ரிஷி







(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2
அத்தியாயம் – 1

கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப வியப்பாக இருக்கும். அப்போதைய சூழ்நிலையுடன் அன்றாடம் போரா டிக் கொண்டு ரொம்ப காஷுவலாக வாழ்ந்து வந்திருக்கிறேன். ஆனால் இப்போ யோசித்துப் பார்க்கும் போது அதில்தான் நிம்மதி இருந்தாற்போல் தோன்றுகிறது.
மனதளவில் மனிதர்கள் சரியாக வளராமல் இருப்பதற்குக் காரணம் கூச்சம்தான். அதோடு சுதந்திரமாக சிந்திக்கவிடாமல் தடுத்து கொண்டே இருக்கும் பெற்றோர். நல்லதோ கெட்டதோ தனக்கென்று சில ரசனைகளை சிறு வயது முதல் வளர்த்துக் கொள்ளாமல் போவது.
பத்தொன்பது இருபது வயது பிராயத்தில் பெற்றோரின் ஆளுமையிலிருந்து விடுபட்டு திடீரென்று சுதந்திரம் கிடைக்கும்போது மனதளவில் முதிர்சி இல்லாத அந்த நேரத்தில் வெளி உலகம் வண்ணமயமாக காட்சி தருவதில் வியப்பு எதுவும் இல்லை. திடீரென்று கிடைத்த சுதந்திரம் தடுமாறச் செய்யும் போதுதான் மனிதனின் வீழ்ச்சி ஆரம்பமாகிறது. மனிதனின் வளர்ச்சி சாதாரண மாக இந்த இடத்தில் நின்றுவிடும். அதையும் தாண்டிப் போக முடிந்தால் அம்மனிதன் வேதாந்தியாக மாறுகிறான்.
என் இருபத்து நான்காவது வயதில் இந்த நிலையை அடைந்தேன். பத்தொன்பது வயதில் எவ்வளவு அப்பாவி யாக வாழ்ந்து வந்தேனோ நினைத்துப் பார்க்கும் போது வேடிக்கையாக இருந்தது. (தனித்தன்மை இல்லாமல் இருப்பதை அப்பாவித்தனம் என்று சொல்லிக் கொள்வார்களோ என்னவோ, எனக்குத் தெரியாது.)
பிரகாஷ் இரண்டு கைகளையும் பேண்ட் ஜேபியில் நுழைத்தபடி நிதானமாக நடந்து போய்க் கொண்டிருந்தான். மாலை நேரத்து வெயில் அவனுடைய சிவந்த உடல் மீதுபட்டு நிறத்தை மேலும் கூட்டியது. சாலையில் போக்குவரத்து அதிகமாக இருந்தது. எதிரே வந்த கல்லூரி மாணவி ஒருத்தி கையிலிருந்த புத்தகங்களை சரி செய்தபடி அவனை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே தாண்டி போய்விட்டாள்.
பிரகாஷ் ஒரு பட்டதாரி. அதைவிட முக்கியமான தகுதி அவனுடைய அழகு. அலங்காரம் செய்து கொள்வதில் அவன் எந்த விதமான சிரத்தை எடுத்துக் கொள்ளா விட்டாலும் அந்த அலட்சியமே அவனுக்கு ஒருவிதமான அழகைக் கொடுத்தது. அப்பாவித்தனத்தை பிரதிபலிக்கும் கண்கள், மென்மையான கன்னங்கள். கோவைப்பழ நிறத்தில் இதழ்கள்.
பிரகாஷ் யோசித்துக் கொண்டிருந்தது பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. இன்னும் மூன்று நாட்களில் முதல் தேதி வரப்போகிறது. சம்பளம் கைக்கு வந்ததும் தீர்க்க வேண்டிய சில்லறைக் கடன்களை நினைவுப்படுத்திக் கொண்டிருந்தான்.
அதற்குள் அவன் யோசனைகளை சிதறடிப்பது போல் பக்கத்தில் கார் ஒன்று வந்து நின்றது.
“பிரகாஷ்! உன்னைத்தான்.” வீணை மீட்டியது போல் இனிமையான குரல் கேட்டது.
பிரகாஷ் திரும்பிப் பார்த்தான். காரில் ஸ்டியரிங் முன்னால் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்ததும் வியப்பு அடைந்தவனாக ‘சுஜாதா!’ என்றான் தெளிவற்ற குரலில்.
பல்வரிசை பளீரென்று மின்ன லேசாக சிரித்துவிட்டு கார் கதவைத் திறந்துகொண்டே “கமின்” என்றாள்.
வேறு ஏதோ உலகில் இருப்பவன் போல் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அவனுக்கு ரொம்ப வியப்பாக இருந்தது. சுஜாதா கல்லூரியில் தன்னுடைய கிளாஸ்மேட். அவ்வளவுதான். கல்லூரியில் படிக்கும் போது கூட அவன் அவளுடன் ஒரு நாளும் பேசியதில்லை. சொல்லப் போனால் பெண்களுடன் பேசும் தைரியமும் அவனுக்கு இருந்தது இல்லை. ஆனால் இன்று ஏறத்தாழ மூன்று வருடங்களுக்குப் பிறகு திடீரென்று அவளைப் பார்த்தது. அவள் தன்னை காரில் ஏறச் சொன்னது.. அவனுக்கு இதெல்லாம் ஏதோ கனவு போல் தோன்றியது.
பிரகாஷ் தலையைத் திருப்பி சுஜாதாவைப் பார்த்தான். சாலையில் போக்குவரத்து அதிகமாக இருந்ததால் அவள் கவனமாக டிரைவ் செய்து கொண்டிருந்தாள். கல்லூரி நாட்களில் இருந்ததை விட அவள் அழகு கூடியிருப்பது போல் தோன்றியது. மெலிதாக லிப்ஸ்டிக் தீட்டியிருந்த இதழ்கள் ரோஜா நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தன. இயற்கையான அழகுடன், மிதமான ஒப்பனையும் சேர்ந்து கொண்டதில் பார்வையைத் திருப்பிக் கொள்ள முடியவில்லை.
கல்லூரி நாட்களில் சுஜாதா பெரும்பாலான மாணவர்களின் இதயங்களில் புயலை உருவாக்கி யிருந்தாள். பிரகாஷ் கூட சில சமயம் அவளைப் பற்றி யோசித்திருக்கிறான். ஆனால் அவளுடன் பேசுவதற்கு அவன் ஒரு நாளும் துணிந்தது இல்லை. வேடிக்கை என்னவென்றால் அவளுடன் பேசும் மற்ற மாணவர்களைப் பற்றி அவன் பொறாமைப்பட்டதும் இல்லை. அவர்களை விட தான் உயர்ந்தவன் என்றும், தன் அளவுக்கு அவர்கள் புத்திசாலிகள் இல்லை என்றும் நினைத்தானோ என்னவோ. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஒரு மனிதன் தவறான வழியில் போகாமல் இருப்பதற்குக் காரணம் தனித்தன்மை தான் என்று சொல்ல முடியாது. அவன் கோழையாகவும் இருக்கக்கூடும்.
பிரகாஷ் அந்த மூன்று ஆண்டுகளும் சுஜாதாவுடன் பேசாமல் இருந்ததற்குக் காரணம் பிரகாஷின் தனித் தன்மைதான் என்பது சந்தேகம்தான். அந்தக் கேள்வியும் இப்பொழுது அனாவசியம். ஏன் என்றால் இந்தக் கதையின் நாயகன் பிரகாஷ் இல்லை. பிரகாஷ் இதில் சம்பந்தப் பட்டிருக்கிறான். அவ்வளவுதான்.
“என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?”
பிரகாஷ் திடுக்கிட்டான். அவள் தன்னை ஒருமையில் விளித்ததை அவன் கவனிக்கவில்லை.
“ரொம்ப இடைவெளிக்கு பிறகு சந்தித்துக் கொள்கிறோம் இல்லையா?” சுஜாதா சொன்னாள்.
“ஆமாம்.”
“நான்கு வருடங்களாவது இருக்கும்.”
“ஆமாம்.” தான் சுருக்கமாக பதில் சொல்வதை அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான்.
“இங்கே வேலை பார்க்கிறாயா?” சுஜாதா கேட்டாள். எந்த அலுவலகத்தில் வேலை பார்க்கிறானோ சொன்னான்.
அவள் வியப்புடன் “நான்கு வருடங்களாக இங்கே இருக்கிறாயா?” என்றாள்.
“இல்லை இல்லை. ஊரிலேயே அங்கும் இங்குமாக பல வேலைகளைப் பார்த்தேன். இந்த வேலை கிடைத்து ஒரு மாதம் தான் ஆகிறது. இந்த ஊரில் போஸ்டிங் கொடுத்தார்கள்.”
“மனைவியையும் அழைத்து வந்து விட்டாயா?”
முறுவலுடன் கேட்டாள்.
“இன்னும் திருமணம் ஆகவில்லை.” வெட்கம் கலந்த குரலில் சொன்னான்.
“தனியாக ரூமில் தங்கியிருக்கிறாயா?”
“இல்லை” என்றான்.
“பின்னே?” புரியாதவள் போல் கேட்டாள்.
“மாமாவும் என்னுடன் தான் இருக்கிறார். என் சின்ன வயதிலேயே அம்மா அப்பா போய்விட்டார்கள். மாமாதான் என்னை வளர்த்து ஆளாக்கினார். சமீபத்தில் தான் அவர் ரிடையராகி விட்டார். அவருக்கு மகன்கள் இல்லை. மனைவி இறந்து போய் ரொம்ப வருடங்கள் ஆகிறது”. மேற்கொண்டு அவள் கேள்வி எதுவும் கேட்காமல் முழு விவரமும் சொன்னான்.
“அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள் இல்லை.” புரிந்து விட்டாற்போல் சுஜாதா சிரித்தாள்.
பிரகாஷுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “ஆமாம்” என்றான்.
“பெயர்?”
“சீதா மகாலக்ஷ்மி” தயங்கிக்கொண்டே சொன்னான்.
சீதா வாசற்படியில் நின்றுகொண்டு சாலையில் மக்கள் நடமாட்டத்தை வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு முகத்தை அலம்பி பவுடர் பூசிக் கொண்டு நேர்த்தியாக தயாராகி இருந்தாள். இந்த அலங்காரம் பிரகாஷுக்காக இல்லை, தனக்காக, வாசலில் நின்று கொண்டு மக்களை வேடிக்கை பார்ப்பது அவளுடைய பொழுது போக்கு.
வெள்ளை நிறப் புடவையின் மீது பொருத்தமில்லாத சிவப்பு நிற பிளவுஸ். கொஞ்சம் குள்ளமாக இருப்பதால் இரட்டைப் பின்னல் அவளுக்கு பாந்தமாக இருக்க வில்லை. இது போன்ற சின்ன விஷயங்களை அவள் கவனத்தில் கொள்ள மாட்டாள். எப்பொழுதாவது அபூர்வமாக ஒற்றைப் பின்னல் போட்டுக் கொள்வாள். அது போன்ற நேரங்களில் பிரகாஷின் கண்களில் தெரியும் பாராட்டை உணரக் கூடிய நுண்ணிய அறிவு அவளுக்கு இல்லை. ஒருகால் பிரகாஷுக்கு பிடிக்கும் என்று தெரிந்தாலும் அவள் போட்டுக்கொள்ள மாட்டாள். காரணம் ரொம்ப சின்னது. இரட்டைப் பின்னல் போட்டுக் கொள்வது அவளுக்குப் பிடிக்கும். மற்றவர்களுக்காக தன் விருப்பத்தை ஏன் மாற்றிக் கொள்ளணும் என்ற சுபாவம், சராசரி இளம் பெண்களுக்கே உரிய பிடிவாதம்.
சாலையில் வந்து கொண்டிருந்த ஜீன்ஸ் பேண்ட இளைஞன் தன்னை உற்றுப் பார்ப்பதைக் கவனித்து சட்டென்று கதவின் பின்னால் நகர்ந்து கொண்டாள். பிறகு கதவு இடுக்கின் வழியாக அவன் இன்னும் இந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருக்கிறானா என்று நோட்டம் விட்டாள். காலங்காலமாக தொடர்ந்து வரும் கலாசாரம் அவளை உள்ளே போகச் செய்தால், முதிர்ச்சி அடையாத மனமானது அவன் மறுபடியும் தன்னைப் பார்க்கிறானா இல்லையா என்று வேவு பார்க்கத் தூண்டியது.
ஜீன்ஸ் இளைஞன் வீட்டைத் தாண்டி போன பிறகு மறுபடியும் வெளியில் வந்து நின்று கொண்டாள். ஸ்கூட்டர் மீது ஜோடி ஒன்று உல்லாசமாக வந்து கொண்டிருந்தது. பின்னால் அமர்ந்திருந்த பெண் அவன் இடுப்பைச் சுற்றிலும் கையைப் பிணைத்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். ஸ்கூட்டர் தெருமுனை திரும்பும் வரையில் அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள் சீதா, ஸ்கூட்டர் பின் சீட்டில் தானும், முன்னால் ஒரு ராஜகுமாரனும். ஆனால் அது பிரகாஷ் இல்லை.
“இன்னும் உங்க அத்தான் வரவில்லையா?” காமாட்சி யின் குரல் கேட்டு இந்த உலகத்திற்கு வந்தாள். காமாட்சி அடுத்த வீட்டுப் பெண். பள்ளிக்கூட வாத்தியாரின் மகள்.
“வரவில்லை.”
“பல்லாங்குழி விளையாடுவோமா?”
“வாயேன்.” உள்ளே போகத் திரும்பினாள் சீதா.
“நீ அத்தானின் வருகைக்காக காத்திருக்கிறாயோ என்னவோ.”
“ச்ச.. ச்… அப்படி எதுவும் இல்லை.”
“மாமா இருக்கிறாரா?”
“உள்ளே இருக்கிறார்.” சீதா பல்லாங்குழியில் புளியங் கொட்டைகளை அடுக்கிக் கொண்டே சொன்னாள்.
“சினிமாவுக்கு நேரமாகி விடுமோ என்னவோ.”
“பரவாயில்லை. ஆறரை மணிக்குத்தானே.”
“சீதா! வீட்டுக்குப் போன பிறகு பார்த்தேன். என்னிடம் காசு குறைவாக இருக்கு.” காமாட்சி சொன்னாள்.
“கவலைப்படாதே காமாட்சி. என்னிடம் பத்து ரூபாய் அதிகப்படியாகவே இருக்கு.”
“நீ ரொம்ப அதிர்ஷ்டசாலிதான். வீட்டுச் செலவை நீதானே பார்த்துக் கொள்கிறாய். இஷ்டம் வந்தாற் போல் செலவழிக்கலாம்”.
“அதிர்ஷ்டமாவது! அத்தானின் சம்பளப் பணத்தில் மாதம் முழுவதும் ஓட்ட முடிந்தால் அதுவே பெரிய விஷயம்.”
அரைமணி நேரம் பல்லாங்குழி விளையாடிய பிறகு காமாட்சி எழுந்து கொண்டாள். “சீதா! மாமாவிடம் சொல்லு. நான் போய் வருகிறேன்.”
சீதா உள் பக்கம் எட்டிப் பார்த்தாள்.
கொல்லைப் புறம் வாதாம் மரத்தின் கீழே துணி தோய்க்கிற கல்லின் மீது அமர்ந்துகொண்டு வேலைக்காரப் பெண்ணுடன் வம்பு பேசிக் கொண்டிருந்தார் சுவாமிநாதன்.
“போங்க சாமி. இந்த சமாசாரமெல்லாம் உங்களுக்கு எதுக்கு?” பாப்பாத்தி உள்ளூற சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“சொல்லு பாப்பா. என் கிட்டே சொல்ல வெட்கப் படுவானேன்?” வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டே சொன்னார்.
வாளியில் இருந்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவிய பாப்பாத்தி அவற்றை உள்ளே கொண்டு போய் வைப்பதற்காக எழுந்து கொண்டாள்.
“வயசாச்சே தவிர இன்னும் சின்ன பிள்ளையாட்டம் கேள்வி கேட்பதைப் பாரு.” நீட்டி முழக்கி சொல்லிக் கொண்டே உள்ளே போய் விட்டாள்.
சுவாமிநாதன் ஏதோ பெரிய ஜோக் கேட்டு விட்டது போல் சிரித்துக் கொண்டே உள்ளே வந்தார். வரும் போதே அவருடைய தோரணை மாறிவிட்டது.
“அம்மா சீதா! கொஞ்சம் வெளியில் போயிட்டு வருகிறேன். கதவைச் சாத்திக் கொள்” என்றார் கம்பீரமான குரலில்.
வாழப்போகும் சொற்ப காலத்தில் சாத்தியமான வரையில் அனுபவங்களை பெற்று விடவேண்டும் என்று தவிக்கும் மனிதர்களை ஆத்மவஞ்சனை செய்துகொள்வது வேடிக்கைதான்.
“இருட்டுகிற நேரம். இப்போ எங்கே. போறீங்க?” சீதா கேட்டாள்.
“வீட்டில் பொழுது போகவில்லை. சும்மா கடைத் தெரு வரையில் போய்விட்டு வருகிறேன்.” சுவாமிநாதன் சொன்னார். வேலைக்காரியிடம் பேசும் போது இருந்த குசும்புத்தனம் இப்பொழுது இல்லை.
“நானும் காமாட்சியும் சினிமாவுக்குப் போகப் போகிறோம். காலையிலேயே சொன்னேன். நினைவு இருக்கு இல்லையா.”
சுவாமிநாதன் தலையை அசைத்துவிட்டு கிளம்பினார்.
“பெயர் நன்றாக இருக்கு.” முறுவலுடன் சொன்னாள் சுஜாதா. “பின்னே கல்யாணம் செய்துகொள்ள தாமதம் ஏன்?”
பிரகாஷ் பதில் சொல்லவில்லை. சுஜாதா அவன் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.
பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தன் மீது இருப்பதை உணர்ந்த பிரகாஷ், “விசேஷமாக எதுவும் இல்லை. இந்த வேலை சமீபத்தில்தானே கிடைத்தது” என்றாள்.
“கொஞ்சம் காலூன்றி கொண்ட பிறகு தான் திருமணம். அப்படித்தானே.”
ஆமாம் என்பது போல் தலையை அசைத்தான் பிரகாஷ். மாமா ரிடையராகும் நேரத்தில் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலைகளும் டெம்பரரி வேலைகள். எப்போ வீட்டுக்குப் போகச் சொல்லப் போகிறானோ என்று ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டே இருக்க வேண்டிய நிலைமை.
“வீட்டில் நீங்க மூவர் மட்டும்தானா?”
தான் வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட காலை முதல் மாலை வரையில் சீதாவுடன் ஊர் வம்பு பேசிக் கொண்டிருக்கும் அடுத்த வீட்டு காமாட்சி நினைவுக்கு வந்தாள். “மூவர் மட்டும்தான்” என்றான்.
“அந்த அனுபவமே புதுமையாக இருக்கும் இல்லையா?” சுஜாதா சொன்னாள்.
“எது?”
“திருமணம் ஆவதற்கு முன்பு ஒரே வீட்டில் இருப்பது. சின்னச் சின்ன குறும்புகள்… சண்டைகள்-” சுஜாதா கலகல வென்று நகைத்தாள்.
பிரகாஷ் பதில் சொல்லவில்லை. சுஜாதா அதிகமாக உரிமை எடுத்துக் கொள்வது போல் தோன்றியது.
“கல்லூரி நண்பர்கள் யாராவது கண்ணில் பட்டார்களா?” மறுபடியும் அவளே கேட்டாள்.
“இந்த ஊரில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நம் ஊரில்தான் அவ்வப்பொழுது பார்ப்பேன்.”
“இன்னும் நம்ப ஊராவது?” என்று நகைத்தாள் சுஜாதா.
பிரகாஷும் நகைத்தான். “என்னைப் பற்றி எல்லாம் சொல்லி விட்டேன். பின்னே…” பாதியில் நிறுத்தினான்.
“சொல்ல என்ன இருக்கு? பரீட்சை ரிசல்ட்ஸ் வரும் முன்பே திருமணமாகி விட்டது. அவருக்கு இதே ஊர் தான். நான்கு வருடங்களாக இங்கேதான் இருக்கிறேன்.”
“அவருக்கு என்ன வேலை?”
“பிசினெஸ்”
காலை முதல் மாலை வரையில் வியாபாரிகளை டீல் செய்யும் வேலை அவனுடையது. அதான் உடனே கேட்டான் – “அவருடைய பெயர்?*
ஸ்டியரிங்கை திருப்பி ரிக்ஷாவை ஓவர்டேக் செய்து கொண்டே சொன்னாள், “பொன்னம்பலம்.”
பக்கத்தில் வெடிகுண்டு வெடித்தாற்போல் அதிர்ச்சி அடைந்தான் பிரகாஷ்.
கறுப்பாக, உயரமாக, முகம் முழுவதும் அம்மைத் தழும்புகளுடன், கை விரல்களில் வைர மோதிரங்கள், கிளாஸ்கோ மல் ஜிப்பா, ஜரிகை வேஷ்டியுடன் தன் ஆபீஸுக்கு அடிக்கடி வருகை தரும் பொன்னம்பலம் தான் சுஜாதாவின் கணவனா? அவனால் நம்பவே முடிய வில்லை.
– தொடரும்…
– எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய ரிஷி என்ற நாவல், கௌரி கிருபானந்தன் மொழிபெயர்த்தது.
– ரிஷி (நாவல்), முதற் பதிப்பு: 2004, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.