விக்ரம்






(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-23
அத்தியாயம் – 22

அந்தரத்தில் தொங்கிய பாரச்சூட்டின் கயிறுகளை பிடித்துக் கொண்டு விக்ரமும் அவன் மேல் பல்லிபோல் ஒட்டிக் கொண்டு ப்ரீத்தியும் தெரிய, சுகிர்தராஜா அதிர்ந்து போய் அவர்களை எப்படி விலக்குவது என்று தெரியாமல் விழித்தான். தன் பத்திரமும் முக்கியமானதாக இருக்க விக்ரம் மிகுந்த சிரமத்துடன் தன் கைப்பிடியை விடாமல் இரட்டிப்புப் பளுவைச் சமாளித்து சுகிர்தராஜாவின் தோள்பட்டையில் பொருத்தியிருந்த ஹார்னஸ்ஸை விடுவிக்க முயற்சி செய்தான். மூவரின் பளுவில் அந்தப் பாரச்சூட் வேக வேகமாகச் சரியத் துவங்க, விக்ரம் கீழே ஸ்டாம்பு ஒட்டினாற்போல அங்கங்கே பச்சையும் மலை மணலும் தெரிய ப்ரீத்திக்கு தலை சுற்ற விக்ரம் சுகிர்தராஜாவின் கோட்டைப் பிடித்தான்.
“எதுக்கு வம்பு! கீழே இறங்கினதும் உனக்கு என்ன வேணுமோ தர்றேன். விட்டுரு… இந்தக் குட்டியைக் கைவிட்டுரு. ரெண்டு பேரும் சமாளித்து எறங்கிறலாம். ரெண்டு பேர் லோடு தாங்கும். விட்டுரு விக்ரம்”
விக்ரம் அவன் சொன்னதைக் கவனியாது தன் காரியத்தில் கண்ணாயிருந்தான். அது சுகிர்தராஜாவின் பாரச்சூட் பிணைப்பைத் துண்டிப்பது!
“வேண்டாம் வேண்டாம்! நீயும் விழுந்துருவ எல்லாரும் போயிருவம்!”
“பரவால்லை சுகி!”
“சொல்றதைக் கேளு விக்ரம்!” இப்போது அவன் குரவில் கெஞ்சல் மிஞ்சியது
விக்ரம் இப்போது சுகிர்தராஜாவின் பக்கிள் போன்றிருந்த சாதனத்தை விடுவித்து விட, குபுக் என்று அவன் சரிய கடைசிக் கடைசியாக விக்ரமின் இடுப்பைப் பிடித்துக் கொண்டான்.
மறுபடி வானில் வேகமாக மிதந்த பாரச்சூட் அதன் புவிஈர்ப்புத்தனம் அவ்வப்போது கலைய, காற்றின் எதிர்ப்புச் சக்திகளும் குலைய இங்குங்கும் ஆடியது. விக்ரமின் பார்வையில் சுகிர்தராஜா மெல்ல மெல்ல விழிபிதுங்க பாண்ட்டின் ஜிப்பைத் தளர்த்த, சரக்கென்று சுகி சரிந்து கால்களுக்கு வந்துவிட்டான்.
நடனமாடிய பாரசூட் மலரில் விக்ரம், விக்ரமோடு பாச்சை போல ஒட்டிக்கொண்டு ப்ரீத்தி, அவன் காலடியில் தொங்கிக் கொண்டு சுகிர்தராஜா.
சுகி அப்போது கீழே பார்க்க விருப்பமின்றி “ஆழம் அதிகமா இருக்குது! விக்! விக்கி! விக்கோபா! நானும் தமிழு. நீயும் தமிழு. நமக்குள்ள என்ன சண்டை? விட்டுரு!”
“இவளும் தான் தமிழு!”
“மலையாளக் குட்டின்னு நினைச்சேன். சரி, நானும் ஆம்பிளை, நீயும் ஆம்பிளை!”
“இது என்ன ஷூ! கொஞ்ச நேரத்தில் கழண்டுக்கும் சுகி! உனக்குச் சான்ஸே இல்லை!”
அவன் சொன்தைப்போல விக்ரமின் காலணி கழல், அதைப் பற்றுக் கோலாக வைத்திருந்த சுகி விக்ரமின் கால் சதைகள் வழண்டுபோகும் அளவுக்கு வழுக்கி, “விக்ரம் என்னை விட்டுராதே! விக்ரம்! பாஸ்! பாஸ்! விட்டுராதே! பா.. ஆ..ஆ.ஆ.ஆஸ்…!”
அலறல் மெல்ல மெல்லக் காற்றால் கலைக்கப்பட்டு சுகிர்தராஜா வேகமாகக் கீழே விழ அவன் வடிவம் பர்ஸ்பெக்டிவ் உபயத்துடன் கருங்க, சுகி இங்கிருந்து ஒரு சிறிய மிகச் சிறிய புள்ளியாகிப் போனான், அவன் குரலும் கரைந்து போயிற்று.
“இப்ப என் முதுகுச் சதையை அள்ளிப் பிடிச்சுக்கிட்டு இருக்கியே அதை விட்டா கொஞ்சம் ரத்த ஓட்டம் இம்ப்ரூவ் ஆகும். இப்ப நிறையவே இடம் இருக்குது பாரச்சூட்ல!”
ஒரு மகத்தான காட்டு மலர் போல பாரச்சூட் இப்போது சுதாரித்துக் கொண்டு ஆடி ஆடி இறங்கியது.
இந்தச் சமயம் ‘ப்ரா’ அலுவலகத்தில் ஜிவி ராவும் மற்ற அதிகாரிகளும் அந்தப் பிம்பத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்னிபுத்ரனின் ஃப்ளைட் பாத் என்று சொல்லப்பட்ட பறக்கும் பாதை.
அது மெல்ல மெல்ல டில்லி நோக்கி நகர விமானப் படை அதிகாரி, “மிஸ்டர் ராவ், இனி மேல் காத்திருக்க முடியாது. நான் தலைமைச் செயலகத்துக்குத் தகவல் கொடுத்தே ஆக வேண்டும்.”
ராவ் பதில் சொல்லாமல் திரையிலேயே வாயிலை நோக்கிச் சென்றார். “ஏர் கமோடோர் லால்! ஒரு நிமிஷம்!”
“என்ன?
“வந்து பாருங்கள்.”
அதிகாரி மறுபடி திரைக்கு வந்து பார்க்க இப்போது அக்னிபுத்ரனின் பிம்பம் திசை மாறியது. தெளிவாக அதன் ஆரம்பகால இலக்கிலிருந்து பிரிந்து வங்காள விரிகுடாவை நோக்கித் திரும்பியது.
“டார்ஜெட் மாறிவிட்டது!”
“இப்ப நம்மை நோக்கி வர்றது! மை காட்!”
“இருங்க, அவசரப் படாதீங்க இப்ப நிச்சயம் புரிஞ்சு போயிருச்சு, விக்ரம் பாதையைத் திசை திருப்பிட்டாங்கறது!”
“மெட்ராஸ்! மெட்ராஸ்தான் வருது! நம்ம தலைல விழப் போவுதா?”
“இல்லய்யா?” கடலை நோக்கிப் போவுது. சரியாப் பாரும்.”
“மிஸ்டர் ராவ், நிசம்தானே?”
“நீயேதான் பார்க்கறியே. கொஞ்சம் இரு கம்ப்யூட்டரையே கேட்டுரலாம்!”
இப்போது அதன் பாதையைக் கம்ப்யூட்டர் கணக்கிட்டுச் சொல்ல, பத்திரமாக இங்கிருந்து அந்தமான் செல்லும் திசையில் தள்ளிப்போய், பத்திரமான இடத்தில் விழும் என்று தெரிந்தது.
”டில்லியில் யாரையும் எச்சரித்து இப்போது பயப்படுத்த வேண்டாம். சும்மாயிரு. எல்லாம் முடிந்தபின் தகவல் சொல்லிக் கொள்ளலாம்.”
“என்ன சொல்வீர்கள்?”
“அக்னிபுத்ரன் மீட்கப்பட்டு விட்டது என்று.”
“மிஸ்டர் ராவ், அதன் மூக்கில் இருக்கும் அணு ஆயுத வெடிகுண்டு என்ன ஆகும்?”
“அது வெடிக்காது. ப்ரொக்ராமை மாற்றி விட்டதால் கடல் ஆழத்துக்குப் போய், கம்மென்று அடங்கிவிடும். ஆரம்ப ஆணைத் தொடரிலேயே அதை ‘ஆர்ம்’ பண்ணவில்லை.”
“இப்ப எல்லாம் பத்திரம் என்று சொல்லுங்கள்?”
“அப்படித்தான் தோன்றுகிறது.” ராவ் தன் கைக் குட்டையை எடுத்து நெற்றியெல்லாம் நனைந்திருந்த வியர்வையை ஒற்றிக் கொண்டார்.
“கை குடுங்க ராவ்!”
“கை குடுக்க வேண்டியாது எனக்கல்ல. விக்ரமுக்கு!”
“அவன் எங்கே இருக்கிறான்?”
விக்ரம் மெல்ல மெல்ல ப்ரித்தியுடன் மிதந்து இறங்கிக் கொண்டிருந்தான். “விக்ரம்!”
“யா.”
“இத்தனை நாளா நானும் நீயும் சேர்ந்தாப்பலதானே இருந்திருக்கோம்! கம்ப்யூட்டர் ரூம்ல பார்த்ததிலிருந்து இந்தப் பராச்சூட் வரைக்கும் ஒட்டிக்கிட்டு தானே இருந்திருக்கோம்?”
“ஆமா.”
“ஒரு வார்த்தை?”
“என்ன?”
“அய்யா, ஒரு வார்த்தை! எம் மேல அக்கநை காட்டி, ‘ப்ரீத்தி, எப்டி இருக்கே? சௌக்கியமா?’ அப்டின்னா கூடப்போதும். அந்த மாதிரி ஒரு வார்த்தை சொல்லியிருக்கியா?”
“நேரமில்லை.”
“இப்பதான் எல்லாம் முடிஞ்சிருச்சே. இப்ப நேரமில்லையா?”
“என்ன சொல்லணும்?”
“சௌக்கியமான்னு”
விக்ரம் அவளை நிமிர்த்திப் பார்த்தான். “யோசித்துப் பார்த்தா, உன்னைப் பார்த்து ஐ லவ் யூன்னு கூடச் சொல்லலாமான்னு தோணுது. பரவால்லை. சுமாரா இருக்க!”
“சொல்லு! சொல்லு மறுபடி சொல்லு!”
“நாம இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்திருச்சு!” ‘
“என்னது?”
“தரை வந்தாச்சு!”
விக்ரமும் ப்ரீத்தியும் அந்தக் கடைசிப் பத்தடிகளைத் தொபக்கென்று விழுந்தார்கள். பாரச்சூட் தோகை அவர்களைத் தொடர்ந்து தரையில் பரவி அருகில் விழுந்தது. விக்ரம் ப்ரீத்தியை விடுவித்து, தன்னையும் விடுவித்துக் கொண்டான். கைகால்களை உதறிக் கொண்டான். சுற்றுமுற்றும் பார்த்தான். அவர்கள் ஒருவிதமாக மைதானத்தில் விழுந்திருந்தார்கள். ஓரத்தில் மாந்தோப்பு போலத் தெரிந்தது.
ப்ரீத்தி, “நான் உயிரோடத்தான் இருக்கனா? இது என்ன இடம், சொர்க்கமா?”
“சத்தியமா இல்லை! சொர்க்கத்தில இந்த வெய்யில் இருக்காது. சலாமியாவா இந்தியாவா தெரியலை.”
அவர்கள் எதிரே தூரத்தில் ஒரு புள்ளி மாதிரி தெரிந்து பெரிதாகிக் கொண்டு வந்தது.
“சுகிர்தராஜாவா?” என்றாள் ப்ரீத்தி பயத்துடன்.
“இல்லை. சான்ஸே இல்லை! ஆறாயிரம் அடியிலிருந்து விழுந்து யார் பிழைச்சாலும் அவன் பின்னால போயிர வேண்டியது தான்! ரொம்ப தாகமா இருக்கு. வாட்டர் கிடைக்குமா?”
“பார்க்கலாம். குதிரைக்காரர் வர்றாறே, அவரைக் கேட்கலாம்!”
அருகே வந்து குதிரை முன்னங்கால்களைத் தூக்கி நிற்க, குதிரைக்காரர் தன் தலைக்கட்டை விளக்கி,
“விக்ரோம்!”
“போச்சுரா! வந்துட்டாளா இங்கயும்?”
ராஜகுமாரி இனிமாஸி கீழே குதித்தாள்.
அத்தியாயம் – 23
ராஜகுமாரி இனிமாஸி வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தன் நாட்டில் சமீபத்தில் நிகழ்ந்த குழப்பங்களையும் அதன் விளைவுகளையும் அதனால் ஏற்பட்ட பயங்கரச் சண்டைகளையும் விட வானத்தில் மெல்ல மெல்ல மிதந்து வந்த அந்த விஸ்தாரமான பிளாஸ்டிக் குடையின் மேல் கவனம் அதிகமிருந்தது.
ஆவல் முழுவதும் அந்த வானத்துப் புஷ்பத்தில் இறங்கி வருவது யார் என்பதில் பதிந்திருந்தது. சுகிர்தராஜாவாக இருந்தால் உடனே குத்திக் கொன்றுவிடுவது என்று தீர்மானித்தாள். அது விக்ரமாக இருந்தால்?
அந்தப் பாரச்சூட் அவள் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு கவனித்துக் கொண்டிருந்த இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் மைதானத்தின் மேல் கவிய, ராஜகுமாரி அங்கே சென்றாள். விக்ரமும் அந்தப் பெண்ணும் மண்ணைத் தட்டிக் கொண்டு எழுந்திருப்பதைக் கவனித்து மிகுந்த சந்தோஷத்துடன் அருகே சென்றாள்.
“மறுபடியும் வந்துட்டியா? விடமாட்டாய்யா இவ.” என்றாள் ப்ரீத்தி.
“விக்ரோம்!” என்றாள் அவனருகே வந்து அவன் தானா என்று தொட்டுப் பார்த்தாள், கண்களால் அவனை முழுசாகப் பார்த்தாள்.
“பாரு விக்ரம், ஏதாவது இவகூட வம்பு பண்ணே. அவளைக் கல்யாணம் கில்யாணம்னு ஆரம்பிச்சே, எனக்குக் கெட்ட கோபம் வரும்.”
“இரு இரு இவங்க நாட்டில என்ன வழக்கமோ! எதுக்காக வந்திருக்காள்னு விசாரிக்கலாமே. என்ன மாஸி?”
“அய்!” என்றாள்.
“அய்ங்கறா. ஆபத்து! பார்வையே நல்லால்லை. உன்னை அந்தப்புரத்துக்குக் கூப்பிடறா விக்ரம், வந்த வேலை என்ன? திரும்ப நம்ம நாட்டுக்குப் போய்க் காரியம் முடிஞ்சிட்டதுன்னு ரிப்போர்ட் பண்ண வேண்டாமா? என்ன சொல்ற?”
இதற்குப் பொருந்தினாற்போல ராஜகுமாரி சலாமியில் கீச்சு கீச்சு என்று நாலைந்து வாக்கியம் பேசினாள்.
“என்ன சொல்றா?” என்றாள் ப்ரீத்தி.
“என்னவோ கேக்கறதுக்கு இனிமையா இருக்கு. என்னை கூப்பிடறான்னு அர்த்தமா இருக்கலாம். வந்தது வந்துட்டம். போய் ராஜாவெல்லாம் விசாரிச்சுட்டு சாப்பிட்டுட்டு ஆத்துக்குப் போகலாமே.” என்றான் விக்ரம்.
“நீ உள்ளே போனா வரமாட்டே. காரண்ட்டி.”
“ஏன்?”
“அவ கண்லயே பயங்கர அழைப்பு, அணைப்பு எல்லாம் தெரியுது விக்ரம்! ஒண்ணு செய். என்னை மெட்ராஸ்ல கொண்டு விட்டுட்டுத் திரும்ப வந்து என்னவேணா செய்துக்க. அம்மா, விக்ரம் ஸார் அப்றம் வருவார், அப்றம்!” என்று மிகையாகக் கையைப் பின்பக்கம் அபிநயித்துக் காட்டினாள்.
“அய்! அப்றம்?” என்றாள் ராஜகுமாரி. “விக்ரம்!” என்று அவன் புஜத்தைப் பிடித்து இழுத்தாள்.
“நீ மட்டும் போனே, கெட்ட கோபம் வரும்.” என்றாள் ப்ரீத்தி, அவனை வலது புறத்தில் பிடித்து இழுக்க, அவன் சட்டை கைப் பகுதி பர்ரென்று கிழிந்தது. இனிமாஸி இடது கையைப் பிடித்துக் கொண்டாள்.
“ஹோல்டிட்! ஹோல்டிட்! எனக்கு ஒரு ஐடியா தோணுதா!” என்றான் விக்ரம்.
அந்தச் சற்றே நவீனமான, உறுத்தாத கட்டடத்தை நீங்கள் நந்தம்பாக்கம் போகிறவழியில் பார்த்திருக்கலாம். அந்தக் கட்டடத்தில் எட்டாவது மாடியில் ஒரு முட்டை வடிவ மேசையின் தலைமாட்டில் ஜிவி ராவ் உட்கார்ந்திருக்க, எதிரே மேசையின் மற்ற நாற்காலிகளில் ராணுவ. கடற்படை, விமானப்படை, போலிஸ் பெரிய அதிகாரிகள் வீற்றிருக்க. மேசையில் ஒரு சிவப்பு டெலிபோனின் மேல் எல்லோரும் கவனமாக இருந்தார்கள்.
ராவ் ‘க்கும்’ என்று கனைத்துக் கொண்டு கண்களில் உற்சாகத்துடன். “ஜெண்டில்மன். நல்ல செய்தி! அக்னிபுத்ரன் நம் தலை மேலேயே விழவேண்டிய அபாயத்திலிருந்து நாம் தப்பித்து விட்டோம். விக்ரமும் ப்ரீத்தியும் சேர்ந்து டில்லியை நோக்கிச் சென்ற அதன் பாதையை மாற்றி விரிகுடாவில் விழும்படி செய்து விட்டார்கள். நாளை செய்தித்தாளில் ‘மாமூலான ராக்கெட் பரிசோதனை நிறைவேற்றப்பட்டது’ என்று ஓரத்திலே ஆரவாரமில்லாது செய்தி வரும்.”
“விக்ரம் என்ன ஆனான்?”
“தப்பித்து விட்டானா?”
“இன்னம் தகவல் தெரியவில்லை. சாட்டிலைட் மூலம் கான்ஸலுக்குச் சானல் கேட்டிருக்கிறேன்.”
“வாங்க மிஸ்டர் இளவழகன், ஜெண்டில்மன், யூ நோ மிஸ்டர் இளவழகன்.”
“என்ன ராவ்? பாணம் கெடைச்சிருச்சாமே!” என்று துண்டால் விசிறிக் கொண்டு உட்கார்ந்தார்.
“ஆமாங்க”
“வெரிகுட் வெரிகுட்? அப்ப செலவு மிச்சமின்னு சொல்லு. எங்கே விக்ரம் பய? தமிழ்க்காரப் புள்ளை, கூப்பிட்டுப் பொன்னாடை கின்னாடை போத்தி விழா வெக்கலாம்! ஆளு உயிரோடத்தான் இருக்கானா? செத்துட்டான்னா செலை வெக்கலாம்.”
“உயிரோட இருக்கான்னுதான் நம்பிக்கை. அவங்களுக்குத்தான் கால் போட்டு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம்.”
அப்போது டெலிபோன் மணி அடிக்க எல்லோரும் சட்டென்று மவுனமாகிவிட ராவ் அதை எடுத்து. “எஸ்.” என்றார்.
“மெட்ராஸ் ப்ரா நிறுவனங்களா?”
“ஆமாம்.”
“சாட்டிலைட்டில சானல் கேட்டிருந்திங்களா ஸலாமியா கான்ஸுலேட்டுக்கு?”
“ஆமாம்.”
“ஸபீக் அப்! வீடியோ வேணுமா? இண்டல்ஸாட் வழியா மூணு நிமிஷம் கொடுக்கிறாங்க. எக்ஸ்பெரிமெண்டல்.”
“குடுங்க ஆளையும் பார்த்தாப்பல இருக்கும்”.
“என்னவாம்?”
“பேசவும் பேசலாம். பார்க்கவும் பார்க்கலாம்”
பக்கத்தில் சிப்பந்தி கொண்டு வந்து ஒரு சிறிய 12 இன்ச் டிலி மானிட்டரை அமைக்க டெலிபோனில் ‘ஹலோ’ என்று நூறு குரல்கள் கேட்டன. கடைசியில், “திஸ் இஸ் விக்ரம்!”
“ஹலோ விக்ரம், எப்படி இருக்க?” என்று ராவ் முகமலர்ந்து கேட்க மற்றவர்கள் கூர்ந்து கவனித்தனர்.
“ஃபைன் ஸார். எல்லாக் காரியமும் முடிஞ்சிருச்சு. ப்ரீத்தி இஸ் ஓக்கே!”
“ப்ரீத்தி, உனக்கு யாருக்கும் அடிகிடி படலையே?”
“அதிகம் இல்லை.”
“அதிகம் இல்லைன்னா?”
“எனக்குச் சின்னதா ப்ராக்சர் அவளுக்குச் சின்னதா ப்ராக்சர். எனக்கு எலும்பு முறிவு. கண்ல ஒண்ணு பேர்ந்து போய்டுச்சு. இப்படிக்கூடக் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் பேச முடிகிறது.”
ரால் கவலையுடன், “அப்படியா?” என்றார்.
அப்போதுதான் விக்ரம் பேசிக் கொண்டிருந்த அறையின் காட்சி அதில் மறைந்திருந்த டெலிவிஷன் காமிரா மூலம் தெரிய ஆரம்பித்தது.
விக்ரம் ஒரு வட்ட வடிவப் படுக்கையில் படுத்திருந்தான். ஏதோ ரோமாபுரி மன்னன் போல லூஸாக உடையணிந்திருக்க, இந்தப் பக்கம் திராட்சை ரசம் ஒருத்தியும் அந்தப் பக்கம் மாதுளை ரசம் இன்னொருத்தியும் தர, அருகே பிறிதொருத்தி உடம்பு பிடித்துவிட, கைத்தாங்கலாக ஒருகை ராஜகுமாரி மேலும் மற்றொரு கை ப்ரீத்தி மேலும் போட்டுக் கொண்டு கோப்பையைச் சீப்பிக் கொண்டிருந்தான்.
“அப்படியா! இப்ப எப்படி இருக்கே? எங்க இருக்கே?”
“ஆஸ்பத்திரியில்! சலாமிய ஆஸ்பத்திரியில் நல்ல அடி!”
இளவழகன் ரிஸீவரைப் பற்றிக் கொண்டு, “எங்கெல்லாம் வலிக்குது?”
“உடம்பு பூராங்க.” அவர்கள் இருவரும் அவன் புஜங்களைப் பிடித்துவிட,
“கை கால் எல்லாம் அமுக்கறாப்பல வலியா?”
“ஆமாங்க, கரெக்டாச் சொன்னீங்க!”
“மருந்து சாப்பிடறியா?”
“ஆமாங்க இப்பகூடச் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்!” என்றான் கோப்பையை நாக்கு நுனியால் நிரடி.
“மாம்பழம், மாதுளை, எலந்தை இப்படிப் பழங்களாகவே நிறையவே சாப்பிடு!”
“அது இந்த ஊர்ல நிறையக் குலுங்குதுங்க. ராவ் கிட்ட சொல்லுங்க. இந்த மாதிரி உடம்பு சரியில்லாததால்…”
ராஜகுமாரி எதிரே இருந்த காமிராவைக் காட்டினாள். விக்ரம் அதை உடனே உணர்ந்து, “மிஸ்டர் ராவ், ஆம் ஐ ஆன் டிவி? மை காட்!”
“ஆமா, வீடியோ கூட எடுத்துக்கிட்டு இருக்கோம்.”
“இது ரொம்ப அநியாயம்,” என்று இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்து ஒரு ஆப்பிள் வெட்டும் கத்தியைத் தேர்ந்தெடுத்துக் காமிராவின் மேல் குறி வைத்து எறிய, ‘சிலுங்’ என்று சப்தம் கேட்டு பிம்பம் கரைந்து போய் மணல் வாரியது.
“முழுக்கக் காட்டாம முடிச்சுப்புட்டானே!” என்று அங்கலாய்த்தார் இளவழகன்.
(முற்றும்)
– 80களில் குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்தது.
– விக்ரம் (நாவல்), முதற் பதிப்பு: மே 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.