கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: July 15, 2025
பார்வையிட்டோர்: 15,763 
 
 

(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம் – 16

விக்ரம் தனக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையின் தீவிரத்தை முழுவதும் உணரவில்லைதான். தன் எதிரே அமைக்கப்படும் நூதனமான கோர்ட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். எங்கிருந்தோ ஒரு மேசை கொண்டு வரப்பட்டது. அதன் உடனே பெரிய நாற்காலி வந்தது. பட்டுத்துணி விரிக்கப்பட்டு ஒரு மகத்தான புத்தகம் திறக்கப்பட்டது. கடும் மஞ்சளில் காதிதங்களும் கரும் மசியில் பேனாவும் வைக்கப்பட்டன. தூக்கம் கலையாத ஒரு சிலர் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பாஷையில் புரியாமல் பேசிக் கொண்டார்கள். டக் டக் என்று சுத்தியால் தட்டப்பட்டது. ராஜா மேசையின் அருகே உட்கார, உப நாற்காலிகளில் பிரதானமாக மதகுருவும் மற்ற வரும் உட்கார விக்ரம் நிற்க வைக்கப்பட்டான். அவன் முன் என்னவோ பத்திரம் வாசிக்கப்பட ஏதோ தமாஷ் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். கண்கள் ராஜகுமாரியைத் தேடின. அவள் பணிப்பெண்களுடனும் விசும்பல்களுடனும் அழைத்துச் செல்லப்பட்டவள் ஆளையே காணோம். 

“துபாஷ், என்னய்யா நடக்குது இங்கே?” 

“கோர்ட்டுங்க.” 

“நடுராத்திரியிலயா?” 

“மரண தண்டனை ராத்தங்கக் கூடாது இந்த நாட்டில! நீ காலி!” 

அவனருகே. எழுத்து மூலம் கிடைத்த ஒரு காகிதம் கடகட வென்று படிக்கப்பட்டது. 

“என்ன அர்த்தம்?” 

“நாலு குற்றம் உன்மேல சாட்டப்பட்டிருக்கிறது. கோவிலுக்குள்ளே நுழைந்தது. அங்கே சாமிக்கு முன்னால ரத்தம் சிந்தவைத்துக் கோயிலை அசிங்கம் பண்ணி அதன் புனிதத்தைக் கெடுத்தது. அமைதி காக்கும் மதகுருவின் காவலர்களைக் கொன்றது. இளைய ராணியின் அந்தரங்கத்தில் நுழைந்து பலாத்கார முயற்சி செய்தது. இந்த நான்கு குற்றங்களையும் விக்ரமாகிய நீ ஒப்புக் கொள்கிறாயா…” 

விக்ரம், “ஐ க்ளெய்ம் டிப்ளமாடிக் இம்யூனிட்டி. ஐ மஸ்ட் லீ எ வாயர்”.

“இந்த ஊர்வ லாயர் ஜட்ஜூ எல்லாமே ராஜா தான்யா!” 

“அப்ப நான் சொல்றதையாவது காது குடுத்துக் கேக்கச் சொல்லு!” 

துபாஷ் அவன் விருப்பத்தை மொழி பெயர்த்துச் சொல்ல, ராஜா மதகுருவின் முகத்தைப் பார்க்க அவர்கூடாது என்று தலையாட்ட, ராஜா மறுபடி யோசித்து, “ஐந்து நிமிஷம்தான் அவகாசம் சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகச் சொல்” என்றார். 

விக்ரம் நிதானமிழக்காமல் சொன்னான்: “உங்கள் மதகுரு என்பவர் உங்களை மதத்தின் பெயரில் ஏமாற்றிக் கொண்டிருப்பதை ராஜா உணரவேண்டும். இன்றைக்கே இப்போதே கோயிலின் உட்பகுதிக்குச் சென்று பார்த்தால் அதன் உள்ளே உங்கள் குலதெய்வத்தின் அருகில், கீழே ஒரு ராக்கெட் இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஒரு ராக்கெட் இருக்கிறது. உங்கள் மதகுரு சுகிர்தராஜா என்னும் சர்வதேச வில்லனின் கைப்பாவையாக இருந்து அவனுக்குப் புகல் தந்து அவன் திருடிய ராக்கெட்டைப் புனிதமான கோயிலில் ஒளித்து வைத்திருப்பதை மகாராஜா கவனிக்க வேண்டுகிறேன். அதைப் பார்த்த பின் எனக்குத் தண்டனை அளிக்கத் தீர்மானிக்கட்டும்”. 

துபாஷ் இதை மொழி பெயர்க்க ஆரம்பிக்க அவன் கையில் ஒரு காவலன் ஒரு சீட்டைக் கொண்டு வந்து கொடுக்க. அதில் எழுதியிருந்தது. விக்ரமுக்கும் தெரிந்தது. “மொழி பெயர்த்தால் உன் தலை சீவப்படும்.” என்று தமிழில் எழுதியிருந்தது. 

“துபாஷ் கவலைப்படாதிங்க, நான் உங்களைக் காப்பாத்தறேன்!” 

“அதுக்கு முதல்ல உங்களைக் காப்பாத்தணுங்க. அதுவே முடியாத காரியம். என் தலையா உன் தலையான்னு பாக்கறப்ப…” 

“பரவாயில்லை. பயப்படாத.” 

துபாஷ் மொழிபெயர்த்தது என்ன என்று நிரூபிக்க முடியாத, சரிபார்க்காத நிலையில் விக்ரம் இருந்தான். ஏதோ காமாசோமா என்றுதான் மொழி பெயர்த்ததாக நினைத்தான். 

ராஜா நிஷ்டையில் போலக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு. கடைசியில் தொண்டையைக் கனைத்துக்கொண்டு சொன்னார். அதை ஒரு ரைட்டர் போல ஆள் பிரதியெடுத்துக் கொண்டிருக்க கடைசியில் அந்தக் காகிதத்தில் “கிக்றீச்’ என்று கையெழுத்திட்டது எல்லோருக்கும் கேட்டது ஒருவன் அதை உரக்கப்படிக்க, துபாஷ் அதை உடனே சரியாக மொழி பெயர்த்தான். 

”நாளைக் காலை அரசின் மைதானத்தில் உனக்கு அளிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும்!” 

“பொய்ங்.” என்று பெரிய மணி அடிக்க, ராஜா விருட்டென்று புறப்பட்டுச் சென்றார். மதகுரு விக்ரமின் அருகில் வந்து சிரிக்க, “மொட்டை! உனக்குத் தமிழ் தெரியுமில்லை?” என்றான் விக்ரம். பளீர் என்று கன்னத்தில் அறையைப் பெற்றுக் கொண்டு திருப்பி அடிப்பதற்குள் அநியாயமாக நாலு ஐந்து பேர் சேர்ந்து அவனைக் கோழிக்குஞ்சைப்போல் அழுத்தி இழுத்துச் சென்றார்கள். 

ராத்திரி அவனை அடைத்து வைத்திருந்த இடத்தில் மிகவும் குளிராக இருந்தது. மிகவும் இருட்டாக இருந்தது. தடவிப் பார்த்ததில் சுவர்கள் கரடுமுரடாகவும். ஈரமாகவும் இருந்தன. விக்ரம் முதன் முதலாக நிலைமையின் தீவிரத்துக்குப் பயந்தான். என்னடாது. பைத்தியக்கார தேசத்தில் பைத்தியக்கார சனங்களிடம் மாட்டிக் கொண்டு விட்டோம்! சொன்னதைக் கேட்க யாருமில்லை. பாஷை புரிந்து கொள்ள ஒரே ஒரு துபாஷ்! மரணம் என்கிறான். தெரியாத்தனமாக அகப்பட்டுக் கொண்டு விட்டோம்! ப்ரித்தி எங்கே? அவளையும் கைது செய்திருப்பார்கள்! ஒரு வேளை இங்கேயே அடைத்து வைத்திருப்பார்களோ? இருட்டில். “ப்ரீத்தி! ப்ரீத்தி!” என்று கூப்பிட்டுப் பார்த்தான். எலியோ என்னவோ, கீச்சு கீச்சு சப்தம் தான் பதில் கிடைத்தது. உடம்பில் பூச்சிகள் ஊர்ந்தன. கதவு எங்கே என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே ஒரு சதுர அடிக்கு மேலே இரும்புக் கம்பி போட்ட சன்னலில் நட்சத்திர வெளிச்சம் தெரிந்தது. விக்ரம் மௌனமாக நின்று கொண்டு முன்னிரவில் கிடைத்த ராக்கெட் தரிசனம், ராஜகுமாரி தரிசனம் எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தான். வானத்தையே பார்த்துக் கொண்டிருக்க அந்த நட்சத்திரங்கள் களையிழந்து கருநீலம் வெளிர் நீலமாக, பட்சிகள் சப்தம் கேட்கும்வரை விழித்துக் கொண்டு தான் இருந்தான். 

என்ன செய்வது என்று எதுவும் தோன்றவில்லை. இதுவரை எல்லாமே கனா அல்லது விளையாட்டுக்கு என்று தான் நினைத்தான். காவலர்கள் இருவர் வந்து தன் காலிலும் கையிலும் வளையங்கள் பொருத்தப்பட்டு. குறுக்குச் சங்கிலிகள் உடம்பில் பூணூல் போலச் செல்வதைக் கவனித்த போது தான் எல்லாம் விளையாட்டில்லை. நிசம் என்று உணர்ந்தான். பாவிகளா பாவிகளா என்று கத்தினான். 

அவர்கள் அவன் மேல் தண்ணீர் கொட்டினார்கள். சலங் சலங் என்று குலுங்கக் குலுங்க அழைத்துச் சென்று அரசாங்கத்தைச் சேர்ந்த ஓர் ஓட்டக வண்டியில் ஏற்றிப் பிணைத்தார்கள். ‘பப்ளிக்’காக அவன் நின்று கொண்டே வர, மௌனமாகத் தலைநகரின் பிரதான தெருக்களின் ஊடே அழைத்துச் செல்லப்பட்டான். நாற்சந்தியில் அவனைச் சுற்றிலும் சனங்கள் சூழ்ந்து கொண்டு வினோதமான பாஷையில் யாரிவன், என்ன குற்றம் செய்தான் என்று ஒருவரை யொருவர் விசாரித்துக் கொண்டு சற்றுத் தூரத்தில் அவன் வண்டியைத் தொடர, விக்ரமின் கண்கள் அலைந்தன. உதவியில்லாமல் தப்புவது முடியவே முடியாது. ராஜகுமாரியால் தான் இத்தகைய சங்கடம். அவள் என்னைக் காப்பாற்ற முடியுமா இந்த ஆண்கள் உலகத்தில்? காட்டுத்தனமான பழக்கங்கள், சட்டங்கள் கொண்ட இந்த ராச்சியத்தில்? 

ராஜகுமாரி, விக்ரமுக்கு நிகழ்ந்தது அத்தனையும் தெரியாமல் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தாள். வெளியே ஆரவாரம் இவள் அறையில் லேசாகத்தான் கேட்டது. விக்ரமை நடுத்தெருவில் தரதரவென்று இழுத்துச் செல்வதை அவள் பார்த்திருக்க முடியாது. வேகு வேகென்று ஓடிவந்து ரமாதேவி தான் எழுப்பினாள், 

“என்ன?” என்று கேட்டாள் கண்ணைத் திறந்ததும். 

“உடனே வா. ஒரு காட்சியை நீ பார்த்தே ஆக வேண்டும்.” என்று அவளைத் தூக்கம் விலகாத கண்களுடன் தரதரவென்று இழுத்துச் சென்று நீண்ட காரிடாரை கடந்து ஒரு சன்னலுக்கு அழைத்துச் சென்று காட்டினாள். ரமாதேவிக்கு அவ்வளவாக சலாமி பாஷை வாராதுதான். இத்தனை நாள் ராஜாவின் லாயத்தில் வாழ்ந்தாலும் அவளுக்கு இந்தப் பாஷை சரியாகப் பிடிபடவில்லை. ஏதோ சைகையும் சலாமியும் கலந்துகட்டியாக ராஜகுமாரியிடம் சொன்னாள். 

“இதோ பார். அந்த இளைஞனுக்கு மரணதண்டனை கொடுக்கப் போகிறார்கள்… எல்லாம் உன்னால்தான்.” 

“அப்படியா?” 

“ஆம், உன் அந்தரங்கத்துக்கு அவன் வந்திருந்ததால் தான் ராஜாவுக்குக் கோபம் வந்து…” 

“அய்யோ! இப்போது என்ன செய்வது?” என்று ராஜகுமாரி கையை உதறிப் பதறினாள்.

“என்ன செய்வாயோ, அவனை விடுதலை பண்ண வேண்டியது உன் கடமை. பொறுப்பு.” 

ராஜகுமாரி யோசித்தாள், “ஒன்று செய்,” என்று அறைக்குப் போய் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்து, “இதைக் கொண்டு போய் எலிக் கோவிலுக்கு எதிரே உள்ள தெருவில் இரண்டாவது வீட்டில் வசிக்கும் என் மெய்க்காப்புப் படைத் தலைவனிடம் கொடு உடனே!” 

ரமாதேவி அதை எடுத்துக் கொண்டு ஓட. ராஜகுமாரி சட்டென்று உடை மாற்றிக் கொண்டாள். 

அவளுக்கும் வேலையிருந்தது. 

விக்ரம் அந்த நடுமைதானத்தை நெருங்க நெருங்கக் கூட்டம் அதிகரிக்க, அவர்கள் மிகுந்த ஆரவாரத்துடனும் ஆர்வத்துடனும் அவனருகே வந்து தொட்டுப் பார்த்தார்கள். விக்ரமுக்கு மயிர்க் கணுக்கள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டன, சற்று உயரமான ஒரு மேடையில் சின்னதாக ஒரு பீடம் இருந்தது. அதனருகே கைகட்டி ஒருத்தன் காத்திருக்க. அவனருகே சுமார் இரண்டு இரண்டரை அடி நீளத்துக்குக் கூர்மையாக ஒரு வெட்டரிவாள் காத்திருந்தது. 

விக்ரம் காத்திருக்க, அவனுக்கு முன்னால் மற்றொரு குற்றவாளியைக் கொண்டு வந்தார்கள். அவனுக்கும் இன்று மரண தண்டனை என்று தெரிந்தது. மதகுரு குற்றவாளியின் அருகில் வந்து அவன் மேல் புனிதமாக எதையோ தூவி நெற்றியில் போட்டார். அவர்களது கிரந்தங்களிலிருந்து எதையோ ஓதினார். வெட்டரிவாள்காரன் தயாராக இருக்க, விக்ரம் பின்னங் கைகள் முதுகுக்குப்பின் பிணைக்கப்பட்டான். மண்டியிடுமாறு சொல்லி, தலையைப் பத்திரமாக நிதானமாக அந்தப் பலிபீடத்தின் மேல் வைத்தார்கள். 

சட்டென்று அந்த இடத்தில் குழுமியிருந்த ஆயிரம் பேரும் மௌனமாக ராஜாவின் திசையைப் பார்க்க விக்ரமும் நோக்கினான். 

ராஜாவின் அருகில் ராஜகுமாரி நின்று கொண்டிருந்தாள். 

ராஜா சைகை செய்ய, 

“கக்!”

இந்தச் சப்தத்தை விக்ரம் தன் வாழ்நாளிலேயே இதுவரை கேட்டதில்லை. சுத்தமான ஒரே வெட்டில் தலை உருண்டது. குபுக்கென்று ரத்தம் பொங்க விக்ரம் தன் பின்னங்கழுத்தைத் தடவிக் கொண்டான். அந்த உடல் சற்று அசைவதைக் கவனித்தான். 

“விக்ரோம்!” 

மேடைக்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டான். 

அத்தியாயம் – 17

விக்ரமுக்கு நிஜமாகவே இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை. ராஜகுமாரி ஏதாவது ஏற்பாடு செயதிருக்கத்தான் வேண்டும். என்ன ஏற்பாடு? இந்தக் காட்டுக் கும்பல் தன் ரத்தத்தைப் பார்க்கப் பிடிவாதமாகக் காத்திருக்க, சங்கிலிகளை எல்லாம் உடைத்துப் பீறிட்டு வெளியேற அவன் ஒன்றும் சாம்சன் இல்லை. 

மதகுரு அவன் அருகில் வந்து வெற்றாகப் புன்னகைத்தார், அருகில் வந்து மந்திரம் ஓதுவதற்குப் பதில், “ஏண்டா டேய், என்னை மொட்டைன்னில்ல? பாரு வெட்டு என்னமா விழப் போவுது, சும்மா வாழைக்கா சீவறாப்பல! ரத்தம் அதிகம் வராது, அதுக்குள்ள செத்துப் போயிருவ. நல்ல தேச சேவை! சொர்க்கத்தில் போயி தேவர்களுக்கெல்லாம் கஸரத்து செய்து காட்டு,” என்று துக்கிரித்தனமாகச் சிரித்தான். நெற்றியின் பொட்டு இட்டு, கையிலிருந்து புனித சாமான்களை ஊதி விலகு முன் விக்ரமின் அருகில் குனிய, அவன் கொத்தாக அவன் முகத்தில் எச்சில் உமிழ்ந்தான். குரு துப்பாக்கிக் கையைச் சொடுக்க. வெட்டரிவாள்காரன் தன் மரணாயுதத்தைத் தூக்க, கிடைத்த சூரிய ஒளியில் அது மின்னியது. விக்ரமின் மயிர் விலக்கப்பட்டுத் தலை பீடத்தின் மேல் வைக்கப்பட்டது. 

விக்ரம் கண்ணை மூடிக் கொண்டான். 

அரிவாள் உயர்ந்தது ஒரே… 

அதற்குச் சற்று முன்பே அந்தச் சலசலப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த நாற்சந்திக்கு அந்தக் கூட்டம் அதிகம்தான். அதனுள் ஒரு சிறுத்தைப்புலி உள்ளே புகுந்துவிட்டால்? ‘டூட்டு’ என்று சற்று முன் வாசகர்களுக்கு அறிமுகமான சிறுத்தைப் புலி இப்போது கண்ட மேனிக்குக் கூட்டத்தின் ஊடே செல்ல கூட்டம் கட்டுக்கடங்காததாகி, பல பேர் கிலியில் உடனே கிடைத்த பாதுகாப்பு ஸ்தலமாகிய பலிபீடத்துக்கு மேல் ஏறிக் கொள்ள, புலி இங்குமங்கும் ‘கிர்ர் கிர்ர்ர்’ என்று மீசை உறும், விக்ரமை வெட்ட வேண்டியவன் வெட்டிரிவாளுடன் தள்ளப்பட்டான். விக்ரம் அதே சமயம் ஓரிரு காவலர்கள் தன் கைப்பிணைப்புக்களை கன்ஃப்யூஷன் இடையில் விடுவிப்பதைக் கவனித்தான், “தாங்ஸ்ப்பா” என்று சொல்லி, “கொஞ்சம் லேட்டு, பரவாயில்லை.” என்றான். 

கூட்டத்துக்குள் தாவிச் சரசரவென்று கோட்டை வாசலை நோக்கிச் செல்லும் அவனை ஒருவிதமாகத் தள்ளித் தள்ளிக் கூட்டத்தின் விளிம்புக்கு யாரோ அழைத்துச் செல்வதை உணர்ந்தான். “கிரேட்! ராஜகுமாரி என்ன மாஸி! தாங்க்ஸ்! ப்ரீத்தி எங்கே? என்னை எங்கே இழுத்துச் செல்கிறார்கள்?” 

ஆரவாரத்தைக் கடந்ததும் ஒரு தெருவின் இறுதியில் ஓர் ஓட்டகம் காத்திருந்தது அதன் முதுகில் ஜமக்காளம் எல்லாம் அமைக்கப்பட்டு வாட்டர் பாட்டில், ஆகார வஸ்துக்கள் எல்லாம் வைத்துச் சுமார் ஒரு வார பிக்னிக்கிற்குத் தயாராக இருந்தது. விக்ரமை ஏற்றிக்கொள்ள மண்டி போட்டுக்கொண்டிருந்தது. அவன் ஏறிக்கொண்டதும் இரண்டாய் நிமிர்ந்தது. விக்ரமுக்கு அதை எப்படி ஓட்டுவது என்று ஐடியாவே இல்லை. ஆனால் இந்தப் பைத்தியக்காரத் தேசத்தைக் குதிரைகளாலோ, மோட்டார் காராலோ கடக்க முடியாது. இதுதான் சௌகரியம் என்று தெரிந்து ஏதோ குதிரை சவாரி ஞானத்தில் அதை இடது பக்கத்தில் காலால் தூண்டிப் பார்த்தான். சுமாரான ஸ்பீடில் கிளம்பியது. எதிரே பார்த்து மலைத்தான் பூரா பூரா மணல் பாலைவனம்! இதுவரை யாருமே அடி எடுத்து வைக்காதது போல் வெள்ளை மணல் சல்லா! 

ஒட்டகம்தான் சரி, வேற எதுவும் இங்கே உதவாது. விக்ரம் திருப்பிப் பார்த்தான். அவனுக்கு உதவிய காவலர்கள் சலாமியா பாணியில் டாட்டா காட்டிக் கொண்டிருந்தார்கள். 

“நன்றி நண்பர்களே. எப்போதாவது சந்திக்கலாம்.” என்று இரண்டு கையையும் ஒட்ட வைத்து உயர்த்திக் காட்டினான். அவர்களும் அப்படியே செய்தார்கள். ராஜகுமாரியின் அந்தரங்கக் காவலர்களாக இருக்க வேண்டும். அவள் தான் அனுப்பியிருக்க வேண்டும். அவள் உடல் ஸ்பரிசம் ஞாபகம் வந்தது. உடனே ப்ரீத்தியின் ஞாபகம் வந்தது. ப்ரீத்தி எங்கே? அவளை எங்கே. எப்படி, என்ன செய்யப் போகிறார்களோ? ப்ரீத்தியை விட முக்கியம் நான் பிழைத்து ராவுக்கு அவசரத் தகவல் கொடுப்பது! 

சூரியன் காலை எட்டரை மணிக்கோணத்திலேயே இத்தனை சூடாக இருந்தது. அந்த ஒட்டகம் மந்த கதியில் தான் சென்றது. நாலாபுறமும் மணல், மணல், காம்பஸ் இல்லாமல் எங்கே போவது? ஒட்டகத்துக்குத் தெரியுமா? உள்ளே உள்ளே மணலில் அதன் பாதம் அதுங்க, அதுங்க பஸக் பஸக் என்று வினோதமான சப்தம் வரச் சென்றது. சென்றது. எங்கே எந்தத் திசை? சூரியனை நேர் எதிரே வைத்துக் கொண்டு செல்லலாம்! நேர் கிழக்கு. 

விக்ரம் மணலில் தன் ஒட்டக நிழலை நோக்கினான். அனத முன்னால் வைத்துக் கொண்டு நடந்து செல்லச் செல்லக் கிழக்குத்தான்! கிழக்கேதான் இந்த நாட்டின் எல்லை தெரியும்! நிழல் குட்டையாகிக் கொண்டிருக்க, தாகம் எடுக்க விக்ரம் அருகே இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்தான். 

“டிய்யூங்!” 

சப்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தான். தூரத்தில் ஒரு கறுப்புக் குழப்பமாக நான்கைந்து ஒட்டகங்கள் தெரிந்தன. விக்ரம் தன் இரண்டு கால்களாலும் உந்தினான். அது சப்தத்துக்கோ அல்லது உந்தலுக்கோ பயந்து கொண்டு சற்று வேகமாக ஓட ஆரம்பித்தது. வேகமாக என்றால் அப்படி ஒன்றும் குதிரை போல இல்லை விக்ரமுக்கு அது ஓடும் வேகம் போதாது என்று புரிந்தது. பின்னால் உள்ளவர்கள் குதிரையா ஒட்டகமா தெரியவில்லை. ஒட்டகமாகத்தான் இருக்க வேண்டும். குதிரை இந்த மணலில் கொண்டி போட்டு விடும். 

“யோவ் ஒட்டகண்ணா! கொஞ்சம் வேகமாகப் போயேன்!” 

பின்னால் வந்த நான்கு பேர் சுகிர்தராஜாவும் மதகுருவும் இரண்டு முகமூடிக் காவலர்களும், அவர்களில் ஒருவன் சலாமியில் பேசினான். 

“மொட்டை என்னடா சொல்றான்?” என்றான்.

”புடிக்க முடியாதுங்கறான்! ஆனா அவனால் தப்பிக்க முடியாதுங்கறான்!” 

“சும்மா பேசாதிங்கடா. ரைஃபிளை எடுத்து வெச்சுச் சுடுங்கடா சோமாறிங்களா, கொடுரா ரைஃபிளை குறிபார்த்து ரொம்ப நாளாச்சு!” 

ரைஃபிளின் டெலஸ்கோப்மூலம் விக்ரம் தெளிவில்லாமல் ஒருமாதிரி ஒட்டகத்துடன் குண்ட்ஸாகத் தெரிய, “டிய்யூங்”. 

ஒட்டகம் தடுமாறி ஓடுவது தெரிய, ககிர்தராஜா சிரித்துக் கொண்டான். “பட்டுருச்சு! ப்ராக்டிஸ் இருக்குது வாத்யாரே! குரு! மதகுரு! யாரு? அவனைக் கழுத்தை வெட்டிப் பாதி பாதியா பன்றதுக்குள்ளே யாரு அவனுக்கு உதவி செய்திருப்பாங்கறே? உள்ளுக்குள்ள புலியை விட்டுட்டு கலாட்டா பண்ணி?” 

“அந்த ராஜகுமாரிதான் அண்ணே” 

“என்னவாம்? காதலா? இந்தக் காதல் படுத்தற்பாடு என்னங்கறே! குரு. இனிமே பைத்தியக்கார ராஜா. அவன் பொண்டாட்டிங்க. தங்கச்சிங்க எல்லாம் போதும்! திரும்பப் போயி பேசாம ராச்சியத்தை மடக்கிர வேண்டியதுதான்! எனக்கு அந்த இடம் பாக்டரி வெக்க சலாமியா வேணும். யுரேனியம் கிடைக்குது! பாக்கெட் சைஸில ராக்கெட் பண்ண வித்துக் காசாக்கணும்! சும்மா பொட்டைக் காட்டில் ஒண்டியானை கேனத்தனமாத் துரத்திக்கிட்டு இருக்க வேண்டாம்!”

“இந்தப் பாலைவனத்தில் உள்ள போனவங்க இதுவரைக்கும் வெளிய வந்ததில்லையாம் அண்ணே! ஏன்னா கொஞ்ச நேரம் கழிச்சு வெய்யில் ஏறிச்சுன்னா பித்துப் புடிச்சுத் திரும்பத் திரும்ப ஒரு வட்டத்துலேயே போயிக்கிட்டு இருப்பாங்களாம்! உச்சி வெய்யில்லயாம்!” 

கீழே காய்ந்த ரத்தம் மணலில் தெரிந்தது. 

“பட்டுருச்சு! நான் சுட்டது பட்டுருச்சு!” பைனாகுலரில் சுகி பார்க்க, அந்த மணல் சமூத்திரத்தில் ஏற்ற இறக்கத்தில் யாரையுமே காணோம். 

“தேடிப் பார்க்கலாமா விட்டுரலாமா?” 

ஒரு காவலன் கீழே இறங்கி ரத்தம் கலந்த மணலைக் காட்டினான், 

“சமாதி! உயிரோட இருந்தாலும் இந்தப் பட்டை உரியற வெய்யில்ல முணு மணி நேரம் தாங்க மாட்டான். வா அவசரமா சோலியிருக்கு அந்தப் பயல அப்றம் கழுகுகள்ளாம் கொண்டாந்து போடும்! இத பார் பறக்குது!” 

அந்த இடத்திலிருந்து இப்போது விக்ரம் ஒரு மைல் தூரத்தில் இருந்தான். உண்மையாகவே கழுகுக் கூட்டங்கள் அவன் மண்டைக்கு நேர் மேலே பறக்க ஆரம்பித்தன. நிச்சயம் ஆன காலி என்று எதிர்பார்த்தன. ஓட்டகத்தின் காலில் பட்ட அடியால் அது விந்தி விந்தி ரத்த ரத்தமாக நடந்து வந்து ஓர் இடத்தில் நின்று நாலு சுற்றிச் சுற்றிச் செத்து வைத்தது. விக்ரம் அதன் முதுகிலிருந்து இறங்கினான். நடுப்பகல்! வெண்கோபராஜனாகச் சூரியன்! தன் தண்ணீர்ப் பையை எடுக்கும் போது கைகள் நடுங்கின. சுற்றுமுற்றும் பார்த்ததில் கிழக்கு, மேற்கு, தெற்கு வடக்கு பாலைவனம்தான்! சூரியன் மண்டை மேலே! எது கிழக்கு? தண்ணீரை எடுத்து வாயில் ஊற்றிக் கொள்ளும் போது திராணியில்லாத கரங்களால் நழுவி அத்தனை தண்ணீர கொட்டிப் போய் உடனே உடனே காய்ந்து விட்டது! 

“மைகாட்! ஒ மைகாட்” விக்ரம் அவசர அவசரமாக அந்தத் தண்ணீரை அள்ள முயன்றான், தண்ணீர் இல்லை என்று தெரிந்ததும் தாகம் அதிகரித்தது. சற்றுத் தள்ளிக் கிடந்த ஒட்டகத்தைக் கொத்திப் பகிர்ந்து கொள்ள, அந்த ராஜானிக் கழுகுகள் கீழே டைவ் அடித்து உட்கார்ந்து முன்னுரையாகச் செத்த ஒட்டகத்தின் வயிற்றுப் பாகத்தில் ஒரு கொத்துக் கொத்திக் குடலைத் தேடின! விக்ரமின் மேலும் ஒரு பறவை பறந்தது, உனக்கு இன்னும் எத்தனை நிமிஷம் என்று கேட்பது போல விக்ரம் சுற்றிலும் பார்த்தான். அந்த மணற் பிரதேசத்தில் அடையாளங்களே இல்லை. தூரத்தில் ஜலம் மிதந்தது, கானல் நீர் எனறு தெரியும். இந்தப்புறம் அது என்ன ஒரு மைலா நூறு மைலா? ஒரு பனைமரமும் நிழலும் தென்பட்டன. அதன் கீழும் ஈர நடனம்? இது நிச்சயம் நிஜ நீராக இருக்கவேண்டும்! 

விக்ரம் தன்னை அங்கே கஷ்டப்பட்டு இழுத்துக் கொண்டு சென்றான், நாவெல்லாம் வறண்டு பற்களுக்குள் மணல் தெரிந்தது. தலையை மூடிக்கொள்ள வேண்டும். முகத்தை மூடிக் கொள்ள வேண்டும், எங்கேயோ படித்த ஞாபகம் இருந்தது. பாலைவனங்களை இதுவரை வால்ட் டிஸ்னியிலும் புத்தகங்களிலும் தான் சந்தித்திருக்கிறான். இப்போது முழுசாகப் பாலை !நிசப்பாலை! லேசாக விசிறிய மணல் நடனம் அந்த உக்கிரமான வேளையிலும் வசீகரமாகத்தான் இருந்தது, தூரத்தில் பனை மரமா ஈச்ச மரமா என்னவோ! அதை அடைந்தால் தான் பிழைக்க முடியும் அதன் மடியில் கொஞ்சம் நிழல், கொஞ்சம் தண்ணீர்! நிச்சயம் இருக்கும்! விக்ரம். உன் பலம் உனக்குத் தெரியாது! சாகாதே! சாகாதே! இன்னும் முன்னூறு அடி! மெல்ல மெல்ல விக்ரம் விக்ரம் என்று பலர் அழைப்பது போல இருந்தது. காதுக்குள் காற்று சுழித்தது. ஊணையிட்டது. நடையின் ஒவ்வோர் அடியும் பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. 

அந்தமரமும் மரநிழலும் நிஜம் தான்! நிழலில் மினி நீரூற்று! அதிகம் ஆழமில்லாவிட்டாலும் தெளிவாக இருந்தது. விக்ரம் அதனருகில் தடுக்கித் தடுக்கித் தடுமாறிச் சென்று படுத்துக் கொண்டு விளிம்பில் உதட்டை வைத்து உறிஞ்சத் துவங்கும் போது அருகே மூச்சு விடும் சப்தம் கேட்டது “யாரு?” என்று திரும்பினான். யாருமில்லை! முதல் நீர்த்திவலைகளில் நாக்குப் பதியும்போது அந்த புஸ்ஸுடன் ஏதோ ஒரு கிலுகிலுப்பை போல சப்தம் கேட்க விக்ரம் தன் சகல நரம்புகளும் உயிர் பெற்றுப் புரண்டு திரும்ப – 

அந்தப் பாம்பு வகையை விக்ரம் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை. ஒரு மாதிரி கட்டு விரியன்போல மணலில் சைடுவாகில் கோடு போட்டுக் கொண்டு வந்தது. அதே சமயம் தன் வாலைச் சிலிர்த்துக் கொண்டு அதன் மூலம் கிடைத்த கிறுகிறுப்பை சப்தத்தின் ஊடே மூச்சு விட்டுக் கொண்டு…

“மணி! இங்கேயே வந்திட்டியா?” என்றான விக்ரம் அவனுக்கு மெட்ராஸில் வளர்த்த வி.கே.மணி என்று பெயர் கொண்ட பாம்புதான் சலாமியாவுக்கு வந்திருக்கிறது என்று வெய்யில் குழப்பம் ஏற்பட்டு விட, அதை எடுத்து முத்தம் கொடுத்த போது அது அவனைச் சிக்கனமாகக் கையில் கடித்து விட்டது! 

அத்தியாயம் – 18

பாம்பு தீண்டிய மயக்கத்தில் விக்ரமுக்குத் தான் இருக்கிறோமா இல்லையா. இது சலாமியாவா சென்னையா. இப்போது காலையா மாலையா போன்ற விஷங்களில் எல்லாம் குழப்பம் ஏற்பட்டு உலகம் பூராவும் சல்லாத் துணியால் பண்ணியது போலத் திரித்திரியாக நினைவு சுழன்றது நாக்கு உலர்ந்து லேசாக வாயோரத்தில் ரத்தக் கட்டிகள் தெரிந்தன. இதுதான் செத்துப்போவது என்பதா?

அவனுள் வனிதாமணி என்று அவன் மனைவியுடன் பாடின ராகம் ஒலித்தது. டுமில் என்று துப்பாக்கி அவள் நெற்றியில் ஒலித்தது. கம்ப்யூட்டர்கள் பச்சைத்திரையில் எழுத்துகள் எழுதிச் சிலிக்கன் நடனமிட்டன. ராக்கெட்டின் கவுண்ட்டவுன் கேட்டது. டென், நைன், எய்ட், ஏழு. ஆறு. அஞ்சு, நாலு, மூணு, ரெண்… 

திடீர் என்று எதுவுமே கவலை தரவில்லை. வெல் வெட் ஒளிரும் ஒரு விண்வெளியில் நழுவி நழுவிச் சரிய மெல்ல மிக மெல்ல… 

“விக்ரம்!”

“யா.” 

“ஒண்ணுமில்லை. உன் பேரைக் கூப்பிடணும் போல இருந்தது.” 

“விக்ரம்!” 

“விக்ரம்!” 

யாரோ அவன் கையில் பாம்பு கடித்த இடத்தில் ஜிவ் வென்று உறிஞ்சி உறிஞ்சித் துப்ப மெல்லக் கண் திறந்தான். இது இது மீராவா? இல்லை ப்ரீத்தியா? இல்லை ராஜகுமாரியா? அந்தச் செம்பட்டைக் கூந்தல் தொகுப்பு நிமிர்ந்து விக்ரம் உறிஞ்சினதைத் துப்பிவிட- 

ராஜகுமாரி “விக்ரோம்” என்று சிரித்தாள்.

“இது யார் கனவு? உங்கள் கனவா, என் கனவா? நம்மிருவரில் யார் உயிருடன் இருக்கிறோம்?” 

ராஜகுமாரி “ஸ்ஸ்” என்று உதட்டில் விரல் வைத்து, “பேசாதே” என்றாள். மெல்ல “விக்ரம்! மகிழ்ச்சி” என்றாள். 

“பார்டன் மி?” 

அவள் தன் ஏராளமான உடைகளிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தாள். “முப்பது நாட்களில் தமிழ்!” 

விக்ரம் தன்னைச் சுற்றிலும் பார்த்தான். கரடு முரடாக காட்டுத்தனமாக இருந்தது. ஒதுக்குப்புறமாகக் குகை போல இருந்தது. பாலைவன விளிம்பு தெரிந்தது. சலசலப்புக் கேட்க அருகே துல்லியமான நீர் நிலை. தெரிந்தது. அதனருகே ஓரிரு குதிரைகள் கட்டியிருக்க, காவலர்கள் இருந்தனர். 

“முன்னபின்ன குதிரை ஏறினதில்லையா. ஒவ்வொரு எலும்பும் தனித்தனியா வலிக்குது!” 


“யோவ் உனக்கு அதிர்ஷ்டம்யா. உன்னைக் கழுகெல்லாம் கொத்தி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிச் சாப்ட்டிருக்கும். தக்க சமயத்தில் வந்து உன்னைக் காப்பாத்தினாங்க.” 

“நன்றின்னு… சொல்லுங்க துபாஷ்.” 

“நீ அவங்களை காப்பாத்தினதுக்கு அவங்களும் காப்பாத்திட்டாங்க.” 

“அவங்க கிட்டச் சொல்லுங்க. மதகுரு ராஜகுடும்பத்தைச் சக்கையா ஏமாத்திக்கிட்டு இருக்கான்னு. இந்தியாவிலிருந்து ஒரு ராக்கெட்டைத் திருடிக் கொண்டு வந்து கோவில்ல வெச்சிருக்கான்னு சொல்லுங்க” 

“சொல்றேன், சொல்றேன். நீங்க படுத்துக்கங்க!” 

“இந்தம்மா பிரதர்கூட உடனே போய்ச் சொல்லணும்னு சொல்லுங்க. ராஜா தெரியாம இருக்காரு” 

ராஜகுமாரி அவன் பேசுவதைக் கண்கொட்டாமல் பார்த்திருந்து விட்டு லேசாய்க் கை சொடுக்க துபாஷ் ‘படுத்துக்கய்யா, தொந்தரவு பண்ணாதே’ங்கறாங்க, படுத்து இன்னம் கொஞ்சம் தூங்கு.” 

விக்ரமூக்குக் களைப்பாக இருந்தாலும் ராக்கெட் அக்னிபுத்திரன், மதகுரு என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தான். ராஜகுமாரி அவன் உதடுகளின் மேல் தன் நளின விரல்களை வைத்துத் தடவினால் விக்ரமின் கண்களை மூடினாள். மறுபடி அவனை ஒரு விதமான அரைத்துக்கம் ஆக்கிரமிக்க அவ்வப்போது விழித்த போது ராஜகுமாரி கலர் கலராகத் தெரிந்தாள். 

விக்ரம் ஏதோ ஒரு ரோமாபுரி வீரன் போல் உடையணிந்திருந்தான். விடுவிடுவெனக் கம்பீரமாக நடப்பதில் அவனுக்குச் சிரமமே இல்லை. ஏழெட்டுப் பாங்கியர் அவனுடன் நடந்துவந்து அவனை எங்கோ அழைத்துச் சென்றனர். வெள்ளைச் சலவைக்கல் அரணமனை நடுவே சிங்கத்தின் வாயிலிருந்து கொட்டும் தண்ணீர், நீச்சல் குளம், அதோ தூரத்தில் குங்கும் நிற உடல் பூரா உடையில் ராஜகுமாரி அவனையே பார்த்துக்கொண்டிருக்க, இப்போது அவர்கள் கானத்தில் மொழிப் பிரச்சனை இல்லை. அந்தப் பெண்கள் அவனுக்கு எண்ணெய் தேய்த்து உடலை உருவிவிட அவளுக்கும் மற்றொரு கோஷ்டிப் பெண்கள் சிசுருஷை செய்தார்கள். 

விக்ரமின் அங்கி கழற்றப்பட்டது. அவள் மேலாடை நீக்கப்பட்டது. நகைகள் நீக்கப்பட்டன. இருவரும் அருகருகே வர அந்தப் பணி பெண்கள் விலக, லேசாக மிக லேசாக ஒரு குழந்தைத் தென்றல் மலர் மொக்கை முத்தமிடுவதுபோல அவர்கள் முத்தமிட்டுக் கொள்ள, இருவரும் அந்த நீரலைகளுக்குள் சரிய, அந்த நீல மயக்கத்தில் ஒருவருடன் ஒருவர் பின்னிப் பிணைந்து கொள்ள, தம்சக் தம்சக் என்று அவர்கள் இதயங்களின் துடிப்பு பெரிசாகக் கேட்க “மீண்டும் மீண்டும் வா” என்றாள் ராஜகுமாரி. “வேண்டும் வேண்டும் தா” என்றான் விக்ரம். 

பிஹிர்ர்ர்! குதிரை சிரிப்பது கேட்டுக் கண் விழித்தான். முதுகில் சலாமியா பால சூரியன் சுட, அவன் அருகே ராஜகுமாரி மற்றொரு குதிரையில் வர துபாஷ் சற்றுப் பின் தங்கி வந்தான். 

“ராஜகுமாரி கிட்ட எல்லாம் சொன்னியா துபாஷ்?” 

”சொன்னங்க. நம்பமாட்டங்கறாங்க. மதகுரு அப்டியெல்லாம் செய்யமாட்டாராம்.” 

“முதல்ல ராஜாகிட்ட போயி நடந்ததெல்லாம் சொல்லணும், கோவில்ல எந்த இடத்தில் ஒளிச்சு வெச்சிருக்காங்கன்னு சொல்லிடு. சாமி மாதிரி ஒரு பொம்மை இருக்குதே அதன் அடியில் பாதாளம். அதில இருக்குது! ஒரு பாக்டரியே வெச்சிருக்கான் சுகிர்தராஜான்னு ஒரு ஆளு. அவன் தம்பிதான் மதகுரு. நல்லாத் தமிழ் பேசறான். போலி அவன்! எல்லாம் சொல்லு துபாஷ்”. 

“இப்ப நேரா அங்கதானே போறோம். எல்லாத்தையும் புட்டுப்புட்டு வெச்சுரலாம். அம்மா உன்னை மட்டும் நம்பறாங்க. நம்பறதோட மட்டுமில்லை, என்னவோ உன்னை அப்படிப் புடிச்சுப் போயி அங்குலம் அங்குலமா விரும்பறாங்க. எங்களையெல்லாம் வெளிய போகச் சொல்லிட்டு மூணு மணி நேரம் உன்னையே நீ தூங்கறதையே பார்த்துக்கிட்டு இருந்தாங்கய்யா!” 

விக்ரம் அவளைப் பார்த்தான். கண்களால் ஒரு முறை சிரித்தாள். பக்கத்துக் குதிரையிலிருந்து கை நீட்டி விக்ரமை ஒருமுறை தொட்டுக் கொண்டான். “விக்ரம்” என்றாள். 

“ஊருக்குப்போன உடனே கல்யாணம்னு தோணுது. அரச குடும்பத்துக்கு உன்னை மாற்றிடுவாங்க, என்னய்யா மதம் நீ?” 

குதிரைகள் மந்த கதியில் செல்ல விக்ரம் இங்குமங்கும் நோக்கினான். ஒரு கிராமம் போல இருந்தது. “துபாஷ், இது என்ன கிராமம்? யாருமே இல்லியே ஊர்லே?” 

“அதான நானும் பார்க்கறேன்! வாத்யாரே எதாவது சந்தையா?”

“துபாஷ், அங்க பாரு!” 

விக்ரம் காட்டிய திசையில் ஒரு திடுக்கிடல் இருந்தது. மரக்கிளையில் ஒருவன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான். 

ராஜகுமாரி சற்று மிரண்டு விக்ரமின் அருகே வந்து கூவினான், மற்றொரு மரத்தில், மற்றொருவன் தொங்கிக் கொண்டிருந்தான். மற்றொரு மரத்தில் மற்றொருவன், சீஸனில் காய்த்தது போல மரத்துக்கு மரம் உடல்கள்! 

ஒரு உடலின் கால்கள் தாழ்வாகத் தொங்கக் காட்டு நரிகள்…வேண்டாம்! “ஸம்திங் ராங்-துபாஷ் வாங்க. தலைநகருக்கு வேகமாப் போகணும்னு சொல்லுங்க.” 

ராஜகுமாரியும் குதிரையைக் கால்களால் இடர அது துடிப்புடன் புறப்பட கிராமத்தைக் கடந்தனர். 

தலைநகரில் வேலை நிறுத்தமா? அர்த்தாலா? எல்லா வீடுகளும் கடைகளும் மூடியிருக்க அவர்கள் வீதிகளின் ஊடே பீதியுடன் பிரயாணம் செய்து அரண்மனை வாசலுக்கு வந்தார்கள். காவலில் முகமூடிக் காவலர்கள் காத்திருக்க இவர்களைக் கண்டதும் வழிவிட்டார்கள். 

ராஜகுமாரி குதித்து இறங்கித் தர்பார் ஹாலுக்கு நேராக ராஜாவைப் பார்க்கச் சென்றாள். விக்ரம், “காட்! இட் ஸ் டூ லேட்” 

ராஜசபையில் ராஜ பீடத்தில் மதகுரு அமர்ந்திருக்க, பக்கத்தில் சுகிர்தராஜா சிகரெட் குடித்துக்கொண்டு சாமரம் வீசும் பெண்களைப் பார்த்தான். 

“எல்லாக் குட்டிங்களையும் மாத்திப் புதுசு போட்டுருனும். அததுங்களுக்கு டயர் டயரா சதை. கொண்டாய்யா ராஜாவை. கோர்ட்டில் தீர்ப்புக் கொடுத்துரலாம். பயப்படாத!” 

ராஜகுமாரியும் விக்ரமும் வருவதைப் பார்த்து “வாய்யா ஜேம்ஸு! உனக்குச் சாவே கிடையாதா? கரப்பாம் பூச்சியா நீ? வந்து சேந்துட்ட பார்த்தியா!”” 

“ராஜா எங்க?” 

“இதோ ராஜ மரியாதையோட வராரு! புடிரா இவனை!” 

விக்ரம் சுற்றிலும் பார்த்தான். எல்லா வாயில்களிலும் காவலர்கள் இருக்க, “எப்டி சௌகரியம்? கொஞ்சம் ‘டிஷ்யும் டிஷ்யும்’ சண்டை போட்டுட்டு மாட்டிக்கிறதா உத்தேசமா, இல்லை, உடம்பை அலட்டிக்காம மாட்டிக்க உத்தேசமா? பாரு! எல்லாம் ஆயிருச்சு, ஆட்சி மாறிருச்சு! சலாமியா இப்ப என் பாக்கெட்டில! மொட்டைதான் ராஜா! என் தம்பி! அமிர்தராஜா!” 

விக்ரம் தன்னருகில் மூன்று பேர் வந்து பாதுகாப்பாக நிற்பதையும் ராஜகுமாரி இங்குமங்கும் பார்த்து விழிப்பதையும் கவனித்தான். அவளுக்குச் சங்கிலி பிணைக்க வந்தார்கள். சுகிர்தராஜா “ச்ச்ச், லேடிஸ் எல்லாம் நல்லா நடத்த வேண்டாமாப்பா? பொம்பளைக்குப் போயிச் சங்கிலியா?” 

சுகி அவள் முகத்தைத் தன் மூக்கால் வருட அவள் துப்பினாள். 

“சினிமா பாத்துப் பாத்து வில்லன் முகத்தில் துப்பற பழக்கம் ஜாஸ்தியாயிருச்சு! பாரு, உன்னைக் கற்பழிக்க எத்தனை நேரமாகும்?” 

மதகுரு, “அண்ணே! அதுக்கு நேரமில்லை. தீர்ப்பு சொல்லிருங்க. நான் மொழிபெயர்த்து ராஜாவுக்கு சொல்லிர்றேன்.” என்று கைதட்ட, ராஜா சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்டார். ராஜகுமாரி “அய்க்கா! (அண்ணா)” என்றாள். 

“அய்க்காவுமில்லை, பொய்க்காவுமில்லே. அங்கேயே நில்லு, கோளு ராஜா, உன் நாடு இனிமே உன்னுது இல்லை, என்னுது, மொழி பெயர்றா மொட்டை” என்றான் சுகிர்தராஜா. 

‘பர்ர்ர்ர்’ என்றார் ராஜா.

“பதிலா உறுமலா?” 

“உறுமறான் அண்ணே.” 

“பாரு, உனக்குன்னு உன் உள் நாட்டில போனாப் போவுதுன்னு ஒரு ஜாகிர் கொடுக்கறேன். பேசாம விவசாயம் பார்த்துக்கிட்டு கிஸ்தி கொடுத்துக்கிட்டு இருந்துரு. உன் தேசம் எனக்கு வேணும்! ராக்கெட் பாக்டரி வெக்கணும். உன் நாட்டில யுரேனியம் கிடைக்குது!” 

மதகுரு அதை மொழி பெயர்க்க, ராஜா உணர்ச்சி வசப்பட்டு அங்கே சபையோரிடம் இருந்து தமிழ் ராணியை விளித்து மொழி பெயர்க்கச் சொல்லிவிட்டு சலாமியா பாஷையில் வீர வசனம் பேசினார். 

மொழி பெயர்த்த தமிழ் ராணி, “வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கிஸ்தி!” என்றாள். 

“த பாரு வெத்து குண்டு! எதுக்காக இந்த உடம்பைப் போட்டுகிட்டு இந்த இரைச்சல் இரையறே! விக்ரம், எங்ககூட வா! ராஜா நீயும்தான். வா, உன் மூக்கடியிலயே எப்பேர்ப்பட்ட பாக்டரி, பிரம்மாண்டமான பாக்டரி வெச்சிருக்கேன்னு காட்டறேன் பாரு!”

– தொடரும்…

– 80களில் குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்தது.

– விக்ரம் (நாவல்), முதற் பதிப்பு: மே 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *