வீட்டுக்கு வீடு
கதையாசிரியர்: புலோலியூர் செ.கந்தசாமி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2025
பார்வையிட்டோர்: 956
(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சித்ரா பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தாள். காலை எழுந்த கையோட தேநீர் “ஆத்தி” எல்லோருக்கும் கொடுத்துவிட்டுக் காலை ஆகாரம் தேடுவதில் முனைந்தாள். சமையல் செய்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அவளை கிஞ்சித்தும் நோகவிடாது எல்லா வேலைகளையும் தன் தலைமேல் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து முடிக்கும் தயாளன் இன்று ஒரு அவசர வேலை நிமித்தம் காலையில் “பிளேன் ரீயுடன்” புறப்பட்டுப்போக சகல வேலைகளும் இவள் தலைமேல் பொறிந்து விட்டது.
“அம்மா! அம்மா!” எனக் கழிப்பறையிலிருந்து சின்னமகளின் கூச்சல் செவிப்பறையில் நாராசமாய் முட்டியது. அவள் காலைக்கடன் முடித்து விட்டதன் அறிகுறி அது விரைவில் வந்து குளிப்பாட்டிவிடும்படி அறை கூவல் விடுக்கிறாள்.
“ஐயோ! நேரம் போச்சுது இவள் ஒரு பொறடி வாறன். நான் என்ன சும்மா இருக்கிறனே! எரிச்சலுடன் கத்திவிட்டு அடுப்பில் எண்ணெய்ச் சட்டியில் போட்டது போட்டபடியே இருக்க, கழிப்பறைப் பக்கம் ஓடினாள். ஏதோ “காணான் கோணான்” என அவளைக் கடமைக்கு குளிப்பாட்டிவிட்டு………. “எடி எடியே! அடுப்பிலே போட்டது கருகப் போகுது” எனப் பதறியபடி அடுப்படிக்குள் போய்ப் பார்த்தால் கருகப் போகுதென்ன கருகியே விட்டது. “இனி என்ன! உங்களுக்கு பொரியலும் இல்லை மண்ணாங் கட்டியுமில்லை” வெறும் புட்டை “மிண்டி’ விழுங்கிவிட்டுப் போங்கோ எனப் புறுபுறுத்தபடி பால் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றிப் பாலை ஊற்றி….. “அம்மா! அம்மா…….. மறுபடியும் காடிட்டுக்கத்தல் அண்ணா, என்னை ‘யூனிபோம்’ போடவிடானாம். ‘ரை’யைப் பறிச்சுக் கொண்டு ஓடுறான்….
“டேய் தமிழ்! நீ பூசை வேண்டப் போறாய் அவளின்ர ‘ரை’ யைக் குடுத்திட்டு வதவதவெண்டு சாப்பிடு அங்கைபார்! நேரம் ஏழரையாயிட்டுது. நேரம் போச்சுது…..! வழக்கமான சுலோகம் தான் “பள்ளிக்கூடத்துக்கு நேரம் போகுதெல்லோ” அதன் பிறகுதான் அவன் புட்டை நோண்டிக் கொண்டிருந்தான். அவனுக்கு இரண்டு கவளம் என்றாலும் ஊட்டிவிட்டால் தான் சாப்பாடு இறங்கும். அதற்கு அவளுக்கு எங்கே நேரம் இப்போது நேரம் போச்சுது. சாப்பிடு கெதியா. எனக்குப் புட்டு தின்னுறதென்றால் மாம்பழம் வேணும்.” அவன் சிணுங்கினான்.
“மாம்பழம் என்ன கொப்பற்றை தோட்டத்தில் கொட்டிக் கிடக்கே? புட்டைக் கெதியா விழுங்கு அல்லது சாப்பாட்டுத் தட்டை வைச்சிட்டுக் கையைக் கழுவு மிச்சத்தை நாய்க்குப் போடலாம்.”
“ஐயோ! அவரும் இண்டைக்கெண்டு கண்டறியாத ‘கம்மக்கை’யிலை போயிட்டார். நான் இதுகளோட படுற சீரழிவு” எனப் புறுபுறுத்தபடி இருவரின் சாப்பாட்டுப் பெட்டியில் சாப்பாட்டை வைத்துப் பூட்டி வெளியில் வந்தாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்த பாடில்லை. இருவரின் சாப்பாட்டுத் தட்டுக்களையும் பறித்து ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு இருவரும் யூனிபோம் அணிவதைச் சரியாக்கிவிட்டாள். தமிழை நடந்து போகுமாறு பணித்துவிட்டு சின்னவளைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போவதற்கு ஆயத்தமாகிச் சைக்கிளை எடுத்தால்…. சைக்கிள் சில்லில் காற்றில்லை ‘வால்ப்’ போட்டுதோ என விசனப்பட்டபடி கழற்றிப் பார்த்தால் “வால்ப்’ சரியில்லை. ஓடிப்போய் இலாச்சியைத் திறந்து பார்த்தால் நல்ல வேளையாக ‘வால்வ்’ துண்டொன்று பல்லை இளித்தபடி கிடந்தது. இனி புதிய வால்வு மாற்றிக்காற்றடித்து…. ஒருவாறாக சின்னவளை ஏற்றிக்கொண்டு சைக்கிளை உன்னி மிதித்தாள். நல்ல வேளை கடைசி மணி அடிக்கவில்லை. அவளை இறக்கி உள்ளே அனுப்பி விட்டு வீட்டுக்கு விரைந்தாள்.
ஐயோ! அப்பொழுதுதான் நினைவு வந்தது. மதிய உணவுக்காகச் சோற்றுக்கு உலை வைத்துவிட்டு போனது. கிளைந்த அரிசி நனைந்தபடி ஊறிக்கிடந்தது. ஓடிச் சென்று பார்த்தால் உலையில் நீர் கொதித்துக் கமறிக் கொண்டிருந்தது. அரிசியை உலையில் இட்டு நெருப்பைத் தளணித்து விறகைத் தள்ளிவிட்டவள் எட்டி நேரத்தை நோட்டம் விட்டாள். நேரம் எட்டரைமணியும் தாண்டிவிட்டது. நேரம் போச்சுது…..!
இத்தனைக்கும் அவள் மனம் ஒரு நிலையிலில்லை மனசு சஞ்சலப் பட்டது. சங்கடப்பட்டது. நேற்று மாலையில் அருந்ததி அக்கா சொல்லிவிட்டுப் போன சங்கதிதான் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.
அவள் வள்ளிக்கு ஆபத்தாம் அவளைக் கொல்லச் சதி நடக்குதாம். அவள் வள்ளி எவ்வளவு நல்லவள். குணக் கொழுந்து உற்ற கணவனை உளமாரக் காதலிப்பவள், அவனைத் தெய்வமாக மதிப்பவள். கடைத்தெடுத்த காவாலியாகத் திரிந்த அவனை விதிவசத்தால் கணவனாக அடைந்தும் அவனைத் திருத்தி நல்வழிப்படுத்திய புனிதவதி அவள். அவளின் நிம்மதியான வாழ்க்கையைக் கண்டு சகிக்காத அவளுடைய மைத்துனி அவளைக் கொல்லச் சதி செய்தாள். அன்று அவர்கள் முதலிரவுக்காகக் ஹோட்டல் செல்லும் போது வழியில்…..மறித்து…. ஐயோ பாவம் வள்ளி! அவளுக்கு ஒன்றும் நேர்ந்து விடக்கூடாதே! அம்மளாச்சி! தெய்வத்தை மனமார வேண்டினாள்.
சித்ராவுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. வள்ளிக்கு என்ன நேருமோ என எண்ணியவளுக்கு ஒரே பதற்றத்தில் வெண்டைக்காய் நறுக்கியவள் அவளின் கைவிரலையும் நறுக்கிவிட்டாள். இரத்தம் கொளகொளவெனக் கொட்டுகிறது. விரலுக்குச் சுற்றி அப்போதைக்கு ஒரு கட்டு கட்டிவிடுவோம் என்று ‘பன்டேஜ்’ துணியைத் தேடினாள். ஒரு சாமான் வைத்த இடத்தில் இருந்தால் தானே வீட்டிலை தறுதலைப் பிள்ளைகள் எங்கேயோ இடம்மாற்றி வைத்து விட்டுதுகள் போலும் அதைத் தேடி விரலுக்குப் பஞ்சு வைத்துக் கட்டுப் போட்டு….. உலையில் சோறு பதம் தப்பி வெந்துவிட்டது. அதை வடிக்கப் போனால் சோறு குமைந்துவிட்டது. இண்டைக்கு அவரிட்டை அர்ச்சனைதான் கேட்கவேணும். உலையை வடித்துக் கிளறிவிட்டு தேங்காய் துருவிக் கறி சமைத்து வறுவல் செய்து, பொரியலாக்கி… சொதி வைத்து…..ம்!
“நேரம் அங்கை பத்தரை மணியாய் போச்சு” எனக் சூழ்கொட்டிய படியே அவசர அவசரமாக சாமான்களை ஓறாறு பண்ணிவிட்டு உடைமாற்றி பாலர் குப்புக்கு செல்ல ஆயத்தமானாள். அங்கே பிள்ளை நின்று அம்மாவைக் காணயில்லை எண்டு முழிக்கப் போகுது?
சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டம் நாயோட்டமும் சில்லறைப் பாய்ச்சலுமாய்… ஓட்டம் ஓட்டம்…..
நல்ல வேளையாக அப்பொழுதுதான் பிள்ளைகள் வண்ணப் பறவைகளாய் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு விரைந்தாள். வதவதவென விட்டகுறை தொட்டகுறையெல்லாம் பார்த்து முடித்தாள்.
அப்பாடா ஒன்றரைமணியாச்சா சின்னவளுக்குக்ரிய சாப்பாட்டுக் கோட்டாவை தட்டில் இட்டு குழம்பு வேண்டாம் உறைக்கும். வெள்ளைக்கறி ஐயோ அவள் சாப்பிடமாட்டாள் கொஞ்சம் பருப்பும் பச்சைமிளகாய் போடாத வெள்ளைச் சொதியும் மாத்திரம் போட்டு கூடத்துக்கு வந்தால் சின்னவள் ரீவியில் லயித்திருந்தாள்.
என்னவோ ஒரு ‘சனலில்’ ஏதோ ஒரு படம் அரைகுறை ஆடையுடனான ஒரு அழகியை வாலிபன் துரத்திக்கொண்டிருந்தான். அவளே அவனுடைய கோரிக்கைக்கு மசிவதாய் இல்லை. அவனை எடுத்தெறிந்து பேசிவிட்டு அப்பால் நகர…. அவன் விடுவதாக இல்லை. பின்னே தொடர….
சின்னவள் சிரித்த படியே அம்மாவை நோக்கி “இவன் என்ன மோடனாகக் கிடக்கு, அவளுக்கு ஒரு ரோஜாப்பூவைக் குடுத்து அவளை மடக்கலாம் தானே” என்றாள் பெரியமனுசி தோரணையில்.
சின்னவளுக்கு ஆறு வயதும் பூர்த்தியாகவில்லை. முதலாம் தரத்தில் படிக்கிறாள். முளைத்து மூன்று இலைவிடவில்லை. காதலுக்குக் கட்டியம் கூறுகிறது.
சித்திராவுக்குச் சீற்றம் தலைக்கேறியது. “கொண்டாடி றிமோட்டை இது தான் கட்டி டி.வி பார்க்கிற இலட்சணம். படம் பார்க்கிறாள் என்ன? வாடி சாப்பிட…..” அருகில் அழைத்து சின்னவளுக்குச் சாப்பாடு ஊட்டுவதில் முனைத்தாள்.
“அம்மா! எனக்குப் பசிக்கேல்ல” ஒரு சிணுங்கல். “ஓ” இப்ப பசிக்காது பின்னேரம் நாலுமணிக்குத்தான் பசிக்குமாக்கும்…. வாயைத் திறவடி…..” சாப்பாட்டைத் திரணையாக உருட்டி வாய்க்குள் பொதிந்தாள்.
சின்னவள் ஓரக்கண்ணால் டி.வி.யைப் பார்த்தபடி வாயைத் திறந்தாள். சாப்பாடு போய்க்கொண்டே இருக்கிறது. வாய்க்குள் பாதி வெளியில் மீதி…..
ஆ! இனி என்ன சித்திரா எதிர்பார்த்த அந்த வேளை நெருங்கி விட்டது. இரண்டு மணி சரியாக.
“வள்ளி…. வள்ளி…. வள்ளீ” ரீங்காரமாய் ஒலித்தது. “அம்மா! வள்ளி தொடங்கப் போகுது” சின்னவள் குதுகலித்தாள். அவளுக்கும் கதை அத்துபடி.
குசினிக்குள் விரைந்த சித்திரா சாப்பாட்டுத்தட்டில் ஒரு அகப்பை சோறும் இரண்டு இறைச்சித் துண்டும் போட்டுக்கொண்டு ஹோலுக்கு விரைந்தவள் கதிரையில் அமர்ந்தபடி சின்னவளுக்குச் சோற்றுக்கவளம் ஊட்டினான். வள்ளி தொடங்கிவிட்டது. வள்ளியை ஒரு கார் துரத்திக் கொண்டுவருகிறது. வள்ளிக்கு இன்று ‘அஸ்த்த’ காலம் தான் உன்னிப்பாக படத்தைப் பார்த்தபடி சோற்றுக் கைகை சின்னவள் பக்கம் நீட்டினாள். கை இங்கே பார்வை அங்கே வள்ளியைத் தொடர்ந்து நீட்டிய கைப்பிடிச் சோற்றை வாயில் வாங்காதே சின்னவள் மெல்ல நகர்ந்தாள் அடுக்களையை நோக்கி ஒரு மிடறு தண்ணீர் குடிக்க அவளுக்கு உறைப்பு காரம் தாங்கமுடியாமல்.
நீட்டியசோற்றுக் கை நீட்டியபடி இருக்க சித்திரா ரீ.வி.யில் லயித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அதைக் கண்ணுற்ற ஜிம்மி இறைச்சி வாசம் சேர்ந்த சோற்றுப்பிடியை லபக்கெனக் கவ்வப்போக சித்திரா அப்போதுதான் திடுக்குற்றுக் கையை இழுத்தாள். கையில் ஜிம் மியின் பல் ஆழமான கீறலுடன் பதிந்து விட்டது. இரத்தம் கசியக் கசிய அவளுக்கோ எரிச்சல் கண்டது.
ஐயோ! சனியன் கடிச்சுப்போட்டுது என எரிச்சலுடன் கையை தூக்கியவள் செய்வதறியாது திகைத்து நின்றாள். சின்னவன் அம்மா அம்மா என்ற படி விம்மிக் கொண்டிருந்தாள். சோற்றுக் கையும் வாயும்…..
அப்போது பாடசாலையில் இருந்து வந்த தமிழ் அம்மா அலறுவதைக் கண்டு கலங்கியபடி போனை எடுத்து அப்பாவுக்குச் சொன்னான். பாதி வழியில் வந்தவர் அக்சிலேட்டறை அமுக்கி முறுக்கி வீட்டில் வந்து நின்றார் சனியன்களே நாய்களே எருமைகளே! உங்களுக்-கொரு நாடகம் தான் குறைச்சல். வெளிக்கிடுங்கோ ஆஸ்பத்திரிக்கு என்றபடி பரபரத்தான். ஓடிக் கொண்டிருந்த டி.விறிமொட்டைச் சொடுக்கிட அணைத்தபடி உங்களுக்கொரு நாடகம் ரீ.வியை ஓவ் பண்ணி விட்டு சாப்பிட்டு விட்டு ரியூசனுக்குப் போக ஆயத்தமாகுங்கோ நாங்கள் வந்திடுவோம் என்றபடி சித்திராவை சைக்கிளில் ஏற்றியபடி ஆஸ்பத்திரி நோக்கி விரைந்தான். பசி ஒரு பக்கம்.
“ஐயோ இரண்டு பல்லு ஆழமாகப் பதிந்து போச்சு ஊசிபோட வேணும். டாக்குத்தர் இன்னும் வரவில்லை. ரிக்கற் போடுகிறம் வாட்டிலே இருங்கோ சொல்லியவாறே தாதி அப்பால் செல்லுகிறாள்.
வழக்கமான நடபடிகள் முடிந்து வாட்டில் கொண்டுபோய் விட்டார்கள். டாக்டர் வரும்வரை காத்திருக்கவேணும் அதோட இன்னைக்கு என்னை வீட்டுக்கு விடுவினம் என்று தோன்றயில்லை. என ஆலோசனையில் ஆழ்ந்தபடி ஆஸ்பத்திரிக் கட்டிலில்”
அப்பொழுது அவளுடைய சிந்தனை வள்ளிக்கு என்ன நடந்திருக்கும் என்றபடிதான் இருந்தாள். பக்கத்து வீட்டு அருந்ததிமாமியைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான் வேறென்ன செய்ய?
– வீடியம், 2018.
– என்னுயிர் நீ தானே! (சிறுகதைத் தொகுதி), முதலாம் பதிப்பு: மார்கழி 2018, கவிதா நிலையம், தும்பளை.