மீண்ட நாதம்
(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று ரேடியோவிலே யாரோ ஒருவரின், வீணைக் கச்சேரி கேசவமூர்த்தி ஆபீஸிலிருந்து வந்தவன், கோட்டைக் கூட கழற்றாமல் அப்படியே சாய்வு நாற்காலியில் சாய்ந்தவண்ணம் கண்ணை மூடிக் கொண்டான். ரசிக்கும் தன்மையில் மூழ்கினானோ அன்றைய அதிகப்படி வேலையில் களைத்துப் போய் மெய்மறந்து சாய்ந்திருந்தானோ அல்லது கற்பனையுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தானோ தெரியாது.
ஆனால், அந்த மூன்றுமேதான் அப்பொழுதைய நிலையிலிருந்தது; இரண்டாங் கட்டிலிருந்து ஏதோ வேலையாக வந்த புஷ்பா, கணவர் வழக்கத்துக்கு விரோதமாக சீக்கிரமாக வந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்திருப்பதைக் கண்டாள். ரேடியோ உரத்த குரலில் கத்துவதே அவருக்குப் பிடிக்காது. அதுவும் வீணைக் கச்சேரியென்றால் செவி சாய்க்காதவர். அன்று ரேடியோவின் அருகில் சிறிது அதிகமான ஒலியை அது கிளப்பிக் கொண்டிருக்க, அதைச் சகித்துக் கொண்டிருக்கிறாரே என்பதைக் காணும்போது அவளுக்கு வியப்பாக இருந்தது.
“என்ன உடம்பு சரியில்லையா?” என்று சொல்லிக் கொண்டே ரேடியோவைச் சட்டென்று நிறுத்தினாள் புஷ்பா.
திடுக்கிட்டு விழித்தவன் போல், எங்கோ வானவெளியிலிருந்து பிடித்துத் தள்ளப்பட்டவன்போல் கண்ணைத் திறந்தான் மூர்த்தி.
“ஏன்ரேடியோவை நிறுத்துகிறாய்?” என்றான் கேசவமூர்த்தி. அன்று அவனுடைய போக்கே விசித்திரமாக இருந்தது.
“உங்களுக்கு வீணைக் கச்சேரி என்றால் பிடிக்காதே. அதுவும்..! நீங்கள் இப்பொழுது வருவீர்கள் என்பது தெரியாமல்… உரத்த குரலில் பாடும்படி வைத்துவிட்டேனே என்பதற்காக நிறுத்தினேன்” என்றாள் கவலை தோய்ந்த முகத்துடன்.
கேசவமூர்த்திக்கு மனசே சரியில்லை. அவன் எண்ணங்கள் பின்னுக்குச் சென்றன. ‘தனக்குச் சங்கீதமே பிடிக்காது என்றல்லவா ஆகிவிட்டது? ஒரு காலத்தில் எவ்வளவு ஈடுபாடு இருந்தது! அதுவும் வீணையின் இனிய நாதத்தில் அமிழ்ந்து நேரம் போவதே தெரியாமல், அதன் மோக லாகிரியில் சுழன்று கொண்டிருந்தோமே…’ என எண்ணும்போது அவனுக்குத் துக்கம் துக்கமாக வந்தது.
“கலையை மறந்தோமே என்பதன்று, ரசிகத்தன்மை அற்றுப் போய் விட்டோமோ என்பதற்குமன்று. ஆனால், வைராக்யமாக அன்று செய்த முடிவு, அருமைத் தங்கைக்காக – அவள் நினைவுக்காக ஏற்பட்ட வெறுப்பல்லவா அது?
அவன் தங்கை காஞ்சனாவின் இசையிலுள்ள ஈடுபாட்டிற்கும் குரல் வளத்திற்குமாக அவளுக்கு வீணை கற்றுக் கொடுக்க வேண்டுமென்று அவன் திட்டமிட்டான்.
தாய் தந்தையற்று தன் பாதுகாப்பில் இருக்கும் ஒரே தங்கையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தான். அவன் அத்தை ஒருத்திதான் துணை. இவனுக்கும் நல்ல உத்தியோகம். அவளுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட்டுத் தான் மணப்பது எனவும் தீர்மானித்திருந்தான்.
பெயருக்கேற்றபடி பொற்கொடிபோல் வளர்ந்த காஞ்சனாவின் மிருதுவான விரல்களால் எழுப்பப்படும் வீணையின் நாதம், அந்த வீடு முழுவதும் பரவி, இன்ப ஒலியை எழுப்பும்.
ஒரு தடவை உள்ளூர் சபாவில், மிகவும் வற்புறுத்தியதன்பேரில் ஒப்புக் கொள்ளப்பட்ட கச்சேரியின் மூலம் காஞ்சனாவின் வீணைத் திறமை ஊர் முழுதும் பரவியது.
அவளை மணப்பதற்குத்தான் மிஸ்டர் இராமமூர்த்தி பி.ஏ. கொடுத்து வைத்திருந்தாள். விடுமுறையைக் கழிக்க அந்த ஊரிலுள்ள அக்கா வீட்டிற்கு வந்த இடத்தில், ஜாதகப் பொருத்தமும், பெற்றோர் களின் சம்மதமும் கிட்டின.
கல்யாணமானவுடன் புதுதில்லி வாசத்துக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், கேசவமூர்த்தி அவ்வளவு சீக்கிரத்தில் தங்கையைப் பிரிந்து விடுவானா?
ஒரு மாதம் பொறுத்து அனுப்புவதாகக் கேட்டுக் கொண்டான். தன் உயிர் முழுவதையும் ஒரே தங்கையின் மீது வைத்திருக்கும்போது, அவ்வளவு லேசாகவும் பிரிய முடியுமா?
ஆனால், அந்த ஒரு மாதத்திற்குள்ளாக, இராமமூர்த்திக்கு சென்னைக்கு மாற்றலாகியது. திருச்சியினின்று சென்னைக்குத் தங்கையைக் கொண்டு விடும் அவசியம் ஏற்பட்டது. காஞ்சனா குடும்ப வாழ்வில் புகுந்தாள்.
தங்கையை விட்டுப் பிரியும்போது கேசவமூர்த்திக்குக் கண்களில் பாசத்தால் நீர் தளும்பியது.
“காஞ்சனா! அடிக்கடி வந்து உன்னைப் பார்த்துப் போகிறேன்; வீணை வாசிப்பதை மட்டும் விடாதே… பழக்கம் விட்டுப் போய் விட்டால் அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது” என்று தழுதழுத்த குரலில் கூறிப் பிரிந்தான்.
இராமமூர்த்தி – காஞ்சனா வாழ்க்கை தொடங்கியது. காஞ்சனா வந்தவுடனே இராமமூர்த்தியுடனிருந்த அவன் தாயார் கிராமத்திற்குச் சென்று விட்டாள்.
புதுக்குடும்ப பாரம் இளங்கொடியின் மீது விழுந்தது. அதிலே காஞ் சனா வந்த விசேஷமோ என்னவோ இராமமூர்த்திக்கு ஆபீஸில் வேலை அதிகமாகியது. வீடு வர எட்டரை மணி ஆகும்.
அந்தத் தனி வீட்டில் மாலை நான்கு மணிக்கே வேலைகளையெல்லாம் முடிததுக் கொண்டு தனியாகக் கொட்டு கொட்டென்று உட்கார்ந்திருப் பாள். ரசிக்க ஆளில்லாமல் வீணையை எவ்வளவு நாள் வாசிப்பாள்?
சில நாள்களில் தனிமையைக் குறித்து மனவேதனையின் பிரதி பலிப்பாகக் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு நீர்த்துளிகள் வீணையின் நரம்புகளில் விழுந்து அந்த ஒலியோடு சேர்ந்து தெறிக்கும்.
வீணை வாசிப்பதையே நிறுத்திவிட்டாள் காஞ்சனா.
இராமமூர்த்திக்கு அதைப் பற்றி என்ன? ‘அப்பாடா’ என வீட்டுக்கு வரும் அவனுக்கு நாற்காலியில் சாய்ந்து கொண்டால் போதும் போலிருக்கும்.
கேசவமூர்த்தி தங்கையைப் பார்க்க அன்று வந்திருந்தான். அவளுடைய வாழ்க்கையைப் பற்றிக் கேட்டான்.
வீணையைத் தொட்டு ஒரு மாதமாகியது என்பதை அவன் அறியும்போது வருத்தம் தாங்கவில்லை.
மாப்பிள்ளை இராமமூர்த்தியை அதைப் பற்றித் தனியே பேச்சு வாக்கில் கேட்டு விட்டான்.
தினசரி மாலையில் சீக்கிரம் வருவதற்கு முயலக்கூடாதா என்றும் கேட்டான். இராமமூர்த்தி பதில் பேசவில்லை. சிரித்துக் கொண்டே சும்மாயிருந்து விட்டான்.
கேசவமூர்த்தி வந்து போனபிறகு மறுபடியும் மாலை வேளையில் வீணையின் நாதம் அந்த வீட்டில் எழுந்தது. ஆனால், ஒரு நாளாவது அதைக் கேட்டு ரசிக்க இராமமூர்த்தி வீட்டில் இருக்க மாட்டான்.
அன்று ஆபீஸிலிருந்து வழக்கம்போல் வீட்டிற்கு வந்தான் இராமமூர்த்தி. மனசு சரியாயில்லை அன்று அவனுக்கு.
காஞ்சனாவுக்கு வழக்கத்திற்கு விரோதமாக நீண்ட நேரம் தன்னை மறந்து வீணையில் லயித்திருந்தாள். இராமமூர்த்தி வந்து பலமாகக் ஈதவைத் தட்டிய பிறகே திறந்தாள். நடையிலும் வேகமில்லை; அலுத்துப் போன ஒரு களைப்பு.
தடார் என்று கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான். இலையில் சோறு போடப்பட்டபோதுதான் இராமமூர்த்திக்கு ஆத்திரம் அதிகமாகியது.
தூக்கம் கண்ணைச் சுழற்ற, உடல்நிலையும் சரியாக இல்லாத நிலையில் காஞ்சா தள்ளாடிப் பரிமாறுவது மனசு சரியாக இல்லாத இராமமூர்த்தியின் ஆத்திரத்தை அதிகமாக்கியது. அதற்கு ஏற்றாற்போல் குழம்பிலும் உப்பு இல்லை.
“உப்பை எங்கே போட்டாய்… அந்த வீணையிலே போட்டாயோ?” என்றான் கடுமையாக.
காஞ்சனா பதில் பேசவில்லை.
“மீதி நேரத்தில் குஷியாக இருப்பது. நான் வீடு வந்தவுடன் முகத்தை உம்மென்று தூக்கிக் கொள்வது. வீணையும் பாட்டுமாக இருப்பது போல நான் வந்த பிறகு இருக்கக் கூடாதாக்கும்?” என்றான் மறுபடியும் தொடர்ந்து.
நெஞ்சிலே அடக்கி வைத்திருந்த ஆத்திரம் அன்று காஞ்சனாக்கு அடக்கவே முடியவில்லை.
கண்ணீரும் அழுமையும் கலந்து பெருக ஆத்திரக் குரலில் ஏதேதோ கொட்டிவிட்டாள்.
ரசிப்புத் தன்மையற்றவர்களிடம் அற்புதமான கலையை எப்படிப் பயன்படுத்துவது என்ற பொருள்கூட அதிலே தெரிந்தது. கேட்டபோது தான் இராமமூர்த்தியின் கை நீண்டது.
ஓர் அடி கன்னத்தில், சிவந்த கன்னத்தில் அடிபட்ட இடம் ரத்தச் சிவப்பாகியது.
இரவு முழுவதும் விம்மலும் குமுறலுமே. மறுநாள் அதற்கு மறுநாளும் தணியவே இல்லை. பிறகு இராமமூர்த்தி எவ்வளவோ சமாதானப்படுத்தினான்.
முழு வெற்றியும் கிடைக்கவில்லை. அந்த வீணை கவனிப்பாரற்ற நிலையிலே கிடந்தது.
இதன் நடுவில் காஞ்சனா கர்ப்பிணி என அறிந்த கேசவமூர்த்தியும் அவளை ஊருக்கு அழைத்துச் சென்றான். இனி இப்போதைக்குத் திரும்பி வருவதில்லை என்ற பிரசவ வைராக்கியத்துடன் சென்றாள் காஞ்சனா. என்ன இருந்தாலும் குழந்தைதானே!
ஒருநாள் ஆபீஸிற்குத் தந்தி வந்தது. இராமமூர்த்தி அவசரமாகத் திறந்து படித்தான். திடுக்கிட்டான். செயலற்றுப் போனான்.
‘காஞ்சனாவுக்கு அபார்ஷன் அபாயம். புறப்படவும்’.
வயிற்றைக் கலக்கியது. அவனால் அன்றிரவே கிளம்ப முடியவில்லை; மறுநாள் காலையில் கிளம்பினான். தன் நினைவில்லை. வெறும் மரக்கட்டை போலச் செயலற்று வருத்தம் பொங்க அவன் திருச்சியை அடைந்தான்.
வெளிறிப் போன முகத்துடன் ஆஸ்பத்திரியில் கிடந்தாள் காஞ்சனா கண்கள் பார்வையற்றுக் குழி விழுந்து கிடந்தன.
அன்று இரவு ஜன்னி வேறு கண்டுவிட்டது. ஜன்னியிலே அப்பப்பா என்ன பிதற்றல்! ‘இனிமேல் நான் போக மாட்டேன் அங்கே. அண்ணா! அந்த வீணையை இங்கே கொண்டு வந்து விடு’.
இந்த வார்த்தையைக் கேட்கும்போது குழந்தைபோல் முகத்தை மறைத்துக் கொண்டு கதறினான் இராமமூர்த்தி.
கேசவமூர்த்தியின் நிலையைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?
எல்லாரையும் தவிக்கவிட்டு இந்த உலகை விட்டே காஞ்சனா சென்று விட்டாள்.
கேசவமூர்த்திக்குப் பித்துப் பிடித்தது போலாகிவிட்டது. அந்த வீணையை எடுத்து வந்துவிட்டான். கூடத்தின் நடுவே மேஜை மீது அது இருந்தது.
கல்யாணமாகி புஷ்பா வீடு வந்த பிறகு பல தடவைகளில் அவனிடம் வீணை சும்மாவே புழுதி படிந்திருப்பதைப் பற்றிக் கேட்டிருக்கிறாள்.
அவன் பதில் சொல்வதில்லை. ஆனால், அவனது போக்கிலிருந்து, வீணை – சங்கீதம் இவை மீது அவனுக்குப் பிரியம் இல்லை என்பது தான் அவ்வீணை சும்மாயிருப்பதற்குக் காரணம் என நினைத்தாள் புஷ்பா.
ஆனால் அன்று, பழைய நினைவுகளைக் கிளறிவிட்ட அந்த ரேடியோவினால், கேசவமூர்த்தி பழைய சம்பவங்களை அப்படியே புஷ்பாவிடம் கொட்டி விட்டான்.
காஞ்சனா இறந்தபிறகு வாழ்க்கையிலே நாதமே போய்விட்டது என்று சொல்லும்போது கண்ணீர் விட்டு விட்டான்.
ஆனால், புஷ்பா நேரே வீணையிடம் சென்றாள். அதன் உறையைக் கழற்றினாள். தூசு தும்பைத் துடைத்தாள்.
நடுக்கூடத்திலே வீணையுடன் உட்கார்ந்தாள். அவளுடைய மெல்லிய விரல்கள் வீணையின் கம்பிகளின் மீது தவழ்ந்தன.
கேசவமூர்த்திக்கு ஆச்சர்யமாக இருந்தது.
‘புஷ்பா வீணை வாசிப்பாளா?’ என்று வியந்தான்.
பழைய எண்ணங்களிடையே வட்டமிட்டுக் கொண்டிருந்த குழம்பிய மனத்தில், அந்த புதிய நாதம் புகுந்து ஒரு புத்துயிரைக் கொடுத்தது.
காஞ்சனாவின் இனிய முகம் தோன்றியது. அதே சமயம் அவள் நினைவுக்காக வீணையை மூடி வைப்பதை விட, நாதத்தை எழுப்பிக் கொண்டிருக்க வேண்டும் என முடிவு செய்தான்.
அன்றிலிருந்து கேசவமூர்த்தி இழந்த வாழ்வின் நாதம் மீண்டும் அந்த வீட்டில் புகுந்து ஒலித்தது.
– 1950
– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.
![]() |
கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார். ஆக்கங்கள் உதயசந்திரன்…மேலும் படிக்க... |