விக்ரம்






(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-23
அத்தியாயம் – 19

சுகிர்தராஜா தன்னுடைய தொழிற்சாலையைப் பார்க்க அழைத்துச் சென்றதன் காரணம் விக்ரமுக்கு முதலில் புரியவில்லை. பேசாமல் தன்னைக் கொன்று போட்டுவிட்டு மேற்கொண்டு காரியங்களைப் பார்க்காமல் எதற்காக இப்படிச் சுற்றி வளைக்கிறான் என்பது சற்று நேரத்தில் அவன் கேட்ட கேள்விகளிலிருந்து புரிந்தது.
விக்ரம் அவ்வளவு பெரிய பாக்டரி அங்கே இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனான். எலிக்கோவிலின் அரவணைப்பில் மறைந்திருந்த இடத்தில், மற்றொரு நாட்டில் ராஜாவுக்கே தெரியாமல் மதத்தை வைத்து மறைத்து ஒரு நவீன ராக்கெட் தொழிற்சாலை! கெமிக்கல்களுக்கு, ராக்கெட்டின் ரப்பர் போன்ற எரிபொருள் தயாரிக்கவும் இயந்திரங்களும் ராக்கெட்டின் மேற்புறம் கூட்டைத் தரிக்க ஒரு பெரிய ஹாங்கரில் வசதிகள் இருந்தன. அங்கே தரை துடைக்கும் பாட்டரி வண்டியின் முன்பகுதியில் விக்ரமை உட்கார வைத்து, அவன் அருகிலேயே உட்கார்ந்து கொண்டான் சுகி. “ஓட்ரா!” என்றான்.
“உனக்கு என்ன சம்பளம் கொடுக்கறாங்க இந்திய சர்க்கார்ல?”
விக்ரம். “உயிர் வாழப் போதுமான சம்பளம்?” என்றான்.
“நிசமாவா?” அடிக்கடி ‘நிசமாவா’ என்பது சுகியின் பழக்கம் என்று விக்ரம் உணர்ந்தான்.
“உயிர் வாழறது மட்டும் போதுமா? உனக்கு ஒரு அந்தஸ்து. சுகம், சும்மிங் பூல், ரெண்டு குட்டிங்க, புட்டி, எலுமிச்சை போட்ட டீ இதெல்லாம் வேண்டாம்?”
விக்ரம் “முக்கியமில்லை.” என்றான். அவன் கண்கள் அலைந்து பாக்டரியின் அத்தனை விஸ்தாரங்களையும் மனத்தில் வாங்கிக் கொண்டன.
“எதுதான் முக்யம் உனக்கு?”
“தேசம்!”
“தேசம்? உன் தேசம் நாசம்யா. உன் தேசம் உனக்காக என்ன செய்யுது? உயிர் போனாப் போவுதுன்னு தானே உன்னை அனுப்பிச்சிருக்காங்க? நான் அமைக்கிறேன் பாரு தேசம் இந்த சலாமியாவில என் தேசம்! பேர்கூட ரெடி. சுகிர்தாலயா. கொடியில ஒரு பாதி ஒட்டகம். ஒரு பாதி இட்லரு! மன்னன்யா அவன்! நான் அமைக்கிற தேசத்தில் தினத்துக்கு 25 மணி நேரம் சுபிட்சம்! சனங்கள் மொத்தமே எட்டு லட்சம்! அதுக்கு மேல காயடிச்சுர்றது! இதபாரு, எவ்வளவு பெரிய பாக்டரி அமைச்சிருக்கேன்! உன்னோட அக்னி புத்ரன் மாதிரி வருசத்துக்கு நூறு செய்து விக்கப்போறேன். தவணை முறையில் ஆட்டம் பாம்! அதுக்குத்தான் உன் மாதிரி துடியான ஆசாமிகள் தேவைப்படுது. நீயும் நானும் ஏறக்குறைய ஒண்ணு! எதுக்கு சும்மா சண்டை போட்டுக்கிட்டு மொட்டு மொட்டுன்னு சுட்டுக்கிட்டு? என்னோட சேர்ந்துரு. உன் காலடியில உலகத்தையே கொண்டாந்து வெக்கறேன். கூட ஒரு இலவச இணைப்பு, என்ன வேணும் கேளு”
விக்ரம், “அக்னி புத்ரனை மரியாதையா திருப்பிக் கொடுத்துரு!” என்றான்.
“விடமாட்டப்பா நீ! வேற எதாவது கேளு”
“உன் உயிர் வேணும்” என்றான் விக்ரம்.
“புடிவாதம்! பைத்தியக்காரப் பயப்பா நீ!” அப்போது ஒரு கண்ணாடிக் கூண்டுபோல இருந்த லிப்டின் அருகே நின்றார்கள். “வா கண்ட்ரோல் ரூம் போலாம். பாரு. என்ன பளபளன்னு வெச்சிருக்கேன்”.
அப்போது ராஜாவை நடத்தி, அழைத்து வந்தார்கள். ராஜா, சலாமியில் “என்னை இப்படி நடத்தி அழைத்து வரலாமா? நான் எப்பேர்ப்பட்டவன்!” என்பது போல சுகிர்தராஜாவிடம் முறையிட, “குண்டா, உன் பல்லெல்லாம் புடுங்கியாச்சு. இனிமே நான் தான் ராஜா! சுகிர்த ராஜா! இவனைக் கூட்டிட்டுப் போய்ட்டுப் பட்னி போடுங்கடா!”
விக்ரம் எப்போது எப்போது என்று அந்தச் சமயத்துக்காகக் காத்திருந்தான். தொழிற்சாலை பூரா அங்கேங்கே காவலர்கள். சும்மா வீரம் காட்டி அலறி அடித்துக் கொண்டு ஓடுவதில் அர்த்தமில்லை. அக்னி புத்ரன் எங்கே? இப்போது எங்கே வைத்திருக்கிறான்? அதை சுகிர்தராஜா என்ன செய்யப் போகிறான்? அது முதலில் தெரிய வேண்டும். ஒண்டியாள் என்ன செய்ய முடியும்? எப்படிக் காப்பாற்ற முடியும்? இந்திய அரசாங்கத்துக்குத் தகவல் கொடுக்க நமக்குச் சந்தர்ப்பமும் இல்லை. சமயமும் இல்லை. என்ன நடக்கிறது பார்க்கலாம். இதுவரை என்னை உயிருடன் வைத்திருந்ததே பெரிசு…
லிப்ட் மார்க்கமாக, சுகிர்தராஜாவும் விக்ரமும் அந்த ‘கான்ஸோல்’ அறைக்குள் நுழைந்தார்கள்.
ஆச்சரியமாக இருந்தது. சுவர் பூரா டெலிவிஷன் திரைகளில் பாக்டரியின் பல்வேறு இடங்களில் காமிரா வைத்து மானிட்டர் செய்யும் காட்சிகள் தெரிந்தன. நட்ட நடுவே கண்ணாடிக் கூண்டு போல இருக்க சுகிர்தராஜா கைகொடுக்க அதுமேலே உயர்ந்தது.
“உங்கூட, அழைச்சிட்டு வந்தியே கம்ப்யூட்டர் குட்டி, என்ன பேரு? ப்ரீத்தி! அவ எங்கங்கறே?”
கண்ணாடிக் கூண்டு உயரத்தில் உள்ளே கான்ஸோல் சாதனங்கள் தெரிந்தன. நான்கு மானிட்டர்கள். அவைகளின் திரையில் பற்பல வினோதமான எழுத்துகள், பிம்பங்கள். விக்ரமுக்கு அந்த அமைப்பை உடனே அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. ராக்கெட்டை அனுப்பும் கேந்திரம்! அதன் பாதையைக் கட்டுப்படுத்தும் கேந்திரம்! அதன் கான்ஸோல் ஒன்றின் அருகில் ‘ஓவரால்’ அணிந்து-
“ப்ரீத்தி!” என்று வியப்புடன் கூப்பிட்டான் விக்ரம் அவள் திரும்பிப் பார்த்து விக்ரமைக் கண்டதும் ஏளனமாகச் சிரித்து, “வாய்யா காதல் இளவரசா“ என்றாள்.
“ப்ரீத்தி! வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்! எழுந்து வா!’
“என் மேல இனிமே அதிகாரம் கிடையாது உனக்கு! சொல்லுங்க சுகி ஸார்!”.
சுகி. “ஆ ஆங்! இப்ப அவ என் கட்சி” என்றான்.
“ப்ரீத்தி! திஸ் இஸ் ட்ரீஸன். நாப்பது வருஷம் ஆர் ஐ கிடைக்கும்!”
“யாரய்யா இந்தக் குட்டியை விடப்போறாங்க? என்னம்மா? நம்ம கட்சி பரவால்லையா?”
“சூப்பர் சுகி!”
“கட்சி மார்றதே தனி இன்பம்தாம்பா! உங்க ஊர் ராக்கெட்டை உங்க ஊர்மேலேயே விடப்போறேன்! அதுக்கு உங்க ஊர் பொம்பளையையே ப்ரொக்ராம் பண்ண வெச்சிருக்கேன்” என்று ப்ரீத்தியை முகர்ந்து பார்த்து, “வாசனையா கீரே! என்ன சோப்பு?” என்றான்.
விக்ரம் ப்ரித்தியை முறைத்துப் பார்த்தான். அவள் இன்னமும் சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“ப்ரீத்தி, எதுக்காக இந்தத் துரோகம்? ஓய்?”
“நீ எனக்குச் செய்த துரோகம்! ராஜகுமாரி கட்சில சேர்ந்து ஆடி, பாடி படுத்துக்கிட்டு என்னவெல்லாம் எனக்கு முன்னாலயே செஞ்ச? ஆமய்யா. பொறாமைதான்யா எனக்கு!”
“ப்ரீத்தி, அதெல்லாம் நடிப்பு!”
“சுதி ஸார்! என் மனசு எப்படி நொந்தது தெரியுமா?”
“எனக்கா தெரியாது? மனசு நோகடிக்கிறதில் பிஎச்டி நான்! இந்த விக்ரம் பேச்சையெல்லாம் கேக்காதே! ஆட்டம் குளோஸ் இந்த ஆளு! எல்லாம் சரியாத்தானே இருக்குது?” என்று மானிட்டரைப் பார்த்தான், ப்ரித்தி அந்தக் கீபோர்டிவ் கவனமாக, “ஆல் செட் இன்னம் 15 நிமிஷத்தில் ராக்கெட் புறப்பட்டுரும்.”
சுகி கையால் ராக்கெட் டேக் ஆஃப் போல காட்டி. “விர்ர்ர்ர்ரும்! டில்லி!” என்றான்.
“யூ மஸ்ட் பி ஜோக்கிங்.”
“நோ, ஐம் நாட்” விக்ரம் கம்ப்யூட்டரின் கீபோர்டை இயக்கி அதன் மைக்கில் பேசினான், “டில்லிக்கு இலக்கு வைத்திருக்கிறது நிசமா?”
கம்ப்யூட்டரின் மெஷின்தனமான குரலில் “நிசமே நிசமே” என்றது.
“மை காட்! ஆர் யூ மேட்?” ப்ரீத்தியின் மேல் பாய்ந்து அவள் கழுத்தை நெரிக்கையில் “சுகு ஸார்!” என்று அவள் அலறினாள்,
சுகியின் ஆட்கள் வந்து அவளை விடுவிக்க விக்ரம் மூர்க்கமாகப் பிரிக்கப்பட்டான். அதற்குள் ப்ரீத்தி விக்ரமின் கையில் ஒரு காகிதத்தை அழுத்தியிருந்தாள். தன் முடின முஷ்டிக்குள் அதை உணர்ந்தான்.
“பொம்பளை கிட்ட காட்டுறியா தீரத்தை! பதினைஞ்சி நிமிஷம் இருக்குது. அதுக்குள்ள ராயருக்குத் தகவல் சொல்லனும்னா ஏற்பாடு செய்யலாம். எல்லாம் தோத்தாச்சு! மிஷன் பெயிலியர்னு சொல்லி அனுப்பு. அந்த ஆட்களை விடுதலை பண்ணிட்டாப் போதும். பணம் கூடப் பாங்கு திறந்தப்புறம் கொடுக்கலாம்! ராக்கெட் டில்லிக்குக் குறிபார்த்து சித்தமா இருக்குது. பின் பக்கமா எண்ணிகிட்டு இருக்கு, செகண்டுகள் கசியுது! சொல்லு என்ன!”
விக்ரம் தன் கையில் அவள் என்ன வைத்திருக்கிறாள் என்பதை ஆராய வேண்டும். அதற்குச் சமயம் வேண்டும். பதினைந்து நிமிஷங்களில் எவ்வளவோ சாதிக்கலாம். எவ்வளவோ!
விக்ரம் சுற்றுமுற்றும் பார்த்தான். திடுதிப்பென்று தன்னைக் கட்டிப் பிடித்திருக்கும் காவலாளைத் தள்ளிக் கொண்டு ஏதிரே தெரிந்த வாசலில் நுழைந்து ஓடினாள். அவனைத் தொடர்ந்து காவலர்கள் ஓடுவதை சுகிர்தராஜா தடுத்து நிறுத்தினான்.
“ஓடட்டும்! எங்க ஓடறான்? இங்கிருந்து டிவி வழியா எல்லா துவாரங்களும் தெரியுது எங்க போறான்? பார்க்கலாமே? கொஞ்சம் ஓட விட்டுட்டு எதாவது ஒரு இடத்தில கதவு போட்டுட்டா போவது, ரிமோட் கண்ட்ரோல் பூரா இங்க இருக்கு! உங்க வேலையைப் பாருங்க. ரேடியோவில செய்தி சொல்லியிருக்கு இல்லை?”.
விக்ரமுக்குத் தன்னை யாரும் பின் தொடராமல் இருப்பது வினோதமாக இருந்தது. ஒரு இடத்தில் ஒரு விதமான சுரங்க வாசல் போல் இருந்தது. சுற்றும் முற்றும் மேலும் கீழும் பார்த்தான். டிவி காமிரா ஏதும் தென்பட வில்லை. ப்ரீத்தி தன் கையில் திணித்த காகிதத்தைப் பிரித்துப் பார்த்தான் ஸி3, ஏ5, 00 என்றெல்லாம் எழுதியிருந்தது. ராக்கெட்டின் உள்ளே பதிந்திருக்கும் குட்டி கம்ப்யூட்டரின் சங்கேதக் குறிப்புகள் ஆணைத் தொடர்! இந்தக் குறிப்புகளை அதில் மாற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. அதற்கு அக்னி புத்ரன் எங்கே என்று தெரிய வேண்டும்
அந்தச் சுரங்க வாசலின் இறுதியிலிருந்து அவன் வெளிவருவதை சுகிர்தராஜா மானிட்டரில் பார்த்தான்.
“ஓடட்டும். எங்க போறான் பார்க்கலாம், விட்டுப் புடிக்கணும்! அதிலதான் த்ரில்”
“கொன்னுரலாம் அய்யா!” என்றான் காவலன்.
“நாட் எட்! இன்னும் இல்லை. ஹீரோ! அய்யா குடுத்த காசுக்குக் கொஞ்சம் வேலைத்தனம் காட்ட வேண்டாம்?”
விக்ரம் அந்தப் பிரம்மாண்டமான ஹாலுக்குள் வந்தான். கறுப்பு உடை அணிந்த காவலர்கள் சுறுசுறுப்பாக இருக்க. ஒரு மிஷினின் பின்னால் ஒளிந்து கொண்டான். இந்தக் காலவர்களில் ஒருவனைச் சட்டென்று பின்னாலிருந்து கட்டிப்பிடித்து இழுத்தான். சற்று நேரத்தில் விக்ரம் உடை மாற்றிக் கொண்டு மற்றக் காவலர்களுடன் வெளிப்பட்டான். பெரிய ஹாங்கருக்கு வந்த போது மற்றப் பேர் மேலே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தான். நிமிர்ந்து பார்த்ததில் அக்னிபுத்ரன் மேலே அந்தரத்தில் தொங்கிக் கொண்டு மெல்ல மிஷின் இயக்கத்தால் நகர்ந்து கொண்டிருந்தது.
“எங்கய்யா அவன்?” என்று சுகிர்தராஜா அத்தனை டிவி திரைகளிலும் தேடினான். விக்ரம் இப்போது கீழேயிருந்து பார்த்தால் மற்றவர்களுக்குக் தெரியாமல் அக்னி புத்திரனின் மேல்பாகத்தில் பல்லி மாதிரி தொற்றிக்கொண்டிருந்தான். தன் கையில் கசங்கியிருந்த காகிதத்தைப் பிரித்தான். ராக்கெட்டின் மேற்பகுதியில் ஒரு சின்ன மூடி போலிருந்ததைத் திறந்தான். உள்ளே எலக்ட்ரானிக் சமாசாரங்களின் இடையில் அந்த ராக்கெட்டின் போக்கைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு சிப் கம்ப்யூட்டர் இருந்தது. அதில் இருந்த சிறிய கீ போர்டில் விக்ரம் ப்ரீத்தி எழுதிக் கொடுத்த காகித்திலிருந்து மாற்று ப்ரொக்ராமின் எண்களை அமைத்தான்!
“எங்கய்யா அவன்?” மாற்று ப்ரொக்ராம் பாதி அமைத்துக் கொண்டிருந்த போது அந்தக் காகிதம் விக்ரமின் கைகளிலிருந்து நழுவிக் கீழே பறந்தது. விக்ரம் அதைப் பிடிப்பதற்குள் வழுக்கிச் சரிந்து கீழே விழுந்தான், காவலர்கள் மத்தியில்!
அத்தியாயம் – 20
நழுவி விழுந்தவன் கழுத்தருகே, முகத்தருகே, மார்பில் என்று தேவைக்கதிமாகத் துப்பாக்கி முனைகள் பதிக்கப்பட்டு விக்ரம் படுத்தவாறே இரண்டு கைகளையும் உயர்த்த, அவன் கைகள் முதுகுப்பக்கம் மடக்கப்பட்டு மறுபடி சுகிர்தராஜாவின் கண்ட்ரோல் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டான்; கொஞ்சம் அசட்டுத்தனமாக உணர்ந்தான்.
சுகிர்தராஜா டி.வி. மானிட்டர்கள் மூலம் அவன் பிடிபடுவதையும் கைது செய்யப்படுவதையும் அழைத்து வரப்படுவதையும் பார்த்து மகிழ்ந்து போய், “எங்கே போறான்? மாட்டிக்கிட்டானா இல்லையா பாரு, ப்ரீத்திக் குட்டி” என்று அவளைக் கண்ணடித்தான்.
ப்ரீத்தி கலவரப்பட்டாள்.
சுகி மைக்கில், “கொண்டாய்யா அந்தாளை, ராக்கெட் டேக் ஆஃப் ஆறதைக் கண் குளிரப் பார்க்கட்டும். எல்லாம் சரியாத்தானே இருக்குது?” என்று ப்ரீத்தியைக் கேட்டான்.
ப்ரீத்தி. “எல்லாம் சரிதான்” என்றாள் பயத்துடன். “அவர்.. அவர்.. வந்துரட்டுமே?”
சுகி கைகளைத் துடைத்துக் கொண்டு. “இனி தாமதிக்க வேண்டாம். சொன்ன பேச்சைக் கேக்கல இல்லை? லெட் மி டு இட்! லெட் மி டு இட்!” எதிரே கான்ஸோலில் சிவப்பு விளக்குகள் பளிச்சென்று ஒளிர, சுகிர்தராஜா ஒரு சிவப்பு ஸ்விட்சை மிகையாக அழுத்தினான். பின்னால் விக்ரம் கொண்டு வரப்பட்டான். திரும்பி அவனைப் பார்த்து, “வாங்கய்யா, எங்க எலி மாதிரி புசுக்கு புசுக்குன்னு ஓடினே? பாரு. என்ன ஆயிருச்சு பாரு?”
அப்போது மிஷின் குரலில் கம்ப்யூட்டரிடமிருந்து, “ராக்கெட் ஆர்ம்ட். கவுண்ட்டவுன் ஸ்டார்ட் 59, 58, 57…”
“பாத்தியாய்யா? எங்கருந்து எங்க கொண்டாந்துட்டன் பாரு! எம் பேச்சைக் கேக்காதவங்களுக்கு என்ன ஆகும் பார்த்துக்கினே இரு. நேரா டில்லி! இருவது நிமிஷத்தில ராஷ்டிரபதி பவன், சௌத் பிளாக்கு எல்லாம் தூள் தூளா வெடிச்சுரும்! சுகிர்தராஜா விரல் நுனியில எத்தனை பவர்!”
விக்ரம் நிதானமாக, “அது டில்லிக்கும் போகாது, நெல்லைக்கும் போகாது,” என்றான்.
சுகி அவனைச் சந்தேகத்துடன் பார்த்து “என்ன சொல்ற? விளையாட்டா? இந்த வேளையில் ஜோக்கா?”
“இப்பதான் ராக்கெட்டில் இருக்கிற ப்ரொக்ராமை மாத்திட்டு வர்றேன், பத்திரமா கடல்ல போய் விழும்படியா!”
”என்னது! நிசமாவா?”
கம்ப்யூட்டர், “நிசமா நிசமா” என்றது.
“ஷட்டப்” என்றான் சுகி.
ப்ரீத்தி விக்ரமை ஆர்வத்துடன் அணுகி, “மாத்திட்டியா? கை குடு!”
சுகி அவளைச் சந்தேகத்துடன் பார்த்து, “ஏய். ஏய்! என்ன நீ யார் கட்சி?”
ப்ரீத்தி, “கட்சி மாறிட்டன்” என்றாள்.
விக்ரம், “சுகிர்தராஜா! உனக்குச் சாகறதில் ஆசையில்லைதானே?” என்றான் நகத்தைப் பார்த்துக்கொண்டு.
“என்ன பைத்தாரக் கேள்வி! எனக்கு அந்த ஆசை கெடையவே கிடையாது!”
விக்ரம் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து:, “இன்னம் பத்து நிமிஷத்தில் இந்தக் கட்டடம் வெடிக்கப் போறது. டைனமைட் வெச்சாச்சு!”
சுகிர்தராஜா நெர்வஸாகச் சிரித்து, “பொய்! பொய் சொல்ற தானே?” என்றான்.
“வேணும்னா வெய்ட் பண்ணிப் பாரு”
“சரி, எங்க வெச்சிருக்கு? சொல்லிடு கண்ணு”
“அதை ஏன் சொல்றேன்! எனக்கு என்ன குடுமியா?”
அருகில் இருக்கிறவர்கள் அவன் சொல்வதைக் கேட்டுச் சற்று நழுவத் துவங்கினார்கள்.
“ஏய். இருங்கடா ஏய்! இவன்தான் பொய் சொல்றான்ன… கொல்லுங்கடா இவனை! கொல்லுடா கொன்னுர்றா.” சுகிர்தராஜா இப்போது குழப்ப நிலையில் இருந்தான். எத்தனையோ பேரை என்னொன்னவோ தண்டிக்க வேண்டும். அவகாசம் இல்லை. அவன் சொல்வது பொய்யா நிசமா? எப்படிக் கண்டுபிடிப்பது?
“என்னைக் கொன்னுட்டா எந்த இடத்தில் வெடி வெச்சிருக்கேன்னு யாருக்கும் தெரியாமப் போயி அதை அணைக்கிறது கஷ்டமாயிரும்.”
சுகி மறுபடி சிரித்து. “பொய் சொல்ற பாத்தியா? வெடி வெச்சா நீயும்தானே என்கூடச் சாவ?”
“எனக்குச் செத்தா பரவாயில்ல, உனக்கு?”
“என்னடா போட்டுக் குழப்புறே? நிசமாவா?”
கம்ப்யூட்டர், “நிசமா நிசமா” என்றது.
“சும்மார்றா கம்ப்யூட்டர் கம்மனாட்டி! சொல்லிரு எங்க வெச்சிருக்கே சொல்லிரு விக்கி, விக்கு, விக்கோபா!”
“நான் சொன்னாலும் இப்ப டிஃப்யூஸ் பண்ண நேரமிருக்காது.”
சுகி கலவரத்துடன் “அய்யோ, எத்தனை நிமிஷம் இருக்கு?”
“ஆறு நிமிஷம்.”
“கொஞ்சம் தங்கம் எடுத்துட்டுப் போகலாமா?”
“அஞ்சு நிமிஷம் அம்பத்தஞ்சு செகண்டு!”
“நிசமாவே தியாகம் பண்ணுவியா? தேசம் அவ்வளவு ஒஸ்தியாடா உனக்கு?”
“நாப்பது”
“நான் என்ன செய்யனும்…… என்ன செய்யணும் சொல்லித் தொலைரா!”
“நத்திங்! ட்ராப் டெட் அவ்ளவ்தான்! நான், நீ எல்லாரும் டெட். விஷ்க்! தி ஷோ இஸ் ஓவர். சுகிர்தராஜா, ஓடு! ரன்! ஓடுரா கெம்மனாட்டி!”
சுகி சற்றுச் சந்தேகமாகவே ஓடினான். மற்றவர்கள் யாவரும் அதற்குள். “வெடிக்கப்போவது! வெடிக்கப் போவுது.” என்று கத்திக் கொண்டு ஓட விக்ரம் ஒரு துப்பாக்கியை உருவி சுகிர்தராஜாவின் மேல் குறி வைத்தவன். “எதுக்குச் சுடனும்? கொஞ்ச நேரத்தில் வெடிச்சுச் சாவப் போறியே!” என்றான்.
அப்போது கண்ணாடிக்கு வெளியே கலவரத்தைக் கவனித்தான்! சுகிர்தராஜா அமைத்த பாக்டரியின் பெரிய கதவுகள் திறக்கப்பட்டு, குதிரை வீரர்கள் உள்ளே விரைவது தெரிந்தது. ராஜகுமாரி இனிமாஸி ஒரு குதிரை மேல் அந்தப் புரட்சிப் படையை அழைத்துக் கொண்டு துடிப்புடன் வருவது தெரிந்தது.
“கமான்டோஸ்” என்றான விக்ரம்.
“விக்ரம், அந்தப் ப்ரொக்ராமை மாற்றிவிட்டாயா?”
“ஆம்.”
“பாம் வைத்திருப்பதாகச் சொன்னது பொய்தானே”
“இல்லை நிசமாவே வெச்சிருக்கேன். இன்னம் ஒரு நிமிஷம் நாப்பது செகண்டில ஓடலைன்னா நாமும் காலி!”
கம்ப்யூட்டர், “நிசமா நிசமா” என்றது மறுபடியும்.
விக்ரம் அதன் முகத்தில் குத்தினான். கண்ணாடிகள் சிதறி, ‘பஸ்ஸாய்க், என்று புகை வந்தது. “கம்ப்யூட்டர்களையே ஒழித்துக் கட்டணும், வா ஓடலாம்.”
ப்ரீத்தி, “வெய்ட்!” என்று அவனுடன் ஓடினாள். கீழே மெயின் பாக்டரியில் ஒரே குழப்பம். ராஜகுமாரி சகட்டுமேனிக்கு ஜான்சித் னமாக இங்கும் அங்கும் வாள் வீசிக் குத்திக் கொண்டிருந்தாள். மதகுரு தன் வேஷ்டி நழுவினது தெரியாமல் ஓட, அவனைப் பத்துப் பேர் துரத்திப் பிடித்து ராஜாவிடம் கொண்டு போனார்கள். சுகிர்தராஜா இதனிடையில் இங்கே அங்கே என்று பார்த்து இரும்புப் படிகளில் அவசரமாக இறங்கி திறந்திருந்த ஹாங்கர் வாசலை அணுகினான். ராஜகுமாரிக்கு எதிர் வரும் வெடியைப் பற்றி எச்சரிக்க வேண்டியது அவசர காரியமாகிவிட விக்ரம், “ஆல் ஆஃப் யூ கெட் அவுட் இந்த இடம் வெடிக்கப் போறது!” என்று இரைச்சலிட்டான்.
துபாஷ் அதை மொழிபெயர்த்துக் கத்த, தமிழ் ராணியும் தடுமாறி மொழி பெயர்க்க, அவர்களுக்கு உதயமாவதற்குள் கீழே கிடக்க, ராஜா ஒரு குத்தீட்டியால் ஒரே செங்குத்தில் மதகுருவைக் கொன்று அவன்மேல் துப்பினார்.
விக்ரம் அவர்களை, “ஓடு ஓடு.” என்று எச்சரிக்க, சுகிர்தராஜா முதலில் நழுவ இருந்தவன் தன்னை நோக்கிக் கோபத்துடன் வரும் சலாமியாக்காரர்களைக் கவனிக்க, எப்படித் தப்புவது என்று தவித்தான்.
அப்போது அந்தப் பக்கம், “விக்ரம் விக்ரம்!” என்று கூப்பிட்டுக் கொண்டு ஓடிவந்த ப்ரீத்தியைப் பார்த்து, “நல்லவேளை, ஆப்பட்டம்மா நீ!” என்று அவளை இழுத்துக் கொள்ள, விக்ரம் அவன் மேல் வைத்த குறியை விலக்க வேண்டியிருந்தது. மேலும் நேரமில்லை! ப்ரீத்தியைத் தனக்குக் கவசமாக வைத்துக் கொண்டு சுகிர்தராஜா அந்த ஹாங்கரின் மேற்பகுதிக்கு ஓடினான் துரத்துகிறவர்கள் தத்தம் பத்திரத்துக்கு ஓட வேண்டியிருந்தது. ஹாங்கரில் இரண்டு பேர் பிரயாணம் செய்யக் கூடியதாக ஒரு குட்டி ஸெஸ்னா பிளேன் காத்திருந்தது!
ப்ரீத்தியைத் தாறுமாறாக இழுத்துக் கொண்டு சுகிர்தராஜா அந்த விமானத்தின் கதவைத் திறந்து அதன் இடது பக்க ஸீட்டில் ப்ரீத்தியைத் திணித்து வலது பக்கத்தில் ஏறிக் கொண்டான். ஒரு சில செகண்டுகளில் அதை “ஸ்டார்ட்” செய்து ஹாங்கருக்கு வெளியே ‘டாக்ஸி’ செய்தான். விக்ரம் இதை எதிர்பார்க்கவில்லை. அவனைத் துரத்திக் கொண்டு ஓடினான்.
விமானம் கச்சா மூச்சா என்று குதித்துக் குதித்து ஹாங்கருக்கு வெளியே பந்து அதன் முன்னே இருந்த சற்றுச் சமமான பிரதேசத்தில் வேகம் பிடித்தது. விக்ரம் ஓடமுடியாது என்று தீர்மானித்து அருகே கிடைத்த ஒரு குதிரை வீரனிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டு சட்டென்று குதிரை ஏறி அந்த விமானத்தைத் தொடர்ந்தான்.
அந்த ஸெஸ்னாவின் ‘த்ராட்டில்’ அதிகமாகவே, சுகிர்தராஜா சிரித்துக் கொண்டே கண்ட்ரோல் காலத்தைப் பின்வாங்க, அது தத்திக் கொஞ்சம் உயரம் பெற, விக்ரம் இரண்டு முறை முயன்று அதன் சக்கரத்தைத் தொட முடிந்தது. அடுத்த முறை பற்ற முடிந்தது. விமானம் இப்போது பத்துப் பதினைந்து அடி உயரம் பெற்று மேலே ஏறத் துவங்க, விக்ரம் குதிரையைப் புறக்கணித்து விமானத்தின் சக்கரத்தில் தொற்றிக் கொண்டான்.
சுகி களிப்புடன், “பாத்தியா, நான் ஜராசந்தன் மாதிரி என்னைக் கொல்ல முடியுமா? ஊ…ஆ” என்று உற்சாகத்துடன் ப்ளேனின் கண்ட்ரோல் காலத்தை இன்னும் பின்னால் சரிக்க, அது ஜிவ்வோ ஜிவ்வென்று உயரம் பெற்றது. ப்ரீத்திக்குக் குலை நடுங்கியது.
சுகிர்தராஜா ஜன்னல் வழியாகக் கீழே பார்க்கக் காலிக் குதிரைதான் தெரிந்தது “ஆள் அவுட்டுன்னு நினைக்கிறேன்.”
கீழே ஹாங்கரிலிருந்து ராஜாவும் ராஜகுமாரியும் மற்ற குதிரை வீரர்களும், வெளியே வர, திடும் என்று சப்தம் கேட்டுப் பெரிதாக வெடித்து, ஒரு நெருப்புப் பிழம்பு சுழன்று சுழன்று வானம் நோக்கிச் சென்றது. அதை விக்ரமும் பார்த்தான்.
சுகிர்தராஜா வலது பக்கம் திரும்பியபோது விக்ரம் வெளியேயிருந்து எட்டிப் பார்த்து, “ஹாய் சுகி!” என்றான்.
அத்தியாயம் – 21
வானத்தில் எவ்விச் சென்ற முக்கியர்களை அந்தரத்தில் விட்டுவிட்டு அவர்கள் விட்டுச் சென்ற சலாமியாவில் என்ன ஆயிற்று என்பதைப் பார்க்கலாம். மதகுருவை எல்லாரும் போட்டு மிதித்துக் கீமா பண்ணிவிட்டார்கள். ராஜாவுக்கு அவன் இத்தனை நாள் தட்டில் துப்பினது ஆத்திரம். அதனால் அந்த உடலின்மேல் (உடலா அது? ரத்தக் கடல்) தூ என்று ஒரு மஹா துப்பல் துப்பிவிட்டு ஒரு குதிரை மேல் ஏறிக்கொண்டு தெருவெல்லாம் கொடிகட்டிப் பறந்தார். ராஜகுமாரி இனிமாஸி ஹபாபி தன் பங்குக்கு ஒரு குதிரை மேல் ஏறிக் கொண்டு விசுவாசமுள்ள கமாண்டோ வீரர்களுடன் துடிப்புடன் வீதிவலம் வர எல்லாருக்கும் மதகுருவின் பிடிப்பிலிருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சியால் திருவிழாத்தனமாக வீதியில் கண்டபடி ஓடினார்கள். வானத்தை நோக்கி வணங்கினார்கள். அரச குடும்பத்துக்கு மட்டும் என்றிருந்த கோயிலில் எல்லோரும் உள்ளே நுழைந்தார்கள். அதன் பின்பக்கத்தில் சுகிர்தராஜா ரகசியமாகக் கட்டியிருந்த ராக்கெட் தொழிற்சாலை, விக்ரம் வைத்த குண்டின் வெடிப்பின் விளைவாகப் பிளந்து தூள் தூளாகியிருக்க, சலாமியா முழுவதும் பொதுவாகவே உற்சாகம் பரவி எல்லோரும் தெருவில் இலியா! இலியா! (விடுதலை! விடுதலை!) என்று கூவிக் கொண்டு நடனமாடினார்கள்.
ராஜகுமாரி விக்ரம் சென்ற திசையை நோக்கி மேலே பார்த்தாள். நிலவானில் அந்த விமானம் மறைவதைக் கவனித்தாள். அவள் கண்களில் கண்ணீர் உருண்டது.
அதே சமயம் இந்தியாவில் தென்னாட்டுக் கடற்கரையில் பெயர் சொல்ல முடியாத ஓர் இடத்தில் இருந்த ‘ட்ராக்கிங்’ ஸ்டேஷனில் ஒருவிதமான எச்சரிக்கை நிலை ஏற்பட்டது. அதில் இருந்த பெரிய ரெடார் நிலையத்தின் உன்னிப்பான கண்களுக்கு ஒரு புதிய “எக்கோ” கிடைத்தது. அதை இனம் கண்டு கொள்ளச் சற்றுத் திணறியதால் ஆட்டோமாடிக்காக பீப் பீப் என்று அலர்ட் எச்சரிக்கை நிலைக்குச் சென்றது.
அங்கே ட்யூட்டியில் இருந்தவர் திரையைக் கவனித்து டெலிபோனை எடுத்தார்.
“ஸார்! அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒரு பிரதிபலிப்பு” என்றார்.
“எங்கிருந்து வருகிறது?” என்றது மறுமுனைக் குரல் (ஜிவி ராவ்).
“சலாமியா!”
“ஓ மை காட்! புட் இட் ஆன் மாளிட்டர்!”
“எங்கே போகிறது?”
“சார்! இப்போதைக்கு அது புது டில்லியை நோக்கிப் போவதாகத் தெரிகிறது.”
“மை காட்! அக்னிபுத்ரனாகத் தான் இருக்கவேண்டும். இந்த விக்ரம் என்ன செய்கிறான்?”
அந்த இருண்ட அறையில் ஜிவிராவ் அவசரமாகக் கூப்பிட்ட ராணுவ, கடற்படை விமான அதிகாரிகள் அந்த மானிட்டர் திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் கிராபிக்ஸில் ஒரு இந்திய தேசப்படம் வரையப்பட்டு, சலாமியாவின் திசையிலிருந்து ஒரு ராக்கெட் வடிவம் மெல்ல மெல்லப் புறப்பட்டு ‘பீப் பீப்” என்று ஒவ்வொரு ‘பீப்’புக்கும் ஒரு எவ்வலாக முன்னேறியது. கம்ப்யூட்டர் அதன் சமீப எதிர்காலப் பாதையை வரைந்து காட்டியதில் அது செங்குறியாக டில்லியில் போய் இறங்கியது!
என்ன செய்வது? இன்னும் இருபது நிமிஷத்தில் ராக்கெட் டில்லியை அடைந்துவிடுமே?
“அய்யோ எப்படி அது சாத்தியம்? அதை டில்லிக்குச் செலுத்துவதற்கு ப்ரோக்ராம் பண்ண வேண்டுமே?”
“ப்ரொக்ராம் பண்ணியிருக்கிறார்கள். சுகிர்தராஜா எப்படியோ அதன் பாதையை நிர்ணயிக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டு விட்டான் போலிருக்கிறது!”
என்ன செய்யலாம் என்று கையைப் பிசைந்தார் ராவ்.
நேவி ஆள் வழக்கம்போல், “மிஸ்டர் ராவ்! என்ன செய்வது? உடனே தகவல் தெரிவிக்க வேண்டியதுதான். முக்கியஸ்தர்களாவது விலகட்டும். என்ன தயக்கம்? எடுங்கள் சிவப்பு போனை!”
“ஒரு நிமிஷம் பார்க்கலாமே!”
“வாட் நான்சென்ஸ், ஒரு நிமிஷமாவது, ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம். இப்போது, ராவ் டோண்ட் பி சில்லி, உங்கள் விக்ரமை அனுப்பினது தப்பு என்று அப்போதே அடித்துக் கொண்டேன். கொட்டு வாயில் வைத்து..”
“என்னால் நம்பவே முடியவில்லை. விக்ரம் தோல்வி அடைந்திருக்க முடியாது.”
“உளறாதீர்! தோல்விக்கு முழுச் சாட்சியாகத் திரையில் தெரிகிறது! எனக்கு அந்த டெலிபோனைத் தொட அதிகாரமில்லை. இல்லையெனில்…”
ராவ் இப்பவும் கூட நம்பிக்கையில்லாமல் திரையைப் பார்த்தார். “பீப் பீப்” என்றது. மேலே எழுத்துகள், ‘டார்கெட் நியூ டெல்லி லாட்டியூட் லான்ஜிட்டியூட் ரெட் அலர்ட்!” என்றது.
“நாசம்! எல்லாமே நாசம்!”
விமானப் படைக்காரர், “ராவ், உடனே சொல்லுங்கள். விமானப் படையை அனுப்பி வைக்க எனக்கு அஞ்சு நிமிஷமாவது சமயம் வேண்டும்!”
“ஜெண்டில்மென், கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம்!”
“யோவ் உனக்குப் பைத்தியமா என்ன? இனி என்ன தாமதம்? ராக்கெட் டில்லியை நோக்கி வருகிறது. எதற்காக, யாருக்காகக் காத்திருக்க வேண்டும்?”
“விக்ரம் இவ்வளவு மோசமாகத் தோல்வி அடைத்திருப்பான் என்று தோன்றவில்லை. ஸம்திங் மஸ்ட் ஹாவ் ஹாப்பன்ட்”
“உங்கள் விக்ரம் இப்போது உயிரோடு இல்லையென நினைக்கிறேன்!”
உயிரோடுதான் இருந்தான், ஆனால் ஒரு மாதிரி ஊசலாடிக் கொண்டிருந்தான் அந்த ஸெஸ்னா விமானத்தின் அண்டர் கேரேஜைப் பிடித்துக்கொண்டு இங்கும் அங்கும் அதன் இறக்கை அலைப்பைச் சமாளிக்க, சுகிர்தராஜா அவனை விமானத்திலிருந்து உதிர்க்கப் படுபிரயத்தனம் செய்து கொண்டிருந்தான். விக்ரம் உடும்புப் பிடியாய்ப் பிடித்துக்கொண்டு தொங்கத்தொங்க, “ஏண்டா டேய். கரப்பாம்பூச்சி! ஷார்ட்கட்டில் வீட்டுக்குப் போயேண்டா!” என்று கண்ட்ரோல் காலத்தை இடம் வலமாக ஆட்டினான். ஆட்டத்திலும் நடுக்கத்திலும் ப்ரீத்திக்கு லேசாக மயக்கம் வந்தது. சுகிர்தராஜா என்னதான் முயன்றும் விக்ரம் விடுபவனாக இல்லை. விமானம் கள்ளு குடித்தது போல இங்குமங்கும் மேலும் கீழும் கிடைத்த திசையெல்லாம் பறந்து கொண்டிருந்தது. அதன் இஞ்சின் சிங்கம் போல உறும், நீல வானத்தில் சர்க்கஸ் பண்ணியது. சுகிர்தராஜா யோசித்தான், தன் வீட்டுக்குக் கீழே இருந்த பாரச்சூட் எடுத்தான். அதன் சுலபமான வார்ப் பட்டைகளை முதுகில் இழுத்து அமைத்துக் கொண்டான். அதன் ரிப் கார்டைப் பார்த்துக் கொண்டான். சட்டென்று கதவைத் திறந்தான். காற்று அலையடிக்க, “கதாநாயகனும் நாயகியும் ஒண்ணா மோட்சத்துக்குப் போங்க.” என்று சொல்லிவிட்டு, “குட் பை விக்ரம்! ரொம்ப முயற்சி பண்ணிப் பார்த்துட்ட, மறுபடி சந்திக்க வேண்டாம்.” என்று கதவைத் திறந்து கொண்டு தொபக் என்று குதித்து விட்டான். உருண்டு உருண்டு அவன் கீழே விழ, பத்திரமான சமயத்தில் பாரச்சூட்டின் ரிப் கார்டை விடுவித்தான்.
விக்ரம் தன் காதுகளின் இரைச்சலில், குளிரில், வேகத்தில் நடந்தது என்ன என்று புரிவதற்கே சில செகண்டுகள் ஆயின.
சுகிர்தராஜா விமானத்தைப் புறக்கணித்துவிட்டுப் பார்ச்சூட்டுடன் குதித்துவிட்டான் என்பது புரிவதற்கு முன் விமானம் கன்னாபின்னா என்று மாலுமி இல்லாததால் மூக்கை பூமி நோக்கி ஒரே பாய்ச்சலாக விழுவதைக் கவனித்தான். ப்ரீத்திக்கு பிரக்ஞை வந்து அலறினது அந்த இஞ்சின் சப்தத்தையும் மீறிக் கேட்க, விக்ரம் மண்டையில் ரத்தம் பாய, கீழே செல்வதற்குள் என்ன செய்யவேண்டும் என்று யோசிக்காமல் உள்ளுணர்வு சொல்லும் செயல்களைச் செய்தான். கதவைத் திறந்தான், விமானத்தின் உயரம் ஆயிரம் ஆயிரமாகச் சரிய ப்ரீத்தியை விடுவித்து அவளைக் கட்டிக்கொண்டான். விழுந்தால் இரண்டு பேரும் விழலாம் என்று.
சுகிர்தராஜா அவர்களுக்கு முன்பே பாய்ந்தவன் பாரச்சூட் திறந்து விழும் வேகம் தடைப்பட்டு மெல்ல மெல்ல மிதக்க ஆரம்பிக்க, அவன் முன்னே குதித்ததின் லாபம் விக்ரம் பின்னே பாய்ந்து வேகமாக விழுந்ததற்குச் சரியாக இருக்க, சுகிர்தராஜாவின் பாரச்சூட் குடையை விக்ரமால் மேலேயிருந்து பார்க்க முடிந்தது. கையைக் காலை ஆட்டித் தன் இருவரையும் அவன்பால் செலுத்திக் கொண்டான்.
சுகிர்தராஜாவுக்கு இப்போது குஷியாகவே இருந்திருக்க வேண்டும் “முத்து முத்துச் சீலைக்காரி
‘முத்துப் பொன்னு ஓலைக்காரி
தண்டைச் சிலம்புக்காரி
தலைவாசல் வீட்டுக்காரி
அவளைத் தேடுவானேன்
கவலைப் படுவானேன்
கச்சேரிக்குப் போவானேன்
கைகட்டி நிற்பானேன்?’
என்று பாடிக்கொண்டே வந்தான், “ஒழிஞ்சாண்டா விக்ரமாதித்தன்! என்ன ஒரு நெஞ்சழுத்தம், திறமை. விளையாட்டு. ச்ச்ச்ச்! எல்லாம் சர்க்காருக்குக் கொடுத்து ஏன் மாளனும்? எங்கிட்டே சேர்ந்திருந்தாக்கா சீமானா வளர்த்திருப்பேனே. ப்ளேன்லேருந்து விழுந்து சாவுன்னு கதகத்தில் எழுதியிருந்தா யாரால என்ன பண்ண முடியும் சொல்லு?”
விக்ரமைக் கட்டிக்கொண்டு நூறு நூறு அடிகளாகச் சரிந்து கொண்டிருந்த ப்ரீத்தி அவனை வானத்தில் அத்தனை கிட்டத்தில் பார்த்து. “உனக்கு மூக்கில மச்சம்” என்றாள்.
“விழுந்ததும் கவனிக்கலாம்.”
“விக்ரம்! ராக்கெட் என்ன ஆச்சு? நான் கொடுத்த ப்ரொக்ராமை அதில் மாத்திட்டியா?”
“நான் கொடுத்த காகித்திலே இருந்த…ஊ ஆய்!”
“கீழ பார்க்காதே.”
“நீ கொடுத்த காகிதம் பாதில் பறந்துபோச்சு!”
“அய்யோ! அப்ப மாத்தலை?”
‘”ஆச்சு”
“எப்படி?”
“இங்கருந்து அங்க, ராக்கெட்டை நோக்கிப் போறப்பவே நெட்டுருப் பண்ணிட்டேன், ஸி 3 ஏ5 ஸெவன்ஸி ”
“விக்ரம் யூ ஆர் கிரேட்! அப்ப நாம எங்க போயிட்டிருக்கோம்.”
“சலாமியாவுக்குக் கொஞ்சம் வேகமாப் போயிட்டிருக்கோம்.”
‘ஆஆஆஆ…’
கீழே விரித்திருந்த குடையை அப்போதுதான் பார்த்தாள். மெல்ல மெல்ல மிதந்து கொண்டிருந்த சுகிர்தராஜா தற்செயலாக மேலே பார்க்க அந்த இரண்டு பேரும் வானில் உருண்டு உருண்டு அவனை நோக்கிப் பாய்ந்து வருவதை உணர்ந்து கொள்ளுமுன் பாரச்சூட்டின் வலுவான கயிறுகளை விக்ரம் பற்றிக்கொண்டு, “ஹலோ சுகி! மறுபடி சந்திக்கிறோம் இல்லை?” என்றான்.
– தொடரும்…
– 80களில் குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்தது.
– விக்ரம் (நாவல்), முதற் பதிப்பு: மே 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.