ற அந்தச் சங்கை எடுத்துக் கொண்டான். குழந்தை யமபட்டணத்திலேதான் இருக்க வேண்டுமென்று நிச்சயித்தான். உடனே யமனுடைய பட்டணத்திற்குப் போய், பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஊதினான். அந்தச் சத்தம் கேட்டதும் யமன் ஓடிவந்து மரியாதை செய்து, வந்த காரியத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டு,உடனே சாந்தீபினி மகரிஷியின் குழந்தையைக் கொண்டுவந்து பகவானிடம் கொடுத்து வணங்கினான். பிறகு கிருஷ்ணன் பூலோகம் வந்து சாந்தீபினி முனிவரிடம் அந்தக் குழந்தையை ஒப்பித்து அவரை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டான். 

முப்பதாம் அத்தியாயம்

கோபாலர்களுக்கு உத்தவரது உபதேசம்

உத்தவர் என்பவர் ஒரு பக்திமான். அவர் விருஷ்ணி வகுப்பைச் சேர்ந்தவர். கிருஷ்ணன் குருதக்ஷிணை கொடுத்து விட்டு மதுராபுரி வந்துசேர்ந்ததும், உத்தவரை அழைத்துத் தன் பிரிவாற்றாமல் வருந்தும் நந்தகோபர் முதலிய கோபாலர்களுக்கு ஞானோபதேசம் செய்யும்படி அனுப்பினான்.உத்தவர் கிருஷ்ணனுடைய கட்டளைப்படியே கோகுலம் போய் நந்தகோபர் வீட்டில் இறங்கினார். நந்தகோபரும் மற்றக் கோபாலர்களும் பகவானிடம் ஈடுபட்டு அவர்களுடைய விளையாடல்களைப் புகழ்ந்து பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருப்பதைக் கண்டு பரம சந்தோஷமடைந்தார். அவர்களைக் காணும்படியான பாக்கியம் தமக்கிருந்ததைப் பெரும் புண்ணியமென்று கருதினார்.நந்தகோபர், யசோதை இவர்களை முன்னே வைத்துக்கொண்டு கோபாலர்களுக் கெல்லாம், “பகவான் உங்களுக்குத் திவ்ய தரிசனம் தருவார். அவர் உங்களுக்குச் சமீபத்திலேயே சதாகாலமும் இருப்பார்; கவலைப்படாதே யுங்கள் ” என்று கூறிக் கிருஷ்ண பகவானுடைய மகிமையைப்பற்றிப் பேசி அவர்களைத் தேற்றினார். கோபிகைகளை நோக்கி, “உங்களுக்குப் பகவத் கிருபை பரிபூரணமாக இருக்கிறது. நீங்களே பெரியவர்கள். நீங்கள் உலகத்திலுள்ள மற்றப் பற்றுகள் எல்லாவற்றையும் விட்டு, பகவானிடத்தில் மனத்தைச் செலுத்தியிருக்கிறபடியால் உங்களுக்கு எல்லா நன்மைகளும் சித்திக்கும்; கவலைப்பட வேண்டாம். பகவான் எங்கும் இருப்பவர். அவர் உங்களை விட்டு எப்படிப் பிரிந்தவராவர்?” என்று கூறி அவர்களைத் தேற்றினார். பிறகு கொஞ்சநாள் வரையில் கோகுலத்திலேயே இருந்து, கிருஷ்ணனுடைய விளையாடல்களையும் மகிமைகளையும் அங்குள்ளவர் களுக்குச் சொல்லி அவர்களைச் சந்தோஷப்படுத்தி வந்தார். அப்பால் மதுராபுரி போய்க் கிருஷ்ண பகவானிடம் கோபால கோபிகைகளுக்கு இருக்கும் பக்தியைத் தெரிவித்து மகிழ்ந்தார். 

இப்படியிருக்கையில், ஒருநாள் பகவான் கூனியின் வீட்டிற்குப்போய்க் கொஞ்சநாள் இருந்து அவளுக்கு வேண்டிய வரங்களைத் தந்தார். முன்பு அவள் சந்தனங் கொடுத்தாளல்லவா ? பின்பு பகவான் அக்ரூரருடைய வீட்டிற்குப் போய் அவரை மகிழ்வித்து அவரைப் பார்த்து, “இப்பொழுது பாண்டவர்கள் தந்தையை இழந்து கஷ்டப்படுகிறார்கள் அல்லவா ? நீர் ஹஸ்தினாபுரி போய் அவர்களைக் கண்டு சொல்லவேண்டியதைச் சொல்லித் தேற்றிவிட்டு வாரும். திருதராஷ்டிரன், தன் பிள்ளைகளை ஒருவிதமாகவும், அவர்களை ஒருவிதமாகவும் பார்க்கிறானாம் அதனால் அவர்கள் வருத்தப் படுவார்கள். அதையும் தடுக்க உம்மாலியன்ற வரையில் ஏதாவது பிரயத்தனம் செய்யும்” என்றான். அக்ரூரர் உடனே பகவானைப் பணிந்து விடைகொண்டு புறப்பட்டு ஹஸ்தினாபுரம் போய்ப் பாண்டவர்களைக் கண்டு க்ஷேமம் விசாரித்தார்; திருதராஷ்டிரன் பக்ஷபாதமாயிருக்கிறான் என்பது கேட்டுத் துக்கப்பட்டார். பிறகு திருதராஷ்டிரனுடைய சபைக்குப் போய் அவனைக் கண்டு அவனுக்குச் சொல்லவேண்டிய நியாயங்களையும் தருமங்களையும் சொல்லிவிட்டு மதுராபுரி வந்துசேர்ந்தார். கிருஷ்ணனிடம் பாண்டவர்களுடைய நிலைமையையும் திருதராஷ்டிரனுடைய போக்கையும் தெரிவித்தார்.

– தொடரும்..

– ஸ்ரீமத் பாகவத ஸாரம் (நாவல்), முதல் பதிப்பு: 1945, விவேக போதினி ஆபீஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *