ஸ்ரீமத் பாகவத ஸாரம்






(1945ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20
பதினோராம் அத்தியாயம்
வேனன் சரித்திரம்

துருவனுக்கு அநேகம் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுள் உத்கவன் என்பவன் ஒருவன்; அவன் பிறவியிலேயே ஞானியாக விளங்கினான். ஆகையினால் அவன் ஒன்றிலும் பற்றில்லாதவன யிருந்து முடிவில் பரமபதமடைந்தான். துருவனுடைய மற்றப் பிள்ளைகளின் வம்சத்தில் அங்கன் என்பவனொருவனிருந்தான். அவனுக்கு வேனன் என்பவன் பிறந்தான். வேனன் மகா கொடியவனா யிருந்தான். அவனிடம் அசுரசுபாவம் குடிகொண்டிருந்தது. தந்தை அங்கன் அவனை நல்வழியில் திருப்ப எவ்வளவோ வழியில் முயன்றான்; ஒன்றும் பயன்படவில்லை, ஆகையினால் அவன் உலகவாழ்க்கையை வெறுத்து வனம் சென்றான்.
அங்கன் இவ்வாறு செல்லவே அநேக முனிவர்கள் வந்து வேனனிடம் ராஜ்யத்தை ஒப்பித்து நல்ல புத்திமதி சொல்லிவிட்டுப் போனார்கள். வேனன் ராஜ்யத்தை அடைந்ததும், பின்னும் இறுமாப்புக் கொண்டு, நல்ல காரியங்களுக்கெல்லாம் விரோதியாக விளங்கினான்; ரிஷிகளுடைய யாகங்கள் முதலிய ஸத்காரியங்களைத் தடுத்தான். அதனால் ரிஷிகள் கோபங் கொண்டார்கள். ஆயினும் முதலில் அவனைக் கண்டு எவ்வளவோ நல்ல வார்த்தை சொல்லிப் பார்த்தார்கள். அவன் அவர்கள் பேச்சைக் கேளாமல் தன் போக்கிலேயே நின்றான். ஆகையினால் அவர்கள் அவனைச் சபித்துக் கொன்றார்கள். பிறகு உலகம் அரசனில்லாமல் அழிவதா யிருந்தது.அதனால் அவர்கள் வேனனுடைய தொடையைக் கடைந்தார்கள். அதிலிருந்து கரிய உருவங்கொண்ட மிகக் குள்ளமான ஒரு புருஷன் உண்டானான். அவன் அரசாள அருகனல்லன் என்று வேனனுடைய கைகளைக் கடைந்தார்கள். அதிலிருந்து ஓர் அழகிய பெண்ணும் பிள்ளையும் உண்டாயினர்.
அவர்களில் ஆண்குழந்தைக்குப் பிருது என்றும், பெண் குழந்தைக்கு அர்ச்சி என்றும் பெயரிட்டனர். பிருது பெரியவனானதும், ரிஷிகள் ராஜ்யத்தை ஒப்பித்தனர். பிருது சக்கரவர்த்தி நெறி தவறாமல் ராஜ்யத்தை ஆண்டு வந்தமையால், அவன் காலத்தில் பூமி செழிப்படைந்து எல்லாவித மேன்மையும் அடைந்திருந்தது. ரிஷிகள் எல்லோரும் கவலையின்றி வேதாத்யயனம் செய்துவந்தனர். பிதிர்கள் சந்தோஷமடைந்திருந்தனர். சகல ஸத்கர்மங் களும் சிறப்புற்றோங்கின.
பிருது சக்கரவர்த்தி நூறு அசுவமேத யாகங்கள் செய்து தேவேந்திரனுக்குச் சமானமாவதற்கு முயன்றான். அந்த யாகங்கள் நிறைவேற வொட்டாமல் இந்திரன் அடிக்கடித் தடுத்துவந்தான். ஆகையினால் அரசன் இந்திரனை யாகத்தில் கொல்ல யத்தனித்தான். அப்பொழுது பரம்பொருளாகிய யக்ஞபுருஷர் தோன்றி, ‘யாகத்தில் யாகப் பசுவையல்லது வேறொன்றையும் கொல்வது கூடாது’ என்று கூறித் தடுத்து, ‘அரசனே, இந்திர னுக்கும் உனக்கும் பேதம் இல்லை. நீ தொண்ணூற் றொன்பது அசுவமேதம் செய்து நிறுத்திவிடு. அப்படி யிருப்பினும் நீ இந்திரனைவிட மேலானவனே ஆவாய். நீ நூறாவது யாகம் செய்வதுகூடாது. அதை நீ செய்தாலும் அதை முடிக்க உன்னால் முடியாது” என்று கூறினார். பிறகு இந்திரனும் பிருதுவும் மனவமைதி அடைந்தனர். பகவான் பிருதுவுக்கு நல்ல வரங்களைக் கொடுத்துச் சென்றார்.
அப்பால் பிருது சக்கரவர்த்தி யாகசாலையில் தம் பிரஜைகளை நோக்கி, தெய்வம் உண்டு என்பதையும், தெய்வ பக்தியையும், தெய்வபக்தர்களுடைய மகிமையையும் பற்றி விஸ்தாரமாகப் பேசிக்கொண்டிருந்தான். ஸநகாதி யோகிகள் (பிரம்மாவினுடைய மான்ஸ புத்திரர்கள்) அங்கே தற்செயலாய் வந்துசேர்ந்தனர். அவர்கள் தங்களை வணங்கி வினவிய பிருகு சக்கரவர்த்தியை நோக்கி, “பகவத் பக்தியே எல்லாவற்றையும்விட மோக்ஷம் அடைவதற்கு அநுகூலமானது; அதை விடுவது கூடாது” என்று கூறிச் சென்றார்.
பிருது சக்கரவர்த்தி அவ்வாறே பகவானிடம் குறைவற்ற பக்தி செலுத்திவந்தான். அவனுக்கு ஐந்து பிள்ளைகள். விதாசுவன் என்பது அவனுடைய முதற் பிள்ளையின் பெயர். பிருது அவனிடம் ராஜ்யத்தை ஒப்பித்துவிட்டு வனம் சென்றான். அவன் மனைவி அர்ச்சி என்பவளும் அவனுடன் கூடவே சென்றாள். கொஞ்ச நாளில் அவர்கள் பரமபதம் அடைந்தனர்.
பிறகு விசியாசுவன் ராஜ்யத்தைத் தன் தம்பிமார் நால்வருக்கும் நான்கு பாகமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டு ஆத்மநிஷ்டை பழகிப் பரமபதம் அடைந்தான். அவனுக்குப் பின் அவனுடைய பேரன் பகிர்தசன் என்பவன் பிரதான அரசனானான். அவன் யாகம் செய்வதில் அதிக விருப்பங் கொண்டு இடைவிடாமல் யாகம் செய்துவந்தான். ஆகையினால் அவனுக்குப் பிராசீனபர்ஹிஸ் என்று பெயர் வந்தது. அவன் நாரதரிடம் ஞானோபதேசம் பெற்று முடிவில் பரம்பொருளை அடைந்தான்.
பிராசீனபர்ஹிஸுக்குப் பத்துப் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் பிரசேதசுக்கள் என்று பெயர் பெற்றனர். அவர்கள் கொஞ்சகாலம் அரசாண்டார்கள். அப்பால் அவர்கள் நாரதரால் ஞானோபதேசம் அடைந்து ஹரியின் குணங்களைக் கேட்டுக்கொண்டே எளிதில் பரமபதம் அடைந்தனர். அப்பால் அவர்களுக்குப் பிள்ளை யாகப் பிறந்த தக்ஷன் ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டான்” என்று மைத்திரேயர் கூறினார்.
பிறகு விதுரர் அவரை வணங்கி விடைகொண்டு தம் உறவினரைக் காண ஹஸ்தினாபுரம் நோக்கிப் புறப்பட்டார்.
பன்னிரண்டாம் அத்தியாயம்
பிரியவிரதன், ரிஷபதேவர்களின் கதை
மநு தம்முடைய மூத்த பிள்ளையாகிய பிரியவிரத னிடம் அரசை ஒப்பித்தார். பிரியவிரதன் ஆதியில் நாரதரிடம் உபதேசம் பெற்றிருந்தான். அதனால் அவன் அரசை விரும்பாதவனாய் வனம் போய்த் தவம் புரிவதாகத் தீர்மானித்தான். இதனை அறிந்து பிரம்மதேவர், ‘இவன் கொண்டுள்ள எண்ணம் பிரபஞ்ச சிருஷ்டி விருத்தி யாவதற்குத் தடையா யிருக்கிறதே! இதனை மாற்ற வேண்டும்’ என்று கருதி ஸத்திய லோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்து பிரியவிரதனைக் கண்டார். பிரிய விரதன் பிரம்மாவைக் கண்டதும் வணங்கி முறைப்படி பூசித்துத் துதித்தான். அதனால் பிரம்மதேவர் சந்தோஷ மடைந்து பிரியவிரதனை நோக்கி, “நானும் நீயும் உன்னுடைய தந்தையான மநுவும் தேவரிஷியான நாரதனும் எல்லோரும் கடவுளுடைய ஆணைப்படியே நடந்துவருகிறோம். அவருடைய ஆணையைக் கடப்பதற்கு ஒருவராலும் முடியாது. ஜனனம், மரணம், சோகம், மோகம், சுகம், துக்கம் இவற்றை அநுபவிக்கும் பொருட்டும், எப்பொழுதும் பயமில்லா முக்தியை அடையும் பொருட்டும், செய்வதற்கு உரிய கருமத்தைச் செய்யும் பொருட்டும் பகவான் இந்தத் தேகத்தைக் கொடுத்திருக்கி றார். மூக்கணங் கயிற்றினால் கட்டுண்ட எருது, எப்படி மாடோட்டிக்குக் கட்டுப்பட்டிருக்கிறதோ அப்படியே நாம் கடவுளுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டிருக்கிறோம். தேவர், மனிதர், மிருகம், பறவை முதலிய உயிர்களுக்கு, இறைவர் கர்மத்துக்கு ஏற்றவாறு சரீரங்களைக் கொடுக்கிறார். அப்படிப்பட்ட சரீரத்தைப் பெற்ற நாம், கண் இல்லாதவன் கண் இருக்கிறவனைப் பின்பற்றி ஓரிடத்தை அடைவதுபோல் பரதந்திரரா யிருந்துகொண்டு சுகதுக்கங்களை அடைகிறோம். ஆத்மஞானிகூடக் கர்மா நுபவம் இருக்கிறவரையில் அதன் பயனை அநுபவித்து, தூங்கியெழுந்து தெளிந்தவுடன் கனவில் கண்ட தேகத்தில் அபிமானம் அற்றிருப்பதுபோல் தன் தேகத்தில் அபிமானம் அற்றிருப்பான். அந்தத் தேகத்தை மீண்டும் எடுக்கும் படியான கர்மங்களைப் பண்ணமாட்டான். மனத்தை அடக்காதவன் எங்கேயிருந்தாலும் அவனை ஜனன மரண மென்கிற ஸம்ஸாரம் விடாது. மனோநிரோதமுடையவன் கிருகஸ்தாசிரமத்தில், அதாவது ஸம்ஸார மத்தியில் இருந்தாலும், அவனுக்கு அது ராகத்துவேஷாதி தோஷத்தை உண்டாக்க மாட்டாது.காமக்குரோதங்களை ஐயித்தவன் எந்த ஆசிரமத்திலும் இருக்கலாம். நீ பகவா னுடைய பாதாரவிந்தங்களையே துணையாகக் கொண்டு காமக்குரோதங்களை ஜயித்துவிட்டாய். ஆகையினால் நீ இந்தக் கிருகஸ்தாசிரமத்திலே கொஞ்சகாலம் இருந்து சுகங்களை அனுபவித்துவிட்டுப் பிறகு வைராக்கியத்தை அடையலாம் ” என்றார்.
பிறகு பிரியவிரதன் பிரம்மதேவரை வணங்கி, “தங்க ளது ஆணைப்படியே நடக்கிறேன் ” என்று கூறி அரசை ஒப்புக்கொண்டான். அப்பால் பெரிகிஷ்மதி யென்கிற பெண்ணை விவாகம் செய்துகொண்டு நெடுங்காலம் அரசு புரிந்தான். அவனுக்குப் பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் மூன்று பேர் இளமை முதற்கொண்டு வேதாந்த வித்தையை அப்பியாசம் செய்துவந்து பரமஹம்ஸர்க ளுடைய ஆசிரமமான ஸந்நியாஸம் அடைந்தார்கள். பின்னர் அவர்கள் எளிதில் பரமபதம் அடைந்தார்கள்.
இந்தப் பிரியவிரதனுக்கு இரண்டாம் மனைவியினிடம் மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அவன் பூமியைப் பதினொரு கோடி வருஷம் ஆட்சிபுரிந்தான். அவன் பகவத் உபாசனையிலே விருத்தியடைந்து எல்லோரும் அதிசயிக்கத் தக்க புகழை அடைந்தான். பூமியில் ஜம்பு, பிலட்சம், சான்மலி, குசம், கிரௌஞ்சகம், சாகரம், புஷ்கரம் என்னும் பெயர்கொண்ட ஏழு தீவுகள் அவன் காலத்திலே தான் உண்டாயின. பிரியவிரதன் தன்னுடைய ஏழு பிள்ளைகளையும் அந்த ஏழு தீவுகளுக்கும் அதிபதி யாக்கினான். அவனுக்கு ஊர்ச்சஸ்வதியென்றொரு பெண் இருந்தாள். அவன் அப்பெண்ணைச் சுக்கிராச்சாரியர் என்பவருக்குக் கொடுத்தான்.
இவ்வாறு செய்தபின் பிரியவிரதன், தன் மனைவியை யும் சம்பத்து முதலியவற்றையும் விட்டுவிட்டுப் பகவா னுடைய சீலங்களை அனுபவிப்பதில் ஆசைகொண்டு முன் நாரதர் உபதேசித்தபடி அத்யாத்ம மார்க்கத்தையே மீண்டும் அடைந்து கடைசியில் பரமபதம் பெற்றான்.
பிரியவிரதனுடைய பிள்ளைகளில் அக்னிதரன் என்பவன் ஜம்புத்தீவைப் பரிபாலித்து வந்தான். அவன் தர்ம சிந்தையுடையவனா யிருந்தான். ஒருநாள் தவம்புரியும் சித்தங்கொண்டு மந்தபர்வதக் குகைக்குச் சென்று அங்கிருந்து பகவானை நோக்கித் தவமிருந்தான். அவ னுடைய தவத்தைக் கலைக்க எண்ணி இந்திரன் பூர்வசித்தி என்னும் அப்ஸர ஸ்திரீயை அனுப்பினான். அவள் அக்னிதரன் தவம் செய்யும் குகைக்கு வந்து ஆடல் பாடல் களினாலே அவனுடைய தவத்தைக் கலைத்தாள். அவன் அவளிடம் ஈடுபட்டு அவளைப் பலவாறாகப் புகழ்ந்தான். அந்த வாக்குச் சாதுரியத்தில் ஈடுபட்ட அவள் அவனுக்கு இணங்கி அவனோடு ஐம்புத்தீவிலேயே சிலகாலம் இருந்தாள். அவனுக்கு அவளிடம் நாபி, கிம்புருஷன், அரி, இளாவிரதன், இரம்மியகன், இரண்மயன், குரு, பத்திராவசு, கேதுமாலன் என்னும் பெயர்கொண்ட ஒன்பது பிள்ளைகள் பிறந்தார்கள். பிறகு பூர்வசித்தி அந்த அக்னிமித்திரனையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு இந்திரலோகம் போய்ச்சேர்ந்தாள். அவள் இவ்வாறு பிரிந்த பின்னும், அவள் நினைப்பாகவே இருந்தபடியினால் அக்னிமித்திரன் முடிவில் பிதிர்லோகம் அடைந்தான்.
இவ்வாறு அக்ளிமித்திரன் பிதிர்லோகம் அடைந்த பிறகு, நாபி முதலிய அவருடைய புத்திரர்களும் மேருவின் பெண்களான ஒன்பது பேரை மணந்துகொண்டார்கள். அவர்களுள் நாபி யென்பவன் புத்திரனை வேண்டிச் சிறந்த வேள்விகளைச் செய்தான். அவனுடைய பக்தியினால் மகிழ்ச்சி அடைந்த பகவான் அவனுக்குத் தீவ்ய மங்கள சொரூப தரிசனம் தந்தார். பக்தர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்கிற இச்சையுடையவராகிய பகவானைக் கண்டதும், நாபி டலகோடி நமஸ்காரம் செய்து துதித்து, “அகிலேசா, தங்களைப்போன்ற ஒரு புத் திரனை எனக்கு அளித்தருளவேண்டும்” என்று கேட்டான். பகவான், “எனக்குச் சமானமானவன் ஒருவனுமில்லை. ஆனதனாலே நானே அமசாவதாரமாய் அவதரிக்கின்றேன்” என்று வரம் தந்து மறைந்தார். அப்பால் பகவான் அவனுக்குப் புத்திரராகப் பிறந்து ரிஷபர் என்ற பெயரோடு விளங்கினார்.
இவ்வாறிருக்கையில் ஒருசமயம் இந்திரன் நாபியினுடைய அரசில் பொறாமைகொண்டு மழை பொழிவிக்காமல் இருந்தான். ரிஷபதேவர் தமது மகிமையினால் மழை பொழியும்படிச் செய்தார். ரிஷபதேவர் அரசு புரியத்தக்க வயதை அடைந்ததும். நாபி அவரிடம் தமது அரசை ஒப்பித்துவிட்டுப் பதரிகாசிரமம்போய் நரநாராயணர்களைக் குறித்துத் தவம் புரிந்துகொண்டிருந்து முடிவில் பரமபதம் அடைந்தான்.
அப்பால் ரிஷபதேவர், இந்திரன் மனமுவந்து அளித்த ஐயந்தி யென்கிற பெண்ணை விவாகம் செய்துகொண்டு இல்லறம் நடத்திவந்தார். அவர் பரதர் முதலிய நூறு புதல்வர்களைப் பெற்றார். பரதர் நற்குணசீலராய் விளங்கினார். அவருக்குப்பின் பிறந்த ஒன்பதுபேர் மற்றவர் களுக்குள் சிரேஷ்டர்களாக விளங்கினார்கள். அவர்களுக் குப்பின் உதித்த ஒன்பது பிள்ளைகளும் சிறந்த பக்தர் களாய்ப் பாகவத சாஸ்திரத்தையும் பகவத் தர்மத்தையும் கரைகண்டவர்க ளானார்கள். மற்ற எண்பத்தொன்பது பேர்களும் தந்தையினுடைய ஆணைப்படி நடந்துவருகிறவர் களாய் இருந்தார்கள்; உத்தமசீலர்களாயும் வணக்கமுடையவர்களாயும் விளங்கினார்கள். ரிஷபதேவர் ஈசுவராம்சமாய் உதித்தவரானாலும் பரதந்திரனைப்போல் தர்மங்களை அனுஷ்டித்து வந்ததுமன்றிப் பிறரும் தம்மை அநுசரித்து வரும்படி அரசுபுரிந்துவந்தார் ; எல்லோரிட மும் தயையுடையவரா யிருந்தார். அவர் இவ்வாறு தரும குணசீலராய் விளங்கியபடியினால், அவருடைய அரசாட்சியில் ஜனங்கள் தமக்கில்லையென்று ஒரு வஸ்துவை ஒருவ ரிடத்திலேயும் இச்சித்ததும் இல்லை ; கேட்டதும் இல்லை.
ரிஷபதேவர் ஒரு சமயம் பூஸஞ்சாரஞ் செய்து கொண்டு பிரம்மாவர்த்தம் என்ற க்ஷேத்திரம் போனார். அங்கே பிரம்மரிஷி சிரேஷ்டர்களுடைய சபையிலே தம் பிள்ளைகளில் சிலரிருக்கக் கண்டார், அவர்களுக்கு அங்கே ஆத்ம வித்தை, தேகத்தின் ஸ்வரூபம், ஸந்நியாஸிகளின் லட்சணம், பக்தியின் ஸ்வரூபம், பிராம்மணர்களின் மேன்மை முதலிய விஷயங்களைப் பற்றி விஸ்தாரமாக விளக்கியருளினார்.
பிறகு அங்கிருந்து தமது ராஜ்யத்திற்கு வந்து, தம்முடைய பிள்ளைகளுக்குள் சிறந்தவராயும் பரம பாகவதராயும் பாகவதர்களையே கதியாக உடையவராயும் இருக்கிற பரதரிடம் தமது அரசை ஒப்பித்துவிட்டுத் தாம் அவதூத விரதம் பூண்டு லோக சஞ்சாரம் செய்யத் தொடங்கினார்.
இப்படி வெளியிற் புறப்பட்ட ரிஷபதேவர், பித்தனைப் போலவும், குழந்தையைப் போலவும், அந்தகனைப் போலவும், ஊமையைப் போலவும், செவிடனைப் போலவும் முடனைப் போலவும் காணப்பட்டார்; பிசாசுபோல் திரிந்தார்; மௌனவிரதம் பூண்டு ஒருவரோடும் பேசாமலே இருந்தார். அவர் செல்லும் பட்டணங்கள், வனங்கள், ஆசிரமங்கள், நதிப்பிரதேசங்கள், சேரிகள், ஜன சமூகங்கள், மலைகள் முதலிய இடங்களில் துஷ்டர்கள் அடிப்பார்கள் ; சிறு நீரை (மூத்திரத்தை) விடுவார்கள், காறி உமிழ்வார்கள்; கல்லைவிட்டு எறிவார்கள்; மண்ணை யும் தூசியையும் தூளியையும் வாரி இறைப்பார்கள்; கெட்ட வார்த்தைகள் பேசி இகழ்வார்கள். இவைகளை யெல்லாம் ரிஷபதேவர் பொருட்படுத்த மாட்டார்; அகங்கார மமகாரங்களை விட்டுத் தேகமெல்லாம் புழுதி படிய அலைவார். இப்படி உலக நன்மையின் பொருட்டு நானாவிதமான யோகாதிகளைச் செய்துகொண்டு எப்போதும் பரமானந்தானுபவத்தை உடையவராயிருந் தார். அவர் தம்மைப் பரமாத்மாவுடனே அபேதமாய்ப் பார்த்துக்கொண்டு தேகார்த்தமான வியாபாரத்திலிருந்து ஒழிவடைந்தார். குயவனுடைய சக்கரம்போல் சதா காலமும் பூமியெங்கும் சுற்றிக்கொண் டிருந்தார். அப்படி யிருந்தும் அவர் ஒரு சமயம் குடகாசலம் என்கிற பர்வதத்திற்கருகே வாயில் கல்லைக் கவ்விக்கொண்டு தலைவிரி கோலமாய்ச் சஞ்சரித்துக்கொண் டிருந்தார். மலைப் பிரதேசமான அவ்விடத்தில் மூங்கில் புதரில் தீப்பற்றி எரிந்தது. அந்தத் தீயில் அவர்போய் நுழைந்து சரீரத்தை ஒழித்தார்.
பதின்மூன்றாம் அத்தியாயம்
ஜடபரதர் கதை
பரதர் ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டது முதல், முறை தவறாமல் ராஜ்ய பரிபாலனம் செய்துவந்தார். அவர் ராஜ்ய பரிபாலனம் செய்துவந்த மகிமையினாலே அவர் அரசுபுரிந்த ராஜ்யத்திற்குப் பாரத வருஷம் அல்லது பரதகண்டம் என்னும் பெயர் உண்டாயது. விசுவரூபர் என்பவருடைய பெண்ணை அவர் விவாகம் செய்துகொண்டார். அவளுக்குப் பாஞ்சஜன்யை என்று பெயர். அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். ஸர்வக்ஞரான பரதர் பிதிர் பிதாமகரான ரிஷிபதேவர் அக்னிமித்திரர் இவர்களைப்போல் ஸ்வதர்மத்தைச் செய்து வந்தார்; யக்ஞ புருஷனான பகவானை வேள்விகளாலே சாஸ்திரோக்தமாக ஆராதித்துவந்தார். அதனால் ஏற்பட்ட புண்ணியத்தை யெல்லாம் பகவானாகிய வாசுதேவருக்கு அர்ப்பணம் செய்து ஆத்மநிஷ்டையினால் எல்லாவிதமான அகக்குற்றங்களையும் போக்கடித்தார். அவருக்கு நாடோறும் பகவானிடத்தில் பக்தி விருத்தியாகிக்கொண்டே வந்தது. பிறகு அவர் தம்முடைய அரசைப் பிள்ளைகளிடம் ஒப்பித்துத் தவஞ்செய்யும்பொருட்டு வனத்தை நோக்கிச் சென்று புலகர் என்கிற மகரிஷியினுடைய ஆசிரமம் போய்ச்சேர்ந்தார். அந்த ஆசிரமத்தினருகே ஓடிய கண்டகீ நதியில் நாடோறும் நீராடி, துளஸி, ஜலம், கந்தமூல பலங்கள் முதலியவைகளால் பகவானை ஆராதித்து வந்தார். எப்போதும் பகவத் ஆராதன கைங்கரியத்தை உடையவராய்ப் பகவானுடைய பாதாரவிந்தத்தை மறவா மல் உலகத்திலுள்ள சராசரங்களிலெல்லாம் பகவானே விளங்குவதாகப் பாவித்து நிஷ்டை செய்துவந்தார்.
இப்படிப்பட்ட பரதர் வழக்கம்போல் ஒருநாள் கண்டகீ நதியில் ஸ்நானம் செய்து பிரணவத்தைத் தியானம் செய்துகொண்டு அந்நதிக்கரையில் ஒரு யாமம் வரை இருந்தார். அப்பொழுது ஒரு பெண்மான் அங்கேவந்து நதியில் நீர் அருந்தியது. அருந்துகையில் பயங்கரமான ஸிம்ம கர்ஜனை யொன்று கேட்டது. அதனால் பயமடைந்த மானானது திடுக்கிட்டுத் துள்ளிக் குதித்து அக்கரையிற் போய் விழுந்தது. மான் சூல்கொண்டிருந்தமையினால் அதன் வயிற்றிலிருந்த குட்டி நழுவி ஆற்றில் விழுந்தது. அதைக்கண்ட பரதர் இரக்கங்கொண்டு நதியில் இறங்கி அந்தக் குட்டியை எடுத்துக்கொண்டு வந்து ஆசிரமத்தில் வளர்த்துவந்தார். வரவர அதனிடத்தில் அவருக்கு அபிமானம் அதிகரித்தது. அதனால் அவர் படுக்கும்போதும் நடக்கும்போதும் நீராடும்போதும் உண்ணும்போதும் தம்முடைய பக்கத்திலேயே அந்த மானை வைத்துக்கொண் டிருந்தார். தர்ப்பை, புஷ்பம், சமித்து, பலாசம், கந்தமூல பலங்கள் இவைகளைச் சேகரிக்கப் போகும்போது மானும் கூடவே செல்லும். அப்போது நாய், நரிகள் முதலியன மானுக்கு ஏதேனும் தீங்கு செய்யப்போகின்றனவே என்று அவருக்குக் கவலையுண்டாகும். மான்குட்டி அருகே யிருந்தால் கவலையில்லாமல் ஜபஞ்செய்வார். இல்லா விட்டால் ஜபத்திலே கவனமில்லாமல் இருப்பார். அடிக்கடி மான்குட்டியைத் தடவிக்கொடுத்து அதற்கு ஆசீர்வாதம் செய்வார். வரவர அந்த மானைப் போஷிப்பதிலேயே மிகுந்த அபிமானமுடையவ ரானார். இதனால் அவர் தவம் முதலியன தடைப்பட்டன.
இப்படியிருக்கையில் அந்த மான்குட்டி எங்கேயோ போய்விட்டது. வெகுநேரம் வரையில் அது வரவில்லை. அதனால் பரதர் துக்கமும் கவலையும் கொண்டு எப்போதும் அதனையே சிந்தித்துக்கொண்டிருந்தார். என்ன செய்வார் பாவம்! அதனிடம் வைத்த அபிமானத்தை அவரால் மறக்கக்கூடவில்லை. அந்த நிலையில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு மரணகாலம் சம்பித்தது. அந்தச் சமயத்திலும் அவருக்கு அந்த மான்குட்டியிலிடத்தில் அபிமானம் நீங்கவில்லை. அந்தச் சிந்தனையுடனேயே அவர் மரணமடைந்தார். அதனால் அவருக்கு மான் ஜன்மம் உண்டாயிற்று.
மிருக ஜன்மமடைந்த அவருக்குப் பூர்வஜன்ம ஞானம் இருந்தமையினால், அவர் தாம் மானிடத்திலே இரக்கங் கொண்டு அதை எடுத்து வளர்த்துவந்ததையும், வரவர அதனிடம் அபிமானங்கொண்டமையும், அந்த அபிமானத் தின் காரணமாகத் தமது தவநிலையினின்று நழுவியதையும் எண்ணி வருந்தினார். மான் கூட்டத்திற் சேர்ந்தால் தமக்கு மிருக சுபாவம் மிகுமென்று அஞ்சிய அவர், முன் தாம் இருந்துவந்த புல்லாசிரமம் போய் உலர்ந்த புல் காய் கிழங்கு முதலியவைகளைத் தின்றுகொண்டு பகவத் தியானத்திலேயே காலங்கழித்து வந்தார். இப்படியிருந்த பிறகு மரணகாலம் வந்து மிருக சரீரத்தை ஒழித்தார்.
இவ்வாறு மிருகப் பிறவியை ஒழித்த பரதர், ஆங்கிரஸ கோத்திரத்தில் ஆத்மஞானியாயிருந்த ஒரு பிராம்மணருக்கு அவருடைய இரண்டாம் மனைவியினிடம் புத்திரராகப் பிறந்தார். அவருக்கு இந்தப் பிறவியிலும் பூர்வஜன்ம ஞாபகம் இருந்தது. அதனால் அவர் இந்த ஜன்மத்தினின்றும் ஒழிவடைய வேண்டுமென்கிற எண்ணங்கொண்டு பைத்தியக்காரனைப் போல் இருந்தார். அதனால் அவரை எல்லோரும் ஜடபரதர் என்ற பெயரிட்டு அழைத்தனர்.
இப்படியிருக்கையில் அவருடைய தந்தையார் இறந் தார். அப்பொழுது அவருடைய தாயும் மரணமடைந்தாள். ஆகவே ஜடபரதர் தம்முடைய மூத்த தாயினிடம் இருந்துவர நேர்ந்தது. அவளுக்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் ஒன்பது பேரும் நல்ல சாமர்த்திய சாலிகள். ஆகையினால் அவர்கள் ஜடபரதரைக் கழனிகளிலே வேலை செய்யும்படி செய்தனர். ஆனால் அவருக்கு நல்ல உணவு கிடைப்பதில்லை. உணவு அற்பமாய் இருந்தாலும் பலமாயிருந்தாலும் அதனைத் திருப்தியோடு புசிப்பார். வாசனை சுவை ஒன்றும் பார்ப்பதில்லை. மான அவமானங்களைக் கவனிப்பதில்லை. சுகதுக்கங்களையும் சிந்திப்பதில்லை. இடையில் அழுக்காடையையே உடுத்திருப்பார்.
ஜடபரதர் இப்படி இருந்துவருகையில், காளி கோவிலுக்கு நரபலி செலுத்துவதாக வேண்டிக்கொண்ட ஓர் அரசன், பலியிடுவதற்கேற்ற ஒருவனைக் கொண்டு வரும்படி சில ஏவலாளர்களை அனுப்பியிருந்தான். ஏவலாளர்கள் பல இடங்களிலும் தேடிக்கொண்டிருந் தார்கள். அவர்கள் ஒரு நாள் இரவு ஜடபரதரிடம் வந்தார்கள். ஜடபரதர் அப்பொழுது வயலின் நடுவே ஒரு பரண்மீது உட்கார்ந்து தெய்வத்தியானம் செய்துகொண் டிருந்தா ராதலால், தம்மை மறந்து ஒரு பதுமைபோல் இருந்தார். அவரைக் கண்டதும் அவர்கள், ‘இவன்தான் பலிக்கேற்றவன்’ என்றெண்ணி ஜடபரதரைப் பிடித்துக் கட்டித் தூக்கிக்கொண்டுபோய்த் தங்கள் அரசனிடம் விட்டார்கள். அரசன் அவரைக் காளி கோவிலுக்குக் கொண்டுபோகும்படி ஆணையிட்டுத் தன் பிரார்த்தனையைச் செலுத்த அவனும் அங்கே சென்றான்.
காளிதேவியின் ஸந்நிதியில் ஜடபரதருக்கு எண்ணெ யிட்டு முழுக்காட்டி மண்டிபோட்டு உட்காரவைத்துத் தலையைக் குனிந்துகொண்டிருக்கும்படிச் செய்து அரசன் தேவியைத் துதித்தான். கொலையாளி அவரை வெட்டு வதற்குக் கத்தியைத் தூக்கிக்கொண்டு, எப்பொழுது தன் யஜமானனுடைய உத்தரவு பிறக்குமென்று காத்துக் கொண்டிருந்தான்.
ஜடபரதர் பிரம்மஞானம் கைவரப்பெற்றவர்; ஆகையினால் அவருடைய தவக்கனல் அந்தத் தேவியைத் தகிக்கத் தொடங்கியது. காளிதேவி அதனைப் பொறுக்க முடியாமல் பெருங்கோபத்துடன் விக்கிரகத்தை விட்டு வெளிப்பட்டு, “ஆகா! மகா பரிசுத்தமுடைய இந்த ஆத்மாவையா பலியிடத் துணிந்தீர்கள்?” என்று ஆரவாரித்து, அந்த அரசனையும் அவர்களைச் சேர்ந்த ஏவலாளர்களையும், அவர்கள் கொண்டுவந்த கத்தியி னாலேயே கொன்றுவிட்டுக் கோபம் தணிந்து விக்கிரகத்தி னுள் மறைந்தாள்.
பகவானுடைய பக்தர்களுக்குத் தீங்குசெய்ய எவன் நினைக்கிறானோ அவனுக்கே அத்தீங்கு உண்டாகும். சிறந்த பக்தர்களுக்கு எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் பயம் உண்டாகாது. அவர்களை எப்போதும் எங்கும் நிறைந்த பகவான் கைவிடாமல் காப்பாற்றுவார்.
இவ்வாறு உயிர் தப்பிய ஜடபரதர் அங்கிருந்து புறப்பட்டுப் பல இடங்களிற் சஞ்சரித்துக்கொண் டிருந்தார். அப்படிச் செல்லும் அவர் ஒரு சமயம் இட்சுமரீ என்கிற நதியின் அருகே போய்க்கொண்டிருந்தார். அவர் இப்படியிருக்கையில், ஸிந்து ஸௌவீரதேச அரசன் கபில முனிவருடைய ஆசிரமம் போகப் புறப்பட்டான். அப்பொழுது அவனுடைய பல்லக்கைச் சுமக்க ஓர் ஆள் தேவையாயிருந்தது. எவனையேனும் தேடி அழைத்துக் கொண்டு வரவெண்ணிப் புறப்பட்டுவந்த அவனுடைய ஏவலாளர்கள், ஜடபரதரை நதிக்கரையில் கண்டனர்; கண்டதும், ” இவன் கொழுத்துப் போதுமான பலமுடையவனா யிருக்கிறபடியால் இவனே பல்லக்கைச் சுமக்கத் தகுதியானவன்” என்று கருதி அவரைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய்ப் பல்லக்கைச் சுமக்கும்படி வைத்தார்கள்.
அரசனுடைய பல்லக்குப் போய்க்கொண்டிருக்கிறது. பிரம்மஞானிகள், கீழே ஊர்ந்துபோகும் பிராணிகளின் மீது கால்வைத்து அவற்றிற்குத் தொந்தரவுண்டாக்குவது கூடாதென்று கருணைகொண்டு, தூர தூர, அதாவது இரண்டு அம்பு அளவு தூரம் காலெடுத்து நடப்பார்கள். அவ்வாறே ஜடபரதரும் நடந்தார். இதனால் மற்றவர் களுடைய நடைக்கும் இவருடைய நடைக்கும் வேறுபாடு ஏற்பட்டுப் பல்லக்கு அசைந்தது. அதுகண்ட அரசன் சினங்கொண்டு ஜடபரதரை நோக்கி, “என்னடா இது? நீ உயிரோடிருக்கிறாயா அல்லது இறந்து பிணமாய் விட்டாயா? என்னுடைய ஆணை கடந்து நடப்பதேன்? மற்றவர்களை ஏன் நீ அநுஸரிக்கவில்லை? உன் உடம்பு இருக்கிறதைக் கவனித்தால் நீ பல்லக்குச் சுமக்கப் பலமில்லாதவனாகத் தெரியவில்லையே ! உனக்கென்ன கேடு?” என்று கூறி அதட்டினான்.
ஜடபரதர் உடனே தம் வாய்திறந்து, “வேந்தே, தேகத்தில் அபிமானத்தை வைக்காமல் எப்போதும் ஆத்ம ரூபத்திலேயே ஈடுபட்டிருப்பவர்கள், உயிரோடிருந்தாலும் உயிரற்ற பிணத்துக்கு ஒப்பாகத்தான் உலாவுவார்கள்.
தேகத்தில் அபிமானம் உடையவர்களுக்கெல்லாம் பசி, தாகம், பயம், ஆசை, அன்பு, தூக்கம் முதலியன உண்டு. எம்போலியர்க்கு அவையுண்டோ? ஆதலின் உன் தண்டனை எம்மை ஒன்றுஞ் செய்யாது. அது அரைத்த மாவையே மறுபடியும் அரைப்பது போலாகும். ஆதலின் அது வீணேயாம்” என்று கூறினார்.
இப்படிக்கூறக் கேட்டதும் அரசன், “ஓ! இவர் யாரோ ஒரு மகான் என்பதில் ஐயமில்லை. அந்தோ! அபராதி யானேனே !” என்று பயந்து பல்லக்கை விட்டு இறங்கிச் சாஷ்டாங்கமாக அவரை நமஸ்கரித்து, “ஐய,நீர் யார்? மகா மகிமை உடையவராகக் காணப்படுகிறீர்! யக்ஞோபவீதம் தரித்துக் கொண்டிருக்கிறீர்! தத்தாத்தி ரேயர் போன்ற அவதூதராக விளங்குகிறீர்! நீர் யாருடைய புத்திரர்? எங்கே இருக்கிறவர்? என்னுடைய க்ஷேமத்தின் பொருட்டாகத்தான் வந்தீர்போலும்! என் பிழைகளை மன்னிக்கவேண்டும். நான் கபில முனிவரிடம் உபதேசம் பெற வேண்டுமென்று புறப்பட்டவன். பகவானான அந்தக் கபில மகரிஷி நீங்கள் தாமோ? என்னைப்போன்றவர்கள் உங்களுடைய மகிமையை எப்படி அறிவார்கள்? என்னை மன்னிக்கவேண்டும் ” என்று கூறிப் பணிந்தான்.
பரமஞானியாகிய ஜடபரதர் அவ்வரசன் மீது இரக்கங் கொண்டு, “வேந்தே, நீ வித்துவானல்ல; ஆயினும் வித்துவான்களுடைய வாதத்துக்குச் சமானமான பேச்சுகள் பேசினாய்” என்று தொடங்கி மனம் குணம் இவற்றின் சொரூபம், தெய்வ மகிமை, பகவானுடைய சேவையினால் உண்டாகும் பயன், அகங்காரத்தினால் உண்டாகும் இழிவு இவைகளையும், இன்னும் அரசன் சந்தேகங்கொண்டு கேட்ட வேறு சில விஷயங்களையும் எடுத்துக் கூறி அரசனைத் தெளிவித்தார். அரசன் அவருடைய உபதேசம் பெற்றதும் உள்ளத் துறவு பூண்டு பரம்பொருளை வழிபடுவானாயினான். அப்பால் காலக்கிரமத்தில் பரிசுத்த நிலையை அடைந்து முடிவில் பரமபதம் அடைந்தான். ஜடபரதர் முடிவில் பரம்பொருளோடு கலந்துகொண்டார்.
ஸ்ரீ சுகர் ஜடபரதருடைய சரித்திரங் கூறியபின், பரீக்ஷித்துக்கு அந்தப் பரத வம்சத்தில் உதித்த அரசர்களுடைய பெருமையை விளக்கினார்; சூரிய கதி, சந்திர கதி, நக்ஷத்திரங்களின் கதி முதலியவைகளையும் கிரஹணங்களின் ஸ்வரூபத்தையும் எடுத்துரைத்தார்; பிறகு இந்தப் பரதகண்டத்தினுடைய பெருமையை விளக்கத் தொடங்கி, சுவர்க்கம், நரகம் என்பதை ஸர்வப் பிராணிகளுக்கும் கர்மத்திற்கேற்றபடி உண்டாகின்றன என்றும், பரம பாகவதர்களுடைய பழக்கத்தினாலே மோட்சம் உண்டாகிறதென்றும் கூறியருளினார்; இந்தப் பாரத வருஷத்தில் பிறவியை அடைவதற்குத் தேவர்களும் இச்சிக்கிறார்களென்று இதன் மகிமையைச் சிறப்பித்துக் கூறினார்.
பதினான்காம் அத்தியாயம்
அஜாமிளன் கதை
இவற்றை யெல்லாம் கேட்டுணர்ந்த பரீக்ஷித்து ஸ்ரீ சுகரைப் பார்த்து, “ஸ்வாமி, பலவாறான கொடிய வாதனைகளையுடைய நரகத் துன்பத்தைக் கடப்பதெப்படி? அதற்குரிய உபாயத்தை எனக்குச் சொல்லவேண்டும்” என்று கேட்டான். ஸ்ரீ சுகர், “கேள்: மனம், வாக்கு, காயங்களினாலே செய்யும் பாப கர்மங்களுக்கு மநு முதலியவர்கள் பிராயச்சித்தங்கள் கூறியிருக்கிறார்கள்.
அந்தப் பிராயச்சித்தம் செய்துகொள்ளாதவர்கள் கொடிய நரக துன்பங்களை அடைவார்கள். ஆகையினால், வைத்தியன் நோயின் நிதான மறிந்து அதற்குத் தக்கபடி சிகிச்சை செய்வது போல், சொற்பமாகவோ மிகுதியாகவோ ஏற்பட்டுள்ள பாபங்களுக்குத் தக்கவாறு, மரணம் அடைவதற்குமுன் விரைவில் பிராயச்சித்தஞ் செய்து கொள்ளவேண்டும் ” என்று கூறினார்.
இதைக் கேட்டதும் வேந்தன். ”மகாநுபாவரே, பாபம் நரகத் துன்பத்திற்கு உள்ளாக்குவது என்று தெரிந்தும், மானிடர் உலக சுகத்தில் ஈடுபட்டுப் பாவத்தையே பண்ணுகிறார்கள். ஆகையினால் பிராயச்சித்தம் எப்படிக் கைகூடும்? ஒருவன் ஒருவேளையில் பிராயச்சித்தம் பண்ணிக்கொண்ட பிறகும் பாபத்தையே செய்கிறான். யானையை அழுக்குப்போகக் குளிப்பாட்டினாலும் அது திரும்பவும் புழுதியை எடுத்துப் போட்டுக்கொள்கிறது. அதனால் அதைக் குளிப்பாட்டியது வீணாகிறது. இதுபோல் மானிடர் பிராயச்சித்தம் செய்துகொண்டு மறுபடியும் பாபத்தைப் பண்ணுகிறபடியால் பிராயச்சித்தம் வீணாகிறதே!” என்றான்.
ஸ்ரீசுகர்,”பிராயச்சித்தம் செய்துகொண்டால்மட்டும் பாபம் ஒழியாது. பிராயச்சித்த கர்மம் ஞான சாதனமானது. பாபத்தை அடியோடு ஒழிக்க ஞானமே முக்கியமான பிராயச்சித்தம். நியமா நுஷ்டான முடையவர்கள் மெள்ள மெள்ளத் தத்துவஞானத்தை அடைகிறார்கள். தருமம் உணர்ந்த ஜிதேந்திரியர்கள் பிராயச்சித்தத்தினாலும் கர்மபலத்தை விடுவதனாலும் உண்மையினாலும் தூய்மை யினாலும் சரணாகதியினாலும் பாபத்தை ஒழிக்கிறார்கள். பகவானையே சரணாகதியாக அடைந்து பக்தி செலுத்தும் உத்தமர்கள் காலக்கிரமத்தில் பரமபதம் அடைவார்கள். ஆகையினால் இவ்வுலகத்தில் பகவத்பக்தியே நற்கதியைத் தரக்கூடிய சிறந்த மார்க்கம். இதனை விளக்க ஒரு கதை உண்டு ” என்று மேலே கூறலானார்:-
கன்னியாகுப்ஜம் என்கிற பட்டணத்தில் அஜாமிளன் என்றொரு பிராம்மணன் இருந்தான. அந்த வேதியன், சூது, கொலை, களவு, விபசாரம் முதலிய தீய செய்கைகளைச் செய்துகொண்டிருந்தான். இவற்றையன்றிப் பிராணிகளை யெல்லாம் என்புறுத்திக்கொண்டும் இருந்தான்.இப்படிப் பட்ட கொடிய பாவிக்குப் பத்துப்பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் கடைசிப் பிள்ளையாகிய நாராயண் னென்பவனிடம் அஜாமிளன் அளவு கடந்த அன்பு பாராட்டிவந்தான். உண்ணும்போதும் உறங்கும்போதுங் கூட அவன் பிள்ளையை விட்டுப் பிரிய மனம் பொறுக்க மாட்டான்.
இப்படியிருந்த அஜாமிளனுக்கு ஆயுள் முடியுங் காலம் சமீபித்தது. அப்பொழுது அவனுக்கு ஒரு கொடிய நோய் கண்டது. அதில் அவன் மிகுந்த தொந்தரவடைந்து தேகம் மெலிந்து பிராணன் போகும் நிலையையுற்றான், அந்த வேளையில் அவனுடைய தேகம் வெயர்த்தது; நடுக்க மடைந்தது. அப்பொழுது யமதூதர் அவன்முன் தோன்றினர். அதனால் அவன் பயமடைந்தான்; தன் கடைசிப் புத்திரனான நாராயணனைப் பார்க்க விரும்பினான். அவனை, நாராயணா!டே நாராயணா!” என்று அழைத்தான். அவன் இவ்வாறு அழைத்த அக்கணமே, ஸ்ரீமந் நாராயணனுடைய தூதர்களும் தோன்றினார்கள். பிறகு யமதூதர்களுக்கும் நாராயணனுடைய தூதர்களுக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று.
யமதூதர்கள்:- இந்த அஜாமிளன் மகா பாவி. தன் மரபொழுக்கங் கெட்டுத் திரிந்தவன். நாங்கள் இவனை யமதருமராஜாவினுடைய ஆணைப்படி பிடித்துப்போக வந்தோம்.
நாராயண தூதர்கள், இவன் கொடிய பாபஞ் செய்தவனே யானாலும், ‘நாராயணா வா’ என்று இந்த வேளையில் அழைத்தபடியினால் இவனுடைய பாபங்கள் எல்லாம் பறந்து போய் விட்டன்.
“பக்திசெய் தாயினும் பகைசெய் தாயினும்
வித்தக னொருவன்பேர் விளம்பற் காயினும்
ஒத்துநா ராயணா வெனவு ரைப்பரேல்
கொத்துவெம் பாதகம் குலைந்து சாம்புமால்”
என்று கூறியிருக்கிறார்க ளல்லவா ? நாராயணா, என்னும் நான்கு அட்சரங்கள் பிறவித் துன்பத்தை நீக்கும். கொலை முதலிய கொடிய பாதகங்களை ஒழிக்கும். அஞ்ஞானத்தைப் போக்கும்.
“தும்மினு மிருமினுந் துயர மிக்குளம்
விம்மினும் வீழினும் வினைசெய் போதிலும்
அம்மவிந் நாலெழுத் தறைவ ரேலவர்
செம்மலர் மால்கழல் சேர்தல் திண்ணமே”
என்று கூறியிருக்கிறார்கள். ஆதலின் இவன் தன் அன்பான புத்திரனை இந்த வேளையில் அழைத்ததும் நாராயணா என்னும் உச்சாரணமானது இவனை இவனது கொடிய பாபங்களிலிருந்து விடுவித்துவிட்டது. ஆகையினால் இவன் புண்ணியாத்மா; இவனை விட்டுப் போங்கள். உங்கள் தலைவராகிய காலக்கடவுளுக்குக் கூறுங்கள். அவர் இங்கு நடந்தது முறையென்று ஒப்புக்கொள்வர்’ என்று கூறி யமதூதர்களை ஓட்டிவிட்டளர்.
யம தூதர்கள் சென்று தருமராஜனிடம் இச் செய்தியைக் கூறினார்கள்; “எல்லாப் பிராணிகளுக்கும் நீரே பிரபு; கர்மானுகுணமாகத் தண்டனை பண்ணுகிறவர்; மானிடர்களுடைய புண்ணிய பாபங்களைப் பிரித்து அறிகிறவர். இப்படிப்பட்ட உம்முடைய ஆணை, இது வரையில் மானிட உலகத்தில் தடுக்கப்பட்டதில்லை. இது ஆச்சரியமா யிருக்கிறது ” என்றும் கூறினார்கள்.
இதைக்கேட்டதும் தருமராஜன், “அஜாமிளன் தன் பிராணன் போகும் தருணத்தில் பகவானுடைய நாமத்தை உச்சரித்திருக்கிறான். ஆதலின் அவனை நீர் பிடிப்பதற்கு இயலாது. திருமாலினுடைய திருவடித் தொண்டரிடம் நமது ஆணை செல்லாது. இனி நீங்கள் மணிவண்ணனாகிய அந்த நாராயணனுடைய நாமம் சொல்லும் தொண்டரிடம் செல்லாதிருக்கக் கடவீர்! தூதர்களே, என்னைக்காட்டிலும் வேறாய் ஸ்தாவர ஜங்கமங்களுக்குத் தலைவரான கடவுள் ஒருவர் உண்டு. நான் மானிடர்களுக்குள் பாபிகளைத் தண்டிக்கும் ஓர் அதிகாரியே யாதலால் அக்கடவுளுடைய கிங்கரன், பகவானுடைய நாம உச்சாரணத்தினால்ல்லவா மகாபாதகனாகிய அஜாமிளனும் காலபாசத்தினின்றும் விடுபட்டான்! ஆகையினால் பகவானுடைய நாம் உச்சாரணம் சகல பாபங்களையும் போக்கிவிடுமென்பதில் ஐயமில்லை. பிரகிருதி வாசனையினால் ஒருகால் பாபம் உண்டாயின், அதையும் பகவானுடைய நாம சங்கீர்த்தனம் போக்கிவிடும். ஆகையினால் ஹரிபக்தருடைய சமீபத்திற் செல்லாதீர்கள்” என்று கூறினான். யமதூதர்கள் கேட்டு ஆச்சரியமடைந்து பகவானுடைய நாம உச்சாரண மகிமை பெரிதென்று உணர்ந்தார்கள்.
பதினைந்தாம் அத்தியாயம்
தக்ஷவம்ச வரலாறு
பரீக்ஷித்து மகாராஜனும் பகவானுடைய நாம உச்சாரண மகிமை யுணர்ந்து ஸ்ரீ சுகரை நமஸ்கரித்து, “ஸ்வாமி, ஸ்வாயம்புவ மந்வந்தரத்தில் அசுரர்கள், நாகர்கள், பறவைகள், மிருகங்கள் முதலியவை எவ்வாறு உண்டாயின? இதைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பு கிறேன் ” என்று கேட்டான்.
சுகர் கூறலானார்:
மகாராஜனே! பிராசீன பரிகிசுவினுடைய பிள்ளை களான பிரசேதசுக்கள் சமுத்திர மத்தியிலிருந்து வெளியில் வந்து பார்த்தார்கள். உலகமெல்லாம் மரம், செடி, புல், பூண்டு முதலியவைகளாலே நிறைந்திருப்பது கண்டு, ‘என்ன இது ? வாசத்திற்கு இடமில்லாமல் இவ்வாறு இவைகள் மண்டியிருக்கின்றன’ என்றெண்ணிச் சினங் கொண்டு வாயுவையும் அக்கினியையும் படைத்து அவற்றை எரிக்கத் தொடங்கினார்கள். அதைக் கண்ட ஓஷதிகளுக்கு அதிபதியாகிய சந்திரன் அவர்களைப் பார்த்து, ” நீங்கள் இந்த விருக்ஷங்களை அழிப்பது பெரிதன்று. ஸ்ரீ ஹரியானவர் இந்த விருக்ஷங்களையும் ஓஷதிகளையும் உணவிற்காகப் படைத்தார். உத்தமர்களே ! பெரியோர்களுடைய மார்க்க மான சாந்தியை அனுசரித்திருங்கள். கோபத்தை அடக்குங்கள். குழந்தைகளுக்குத் தாய்தந்தையர்களும், கண்களுக்கு இமைகளும், மாதர்களுக்கு அவர்களுடைய கணவர்களும், குடிகளுக்கு அரசனும், துறவிகளுக்குக் கிருகஸ்தர்களும், அஞ்ஞானிகளுக்கு ஞானிகளும் உறவினரும் நண்பருமா யிருப்பார்கள். சகலப் பிராணிகளுடைய தேகங்களுக்குள்ளேயும் ஏவுதற் கர்த்தாவாய் அந்தராத்மாவான ஸ்ரீஹரி இருக்கிறார். ஆகையினால் எல்லாவற்றையும் அந்தர்யாமியான ஸ்ரீஹரிக்கு ஸ்தானமாகப் பாருங்கள். அப்பொழுது ஸ்ரீஹரி உங்களால் ஆராதிக்கப்படுவார். கோபத்தை அடக்குகிறவனே பெரியவன்” என்று கூறி அவர்களுடைய கோபத்தைத் தணித்துச் சமாதானம் பண்ணிப் பிரமலோசனை யென்கிற பெண்ணை அவர்களுக்குக் கொடுத்துவிட்டுப் போனான். அந்தப் பெண்ணை அவர்கள் மணந்துகொண்டார்கள்.
அவர்களுக்குத் தக்ஷர் பிள்ளையாகப் பிறந்தார். அவர் வெகுகாலம் தவஞ்செய்தார். முடிவில் பகவான் அவருக்குப் பிரத்தியக்ஷமாகி ஒரு பெண்ணைக் கொடுத்தார். அந்த மாதை அவர் மணந்துகொண்டு பல பிள்ளைகளைப் பெற்றார். அவர்களுக்கு ஹரியசுவர்கள் என்று பெயர்.தக்ஷர் அவர்கள் எல்லோரையும் கிருகஸ்த தர்மத்தை மேற் கொண்டு காலங்கழிக்கும்படிக் கட்டளையிட்டு அனுப் பினார். அவர்கள் ஸிந்து நதியின் முகத்துவாரத்தில் உள்ள நாராயண ஸரஸிற்குப்போய் அங்கே ஸ்நானஞ் செய்தார்கள். அது புண்ணிய புருஷர்களாலே பரிசுத்தம் செய்யப்பட்ட திவ்ய தீர்த்தம்; ஆதலினால், அதில் நீராடியதும் அவர்களுக்கு இருந்த காமக்குரோதங்க ளெல்லாம் நீங்கின. உடனே அவர்களுக்குப் பரம்பொருளை அடையவேண்டுமென்கிற எண்ணம் உண்டாயிற்று. அந்த எண்ணம் உதயமானதும் அவர்கள் தவஞ்செய்யத் தொடங்கினர். அவர்களுக்குமுன் நாரதர் பிரசன்னமாகி, அவர்கள் எல்லோருக்கும் ஞானோபதேசம் செய்து பரமபதம் அடையும்படிச் செய்வித்தார்.
இவ்வாறு தம்முடைய மக்கள் எல்லோரும் நாரதராலே வேறுவிதமான புத்தியை அடைந்து காணாமற் போனதை அறிந்த தக்ஷர், மிகவும் விசனப்பட்டுப் புத்திரசோகம் அடைந்தார். பிரம்மா அவரைச் சமாதானஞ் செய்தார். பிறகு தக்ஷருக்கு அசக்கினி என்னும் மனைவியினிடம் அநேகம் பிள்ளைகள் உண்டானார்கள். அவர்களும் மகா விரதசீலர்களாய் இருந்தார்கள். தக்ஷர் அவர்களுக்கும் இல்லற நெறியை அநுஷ்டிக்கக் கட்டளை யிட்டார். அவர்களும் நாராயண ஸரஸுக்குச் சென்று நீராடினர். நீராடிய அளவில் காமக்குரோதம் முதலிய சித்தமலங்கள் நீங்கப்பெற்று அங்கிருந்து தவம்புரிந்தனர். அவர்கள் முன்பும் நாரதர் பிராப்தமானார். அவர்களைப் பார்த்து, “நீங்கள் உங்கள் சகோதரர்களுடைய மார்க்கத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். சகோதரர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றுகிறவன் தேவதை களோடு தேவலோகத்தில் சந்தோஷித்துக் கொண் டிருப்பான்” என்று கூறி, பெரிய தாயின் பிள்ளைகளுக்கு முன்செய்தபடி உபதேசம் செய்தார். அதனால் அவர்களும் தம் முன்னவர்களைப்போல் பரமபதம் அடைந்தனர்.
தம் மக்கள் இவ்வாறானதைக் கேட்ட தக்ஷர் மிகுந்த துக்கம்அடைந்து, பிறகு மனம் தேறி நாரதரைக் கண்டு கோபங்கொண்டு, “சத்புருஷருடைய வேஷம் பூண்டவனான நீ, என்னுடைய பிள்ளைகளுக்குத் துறவற மார்க்கத்தைக் காண்பித்தமையால் எனது காரியம் கெட்டுவிட்டது. கர்ம மார்க்க மரியாதையை உடையவர்களாயும் சாதுக்களாயும் கிருகஸ்தர்களாயும் இருக்கிற எங்களுக்கு, நீ பொறுக்க முடியாக் குற்றத்தைச் செய்துவிட்டாய். அதைப் பொறுத்தோம். ஆயினும் உனக்கு உலகங்களிலே இட மில்லாமற் போகக்கடவது” என்று சபித்தார். அந்தச் சாபத்தை நாரதர் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். தீமை செய்தவர்க்குத் தீமை புரிதல் பெரியோருடைய தன்மையல்லவாதலால் பொறுத்தார்.
அப்பால் தக்ஷர் அறுபது பெண்களைப் பெற்றார். அவர்களில் பத்துப் பெண்களைத் தர்மதேவதைக்கும், பதின்முவரைக் காசியபருக்கும், இருபத்தேழு பேரைச் சந்திரனுக்கும், புதன்,அங்கிரசு, கிரிசாசுவன் இம்மூவருக் ரும் ஒவ்வொருவருக்கும் இரண்டு இரண்டு பெண்களாக ஆறு பெண்களையும், காசியபருக்கு நான்கு பெண்களையும் கொடுத்தார். இவ்வாறு விவாகம் செய்விக்கப்பட்ட அப்பெண்களின் மூலமாக உலகத்தில் அசுரர்களும், நாகர்களும், பசு பட்சிகள் முதலியனவும் உண்டாயினர்.
– தொடரும்..
– ஸ்ரீமத் பாகவத ஸாரம் (நாவல்), முதல் பதிப்பு: 1945, விவேக போதினி ஆபீஸ், சென்னை.