ஸ்ரீமத் பாகவத ஸாரம்






(1945ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30
இருபத்தோராம் அத்தியாயம்
மச்சாவதாரம்

இவ்வாறு பகவான் வாமன அவதாரத்தை எடுத்து முடித்தபிறகு மச்சாவதார மெடுத்தார் என்று ஸ்ரீசுகர் கூறினார். பரீக்ஷித்து இந்த அவதார வரலாற்றை விளக்கும்படி வேண்டிக்கொண்டார். ஸ்ரீசுகர் கூறுகிறார்:-
முன் கல்ப முடிவில் பிரம்மாவினுடைய நித்திரை யினால் நைமித்திகம் என்று ஒரு பிரளயம் உண்டாயிற்று. அந்தப் பிரளயத்தில் பூமி முதலிய எல்லா உலகங்களும் கடலில் முழுகின. அப்பொழுது ஹயக்கிரீவன் எனும் அசுரன் பிரம்மதேவரிடமிருந்து வெளிவந்த வேதத்தைத் திருடிக்கொண்டு போய்க் கடலில் ஒளிந்துகொண்டான். அசுரனுடைய இந்தத் துஷ்டச் செய்கையை அறிந்த பகவான் மச்சரூபம் எடுத்துக்கொள்ளத் தீர்மானித்தார். இந்தக் காலத்தில் ஸத்யவ்ரதர் என்றொரு ராஜரிஷி யிருந்தார். அவர் ஜலத்தையே பானம் பண்ணிக்கொண்டு தவம் புரிந்துகொண்டிருந்தார். அப்படிப்பட்ட அவர் ஒருநாள் கிருதமால் என்னும் ஓர் ஆற்றில் ஸ்நானம் செய்துவிட்டு ஜலதர்ப்பணஞ் செய்தார். அப்பொழுது அவர் கையில் ஜலத்தோடு ஒரு மீன் வந்தது. அதை அவர் கண்டவளவில் கைஜலத்தை நதியில் விட்டுவிட்டார். அந்த மீன் நீந்திக்கொண்டே அவர் சமீபத்திலிருந்தபடி, “நான் இந்த நதியிலுள்ள ஜலஜந்துக்களுக்காக அஞ்சி உன்னை அடைந்தேனாதலால் என்னைக் காப்பாற்று. இதில் விடாதே” என்று கூறிற்று.
அந்த ரிஷி அதைக் கேட்டு வியப்படைந்து அந்த மீனைப் பிடித்துத் தம் கைக் கமண்டலத்திலே போட்டுக் கொண்டார். அது அந்தக் கமண்டலத்தின் அளவுக்கு உடனே பெரிதாயிற்று. அதைக் கண்டு ரிஷி வியந்தவா றிருக்கையில், அது தன்னை வேறு ஒரு பெரிய பாத்திரத்தில் விடும்படி வேண்டிக்கொண்டது. ரிஷி அவ்வாறே செய்தார். மீன் அந்தப் பெரிய பாத்திரத்தின் அளவாயிற்று.பிறகு ரிஷி வேறொரு பெரிய பாத்திரத்தில் அதை விட்டார். மீன் அதன் அளவுக்கும் பெரிதாயிற்று. ரிஷி வியப்படைந்து அதனை ஒரு குளத்தில் விட்டார். அது குளத்தின் அளவு பெரிதாயிற்று. பிறகு ரிஷி அந்த மீனைக் கடலிலே கொண்டுபோய் விடும்படி செய்தார்.
அம்மீன் கடலிற் போய்ச் சேர்ந்ததும் வெகு விரைவிலே பெரிதாயிற்று. அதைக் கண்டு, “இஃதென்ன, இப்படிப் பெரிதாகிறது. என்ன மாயமோ தெரியவில்லை ” என்று வியப்புற்று நிற்கையில், பகவானான அந்த மீன், “இன்றைக்கு ஏழாவது நாள் உலகம் ஜலப்பிரளயத்திலே மூழ்கும். நீ உலகத்திலுள்ள வஸ்துக்களெல்லாவற்றிலும் ஒவ்வொன்று சேகரித்துக்கொள். நான் ஓர் ஓடத்தை அனுப்புவேன். அதில் ஏறிக்கொள். உனக்கு ஒரு தீங்கும் நேராது. நான் அப்பொழுது அந்த ஜலத்தில் என் வேலையை முடித்துக்கொண்டு வருவேன். அந்த ஓடமும் ஜலத்திலே மிதந்துகொண்டு எனது அருகே வரும். அந்த ஓடத்தை ஒரு பாம்பினால் என்னுடைய கொம்பிலே கட்டிவிடு. பிறகு என் மகிமை விளங்கும்” என்று கூறி மறைந்தார்.
இதைக்கேட்ட ராஜரிஷி சந்தோஷமடைந்து உடனே அங்கோரிடத்தில் தர்ப்பைகளைப் பரப்பி அதில் அமர்ந்து பகவானைத் தியானஞ் செய்யத் தொடங்கினார். அப்பால் பகவான் கூறியபடி ஏழாவது நாள், கடலானது பொங்கிப் பெருகியது. அப்பொழுது ஓர் ஓடம் அந்த ராஜரிஷியின் இடம் வந்தது. பகவான் சொல்லியபடி ராஜரிஷி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அந்த ஓடத்தில் ஏறிக்கொண்டார். ஜலம் வரவரப் பெருகியபடியால் ஓடமும் உயர மிதக்கத் தொடங்கியது. ராஜரிஷி சிறிதும் அஞ்சாமல் பகவானுடைய ஆணையை எண்ணி மகிழ்ந்து அவரையே துதித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அந்த மீனும் இவரிடம் வந்தது. அதைக்கண்டதும் ரிஷி, பகவான் முன் எச்சரித்தபடி அதனுடைய கொம்பில் அந்த ஓடத்தைப் பாம்பினால் கட்டிவிட்டார். அப்பொழுது பகவான் அவருக்கும் மற்ற ரிஷிகளுக்கும் ஞானோபதேசம் செய்தார்.
அப்பால் பிரளயம் முடிந்தது. பகவான் பிரம்ம தேவரிடம் ஹயக்ரீவன் எடுத்துக்கொண்டுபோன வேதத்தைக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு நடந்த விஷயத்தைச் சொல்லி மறைந்தார். பிறகு அந்த ஸத்யவ்ரத ராஜன் இந்தக் கல்பத்தில் பகவானுடைய கருணையினால் வைவஸ்வத மநுவானான்.
இருபத்திரண்டாம் அத்தியாயம்
மநுவம்ச வரலாறு
ஸ்ரீ சுகர் கூறுகிறார்:
வைவஸ்வத மநுவின் வம்ச அபிவிருத்தியின் பொருட்டு வஸிஷ்டர் ஒரு வேள்வி செய்துவைத்தார். அந்த யாகத்தில் பாலையே உணவாகக் கொண்டிருந்த மநுவினுடைய மனைவியாகிய சிரத்தை யென்பவள் ஹோதாவை நமஸ்காரம் பண்ணித் தனக்குப் பெண் உண்டாகும்படி ஓமம் செய்யவேண்டுமென்று வேண்டிக் கொண்டாள். ஹோதா அவள் வேண்டுகோளுக்கு இணங்கி மந்திரத்தை மாற்றி உச்சரித்து ஓமம் செய்தனர். அதன் பயனாக இளையென்கிற பெண் பிறந்தது. அப்பொழுது மநு தமக்குப் பிள்ளை பிறக்கவில்லையே என்று வருத்தங்கொண்டு வஸிஷ்டரிடம் சென்று சொல்லிக்கொண்டார்.
வஸிஷ்டர், ஆண்பிள்ளையை விரும்பிச் செய்த வேள்வியின் பயனாய்ப் பெண் பிறந்தது ஏனென்று ஆலோசித்தார். அவருக்கு உண்மை விளங்கியது. உடனே அவர் மநுவை நோக்கி நடந்ததைக் கூறி, “ஆயினும் நீர் துக்கப்படவேண்டாம். உமக்குப் புத்திரனுண்டாகும்படி செய்கிறேன் ” என்று கூறிப் பகவானைத் தியானித்து இளையென்கிற பெண், இளன் என்கிற ஆண்பிள்ளை யாகவேண்டுமென்று கேட்டார். அவ்வாறே இளை இளைஞனானான்.
அந்த இளன் ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்று வேட்டை முகத்தில் பல வனங்கள் கடந்து அப்பால் மேருவின் தாழ்வரையிலிருந்த குமாரவனம் போய்ச் சேர்ந்தான். அது பரமசிவன் உல்லாஸமா யிருக்கும்படியான வனமாதலால் அங்கே பிரவேசிக்கிற ஆண்மக்களெல்லோரும் பெண்கள் ஆய்விடுவார்கள். அதனை இளன் அறியானாதலால், அங்கே பிரவேசித்ததும் அவனும் அவனுடைய பரிவாரங்களும் வாகனங்களும் பெண்களாயினர். அதனால் எல்லோரும் வருத்தமடைந்து இன்னது செய்வதென்று தெரியாமல் வருந்தினார்கள். பெண்களாகக் காடுகள்தோறும் அலைந்தார்கள். ஒரு காட்டில் சந்திரனுடைய புத்திரனாகிய புதன் தவம் பண்ணிக்கொண் டிருந்தான். அவன் அந்த இளையை இச்சித்து அவளை மணந்தான். பிறகு அவளுக்கு புரூரவசு என்ற புத்திரன் பிறந்தான்.
இப்படியான கொஞ்சநாளைக்கெல்லாம் பெண்ணாய் உழலும் அவ்வரசன், வஸிஷ்ட மகரிஷியினிடம் சரணடைந்தான். வஸிஷ்ட மகரிஷி பரமசிவத்தைத் தியானித்து வேண்டிக்கொண்டார். கருணாநிதியாகிய அவர், “ இவ்வரசன் உனது தபோபலத்தினால் ஒரு மாதம் புருஷனாயும், ஒருமாதம் ஸ்திரியாயு மிருப்பன்” என்று அநுக்கிரகஞ் செய்தார். பிறகு அவ்வரசன் அப்படியே இருந்துகொண்டு அரசு புரிந்துவந்தான். அவனுக்கு உத்கலன், கயன், விமலன் என்று மூன்று பிள்ளைகள் உண்டானார்கள். அவர்கள் மூவரும் மூன்று ராஜ்யங்களுக்கு அரசரானார்கள். அப்பால் முடிவில் இளன் தன் அரசுரிமையைப் புரூரவஸ் என்ற புத்திர னுக்குக் கொடுத்துவிட்டுத் கொடுத்துவிட்டுத் தவம்புரியக் காட்டிற்குச் சென்றான்.
இளன் இவ்வாறாகவே, மனுவானவர் மக்கட்பேற்றை விரும்பி யமுனாநதி தீரத்தில் நூறுவருஷகாலம் தவஞ் செய்தார்; ஸ்ரீஹரியை வேள்விகளினாலே ஆராதித்தார். அவருக்கு இக்ஷ்வாகு முதலிய பத்துப் பிள்ளைகள் உண்டானார்கள். அவர்களுள் பிரஷாத்ரு என்பவன் தங்கள் குலகுருவாகிய வசிஷ்ட முனிவருடைய பசுக்களை மேய்த்து வருகிறவனானான். அவன் நல்ல சாந்தகுண முடையவன். அதனால் அத்தொழிலை மிகுந்த பொறுமை யோடு செய்துவந்தான். அப்படியிருக்கையில் ஒரு நாளிரவு பசுமந்தையில் ஒரு புலி புகுந்து ஒரு மாட்டை அறைந்து அதனைக் கவ்விக்கொண்டு ஓடியது. பிரஷாத் அந்தப் புலியைத் தொடர்ந்தோடி அதனை ஓர் ஈட்டியினால் குத்தினான். அந்த ஈட்டி புலியின்மீது பாய்ந்ததுமல்லாமல் மாட்டின் மீதும் பாய்ந்தது. ஆனால் மாடு இறந்துவிட்டது. புலி மாட்டை விட்டு ஓடிவிட்டது. மறுநாட்காலையில் குரு தமது பசு இறந்துகிடப்பதைக் கண்டு உடனே பிரஷாத்ருவை, “நீ நீசனாகக் கடவாய்” என்று சபித்தார்.
அந்தச் சாபத்தைக் கேட்டதும் பிரஷாத்ரு குருவின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல் மிகவும் அடங்கி யிருந்து சாபத்தை ஏற்றுக்கொண்டான்; உடனே ஒன்றிலும் பற்றில்லாத மனமுடையவனாய், பகவத் பக்தி தியானம், ஞானம் முதலிய நல்ல குணங்களை மேற்கொண் டான். அதனால் தன் வாழ்நாட்களை அவன் மிக்க மேன்மையாகக் கழித்தான். பிறகு ஒரு நாள் அவன் காட்டுத் தீயில் அகப்பட்டுத் தன் தேகத்தை விட்டான்.
மனுவினுடைய மற்றொரு பிள்ளையாகிய சரியாதி என்பவனுக்கு ஸுகந்யை என்றொரு பெண் பிறந்தாள். சரியாதி ஒரு சமயம் தன் பெண்ணுடன் ஒரு வனத்திற்குச் சென்றான். அங்கே சியவன மகரிஷியின் ஆசிரமமிருந்தது. அங்கே ஸுகந்யை தன் தோழிகளுடன் போய் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கிருந்த ஒரு புற்றில் இரண்டு ஒளிகள் பிரகாசித்தன. அவற்றைக் கண்ட ஸுகந்யை ஒரு முள்ளை எடுத்து அந்த ஒளிகளைக் குத்தினாள். உடனே அங்கிருந்து இரத்தம் பெருகியது. அந்த க்ஷணமே அரசனுடைய சேனைகளுக் கெல்லாம் ஜலமலங்கள் கட்டுப்பட்டுப் போயின. அதனை அறிந்த அரசன் அவர்களை நோக்கி, “பிருகு புத்திரரான சியவன ரிஷிக்கு நீங்கள் ஏதேனும் தவறு இழைத்தீர்களா?” என்று கேட்டான். அப்போது ஸுகந்யை, தான் புற்றிலே முள்ளெடுத்துக் குத்தியதையும், பின் அதிலிருந்து இரத்தம் பெருகியதையும் கூறினாள். அரசன் அதைக் கேட்டுப் பயந்து, அந்தப் புற்றினருகே தன் புத்திரியை அழைத்துக் கொண்டு சென்று அதிலிருந்த ரிஷியை அழைத்து வணங்கித் தன் புத்திரி அறியாமற் செய்த செய்கைக்காக அவளை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டான். பிறகு அம்முனிவருடைய அபிப்பிராயத்தின்படி தன் பெண்ணை அவருக்கே மணஞ் செய்துகொடுத்து, அப்பெண்ணை அவரிடமே விட்டுவிட்டுத் தன் பட்டணம் போனான். ஸு கந்யை தன் நாயகரது மனம்போல் நடந்து அவரை மகிழ்வித்துச் சுகமாக வாழ்ந்துவந்தாள்.
இப்படியிருக்கையில் சில காலத்திற்குப்பிறகு அந்த வனத்திற்கு அசுவினி தேவர்கள் வந்தார்கள். அவர்களை அம்முனிவர் வணங்கித் தமக்கு நல்ல யௌவன முண்டாகும்படி வேண்டிக்கொண்டார். தேவர்கள் அந்த ரிஷியைக் கையிலே பிடித்துக்கொண்டு ஒரு மடுவிலே மூழ்கினர். மூழ்கியவளவில், அம்மூவரும் அழகிய இளமைப் பருவத்தினராய் எழுந்தனர். மூவரும் ஒரே மாதிரியா யிருந்தமையினால் ஸுகன்யைக்குத் தன் நாயகரைக் கண்டுபிடிக்கத் தெரியவில்லை. அதனால் அவள் அசுவனிதேவர்களை வணங்கி வேண்டிக்கொண்டாள். தேவர்கள் அவளுடைய நாதரை அவளுக்கு காட்டித் தங்கள் உலகம் அடைந்தார்கள்.
பிறகு ஒருநாள் சரியாதி மகாராஜன் ஒரு வேள்வி இயற்றக்கருதிச் சியவனருடைய ஆசிரமம் போனான். அங்கே தன் மகள் ஒரு யௌவனபுருஷனுட னிருப்பதைக் கண்டு, “ஓ இவள் தன் புருஷன் கிழவனென்று அவமதித்து வேறொருவனைச் சேர்த்துக்கொண்டு திரி கிறாள் ‘ என்றெண்ணிச் சினமடைந்து அவளை அழைத்து, நல்ல குலத்தில் பிறந்த உனக்கு இப்படிப்பட்ட விபரீத புத்தி எப்படி உதித்தது” என்று கேட்டான். ஸுகந்யை நகைத்துத் தந்தையை வணங்கி நடந்ததைக் கூறினாள். அரசன் அதுகேட்டு அவளைப் புகழ்ந்தான். அப்பால் சியவன மகரிஷி சரியாதி மகாராஜன் விரும்பியபடி யாகத்தை நிறைவேற்றிக்கொடுத்தார்.
அவ்வரசனுக்கு, உத்தானபரிகசு, ஆனர்த்தன், பூரிஷேனன் என்று மூன்று புத்திரர்கள் பிறந்தார்கள். ஆனர்த்தனுக்கு ரேவதன் என்றொரு புத்திரன் பிறந்தான். அவன் கடலின் நடுவே குசஸ்தலி என்றொரு பட்டணத்தை ஸ்தாபித்துக்கொண்டு ஆனர்த்தம் முதலிய தேசங்களைப் பரிபாலனம் செய்துவந்தான். ரேவதனுக்கு நூறு பிள்ளைகளும், ரேவதியென்கிற ஒரு பெண்ணும் பிறந்தார்கள். அவளுக்கு அவன் தந்தை தக்க நாயகனை மணஞ்செய்விக்க விரும்பிப் பிரம்மதேவரைப் பிரார்த்தித் தான். பிரம்மதேவர் அந்தப் பெண்ணை, பூபாரத்தை நீக்குவதன்பொருட்டுப் பூமியில் அவதரித்தவரான பலராமருக்குக் கொடுக்கும்படி ஆக்ஞாபித்தார். பிறகு அவ்வரசன் பலராமருக்கே தன் பெண்ணை விவாகம் செய்துகொடுத்தான்.
இருபத்துமூன்றாம் அத்தியாயம்
மநுவம்ச வரலாறு
மநுவின் புத்திரனாகிய நபாகன் என்பவனுக்கு நாபாகன் என்று ஒரு மைந்தன் பிறந்தான். அவன் தந்தை சொல் தவறாதவனாயிருந்து சத்கர்மங்களை அனுசரித்து பிரம்மஞானமடைந்தான். அவனுக்கு அம்பரீஷன் என்ற பிள்ளை பிறந்தான். அம்பரீஷன் பகவானிடம் பரமபக்தி செலுத்திக்கொண்டு அரசுபுரிந்துவந்தான். பகவான் இடத்திற் செலுத்திவந்த அன்பினால் அவன் நாளடைவில் உலகத்தில் சகல பற்றுகளையும் விட்டுச் சிறந்த பாகவத சிரோமணியாய் விளங்கினான். அப்படியிருக்கையில் அம்பரீஷன் ஒரு வருஷம் வரையில் துவாதசி விரதம் அநுஷ்டித்துவரத் தீர்மானித்து அவ்வாறே தானும் தன் மனைவியுமாயிருந்து அநுஷ்டித்துவந்தான். விரதமுடிவில், அம்பரீஷன் கார்த்திகை மாதத்தில் மூன்று நாள் உபவாச மிருந்து, பின் காளிந்தி நதியில் ஸ்நானஞ் செய்து அருகிலுள்ள மதுவனத்தில் வாசுதேவரைத் தியானம் செய்துவிட்டுப் பிறகு பிரம்மநிஷ்டர்கள் பலபேருக்குப் போஜனம் செய்வித்தான். பிறகு அவன் பாரணை செய்யப் போனான். அப்பொழுது அவனிடம் மகா கோபிஷ்டரும் தவ மகிமையிற் சிறந்தவருமாகிய தூர்வாஸ மகரிஷி வந்தார். அவரைக் கண்டதும் அரசன் செய்யவேண்டிய மரியாதைகளையும் உபசாரங்களையும் செய்து வரவேற்று, அவரையும் போ ஜனத்திற்கு அழைத்தான். அவர் நதிக்குப் போய் அனுஷ்டானாதிகளை முடித்துவிட்டு வருவதாகச் சொல்லிக் காளிந்தி நதிக்குச் சென்றார். அவர் வர நாழிகை யாயிற்று. அதற்குள் துவாதசி கழிந்து போகும் போலிருந்தது. துவாதசி கழிவதற்குள் பாரணை செய்துவிட வேண்டும். மகரிஷி வரவில்லை. துவாதசியும் கழியப் போகிறது. என்ன செய்வான் அரசன்? பிராம்மணர்களை நோக்கி,” இதற்கென்ன செய்வது” என்று கேட்டான். அவர்கள் துளசி தீர்த்தத்தைப் பாரணை செய்யலாமென்று கூற, அவ்வாறே அரசன் துளசி தீர்த்தத்தை ஆசமனீயம் செய்தான். இதனால் விரதம் கெடாது என்று பெரியோர் கூறியதில் அரசன் சமாதானமடைந்து பகவானைத் தியானித்துக்கொண்டு மகரிஷியின் வரவை எதிர் பார்த்தவனா யிருந்தான்.
பிறகு தூர்வாஸர் வந்தார். அவர் அரசன் தமக்கு முன் பாரணை செய்ததை அறிந்தார். ஆதலினால் கோபங் கொண்டு தம்முடைய ஜடையில் ஒன்றைப் பிடுங்கியெடுத்து அதைச் சக்கராயுதம்போல் செய்து அரசன் மீது பிரயோகித்தார். அது வருவதுகண்ட அரசன், இருந்த இடம் விட்டு அசையாமல் பகவானையே தியானித்துக் கொண்டிருந்தான்.
அச்சமயம் பகவானுடைய ஸுதர்சன சக்கரம் பக்தனைக் காப்பாற்ற ஆகாயத்தினின்றும் திடீரென்று தோன்றி, தூர்வாஸருடைய சக்கரத்தை எரித்து, அவரையும் துரத்தியது. தூர்வாஸர் சகல தேவர்களிடமும் போய்ச் சரணமடைந்தார். அவர்களெல்லோரும் அதை எதிர்க்கத் தம்மால் ஆகாதென்று சொல்லிவிட்டார்கள். பிறகு முனிவர் பிரபஞ்ச முழுவதும் ஓடி ஒளிந்தார். கடைசியில் மகாவிஷ்ணுவினிடமே போனார். அவர், “இது என் பக்தனுடைய செய்கை. அதனை நான் தவிர்ப்பதற்கு ஆகாது. அவனுக்குள் நான் அடக்கமான வன். ஆகையினால் அவனே ஏதாவது மனமிரங்கிச் செய்தால்தான் உண்டு ” என்றார்.
அப்பால் தூர்வாஸர் அம்பரீஷனிடம் வந்து சரண மடைந்தார். அவன் பகவானைப் பிரார்த்தித்தான். சுதர்சனம் அவரை விட்டு வாசுதேவரிடம் சென்றது. அதுவரையில் அம்பரீஷன் போஜனம் செய்யாமலிருந்தான். அப்பொழுது மகரிஷிக்குப் போஜனம் அளித்துவிட்டுப் பிறகுதான் போஜனம் செய்தான். அப்பால் தன் அரசைத் தன் பிள்ளையினிடம் ஒப்பித்துவிட்டு வனஞ்சென்று தவம்புரிந்து பரமபதம் அடைந்தான்.
இனி மனுவினிடம் உண்டான இக்ஷ்வாகுவைப் பற்றிக் கூறுகிறேன்:-
இக்ஷ்வாகுவுக்குப் பிக்ஷுகி என்று ஒரு பிள்ளை. அவனுக்குக் ககுஸ்தன் என்று ஒரு புத்திரன் பிறந்தான். அவன் அவனை ராஜாவாக்கிவிட்டுத் தவத்திற்குப் போனான். ககுஸ்தன் தேவர்களுக்கு அநுகூலனாயிருந்து அவர்களுடைய பகைவர்களாகிய அசுரர்களை வென்றான். அதனால் அவனுக்குப் புரஞ்சயன் என்று பெயர் கிடைத்தது. அவனுடைய வம்சத்தில் யுவனாசுவன் என்பவன் தோன்றினான். அவன் பிள்ளையில்லாமல் வருந்தினான். அவனிடம் இரக்கங் கொண்ட ரிஷிகள் புத்திரபாக்கியம் உண்டாகுமாறு ஒரு யாகம் செய் வித்தனர். அப்பொழுது ஒருநாள் இரவில் யுவனாசுவ னுக்குத் தாகம் அதிகமா யெடுத்தது. அதனால் அவன் யாகத்திற்கு வைத்திருந்த ஜபதீர்த்தத்தை எடுத்துக்குடித்து விட்டான். பிறகு யுவனாசுவனுடைய இடுப்பைப் பிளந்து கொண்டு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் பாலுக்கு அழுதது. அப்பொழுது இந்திரன் தோன்றித் தன் கைப் பெருவிரலை அதற்குக் கொடுத்தான். அந்தக் குழந்தைக்கு மாந்தாதா என்று பெயர்வந்தது. தேவர்களுடைய கிருபையினால் யுவனாசுவனும் பிழைத்துக் கொண்டான்.
மாந்தாதாவுக்கு முசுகுந்தர் முதலிய நான்கு புத்திரர் களும் ஐம்பது பெண்களும் பிறந்தனர். அந்த ஐம்பது பெண்களையும் ஸௌபரி என்ற ஒரு மகரிஷி மணந்து கொண்டார். பிறகு அந்த மாந்தாதாவின் வம்சத்தில் அனரண்யர் பிறந்தார். அவருடைய வம்சத்தில் திரிசங்கு பிறந்தான். அவன் தன் குருவாகிய வஸிஷ்ட மகரிஷியினுடைய சாபத்தினால் சண்டாளனானான். பின் விசுவாமித்திரருடைய பிரபாவத்தினால் சரீரத்தோடு சுவர்க்கம் சென்றான். தேவதைகள் அவனுக்கு அங்கே இடங்கொடுக்கவில்லை. அதனால் அவன் கீழே தள்ளப்பட்டு விசுவாமித்திரருடைய தவ மகிமையினால் அங்கேயே நிலை நிறுத்தப்பட்டான். அவனுடைய பிள்ளை அரிச்சந்திரன். அரிச்சந்திரனுடைய ஸத்திய பலத்தையும் தைரியத்தையும் விசுவாமித்திரர் பரீக்ஷித்தறிந்து சந்தோஷமடைந்தார். முடிவில் அவன் ஞானோபதேசம் பெற்றுப் பரமாத்ம சொரூபத்திலே கலந்தான். அரிச்சந்திரனுக்கு ரோகிதன் பிறந்தான். அவன் வம்சத்தில் பாகுகன் என்பவன் தோன்றினான். அவன் தன் மனைவியோடுகூட வனஞ் சென்று அங்கே மரணமடைந்தான். அப்போது அவன் மனைவி உடன்கட்டையேறப் பார்த்தாள். அதை ஒளரவர் என்ற மகரிஷி தடுத்தார். மேலும் அவள் அப்போது கர்ப்பவதியா யிருந்தாள். அவளுடைய சக்களத்திமார்கள் அவளுக்கு விஷங்கலந்து கொடுத்து அவளுடைய கர்ப்பத் தைக் கலைக்கப் பார்த்தார்கள். ஒளரவ ரிஷியினுடைய அநுக்கிரஹத்தினால் கர்ப்பம் கலையாமல் பிள்ளையாகப் பிறந்தது. அவன் சகர சக்கரவர்த்தியென்று பெயர்பெற்று மகா கீர்த்திமானாக விளங்கினான். சகரனுக்கு அறுப் தாயிரம் பிள்ளைகள். சகரன் ஓர் அசுவமேத யாகம் செய்தான். அவன் அப்பொழுது விடுத்த அசுவத்தை, இந்திரன் அபகரித்துக்கொண்டு போனான். அதைச் சகரனுடைய பிள்ளைகள் அறுபதினாயிரம் பேர்களும் தேடினார்கள். பூமியில் எங்கும் அது அகப்படவில்லை. அதனால் அவர்கள் கீழேதோண்டிப் பாதாளம் போய்ப் பார்த்தார்கள். அங்கே அந்த அசுவம், கபிலர் என்று பெயர்கொண்ட முனிவருடைய ஆசிரமத்தில் இருக்கக் கண்டார்கள். அசுவத்தை அபகரித்தவன் இவன் தானென்று எண்ணி அந்த முனிவரை ஆயுதங்களாலே கொல்லப் போனார்கள். அப்பொழுது அவர் கண்ணைத் திறந்துபார்த்தார். அதனால் அந்த அறுபதினாயிரம் பேரும் பஸ்மமானார்கள்.
சகரனுடைய மற்றொரு மனைவிக்கு அஸமஞ்சன் என்றொரு புத்திரனிருந்தான். அவனுக்கு அம்சுமான் என்று ஒரு புத்திரனிருந்தான். அசமஞ்சன் உலகத்துக்கு விரோதமான காரியங்களைச் செய்துவந்தான். அதனால் அவனைச் சகரன் ஊரை விட்டுத் துரத்தி விட்டான். பிறகு அவன் தன்னுடைய யோகபலத்தினால் கியாதிபெற்றான். அவனைக் கண்டு அரசன் சந்தோஷமடைந்தான். அவன் மகனாகிய அம்சுமான், யாக அசுவத்தைத் தேடிக்கொண்டு பாதாள உலகம்போய்க் கபிலரை வணங்கி, அவருடைய அநுக்கிரஹம் பெற்று அசுவத்தை யடைந்து தன் பாட்டனிடம் அதைக் கொண்டுவந்து சேர்த்து வணங்கி, யாகத்தை நிறைவேற்றிவைத்தான்.
அவன் வம்சத்தில் பகீரதன் பிறந்தான். பகீரதன் கடுந்தவம் புரிந்து ஆகாய கங்கையைப் பூவுலகத்திற் பெருகும்படி செய்து, அதனைத் தன் பாட்டன்மார்களாகிய சகர புத்திரர்கள் சாம்பராய்க் கிடந்த இடத்திற்குக் கொண்டு போனான். அந்தக் கங்கா தீர்த்தம் பட்ட மாத்திரத்தில் அவர்கள் எல்லோரும் ஸ்வர்க்கம் அடைந்தார்கள்.
பகீரதனுக்குப் பிறகு அவன் வம்சத்திற் சில தலைமுறை விட்டு ருதுபர்ணன் பிறந்தான். அவனுக்கு ஸௌதாஸன் என்பவன் பிறந்தான். அவன் ஒரு சமயம் காட்டிற்கு வேட்டையாடப்போய் அங்கோர் ராக்ஷஸனைக் கொன்றான். அந்த ராக்ஷசனுடைய தம்பி அதனால் கோபங்கொண்டு அரசனை வஞ்சனையினாலே கொல்லவெண்ணி மானிட உருவம் தாங்கி அரசனிடம் சமையற்காரனாக வந்து அமர்ந்தான். அப்பொழுது அவன் வஸிஷ்ட முனிவருக்கு நரமாம்ஸம் படைத்தான். அதனால் அவர் அரசன்மீது கோபங்கொண்டு அவனைப் பன்னிரண்டு வருஷகாலம் ராக்ஷஸனாகத் திரியும்படி சபித்தார்.தான் ஒரு தோஷமும் அறியாதிருக்கத் தன்னை அநியாயமாகச் சபித்த முனிவ ரிடம் கோபங்கொண்டு அவரைச் சபிக்கக் கையில் தண்ணீரை எடுத்தான். அந்தக் கோபத்தை அவன் மனைவி மாற்றித் தடுத்தாள். பிறகு அவன் அந்த ஜலத்தைத் தன் காலில் விட்டுக்கொண்டான். அந்தக் கால் கறுத்துப்போயிற்று. அதனால் அவனுக்குத் கல்மாஷபாதன் என்கிற பெயர் உண்டாயிற்று.
கல்மாஷபாதன் ராக்ஷஸனாகத் திரிகையில், ஒரு பிராம்மணனும் அவன் மனைவியும் சந்தோஷமாய்ப் பேசிக்கொண்டிருக்கிற சமயத்தில் அந்தப் பிராம்மணனைக் கொன்று தின்னப் பார்த்தான். பிராம்மணன் அதை அறிந்து, “இது தகாத காரியம்; செய்யாதே” என்று தடுத்தான். அவன் கேளாமல் அவ்வந்தணனைக் கொன்று தின்றான். அதனால் அவன் மனைவி அந்த ராக்ஷஸனைப் பார்த்து, “நீயும் உன் மனைவியும் சந்தோஷமாகப் பேசி விளையாடும்போது மரணமடைவாய்” என்று சபித்து விட்டு உடன்கட்டையேறி மடிந்தாள். அரசன் சாபம் நீங்கித் தன் மனைவியை அடைந்தபின் அவளை நெருங்குவதற் கில்லாமல் வருந்தினான். பிறகு அவனுக்கு வஸிஷ்டருடைய அநுக்கிரஹத்தினால் அச்மகன் என்று ஒரு பிள்ளை உண்டானான்.
அவன் வம்சத்தில் கட்வாங்க மகாராஜா பிறந்தான். கட்வாங்கன் வம்சத்தில் ரகு, அஜன், தசரதன், ராமன் முதலியவர்கள் தோன்றினார்கள்.
ஸ்ரீராமனுக்கு அவன் தந்தை தசரதன் பட்டங்கட்ட யத்தனித்தான். அதையறிந்த அவனுடைய இளைய மனைவி கைகேயி என்பவள் தன் மகனுக்குப் பட்டங்கட்டவும், ராமனைப் பதினான்கு வருஷம் வனத்திற்கு அனுப்பவும் வேண்டுமென்று வரங்கேட்டாள். தசரதன் அவ்வாறே தந்தான். புத்திரனான ராமன் அதனைப் பரிபாலிக்கும் பொருட்டுப் பதினான்கு வருஷகாலம் தன் மனைவியோடு வனவாசம் செய்து ராவணாதி ராக்ஷஸர்களை யெல்லாம் கொன்று முனிவர்களுக்கும் உலகத்துக்கும் க்ஷேமத்தை உண்டாக்கி எல்லோரும் வாழ்த்த அயோத்தியா நகரம் வந்து தன் அரசுரிமைபெற்றுச் சுகமாக வாழ்ந்துவந்தான். அவனுக்குக் குசன் லவன் என்ற புத்திரர்கள் பிறந்தார்கள். பிறகு அந்த வம்சம் ஸுமித்திரன் என்கிற ராஜனோடு கலியில் முடிவடையும்.
இனி இக்ஷ்வாகுவின் பிள்ளை நிமியின் வம்சத்தைப் பற்றிக் கூறுகிறேன் கேள்:
நிமி ஒரு சத்திரயாகத்தைச் செய்யத் தொடங்கினான். அந்த யாகத்தை நிறைவேற்றிவைக்கும்படி வஸிஷ்டரை வேண்டிக்கொண்டான். வஸிஷ்டர், “நான் இப்பொழுது இந்திரனுக்கு ஒரு யாகஞ் செய்துவைக்க ஒப்புக்கொண் டிருக்கிறேன். பிறகு உன் யாகத்தை முடிக்கிறேன் ” என்று கூறி இந்திரலோகம் போய்விட்டார். பிறகு நிமி, இந்தத் தேகம் அநித்தியம் என்பது அறிந்து வேறு சில முனிவர்களைக் கொண்டு அந்த யாகத்தைச் செய்து முடித்தான். பிறகு வஸிஷ்டர் வந்து, “நான் வருவதற்குள் நீ எப்படி யாகத்தை முடித்தாய்?” என்று கோபங் கொண்டு அவனைச் சபித்தார். அவனும், ‘தருமத்தை யறியாத நீரும் அழியக்கடவீர்’ என்று சபித்தான். பிறகு நிமியும் உயிரை விட்டான். வஸிஷ்டரும் தம் தேகத்தை விட்டு மித்திராவருணனுடைய குடும்பத்திலே பிறந்தார். அப்பால் தேவர்கள், நிமியைத் தேகமில்லாதவனாய்ப் பிராணிகளுடைய நிமை கொட்டுதலிலும் விழிப்பதிலும் காணும்படியாயிருக்க அவனுக்கு வரம் தந்தனர். ரிஷிகள் அவனுடைய தேகத்தைக் கடைந்தார்கள். அதிலிருந்து ஒரு புத்திரன் பிறந்தான். அவன் ஜனகனென்று பேர் பெற்றான். பிறகு அவனுடைய வம்சம் விருத்தியடைந்தது. அந்த வம்சத்து அரசர்கள் எல்லோரும் வேதாந்த ஞானிகளாய் வினங்கினார்கள்.
இருபத்துநான்காம் அத்தியாயம்
சந்திர வம்ச வரலாறு
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இனிச் சந்திரவம்ச சரித்திரத்தைப்பற்றிச் சொல்லுகிறேன்.
பிரம்மதேவருக்கு அத்திரி யென்றொரு புதல்வன் பிறந்தான். அந்த அத்திரி மகரிஷியினுடைய நேத்திரத்தில் உண்டான ஆனந்த பாஷ்பத்திலிருந்து அமுதமயமான சந்திரன் பிறந்தான். சந்திரனுக்குப் புதன் பிறந்தான். புதனுக்கு இளையென்பவளிடம் புரூரவசு பிறந்தான். அவன் வம்சத்தில் காதியென்பவன் தோன்றினான்.
அந்த அரசனுக்கு ஸத்தியவதி என்று ஒரு பெண் பிறந்தாள். அவளை விரும்பிய ரிசீகர் என்ற முனிவருக்கு அவ்வரசனிடம் கன்யாசுல்கமாக ஆயிரம் வெள்ளைக் குதிரைகள் வேண்டுமென்றும், அவற்றுள் ஒன்று மாத்திரம் காது கறுத்ததாய் இருக்கவேண்டுமென்றும் கேட்டார். ரிஷி வருணனிடம் சென்று அப்படிப்பட்ட குதிரைகளைக் கொண்டுவந்து கொடுத்து அந்தப் பெண்ணை மணந்துகொண்டார்.
ரிசீகரிடத்தில், காதியின் மனைவியும் ஸத்தியவதியும் பிள்ளை வேண்டுமென்று பிரார்த்தித்தார்கள். அவர் அதன் பொருட்டு இரண்டு பாத்திரத்தில் ஹவிஸ் இட்டு ஹோமஞ்செய்ய யத்தனித்து அவற்றை மந்திரித்து வைத்து விட்டு ஸ்நானத்திற்குச் சென்றார். அப்போது காதிராஜன் மனைவி, ரிஷி தம்முடைய மனைவியின் ஹவிஸில் ஏதாவது விசேஷமான மந்திரம் ஜபித்திருப்பாரென்று கருதி ஸத்தியவதியின் பாகத்தைத் தான் உண்டு தன் பாகத்தை அவளுக்குக் கொடுத்துவிட்டாள். ரிஷி திரும்பிவந்து விஷயம் அறிந்து, “என்ன ஆச்சரியம் இது? நான் பிராம்மணனாகையினால் என் மனைவிக்குப் பிராம்மணப் பிள்ளை பிறக்கவும், காதி க்ஷத்திரிய னகையினால் அவன் மனைவிக்கு உலகை ஆளும்படியான க்ஷத்திரியப்பிள்ளை பிறக்கும்படியாயும் ஹவிஸை ஐபித்து வைத்திருந்தேன். நீங்கள் இப்படி விபரீதம் செய்துவிட்டீர்களே! இனி என்ன செய்கிறது?” என்று வருத்தப்பட்டார். பிறகு ஸத்தியவதி ரிஷியைக் கெஞ்சிக்கேட்டுக்கொண்டாள். ரிஷி மனமிரங்கி, “உன் பிள்ளை பிராம்மணனாகவே இருக்கட்டும். ஆனால் என் பேரன் க்ஷத்திரிய தருமத்தை அநுசரிப்பான்” என்று கூறினார்.
அப்பால் ரிசீகருக்கு ஜமதக்கினி என்ற முனிவர் பிறந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள். அவர்களுள் கடைசியானவர் பரசுராமர் என்பவர். அவர் பரத கண்டத்திலிருந்த கொடிய அரசவம்சத்தை இருபத்தொரு தலைமுறை நாசஞ் செய்தார். கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் ஒரு க்ஷத்திரியனே அவருக்கு அப்படிப்பட்ட கோபத்தை உண்டாக்கினான்.
கார்த்தவீரியார்ச்சுனன் நிகரற்ற வீரன்; மகா வரப் பிரசாதி. அவன் தத்தாத்திரேயரை நோக்கித் தவமிருந்து ஆயிரம் கரங்களைப் பெற்றான். திக்குவிஜயம் செய்தான். ராவணனையும் பிடித்துச் சிறைவைத்திருந்தான். அவன் ஒருநாள் வனத்தில் வேட்டையாடிக்கொண்டு வந்து ஜமதக்கினி முனிவருடைய ஆசிரமத்தில் தன் பரிவாரங் களோடு தங்கினான். தபோதனர் அவனுக்கும் அவன் பரிவாரங்களுக்கும் தமது காமதேனுவைக் கொண்டு திருப்திகரமாகப் போஜனம் செய்வித்தார். அந்தக் காமதேனுவைக் கார்த்தவீரியார்ச்சுனன் தன் அரண் மனைக்குக் கொண்டுபோக விரும்பி அதைக் கவர்ந்து போகத் தன் பரிவாரங்களுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் அவ்வாறே அதைத் திருடிப் பிடித்துக்கொண்டு சென்றனர்.அதையறிந்த பரசுராமர் அவர்களை எதிர்த்து மடக்கிக்கொண்டார். அரசனுக்கும் ப்ரசுராமருக்கும் போர் மூண்டது. போரில் பரசுராமர் கார்த்த வீரியார்ச்சுனனைக் கொன்று காமதேனுவை மீட்டுக் கொண்டுவந்து தம் தந்தையிடம் ஒப்பித்தார். ஜமதக்கினி பரசுராமரைப் பார்த்து, ‘நீ செய்த காரியம் சரியானதல்ல. கொடிய பாபச்செய்கை செய்தாய், அது வெறுக்கத்தக்கது. நாம் உயர்குலத்தவர்களல்லவா? பொறுமையினால் நாம் சகல ஜனங்களாலும் பூஜிக்கப்படுகின்றோம். அப்படி யிருக்க, நாம் பொறுமையிழந்து இப்படிப்பட்ட செய்கை செய்யலாமா? நீ செய்த பாபச் செய்கைக்காகத் தீர்த்த யாத்திரை செய்துவரவேண்டும் ” என்றார். அவர் அப்படியே செய்துவிட்டு வந்தார். இதுமுதல் பரசு ராமருக்கு க்ஷத்திரியரிடம் வெறுப்பு உண்டாயது.
ஒருநாள் பரசுராமருடைய அன்னை ஹோம காரியத்திற்கு வேண்டிய சுத்த ஜலம் கொண்டு வருவதற்காக நதிக்குச் சென்றாள். அங்கே சில கந்தர்வர்கள் விளையாடிக்கொண் டிருந்தனர். அந்த விளையாட்டைப் பார்த்தபடியே அவள் கொஞ்சநேரம் அந்த நதிக்கரையில் நின்றுகொண்டிருந்து பிறகு ஜலம் கொண்டுவந்தாள். இதற்குள் ஹோம வேளை தவறிவிட்டது. அதனால் முனிவர் கோபங்கொண்டு மனைவியைக் கொன்றுவிடும்படி மைந்தர் களுக்குக் கட்டளையிட்டார். முதல் இரண்டு பிள்ளைகளும் அன்னையைக் கொலை செய்ய ஆலோசனை செய்துகொண்டு நின்றனர். ஜமதக்கினி முனிவர் அவர்களையும் சேர்த்துக் கொல்லும்படி பரசுராமருக்குக் கட்டளையிட்டார். பரசுராமர் உடனே தாயையும் தமையன்மார்களையும் கொன்று தந்தையை வணங்கினார். “தந்தை உனக்கு என்ன வரம் வேண்டும்? நான் உன்னிடம் சந்தோஷமடைந்தேன்” என்றார். பரசுராமர், “நான் இப்போது கொன்ற இவர்களை உயிர்ப்பிக்க வேண்டும். இவர்களுக்கு, இவர்கள் செய்த குற்றமும் நான் இவர்களைக் கொன்றதும் மறந்து போய்விட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார், முனிவர் தமது தபோபலத்தால் அவர்களை உயிர்ப்பித்துப் பரசுராமரைச் சந்தோஷப்படுத்தினார்.
கார்த்தவீரியார்ச்சுனனுடைய மைந்தர்கள் தங்கள் தந்தையைக் கொல்வித்த ஜமதக்கினி முனிவரிடம் பெருங் கோபங்கொண் டிருந்தார்கள். அவர்கள் ஆசிரமத்தில், பரசுராமர் இல்லாத சமயம் பார்த்து நுழைந்து அங்கே ஹோமாக்கினியின் முன்பு சமாதியிலிருந்த ஜமதக்கினி முனிவரைக் கொல்லப் போனார்கள். அவர் மனைவி அவர்களைப் பார்த்துத் தன் நாயகரைக் கொல்லவேண்டா மென்று வெகுதூரம் கேட்டுக்கொண்டாள். அவர்கள் கேளாமல் ஒரே பிடிவாதமாய் அவரைக் கொன்றுவிட்டுப் போய்விட்டார்கள். அந்தத் துயரம் பொறுக்க மாட்டாமல் முனிவர் மனைவியான ரேணுகாதேவி வயிற்றில் புடைத்துக்கொண்டு கதறினாள். அவள் கதறியது பரசுராமர் செவியில் பட்டது. அவர் ஓடிவந்து பார்த்தார்; தந்தை வெட்டுண்டு கிடப்பதைக் கண்டதும் பெருங் துயரமுற்று அழுது புலம்பித் தாமே ஆறுதலடைந்தார். அவருடைய அன்னை அவருக்குக் கார்த்தவீரியார்ச்சுன னுடைய பிள்ளைகள் செய்த கொடுமையைக் கூறி அழுதாள். பரசுராமர் உடனே க்ஷத்திரியர்மீது பெருங் கோபங்கொண்டார். “உலகில் க்ஷத்திரியப் பூண்டே இல்லாமல் அடித்துவிடுகிறேன் ” என்று சபதம் செய்து கொண்டு, முதலில் கார்த்தவீரியார்ச்சுனனுடைய பிள்ளைகளைக் கொன்றார். பிறகு இருபத்தொருதரம் பரத கண்டத்தை வலமாக வந்து க்ஷத்திரியர் எல்லோரையும் கொன்று குருக்ஷேத்திரத்திற்கருகே ஸ்யமந்தபஞ்சகம் என்ற ஐந்து ரத்த மடுக்களை உண்டாக்கினார். அந்த மடுக்களிலே அவர் தம் தந்தைக்குச் செய்யவேண்டிய தர்ப்பணம் முதலியவைகளைச் செய்தார். அவர் செய்த அந்தக் கர்மங்களினாலே ஜமதக்கினி முனிவர் ஸப்த ரிஷிகளுள் ஒருவரானார். பரசுராமர் சிரஞ்சீவி ஆனார். அவர் மகேந்திர மலையில் வந்து வசிக்கிறார்.
காதிக்கு விசுவாமித்திரர் உண்டானார். அவர் தவத் தினால் க்ஷத்திரிய குணத்தை விட்டுப் பிரம்மதேஜஸை யடைந்து நூற்றொரு பிள்ளைகளைப் பெற்றார். அவர்கள் நானாவழியில் பிரிந்துபோனார்கள்.
இனி, சந்திரவம்சத்தில் உதித்த புரூரவசுவைப்பற்றிச் சொல்லுகிறேன் கேள்:-
புரூரவசுவுக்கு ஐந்து பிள்ளைகள். அவர்களுள் நகுஷனே பிரக்கியாதி பெற்றான். நகுஷனுக்கு யதி, யயாதி, சையாதி, யாதி, வியாதி, கிருதி என்று ஆறுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுள் யதி துறவியானான். யயாதி அரசனானான். அவனுக்கு அவன் தம்பிமார் நால்வரும் உதவியாக இருந்து அரசுபுரிந்து வந்தனர். நகுஷன் புண்ணிய பலத்தினால் சுவர்க்கத்தை அடைந்து, அங்கே இந்திரன் மனைவி சசிதேவியை இச்சித்து ரிஷிகள் சாபத்தினால் மலைப் பாம்பு ஆனான். யயாதி சுக்கிராசாரியி னுடைய பெண் தேவயானை என்பவளையும் விரஷபர்வாவி னுடைய பெண் சர்மிஷ்டை என்பவளையும் மணந்து கொண்டான்.
தேவயானை, யது, துறுவசு என்று இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள். சர்மிஷ்டை, துர்க்கிரன், அநு, பூரு என்று மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். இந்தப் புத்திரர்களுள் பூரு பிரசித்தனானான். பூருவுக்கு ஜனமேஜயன் பிறந்தான். அவனுடைய வம்சத்தில் ஸுமதி யென்பவன் தோன்றினான். அவனுக்குத் துஷ்யந்தன பிறந்தான். அவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்று அங்கே கண்ணுவ மகரிஷியினுடைய ஆசிரமத்தில்
வளர்ந்துவந்த சகுந்தலை என்பவளை மணந்துகொண்டான். அவனுக்குப் பரதன் என்று ஒரு புத்திரன் பிறந்தான்.
இவ்விதம் கூறிப் பரதனுடைய வம்சத்தை விஸ்தரித் துப் பரீக்ஷித்து வரையில் சொல்லி, அப்பால் பரீக்ஷித்துவின் பிள்ளை ஜனமேஜயனையும்பற்றி விஸ்தரித்தார்.
பிறகு யயாதி பிள்ளைகளாகிய யதுவினிடமிருந்து தோன்றிய யாதவகுலத்தை எடுத்துக் கூறி அதற்குச் சம்பந்தமான விருஷ்ணி, அந்தாள் முதலியவர்களைப்பற்றி யும் சொல்லி, முடிவில் பகவான் கிருஷ்ணபலராமர்களின் சரித்திரத்தைச் சொல்லத் தொடங்கினார்.
இருபத்தைந்தாம் அத்தியாயம்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
பூமியில் கொடியவர்கள் அதிகரித்தனர். அப் பொழுது பூமிதேவி காமதேனுவின் உருக்கொண்டு பிரம்ம தேவரிடம் சென்று, “பாரம் தாங்கமுடியவில்லை” என்று முறையிட்டாள். அவர் மற்றத் தேவர்களுடன் சென்று திருப்பாற்கடலை யடைந்து மகாவிஷ்ணுவைத் துதித்துப் பிரார்த்தித்தனர். மகாவிஷ்ணு பிரஸன்னராகி, “தேவர்களே, நீங்கள் முதலிலே யாதவகுலத்தில் அவதாரம் செய்யுங்கள். நான் பின்பு அவதாரஞ்செய்து பூபாரம் தீர்க்கிறேன் ” என்று வாக்களித்தனுப்பினார். தேவர்கள் அவ்வாறே செய்தனர். யாதவர்களில் உக்கிரசேனன் என்று ஓர் அரசனிருந்தான். அவனுக்குக் கம்ஸன் என்று ஒரு மைந்தன் இருந்தான். அவன் மகா கொடியவனாயும் பாபத்திற்கும் பழிக்கும் அஞ்சாதவனாயும் இருந்தான். அதனால் அவன் தன் தந்தையைப் பிடித்துச் சிறையிலிட்டுத் தானே அரசனானான்.
உக்கிரசேனனுக்குத் தேவகன் என்று ஒரு தம்பி உண்டு. அவனுக்குத்தேவகி என்று ஒரு பெண் இருந்தாள். அவளை யதுவின் வம்சத்தில் உதித்த சூரசேனனுடைய புத்திரர் வஸுதேவர் என்பவருக்கு விவாகம் செய்து கொடுத்தார்கள். விவாக ஊர்வலத்தில் கம்ஸன் தன் தங்கையும் வஸுதேவரும் ஏறியிருந்த ரதத்தைத் தானே ஸாரதியாயிருந்து செலுத்தினான். அப்பொழுது, “அடே மூடா, உன் தங்கையாகிய தேவகியினுடைய எட்டாம் பிள்ளை உன்னைக் கொல்லப்போகிறது. நீ ஏன் இந்த விவாகத்தை இப்படிக் கொண்டாடுகிறாய்?” என்று ஓர் அசரீரிவாக்குப் பிறந்தது.
இதைக் கேட்டதும் கம்ஸன் கடுங்கோபங் கொண்டு, “இவள் இருந்தாலல்லவா இவளுடைய எட்டாம் பிள்ளை என்னைக் கொல்லத் தோன்றும்? இதோ இந்த க்ஷணமே இவளைக் கொன்றுவிடுகிறேன் ” என்று கத்தியை உருவி வெட்டப்போனான். வஸுதேவர் அவனைத் தடுத்து, “அப்பா நீ ஏன் மரணத்திற்காக இவ்வாறு அஞ்சுகிறாய் ? உனக்கு இவ்வாறு மரணம் நேரிடப்போகிற தென்பதை அசரீரி அறிவித்தது. அதனாலென்ன? உலகத்தில் மரண மடையாதவன் எவன்? மரணத்தை யாராலே விலக்குவ தற்காகும் ? நீ இப்பொழுது உன் தங்கையைக் கொல்வதால் யாது பயன் ? இதனால் நீ துஷ்டன், கொலைபாதகன் என்கிற பெயரையே அடைவாய். ஆதலின் இந்தக் காரியம் செய்யாதே. இவளுடைய பிள்ளை தானே உன்னைக் கொல்லப்போகிறது? இவள் அல்லவே? நான் ஒன்று சொல்கிறேன்: எனக்குப் பிறக்கும் குழந்தைகளையெல்லாம் தவறாமல் உன்னிடம் கொடுத்துவிடுகிறேன். நீ அவைகளை உன் விருப்பப்படி செய்துகொள்” என்றார். கம்ஸன் உடனே கோபந்தணிந்து ஊர்வலத்தை நடத்தி முடித்தான்.
அப்பால் வஸுதேவரும் தேவகியும் பகவத்தியான பரராய் வாழ்ந்துவந்தனர். அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. கம்ஸன் அவர்களுடைய குழந்தைகளில் ஆறு குழந்தைகளை வஸுதேவர் கொடுக்கப்பெற்று அவைகளைத் தான் கொண்ட அச்சத்தினால் கொன்றான். பிறகு தேவகி ஏழாவது கர்ப்பம் அடையுமுன்னே, அவளையும் வஸுதேவரையும் சிறையில் அடைத்துவிட்டான். சிறைச் சாலையில் தேவகி ஏழாவது கர்ப்பத்தை அடைந்தான். பகவானுடைய யோக மாயை அந்தக் கர்ப்பத்தைக் கலைத்து, வஸுதேவருடைய மற்றொரு மனைவியாகிய ரோகிணி யென்பவளிடம் சேர்ப்பித்துவிட்டது. ரோகிணி தேவி, மதுரைக்கருகில் யமுனைக்கு அக்கரையிலிருந்த கோகுலத்தில் இருந்தாள். ஆகவே கம்ஸனுக்கு அந்தக் கர்ப்பம் கலைந்துவிட்டதென்று வஸுதேவர் கூறிவிட்டார். பிறகு தேவகி எட்டாவது கர்ப்பமடைந்தாள். அதைக் கேட்டதும் கம்ஸன் சிறைச்சாலைக்குப் போய், தேவகியைத் கொன்றுவிட யத்தனித்தான். அவளது திவ்ய சோபையைக் கண்டதும் அவனுக்கு அவளைக் கொல்ல மனம் வரவில்லை. ஆகையினால் அவன் வஸுதேவரைப் பார்த்து எட்டாவது குழந்தை பிறந்ததும் சிறிதும் தாமதியாமல் தனக்குத் தெரிவிக்கவேண்டுமென்று சொல்லிவிட்டுச் சென்றான்.
அப்பால் எட்டாவது குழந்தை பிறக்கும் அன்றிரவில் காவலாளர்க ளெல்லாம் நெடுநேரம் வரையில் விழித்திருந் தார்கள். ஆயினும் சென்ற சில நாட்களாகத் தூக்கமின்றி விழித்திருந்த சிரமத்தினால் அப்பொழுது அயர்ந்து தூங்கி விட்டனர். சென்ற சில நாட்களாகத் தூக்கம் பிடிக்காமல் பயந்து கொண்டிருந்தமையினால், கம்ஸனும் அன்றிரவு குழந்தை பிறக்கும் வேளையில், அயர்ந்து நித்திரை போய் விட்டான்.
அப்பால் கோகுலாஷ்டமியாகிய அன்றிரவு சந்திரோதய காலத்தில் தேவகிக்குக் குழந்தை பிறந்தது. அது சங்கு சக்கர பீதாம்பரமுடையதாயும், சதுர்புஜ முடையதாயும் விளங்கியது. அந்தத் திவ்ய சொரூபத்தைக் கண்ணாற்கண்ட தேவகி வஸுதேவர் இருவரும் தாங்கள் சிறைச்சாலையில் இருப்பதையே மறந்துவிட்டார்கள். அவர்களுடைய காலிலே பூட்டியிருந்த விலங்குகள் தாமே கழன்றுபோயின. உடனே அவர்கள், அவதரித்திருப்பது பகவானென்றறிந்து வணங்கித் துதித்தார்கள். பகவான் அவர்களை நோக்கி, “எனது யோகமாயைதான் உங்களுடைய ஏழாவது பிள்ளையை என் கட்டளைப்படி கர்ப்பத்திலேயே கலைத்து ரோகிணி தேவியிடம் சேர்த்தது. அது இப்பொழுது அங்கே என் தமையனாகப் பிறந் திருக்கிறது. யோகமாயை இப்பொழுது யமுனைக்கு அக் கரையிலிருக்கும் நந்தகோபருடைய மனைவி யசோதைக்குப் பெண்ணாகப் பிறந்திருக்கிறாள். நீங்கள் காலதாமதம் செய்யாமல் சிசுரூபமாக இருக்கும் என்னை எடுத்துக் கொண்டுபோய் நந்தகோபருடைய வீட்டிற்குச் சென்று யசோதையினிடம் விட்டுவிட்டு அவளிடமிருக்கும் பெண் குழந்தையை இங்கே எடுத்துக்கொண்டு வந்துவிடுங்கள். நீங்கள் தைரியமாக இதைச் செய்யுங்கள். எல்லாம் அநுகூலமாகவே முடியும்” என்று சொல்லிவிட்டுச் சாதாரணக் குழந்தை யாய்விட்டார். பிறகு அவர்களுக்கு அந்தக் குழந்தை பகவான் என்ற நினைவே இல்லாமற் போயிற்று. ஆனால் பகவான் இட்ட கட்டளை மாத்திரம் வஸுதேவருக்கு நினைப்பில் இருந்தது. அவர் உடனே குழந்தையை எடுத்துக்கொண்டு பயத்துடன் சிறைச்சாலையி லிருந்து புறப்பட்டு அதன் கதவைத் தொட்டார். உடனே கதவு திறந்துகொண்டது. ஆச்சரியத்துடனும் சந்தோஷத் துடனும் அவர் வெளியே வந்தார். காவலாளிகள் அயர்ந்து தூங்குவதைக் கண்டார். ஆயினும் பெரும் பயத்துடன் தெருவுக்கு வந்தார். அப்பொழுது வானத்தில் மேகம் சூழ்ந்து சிறுமழை பெய்தது. சிறு சிறு இடிகள் இடித்தன. வஸுதேவரும் குழந்தையும் மழையில் நனையாமல் இருக்கும்படி ஆதிசேஷன், குடைபோல் மறைத்துக்கொண்டார். வஸுதேவர் மெதுவாய்ப் பகவானைத் தியானம் செய்துகொண்டே நடந்து யமுனைக்கு வந்துசேர்ந்தார். யமுனை கரை புரண்டோடியது. ஆயினும் வஸுதேவருக்கு அந்த யமுனை வழிவிட்டது. ஆகையினால் அவர் யமுனையை எளிதிற் கடந்து கோகுலம்போய் நந்தகோபருடைய வீட்டிற்குள் பிரவேசித்தார்.
அங்கே எல்லோரும் அச்சமயம் அயர்ந்து நித்திரை செய்தனர். நந்தகோபரும் வரிசெலுத்த மதுரைக்குச் சென்றிருந்தார். சமயம் நல்லதாய் இருந்தது. வஸுதேவர் ஒருவருக்குந்தெரியாமல் யசோதையின் பிரசவ அறைக்குள் பிரவேசித்தார். அங்கே யசோதை மயங்கிக் கிடப்பதையும் அவளருகே பெண் குழந்தை ஒன்று படுத்திருந்ததையும் கண்டு மெதுவாய்ப் பகவானை அவள் பக்கத்தில் விட்டு, அந்தக் குழந்தையைத் தாம் எடுத்துக்கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளிப்பட்டு வேகமாக நடந்து மதுரைக்குப் போய்ச் சிறைச்சாலையிற் பிரவேசித்துக் குழந்தையைத் தேவகியினிடம் விட்டுவிட்டுக் கதவைச் சாத்தினார். அதன் பூட்டுத் தானே விழுந்துவிட்டது. பிறகு விலங்கை யெடுத்துத் தேவகி காலில் மாட்டித் தமக்கும் மாட்டிக் கொண்டார். விலங்கு உடனே பூட்டிக்கொண்டது. இவற்றை யெல்லாம் கண்ட வஸுதேவரும் தேவகியும் பகவானுடைய செயலை எண்ணி எண்ணிச் சந்தோஷம் அடைந்தார்கள்.
இச்சமயத்தில் குழந்தை அழுதது. அதைக் கேட்டுக் காவலாளிகள் விழித்துக்கொண்டு ஓடிப்போய்க் கம்ஸ னுக்குத் தெரிவித்தனர். அப்பொழுதுதான் அவன் கிருஷ்ணன் பிறந்துவிட்டதாக ஸ்வப்னம் கண்டு விழித்துக் கொண்டான். இச்செய்தி செவியிற் கொண்டவளவில், “ ஆ! அப்படியா! இதோ வந்தேன் ! வந்தேன் !” என்று கூறிக்கொண்டு எழுந்து ஓடிவந்து சிறைச்சாலையிற் பிரவேசித்துப் பார்த்துத் தேவகியினிடம் குழந்தையைக் கொடுக்கும்படி கேட்டான். தேவகி அந்தக் குழந்தையைக் கொல்லவேண்டாமென்று எவ்வளவோ தூரம் சொல்லிப் பார்த்தாள். அவன் கேட்கவில்லை. பிடிவாதமாய்க் குழந்தையை அவள் கரத்திலிருந்து பிடுங்கி ஒருபாறைமேல் எறிந்து கொல்லப்பார்த்தான். அப்பொழுது அந்தக் குழந்தை அவன் கையிலிருந்து கிளம்பி உயரப்போய், காளிதேவியின் உருவங்கொண்டு நின்று அவனைப்பார்த்து, “அடே பாவி, என்னைக் கொல்வதால் உனக்கென்ன லாபம்? உனக்கு யமனாக இருப்பவன் வேறோரிடத்தில் வளருகிறான். குழந்தைகளை வீணே கொல்லாதே” என்று கூறிவிட்டு மறைந்தது.
என்ன செய்வான் கம்ஸன்! “ஐயோ, வீணே தங்கையி னுடைய குழந்தைகளை யெல்லாம் கொன்றேனே, மூடன் ” என்றெண்ணித் தங்கையினிடம் இரக்கங்கொண்டு சிறைச்சாலைக்குட் போய் வஸுதேவரையும் தேவகியையும் கண்டு தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு அவர்களைச் சிறைச்சாலையிலிருந்து விடுவித்தான். வஸு தேவரும் தேவகியும் கம்ஸனுக்குப் பல நியாயங்கள் கூறிச் சமாதானப்படுத்திவிட்டுத் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்.
அப்பால் மறுநாள் பொழுது விடிந்ததும், கம்ஸன் தன் மந்திரி பிரதானிகளுடனிருந்து ஆலோசனை செய்து, பூதனை யென்கிற ராக்ஷஸியை வருவித்து, எந்தக் குழந்தை பலமும் திடமுமுடையதாய்க் காணப்படுகிறதோ அதை எப்படியாவது கொன்றுவிடும்படிக் கட்டளை யிட்டான்.
– தொடரும்..
– ஸ்ரீமத் பாகவத ஸாரம் (நாவல்), முதல் பதிப்பு: 1945, விவேக போதினி ஆபீஸ், சென்னை.