கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: July 11, 2025
பார்வையிட்டோர்: 15,931 
 
 

(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 10

நிலைமையை முற்றும் உணர்ந்து கொண்ட விக்ரம் ராஜகுமாரியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் கீழே சரிவதும், முகம் சற்று பயமும் விஷமும் கலந்து மாறுவதும் தெரிய, “போச்சு போச்சு! வந்த உடனே சிக்கல்! யோவ்! பாம்பை பல்லைப் புடுங்கி வெக்கக் கூடாது?” என்று ராஜகுமாரியின் அருகே சென்றான். அவள் கீழே மண்ணில் கிடந்தாள். அவள் மூச்சுத் திணற, கண்கள் செருகிக் கொண்டன. “யோவ் பாம்பாட்டி! என்னய்யா செய்யணும்?” 

“உடனே கடிபட்ட எடத்தில் உறிஞ்சுரணுங்க!” 

“உறிஞ்சு!” 

“பல்லு இல்லைங்க.” என்று பொய்ப் பல்லைக் கழற்றிக் காட்டி பாம்பாட்டி அசட்டுத்தனமாகச் சிரித்தான். 

“நாசமாப் போச்சு!”, என்று விக்ரம் கீழே குனிந்து அந்த ராஜகுமாரியைத் தொட்டான். கலவரத்தில் சுற்றுப் பட்டவர்கள் பிதற்றலாக அலைந்து கொண்டிருக்க, காவலாளி துப்பாக்கியால் பாம்பாட்டியைக் கீழே வீழ்த்திக் கொண்டிருந்தான். விக்ரம் ராஜகுமாரி கைவைத்திருக்கும் இடத்தை கவனித்தான். தொடை! என்ன செய்வது என்று சற்று நேரம்தான் தயங்கினான். அவள் பாவாடையை விலக்கி, வெளிச்சத்தில் உரித்த வாழையின் அடிப்பாகம் போலிருந்த, மகரத்வஜம் போல இருந்த அவள் தொடையில் வாய்வைத்து, கன்னங்குழிய ஜிவ்வென்று உறிஞ்சினான். சுற்றுமுற்றுமிருந்த கூட்டத்தினர் பயத்துடன் கண்களில் ஊ ஆ என்று வினோத ஆரவாரங்கள் செய்து ஆத்ஸோ என்று பேசிக்கொண்டு அங்கலாய்க்க, ராஜகுமாரி துவண்டு படுத்தாள்; சற்றே நெளிந்தாள். விக்ரம் கலங்கலாகத் துப்பினான். 

ப்ரீத்தி அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு. “சபாஷ்!” என்றாள் “தொடைல கடின்னா காப்பாத்தறதுக்கு எத்தனை அவசரம்! பாம்பு பொய்ப் பல்லா இருந்தா? பாம்பாட்டி மாதிரி?” 

“டோன்ட் பி ஸில்லி பாம்பாட்டி சொன்னானே! இட் வாஸ் பாய்னஸ்!”

“ராஜகுமாரி அதிர்ஷ்டம் பண்ணவள்!” 

“நீயே பாரு!” ராஜகுமாரி மெல்லக் கண் விழித்து, சுற்று முற்றும் பார்க்கக் கூட்டத்தினர் கை தட்டினர். பணிப்பெண்கள் அவளைக் கைத்தாங்கலாகப் பல்லக்குக்கு அழைத்துச் செல்ல ஒரு காவலன் விக்ரம் அருகில் வந்து, ”கரே கரியா.” என்றான். 

விக்ரம் “கரியா” என்று திருப்பிச் சொல்ல, சுற்றிலுமிருந்த பெண்கள் கிக்கிக் என்று சிரிக்க, புத்துயிர் பெற்ற ராஜகுமாரி திரைக்குப் பின்னிருந்து பச்சைக் கண்களால் அவனைப் பார்த்ததும் அந்தக் கண்களே நன்றி என்று புன்னகை கலந்து சொல்வதையும் கவனித்தான். 

“இண்ட்டரஸ்டிங்! வெரி இண்ட்டரஸ்டிங்!” 

துபாஷ். “சரியான ஆளுய்யா நீங்க! ராஜவம்சத்தைத் தொடைல தொட்டுட்ட! பரம பாக்கியம்! அந்தம்மா வாசனையா இருப்பாங்களே?” 

ப்ரீத்தி, “ஜாதக ராசி” என்றாள். விக்ரம் பேசாமல் மறுபடி பஸ்ஸில் ஏறிக்கொள்ள, “பஸ் உள்ளே போகாது. நடந்துதான் போகணும். உள் நகரத்தில ராஜாவோட கோட்டைக்குள்ள வம்சத்தைத் தவிர யாரும் நடந்து தான் போகணும்” என்றான்.

சதுரம் சதுரமாகக் கடப்பைக் கற்கள் வேய்ந்த தெருவில் விக்ரம் நடந்தபோது இது ராக்கெட் கம்ப்யூட்டர் யுகமா என்று வியப்பாக இருந்தது. பதினேழாம் நூற்றாண்டு என்று சொல்லியிருந்தால் கேள்வி கேட்காமல் நம்பலாம் போல இருந்தது. ஒரே ஒரு மெர்ஸிடிஸ் கார் தான் உறுத்தியது. மற்றப்படி அவ்வப்போது ஒட்டகங்கள் பிஹிர்ர் பிஹிரர் என்று சப்தமிட, “ஏப்பமாய்யா?” என்றான் பாம்பாட்டி. 

“இல்லை, வாயுவு! யோவ் பாம்பு! நீ சாவறதுக்கு இருந்தே! சார் மட்டும் வாய் வெக்கலைன்னா நீ இன்னேரம் மேலே போயிருப்ப. சிப்பாய் சுட்டுப் பொசுக்கியிருப்பான். இந்த ஊர்ல முணுக்குன்னா சுட்டுருவாங்க. பர்மிஷன் உண்டு. சட்டக்காரங்களை மட்டும் எதுக்காதிங்க.” 

சன்னல்கள் வழியாக வட்ட முகங்கள் எட்டிப் பார்த்தன. கலர் கலர் துணிப் பந்தலின் கீழ் பெரிசு பெரிசாத் தர்பூஸ் பழங்கள் ரத்தமாகக் கீறியிருந்தது. இளித்தன. கீரணிப்பழங்கள் வாசனை அடிக்க சதுர சதுரமாக மிளகாயும் மீன்வற்றலும் வீட்டோர ரோட்டோரங்களில் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தன. விக்ரம், ப்ரீத்தி, மற்றும் மந்திரவாதி, பாம்பாட்டி, துபாஷ். கோமாளி என்று எட்டுப் பத்து இந்தியர்கள் ஒற்றை வரிசையாக நடந்து செல்ல. சின்னப் பையன்கள் பெரிசாக ஜிப்பா தலை முண்டாசுடன் அவர்களுடன் ஓட்டமும் நடையுமாக வந்து. “தபராஜ் தபராஜ்.” என்றார்கள். 

”என்னய்யா சொல்றான்?” 

“அம்மா பாண்ட்டு போட்டுக்கறதைக் கேக்கறாங்க! ஆம்பிளையா பொம்பளையான்னு சந்தேகம்! தபராஜ் ஆம்பளை, தராஜ்னா பொம்பளை!” 

“அம்மா தாராஜ் தான். நிருபணம் வேணம்னா தனியா வரச்சொல்!” 

“தட்ஸ் நாட்ஃபன்னி.” என்றாள் ப்ரீத்தி. ”துபாஷ்! ராஜகுமாரிக்கு அய்யா மேல காதலாய்யா? காதலாயிருக்குமில்லை?” என்றாள். 

“தட்ஸ்நாட் ஃபன்னி” என்றான் விக்ரம். இங்கிருந்து உயரும் பாதையின் முடிவில் ஆணவ ஒய்யாரமாக கனவு மாளிகை போல. காத்திருந்த அரண்மனையை நோக்கி “இது என்ன கட்டடம்?” 

“இதான் ராஜா தாக்கத்சிங்கோட அரண்மனை!”

“அப்பா, எவ்வளவு பெரிசு!” 

“இந்த ஊர்ல எல்லாமே பெரிசுன்னு சொன்னனில்லை?” 

“ராஜகுமாரி கண்ணு மாதிரி” என்று விக்ரமைப் பார்த்தாள். “அப்டியே உன்னைச் சாப்பிடறாப்பல ஒரு முறை பார்த்துட்டுத்தான் பல்லக்கு ஏறினாள்! நீங்ககூட ஒரு சைட்டு அடிச்சிங்களே!” 

“எனக்கு சிரிப்பும் வரலை, கோபமும் வரலை” என்றான் விக்ரம். 

அரண்மனை வாயிலில் வளைவு மண்டபத்தருகில் சரிகை முண்டாகம் பளபள பட்டன் கொண்ட கோட்டும் அணிந்திருந்த ஒரு மூக்கன் அவர்களுக்காகக் காத்திருந்து வெல்கம்” என்றான், அதற்குமேல் இங்கிலீஷ் பேசாமல் சலாமி பாஷையில் சுபராஷ் துப்ராஷில் ஓர் வாக்கியம் பேசினபோது கைகளை இடுப்பருகில் கோத்து ஒருவித மரியாதைபோல வைத்துக் கொண்டு அசங்காமல் சொன்னான். துபாஷ் மொழி பெயர்க்க “நல்வரவு. இந்திய நாட்டுக்கலாச்சார தூதுவர்களை அரசின் சார்பில் வரவேற்கிறோம். உங்களுக்காகத் தங்கயிருக்கும் அறை உங்கள் நண்பர்களுடன், அரண்மனையில் கிழக்குச் சரகில் ஏற்பாடாகியிருக்கிறது. உங்கள் வசதிகள் யாவும் கவனித்துக்கொள்ளப்படும். இன்றிரவு விருந்துக்கு உங்களை அரசர் அழைக்கிறார். என்னுடன் வந்தீர்களெனில் நீங்கள் தங்கும் அறைகளுக்குச் செல்லலாம். என் பின்னே தொடருங்கள்,” என்று பொம்மை மனிதன் போல் பவ்யமாக, விறுவிறுப்பாக நடந்து செல்ல அவன் பின் விக்ரம் ப்ரீத்தி கோஷ்டி ஆட்டுக்குட்டித்தனமாகச் சென்றனர். 

அரண்மனையின் காரிடாரின் விட்டத்தை அண்ணாந்து பார்க்க வேண்டியிருந்தது. பத்தடிக்கொரு தடவை ஒரு மகாராஜாவின் சித்திரம் தொங்கிக் கொண்டிருந்தது. எல்லாரும் பெரிய மீசையும் பெரிய கண்ணும்
பதக்கங்கள் நிறைந்த அங்கியும் சிறகு வைத்த தலைப்பாகையும் “தோற்றம்-மறைவு” தேதிகளுமாக. 

“இத்தனை ராஜாவா?” என்றாள் ப்ரீத்தி 

“எல்லாம் செத்த ராஜா. உயிருள்ள ராஜாவை இனிமேதான் பார்க்கப் போறோம்!” 

“நாம ப்ரஸ் இல்லைன்னு கண்டுபிடிச்சுட்டா?” 

“ஷட் அப்” 

“பத்திரிகை பேர் என்ன?” 

“இன்ட்ருடர்,“ 

தலைப்பாகைக்காரன் காட்டிய அறையில் ஒரு ஹால் போல இருந்தது. அதில் சுமார் நாற்பது இந்தியர்கள் ஒத்திகையில் இருந்தார்கள். நடனர்கள். நடனிகள். ஜாலக்காரர்கள், வேலைக்காரர்கள், குழலூதும் சிறுவர்கள், வில்லாக எவ்விக் குதிக்கும் சிறுமிகள், மார்பின் பிளவு தெரியப் பெரிய பெண்கள். டேப்காரர்கள், கரகக் காரர்கள், வண்ண வண்ண உடை தைப்பவர்கள். 

ப்ரீத்தி “துபாஷ். இந்த ஹால்லயா இருக்கணும்?” என்றாள். 

‘இல்லைங்க. உங்களுக்குத் தனியா ரூம் கொடுத்திருக்காங்க, இந்தாங்க சாவி!” 

“இன்னொரு சாவி?” என்றான் விக்ரம் 

“ரெண்டு பேத்துக்கும் ஒரு ரூம்தாங்க.” 

“ட்ரபிள்,” என்றான். 

“நீங்க ரெண்டு பேரும் புருசன் பொஞ்சாதி இல்லைங்களா?” 

“அப்படியா மெஸேஜ் வந்தது?” 

“அது என்னவோ! ஒரு ரூம் தான்ங்க!” 

ப்ரீத்தி விக்ரமைப் பார்த்துச் சிரித்து, “வி ஆர் ஸ்டக்.” என்றாள். “ரெண்டு கட்டிலாவது இருக்கா?” 

அந்த அறையில் நுழைந்ததுமே ப்ரீத்தி மறுபடி கண்ணாடியில் தெரிந்தாள். சப்ர மஞ்சம் போல இருந்தது; படுக்கையா சோபாவா என்று சொல்ல முடியவில்லை. 

விக்ரம் தன் கைப்பையை எடுத்து வைக்க, ப்ரீத்தி “பாத்ரூம் எங்கே?” என்று தேடினாள். 

“துபாஷ், வேற இன்னொரு ரூம் பார்க்க சொல்லுங்க.” என்றான் விக்ரம். 

“ஏங்க? அம்மா கூடச் சண்டையா? வர்றப்பவே ஒரு மாதிரி வாக்குவாதம்…” 

“அப்றம் சொல்றேன்.” 

“ஏதாவது சின்ன வீடா?” என்று கண்ணடித்தான் துபாஷ்.

“அப்றம் சொல்றேன்” 

“இந்த ஊர்ல எல்லாமே சகஜம்தான். ராஜாவுக்குப் பொண்டாட்டி பட்டம் கட்டினதா ரெண்டா, அப்றம் ஸ்டெப்னி எத்தனைங்கறீங்க?” என்று கிட்டே வந்து ரகசியம் போல, “ஒரு டஜன்.” 

“கொஞ்சம் களைப்பாயிடாதோ?” 

“தாக்கத் சிங்குன்னா என்ன அர்த்தமங்கறிங்க?”

“வலிமை? புஷ்டி?” 

“பாக்கறதுக்கும் அப்டித்தான் இருப்பாரு.” 

ப்ரீத்தி பாத்ரூமிலிருந்து வெளியே வர “பப்பரபே!” என்று குழல் ஒலிக்க, ஓய ஓய என்று துபாஷ் இடுப்பில் பட்டை கட்டிக்கொண்டு பவ்யமாக நின்றான். “என்னது?” என்று விக்ரம் விசாரிக்க, “தாக்கத் சிங் வரார்.” 

“ராஜாவா?” 

“ஆமா, உங்களைப் பார்க்கத்தான்.” 

தன்னை நோக்கி வருகிற மகாராஜா தாக்கத்சிங்கைப் பார்த்தபோது விக்ரமுக்கு ஒரு புத்தக் கப்பல் அசைந்து வருவது போலத் தோன்றியது இரண்டு கைகளையும் நீட்டி விக்ரமை நோக்கி, அந்த உடம்புக்கு விறுவிறு என்று நடந்து வந்து அவனை அப்படியே கசக்கிவிட வேண்டும் என்று எண்ணம் போல “ஆ! மேமான் மோன்! குதார் மேமான்!” என்று விக்ரமைத் தன்னுள் பூராவும் வாங்கிக் கொண்டு அவன் கழுத்திற்கருகில் பச்சக் முத்தம் கொடுத்தார் ராஜா தாக்கத் சிங். விக்ரமுக்குச் சற்றே மூச்சுத் திணறியதால் ராஜகுமாரியைக் கவனிக்கவில்லை. 

அத்தியாயம் – 11

சலாமியாவின் ஏராள ராஜா சற்றும் எதிர்பாராத விதத்தில் செய்தது முத்தமா. கழுத்தில் கடியா என்று விக்ரமுக்குச் சரியாகச் சொல்ல முடியவில்லை ஆனால் திரும்ப அவர் கழுத்தில் கடிப்பது தான் மரியாதை என்று தெரிந்தது. மகாராஜாவின் சலாமியாவே வினோதமாக இருந்தது ‘தாக்கத் சிங்’ என்று சொல்லப்பட்ட ராஜாவை அவர்கள் பாஷையில் கட்டியம் கூறுவதே வேடிக்கையாக இருந்தது. “அமிமாஸோ பாஞ்சா ஹபாப்” என்றதும் ப்ரீத்திக்குச் சிரிப்பாக வந்தது. 

“ஷட் அப்.” என்றான் விக்ரம். “இதாங்க அவங்க வம்சப் பேரு.” 

ராஜாவின் தங்கையை, “இனிமாஸி பாஞ்சா ஹபாபி.” என்றதும் இன்னும் வேடிக்கையாக இருந்ததாலும் ‘இனிமாஸி’ யைக் கண்டு பொறாமையாக இருந்தது. 

அவள் விக்ரமையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்திரையைத் திறக்காவிட்டாலும் உள்ளுக்குள்ளே அழகாக இருந்தாள். இருக்கப்போகிறாள் என்பதற்கு ஏராளமான அறிகுறிகள் அவள் வெளி வடிவங்களிலேயே இருந்தது. 

சலாமிய மன்னர் விக்ரமைப் பார்த்து அவர்கள் பாஷையில் சொல்ல. எல்லோரும் கை தட்டினார்கள். சட்டென்று வந்தவர் பொட்டென்று விலகிச் செல்ல மறுபடியும்,”பெப்பரப்பே!” 

போகிறபோது ராஜகுமாரி ஒருமுறை விக்ரமைப் பார்த்து இரண்டு கண்களாலும் சிரித்து விட்டுச் சென்றாள். 

ப்ரீத்தி விக்ரமையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் கண்கள் ராஜகுமாரியுடன் சென்றவை அவள் படிதாண்டியதும் தான் மீண்டன. 

“பார்வையாலேயே கடிச்சுச் சாப்டறாப்போல உத்தேசமா?” என்றாள்.

“டோண்ட் பி ஸில்லி.” 

விக்ரமும் ப்ரீத்தியும் இண்டியா ஃபெஸ்டிவலுக்காக வந்திருந்த மற்ற இந்தியர்களைச் சந்திக்கச் செல்லும் போது துபாஷ். “ராஜா கழுத்தைக் கடிச்சார் பாரு அது இந்த ஊரிலே ரொம்ப உசத்தி, ரொம்ப இஷ்டப்பட்டவங்களை தான் கழுத்திலேயே கடிப்பாரு ராஜா, தங்கச்சியைப் பாம்புக் கடியில இருந்து காப்பாத்திட்டிங்க பாருங்க, அதுக்கு சந்தோசம்,” என்றான் 

“ராஜகுமாரிக்குக் கல்யாணம் ஆயிருச்சாய்யா?” என்றாள் ப்ரீத்தி.

“இல்லைங்க. இருந்திருந்தா என்ன வயது அவங்களுக்கு?” 

“இந்த ஊர்ல வழக்கம் உண்டா…” என்று ஆரம்பித்தவளை விக்ரம் தடுத்து நிறுத்தி அந்த அறைக்குள் நுழைய, கலை நிகழ்ச்சிக்காக எல்லோரும் ஒத்திகையில் இருந்தார்கள், கரகம், பொய்க்கால் குதிரை, பாம்பு நடனம். மாஜிக் என்று கலந்து கட்டியாக இருந்தார்கள். அங்கங்கே உட்கார்ந்து சிலர் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஒரு நர்த்தகி கையைக் காலை அசைத்து பரதம் ஆட நட்டுவனார், “தக்கஜம், தக்கஜம்,” என்று சொல்லிக் கொண்டே தாளமிட்டுக் கொண்டிருந்தார். 

“த பாருங்க நட்டுவம்! தக்கஜம் தக்கஜம் மட்டும் சொல்லாதீங்க இந்த ஊர்லே ” 

“ஏம்பா?” 

“எங்க பாஷையில தக்கஜம்னா கெட்ட வார்த்தை! ராஜாவுக்குக் கேட்டுதுன்னா…. பைஜாமாவைக் கழட்டி தக்கஜம் பண்ணிருவார்.” 

விக்ரம் அறை வாசலில் காத்திருந்த காவலாளிகளைப் பார்த்தான். அவர்கள் தோல் நிறத்தில் கை கால் மார்பில் பாதுகாப்பு அங்கிகள் சுற்றியிருந்தார்கள். ஈட்டி போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தனர். 

“இது என்ன தேசம்! பதினெட்டாம் நூற்றாண்டை விட்டு வெளியே வரலையா?”

துபாஷ், “அதெல்லாம் இல்லைங்க. எல்லா நவீனமான கருவிங்களும் வெச்சிருக்காங்க. பாக்டரி இருக்குது ஏரோப்ளேன் இருக்குது, கூடவே இந்த மாதிரி ராஜாங்கங்களும் இருக்குது. மதகுருவைப் பார்த்தீங்கல்ல?” 

“இல்லையே.” 

“பார்க்கப் போறீங்க டின்னர்ம்போது! அவர்தான் ஆலினால்! அவர் அனுமதி சொன்னால்தான் ராஜா மூத்ரம் கூடப் போவான்!” 

“விக்ரம் எனக்கு இந்த இடத்தைக் கண்டாலே பிடிக்கலை சீக்கிரம் போயிடலாம்.” 

“ராத்திரி டின்னர்ல் பார்க்கலாம்” என்று துபாஷ் செல்ல, விக்ரமும் ப்ரீத்தியும் அவர்கள் அறைக்குத் திரும்பினர். ப்ரீத்தி தன் துணிமணிகளை ஓர் ஓரத்தில் வைத்துவிட்டு, “ராத்திரி டின்னருக்கு ஸாரி கட்டிக்கணுமா?” என்றாள். 

“உன் இஷ்டம் எதாவது டிரெஸ் ரெஸ்ட்ரிக்ஷன் இருந்தா துபாஷ் சொல்லியிருப்பான்!” 

“எனக்கு ஸாரி கட்டிக்கத் தெரியாதே!” 

“அப்ப ஜீன்ஸ்ல வா!”

“எனக்கு ஸாரி கட்டி விடறியா?” 

“நோ சான்ஸ்.” என்று படுக்கை போலிருந்த சோபாவின் சாய்வில் உட்கார்ந்தான். “இனிமாஸி!” என்றான். 


அந்தப் பிரம்மாண்டமான ஹாலில் மேசை நடுவில் கரு நீல வெல்வெட் அணிந்த நாற்காலிகள் காத்திருக்க, மேலே தொங்கிய ஷாண்டலியர்களில் நூறு பல்பு முயற்சிகள் ஒரு மினி நட்சத்திரக் கொத்தாக ஒளிர்ந்தன. ஓரத்தில் பெரிய முண்டாசுக்காரர்கள். சலாமியா கானம் ஒலிக்க. அது ஒரு மாதிரி ஒப்பாரி போலவும் தெம்மாங்கு போலவும் இருந்தது. விக்ரம் ஸூட் அணிந்து கொண்டு வர, அவன் கையில் கைகோர்த்து ப்ரீத்தி பழக்கப்படாத ஸாரியில் பச்சையில் சில்க் வழுக்கலாக உடன் வந்தாள் “விக், ஐம் நெர்வஸ்.” என்றாள். 

அவர்கள் வந்தபோது ஹாலில் சலாமியா பிரமுகர்கள் ஏழெட்டுப் பேர் கைகளில் கோப்பை வைத்துக் கொண்டு காத்திருக்க விக்ரம் வந்ததும். “ஆத்ஸோ ஆத்ஸோ,” என்று ஆராவரித்து அவனருகே வந்து புரியாமல் விசாரித்தார்கள். துபாஷ் இன்னும் வராததால் விக்ரம் அவர்கள் ‘கபராஷ் துப்ராஷ்’ வகை கேள்விகளுக்குப் புன்னகையாலேயே பதில் சொல்ல வேண்டியிருந்தது. சுவரில் பற்பல பட ராஜாக்கள் இருந்தார்கள் பெண்களே இல்லை. துபாஷ் இப்போது சின்னதாகத் தலைப்பாகை தொப்பி அணிந்து அவசரமாக வந்தான். அவனுடன் கட்டியங்காரர்கள், “அர்யாத் அமிமாஸோ பாஞ்சா ஹபாப்.” என்று அறிவிக்க, ராஜா மார்பில் கொசகொச ஜரிகை போட்ட கறுப்பு சில்க் டிரஸ்ஸில் கப்பல் போல மிதந்து வர கூடப் பட்டத்து ராணியும் தங்கை ராஜகுமாரியும் மரியாதை தூரத்தில் தொடர்ந்தனர். எல்லோரும் நியமித்த நாற்காலிகளுக்குச் சென்று நின்று கொள்ள. சடக்கென்று அங்கே அமைதி நிலவியது. இரண்டு சிறுவர்கள் கொடி போட்ட குழல்கள் மூலம், “பப்ரப்ப,” என்று ஊத, ராஜா நேராக விக்ரமை நோக்கி வந்தார். 

“நல்வரவு என் உயிர்த் தோழன் அர்யாத் விக்ரம் அவர்களே.” என்றார் ராஜா மொழி பெயர்ப்பில். 

‘”ரியாஷக்” என்றான் விக்ரம். கற்றுக்கொண்ட ஒரே சலாமி வார்த்தையில். 

“நீங்கள் பத்திரிகை நிருபர் என்று கேள்விப்பட்டேன் இந்தப் பெண்?” என்று ப்ரீத்தியைப் புருவத்தால் கேட்டார். 

“இது என்னுடன் உதவிக்கு வந்த பத்திரிகை நிருபி!” 

“ஓ. அப்படியா? வந்தனம்! சலாமியாவுக்கு நல்வரவு. பெண்கள் பத்திரிகை நிருபர்களாக இருப்பது வரவேற்க வேண்டிய விஷயமே.” 

இப்படித்தான் துபாஷ் மொழிபெயர்த்தாலும் ராஜா அவளைக் கண்களால் உருட்டி, “தக்கஜம்,” என்கிற வார்த்தையை பிரயோகித்து வேறு ஏதோ சொன்னதாக ப்ரீத்திக்குச் சந்தேகம் வந்தது. இதற்குள் ஒரு காவலாளி வந்து பணிந்து எதையோ அறிவிக்க, ராஜா சட்டென்று அந்த ஹாலின் வாயிற்படிக்குச் சென்று மரியாதையுடன் நின்றார். மறுபடி குழல் ஊதி இரு காவலர்கள் வந்தனர், 

இவர்கள் அரசனின் காவலர்கள் போல் அல்லாமல் முகமூடி அணிந்திருந்தார்கள். தொடர்ந்து வந்தவரைப் பார்த்ததுமே விக்ரமுக்கு. இவர்தான் மதகுரு’ என்று தெரிந்து விட்டது. நீண்ட பாதிரி அங்கியும் வினோதமான, மொட்டைத் தலையை முழுதும் மறைக்காத தலையணியும். கையில் அவர் உயரத்துக்குத் தண்டமும், தீட்டப்பட்ட நெற்றிப் புருவமும் சிவக்க வந்தவரின் கையை ராஜா வாங்கி முத்தமிட, மற்றவர்கள் பணிய ராஜா விக்ரமை நோக்கி சைகை செய்ய, “கூப்பிடறான்,” என்றாள் ப்ரீத்தி 

விக்ரம் அவர்கள் அருகே சென்று இந்திய கலாச்சாரக் குழுவைச் சேர்ந்தவர்கள் யாவரும் நிற்கும் வரிசையில் போய்ச் சேர்ந்துகொள்ள, மதகுரு வந்தார். 

“ஹபாபியோ ஹபாப் அசி, ! என்று கட்டியங்காரன் உரத்த குரலில் கூற. ஒவ்வொரு விருந்தினராகப் பார்வையிட்டுக் கொண்டு கைகளை அலைத்துக் ஆசீர்வதித்துக் கொண்டு வந்தார். ராஜா கூடவே விக்ரமின் அருகில் வந்தபோது. ராஜா அவனை சலாமிய பாஷையின் அறிமுகித்து “இவள்தான் என் தங்கை ராஜகுமாரியைக் காப்பாற்றியவன்.” என்பது போல் சொன்னார். 

மதகுருவின் புருவங்களில் சற்றே வியப்பைக் காட்டி விட்டு மஞ்சள் பற்களால் கால்வாசி சிரித்துவிட்டு ‘விஷக்’ என்று கையை லாவகமாக ஒரு வீசு வீசிக் காற்றிலிருந்து ஒரு பூவை எடுத்து கையில் கொடுத்தார். விக்ரம். ‘தாங்ஸ்’ என்று அதை வாங்கிக் கொள்ள. சுற்றுப்பட்டவர்கள் ‘ஆ’ என்று ஆச்சரியத்தில் வாய் திறக்க. விக்ரம் பதறாமல் “யோவ் மாஜிக்” என்று கூப்பிட்டு. “இதே மாதிரி நீயும் செய்து காட்டுய்யா.” என்றான். 

மாஜிக் நிபுணர் மதகுருவைத் தொட்டுக் கூப்பிட்டு, அவர் மாதிரியே விஷ்க் என்று கையை அசைத்து ஒரு பெரிய பூச்செண்டையே காற்றிலிருந்து எடுத்து அவர் கையில் கொடுக்க, அவர் புருவங்கள் பின்னிக்கொள்ள. விக்ரமைச் சற்றுக் கோபத்துடன் பார்த்துவிட்டுக் சீடனிடத்தில் அதை வீசி எறிய, “துபாஷ், இந்தாளை நான் எங்க பார்த்திருக்கேன்.” என்றான் விக்ரம். 

“இவர் தாங்க மதகுரு. இந்தத் தேசத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த. ஆசாமி. ராஜாவை அப்படியே ஆட்டிப் படைக்கிறார்.”

ராஜா, “விக்ரோம்,” என்று உரக்க அழைத்துத் தன் பக்கத்து நாற்காலியைக் காட்டினார். இந்தப் பக்கம் ப்ரீத்தி, அதன் பின் ராஜகுமாரி. பட்டத்து ராணி, சின்ன ராணி மற்றும் சில ராணியா, தோழியா சொல்லமுடியாத பிரஜைகள், ராஜ சபைகள் கலாச்சாரக் குழுவினர் எல்லோரும் உட்கார அந்த மேஜை போதுமானதாக இருந்தது. சட்டென்று யாவரும் எழுந்திருக்க ஓரத்தில் நான்கைந்து சிறுமியர். “ஆசலாமியா!” பாடினார்கள். ஒரு மாதிரி அபசுராமாகவும் பிடில் சுருதிபோலவும். மிடில் ஈஸ்ட்தனமாக இருந்தது பாட்டு. 

“இதாங்க எங்க நாட்டு தேசிய கீதம்” 

“என்ன அர்த்தம்?” என்றாள் ப்ரீத்தி 

“என்னவோ ஒட்டகம் கட்டடம் இருக்குன்னு பாட்டுங்க. அப்படி ஒண்ணும் அம்சமா இல்லை. இந்த நாட்டு பயலுகளே அம்சமில்லை. எல்லாம் அடாக?” 

இப்போது தின்பண்டங்கள் கொண்டு வரப்பட்டு ராஜகுடும்பத்துக்கு மட்டும் தட்டுகள் வைக்கப்பட அவைகளில் கொழ கொழவென்று என்னவோ பரிமாறப்பட்டு ராஜகுரு அந்தத் தட்டுகளில் சாஸ்திரத்துக்குத் தன் தண்டத்தை வேவிவிட்டு ‘தூ தூ’ என்று அவைகளில் துப்பினார்! 

“துபாஷூ, என்ன இது?” 

“அவர் துப்பினாத்தாங்க சாப்பிடறதெல்லாம் பரிசுத்தமாவுதுன்னு சாஸ்திரங்கள்ள சொல்லியிருக்கு.” 

மதகுரு தன் காவலாட்கள் சகிதம் விருந்தை விட்டுச் சென்றார். எல்லாரும் உட்கார, சாப்பாடு துவங்கியது. 

ப்ரீத்தி, “நான் ஒரு வெஜிடேரியன்.” என்றாள். 

துபாஷ். “அப்படியா! நாசமாப் போச்சு.” என்றான். 

உள்ளே கைவண்டியில் ஒரு பன்றியின் முழு முஞ்சி வேகவைத்து ஜோடிக்கப்பட்டு அசட்டுத்தனமாக விழித்துப் பார்த்துக் கொண்டு ஆடி ஆடிக் கொண்டு வரப்பட்ட போது ப்ரீத்திக்குக் குமட்டியது. விக்ரமுக்கு, அப்போது வெளியே லேசான ஏரோப்ளேன் சத்தம் கேட்டது. சன்னல் வழியாக வானத்தைப் பார்த்தான். 

அத்தியாயம் – 12

வானத்தில் அந்த வெளிச்சம் தெரிந்தது. நிச்சயம் ஒரு விமானம் தான். இறக்கையோரம் இருந்த பச்சை சிவப்பு விளக்குகளுக்குப் பதில் சொல்வது போல மண்டை விளக்கு பளிச் பளிச், சற்று தூரத்தில் விரல் செருகினாற் போலத் தெரிந்த அந்த எலிக்கோயிலின் அருகில் சட்டென்று ஒளிவிளக்கு வரிசை உயிர் பெற்றது. ரன்வே! விக்ரம் விருந்தில் மதகுருவைத் தேடினான். காணவில்லை. விருந்து முடிந்திருந்தது. 

“விக்ரோம்!” மகாராஜாவின் குரல் அதட்டலாகக் கேட்க அவர்கள் யாவரும் உற்சாக வட்டமாக அமைந்து நிற்க’வா வா’ என்று ஆர்வமாக அழைத்தார். ஒருவருக்கொருவர் முதுகின்பின் கை கோர்த்துக்கொண்டு ஒரு மானுடவட்டம் அமைக்க, துடிப்பான சங்கீதம் தொடங்க. ராஜாவே கட்டைக் குரலில் பாட்டுப்பாடத் துவங்க. ராஜகுமாரி மற்றும் சில சலாமியர்கள் என்று ஒவ்வொருவராக முறைவந்து பாடப்பாட அதன் சத்தம் அதிகரிக்க விக்ரமின் முறை வந்தபோது அவனும் பாடியே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். 

ப்ரீத்தி, “பரவாயில்லை. நான் காதைப் பொத்திக் கொள்கிறேன்.” என்றாள். 

அவர்கள் பாட்டின் மெட்டு “ஹவானகீலா” போல இருந்தது. அதற்குப் பொருத்தமாக அவனுக்கு ஒரு நாட்டுப் பாடல்தான் தோன்றியது. ராஜகுமாரியைப் பார்த்துக் கொண்டே- 

“கந்தனைக் காணவென்று கார்த்திகைக்குவந்தேனடி. உந்தனைக் கண்டேன். இனி ஊருக்குப் போக மாட்டேன்.” என்றான். ராஜகுமாரி துபாஷை அழைத்து அதை மொழி பெயர்த்துச் சொல்லச் சொன்னாள். ராஜாவின் உடன் வந்த பெண்களில் ஒருத்தி திடீர் என்று உணர்ச்சிவசப்பட்டு விட்டவள்,

“காடைக்கூடு கக்கத்தில கருத்த மச்சான் பக்கத்திலே மாடப் புறாக் குஞ்செடுக்க மய்யலுண்டோ உங்களுக்கு” என்றாள். விக்ரம் ஆச்சரியப்பட்டு “என்னது துபாஷ். இங்க போய்த் தமிழு?” என்றான். பாட்டை மற்றவர்கள் தொடர, அந்தத் தமிழ் ராணி அவனருகே வந்து, “நான் தமிழ்தாங்க, வெள்ளங்கோயில், என்பேரு ராமதேவி, துபாஷூ, சொல்லு.” 

துபாஷ் “இவங்க ஒரு காலத்தில பட்டத்து ராணிக்குக் கிட்டத்து ராணியா இருந்தாங்க. ராஜ பார்வை மந்தமா இருந்தபோது பட்டிருச்சு. ஒரு. செகண்டு மயங்கிப் போயி வெச்சிட்டாரு.” 

“அதுக்கப்புறம் குதிரை லாயத்தில கட்டிட்டாரு என்னை. துபாஷூ, ஒரு காலத்தில் எம்புட்டு அழகா இருந்தேன்? என் பின்னாடி ஒரு பொதுக் கூட்டமே அலைஞ்சுக் கிட்டு இருந்ததா இல்லையா? த உனக்கு எம் பேர்ல ஒரு இது!” என்று திடீர் என்று சோகமாகி “சீரும் செறப்புமா கலைக் குடும்பத்தில் பொறந்து கலாச்சார கோஷ்டியில் நடனம் ஆட வந்தேன். அந்தப்புரத்தில் என்னைப் பந்தாடிட்டாரு. ஒரு தமிழ் பொண்ணுக்குக் கற்பு போயிருச்சுன்னா வேற என்னங்க இருக்குது. ஹூம்! தமிழக அரசில் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்துக்கு கூப்பிட்டாங்க, அப்பவே போயிருக்கணும்!” 

“அய்யோ. இந்தம்மா புலம்பலை கேட்டுக்கிட்டு இருந்தா விடிஞ்சுடும்.” என்றான். அவனருகே ராஜகுமாரி வந்து, “விக்ரோம்! லித்தில் இங்லீஷ்.” என்று சலாமி பாஷையில் கீச்சா பூச்சா என்று உரத்த சைகைகளுடன் பேச துபாஷ். “எனக்கு உன்னுடன் பேசத்தான் ஆசை. ஆனால் பாஷைதான் இல்லை” என்று மொழிபெயர்க்க, விக்ரம். “பரவால்லை. கண்ணே நிறையப் பேசுது. அதுவே போதும்னு சொல்லுங்க” என்றான். 

மொழி பெயர்ப்பு மூலம் அந்த வாக்கியம் அவளை அடையும் போது அந்தக் கண்கள் நீச்சல் குளங்கள் போல சலசலத்தன. “ஆத்ஸோ” என்றாள் ஆச்சரியத்துடன் ப்ரீத்தி அதே மாதிரி, “ஆத்ஸோ” பண்ணி “முழியைப் பாரு!” என்றாள். ராஜகுமாரி ஒரு பூவை எடுத்து விச்ரம் மார்புச் சட்டையில் செருக. “நட்பைக் காட்டுதுங்க. நீங்களும் ஒரு பூவை எடுத்து மார் குத்திருங்க” 

“காதலாய்யா?” என்றாள் ப்ரீத்தி, 

“காதல் இல்லை. நட்புங்க. காதல்னா வாயாலயே மாத்திப்பாங்க. குத்துங்க நீங்க பாட்டுக்கு. உங்களுக்கு மச்சம்.” என்றான் துபாஷ்.

விக்ரம் தயக்கத்துடன் ஒரு மலரை எடுத்து அவள் மார்பில் பொருத்தினான். அப்போது “இனிமாஸி” என்று அவள் ராஜாவால் அழைக்கப்பட “தோகாக்” என்று சிரித்துவிட்டு புறப்பட “இனிமாஸி! இனிமையான பேரு!” என்றான் விக்ரம், 

“இனிமா கொடுக்கற மாதிரி இருக்கு.” என்றாள் ப்ரீத்தி. அவள் முகம் சின்னதாயிருந்தது. 

“துபாஷ் உங்க ஊர்ல சைக்கிள்ள டபிள்ஸ் போகலாமா?” 

“கூடாதுங்க தண்டிப்பாங்க சவுக்கால ஒரு வீறு வீறிருவாங்க!” 

“ராஜ குடும்பத்துப் பெண்களோட வம்பு பண்ணா?” என்றாள் ப்ரீத்தி, “அதுக்கு இரும்பை பழுக்கக் காச்சி ஆசனத்துவாரத்தில ஏத்திருவாங்க!” 

“இரைச்சலாச் சொல்லு. அய்யாவுக்குக் கேக்கறாப்பல!” 

விக்ரம் சிரித்து, “தட்ஸ் நாட் ஃபன்னி. உன் பொறாமையைப் பார்த்துத்தான் சிரிக்கிறேன்!” 

“பொறாமையா? எனக்கா! ஹ!” என்றாள் “த பாருங்க. நீங்க யார் கூட வேணா குலாவுங்க, சைட் அடியுங்க எனக்கு அக்கறையில்லை ஆனா வந்த காரியம் என்ன? ராக்கெட்டைத் தேடறது. நீங்க என்ன செய்துகிட்டி இருக்கிங்க, ராஜகுமாரி பாக்கெட்ல ரோஜாப்பூ குத்திகிட்டு இருக்கிங்க. அதை ஞாபகப்படுத்தத்தான் ” 

“தாங்ஸ்” என்றான். 

அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் சமயம் அரண்மனையி லிருந்து சிற்சில பர்லாங்குகள் விலகிப் போனால் தென்படும் எலிக்கோயிலில் ஓர் அறை தீப்பந்த வெளிச்சம் நடனமிட்டுக் கொண்டிருந்தது. 

அதில் சுகிர்தராஜா ஒரு துப்பாக்கியைச் சுத்தப்படுத்தி கொண்டிருந்தான். அவன் வாயில் சிகரெட் தொங்கியது. சமீபத்திய பிரயாணம் செய்து வந்தவன் போலத் தோற்றமளித்தான். சற்றுத்தூரத்தி விளக்குகள் அணைக்கப்பட்டு வெள்ளி விளிம்பாகத் தெரிந்த பீச்கிராஃப்ட விமானத்தின் டர்போ கீச்சு கேட்டது. சுகிர்தராஜாவுக்கு இடது கண் சற்றுப் பார்வை மந்தம் போலத் தெரிந்தது. அவன் அதற்காக அணிந்திருந்த தனிப்பட்ட கண்ணாடி ஒரு பக்கம் தெளிவாகவும் ஒரு பக்கம் கறுப்பாகவும் ஒரு அவாதி வினோதத்தை அளித்தது. காத்திருந்தான். அப்போது மகுரு ராஜாங்கமாக நடந்து வந்தார். உடன் நான்கு முகமூடிக் காவலர்கள் நீண்ட அங்கியையும் கையில் தண்டத்தையும் தாங்கி வர அவர் வந்த தோரணையை சுகி எந்தவித சலனமுமில்லாமல் பார்த்துக் கொண்டே இருந்தவன் சற்றே தாமதமாகச் சிரித்தான். காவலாளிகளை விலகச் சொல்லிவிட்டு மதகுரு சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு காரியம் செய்தார் தன் அங்கியை டப்பாக் கட்டுபோலக் கட்டிக் கொண்டு தரையில் குந்தி உட்கார்ந்து ஒரு பீடியைப் பற்ற வைத்தார். “அண்ணே! வந்துட்டிங்களா?” என்றார் தமிழில்.

“ப்ளேனைப் பாத்த இல்லை? ஆளைப்பாத்த இல்லை? என்ன கேள்வி இது முட்டாக்கு!” என்றான். இப்போது அவர்கள் முகச்சாயலில் ஒற்றுமை இருப்பதைக் கவனிக்க முடிந்தது. 

“மொட்டை! எப்டி எல்லாம் நடக்கு?” என்றான். 

“எல்லாம் நல்லாத்தான் இருக்குது. ராஜா விசுவாசமாத்தான் இருக்கான். ஆனா நம்ம வேசத்தை கண்டு பிடிச்சுட்டா கொன்னு போட்டுருவான்!” 

“அது உன் சாமர்த்தியம். உன்னை ஜோடிச்சு மதகுருவாக்கி ராஜசபையில் வெக்கத்தான் முடியும். அதுக்கு மேலே உன் சாமர்த்தியம் தானே? பயப்படாத மதத்தை வெச்சுக்கிட்டு நிறையவே ஏமாத்தலாம். ஒரு தேசத்தையே ஏமாத்தலாம்!” 

“ஞாபகம் வெச்சுக்க அடுத்த ராஜா நான்தான். இவங்க தட்டில துப்பித் துப்பி எனக்கு நாக்கு வரண்டு போச்சு.” 

“கவலைப்படாதே! நான் வந்தது அதுக்கில்லை. இந்தப் போட்டோவைப் பாரு. எனக்குத் தகவல் வந்தது. இந்தாளு வந்திருக்கான்னு ” சுகி விக்ரமின் போட்டோவைக் காட்ட மதகுரு, “இந்தாளைப் பாத்திருக்கேனில்லை. இங்க வந்திருக்கான். என்னவே பத்திரிகை நிருபன்னு பேசிக்கிட்டாங்க.” 

“என்னது நம்ம அரண்மனைக்கா?” 

“ஆமா. ரொம்பத் துடியான தங்கமான பையன் அண்ணாச்சி!”

சுகி மதகுருவின் மொட்டை மண்டையில் தட்டி. “உன் தலை! இவன் யாரு தெரியுமில்லை. நமக்கு நம்பர் ஒன் விரோதி! ராக்கெட்டைத் தேடிக்கிட்டு நம்ம மூக்கடியிலயே வந்துட்டான். தங்கமான பையனாம் இவன். இந்திய சர்க்கார் ஏஜண்டு. பேர் விக்ரம்!” 

சுகிர்தராஜா விக்ரமின் போட்டோவைப் பார்த்துப் பேசினான். “பையா, இந்த மட்டும் வந்துட்டியா? இருக்கட்டும். எவ்வளவு நாளைக்கு உன் ஆட்டம் பார்த்துரலாம்?” 

“அண்ணே இவனை எதாவது செய்யணுமா?” 

“ஆமடா, மொட்டைத் தகடா. உங்காளு ரெண்டு பேரைப் பார்த்து உங்க பாஷயில் சொல்லி அனுப்பு ராத்திரியே இவனைத் தீர்த்துரு கோழி கூவுறதுக்குள்ள, பாடி கிடச்சாகணும்” 

மதகுரு கையைத் தட்டி இரண்டு காவலர்கள் வர “ஹய்யா அய்க்! இய்யா அபர்க்!” என்று சலாமி பாஷையில் தொடர்ச்சியாக ஆணையிடுவதை சுகிர்தராஜா ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான், சிரித்துக் கொண்டே, “நல்ல ட்ரெய்னிங்குடா உனக்கு! சொக்கலால் சேட் பீடி குடிக்கிற ஆளு மதகுருவா? உனக்கு ஒரு தண்டம். மொட்டைத் தலை! தூத்” என்று அவன் தலையில் தட்ட “அண்ணே அவங்களுக்கு எதித்தாப்பல இந்த மாதிரி தலைல தட்டாதிங்க. அதும் இன்னைக்குத் தான் சவரம் பண்ணிக்கிட்டனா தொட்டாலே எரியுது.” 

“பேசிக்கிட்டே இருக்காதே. விக்ரம்… முதல்ல அவரத் தீர்த்தே ஆகணும். அப்புறம் ராஜாவை கவுத்து போட்டுட்டு எனக்கே எனக்கன்னு தேசம் சொந்த தேசம் அமைக்கப் போறேன். இங்க! எங்க நம்ம அக்னி புத்ரன்? கோயில்ல பத்திரமா இருக்குதா? வா பார்க்கலாம்.”

– தொடரும்…

– 80களில் குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்தது.

– விக்ரம் (நாவல்), முதற் பதிப்பு: மே 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *