கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 16,833 
 
 

(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம் – 13

“நம் இந்திய விருந்தினர்களின் ஆரோக்கியத்துக்கு.” என்று ராஜா கோப்பையை உயர்த்தி அந்தப் பானத்தை மடக்கென்று குடிக்க, விக்ரமும் ப்ரீத்தியும் அதே மாதிரி செய்தது தப்பாகிவிட்டது. ப்ரீத்தி ‘லொக் லொக்’ என்றும், விக்ரம் ‘உற்றார்” என்று தொண்டையைச் சரிபண்ண வேண்டியதாகி விட்டது. 

“துபாஷ். என்னய்யா டேஸ்ட்டு இது? இந்த அடி அடிக்குது!” என்றான் விக்ரம். 

துபாஷ். “இது முந்திரில் செஞ்ச பெசல் சாராயங்க, மெல்லக் குடிக்கணும். இல்லாட்டி எல்லா பாகங்களும் எந்திருச்சுரும்” 

பணிப்பெண்களின் சரசரப்பும் நடனப் பெண்களின் சலசலப்பும் வினோத சங்கீதத்தின் கலகலப்பும் குடித்த பானத்தின் சுறுசுறுப்பும் ப்ரீத்தியை நிறைய என்னவோ செய்ய, ‘யார்றா ழேய்’ என்று ஆரம்பித்தவள், “திஷ் இஷ் குட்,” என்றாள். 

“ஈஸி ஈஸி.” என்று அவள் புறத்தைப் பிடித்தான். 

“பன்னி தின்னக் கூடாது. தின்னவே கூடாது.” 

“ஓக்கே ஓக்கே!” 

சற்று நேரத்தில் தில்ருபாக்கள் சுரத்திழந்து, திரைச் சிலைகள் கலைந்து மிச்சம் மீதாரிகள் எங்கும் இரைந்திருக்க, அவரவர் அங்கங்கே படுத்திருக்க. திராட்சை ரசம் ஓடியதை ஒரு செஷையர் வகை பூனை வந்து நக்க, பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்தான் விக்ரம். எல்லோரும் ஒரு விதமான சுகப்தி அவஸ்தையில் புதுக்கவிதை போல் புரியாமல் படுத்திருந்தார்கள். ராஜா எப்போதோ யாரோ அன்றைய தினத்து ராணியுடன் படுக்கப் போய்விட ராஜகுமாரியையும் காணோம் “கம் ப்ரீத்தி”. 

நீண்ட சலவைக்கல் காரிடாரிவ் விக்ரம் நடப்பது எதிரொலித்தது. அவனே சற்றுப் பிறழும்படியாக மண்டைக்குள் முந்திரிப் பானம் வற்புறுத்தியது ப்ரீத்தி ஒரு கையில் செருப்பும் மற்றொரு கையில் விக்ரமைத் தொட்டுக்கொண்டும் நடந்தாள். “அவளோட என்ன பேச்சு உனக்கு? நான் காலைல ராவ்க்கு போன் பண்ணி சொல்லவே போறேன் நீ செய்யறது நல்லால்லைன்னு” 

‘”சரி” 

“கண்றாவி” 

விக்ரம் சும்மா இருக்க, “எது கண்றாவின்னு கேளு” 

“எது கண்றாவி?” 

“நீயும் அவளும் பார்த்துக்கிட்ட பெட்ரும் பார்வை! எனக்குத் தெரியாதா?” 

“ப்ரீத், யு ஆர் ஜெலஸ்.” 

“நான் ஏன் ஜெலஸ்? எனக்கு எவ்வளவோ பாய் ஃப்ரெண்டு.”

“ஓக்கே ஓக்கே! சொல்லியாச்சு.” 

“அவ கண்ணு. என்ன சொன்னே, நீச்சல் குளங்களா? டைவ் அடியேன்!”

அவள் புஜத்தைப்பிடிக்க விக்ரம் முற்பட, “டோண்ட் டச் மி,” என்று சீறினாள். விக்ரம் சிரித்தான். 

“எனக்கு உன் உதவியோ சகாயமோ தேவையில்லை.” 

”உதவி சகாயம் ரெண்டும் ஒண்ணுதான்” 

“நான் ரூமுக்குப் போறேன்.” என்று விறுவிறு என்று முன்னால் நடந்தாள். 

விக்ரம் புன்னகைத்து மெதுவாகத்தான் நடந்தான். பார்ட்டி ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் சுவாதீனமாக இருந்தான். போதை யில்லை. லேசாக விசில் அடித்துக்கொண்டே வர, ஒரு மூலை திரும்புமுன் ப்ரீத்தி படபடவென்று திரும்பி ஓடிவருவதைப் பார்த்தான். 

“என்ன ஆச்சு? தைரியமா போனியே? ரூம்ல எலியா?” 

“இல்லை, புலி.” 

”புலியா? எங்க?” 

“எதிர்த்தாப்பல வரது.” 

“நான்சென்ஸ்! நீ நிச்சயமா…” 

விக்ரம் பாதியில் நிறுத்திவிட்டான். எதிரே ஒரு புலி, சிறுத்தைப் புலி, அவர்களை உற்றுப் பார்த்துக்கொண்டே வந்தது. 

வாலை இங்குமங்கும் லேசாகச் சுழற்றிக் கொண்டே அவ்வப்போது வாயைத் திறந்து கோபக் கூர்மைப் பற்களைக் காட்டிக்கொண்டு… 

“விக்ரம், ப்ளீஸ் ஸேவ் மி!” 

விக்ரம் அப்படியொன்றும் புலிகளுடன் சண்டை போடும் அசகாய சூரளல்ல. அந்தப் புலி அவசரமே இல்லாமல் அவர்களை நோக்கி நடந்துகொண்டு வர நிமிர்ந்து. ‘நீ யார்?’ என்பதுபோல் பார்த்தது. 

“கடிக்குமா?” என்றாள். 

“கேட்டுச் சொல்றேன். ப்ரீத்தி. ஐ நீட் மை கன்.” 

“கன் கொண்டுவரலை. டின்னருக்கு எடுத்து வரலை?”

“இல்லை.” சுற்றுமுற்றும் பார்த்தான். இருட்டாக இருந்தது. பால்கனி ஏறிக் குதித்துவிடலாம் – ப்ரீத்தியை ஆனால் என்ன செய்வது? யார் புலியை ஏவி விட்டிருப்பார்கள்? யார் எதிரி? சுகிர்தராஜாவுக்கு தெரிந்திருக்குமா? இப்படி அரண்மையில் ஊடாட விடுவார்களா புலியை? இல்லை, ராத்திரி ரோந்தா? இந்த நாட்டில் எதுவும் சாத்தியம். தட்டில் மதகுருவின் எச்சிலை வாங்கிச் சாப்பிடும் ராஜா இருக்கும் ராஜ்யத்தில், புலி, சிங்கம். ஏன் மேசை நாற்காலி நடந்து வந்தால் கூட ஆச்சரியப் படக்கூடாது. 

புலி இப்போது நின்று அவர்களைக் கண்ணோடு கண் பார்த்தது. விக்ரமும் நின்றுவிட்டான். பாயப் போகிறதா? சுவரில் ஈட்டி இருக்கிறதா? “ப்ரீத்தி” 

“என்னைக் கூப்பிடாத. நான் செத்துப் போயிட்டேன்.” 

புலி அவர்கள் மிக அருகே நெருங்க. “ப்ரீத்தி, த பாரு.” என்று விக்ரம் சொல்ல ஆரம்பிக்க. அப்போது எதிர்பாராதது நிகழ்ந்தது. 

ஓர் அறையிலிருந்து “டூட்டு! டூட்டு!” என்று சப்தம் கேட்க, ராஜகுமாரி வெளிப்பட்டாள். விக்ரம் அவள் மேல் பாய்ந்து, “பி கேர்ஃபுல். டைகர் டைகர்,” என்றான். 

அவள் திரும்பிப் பார்த்துக் கொஞ்சலாக “டூட்டு! அக் அக்.” என்றாள் 

‘அக்’ என்றால் வா போலும்! அந்தப் புலி ஏதோ குச்சுநாய் போல் குழைந்து கீழே படுத்துப் புரண்டு ராஜகுமாரி நீட்டிய கையை நக்கிக் கொடுக்க, “சரிதான்! புலி வளக்கிறாளா?” 

“அப்படித்தான் தோணுது. நல்லவேளை, கன்னு கொண்டாரலை. இல்லைன்னா சுட்டிருப்பேன்.” 

“விக்ரோம்! டூட்டு” 

“ஓ எஸ்! டூட்டு!” 

‘டூட்டு இயாஹாத்!’ டூட்டு ஷேக் ஹாண்ட்ஸூக்குக் கை நீட்ட. விக்ரமுக்கு அதன் நகங்களைப் பற்ற உத்திரவாதமில்லாததால் “நைஸ்” என்று சொல்லிப் பைக்குள் கைவிட்டுக் கொண்டான். 

“பீத்தி?” 

“நாட் பீத்தி! ப்ரீத்தி!’ 

“நைஸ் நைஸ்.” என்று ராஜகுமாரி சிரித்தாள். 

“குட் நைட் நாங்கள் தூங்கப் போகணும். புலியைத் தள்ளி இருக்கச் சொன்னா, வழிவிடச் சொன்னா போலாம்.” 

ராஜகுமாரி புரியவில்லை என்று கையை விரிக்க, உள்ளேயிருந்து ஓர் அதட்டல், ராஜாவின் குரல் போல ஒலிக்க, ராஜகுமாரி விக்ரமைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு டூட்டுவின் காலரைப் பற்றிக் கொண்டு உள்ளே சென்றாள். 

“ஆம்பிளை பாப்பாத்தி!” விக்ரம் அவள் சென்ற திசையில் திரைச்சீலை சலசலப்பதையும் ராஜகுமாரி அவ்வப்போது தெரிவதையும், ஒருமுறை தூரத்திலிருந்து திரும்பி ஒரு முத்தத்தைப் பறக்க விடுவதையும் கவனித்துத் தனக்குள் சிரித்துக்கொண்டான். 

அறையில் ப்ரீத்தி கடுகடுவென்று இருந்தாள். சுவரில் பதித்திருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள் “அவளுக்குப் புலி தெரியும்னா எனக்கு கம்ப்யூட்டர் தெரியும்.” 

“யார் இல்லைன்னா இப்ப?” 

“என்னவோ அப்படியே அவளோடு லைலா மஜ்னு பண்றியே?” 

“ஐ டோன்ட் நோ வாட் யூ மீன்!” 

“மிஸ்டர் விக்ரம். உங்க மாதிரி ஆண் பிள்ளைங்கள்ளாம் வசப்படுத்தறது ரொம்ப சுலபம்.” 

“அப்டியா?” 

“நீ போய் உன் படுக்கையில் படுத்துக்க. இன்னும் பத்து நிமிஷத்தில ரூமுக்கு வரலை. எம்பேரு ப்ரீத்தியில்லை” 

“எதுக்கு வரணும்?” 

“என்னைத் தேடிக்கிட்டு!” ப்ரீத்தி விக்ரமின் முன்னால் தன் சட்டையை ஒரு விதமாகக் காட்டியும் காட்டாததுமாகக் கழற்றி நைட்கவுனுக்கு மாற்றிக் கொண்டாள். சற்று நேரம் ப்ரீத்தியின் உள்ளாடைகள் அவனுக்குத் தெரியத்தான் செய்தன. 

‘”நோ சான்ஸ்.” என்றான். “நான் என் படுக்கைக்குப் போனப்புறம் அஞ்சு நிமிஷத்தில குறட்டை”. 

“விக்ரம். இந்தப் பட்டனைப் போட்டுவிடுங்க” 

அவளுடைய குழந்தைத் தனமான கவர்ச்சி முயற்சிகள் விக்ரமுக்குச் சிரிப்பாகத்தான் இருந்தது. அவளை டீஸ் பண்ணுவதில் சற்றே துடிப்பு இருந்தது. அவள் கேட்ட பட்டனைப் போட்டுவிட்டு, ஈர உதடுகளுடன் குட் நைட் சொல்வதை ரசித்து விட்டுத் தன் படுக்கைக்கு வந்து படுத்தபோது விக்ரம் மணியைப் பார்த்தான். நம்ப முடியவில்லை. வழக்கம் போல படுக்கச் செல்லுமுன் தன் உடைமைகளை எடுத்துச் சோதிக்கத் துவங்கியபோது சற்றும் எதிர்பாராமல் அவன் கழுத்தின் பின் ஒரு நைலான் கயிறு செலுத்தப்பட்டு இறுக்கப்பட்டது.

அத்தியாயம் – 14

விக்ரம் இன்னும் கொஞ்சம் தயங்கியிருந்தால் அந்த க்ஷணத்திலேயே அவன் உயிர் பிரிந்து இந்த கதைக்கு ‘முற்றும்’ போட்டிருக்கலாம். சற்றே சற்றுத்தான் அவனுக்கு இடைவெளி கிடைத்தது. அது போதும் குபுக் என்று பின்னால் இருந்தவனை ஒரு மாதிரி கவிழ்த்தான். அவன் விசிறிக்கொண்டு முன்பக்கம் தொம் என்று விழ, விக்ரமைப் போல் ஒன்றரைப் பங்கு இருந்தான். அடிபட்ட சிறுத்தை போல் எழுந்து பாய்ந்தான். ஏதாவது எலும்பு உடைந்திருக்க வேண்டும். அது பொருட்டாக இல்லை. மறுபடி விக்ரமின் மேல் பாய்ந்து கழுத்தைப் பிடித்தான். விக்ரம் அவனை முழங்காலால் வழக்கம்போல் முக்கிய பாகத்தில் உதைத்துப் பார்த்தான். அவனுக்கு அதெல்லாம் இரும்பால் செய்தது போல அசைவே இல்லை. ஸோலர் ப்ளெக்லஸில் ஒரு போடு! ம்ஹூம்! எதிரடி பொறி கலங்கியது. ‘ப்ரீத்தி! ப்ரீத்தி!’ என்று கூப்பிட்டான். 

அந்தப் பக்கம் அடுத்த அறை ப்ரீத்தி அது ஏதோ காதல் கலந்த கூப்பிடல் என்று நினைத்து, “ம், தெரியும் நீ வருவேன்னு! வந்துருவேன்னு தெரியும். ஸே ஸாரி. அப்பத்தான் கதவைத் திறப்பேன்!” 

“ப்ரீத்தி, ஹக்!” 

“ஹக்குமில்லை, பக்குமில்லை! சரியாச் சொல்லு.” என்றாள். 

விக்ரம் கழுத்து மறுபடி நெறிக்கப்பட்டு மாார் என்று உறுமலுடன் மூச்சுத் திணறினான். 

“சீ! வெக்கமில்லை!” என்றாள் கதவைத் திறக்காமல். 

மறுபடி அவனைப் பிடித்து தலையைக் கை கட்டின தொளைக்குள் செலுத்தி தோளை நெம்புகோலாக்கி மடேர்! 

எதிரி முதன் முதல். “ஹம்மா!” என்றான். 

கிடைத்த சந்தில் விக்ரம் மிதி மிதி மிதி… 

சற்று நேரத்தில் அந்த அவன் இங்கே அங்கே ரத்தம் கசியப் படுத்துப் புரண்டு கிழித்த நார்போலத் துவள விக்ரம் முதன் முதலாகப் பேச்சுப் பெற்று. “ப்ரீத்தி! ஓப்பன் தி டோர்!” என்றான். 

ப்ரீத்தி மெல்லத் திறந்து, “எனக்குத் தெரியும் நீ வருவேன்னு,” என்றாள். “காட்! என்னது உடம்பெல்லாம் ரத்தம்?” 

விக்ரம் கீழே காட்ட மறுபடி, “ஓ மை காட்!” என்றாள். 

கீழே அவன் காட்டெருமை போலப் படுத்திருந்தான் “ஹி ட்ரைட் டு கில் மி.” என்றான் விக்ரம். 

“அய்யோ! அதான் ஒரு மாதிரி சப்தமா?” 

“யா!” என்று வாஷ்பேசினுக்குப் போய் உதடுகளைத் துடைத்துக் கொண்டு முகத்தை வெந்நீரில் அலம்பிக் கொண்டு, கிடந்தவனை மூட்டை போல ஆண்டு மளமள வென்று காரிடாரில் சற்றுத் தூரம் இழுத்துச் சென்று முகத்தில் தண்ணீர் அடித்தான். திரும்ப உள்ளே வந்து கதவைச் சாத்திக் கொண்டான். ப்ரீத்தி மார்பில் கை வைத்துப் படபடப்புடன் காத்திருந்தனர் “விக்ரம், எனக்குப் பயமாயிருக்கு!” 

“இனிமே யாரும் வரமாட்டான்” 

“நீங்க இந்த ரூம்லேயே படுத்துக்கங்க. எனக்குத் துணையா தூங்கிருங்க.” 

“ஸாரி.”

“அப்ப நான் உங்க ரூமுக்கு வரட்டா?” 

“நான் அங்க போகலை.” விக்ரம் கறுப்பு அங்கிபோல ஓவராலை அணிந்து அதன் புஜப் பகுதிகளில் தைத்திருந்த பைகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு ஒரு ஜிப்பை இழுத்துக் கொண்டு இப்போது ஒரு ராக்கொள்ளைக்காரன் போல ஆயத்தமானான்.

“எங்க கிளம்பிட்ட?” 

“கோயில்” 

“என்ன கோயில்? இந்த ராத்திரி வேளைலையா! விக்ரம், என்னை விட்டுட்டுப் போகா…” 

அவள் சொல்லி முடிப்பதற்குன் விக்ரம் பால்கனி, பக்கம் திறந்த சன்னல் வழியாக நிலா வெளிச்சத்தில் வெளியே குதித்து மறைந்து விட்டான். ப்ரீத்தி படபடப்புடன் இருக்கிற சன்னல்களை யெல்லாம் சாத்திக்கொண்டு இருக்கிற விளக்குகளையெல்லாம் போட்டுக் கொண்டு படுக்கை விளிம்பில் உட்கார்ந்தாள். 

விக்ரம் வேகமாகத் நடந்தான். ஆனால் அவன் பாதம் பதிவது கேட்கவே இல்லை. நிலா வெளிச்சம் மாளிகை விதவித வடிவ நிழல்களாக்கியிருக்க, அதன் நீலம் கலந்த இருட்டிலேலே சென்றான். அதி தூரத்தில் அந்தக் கோயிலின் வினோத கோபுரம் தனியாக வீங்கின கறுப்பு விரல்போலத் தெரிந்தது. அதன் கண்களில் ஒன்று மட்டும் விழித்திருந்தது. இங்கே எங்கோதான் விமானம் வந்திறங்கியது. கோயிலுக்கும் விமானத்துக்கும் என்ன சம்பந்தம்? நிச்சயம் விமானம்தான் அது. ரன்வே விளக்குகள் கூடத் தெரிந்தன.

சுவ்வா மந்திர் என்று பெயர் கொண்ட ராஜவம்சக் கோயிலில் சாதாரணர்கள் நுழையக்கூடாது. மீறினால் மரணதண்டனை. ஏன் இப்படி? என்ன ரகசியம் இது? என்ன நம்பிக்கை இது? ஒரு வேளை… படிப்படியாக நிலாக் கோலம் போட்ட முற்றத்தில் விக்ரம் நடந்தான். கோயிலின் படிகள் மிகச் சுத்தமாக இருக்க, மெல்ல, படி ஒன்று, படி இரண்டாக இருள் நிழலில் சென்று, முற்றத்தில் அதனருகில் வரும்போது வினோதமான குரல்கள் கேட்டன.

மனிதர்களின் குரல் அல்ல! எங்கே கேட்டிருக்கிறேன் இந்தக் குரலை? ஏதோ கீச்சுக் குரல்காரர்களின் மாநில மாநாடு போல!

விக்ரம் அந்தக் கோயிலின் முன் வாசலை அடைந்தபோது மிகப் பெரிய கதவு முடியிருந்தது. அதைத் தடவிப் பார்த்தான். ம்ஹூம். ராத்திரிக்குள் இவ்வளவு பெரிய கதவைத் திறக்க முடியாது, வெடி வைக்கலாமா என்று யோசித்தான். பார்க்கலாம். தேவைப்பட்டால்! பக்கவாட்டில் காரிடாரில் நடந்தான், ஒரு வகை இருள் திறந்திருந்தது போலத் தெரிய உள்ளே சென்றான்.

உள்ளே கால் வைத்த உடனே காலில் ஒரு சுரீர். கீச்சுக் கீச்சு என்று ஆயிரம் கீச்சுகள் காலடியில் பிண்டம் பிண்டமாக என்னவோ! விக்ரம் தன் முழங்கையருகில் இருந்த டார்ச் அடித்துப் பார்த்து, “மை காட்” திகைத்தான்.

கீழே நூற்றுக்கணக்கான எலிகள்! வெள்ளெலிகள், சாம்பல் எலிகள், கறுத்த சிறுத்த பெருத்த கண்ணாடிக் கண் எலிகள்! பரபரவென்று இங்கும் அங்கும் புருபுருக்கும் எலிகள்!

எலியோ எலிகள்! சற்றே நேரத்தில் அவன் மேனியெங்கும் எலிகள்! கண்களில், புருவத்தில், கையில் உதற உதற எலிகள்! விக்ரம் அருவருப்பில் மயிர்க்கால்கள் அத்தனையும் 90 டிகிரியில் நிற்க எலி மூத்திரப் புழுக்கை நாற்றம் சூழ, எம்பிக் குதித்து முற்றத்தில் ஓடி அந்த எலிகள் விசுக் விசுக்கென்று அவன் பின்னே ஓடிவர, கீச்சுக் கீச்சுப் பள்ளிக்கூடம் போல சப்தம் கேட்டு மனிதக் காலடிகள் நெருங்கிவர, விக்ரம் எங்கே எப்படி எதற்குச் செல்கிறோம் என்றில்லாமல் படபடவென்று நடந்தான். அந்த எலி வராந்தாவைக் கடந்துவிட்டான். இப்போது அவை அவனைத் தொடரவில்லை. வியர்வை ஊற்றியது. லேசான பேச்சுக் குரல் கேட்டது. ஒரு பகுதியில் அறையில் தீப்பந்தம் துடிக்கும் வெளிச்சத்தில் ட்ரெல்லிஸ் சன்னல் தெரிந்தது. சுகிர்தராஜா ஒரு கதவை மூடிவிட்டு வெளியே வர, மதகுருவையும் பார்த்தான்.

‘இங்க இருக்கியா நீ’ என்று எண்ணிக்கொண்டான்.

“இன்னேரம் தீத்துருப்பான் அண்ணே.”

“எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. அவன் பொணத்தைப் பார்க்கறவரைக்கும்.”

அப்படி தப்பிச்சாலும் இங்க இருக்கிறது தெரிஞ்சுக்கவே முடியாது. யாரும் உள்ளேயே வர முடியாது?

“அப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருக்கோம். எனக்கென்னவோ பட்சி சொல்லுது, அவன் நம்மைத் தேடிக்கிட்டு வர்றான்னு. குறுகுறுங்குது! விக்ரம் இங்க எங்கயோ இருக்கான்.”

“இம்பாஸிபிள்.”

“இங்லீஷ் பேசாத நான் வர்றேன் மொட்டை, வெள்ளிக்கிழமை கழிச்சுத் திரும்பி வர்றேன், அதுக்குள்ளே இவனைத் தீத்து வெய்யி. நாலு நாள் டயம் இருக்குது.” 

“லைட்டைப் போடுரா!” 

“இப்போ எங்கே போறப்பல” 

“பாகிஸ்தான் ஈரான்! ராக்கெட்டு சும்மா மசால் வடை மாதிரிப் பரபரன்னு வித்துப் போகப் போவுது.” 

சுகிர்தராஜா வெளியே செல்கையில் குரு திரும்பவும் விறைப்பாகி ராஜநடையோடு அங்கியைத் தோள்மேல் எறிந்து கொண்டு கூடச் செல்ல. “இதுக்கு ஒண்ணும் கொறைவில்லை.” என்று சுகிர்தராஜாவின் குரல் கேட்டது. 

விக்ரம் இப்போது அந்த அறையின் தனிமையில் நுழைந்தான். காட்டமாக ஊதுவத்தி வாசனைத் திரவியங்கள் நறுமணம் அடித்தன. ஒரு வாசலைக் கடந்ததும் உள்ளே சன்னதி போல பிரும்மாண்டமாக இருந்தது. அதன் நட்ட நடுவே மழுப்பலாக ஒரு விக்கிரகம் போல இருக்க, அதனருகில் பவ்யமாகச் சென்றான். தங்கக் கலரில் குட்டையாக வேலியின் நடுவே சலவைக்கல் பதித்த உள்வட்டத்தில் வீற்றிருந்தது சலாமியாவில் ராஜவம்சத்தின் குலதெய்வப் பதுமை, அதைச் சுற்றிலும் வந்தான். கண்போல் இருந்த பகுதியில் ரத்தினம் மின்னியது. சிரிப்பு போலிருந்த வைரப் பற்கள் ஒளிர்ந்தன. அதன் கச்சாத்தனமான கலையழகை வியந்து சுற்றி வந்தான். ஒரு சந்தர்ப்பத்தில் தன் பின் நிழலாடியதோ என்று தோன்றி, சட்டென்று திரும்பிப் பார்க்கையில் அவனே பயந்துவிட்டான். மிக மிக அருகே ஒரு முகம்! மத குருவின் காவலர்களில் ஒருவனின் முகமுடியணிந்த முகம்! 

‘ஹார்ர்ர்’ என்று அவன் ஈட்டியில் விக்ரமின் வயிற்றின் மத்தியில் குத்துவதற்கு ஒரு மில்லி செகண்டு முன்னே அதை வாங்கிச் சுழற்றிச் சலவைக்கல்லில் அவனைச் சறுக்கியெறிந்தான். எழுந்து கிட்டே வந்தவனைத் தாடையில் எட்டி உதைக்க. அவன் பல் எகிறிப் போய்க் குப்புற விழுந்தான். எழுந்திருக்கவில்லை. விக்ரம் கீழே விழுந்த ரப்பர் செருப்பைத் தேடி எடுத்துச் சற்று நேரம் கேட்டான். ஆளரவமில்லை. இப்போது மூர்த்தியின் அருகே சென்று ஏதாவது விசை அல்லது குமிழ் தென்படுகிறதா என்று தேடினான். 

பூக்களின் மத்தியில் பிளாஸ்டிக் கேபிள் தெரிந்தது. அதை உருவி உருவி, அதன் மூலத்தைத் தேடி அலைந்ததில் ஒரு பட்டன் போல சமாசாரம் தென்பட, அதைத் திருகியதில் மூர்த்திக்குப் பின்னால் ஒரு தரைமட்டக் கதவு மௌனமாகத் திறந்து கொண்டது. அப்படியா செய்தி என்று அதனருகே சென்று பார்த்தான். கீழே படிகள் சென்றன. படிகளின் முடிவில் அண்டர்கிரவுண்டு சைலோ போல ஆழமாக இருந்தது. அதன் மத்தியில் அக்கினி புத்திரன் சம்பிரமமாக, பத்திரமாக உட்கார்ந்திருந்தது. 

விக்ரம் லேசாக விசிலடித்தான். 

முதல் படியில் கால் வைக்க முற்பட்டபோது, பத்துப் பதினைந்து காலடியோசைகள் கேட்க. விக்ரம் சட்டென்று எழுந்து குறுக்கே ஓடினான். முதல் வாசலில. இரண்டாம் வாசலில், கடைசி வாசலில் எங்கும் மதகுருவின் காவலர்கள் ஆளுக்கு ஒரு முகமூடி. அவனைச் சுற்றி ஓர் ஈட்டி முகாம்! 

விக்ரம் நிதானமாகத் தன் கடிகாரத்துக்குச் சாவி கொடுத்துக் கொண்டான். 

அத்தியாயம் – 15

தன்னைச் சூழ்ந்துள்ள காவலர்களை விக்ரம் நிதானமாக மதிப்பிட்டான். நெருப்பு வெளிச்சத்தில் அவர்கள் வெள்ளை முகமூடிகளில் மயான மனிதர்கள் போலத் தோன்றினர். அந்த வட்டம் அவன் மேல் கவிய, விக்ரம் தரையின் சலவைக்கல் வழுக்கையைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்பாராத கணத்தில் விழுந்து, சரிந்து ஒருவன் காலைக் கப்பரையாகக் கிழித்துக் கிடைத்த இடைவெளி வெளிவந்து ஓடினான். 

சுவரோர விளிம்பில் திரும்பியதும் பிரேக் போட்டாற் போல் நின்றான். கவனித்தான் சுவரில் ஆணி அடித்துப் பொருத்திய வில் அம்பு அவன் கண்களில் பட்டன. துரத்தி வந்தவர்கள் பால்கனி வழியாகத் தப்பியிருக்கலாம் என்று தப்பாக யூகித்து அந்தப்புறம் ஓட, விக்ரம் ஒரே ஒரு பாராக்காரனை மட்டும் கடக்க வேண்டியிருந்தது. 

“ட்வய்ங்!” 

திரும்பின காவலன் திறந்த வாயில் அம்பு பாய அப்படியே முன்பக்கம் சரிந்தான். 

இதற்குள் பால்கனி கோஷ்டி திரும்பிவர விக்ரம் ஒரு சன்னல் கதவைத் திறந்து சஜ்ஜாவில் குதித்து, ஷாமியானாவில் குதித்து, தெருவில் குதித்து ஓடினான். 

நிலவொளி வேஸ்ட்டாக, தெருக்களை வெள்ளியில் நனைத்துக் கொண்டிருந்தது. மதில் சுவர்களின் நிழலில் கறுப்பு அங்கியில் விகரம் ஓடியது ஒரு தேர்ந்த பூனைக்குக் கூடத் தெரிந்திருக்காது. காவலர்கள் காலடிகள் கல்பதித்த சாலைகளில் ஓலமிட, விக்ரம் ஒளிந்திருந்த இடத்தின் அருகேயே நின்று அங்குமிங்கும் தேடியவனின் குறக்களியை நெருக்கலாமா அல்லது கிட்டத் தெரியும், திட்டி வாசலில் நுழையலாமா என யோசித்தான். பின்னதைத் தீர்மானித்தான். 

ஏன் எதற்கு எப்படி என்று கவலைப்படாமல் சரசர வென்று நடந்தான், சலசலவென்றன செடி கொடிகள், சரனையில் கால்கள் பதிந்து ‘நரக் நரக்’ என்றன. புதுசாக வாசனை வீசி, தில்ரூபா போல ஒரு சங்கீதம் கேட்டது. மற்றொரு கதவுவரை கொண்டு சென்றது. லே… சாகத் திறந்து சற்றே பார்த்ததில் தளுக் தளுக் சப்தமும் களுக் களுக் சப்தமும் கேட்டது. விக்ரம் நூலிழையாக மூச்சு விட்டான். வெளிச்சம் பழகியதும் கண்கள் அலைந்தன. வீட்டுக்குள் இவ்வளவு பெரிய நீச்சல் குளம்? 

அப்புறம் அதன் கரையில் வீற்றிருந்த நீரை அளைந்த பெண்களின் சிரிப்புத்தான் களுக் களுக், அவர்கள் வெண்மையான கால்கள் நீரில் நனைந்தபோது தளுக் தளுக். 

நீச்சல் குளத்தின் நடு சென்ட்டரில் ராஜகுமாரி ஓய்வு நேரக் கவிதைபோல் மிக மெல்ல அசைந்து கொண்டிருந்தாள். நீர்ப்பரப்புக்கு அடியில் தெரிந்த அவள் உடல் அடையாளங்கள் விக்ரமுக்குக் குழப்பமாக இருந்தன. அவ்வப்போது லேசாக மேல் மிதந்து, மார்பகங்கள் சாயல் காட்டின. விக்ரம் இப்போது ஒரு திரைக்குப்பின் மறைந்திருந்தான். மூக்கு நுனியைத் துடைத்துக் கொண்டு சாத்தியக் கூறுகளை யோசித்தான். 

கடமை நியான் எழுத்துக்களில் அழைத்தாலும் சபலம் என்கிற சின்ன மணியோசைக்குத் தயங்கினான். 

ராஜகுமாரி இப்போது நீச்சலை விட்டு வெளியே வர் ஆயத்தங்களுடன் கரையோரத்துக்கு வந்துவிட, அவள் நீரிலிருந்து மேல் வருமுன் பாழாய்ப் போன பெண்கள் டவல் திரை அமைத்து அணைத்து முடி அழைத்துச் சென்றார்கள். 

விக்ரம் கண் கொட்டாமல் பார்த்திருந்தவன் இப்போதுதான் இமைத்தான். மூச்சு விடாமல் காத்திருந்தவன் இப்பொழுதுதான் லேசாகப் புஸ் என்றான். எப்படியும் அவர்கள் விலகும் வரை நகர முடியாது. 

கஸ்தூரி அத்தர்கள் பூசிக் கூந்தல் உலரப் புகையடித்து… எத்தனை நேரம்! 

பெண்கள் அனைவரையும் போகச் சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திவிட்டு ராஜகுமாரி விக்ரம் மறைந்திருந்த திரையை நோக்கித் தீர்மானமாக வந்தாள். 

விக்ரம் சிலைபோல் நிற்பது எவ்வளவு கடினம் என உணர்ந்தான்.

சரேல் என்று திரையை விலக்கிக் கலகலவென்று சிரித்து, “காச்சூ,” என்றாள், 

“ஸாரி!” விக்ரம் சற்று அசட்டுத்தனமாக வெளி வந்தான் “துமாஸி சப்பா பலுமா?” என்று அவனைக் கைப் பிடித்து இழுக்க…

“ஸாரி?” 

“துமாஸீ…” நீ என்ற அர்த்தத்தில் அபிநயித்தாள் 

“சுப்பா!” திரையில் மறைந்து காட்டினான். 

“பாலூமா.” 

“தெரியும்! நான் நான் மறைஞ்சிருந்தது தெரியுமா? துமாஸி வெரி ப்யூட்டி ஃபுல்!” 

“அய்?” 

“ப்யூட்டிஃபுல்! ப்ரெட்டி!..” முகத்தைச் சுற்றி வட்டம் போட்டு பரதநாட்டிய அபிநயத்தில் “அழகு” என்றான். 

அவள் ‘இரு’ என்று சொல்லி விலகி மறுபடி அறைக்கு வெளியே சென்று சற்று நேரத்தில் தூக்கம் நிறைந்த கண்களுடன் துபாஷை அழைத்து வந்தாள். 

“என்னங்க அந்தப்புரத்துக்கு அதும் சும்மிங் பூலுக்கு வந்துட்டிங்க, முன்னேற்றம் தான்!” 

ராஜகுமாரி அவனிடத்தில் மொ.பெ மூலம் “அவர் மறைந்திருந்ததை அப்போதே பார்த்தேன் என்று சொல்”. 

“பார்த்து ஏன் பேசாமலிருந்தாளாம்?” 

“ஏனோ? அவன் என் உடன்வந்து தூக்கம் வரும்வரை இனிய கதைகள் பேசுவாரா?”

“பாஷை தெரியாதே” 

“சில கதைகளுக்குப் பாஷை தேவையில்லை.” 

“நான் அவ்விதக்கதைகள் சொல்ல விரும்பவில்லை.” 

“துபாஷை வாசலில் வைத்துக்கொள்ளலாம்… என்னங்க நீங்க நடுராத்திரியில இந்த எழவெல்லாம் மொழி பெயர்த்துக்கிட்டு! அய்யா நியூஸ் பேப்பரு! நீ செய்யப் போறது ராஜகுற்றம். தண்டனை என்ன தெரியுமா இந்த நாட்டில? இளனி மாதிரி தலையைச் சீவிருவாங்க…” 

ராஜகுமாரி விக்ரமை கைப்பிடித்து அழைத்துச் செல்ல துபாஷ் பின்னால் நடந்து கொண்டே “அரச பரம்பரை அரசபரம்பரைதான். கல்யாணம் கட்டிக்கணும் இந்தம்மா செய்யறது படு குற்றம்.” 

“அப்படியா. அதிலதான் படு த்ரில்லு! துபாஷ் நீ போய் இதெல்லாம். சொல்லுவியா?” என்று அவன் மோவாயைப் பிடித்தான். “சொல்லுவியா?” 

“இல்லையே! எனக்கு மோவாக்கட்டை வேணுமே! சொல்ல மாட்டேனே”

“அப்ப வெளியே நில்லு, தேவைப்பட்டாக் கூவறோம். மொழி பெயரு!” 

“தாராளமா! கைல ஒரு விளக்கையும் குடுத்துட்டுப் போயிருங்க.” 

படுக்கை அறையில் விட்டத்தில் வளையம் கட்டி அங்கிருந்து தொங்கிய சன்னத் திரையை விலக்கினால் ராஜமஞ்சம். வட்டப் படுக்கை, ராஜகுமாரி அதில் உட்கார்ந்து “ஆஸூ!” என்றாள். 

துபாஷ் வெளியேயிருந்து, “வாங்க! வாங்க!” என்றான். விக்ரம் அவளருகே நெருங்கி ஆள்காட்டி விரலால் அவள் தாடையைத் தொட்டு விரலை மூக்கிலும் நெற்றியிலும் ஒட்டி மெல்லக் கீழே வந்து கழுத்தின் முடிச்சை விடுவித்ததும் தோளிலிருந்த நீல உடை சரிந்து விழுந்தது. அவள் மேனியைப் பார்க்க விடாமல் அவனை அப்படியே தன் பால் சரித்துக் கொண்டு “விக்ரம்!” என்றாள். 

“மதகுருவை நம்பாதே!” 

துபாஷ் மொழி பெயர்க்க, “அதெல்லாம் அப்புறம் பேசலாம், இப்ப முதுகல தடவிக் கொடுத்தாப் போதுமாம். உன் காட்டில மளைய்யா! அஞ்சு நிமிசம் மொழி பெயர்ப்பு வேண்டாமே?” 

விக்ரமின் அதரங்களுக்கு மிக அருகே ராஜகுமாரி இருந்தபோது காலடி ஓசைகள் கேட்டன. “ஹிய்யா ஹூப்” என்று அதட்டல் கேட்டு எல்லாக் காலடிகளும் பொருந்தி நின்றன. 

“விக்ரம்”” 

சரேல் என்று எழுந்து திரும்பினான், ராஜா, மதகுரு, காவலர்கள்.

“ஹலோ தேர்! துபாஷ் கொஞ்சம் உள்ள வரிங்களா?” 

துபாஷ் நடுநடுங்கிக் கொண்டு உள்ளே வந்து, “போச்சு போச்சு; ராஜகோபம் ஆயிடுச்சு, ராஜ கோபம் ஆயிடுச்சு நீ செத்த! வேண்டாம் வேண்டாம்னு அடிச்சுக்கிட்டேன்!”

மகாராஜா குறுக்கிட்டு நிறுத்தி விக்ரமின் அருகில் வந்து நின்றார். அவர் கண்கள் சிவந்திருந்தன. நாசி துடித்தது துபாஷைக் கை சொடுக்கினார். 

“உன்னை நான் நண்பனாக மதித்தேன் – உன்னை நம்பினேன். ஏமாற்றிவிட்டாய் துரோகி!” 

“அரசர்களுக்கும் மதகுருக்களுக்கும் மட்டுமே அனுமதி உள்ள கோயிலில் ஒரு வேற்று நாடன் நுழைந்து குலதெய்வத்தின் முன் ரத்தம் சிந்திவைத்தாய். பல பேரைக் கொன்றாய் குலதெய்வத்தைத் தொட்டு விட்டாய்! அது மட்டுமின்றி இங்கே அரண்மனை ஜனானாவில் நுழைந்து என் அருமை சகோதரியைக் களங்கப்படுத்திவிட்டாய்!” 

ஏதோ சொல்ல வாயெடுத்த ராஜகுமாரியைத் தடுத்தது நிறுத்தித் தொடர்ந்தார். 

”விக்ரம்! நீ செய்த ஒவ்வொரு காரியத்துக்கும் எங்கள் சலாமியா சட்டத்தின் படி என்ன தண்டனை?” 

ராஜாவின் புருவங்கள் கோபப் பின்னலிலிருந்து விடுபட்டு நிதானப்பட்டன. அவசரமில்லை சாந்தமாகக் கழுத்தின் குறுக்கே விரலால் கோடு போட்டு “ஹர்ர்ர்ர்” என்றார். 

“மரணம்!” என்றான் துபாஷ்.

– தொடரும்…

– 80களில் குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்தது.

– விக்ரம் (நாவல்), முதற் பதிப்பு: மே 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *