கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: July 7, 2025
பார்வையிட்டோர்: 15,499 
 
 

(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம் – 4

ஒரு பக்கம் மனைவியை கவனிப்பதா அல்லது அவளை அநியாயமாகக் சுட்டுவிட்டு ஓடுகிறவர்களைத் துரத்துவதா? விக்ரம் பாதி தூரம் துரத்தி ஓடி அவர்கள் மோட்டார் சைக்கிளில் பாய்ந்து மறைவதைப் பார்த்தான். திரும்ப மனைவிக்கு ஓடி வந்தபோது அவள் மெத்தென்று தக்காளி மெத்தையில் செத்துப் போயிருந்தாள். விக்ரம் அவள் மூடியிருந்த கையைப் பிரிக்க அதில் சிறிய காகிதச் சீட்டில் பெயர்கள். 

“அனுபமா…நிருபமா…ஜியோத்ஸ்னா…” 


ஜிவி ராவ் நிமிர்ந்து பார்த்தார். அவர் அலுவலகக் கதவை அத்தனை வேகமாகத் திறந்து உள்ளே வரக்கூடிய தைரியம் ஒருவனுக்குத்தான் உண்டு! 

“விக்ரம்! ஹௌ குட்டு ஸீயூ…” ராவ் உடனே முகம் மாறி, “ஐ ஹேர்ட் தி ஷாக்கிங் நியூஸ். உன் மனைவி இறந்து போனதுக்காக என் மனமார்ந்த…” 

“கட் இட் ஸார்! நான் உங்க அனுதாபத்துக்காக இங்க வரலை. யார் அந்த தேவடியா மகன்?” விக்ரமின் முகம் களைத்து மூன்று தினங்களில் மூன்று வருஷம் வயசாகிவிட்டவன் போலத் தோன்றினாலும் அவன் கண்களில் பழைய கோபமும் பிரகாசமும் இருப்பதை ராவ் கவனித்தார். 

“இன்னும் யாரு எதுன்னே சரியாத் தெரியலை விக்ரம். ஸ்ரீஹரிகோட்டாவுக்கு டெஸ்ட்டுக்குப் போயிட்டிருக்கிறது ராக்கெட், அதை பர்ஃபெக்ட் ஆம்புஷ்-திறமையான கடத்தல்!” 

அப்போது தங்கராஜ் ஒரு ட்ரேயில் டீ கோப்பைகளுடன் உள்ளே வந்தான். ஜிவி ராவ் இந்த நேரம் பால் சர்க்கரை இன்றித் தேனீர் அருந்துவார்.

“இவருக்கு டீ கொடுப்பா…தங்கராஜ். இவர் யாரு தெரியுமில்லே? விக்ரம்.” 

தங்கராஜ் அரை செகண்டு திடுக்கிட்டுச் சமாளித்துக் கொண்டான். விக்ரம்? என்ன ஆச்சு? சுகிர்தராஜாவின் ஆட்கள் அவனைக் கொல்ல வில்லையா? 

“அந்த ராக்கெட் டெஸ்ட்டுக்குப் போற செய்தி நம்ம ஆபீஸ் தவிர யார் யாருக்குத் தெரியும்?” என்று கேட்டான் விக்ரம். 

“ஸ்பேஸ் டிபார்ட்மெண்ட் எம்.ஐ.” 

“என்னைத் திருப்பிக் கூப்பிடப்போற செய்தி?” 

“இந்த ஆபீஸ்ல மட்டும்தான் தெரியும்.” 

“நான் இருக்கிற இடத்தை உங்களுக்கு முன்னே தெரிஞ்சுட்டு எனக்காக வந்து அவளை வீழ்த்திட்டாங்க! பாஸ்டர்ட்ஸ்!” 

“ஸாரிடா,” என்று அவன் கையை அழுத்தினார் ராவ். 

“அப்ப வீக்கு இங்கதான்! இந்த ஆபீஸ் சிப்பந்திகள் எல்லோரையும் விசாரிக்கணும்.” 

தங்கராஜின் தேனீர் ஊற்றும் கைகள் சற்றே நடுங்குவதை விக்ரம் கவனித்தான். அவன் போனதும், “இந்தாள் பேரென்ன?” 

“தங்கராஜ், சைஃபர் கிளார்க். ரொம்ப நம்பகமான ஆள்!” 

“இவன் வீட்டு விலாசம் இருக்குமா?” 

“தரச் சொல்றேன். ஆனா இவனைப் போய்ச் சந்தேகிக்கிறது..” 

“மிஸ்டர் ராவ்! எனக்கு எல்லார் பேரிலேயும் சந்தேகம். உங்களையும் சேர்த்து.”

ராவ் ஒரு முறை நிமிர்ந்து பார்த்த பார்வையில் ‘உன்னைத் திருப்பிக் கூப்பிட்டது தப்போ?’ என்கிற சந்தேகம் தெரிந்தது. 


அருண்குமார் விக்ரம்! நிதானமாக மயிலாப்பூரின் ஓட்டு வீடுகள் நிறைந்த அந்தச் சந்தில் நடந்தான் அவன். கண்கள் பல்லவன் பஸ்களையும், பிளாஸ்டிக் விற்பனையாளர்களையும். மாடவீதியையும், கேசவப் பெருமாள் கோவிலையும் வருடினாலும் மனத்தில் மீராவின் குரல் ஒலித்தது. களைத்து இருந்தான். உள்ளக் களைப்பு. ஒரு வாரம் அதீத சந்தோஷத்தில் மிதந்து விட்டு உடனே துக்கத்தின் எல்லையில் தள்ளிய களைப்பு. 

“விக்ரம், என்னை விட்டுட்டுப் போயிடமாட்டியே?” 

“நெவர் மீரா!” 

தங்கராஜின் வீட்டு எண்ணைக் கண்டுபிடித்து மாடிப்படி ஏறிச்சென்றபோது அவன் மனைவி கோவிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். விக்ரமைப் பார்த்ததும் தலைப்பைப் போத்திக் கொண்டு. “யாரு?” என்றாள். 

“தங்கராஜ் இருக்காரா?” 

“வெளியிலே போயிருக்கார். வந்துருவார். உள்ளே வாங்களேன்.” 

“இல்லே. அப்புறம் வரேன்.” 

“உங்க பேர்?” 

“விக்ரம். அருண்குமார் விக்ரம்.” 

“வட நாடா?” 

“இல்லை. அவர் வந்தா நான் வந்ததா…” 

“சொல்றேன்.” என்றாள் மனைவி, 

விக்ரம் கீழே இறங்கி வந்து சற்றுத் தூரம் சென்று சந்து திரும்பி அவள் மறைந்ததும் மறுபடி தங்கராஜின் வீட்டுக்குச் சென்றான். மாடி வீடு. கதவு பூட்டியிருந்தது. விக்ரம் தன் கை கடிகாரத்தை எடுத்தான். அதிலிருக்கும் சிறிய ஆண்டெனாவை அந்தப் பூட்டின் துவாரத்துக்குள் நுழைத்து பீப் பீப்பென்று அதன் ஓசைகளைக் கேட்டான். ஒரு தேர்ந்த ஸர்ஜனைப் போல அந்தப் பூட்டினுள் மெல்லிய ஓர் ஆயுதத்தை நுழைக்க, பூட்டு “கிட்டக்” என்று வாயைப் பிளந்தது. 

விக்ரம் நிதானமாக உள்ளே நுழைந்து சுற்றிலும் பார்த்தான். இ.பி.கோ. வின் ஷரத்துக்களைத் தான் மீறுவதைப் பற்றிச் சற்றும் கவலையின்றி அவசரமே இல்லாமல் அறையின் செல்வச் செழிப்பைப் பார்த்தான். கார்ப்பெட், டெலிவிஷன், சோபா, ப்ஃரிஜ். ஒரு பிச்சைக்காரன் அழுக்குக் கோட்டைத் திறந்ததும் வைரங்கள் ஜொலிப்பது போல முகப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பே இல்லாத வீடு. 

விக்ரம் ஃப்ரிஜ்ஜிலிருந்து ஆப்பிளை எடுத்துக் கடித்து வைத்துவிட்டுக் கண்ணாடியில் ஒரு வினாடி ஒப்பனை செய்து கொண்டு சூயிங்கம் மென்று கொண்டே அறையைக் கண்களால் அங்குலம் அங்குலமாக வருடினான். 

“அந்த வெங்கடாசலபதி படம் சற்று சாய்ந்தாற்போல் இருக்கிறதோ?” 

அதை நேராக்குகையில் தங்கராஜ் சைக்கிளில் தெருக்கோடியில் வந்து கொண்டிருந்தான். 

படத்தின் பின் ஒரு விளிம்பு தெரிய அது ஒரு இரும்புப் பெட்டியின் பதித்த கதவு என்பது தெரிந்தது. அதை முயன்று பார்த்தான். வலுவாக இருந்தது. 

தங்கராஜ் சைக்கிளை ஸ்டேண்டு போட்டான். 

விக்ரம் தன் கை கடிகாரத்தின் இயக்கத்தை அந்தச் சுவர்ப் பெட்டியின் துவாரத்தில் வைத்துச் சற்று ஒதுங்கிக் காத்திருக்க அதனுள் குட்டியாக ஒரு வெடி வெடித்தது. அதிக சேதமில்லாமல் இரும்புப் பெட்டி திறந்து கொண்டது. உள்ளே.. 

அரசாங்க டாப் ஸிக்ரெட் ரகசிய ஃபைல்களின் பிரதிகள். 

பவுண்டு டாலர் நோட்டுக்கள். 

ஓயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர் ரிஸீவர். 

விக்ரம் குயிங்கம் மென்று கொண்டே அந்த ரிஸீவரை நிரட, அதிலிருந்து கொர் கொர் சப்தங்களால் தங்கராஜ் வந்ததையும் அவன் இடுப்பிலிருந்து ஒரு துப்பாக்கி எடுத்துச் சட்டென விக்ரமின் நெற்றிப் பொட்டில் வைத்ததையும் கவனிக்கவில்லை. 

“இவ்வளவு தூரத்துக்கு வந்துட்டியா? நினைச்சேன்! மூவ்! மூவ்! தூக்கு கையை!” 

விக்ரம் சூயிங்கம் மென்று கொண்டிருப்பதை நிறுத்தாமல் தங்கராஜனை நேருக்கு நேர் கண்ணுக்குக் கண் பார்த்தான். 

“பித்தூய்!” என்று சற்றும் எதிர்பாராமல் சூயிங்கம்மைத் துப்ப, அது சரியாக தங்கராஜின் கண்ணில் போய் அடித்தது. நல்ல அடி! இயற்கையாகத் தங்கராஜ் கையால் கண்ணைத் தேட, அதற்குள் விக்ரம் தன் முழங்காலால் தங்கராஜின் மர்மத்தில் வெடிக்க அவன் சகலமும் துறந்து கீழே துப்பட்டி போல விழ. அவனைக் கொத்தாகப் பிடித்து “ஆபீசுக்கு வராயா தங்கராஜ்! பேசணும்”.


அந்த அறை துல்லியமாக எமல்ஷன் வௌளை அடிக்கப் பட்டிருந்தது. நடுவே ஒரே ஒரு நாற்காலியும் தாழ்ந்த விளக்கும் இருந்தன. அருகே ஒரு எக்ஸர்ஸைஸர் போல ஒரு ஃப்ரேம் இருக்க அதில தங்கராஜ் தலைகீழாகக் கட்டப்பட்டிருக்க ஒரு ப்ரா ஸ்தாபனத்து ஆபீசர் தங்கராஜை விசாரித்துக் கொண்டிருக்கையில், விக்ரம் டீக்காக ஸூட் அணிந்து கொண்டு உள்ளே நுழைந்தான். 

அதிகாரி வியர்த்திருந்தார். ”ம்ஹூம். கல்லுளிமங்கன். சொல்லமாட்டான்! ஏரோப்ளேன் போட்டுடவா?” 

விக்ரம், “சேச்சே! அதெல்லாம் வேண்டாம். என்ன தங்கராஜ்!” என்று அவனைக் குனிந்து பார்த்தான். 

அவன் முகம் வீங்கி இங்கும் அங்கும் நீலமாகவும் உதடுகள் ரத்தமாகவும் கலர் கலராக இருந்தது. விக்ரம், “நீங்க போங்க சார்.” என்று தங்கராஜை நேர்ப்படுத்தினான். 

“ச்ச்ச்ச்! எதுக்கு இதெல்லாம்! உட்கார் தங்கராஜ்,” என்று நாற்காலியில் உட்கார வைத்து அவன் மேல் வெளிச்சம் காட்டி விரலால் வீக்கத்தைத் தொட வந்து, “வலிக்கும் இல்லை?” என்றான், “எதுக்கு இம்சை? பாரு இது என்ன? டைனமைட்டு.” மூன்று வெடிகுண்டுகளைக் காண்பித்தான். “இப்போ இதை கழுத்துக்குக் கீழே பொருத்திட்டு, கையைக் காலைக்கட்டிட்டு திரியைப் பத்த வச்சிட்டுப் போயிடறேன். என்ன ஆகும்? முகம் மூளையெல்லாம் குதறிப்போய்ச் சுவத்திலே அடிக்கும். இப்பதான் வெள்ளை அடிச்சிருக்கு. எதுக்கு டிபார்ட்மெண்டுக்கு அனாவசியச் செலவு? சொல்றியா தங்கராஜ்! யார் அது? யாருக்காக எல்லா ரகசியங்களையும் வித்திருக்கே?” 

தங்கராஜ் பேசாமலிருக்க, “நல்லதனமா சொன்னா ஆகாது உனக்கு! என்று அவனை நாற்காலியில் உட்கார வைத்து, கை கால்களைப் பட்டை போட்டு இறுக்கக் கட்டி. டைனமைட்டைக் கச்சிதமாக கழுத்தருகில் பொருத்தி அதன் நீண்ட திரியைப் பற்றவைத்துப் புறப்படும் போது, தங்கராஜ் “வெயிட்” என்று அலறினான். 

“அதிகம் வெயிட் பண்ண முடியாது. வெடிச்சுதுன்னா சூட் பாழாயிடும்.” 

“சொல்றேன். சொல்லிடறேன். அய்யோ, சொல்லிடறேன்! எடுத்துடு இதை!” 

அப்போது அந்த அறையில் இருந்த இண்டர்காமில் ஜி.வி.ராவின் குரல் ஒலித்தது. “விக்ரம்” 

“யெஸ் மிஸ்டர் ராவ்.” 

“எனி ப்ராக்ரஸ்?” 

“ஹி வில் ஸ்பீக் நௌ.” 

“உடனே அவனை மேலே கொண்டு வந்துடு, எல்லோரும் இங்கதான் இருக்காங்க.” 

“இல்லை சார். இங்கேயே முடிச்சிடலாம்னுட்டு…” 

“மேலே கொண்டு வாய்யா.” 

“ஆல்ரைட்” என்று அலுப்புடன், “தங்கராஜ் வா! சபை முன்னாலே. எல்லா ஆபிசர்கள் முன்னாலே. எல்லாத்தையும் சுக்கு! வா.” 

தங்கராஜ் சரி என்று தலையாட்ட இருவரும் லிஃப்ட் ஏறி எட்டாவது மாடியிலிருந்து கான்ஃபரன்ஸ் அறைக்குள் சென்றனர். அதில் ராணுவ, கடற்படை. விமானப்படை, போலீஸ் அதிகாரிகளும் வீற்றிருக்க. தங்கராஜை விக்ரம் அழைத்து வர… 

ராவ், “படுபாவி. பாதகா! உன்னை நம்பி…” 

”ஸார், அதெல்லாம் அப்புறம். தங்கராஜ். சொல்லு யார் உன் எஜமானன்? அவன் பேர் என்ன?” 

தங்கராஜ். “சுகிர்தராஜா,” என்றான். 

“சுகிர்தராஜா? ஹூ த ஹெல்?” 

“சுகிர்தராஜா! ஐ திங்க் வி ஹாவ் எ டாஸியர் ஆன் ஹிம். சொல்லு தங்கராஜ்! எங்கே இருக்கான் இப்போ அவன்?” 

தங்கராஜ் அறையில் தொங்கிய மேப்பைப் பார்த்தான். “மேப்பிலே காட்டறேன்!” 

ராவ் விக்ரமுக்குச் சைகைகாட்ட விக்ரம் தங்கராஜை விடுவிக்க. தங்கராஜ் கை விலங்குடன் தேசப்படத்தின் அருகில் சென்றான். 

திடீர் என்று சற்றும் எதிர்பாராமல் தங்கராஜ் அருகே அந்தச் சன்னலின் கண்ணாடிக் கதவைப் பெயர்த்துக் கொண்டு ஏதோ நீச்சல் குளத்தில் ‘டைவ்’ அடிப்பவனைப் போல் பாய்ந்தான். எட்டாவது மாடி! 

விக்ரம் செயல்பட்டு ஓடிப்போய்ப் பிடிப்பதற்குள் கீழே நடுச்சாலையில் கிறீச் கிறீச்சென்று கன்னாபின்னாவென்று பிரேக் அபசுரங்கள் கேட்க- 

தங்கராஜ் எக்ஸ் வடிவத்தில் ரத்தக் குளத்தில் கிடந்தான். 

விக்ரம் தலையை அசைத்து, “இதுக்குத்தான் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் எட்டாவது மாடியிலே வச்சுக்க வேண்டாம்னேன்! இவன்கிட்டேயிருந்து கிடைச்சது ஒரு வார்த்தை ஜஸ்ட் ஒன் வேர்ட்! சுகிர்தராஜா! ஓகே லெட்ஸ் ட்ரை,” என்றான் அலுப்புடன்.

“பி. எம். கிட்டேயிருந்து!” 

“தெரியும் ஸார். அவன்கிட்டேயிருந்து வேற தகவல் வரலையே? வேற எதுவும் கெடு?” 

”இல்லை. இன்னம் இல்லை”. 

“அதுக்குள்ளே சுகிர்தராஜா பற்றி நம்ம ஆபீஸ்ல இருக்கிற எல்லாத் தகவல்களையும் சேர்க்கலாம்-அடியைப் புடிரா பாரதபட்டான்னு!” 

“உன் பெண்டாட்டியைக் கொன்னதுக்கு இவன் தாண்டா காரணம்!”

“நரகத்துக்குப் போனவன் முழு விவரமும் சொல்லிட்டுப் போயிருக்கலாமில்லையா? இதிலே ஒரு விசுவாசம் பாருங்க!” 


அந்த இருட்டறையில் ஜிவி ராவின் பைப்பின் புகைப்படலம் படர்ந்திருக்க அருகே விக்ரம் உட்கார்ந்திருக்க எதிரே ஒரு திரையில் “கிளிச்சக்….” என்று பிலிம்கள் மாறிக் கொண்டிருந்தன. 

சுகிர்தராஜா பள்ளிப்பருவப் போட்டோ. 

சுகிர்தராஜா இளம் வயதில். 

சுகிர்தராஜா வெளிநாட்டுக்குச் சென்று கொரில்லா முறைகளில் பயிற்சி பெற்றது. 

சுகிர்தராஜா ராணுவ உடையில். 

கடத்தல் கையாளாக. 

கடத்தல்காரனாக. 

கடத்தல் ராஜனாக. 

ஆயுதக் கடத்தல்… பாங்காக்கில் துவங்கும் தங்க முக்கோணத்தில் பங்கு…

இப்படி சுகிர்தராஜாவைப் பற்றி அலுவலகத்தில் கிடைத்த அத்தனை செய்திகளையும் விக்ரம் விமர்சித்துக் கொண்டிருக்க, அதே சமயம் மற்றொரு தேசத்தில் மற்றொரு இருட்டறையில் மற்றொரு புகை மண்டலத்தில் மற்றொரு திரையில்…. 

விக்ரம் பள்ளிப்பருவப் போட்டோ.

விக்ரம். இளம் வயதில். 

விக்ரம் கொரில்லா முறைகளில் பயிற்சி.

விக்ரம் இந்தியக் கடற்படையில் சேர்ந்தது. 

அவன் மார்பில் பொருத்தப்பட்ட மெடல்கள். 

இந்த மற்றொரு படத்தொகுப்பை சுகிர்தராஜா கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் விக்ரமைக் குறி தப்பின அவ்விரு அடியாட்களும் வந்தார்கள். 

அத்தியாயம் – 5

சுகிர்தராஜா ஒரு வினோதமான பிரஜை. அவன் தோற்றத்தில் ஒரு தீட்டப்பட்ட கத்தியின் கூர்மையும் பளபளப்பும் லாகவமும் அதேசமயம் இரக்கமற்ற தன்மையும் இருக்கும். ஆனால் வாழ்வின் நளினங்களை அப்படியே மறந்தவன் என்று சொல்ல முடியாது. அவன் வீற்றிருக்கும் அறையில் (எந்த இடம் எந்தத் தேசம் என்று இன்னும் சொல்ல இயலவில்லை.) லேசாகப் பின்னணியில் கர்னாடக சங்கீதம் கேட்கிறது. (எம்.டி. ராமநாதன்) மேலே திறந்திருக்கும் முட்டை வடிவ ‘ஸ்கை லைட்டி’லிருந்து சூரியன் கட்டுப்பாட்டுடன் கசிய. நட்ட நடுவே ஒரு தண்ணீர்த் தொட்டியில் தரைமட்டமான நீர்ப் பரப்பு. அவ்வப்போது சலசலக்கின்ற முதலைகள். 

விக்ரமைக் குறி தப்பி வந்தவனை மெல்லப் பார்த்து “வாய்யா சோமு, என்ன காரியம் முடிஞ்சுதா?” 

“அய்யா. உங்களுக்குத் தெரியாததா? குறி தவறிருச்சய்யா, சம்சாரத்தின் பேர்ல பட்டுருச்சு” 

“சிப்பாய்! பொம்பளையைச் சுட்டியா?” 

சோமு என்பவன் அசந்தர்ப்பமாகச் சிரித்தான், 

சுகி தீவிரமாக, “சிரிக்கக் கூடாது, தெரியுமில்லை? சிரிக்கக் கூடாது”. சோமு சரிபாதி சிரிப்பில் உறைய, “ஒரு காரியம் சொன்னா சுத்தமாச் செய்துட்டு வரணும். நீ குறி தவறிட்ட இல்ல? அதனால என்ன ஆச்சு? விக்ரம் தப்பிச்சுக்கிட்டான். சும்மா இருப்பானா? ஆபீசுக்குப் போயி, யார்றா சேதி கொடுத்தான்னு விசாரிச்சுப் பார்த்திருக்காங்க, நம்பாளு தங்கராஜைப் பிடிச்சு அவன் கொட்டையைப் பிசைஞ்சிருக்கானுக அவள் என்ன செஞ்சான்? விசுவாசிப் பய சன்னலைத் தாண்டிக் குதிச்சிட்டான். மாடிலருந்து. எல்லாம் எதனால? சோமன் குறி தப்பினதால!” 

சோமு. “மன்னிச்சுக்கய்யா.” என்றான்.

சுகிர்தராஜா அகராதியில் ஒரு வார்த்தை மட்டும் கிடையாது, மன்னிப்பு 

“நீ குறி தவறினாப்பல நானும் தவறட்டுமா? என்ன துப்பாக்கி அது கொண்டா பார்க்கலாம்? வால்த்தர் பி தர்ட்டி எய்ட் டபிள் ஆக்ஷன் குறி தவறவே தவறாதே! பாத்துரலாமா?” சுகிர் அவன் மேல் குறி பார்த்தான். 

“அய்யா, வேண்டாம்யா!” 

“ஒருநாள் நானும் குறி தவறறேனே!” என்று சுகி சுட, சோமுவின் கையில் ரத்தம் பெருக உதறிக் கொண்டான். 

“அய்யா, இந்த முறை மன்னிச்சுருங்கய்யா. அந்த விக்ரமை ஒழிச்சுக்கட்டிட்டுத்தான் மறு காரியம்”. 

சுகி இப்போது நேராக அவன் மேல் குறி பார்த்து மெல்ல அதன் ட்ரிக்கர் மேல் விரல் பதிய- 

“ஒரு வாரம் ரெண்டு நாள். அதுக்குள்ள ரெண்டு காரியம் முடி. மெட்ராஸ் போ. தங்கராஜ் வீட்டில என்ன மாதிரி காவல் இருந்தாலும் உள்ள போய் இருக்கிற டாக்குமெண்ட்ஸ்களை சப்ஜாடா எரிச்சரணும். அப்றம் விக்ரமை என்ன செய்வே?” 

“அய்யா செய்துர்றேன்யா.” 

“இந்த முறை வாக்குத் தவறினா குறி தவறாது. அப்றம் உனக்கு ஒரு பொண்ணுருக்கில்லையா?” 

“அய்யா, பத்தாவது வாசிக்குதுய்யா…” 

“நல்லா படிக்குதா?” என்று அன்பாக விசாரித்து விட்டு, “போ. போய்ட்டு வா, உம் பொண்ணுக்கு ஏதாவது நாசுக்கா விபத்து ஏற்பட்டுரப் போவுது! போப்பா,” என்றான் செல்லமாக. 

சோமன் ஓடினான். 


விக்ரம் தொலைந்து போன ராக்கெட்டைப் பற்றிய விஞ்ஞானக் குறிப்புகளை நிதானமாய் படித்துக் கொண்டிருந்தான். எதிரே ஜிவி ராவ் பைப் பற்ற வைத்துக் கொண்டு. வழக்கம் போல் தேநீர் கலந்துகொண்டு. “நான் படிச்சுப் பார்த்தேன், தலைகால் புரியலை, ரொம்ப டெக்னிக்கல், பைனரி கெமிக்கல் அது இதுன்னு…” 

“இந்த மிஸைலுக்கு ஃபயர் அண்ட் ஃபர்கெட்டுன்னு பேரு.” என்று நிமிர்ந்து பார்த்தான். 

“அது என்ன பர்கெட்டோ! ஓசைப்படாம இதை மீட்டாகணும். இந்தாளு சுகிர்தராஜா எங்கே இருக்கானோ?” 

“ஸார் அவன் இண்டியாவில இல்லை இப்ப”. 

“எப்படிச் சொல்றே?” 

“ஒரு மாதிரி பட்சி சொல்றது.” விக்ரம் அந்த மான்யுவலை மறுபடி புரட்டிக் கொண்டு. “ஸார் இந்த ராக்கெட்டுக்குள்ள குட்டியா ஒரு கம்ப்யூட்டர் இருக்குது.” 

“சொன்னனே ரொம்ப ஸாஃபிஸ்டிகேடட்.” 

“ந்யூக்ளியர்? ம்? வெளிய தெரிஞ்சா நம் கிரெடிபிலிட்டி போயிரும். ஆனா சிக்கல்தான்.” விக்ரம் படித்தான். “டிஃப்யூஸ் டி ஆக்டிவேட் ப்ரொக்ராம், ஸார், வாங்க போலாம்.” என்றான். 

“எங்க?” 

“இந்த ராக்கெட்டுக்குள்ள இருக்கற கம்ப்யூட்டரை செட்டப் பண்ணவங்களை முதல்ல சந்திக்கலாம்.” 

“சுகிர்தராஜா?” 

“அகப்படுவான். எங்க போறான்” 

“மேலிடத்தில் ஒரு வாரம்தாண்டா டயம் கொடுத்திருக்காங்க”. 

“ஒரு வாரத்தில் உலகத்தையே அழிக்கலாம். கவலைப்படாதிங்க” 

“அதானே இப்ப கவலை?” என்றார் ராவ் 

“இந்தக் கேஸ்ல கவலையே படாதீங்க, உத்தரவாதமா கண்டுபிடிச்சே ஆகணும். அந்த பாஸ்டர்டை. ஐ ஹவ் எ ப்ரைவேட் ஸ்கோர் டு செட்டில்.” விக்ரமின் மனத்தில் அந்தக் காட்சி ஒரு கணம் விசிறியடித்தது. குபுக் என்று நெற்றி ரத்தம்…மீரா! 

கண்ணாடி அறைகளுக்குப் பின் கம்ப்யூட்டர் டெரிமினல்கள் தெரிந்தன. ஜிவிராவும் விக்ரமும் ஸூப்பிரண்டிடம் பேசிக்கொண்டிருந்தார்கள் 

”பாருங்க, அதெல்லாம் டிஃபென்ஸ் ப்ராஜெக்ட்கள், ப்ராஜெக்ட் ஹுஷ் ஹஷ்”.

“ஸார். எல்லாம் எனக்குத் தெரியும்,” என்றான் விக்ரம் “இவர் யார் தெரியுமில்லே?” என்று ராவைக்காட்டினான். “இவர்தான் ஹஷ் ஹஷ்! இவருக்குத் தெரியாத ரகசியம் கிடையாது. ப்ரான்னு கேள்விப் பட்டிருக்கிங்களா?” 

ராவ், “ஜஸ்ட் ஷோ மி தி மென் ஹூ டிட் தி ப்ரொக்ராமிங்” 

“அந்தக் கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஊர்ல இல்லை வெளிநாடு போயிருக்கிறார்.” 

“அவர் அஸிஸ்டெண்ட் யாராவது…” 

“அதோ” 

அவர் காட்டிய திசையில் ஒரு பெண் கம்ப்யூட்டர் டெர்மினல் அருகில் உட்கார்ந்து கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க, “பொண்ணா?” என்றான் விக்ரம் “நாசமாப் போச்சு!” 

“பேரு ப்ரீத்தி, பிரிலியண்ட் கர்ள். அவளுக்குத்தான் கம்ப்யூட்டர் விவரங்கள் எல்லாம் தெரியும்.” 

விக்ரம் சற்று அலுப்புடன், “ஓக்கே ஓக்கே,” என்று கம்ப்யூட்டர் அறையில் நுழைய, இருவரும் அவளை அணுகினார்கள். 

அந்தப் பெண்ணுக்கு இருபத்தொன்று இருபத்திரண்டு வயசுக்கு மேலிருக்காது. அந்தக் கம்ப்யூட்டர் டெர்மினலுக்கும் அவளுக்கும் ஒரு சிநகிதம் இருப்பதுபோல, திரையில் தெரிந்ததுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஆர்வமும் முகத்தில் ஒரு ஆரோக்கியமும் தெரிய, அதிகம் பகட்டில்லாமல் சௌகரியத்துக்காக உடையணிந்திருந்தாள். “கமான் கமான்,” என்றாள் திரையில் விரியும் பச்சை எண்களையும் எழுத்துகளையும் நோக்கி. 

“மிஷின்கூடப் பேசக்கூடாது,” என்றான் விக்ரம். நிமிர்ந்து அந்தப் பெண் அவனைக் கண்களில் சந்தித்து, பார்த்தது, “யார் நீங்க? உள்ளே வரக்கூடாது, போய் சூபரண்டைப் பாருங்க.” 

விக்ரம் தன் ஐடி கார்டைக் காட்டி. “உங்கூடப் பேசணும் வரியா?”

“ஐம் பிஸி கம் லேட்டர்.” 

“நோபடி இஸ் தட் பிஸி. கம்.” 

“ஸூப்பிரண்டுகிட்ட பர்மிஷன் வேணும்.” 

“அவர் தாத்தாகிட்ட கூடப் பர்மிஷன் இருக்கு. கம்.” 

“இருங்க. இந்த ப்ரொக்ராம் லிஸ்டிங்..” 

விக்ரம் பொறுமையிழந்து, “வாட்ஸ் யுர் நேம்?” 

“ப்ரீத்தி.” 

“ப்ரீத்தி, இன்னும் நாற்பது செகண்டில நீ எங்கூட வரலை. உன்னை விலங்கு போட்டுக் கூட்டிக்கிட்டுப் போகப்போறேன்.’ 

“சும்மா பயங்காட்டாதய்யா.” 

“தர்ட்டி எய்ட். தர்ட்டி செவன். தர்ட்டி சிக்ஸ், தர்ட்டி ஃபோர், ட்வெண்டி சிக்ஸ். நான் கணக்கில வீக்.”

ப்ரீத்தி விக்ரமின் கோட்டின் திறந்த பகுதியில் உள்ளே விலாவில் ஹோல்ஸ்டர் வைத்துச் செருகியிருந்த துப்பாக்கியைப் பார்த்தாள். விக்ரம் புன்னகையுடன் சிரித்துக் கொண்டு. “எய்ட், செவன்,” என்றான். 

“ஆல்ரைட் ஐல் கம்” என்றாள் ப்ரீத்தி. 


“வேர் இஸ்தி ராக்கெட் ஃபர்ஸ்ட்?” என்றாள் ப்ரீத்தி 

சூப்பிரண்டின் அறையில் மேசையில் அவர்கள் மூவரும் வீற்றிருக்க. விக்ரம், “தொலைஞ்சு போச்சு.” என்றான். 

“ஓ மை காட்!” 

“வாட்ஸ் திஸ் டிஃப்யூஸ் ப்ரொக்ராம் ப்ரீத்தி?” 

“இந்தாளுக்குக் கம்ப்யூட்டரைப் பற்றித் தெரியுமா ஸார்?” 

விக்ரம், “ஆன்ஸர் மி.” 

ப்ரீத்தி சற்றுக் கர்வத்துடன், “ஓக்கே. ராக்கெட்டுக்குள்ள ஒரு மைக்ரோ கம்ப்யூட்டர் எய்ட்டி ஸிக்ஸ் இருக்கு அதில் ஒரு ஸிக்ஸட்டீன் கே ப்ரொக்ராம் இருக்கு…” நிறுத்தி “புரியலை?” 

“ராக்கெட் வெடிக்காம இருக்க என்ன செய்யனும்?”

“அதில கோடு செட்டப் பண்ணனும். ஹெக்ஸா டெஸிமல் தெரியுமா?” 

“குண்டு வெடிக்காம இருக்கத் தமிழ்ல என்ன செய்யணும்?” 

குழந்தைக்குச் சொல்வதுபோல “ராக்கெட்டைக் கண்டு பிடிக்கணும்”

“கண்டு பிடிச்சு?” 

“அதன் ஜாக்கெட்டை கழட்டணும். கழட்டி அதுக்குள்ள இருக்கற ‘சிப்பை’ எடுத்துட்டு இந்த சிப்பை மாத்தணும்.” 

“எந்த சிப்?” 

ப்ரீத்தி, “எங்க அது?” என்று தன் மேசை, டிராயர், கப்போர்டு எல்லாம் தேட, சூப்ரண்டைப் பார்த்து, “சார், காணோம்! மை காட்!” ப்ரீத்தி விக்ரமைச் சற்று பயத்துடன் பார்க்க, 

“முக்கியமான சிப் ஒண்ணைக் காணம்!” 

”ப்ரீத்தி, எங்ககூட வரியா? ஒரு ரும்ல – தனி ரூம்ல – உங்கூடக் கொஞ்சம் பேசணும், ” என்றான் விக்ரம். 

அத்தியாயம் – 6

ப்ரீத்தி சில அத்தியாயங்களுக்கு முன்பு தங்கராஜுக்கு ‘மரியாதைகள்’ நடந்த அதே அறையில் அதே நாற்காலியில் உட்கார்ந்து நிதானமாக அழுது கொண்டிருந்தாள். அருகே ஜிவி ராவ், விக்ரம். 

“ப்ரீத்தி. இஃப் யூ நோ ஸம் திங், சொல்லிரு.” என்றார் ராவ். 

“ஸார்! இது அநியாயம். எனக்குக் கம்ப்யூட்டரைத் தவிர வேற எதும் தெரியாது.” 

“நீங்க போங்க ஸார். நான் பார்த்துக்கறேன். எல்லாம் வரவழைக்கிறேன்,” என்றான் விக்ரம்.

“ஏயப்பா. ஏதாவது எக்கச்சக்கமாக…” 

“கவலைப்படாதீங்க. நீங்க போங்க!”

இப்போது விக்ரமும் ப்ரீத்தியும் தனியாக இருக்க அவளைத் துளைத்து எடுக்கிறாப் போலப் பார்த்தான். அவள் கண்ணில் இருக்கும் பயம் நிஜமா பாசாங்கா என்று அவன் இன்னும் தீர்மானிக்கவில்லை. 

“எத்தனை ரூபா கொடுத்தான் தங்கராஜ். அதை மட்டும் சொல்லிரு ப்ரீத்தி.” 

“ஏன் ஸார் இப்படி ஒரு பொண்ணைப் போட்டு வெத்து வெரட்டு வெரட்டறிங்க!” 

“பின்ன எங்க அந்த ப்ரொக்ராம்? யாருக்கு வித்த? எப்படி?”

“அய்யோ. விக்கலை. தொலைஞ்சு போச்சு. தொலைஞ்சு போச்சு. தொலைஞ்சு போச்சு!” 

“எப்படித் தொலையும்? பாத்துரலாமா?” விக்ரம் மெல்ல நிதானமாக ஒரு கட்டு டைனமைட் குச்சிகளைத் தயாரித்துத் திரி அமைத்துக் கொண்டிருந்தான். “இதை என்ன பண்ணப் போறேன் தெரியுமா, ப்ரீத்தி? உன் கையைக் காலை கட்டிப்போட்டுட்டுக் கழுத்தடியில வெச்சிட்டு போயிருவேன். திரி பத்திக்கிட்டு வெடிக்க ஒரு ரெண்டு நிமிஷம் டயம் இருக்கும். அதுக்குள்ள உண்மையைச் சொல்லிட்டா அணைச்சுரலாம். இல்லே, மேலே பார்த்து, “மறுபடி வெள்ளையடிக்க வேண்டி வரும். மூளை கண்ணு இப்படி எல்லாம் சிதறிடும் பாரு…”

ப்ரீத்தி, விக்ரம் சற்றும் எதிர்பாராத விதமாக, “சரி ஸார் அப்படியே பண்ணிடுங்க! என்ன எழவு! உண்மையைச் சொன்னா ஒத்துக்க மாட்டிங்கன்னா என்ன பண்றது?” 

”மூளை வெடிச்சுரும்!” 

“வெடிக்கட்டும், வெடிக்கட்டும்! என்ன போச்சு.” 

விக்ரம் திரியைப் பற்றவைத்து விட்டு, “குட்பை நைஸ் நோயிங் யூ” என்று புறப்பட்டான். அவள் கையைக் காலைக் கட்டி. கழுத்தருகில் கெலிக்னைட்! ப்ரீத்தி மௌனமாக அழுதவாறு கண்ணை மூடிக்கொள்ள, விக்ரம் அறையை விட்டு வெளியே வந்தான். 

ராவ், “என்ன எதாவது தெரிஞ்சுதா?” என்றார். 

“இல்லை ஸார், அந்தப் பொண்ணு பொய் சொல்லலை! ஷி இஸ் க்ளீன்!” 

“எங்க அவ?” 

“பத்தவெச்சுட்டு வந்திருக்கேன், எதுக்கும் ஒரு சான்ஸ் பார்க்கலாம்னு!” 

“பாவி! போடா போடா! அணைச்சிட்டு வா” 

“வெத்து வேட்டு! ஹார்ம்லஸ்.” 

“கிராதகா” என்று அறைக்குள் நுழைய. திரி தீர்ந்து போய் ப்ரீத்தி லேசான மயக்கத்தில் இருந்தாள். அவளை ஆசுவாசப்படுத்தி அழைத்துவர விக்ரம் ஏதும் உணர்ச்சியில்லாமல் சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். ராவ் அவளை ஓர் இருக்கையில் உட்கார வைத்தார். “ப்ரீத்தி வி ஆர் ஸாரி! நீ வேணும்னட்டே தொலைக்கலை அந்த, அது என்னது, என்ன பண்றே. வந்து…” 

விக்ரம், “சுற்றி வளைக்காதிங்க ப்ரீத்தி. என் கூட வரணும் நீ!” என்றான். 

“எங்க?” 

“எங்கன்னு இன்னம் தீர்மானிக்கலை” 

“எதுக்கு?” 

“அந்த ராக்கெட்டுக்குள்ள இருக்கிற கம்ப்யூட்டரைப் பத்தித் தெரிஞ்ச ஆளு என் கூட வேணும்…” 

“ஸார், நான் இந்த காட்டானோட எங்கயும் போகத் தயாராயில்லை!”

விக்ரம் கோபத்துடன் “பாரு! சொன்னா வந்தாகணும்!” 

“நீ யாராயிருந்தாலும் என்னை ஃபோர்ஸ் பண்ண முடியாது. நீ ஒரு பெரிய இவனா இருந்தா நான் பெரிய… இவ தெரியுமா!” 

ராவ், “விக்ரம், அங்க போய் தனியா இரு! பாரும்மா ப்ரீத்தி, இது கொஞ்சம் அரசாங்கத்துக்கு முக்கியமான சமாசாரம், இவன் கூடப் போக வேண்டியது கட்டாய மாயிடறது,” என்றார். 

“உடம்புக்கும் நல்லது,” என்றான் விக்ரம் 

“இர்றா! வி நீட் யுர் கோ ஆப்பரேஷன் ப்ரீத்தி, ப்ளீஸ்” 

“அந்தாளை ஸாரி சொல்லச் சொல்லுங்க” என்றாள் ப்ரீத்தி சற்று யோசனைக்குப் பின். 

“வாட் ஃபார்” என்றான் குரலில் கேலியுடன். 

ராவ் “ஒய்! விக்ரம். சொல்லிட்டுப் போயேன்!” என்றார். 

விக்ரம் அவளருகில் வந்து அவள் மூக்கருகில் “ஸாரி” என்றான். 

ப்ரீத்தியும் விக்ரமும் ‘ப்ரா’ ஆபிஸ் மாருதி வேனில், “முதல்ல தங்கராஜுன்னு ஒரு ஆள் வீட்டுக்குப் போறோம். அங்க இந்த ராக்கெட் சம்பந்தமா சில காகிதங்கள்ளாம் இருக்கு. ஆபீஸ்லருந்து திருடினது. அவைகள்ளாம் எத்தனை முக்கியம்னு சொல்லனும்..” ப்ரீத்தி சும்மாவே வர அவளைப் பக்கவாட்டில் பார்த்து, “நீ என்ன படிச்சிருக்க?” என்றான். 

“கம்ப்யூட்டர் சைன்ஸ். ஐஐடி மெட்ராஸ். நீங்க?” 

“தட்ஸ் குட்! பொம்பளைங்கள்ளாம் நல்லாப் படிச்சுட்டு வர்றது ரொம்பச் சந்தோஷமா இருக்கு!” 

“பொம்பளைங்கன்னா அத்தனை இளப்பமில்லை! ஆம்பிளைங்க செய்யற அத்தனை காரியமும் செய்ய முடியும்.” என்றாள் பெருமையாக. 

விக்ரம் அலட்சியமாக “காலை விரிச்சிட்டு சுவத்தில ஒண்ணுக்கு அடிப்பியா?” என்றான். 

ப்ரீத்தி அதிர்ந்துபோய் அவனை முறைத்து “ச்சே! நான் எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கேன். உன் மாதிரி நளினமே பண்பே நாசூக்கே இல்லாத காட்டுமிராண்டித்தனமான ஆசாமியைப் பார்த்ததில்லை. க்ரூட்! நான் போறேன்,” என்று வேன் கதவைத் திறக்க முயற்சித்தாள். 

“எஸ் ஐம் க்ரூட்” 

“உங்களுக்கெல்லாம் வேலை கொடுத்து உக்கார வெச்சிருக்காங்க பாரு சர்க்கார்ல! அவர்களைச் சொல்லணும். அபாரிஜின் இன் டெரிலின் – கெட் மி அவுட்!” 

“லிஸன்!” விக்ரம் நிதானமாக உணர்ச்சியே இல்லாமல் பேசினான். “பட்டப் பகல்ல என் கண் முன்னால, புத்தம் புதுசான மனைவி சுட்டுக் கொல்லப்பட்டு, திலகம் வெச்சமாதிரி நெத்தியில குண்டடி பட்டு, குபுக்குன்னு ரத்தம் பொங்கறதைப் பார்த்ததும் எங்கிட்ட இருந்த நளினம், பண்பு, அப்புறம் என்ன சொன்ன, நாசுக்கு… எல்லாம் தீஞ்சு போச்சு!” 

ப்ரீத்தி சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவள் முகத்தின் இறுக்கம் தளர்ந்து அனுதாபம் தெரிய “ஸாரி” என்றாள். 


மைலாப்பூரில் தங்கராஜுவின் வீட்டில் இருந்த காவலாளி மெல்ல டீக்கடையிலிருந்து வருவதைக் கவனித்து விக்ரம் கோபத்துடன். “ஏன்யா, இதுதான் நீங்க ட்யூட்டி பண்றதா?” 

“அங்கருந்தே பார்த்துக்கிட்டு இருந்தேங்க. ஒருத்தரும் வரலைங்க.”

விக்ரம் தன் அடையாளச் சீட்டைக் காட்டி, “சரி சரி, மேல போறேன். சாவி கொடு” என்றான். 

ப்ரீத்தியுடன் மறுபடி தங்கராஜின் வீட்டுக்குள் நுழையும் போது விக்ரமுக்குப் பெட்ரோல் வாசனை மூக்கைத் துளைத்தது. சட்டென்று உஷாராகித் தன் மார்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீட்டுக் கூடத்துக்கு வர, நடுக்கூடத்தில் ஒருவன் அத்தனை காகிதங்களையும் எரித்துக் கொண்டிருக்க, விக்ரம் அந்த முகத்தை மறக்கவே மாட்டான். 

விக்ரமைக் கண்டவுடன் சோமன் போட்டது போட்டபடி மாடியில் தாவி ஓடினான். விக்ரம் உடனே அவனைத் துரத்த ப்ரீத்தி செய்வதறியாது திகைத்தாள். 

“வெய்ட்” 

“ப்ரீத்தி! கீழ போயிரு நீ!” என்று சொல்லிவிட்டு விக்ரம் அடுத்த வீட்டு மாடிக்குப் போல்வாலட் போல ஒரு குச்சியைப் பிடித்துக்கொண்டு குதித்தான். தூரத்தில் ஓடிய சோமன் மேல் குறி வைக்க முடியாதபடி கசகசவென்று துணி உலர்த்தல்கள் குறுக்குக் கம்பிகள், டிவி ஏரியல்கள். இருவரும் மாடிக்கு மாடி அசாத்திய வேகத்தில் ஓட, அவர்களைப் பார்த்துக்கொண்டே ப்ரீத்தி கீழே குறுகலான தெருக்களில் ஓடினாள். 

அந்த விரட்டலை விவரிப்பது கஷ்டமாக இருக்கிறது. கம்பிகள். தாவல்கள், ஒரு கோயிலின் மதில் சுவர்கள். இருவரும் அப்படியே அலாக்காகக் குதித்துக் கீழே வந்து சேர்ந்து மாட்டுத் தொழுவம், சாமி ஊர்வலம், சுற்றுப் புறத்தின் மேல் கவலையின்றி ஓடினார்கள். சோமன் ஒரு சந்து திரும்பிக் காத்திருந்த மோட்டார் சைக்கிளில் பாய்ந்து தப்பிக்க, விக்ரம் ப்ரீத்தியைத் தேடினான். அவள் சந்தின் விளிம்பில் ஓடி வர எதிரே சைடு காருடன் ஒரு மோட்டார் சைக்கிள் வருவதைக் கவனித்து அதை நிறுத்தி ப்ரீத்தியை இழுத்துக் கொண்டு அவளை மோட்டார்சைக்கிள் சொந்தக்காரர் பிரமிக்க அதில் தாவி ஏறிக்கொண்டு, அதில் திணித்து விக்ரமின் ஒரே குறி, அந்த ஆசாமியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற ஒரு வெறி! 

டிராபிக் விதிகளையோ பிரமித்த போலீஸ்காரர்களையோ மதிக்கவில்லை. அந்த ஓட்டை பைக்கையும் நூறுக்குமேல் விரட்டி இதோ பிடித்துவிட்டான் என்று வரும்போது ஒரு லாரி குறுக்கிட்டது. அடுத்தமுறை ரோட்டில் போட்டிருந்த பார்ட்டிஷன் பிரிவு குறுக்கிட்டது. 

ப்ரீத்தி அப்படியே கதிகலங்கி உறைந்துபோய் உடன் பிரயாணம் செய்தாள். நாக்கெல்லாம் வற்றியிருந்தது. போதாக்குறைக்கு இப்போது ஒரு கம்பத்தில் சீய்ச்சி மோட்டார் சைக்கிளும், சைடு காரும் பிரிந்து கொள்ள, ப்ரீத்தி சுயாட்சி பெற்றுவிட்டாள். அருகே இருந்த தியேட்டரை நோக்கி அகர வேகத்தில் படம் பார்க்கும் அவசரம் போல அந்த சைடு-கார் விரைந்தது.

– தொடரும்…

– 80களில் குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்தது.

– விக்ரம் (நாவல்), முதற் பதிப்பு: மே 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *