கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: July 9, 2025
பார்வையிட்டோர்: 16,269 
 
 

(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் – 7

ப்ரீத்தியின் சைடுகார் மட்டும் யூட்டனுக்குக் கட்டுப்பட்டு எஞ்சியிருந்த வேகத்தையெல்லாம் தியேட்டருக்குள் நுழைந்தே தீர்த்துவிடுவது என்ற வைராக்கியத்துடன் மூடியிருந்த பிரவேச வாசலைத் தகர்த்துக் கொண்டு ‘ரியர்ஸ்டால்’ என்று சொல்லப்பட்ட கீழ் வரிசையில் மார்னிங் ஷோ பார்த்துக் கொண்டிருந்தவர்களின் ‘ஜி’ வரிசையில் மோதி ‘தடங்” என்று குலுங்கி நின்றது. ப்ரீத்தி இதற்கு மேல் அதிர்ச்சி தாங்காது என்று ஸ்தலத்தில் உடனே மயக்கம் போட்டுச் சரிந்தாள். 

ப்ரீத்தி எதிர்பாராமல் தியேட்டருக்குள் நுழைந்து விட்டதால் தன் ‘பார்ட்னர்’ இல்லாததை உணர்ந்த விக்ரம் அந்தத் துரத்தலைப் புறக்கணிக்க வேண்டியதாகி விட்டது. தியேட்டருக்கு முன்னே அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி, “இங்க ஒரு பொண்ணு சைடு கார்ல தனியா வந்துதாய்யா?” என்று விசாரித்து, பதிலுக்குக் காத்திராமல் உடைந்த கதவை உணர்ந்து உள்ளே சென்று இருட்டில் மாறும் பிம்பங்களின் இடையில், “ப்ரீத்தி, ஆர் யூ ஆல் ரைட்” என்று தேடினான். 

“என்ன படம்யா இது? தியேட்டரே குலுங்குது. நாற்காலிங்கள்ளாம் குலுங்குது” என்று சொன்னார்களே தவிர ப்ரீத்தியின் பிரவேசத்தை அதிகம் பேர் கவனித்ததாகத் தெரியவில்லை. விக்ரம் திரையில் பார்த்துக் கொண்டே வர முனகல் சப்தம் கேட்கப் ப்ரீத்தியை நோக்கிக் குனிந்து அவளைப் பொறுக்கிக் கொண்டு உடனே ஆசுவாசப்படுத்தத்தான் நினைத்தான். ஆனால் திரையில் ஒரு கிரிக்கெட் பிம்பம் அவனைக் கவர்ந்தது. படம் துவங்குவதற்கு முன் காட்டப்படும் ‘ஐஎன்ஆர் நியூஸ் ரெவ்யூ’ அது. அதில் ஒரு கிரிக்கெட் ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. இங்கிலாந்து குழுவினர் 45 ஓவர்களில் ஏழு விக்கெட் நஷ்டத்துக்கு 225 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி அந்த 225 எடுத்ததா இல்லையா என்பது பற்றி விக்ரம் கவலைப்படவில்லை. அவன் கவனம் திரையில் அந்தக் கிரிக்கெட் மாட்ச் பார்க்க வந்த பார்வையாளர் ஓட்டத்தை ஒரு ‘கிளான்ஸ்’ ஆரவார சகிதம் காட்டும்போது தெரிந்த டெலிவிஷன்காட்சிதான். 

அதில் ஒரு ஏராளமான ராஜா அவர் அருகில் சுகிர்தராஜா தெரிந்தான். விக்ரம் சடடென்று ப்ரீத்தியைக் கீழே போட்டுவிட்டு “லுக்!” என்றான்.

ப்ரீத்தி சற்று உயிர் பெற்றுத் திரையைப் பார்த்து “கபில் தேவ்”என்றாள் ஹீனமாக. 

“இல்லை, சுகிர்தராஜா வா போகலாம்!” 

“எங்க? எங்க? வெயிட் ஃபார் மி!” என்று அவள் தடுமாற, விக்ரம் அந்தத் தியேட்டரின் ப்ரொஜக்டர் அறையை நோக்கி விரைந்தான். 

ப்ரீத்தி அவனை நொந்து கொண்டே பின் தொடர்ந்தாள். 


விர்ர் என்று ஓடிக் கொண்டிருக்கும் படச்சுருள் ஓசை மத்தியில் விக்ரம் ஒரு ரீலை ஆராய்ந்து கொண்டிருக்க அந்தத் தியேட்டரின் புரொஜக்டர் ஆப்பரேட்டர், “அய்யா, நீங்க யாருன்னே சொல்லலை. அசப்பில பார்த்தா நமக்கு தெரிஞ்ச ஆளு மாதிரி இருக்கிங்க…” 

”நான் கவர்மெண்ட்டு.” தன் பர்ஸிலிருந்து ஐடிகார்டை எடுத்து அவன் முக்கருகே காட்ட, 

“இதெல்லாம் யாருக்குப் புரியுது” என்றார் தியே-ஆப். 

விக்ரம் தன் துப்பாக்கியைச் சட்டென்று உருவிக் காட்டி “இது புரியுதா?” என்றான். 

“அய்யோ! நல்லா புரியுதுங்க. எதை வேணா எடுத்துட்டுப் போங்க. ‘நீலமலைத் திருடன்’ இருக்குது. முழு ரீலையே எடுத்துட்டுப் போங்க.” 

விக்ரம். ”அதெல்லாம் வேண்டாம் எனக்கு இந்த ஒரு துண்டு போதும்,” என்று கத்திரித்துக் கொண்டான். 

அப்போதுதான் ப்ரீத்தி தள்ளாடிக்கொண்டு உள்ளே வர, 

“ஓயா! ப்ரீத்தி, ஆர் யூ ஆல் ரைட்? சரியாப் போச்சா! ஸாரி, உன்னை அவசரத்தில் மறந்து போயிட்டேன்” 

ப்ரீத்தி அவனைச் சுடுவது போலப் பார்க்க, “அம்மா யாருங்க?”

“புதுமுகம்! வர்றம் மாணிக்கம்” 

:அட எம் பேர் எப்படி தெரிஞ்சுது?” என்றார் ஆப்பரேட்டர், 

“உங்க மூஞ்சிலேயே மாணிக்கம் இருக்குது!” 

“அதெல்லாம் இல்லைங்க. வாசல்ல உங்க பேர் போர்டில எழுதியிருக்கு ” என்றாள் ப்ரீத்தி. 

“கம்!” என்று விக்ரம் மாடிப் படிகளில் சரிய, “வெய்ட்! வெய்ட்! என்னால இந்த ஓட்டம் ஓட முடியாது.” என்று அவனைப் பின் தொடர்ந்தாள். 

சினிமாவில் காண்பிக்கப்பட்ட சுகிர்தராஜா பிலிம் சுருள் இப்போது லூப்பாக மாட்டப்பட்டு ஒரு திரையில் திரும்பத் திரும்பக் காட்டப்பட, ராவும் பிரீத்தியும் விக்ரமும் அதை அலுவலகத்தில் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

ராவ், “சந்தேகமே இல்லை. இதான் சுகிர்தராஜா! கை குடுரா! எப்படிக் கண்டு பிடிச்ச?” 

விக்ரம் கை கொடுக்காமல், திரையில் சலனித்த சுகியைப் பார்த்துக் கொண்டு “கிரிக்கெட் மாட்சு எங்க நடந்தது போன வாரம்?” 

“ராக்மன் கப்பு சலாமியாவில் நடந்தது. ஃபோர் நேஷன்!”

“சலாமியா? வேர் தி ஹல் இஸ் தட்?” 

ராவ் மேசை மேல் ஒரு குளோபைச் சுற்றி, “இதோ இங்க இருக்கு!” என விரலால் காட்ட, 

“இந்த மாட்சில ஸ்ரீகாந்த் 75 அடிச்சார்.” என்றாள் ப்ரீத்தி. 

“எல்லாம் ஓசியா இருக்கும்.” 

“பாரு. ஸ்ரீக்காந்தை மட்டும் எதும் சொல்லாத கெட்ட கோபம் வரும்.” 

“ஐம் நாட் ஒரிட் எபவுட் ஸ்ரீக்காந்த் இந்தக் கிரிக்கெட் மாட்சில வந்து குந்திக்கிட்டு இருக்கிற சுகிர்தராஜா, அவனுக்கு சலாமியாவில் என்ன வேலை? ஸார் பக்கத்தில் ஒரு வெத்து குண்டன் யாரு?” 

“அதாண்டா சலாமியாவோட ராஜா!” 

“டெல் மி எபவுட் சலாமியா இன் நாட் மோர் தன் ஃபோர் லைன்ஸ்” 

“கொஞ்சம் பாலைவனம், கொஞ்சம் சோலை, கொஞ்சம் கடல். கொஞ்சம் மலை, கொஞ்சம் ஆயில், ஒரு வினோதமான தேசம், அந்த தேசத்து ராஜாவைப் போல, என்னவோ சிங்” 

“ப்ரீத்தி, இந்த மாட்சு எப்ப நடந்தது?” 

“போன வாரம்.”

“க்ரேட்? சுகிர்தராஜா போனவாரம் சலாமியாவில் இருந்திருக்கான். அப்டின்னா என்ன அர்த்தம்?” 

“ராஜாவைப் பார்க்கப் போயிருக்கலாம்… மை காட்! நீ சொல்றது புரியுது.” 

“ப்ரீத்தி, உனக்குப் பாஸ்போர்ட் இருக்கா?” 

“இல்லை.”

“ஸார் இந்தப் பொண்ணுக்கு அர்ஜெண்டா பாஸ்போர்ட் பண்ணிருங்க. அப்புறம் சலாமியாவுக்கு ரெண்டு பேருக்கும் விசா!”

“அவ்வளவு சுலபமில்லை. சலாமியாவில் ரொம்ப ஸ்ட்ரிக்ட், லேசில விசா கிடைக்காது.” 

“கிடைக்க வெக்கணும். ரெண்டு பேரும் உடனே போயாகணும்.” 

“வெய்ட் எ மினிட், இதில நான் ஒருத்தி இருக்கேனுங்கறதே வரலையே? என்னைக் கேக்க வேண்டாமா?” 

“வேண்டாம். யூ ஆர் கமிங் வித் மி. தட்ஸ் என் ஆர்டர்!” 

ப்ரீத்தியின் கோபக் கன்னச் சிவப்பை இருவரும் கவனிக்கவில்லை.

ராவ் யோசித்து, “லெட் மி ஸீ, சலாமியாவுக்கு ஒரு கலாச்சார கோஷ்டி கிளம்பிட்டிருக்கு. நம்ம டிப்பார்ட்மெண்ட் கிளியரன்ஸுக்கு வந்தது பேப்பர்ஸ், உனக்கு ஏதாவது கலாச்சாரம் தெரியுமா, டான்ஸ் பாட்டுன்னு?” 

”ஜன கண மன தெரியும்,” என்றான் விக்ரம். 

“நோ சான்ஸ்! ப்ரீத்தி?” 

“ஸார், எனக்குக் கம்ப்யூட்டரைத் தவிர எதுவும் தெரியாது ஸார்..” 

“கம். வீ வில் மேனேஜ் ப்ரீத்தி, யாருக்கு டாட்டா காட்டனுமோ காட்டிட்டு கிளம்பி வந்துர்றியா?” 

“எப்ப கிளம்பணும்?” என்றாள் ப்ரீத்தி. 

“நேத்திக்கு” என்றான் விக்ரம்!

அடுத்த நாளைக்கு பாஸ்போர்ட் விசா போன்ற பிரயாணக் காகிதங்கள் தயாராகிவிட்டன. விக்ரம். ப்ரீத்தி இருவர் பெயர்களும் அவசரமாக. சலாமியாவில் இண்டியா பெஸ்டிவலுக்காகச் செல்லும் கலாசார கோஷ்டியுடன் சேர்க்கப்பட்டன. 

ப்ரீத்தி தன் சிறு கைப்பெட்டியுடன் விக்ரமின் அறைக்கு வந்து படுக்கை மேல் கை பெட்டியை வைத்து, “ஐ ஜஸ்ட் டோண்ட் அண்டர்ஸ்டாண்ட்,” என்றாள். “எங்கப்பாவுக்கு…”

“எல்லாம் தகவல் சொல்லியாச்சு. சின்ன விஷயங்களைப் பற்றிக் கவலைப்படாதே” 

ப்ரீத்தி பிரயாணத்துக்கு ஏற்ப உடையணிந்திருந்தாள். அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தாள், குப்பையாக இருந்தது. அங்கே இங்கே சட்டை பாண்ட்டுகள் தொங்க ஏராளமாகப் புத்தகங்கள். மலர்ச்செடி ஒன்று கவிழ்ந்திருப்பதை நிமிர்த்தினாள். அந்தப் புத்தககங்களில் ஒன்றைப் புரட்டி. “ரொம்பப் படிப்பீங்க போலிருக்கே”, என்றாள். 

விக்ரம் பதில் சொல்லாமல் ஷேவ் பண்ணிக் கொண்டிருந்தான், அலமாரியில் இருந்த மீராவின் போட்டோவைப் பார்த்தாள். “இதானா அவ?” 

விக்ரம் ஷேவிங் கண்ணாடி வழியால் பார்த்து, “அதெல்லாம் எடுக்காதே.” என்றான். 

“வெரி சார்மிங் அண்ட் ஸ்வீட், ம்! எத்தனை குப்பை! ஒரு பெண் இல்லேன்னா எப்படி ஆயிடறது?” 

விக்ரம் பேசாமல் இருக்க அவனருகில் வந்து அவன் ஷேவிங் பண்ணுவதைப் பார்த்து. “ரத்தம்! ஆம்பளைங்களுக்கு ஷேவிங் பண்ணிக்கிறது தொந்திரவு இல்லை?” 

விக்ரம் திடீர் என்று திரும்பி, “பாரு! உனக்கும் எனக்கும் ஆபீஸ் உறவு! அதோட… சரி! தட்ஸ் இட், எனக்கு உம்பேர்ல எந்தவித அக்கறையும் கிடையாது. நானும் நீயும் சலாமியா போறதெல்லாம் வேஷம். நடுவே காதல் கீதல்னு எதையாவது கிளப்பாதே! நோ! எனக்கு ஒரு பொண்ணைக் காதல் பண்ணிக் கல்யாணம் பண்ணி இழந்தது போதும்! உம் பேர்ல எனக்கு அக்கறையே இல்லை! யோசிச்சுப் பார்த்தா யூ ஆர் அக்ளி! பாக்க நல்வால்லை. உனக்கு மாரே இல்லே இல்லை!” 

ப்ரீத்தி, “நீ மட்டும் மன்மதனோ?” என்று கண்ணீருடன் உட்கார்ந்தாள். “பிலிஸ்டைன். காட்டு மனுசன்! கண்ணைப் பாரு! ஒற்றைக் கண்ணு! எனக்கு எத்தனை பாய் ஃப்ரெண்டு தெரியுமா?” என்று புழுங்கினாள். 

அப்போதுதான் பரித்தி அவளை நோக்கி ஊர்ந்து வந்த பாம்பைக் கவனித்தாள்.

அத்தியாயம் – 8

பேசிக்கொண்டே இருந்த ப்ரீத்தி அந்தப் பாம்பைப் பார்த்து உறைந்து போனாள். மெல்ல அவசரமே இல்லாமல் அது படுக்கை மேல் ஊர்ந்தது. என்ன பாம்பு என்று அவளால் சொல்ல முடியவில்லை. ஏதோ ஒரு கறுப்பு கலந்த அழுக்குப் பச்சையில் வழவழவென்ற ஒரு வழுக்கல். 

“ஏன் நிறுத்திட்டே” என்றான் விக்ரம். 

“பா பா பா…”

“பாபான்னா? பாட்டுக் கத்துக்கறியா?” 

ப்ரீத்தி வினோதமாக நடுங்கிக் கொண்டு படுக்கையில் காட்ட, விக்ரம் கண்ணாடியில் அதைப் பார்த்தான். ப்ரீத்தி சுவரில் முதுகு பதித்து அதற்கு மேல் பின்வாங்க முடியாமல் நின்றாள். 

விக்ரம் பதற்றமே இல்லாமல் நிதானமாக முகம் கழுவிக்கொண்டு, டவலால் முகம் துடைத்துக்கொண்டு, ப்ரீத்தி கண்ணாடியில் தெரிந்த விக்ரமைக் கண்களால் கெஞ்ச, “இரு வரேன்” என்று சொல்லி, “பாம்பு தானே?” என்று அதைக் கையில் எடுத்து முத்தம் கொடுத்து, “என்ன வி.கே.மணி, கூப்பிட்டாத்தான் கூடையிலேர்ந்து வெளியே வரணும்னு சொல்லியிருக்கேனில்லை? இப்ப இந்த அம்மா பயந்துக்கறாங்க இல்லை?” என்று அதைக் கட்டிலுக்கடியில் இருந்த கூடைக்குள் செலுத்தி, “போப்பா போ” என்று அதை மூடினான். 

ப்ரீத்தி வெலவெலத்துப் போய் வியர்வையைத் துடைத்துக் கொண்டு, “பாம்பு வளக்கறீங்களா?” 

“ஆமாம்” என்றான் விக்ரம். 

“பேரு வி.கே.மணியா?” 

‘ஆமாம். மனுசங்களுக்குத்தான் இனிஷியல் வேணும்னு எங்க சட்டம்?” 

“வேற ஏதாவது வளர்க்கறீங்களா?” 

விக்ரம், “ஒரு தேவாங்கு இருந்தது.” என்று பாண்ட்டை உயர்த்தி, ஜிப்பை விர்ரிக் கொண்டான். 

ப்ரீத்தி கண்ணை மூடிக்கொண்டு. “நோ,” என்றாள். 

விக்ரம் ‘சலாமியா’ என்ற புத்தகத்தைப் பிரித்துக் கொண்டே, ரொட்டி கடித்துக்கொண்டே. பாக் செய்து கொண்டே, டெலிபோனைச் சுழற்றி “இண்டியன் ஏர்லைன்ஸ்? இஸ் தி டெல்லி ஃப்ளைட் ஆன் டைம்?” என்றான்.


விமான நிலையத்தில் ஃபைபர் நாற்காலி வரிசையில் இருவரும் உட்கார்ந்திருக்க, ப்ரீத்தி முனகிக்கொண்டே வந்தாள். “என்னைப் போட்டு இப்படி எதுக்கு இம்சை பண்றீங்க? எந்த ஊரு, எந்தத் தேசம்னு தெரியாமக் கூட ஒரு பிரயாணமா?’ 

“இந்தா, படி” என்று சலாமியா பற்றிய புத்தகத்தைக் கொடுத்தான். 

அதை அவள் பிரித்ததில் அதன் முதல் பக்கத்தில் கலர் போட்டோவில் சலாமியாவின் மன்னர் ஏளனமாகச் சிரித்தார். எச்.இ.எச்.ஸர் தாக்கத் சிங்ஜி. ஜி.ஸி எஸ் ஐ என்று பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்த போட்டோவைப் பார்த்து ஒரு மாதிரி, “சிரிக்கிறதே நல்லால்லையே”.

“யாரு?” 

“சலாமியா ராஜா” 

“நேரில் சந்திக்கிறப்போ சொல்றேன்.” என்று விக்ரம் தன் புத்தகத்தில் ஆழ்ந்தான். 

“என்ன புத்தகம்?” என்றாள் ப்ரீத்தி. 

“உனக்குக் கொடுத்ததைப் படி இதெல்லாம் படிச்சா கெட்டு போயிடுவே!” 

விக்ரமின் பின்னால் உட்கார்ந்திருந்தவன். “சத்தம் போடாம டாய்லட்டுக்கு வர்றியா?” என்றான். 

விக்ரம் நிலைமையைக் கணித்தான், முதுகில் பதிந்திருப்பது துப்பாக்கியா. இல்லை ஏதாவது பாசாங்கான விஷயமா என்று பரிசோதித்துப் பார்க்க விரும்பவில்லை. 

பின்பக்கத்துக்காரன், “திரும்பக் கூடாது. கத்தக் கூடாது. தொந்தர வில்லாம எழுந்து வர்றியா?” என்று ரகசியம் பேச- 

“வரேன்” என்றான். 

“எங்க வரே?” என்றாள் ப்ரீத்தி 

“ஸார் நம்ம நெடுநாளைய தோஸ்த்து கூப்பிடறார். ஒரு நிமிஷத்துல வர்ரேன்.” 

இருவரும் எழுந்து நிற்க, அந்த ஆசாமி உயிர்த்தோழன் போல விக்ரமின் மேல் ஒட்டிக்கொண்டிருந்தான். அவன் முதுகில் துப்பாக்கி பதித்திருப்பது ப்ரீத்திக்கு இங்கிருந்து தெரியவில்லை. இருவரும் பசைபோட்டாற்போல செல்வது விநோதமாக இருந்தது. 

“வெய்ட் விக்ரம்! எங்கே போறீங்க?” 

“ஜெண்ட்ஸ் டாய்லட் அங்கேதானே போறோம் தலைவரே?”

“பேசாதே.” என்று துப்பாக்கியால் நிரடினான். 

“ம்…நட, எக்ஸ்க்யூஸ்மி,” என்று ப்ரீத்தியைப் பார்த்துப் புன்னகைத்து, “கொஞ்ச நேரத்தில் காரியம் முடிஞ்சுரும்”.

விக்ரம் கண்ணால் சைகை செய்வதை ப்ரீத்தி பார்க்காமல் புத்தகத்தில் ஆழ்ந்து, “சீக்கிரம் வந்திருங்க,” என்றாள். 

விக்ரம் துப்பாக்கியால் டாய்லெட் உள்ளே செலுத்தப்பட்டான். ஒரு மாமா நிதானமாகப் பீங்கானைப் பரவலாக நனைத்துக் கொண்டிருக்க, “வெய்ட்”, என்றான். 

“சத்தம் வரக்கூடாது. சுட்டுப் பொசுக்கத் தயங்கவே மாட்டேன்.”

“சுடாதே.” என்றான் விக்ரம். “என்ன வேணும் கேளு” 

“எங்க போறாப்பல?” 

“டில்லி” 

“டில்லிலருந்து?” 

“வேற எங்கேயும் இல்லை. திரும்பி வந்துருவேன் காரியம் ஆன உடனே!” 

“என்ன காரியம்?” 

“சொந்தக்காரியம்.” 

“சலாமியா போறாப்பலயா?” 

“சலாமியா? அப்படின்னா?” 

“யோவ்! எதுக்குப் பாசாங்கு?” 

விக்ரம் தடக்கென்று திரும்பி அவன் துப்பாக்கியை ஒரே எட்டில் உதைக்க முற்பட, அவன் அதற்குத் தயாராகவே இருந்தான்! சட்டென்று பின்வாங்கி விலகிக் கொண்டு இப்போது விக்ரமின் மார்புக்கு நேராகத் துப்பாக்கியைக் காட்டினான். நிஜம்தான். 

“பாரு, ரொம்ப ரொம்ப நெர்வஸ்ஸு நானு? ஆனா என்ன நெர்வஸா இருந்தாலும் குறி தப்பாது.” 

விக்ரமின் கண்கள் அலைந்தன. காலந்தாழ்த்த வேண்டும். யாராவது டாய்லட் உபயோகிக்க வரமாட்டார்களா? 

“போ பின்னால்! உம்!” 

கபோடு வைத்த அந்த எக்கச்சக்கமான இடத்துக்குள் விக்ரமைத் திணித்து அவன் கைகள் நடுங்க அவன் பையைப் பரிசோதிக்க முற்பட்டான், விக்ரம் இந்தச் சந்தர்ப்பத்தில் ஏதும் ரிஸ்க் எடுக்க முற்படவில்லை. அந்த முகம் கிட்டத்தில் பார்த்தது ஞாபகம் இருந்தது மீராவைக் கொன்றுவிட்டு ஓடிய இருவரில் ஒருவன் என்ன செய்யப் போகிறான்? சரியானபடி மூலையில் அடைபட்டுவிட்டான் உத்தரத்தில் பொருத்தியிருந்த ஒலி பெருக்கியில் அந்தப் பெண்குரல் ஆங்கிலம் தடவின தமிழில், “ஹைட்ராபாட் மற்றும் டில்லி செல்லும் பயணிகள் விமானத்தில் சென்று அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று அறிவிக்க, 

விக்ரம் சுமார் பத்தடி தூரத்தில் சுடப்பட்டான்! சைலன்ஸர் பொருத்திய துப்பாக்கி ‘ட்விக்’ என்றது ஓரத்தில் டவல் சீப்புடன் நின்றிருந்த கேர்டேக்கர் சிப்பந்திக்குக் கூடச் சப்தம் கேட்டிருக்காது. விக்ரம் அப்படியே மடங்கி விழுந்தான். 

விக்ரமை நேருக்கு நேர் சுட்டவன் அவன் பையில் இருந்த பொருட்களப் பரிசோதிக்கும் எண்ணத்தில் கிட்ட வந்தான். விக்ரம் கண்முடி டாய்லட் சீட்டில் சரித்தவன்-சட்டென்று சகலமும் உயிர்பெற்று அவன் மேல் பாய்ந்து துப்பாக்கியைத் தட்டி வீழ்த்த முழங்காலால் அதே சமயம் அவள் இடுப்பில் வெடிக்க கழுத்தின் கீழ் ஒரு கராத்தே வெட்டு! குப்பையாக விழுந்தான். 

“ஸாரி, உன்னைக் கொல்றதுக்கு எனக்கு இஷ்டமும் இல்லே. நேரமும் இல்லை! பைமை ஃப்ரண்ட்” விக்ரம் புறப்பட்டான், 

ப்ரீத்தி தவித்துக்கொண்டு காத்துக் கொண்டிருந்தாள். “எங்க போயிட்டிங்க? எல்லாப் பாசஞ்சர்களும் விமானத்துக்குப் போயாச்சு!” 

“டாய்லட்டில கொஞ்சம் பர்ஸனலா பேசவேண்டியிருந்தது நண்பர் கூட” 

“யாரு அந்த ஆளு?” 

“நலம் விரும்பி! என்னை மாருக்கு நேரா துப்பாக்கி வெச்சுச் சுட்டாரு. அதனாலே கொஞ்சம் லேட்டாயிருச்சு!” 

“என்னது? மாருக்கு நேரா?” 

“துப்பாக்கி, கன்னு இல்ல, கன்னு? ஹி ஷுட் மீ!” 

“உனக்கு ஒண்ணும் ஆகலையா?” 

விக்ரம் நடந்துகொண்டே தன் சட்டை பட்டனை ஒன்றிரண்டு கழற்றினான். 

“சும்மா பயங்காட்டாதீங்க. துப்பாக்கியால சுட்டான், உங்களுக்கு ஏதும் ஆகலியா? வெத்துத் துப்பாக்கியா?” 

“இல்லை, எதையும் தாங்கும் இதயம்!” என்று விக்ரம் தன் புல்லட் ப்ருஃப் பனியனைக் காட்டினான். செக்யூரிட்டி அதிகாரியிடம் தன் கார்டைக் காட்டி. “அந்த டாய்லட்டில ஒருத்தரு மயக்கமா கிடக்கறாரு! மயக்கம் தெளிஞ்ச உடனே அரஸ்ட் பண்ணி இந்த நம்பருக்கு போன் பண்ணி, வண்டி அனுப்பச் சொல்லுங்க!” என்றான். 

அத்தியாயம் – 9

அந்தச் சிறிய விமான நிலையத்தில் யாருமே இல்லாதபோது விக்ரமும் ப்ரீத்தியும் வந்து இறங்கினார்கள். “யாரையுமே காணோமே.” என்றாள் “எல்லாருமே செத்துப் போயிருக்கணும் – இல்லை, லஞ்சுக்குப் போயிருக்கணும்” 

“வாங்க வாங்க” என்று சப்தம் கேட்டு “என்னடாது தமிழ்” என்றான். அவர்களை நோக்கி ஒருநடுத்தர வயதுக்காரன் பொந்தா பொந்தா என ஓடி வந்தவனைப்பார்த்து “நீங்கதானா…” என்று ஆரம்பித்தவனை மேலும் பேச விடாமல் “என் பேரு சுபாஷ், நான் இந்த ஊர்ல துபாஷ் ” 

“சபாஷ்!” இருவரும் விமான நிலையத்தின் குட்டிக் கட்டிடத்தை நோக்கி நடக்க, விக்ரம் அந்தத் துபாஷை நேராகப் பார்த்தான். சுலபமாகச் சிரித்து அதிகமாகப் பேசுவான் போல இருந்தது. ப்ரீத்தியை “குட்மார்னிங்குங்க. நல்வரவு வெல்கம் அல்லது இந்த ஊர் பாஷையில சொன்னா சுப்ராஷ் துபாஷ்னா மொழிபெயர்ப்பாளன். சலாமிலிருந்து தமிழுக்கு தமிழன்தான். இங்க வந்து மாட்டிக்கிட்டேன். தண்ணியில்லாக் காட்டில” விக்ரம் சுற்றிலும் பார்த்தபோது ஒரு முரட்டு அதிகாரி அவர்கள் இருவரையும் சைகை காட்டி அழைத்தான். இருவரும் டெர்மினல் கட்டிடத்தை அணுக அதிகாரி ப்ரீத்தியைக் கண்கொட்டாமல் பார்க்க. “கம்மூனு வா. நானே எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்றேன்.” என்றான் விக்ரம். “சாக்கிரதையா இருங்கம்மா, கொஞ்சம் அசந்தாக் கையைக் கண்ட இடத்துல வெச்சுருவாங்க”. 

அவர்கள் அதிகாரியை அணுக அவன் கண் விலகாமல். “பாஸ்போர்த்.” என்றான். விக்ரம் எடுத்துக் கொடுக்க அதைப் பிரித்துப் பார்த்துத் துபாஷிடம் அவர்கள் பாஷையில் ஏதோ கராஷ் முராஷ் என்று சொல்ல “உங்களுக்கு என்ன தொழிலு?ன்னு கேக்கறான்.” 

“ப்ரெஸ்” என்றான். துபாஷ் மொழிபெயர்த்துச் சொல்ல “என்ன பத்திரிகைன்னு கேக்கறான்.” விக்ரம் அந்தக் கேள்விக்குக் காத்திருந்தவன் போல, “இன்ட்ரூடர்,” என்றான். 

‘உங்க பார்ட்டிகாரங்க பஸ்ல காத்துக்கிட்டு இருக்காங்க” 

தூரத்தில் பஸ் ஒன்று துணித்திரையில் “இண்டியா ஃபெஸ்டிவல்” என்ற அறிவிப்பு படபடக்கக் காத்திருந்தது. 

அதிலிருந்து ஒரு முகம் சிரிப்புடன் டாட்டா காட்டியது. அதிகாரி அவர்களுடன் பஸ்வரை வர விக்ரம், “ஹாய் ஃபோக்ஸ்.” என்று உள்ளே நுழைந்து முதல் முதல் ஸீட்டில் உட்கார்ந்து உடனே முகத்தை மூடிக் கொண்டு தூங்கிப் போனான். 

அதிகாரி மற்றவர்களை விசாரித்தான். இரண்டாம் வரிசையிலிருந்த மாஜிக் நிபுணன் மொழித் தேவையின்றி வாயிலிருந்து ரிப்பனை உருவிக் காட்டினான். அதற்கு அடுத்த வரிசையில் உட்கார்ந்திருந்த பாம்பாட்டி. “பாம்புங்க” என்று கையால் பாம்பு போல செய்து காட்டி அதைக் கொஞ்சம் ஆடவிட்டான். 

அதிகாரி தன் துப்பாக்கி முனையால் அந்தப் பாம்புப் பெட்டியை நிரட அதனுள்ளிருந்து புஸ்ஸ் என்று சப்தம் கேட்க. முடிவைத்துவிட்டு “ஜாப்பா ஆத்ஸேஸா” என்றான். 

துபாஷும் “ஆத்ஸோ!” என்றான் 

ப்ரீத்தி விக்ரம் அருகில் உட்கார்ந்து கொண்டு. “அவன் பார்க்கிற பார்வையே நன்னால்லே” என்றாள். 

“அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?” அதிகாரி ப்ரீத்தியைப் பார்த்துக் கொண்டே அனுமதிக்க, நீண்ட கரிய பாம்பு போல் இருந்த தார்சாலையில் பஸ் நகர்ந்தது. 

ப்ரீத்தி உற்சாகமாகவே இருந்தாள். சாலையின் மருங்கில் “ஒட்டகம்” என்றாள். 

“பாத்திருக்கேன்” என்றான் விக்ரம் விழிக்காமல். 

“இதைப் பாரேன்” என்று அவனை நிரடினாள். 

“லுக்! முன்ன பின்ன நீ ஒட்டகம் பார்த்ததில்லை?” 

“இல்லை” 

“நான் பார்த்திருக்கேன் அதும்பால் கூட சாப்ட்டிருக்கேன், திக்கா கொஞ்சம் மயிரா இருக்கும்.” 

”உவ்வே! இதைச் சொல்லியே ஆகணுமா?” 

“பின்னே ரோடில் போற ஒட்டகத்துக்கெல்லாம் என்னை எழுப்பாம இரு.”

“சோம்பேறித் தூங்குமுஞ்சி” 

“ஊருக்குள்ள போனப்புறம் தீரச் செயல்கள் நிறையவே இருக்கு. ரிலாக்ஸ்” என்று முகத்தைத் தன் தொப்பியால் முடிக்கொண்டான். ஒரு கிலோ மீட்டர் முண்டாசு சுற்றியரோடோரத் தாத்தா புல்லாங்குழலை ஊதிக்காட்டி பொக்கைப் பற்களால் சிரித்ததை, “ஹௌ ஸ்வீட்”என்றாள். 

“சொல்லாதே” துபாஷ் “நல்வரவு சலாமியா தேசத்தில் பசி இல்லை. மசிஇல்லை. பட்னி இல்லை. சட்னி இல்லை ஏழை இல்லை. கோழை இல்லை. எல்லாரும் எந்திரிச்சா ஊர் வந்திருச்சு. இதுக்கு மேல் பஸ் போவாது…” 

பஸ் நின்றது. எதிரே ஒரு ஊர்வலம் கடந்தது. 

வினோத சப்தங்கள். உருமும் மத்தளங்கள். இவைகள் மத்தியில் அலங்காரப் பல்லக்கு மெல்ல மெல்ல ஒரு ஆணவயானை போல அமைந்துவர. விக்ரம் சற்றே ஆர்வம் பிறந்தவனாக, “துபாஷ் இது யாரு?” என்றான். 

“ராஜாவோட தங்கைங்க. பெரியவரு அனிருத்த சிங் இல்லை? அவருக்கு ரெண்டு சம்சாரங்க ஜெயராணி விஜயராணின்னு, தாக்கத் சிங் முத்துக்கும் இந்தம்மா இளையதுக்கும் பொறந்தது.” 

“ப்ரிமிட்டிவ்,” என்றாள் ப்ரீத்தி.

ஜிங்ஜா ஜிங்ஜா என தோசைக்கல் ஜால்ரா காதைத் துளைக்க அந்தப் பல்லக்கு அருகே வர, ராஜகுமாரி கொஞ்சுண்டு தெரிந்தவள். அவள் உடலின் மற்றப்பகுதிகள் யாவும் சல்லாத் துணியால் கோடி காட்டப்பட்டுக் கண்கள் மட்டும் நீலக் கோவிக்குண்டுகள் போலத் தெரிந்தன. ஒரு கணம் அக்கண்கள் விக்ரமின் மேல் பட்டுத் தெரித்தன. 

“இண்டரஸ்டிங்” என்றான் விக்ரம்.

“பேர் என்ன துபாஷ்?” 

“கோமல் ரத்னாபாய். பேரே அம்சமா இல்லை?” 

“அந்தப் ‘பாயை’ மட்டும் விட்டுட்டா நல்லா இருக்கும். இப்ப இந்தம்மா எங்க போறாப்ல?”

“என்னது. வந்து சேர்றதுக்கு முன்னாடியே இவ்வளவு இண்ட்ரஸ்ட்டு?” என்றாள் ப்ரீத்தி, 

“கோவிலுக்குப் போறாங்க அதோ பாருங்க சவ்வா மந்திர்னு எலிக்கோயில்” 

“என்னது? எவியா?” 

“ஆமாங்க. இந்தத் தேசத்தில் எலியைத் தொழுவாங்க பூனையைத் திம்பாங்க.” 

தூரத்தில் பிரம்மாணடமாகத் தெரிந்த அந்தக் கோயில் கோபுரத்தை வியந்து விக்ரம் “எலிக்கு இவ்வளவு பெரிய கோவிலா?”

“இந்த ஊர்ல எல்லாமே பெரிசுங்க. ராஜாலிருந்து துவங்கி” 

“எங்கயோ பைத்தியக்கார ஊர்ல வந்து மாட்டிக்கிட்டம் விக்ரம்” 

விக்ரம் கவனிக்காமல் ராஜகுமாரியின் பல்லக்கு கடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருக்க, அப்போது ஒரு குழப்பம் ஏற்பட்டது. பஸ்ஸிலிருந்து இறங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாம்பாட்டி திடீர் என்று இஸ் இஸ் என்று சப்தம் பண்ண ஆரம்பித்து விட்டான். 

“என்னய்யா?” 

“பாம்பைக் காணங்க”. 

“என்னது?” 

அதன்பின் தெளிவாக ஏதும் நடக்கவில்லை. பாம்பாட்டி கீழே குனிந்து உட்கார்ந்தே இஸ் இஸ் என்று தேட பாம்பு கூட்டத்தில் நுழைந்திருக்க வேண்டும். அங்கங்கே மக்கள் சிதற, பல்லக்குக்காரர்களுக்கு அவ்வளவு ராஜ பக்தி இல்லை போலும். அப்படியே தம் அழகான சுமையைக் கீழே வைத்துவிட்டு நான்கு பேரும் ஐந்து திசைகளில் ஓடினார்கள், “ட்ரபிள்” என்று விக்ரம் பல்லக்கின் திசை நோக்கிச் செல்ல, அந்த ராஜகுமாரி கண்களில் பயரேகை தெரிய, தபக்கென்று குதித்து ஓட, சேடிகள் அறை, இங்குமங்கும் விக்ரம் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு ராஜகுமாரியை நாட, அவள் கூட்டக் குழப்பத்திலிருந்து விடுபட இயலாதவாறு மாட்டிக் கொண்டு கீழே விழுந்து விட்டாள். 

எந்தப் பாம்பிலிருந்து பயந்து ஓடினாளோ அந்தப் பாம்பின் மேலேயே விழுந்து விட்டாள். 

பாம்பு ராஜகுமாரியின் முழுங்காலுக்குச் சுமார் பத்து செண்ட்டிமீட்டர் மேலே கடித்துவிட்டது. 

“செல்லம். எங்க போயிட்ட நீ? இன்னும் பல்லுகூடப் பிடுங்கலையே உனக்கு” என்று அதைத் தேடிக் கொண்டிருந்தான் பாம்பாட்டி!

– தொடரும்…

– 80களில் குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்தது.

– விக்ரம் (நாவல்), முதற் பதிப்பு: மே 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *