கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 98 
 
 

கதிரவன் தன் செங்கதிர்களைப் பரப்பி கீழ்வானில் உதயமாகிக் கொண்டிருந்தான். எங்கோ தூரத்தில் கேட்கும் குயிலின் ஓசை இன்னிசையாய் ஒலிக்க அழகான அந்தக் காலை வேளையில் குளித்து முடித்து விட்டு மொட்டை மாடியில் நின்று சூரியவணக்கம் செலுத்திக் கொண்டு இருந்தான் மாதவன். கீழே வானதி “என்னங்க…..” என்று கூப்பிடும் குரல் கேட்டு திரும்பியவன்,

“இதோ வர்றேன்” என்று கூறி கீழே இறங்கி வந்தான் குளித்து முடித்துத் தலையில் கட்டிய ஈரத்துண்டுடன் வந்து நின்ற வானதியைப் பார்த்தவுடன்,

“என்ன அவசரம். நா வந்து எடுத்துக்க மாட்டேனா?” என்று செல்லமாகக் கடிந்து கொண்டான். பின் காப்பி டம்ளரை கையில் வாங்கிக்கொண்டு “போமா போய் தலையைத் துவட்டு” என்றான் அக்கறையுடன். “ம்….. சரிங்க என்றவள், தயங்கி தயங்கி,

“ஏங்க இன்னைக்கு என் தோழி தேன்மொழிக்கு வளைகாப்பு என்னையும் வரச்சொல்லியிருக்கா, போகலைனா தப்பா எடுத்துக்குவா” என்றதும், மாதவன் கோபமாக

“உங்கிட்ட எத்தனை வாட்டிமா சொல்றது நீ போவ, யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்கன்னு அழுதுகிட்டு வருவ அது எதுக்குன்னுதான் போகாதேன்னு சொன்னா கேட்க மாட்டேங்கற” என்றான்.

“இல்லைங்க அவ என் பால்ய சிநேகிதியாச்சே போகாம எப்படிங்க… ” என்ற வானதியிடம்,

“சரி உன் இஷ்டம் என்னமோ பண்ணு” என்றான் அரைமனதுடன். மாதவனுக்கும், வானதிக்கும் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை இல்லாததால் அக்கம்பக்கத்தினரின் குத்தல் பேச்சுக்களுக்கும், நக்கல் பேச்சுக்களுக்கும் ஆளாயினர். இன்னும் ஒன்னுமில்லையா? என்று கேட்போரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தனர். இந்தச் சூழ்நிலையில் வளைகாப்பிற்கு வானதி செல்வது மாதவனுக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் அவள் ஆசைப்படுவதால் வேறுவழியின்றி ஒத்துக்கொண்டான். தோழியின் வளைகாப்பிற்கு ஆசையோடு ஆயத்தமானாள் வானதி.

பின் விடுமுறை என்பதால் வீட்டிலிருந்த மாதவனிடம் சொல்லிவிட்டு, பக்கத்தில் இரண்டு வீடு தள்ளி இருந்த தேன்மொழி வீட்டைச் சென்றடைந்தாள். ஏற்கனவே நலங்கு வைக்க ஆரம்பித்திருந்தனர். கன்னத்தில் பூசிய சந்தனம், குங்குமம், கை நிறையக் கண்ணாடி வளையலுடன் தேன்மொழியைப் பார்த்தவளுக்கு ஒரு நிமிடம் தன்னை அந்த இடத்தில் வைத்துப்பார்த்து மகிழ்ந்தாள்.

“வா வானதி” என்ற தோழியின் குரல் கேட்டு நினைவுக்கு வந்தவள் “ஆமா” என்பது போல் தலையாட்டிவிட்டு நின்றவளை

“ஏண்டி பக்கத்துல இருந்துகிட்டு இவ்வளவு நேரங்கழிச்சா வருவ, வா வந்து நலங்கு வை” என்று சிரித்துக்கொண்டே தேன்மொழி கூப்பிட ஆசையோடு நலுங்கு வைக்கச் சென்றாள் வானதி. அப்பொழுது அருகில் நின்று கொண்டிருந்த பக்கத்து வீட்டு சற்குணத்தம்மாள் தடுத்து,

“நில்லு நீயே தரிசு நிலமா கிடக்க. நீ நலங்கு வச்சா குழந்தை எப்படி நல்லபடியா பிறக்கும்? அவதான் ஏதோ பாசத்துல கூப்பிட்டா நீயில்ல வேண்டாம்னு சொல்லி ஒதுங்கி நிக்கனும். உடனே வந்துட்டியே குடு இங்க” என்று கையிலிருந்த சந்தனக் கிண்ணத்தை வெடுக்கென்று பிடுங்கினாள்.

இதைச் சற்றும் எதிர்பாராத வானதியால் இந்த வார்த்தைகளின் சூடு தாங்காமல் தணலிலிட்ட புழுவாய்த் துடித்தாள். இதற்குமேல் இங்கிருப்பது நெருப்பின் மேல் நிற்பதுபோல் இருக்க அழுது கொண்டே வீட்டைநோக்கி விரைந்தாள். வீட்டினுள் நுழைந்தவள் நேராகப் படுக்கை அறையிலிருந்த கட்டிலில் கிடந்து குலுங்கி அழுதாள். போன வேகத்திலேயே திரும்பி வந்த வானதியைப் பார்த்த மாதவனுக்கு என்ன நடந்திருக்கும் என புரிந்து கொள்ள முடிந்தது. பின்னாடியே ஓடிச்சென்றவன் அழுதுகொண்டிருந்த வானதியின் பக்கத்தில் அமர்ந்து தலையை கோதியபடி,

“இதுக்குத்தான் அங்க போக வேணான்னு சொன்னேன். என்ன நடந்திருக்கும்னு தெரியும் விடும்மா” என்றான் ஆறுதலாக. அவனைப் பார்த்த வானதி,

“அவ என்னோட சிநேகிதிங்க, அவளுக்கு நா நலுங்கு வச்சா குழந்தை நல்லபடியா பிறக்காதாம், அந்த சற்குணத்தம்மா சொல்றாங்க, எனக்குக் குழந்தையில்லாததற்கு நா என்னங்க பண்ணுவேன்” என்று கதறியழுதாள்.

அவளைத் தேற்றுவதற்குப் பெரும்பாடுபட்டவன், ஊரிலிருக்கும் அவள் அம்மாவிற்கு போன் செய்து நடந்ததைச் சொல்லி பேசச் செய்தான். பின் ஒருவாறு அழுகையை நிறுத்தியவள். மாதவனிடம்,

“அம்மா பத்து நாள் ஊருக்கு வந்து இருந்துட்டுப் போன்னு சொல்றாங்க” என்றதும் அவளுக்கு ஒரு மாறுதலாக இருக்கட்டும் என்று சரியென்று அவள் அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

அம்மா வீட்டிற்க்கு வந்து ஏழு நாட்கள் ஆன நிலையில், ஒருநாள் காலை வெளியில் ஓரே சத்தமாக இருப்பது கண்டு எழுந்து வந்தவள் வாசலில் அம்மா பார்வதி எதிர்வீட்டுக் கனகாவுடன் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டிருப்பதையும், பக்கத்து வீட்டு சாந்தி வீட்டில் போலீஸ் வந்து நிற்பதையும் பார்த்தவள் என்னவாக இருக்குமென நெற்றியைச்சுருக்கியவாறு யோசித்து கொண்டிருந்தாள்.

பின் சிறிது நேரம்கழித்து உள்ளே வந்த அம்மாவிடம் “என்னம்மாஆச்சு” என்று வானதி கேட்க,

“அதையேண்டி கேக்குற அந்த பாவிப்பய ரத்தினம் பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டு ‘இந்தப் புள்ளைங்க ரெண்டும் எனக்குப் பொறக்கலேன்னு’ எப்பம்பாரு சண்டை போட்டுக்கிட்டே இருப்பான். நேத்து ரெண்டு பேருக்கும் சண்ட முத்திப்போச்சு போல, பொண்டாட்டியையும், ரெண்டுவயசு குழந்தையையும் கொன்னுபுட்டு அவனும் தூக்குப்போட்டு செத்துட்டானாம். சாந்தி அவ மூத்த புள்ளைய அவ அம்மா வீட்டுல விட்டிருந்தா. அதனால அதுமட்டும் தப்பிச்சது,ம்……தப்பிச்சு என்ன புண்ணியம்….?சாந்திக்கு அப்பா கெடையாது, அம்மாவோ வயசானவ, இன்னும் எத்தனை நாளைக்கு அந்தப் புள்ளைய பாக்க முடியும். பாவம் அந்தப் புள்ள அநாதையாக நிக்கப்போகுது. இப்படிப்பட்ட அப்பனுக்குப் பொறந்ததத் தவிர அது என்ன பாவம் பண்ணிச்சு? ம்……என்னத்த சொல்ல”

என்று கவலைப்பட்ட பார்வதி உள்ளே சென்றுவிட, இதைக்கேட்ட வானதி ஆர்வம் மேலிட சாந்தியின் வீட்டருகே கூடியிருந்த கூட்டத்திற்கிடையே சென்றவள் அங்கே சாந்தியின் உடலைப்பார்த்துக் கதறிக்கொண்டிருந்த அவள் அம்மாவைப் பார்த்தாள். அவள் பக்கத்தில் சாந்தியின் இரண்டு வயது குழந்தை அம்மாவைக் கண்டு சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது. இதைப்பார்த்த வானதிக்குக் கண்ணில் நீர் அரும்பியது. சாந்தியின் அம்மாவோ,

“அடிப்பாவி எத்தனையோ தடவ சொன்னேனே. அவன விட்டுட்டு வாடின்னு……கேட்டியா? அவனத் திருத்திருவேன்னு சொல்லி இப்படி அவன் கையாலேயே செத்துக் கிடக்கிறியே. அந்தப் பிஞ்சையும் விட்டு வைக்கலியே” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“இங்க பாரு ஏதுமறியாத இந்தப் பச்ச மண்ண வச்சிக்கிட்டு நா என்னடி பண்ணுவேன். எப்படி வளக்கப் போறேன்னு தெரியலையே” என்று புலம்பி அழுதாள். இதைப்பார்த்த வானதிக்கு மனம் கனத்தது. அப்போது கூட்டத்தினிடையே திடீரென வெளிப்பட்ட போலீஸ்காரர்,

“ஏம்மா…. தள்ளிப்போமா” என்று அனைவரையும் விளக்கிவிட்டுச் சாந்தியின் உடலையும், மற்ற இரு உடலையும் கொண்டு செல்ல அழுதுகொண்டே சாந்தியின் அம்மாவோ பின்னாலேயே ஓட, விளையாடிக் கொண்டு நின்ற குழந்தையை வானதி கையிலெடுத்தாள். அது அவளைப் பார்த்துக் கள்ளமற்ற சிரிப்பை உதிர்த்தது. அதன் பிஞ்சு விரலின் ஸ்பரிசம் அவள் மனதை என்னவோ செய்ய மெய்சிலிர்த்துப் போனவளின் கண்ணிலிருந்து நீர் தாரை தாரையாகக் கொட்டியது. ஒரு முடிவுக்கு வந்தவளாய் அக்குழந்தையைத் தன் மார்போடு அணைத்து முத்தமிட்டாள் வானதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *