மிகநீண்ட மூன்று நாட்கள்
கதையாசிரியர்: வாசுகி நடேசன்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
குடும்பம் 
கதைப்பதிவு: October 6, 2026
பார்வையிட்டோர்: 58
50வது சிறுகதை வெளியீடு – வாசுகி நடேசன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டு!
தமிழ் இலக்கிய உலகில் தன்னுடைய தனித்துவமான கதைகளால் வாசகர்களின் மனதை வருடி வரும் எழுத்தாளர், இன்று தனது 50வது சிறுகதையை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த அரிய சாதனைக்கு எங்கள் இதயங்கனிந்த வாழ்த்துக்கள். இன்னும் பல சிறுகதைகள் உங்கள் எழுத்தில் மலரட்டும், தமிழ் வாசகர்களின் இதயத்தில் என்றும் ஒளிரட்டும்!

ஒரு செவ்வாய்க்கிழமை மாலை எட்டு மணி. நாங்கள் மேசையில் அமர்ந்து
பீட்சா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஆண்ட்ரியாவின் தொலைபேசி ஒலித்தது. ஆண்ட்ரியா என் காதலன்..நாங்கள் ஆறு வருடங்களாகக் காதலித்து வருகிறோம், மூன்று வருடங்களாக போலோனியாவில் ஒரு சிறிய பால்கனியும், அதைவிடச் சிறிய சமையலறையும் கொண்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில்.ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம். இன்னும் எங்களுக்கு கலியாணம் ஆகவில்லை.
என் பெயர் எலினா, எனக்கு முப்பத்து மூன்று வயது, நான் ஒரு பிசியோதிரப்பிஸ்ற் ,. ஆண்ட்ரியாவுக்கு முப்பத்தைந்து வயது, அவன் ஒரு வங்கியில் பணிபுரிகிறான் நாங்கள் சண்டையின்றி வீட்டு வேலைகளைப் பிரித்துக்கொள்கிறோம். சுருக்கமாகச் சொன்னால், ஒரு இனிமையான, அமைதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
அன்று மாலை, திரையில் அந்தப் பெயரைக் கண்டதும், ஆண்ட்ரியா ஒரு விசித்திரமான முகபாவத்தை வெளிப்படுத்தினான். நான் இதற்கு முன் பார்த்திராத ஒரு முகபாவம் அது..அவன் பீட்சாவின் ஒரு துண்டை வேகமாக விழுங்கிவிட்டு,
“அது என் அம்மா” என்றான். எனக்கு ஆண்ட்ரியாவின் அம்மாவைத் தெரியும்,. அவர் பெயர் ரோசாரியா. ஆறு ஆண்டுகளில் நான் அவரைச் சுமார் பத்து முறை மொடெனாவுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்த அவருடைய வீட்டில் சந்தித்திருக்கிறேன்;.அவர் ஒரு கனிவான பெண்மணி; தட்டில் மூன்று மடங்கு உணவைப் பரிமாறிவிட்டு, அதை முழுவதுமாகச் சாப்பிட்டு முடிக்கவில்லை என்றால் கோபப்படும் ரகத்தைச் சேர்ந்தவர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட்ரியாவின் தந்தை இறந்ததிலிருந்து அவர் தனியாக வாழ்ந்து வருகிறார். ரோசாரியா சில சமயம் அதீத சுபாவம் கொண்டவர் ஆனாலும் நல்லவர என்ற படிமமே அவர் பற்றி என் உள்ளத்தில் பதிந்துள்ளது.
அதற்கு ஆண்ட்ரியா பதிலளித்தான்.
“ஹாய் அம்மா!” பிறகு, இரண்டு நிமிடங்களுக்கு அவன், “ஆமாம்… ஆமாம்… நிச்சயமாக… ஆனால் வேண்டாம், என்ன தொந்தரவு… ஆமாம்… நிச்சயமாக இடம் இருக்கிறது… ஆமாம், அம்மா… வியாழக்கிழமை பார்க்கலாம்,” என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தான். கைபேசியைக் கீழே வைத்தபடி.
அவன் என்னைப் பார்த்தான்.அவன் சொன்ன அந்த வாக்கியம், அடுத்த இரண்டு மாதங்களுக்கு எங்கள் வாழ்க்கையையே மாற்றிவிட்டது:
“என் அம்மா நம்மைப் பார்க்க வியாழக்கிழமை வருகிறார்.. அவர் மூன்று நாட்கள் தங்குவார்.”
“மூன்று நாட்களா? எவ்வளவு அருமை!” என்றேன் நான் மகிழ்ச்சியாக, சத்தியமாக. நான் மகிழ்ச்சியாக இருந்தேன். எனக்கு இன்னும் எதுவும் தெரியவில்லை.அந்த ‘மூன்று நாட்கள்’ மனித வரலாற்றிலேயே மிக நீண்ட மூன்று நாட்களாக இருக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை.ஏனென்றால்,, அந்த மூன்று நாட்களும் முடிவடையவே இல்லை.
ரோசாரியா “நான் மதியம் சுமார் பன்னிரண்டு மணிக்கு வந்துவிடுவேன்” என்று சொன்னார். அனால் வியாழக்கிழமை காலை ஒன்பது மணிக்கே அவர் வந்துவிட்டார்.,
என் மாமியாரைப் பற்றிய முதல் பாடம்: அவரைப் பொறுத்தவரை, கால அட்டவணைகள் ஒரு பரிந்துரையே தவிர, விதியல்ல.
நான் இன்னும் குளியல் ஆடையுடனும், ஈரமான தலைமுடியுடனும் இருந்தபோது, அவர் கதவு மணியை அடித்தார்.நான் கதவைத் திறந்தபோது, எனக்கு முன்னால் அவர் நின்றிருந்தார்: எழுபது வயது மூதாட்டி.குள்ளமாகவும்,… கலைத்த நரை முடியுடனுடனும்,… நேர்த்தியான உடையுடனும்…
அவர் கையில் இரண்டு சூட்கேஸ்கள்,,,அவை பிரம்மாண்டமானவை….. மூன்று நாட்களுக்கு….!
“எலினா! அன்பே!”அவர் என்னைக் கட்டிப்பிடித்து, இரண்டு கன்னங்களிலும் முத்தங்கள் கொடுத்தார் ,
என் தலை முதல் கால் வரை அவர் பார்வை ஊர்ந்தது.
நீ ஈரமாக இருக்கிறாய்! காலையில் குளிப்பாயா?அவர் இப்படிக் கேட்டபடி உளநுழைந்தார்
அவருக்கு உதவுவதற்காக அந்த இரண்டு சூட்கேஸ்களில் ஒன்றை எடுக்க முயன்றேன். என்னால் அதைத் தூக்க முடியவில்லை. உள்ளே செங்கற்கள் இருப்பது போல அது கனத்தது.
“ரோசாரியா, என்ன கொண்டு வந்திருப்பார்?”மனதுக்குள் கேட்டுக் கொண்டேன். என் மன ஓட்டத்தைப் புரிந்தவர் போல …
“ம், சில பொருட்கள்தான்…. எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. இரண்டு ஜோடி வசதியான காலணிகளையும், இரண்டு நேர்த்தியான காலணிகளையும் கொண்டு வந்திருக்கிறேன்.”எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ற சில உடைகள்,… என் கனமான இரவு உடையும், என் இலேசான உடையும்.—மருந்துகள்,…. ஓரிரு புகைப்படங்கள், அதோடு வீணாகிவிடக் கூடாது என்பதற்காக வீட்டில் இருந்த கொஞ்சம் உணவையும் எடுத்து வந்தேன். ஓ, என் தலையணையும் கூட. என் தலையணை இல்லாமல் என்னால் தூங்க முடியாது. கூடவே அந்தச் சிறிய,மொக்கா கோப்பி மெசின் …. ஏனென்றால் நீங்கள் இளைஞர்கள் என்ன மாதிரியான காபி போடுவீர்கள் என்று யாருக்குத் தெரியும்?”
மூச்சுவிடாமல் அடுக்கிக்கொண்டே போனார்.
அந்தத் தருணத்தில், நான் இன்னும் புத்திசாலியாக இருந்திருந்தால், எல்லாவற்றையும் புரிந்துகொண்டிருப்பேன்.மூன்று நாட்களுக்கு யார் தங்களுடைய சொந்த தலையணையைக் கொண்டு வருவார்கள்? யார் தங்களுடைய சொந்த மோக்கா மெசினைக் கொண்டு வருவார்கள்?மனதின் ஆழத்தில், சிறு நெருடல் இல்லாமலும் இல்லை..
ஆண்ட்ரியா- அந்தக் கோழை – காலையில், நெற்றியில் ஒரு விரைவான முத்தமிட்டுவிட்டு, “நான் ஏழு மணிக்குத் திரும்பி வந்துவிடுவேன், அன்பே, நீ அம்மாவை மகிழ்வி”என்று கூறிவிட்டு வேலைக்குப் போய்விட்டான்,
“அவரை மகிழ்வி….”அவர் மற்றுமொரு விருந்தாளி என்பது போல…. அது மிகவும் எளிதானது என்பது போல…. கூறியிருந்தான்.
ரொசாரியா மூன்று நிமிடங்களில் எங்கள் சிறிய அப்பாற்மன்றைச் சுற்றிப் பார்த்தார்.
அதன் ஒவ்வொரு அறைக்கும் ஒரு கருத்துரை.
சமையலறையில்: “சின்னப் பொண்ணு, இல்லையா? பாத்திரங்களை எப்படிக் கழுவுற? பாத்திரம் கழுவும் இயந்திரம் இல்லையா? ஓ, இருக்கு. நான் பார்க்கவில்லை. அது நல்ல மறைவா இருக்கு.” வரவேற்பறையில்”அருமை.”கொஞ்சம் வெறுமையாக இருந்தாலும், அழகாக இருக்கிறது. இன்னும் சில புகைப்படங்களை மாட்டினால் நன்றாக இருக்கும்., இன்னும் சில அழகான திரைச்சீலைகளும் போட்டிருக்கலாம்….”
எங்கள் அறையில்: “நீங்கள் ஜன்னலை இப்படி வைத்துக்கொண்டுதான் தூங்குவீர்களா? இரவின் கெட்ட காற்று எல்லாம் உள்ளே வருமே. முதலில் யன்னலின் கண்ணாடிக் கதவை மூட வேண்டும்.”
குளியலறையில்: “எலினா, அன்பே, நீ பயன்படுத்தும் குளியலறைச் சுத்தப்படுத்தி நன்றாக இல்லை. இது கறைகளை நன்றாக நீக்காது.”எந்த வகையான சுத்தப்படுத்தி வாங்க வேண்டும் என்று நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்.”
ஒரு மணி நேரத்திற்குள், என் மாமியார் என் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் குறை கண்டுபிடித்துவிட்டார். அவர், எனக்கு ஒரு பரிசு அளிப்பது போல, அதை இனிமையாகப் புன்னகைத்துக்கொண்டே சொன்னார்
ரோசாரியா மோசமானவர் இல்லை..தனக்கு எல்லாவற்றையும் செய்யத் தெரியும் என்று அவர் ஆழமாக நம்பினார். மற்ற எல்லோரையும் விட
சிறப்பாக.,,,, இப்படித்தான் அவரைப்புரிந்து கொள்ள வேண்டும்….இப்போது அந்த ‘மற்றவர்’ என்பது நானாகவே இருந்தேன்.
சொல்லப்போனால், முதல் நாள் அவ்வளவு மோசமாகப் போகவில்லை.
‘என்ன ஒரு இனிமை, அவர் பார்க்க வந்துவிட்டார்’ என்ற மனநிலையில்தான் நான் இன்னும் இருந்தேன். ரொசாரியா கேட்காமலேயே மதிய உணவு சமைத்தார்.”இந்த இருவரும் எப்படித்தான் பிழைக்கிறார்களோ?” என்று எண்ணிடபடி பெருமூச்சுடன், அவர் சமைக்கத் தொடங்கினார்.
லசானியாவுக்கான மாத்தட்டை கடையில் வாங்காமல் தமது கைகளாலேயே தயாரித்தார்..என் சிறிய சமையலறையில், அவர் மாவைப் பிசைந்து, அதன் எல்லாப் பரப்புகளிலும் மாவு தூவினார்.
அவர்து தயாரிப்பில் அவை மிகவும் சுவையாக இருந்தன என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.நான் இதுவரை சாப்பிட்டதிலேயே ரொசாரியாவின் லசானியாவே மிகச் சிறந்ததாக இருந்தது. பிரச்சனை லசானியாவில் இல்லை. பிரச்சனை மற்ற எல்லாவற்றிலும் இருந்தது
நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, என் மாமியார் தன் விசாரணையைத் தொடங்கினார். விசாரணை கனிவானதுதான், ஆனாலும் அது ஒரு விசாரணைதானே.
“சரி, எலினா. நீயும் ஆண்ட்ரியாவும். ஆறு வருடங்கள் ஒன்றாக இருக்கிறீர்கள்.”
“அப்படியென்றால், உங்களுக்கு எப்போது திருமணம்?”
“ரோசாரியா, (மாமியார் மாமனாரைப் பெயர் சொல்லி அழைப்பது இத்தாலிய மக்களின் வழமை) எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. நாங்கள் இப்படியே நன்றாக இருக்கிறோம்.” என்றேன் நான்,
“நிச்சயமாக, நிச்சயமாக. அவசரம் ஒன்றும் இல்லை. ஆனால் காலம் கடந்து போகும், தெரியுமில்லையா?” நான் உன் வயதில் இருந்தபோது, ஆண்ட்ரியா ஏற்கனவே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான். நீ குழந்தைகளைப் பற்றி யோசிக்கிறாயா?”
நான் எதுவும் சொல்லவில்லை.
“நான் சும்மாதான் கேட்கிறேன். ஒரு தாய் கேள்விகள் கேட்கலாம், தானே? எப்படியிருந்தாலும், நான் தயாராக இருக்கிறேன்.
பேரன் பேத்தி பிறந்தால், நான் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு வருவேன். சொல்லப்போனால், ஒருவேளை நானே முதலில் வந்து உதவுவேன்.”
“நான் தான் முதலில் வருவேன்” என்ற . அந்த இரண்டு வார்த்தைகளையும் நான் அந்த நேரத்தில் கவனிக்கவில்லை.இருப்பினும், அதன் பிறகு, நான் கேட்காமலே ஓர் அபாய மணியைப் போல அவை மீண்டும் மீண்டும் என் நினைவுக்கு வந்தன.மதியம், ரொசாரியா சமையலறையைச் சுத்தம் செய்தார். அதாவது, அவர் எல்லாவற்றையும் இடம் மாற்றினார். தட்டுகள் இருந்த இடத்தில் கண்ணாடிக் குவளைகளை வைத்தார்.பானைகளும் சட்டிகளும் மற்றொரு அலமாரியில் இருந்தன. மசாலாப் பொருட்கள் அகர வரிசைப்படி வைக்கப்பட்டிருந்தன. நான் ஒரு குவளையை எடுக்கப் போனபோது, அது கிடைக்கவில்லை.அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன், “நான் அவற்றை சிங்குக்கு அருகில் வைத்தேன், அதனால் இப்போது மிகவும் வசதியாக இருக்கிறது! பார்த்தாயா, எவ்வளவு நன்றாக உணர்கிறேன்? முன்பு, எல்லாம் ஒழுங்கற்றுக் கிடந்தது,” என்றார்.ஒழுங்கற்றது-
நான் மூன்று வருடங்களாக வசித்த வந்த வீட்டின் ஒழுங்கைக், கண்ணை மூடிக்கொண்டு ஒழுங்கற்றது என்று கூறிவிட்டார்… நான் புன்னகைத்தேன். “நன்றி, ரொசாரியா” என்றேன்.
அப்போது நான், “இது வெறும் மூன்று நாட்களுக்குத்தானே.. ” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ஆ, நான் எவ்வளவு அப்பாவியாக இருந்திருக்கிறேன்.அன்றைய மாலை,…. அந்த முதல் மாலையில்,… முதல் சிறிய மோதலும் நிகழ்ந்தது.
சிறியதாக இருந்தாலும், அது பல உண்மைகளை வெளிப்படுத்தியது.பத்து மணிக்கு நான் பல் துலக்குவதற்காகக் குளியலறைக்குச் சென்றேன், ரோசாரியா கதவு வரை என்னைப் பின்தொடர்ந்து வந்தார்.எலினா அன்பே, நீ குளிப்பதற்கு முன் பல் துலக்குவாயா அல்லது குளித்த பின் துலக்குவாயா? “
இதில் என்ன அர்த்தமிருக்கிறது..?
“நீ மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உன் பல் துலக்கும் தூரிகையை மாற்றுவாயா?உங்களுடையது எனக்குச் சற்றுப் பழையதாகத் தெரிகிறது. நாளை உனக்கு ஒரு புதியது, தரமான ஒன்று வாங்கித் தருகிறேன்.”
இரவு பத்து மணிக்கு, குளியலறையில், என் மாமியார் எனக்கு வாய்ச் சுகாதாரம் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
“குட்நைட், ரொசாரியா,” என்று சொல்லிவிட்டு, தேவைக்கு அதிகமான விசையுடன் குளியலறைக் கதவை மூடினேன்.
முதல் நாள் முடிந்தது.இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. அல்லது, குறைந்தபட்சம், நான் அப்படித்தான் நினைத்தேன்.
மூன்றாவது நாள்…. திட்டமிட்டபடி, ரொசாரியா மீண்டும் புறப்பட வேண்டிய நாள் அது..
அன்று காலை நான் ஒரு விசித்திரமான மகிழ்ச்சி உணர்வுடன் கண்விழித்தேன். இதனால் நான் ரொசாரியாவை நேசிக்கவில்லை என்று அர்த்தமாகாது.
ஆனால், எங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடும் ஒருவருடன் மூன்று நாட்கள் இருப்பது சோர்வளித்ததுது.
.என் வீடு, என் சமையலறை, என் கண்ணாடிக்குவளைகள் எல்லாம் அவற்றிற்குரிய இடத்தில் மீண்டும் வைக்கப்டுவதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை.காலை உணவின்போது, மிகுந்த அமைதியுடன், நான் அந்த முக்கியமான கேள்வியைக் கேட்டேன்:
“சரி, ரொசாரியா, இன்று எத்தனை மணிக்குக் கிளம்புகிறீர்கள்? நாங்கள் உங்களை ரயில் நிலையத்திற்குக் கொண்டுபோய் விடட்டுமா?”
அவர், நிமிர்ந்து கூடப் பார்க்காமல், தன் காபியைக் கலக்கிக்கொண்டே, “ஆ, உங்களுக்குத் தெரியுமா, நான் அதைப் பற்றி யோசித்துக்கொண்டு இருக்கிறேன். இங்கே நான் இன்னும் சில வேலைகளைச் சரிசெய்ய வேண்டியிருக்கிறது,” என்றார்
திரைச்சீலைகளை மாற்ற வேண்டும் அந்த அருமையான குளியலறை சோப்புத்தூளை வாங்க உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், நான் இன்னும் சில நாட்கள் தங்குகிறேன்.என்வீட்டில் நான் என்ன செய்வது. அங்கு நான் தனியாகத்தானே இருக்கிறேன்.”
நான் ஆண்ட்ரியாவைப் பார்த்தேன். ஆண்ட்ரியா தன் காபியைப் பார்த்தான்..அந்தத் தருணத்தில், ஆண்ட்ரியா அவனது காபியினை உற்ற தோழியாக நினைத்தான் போல …உலகில் வேறு எதற்காகவும் அவன் தன் கோப்பையிலிருந்து தலையை நிமிர்ந்துப் பார்க்கவில்லை…
“நிச்சயமாக, ரொசாரியா,” என்றேன் நான்.
“பிரச்சனையில்லை” என்று முனுமுனுத்து வைத்தேன். “நான் என்ன சொல்லியிருக்க வேண்டும்?” இல்லை, ரொசாரியா, போய்விடு” என்றா? என்னால் முடியாது.
தன் துணையின் தாயிடம் யாராலும் இதைச் சொல்ல முடியாது. நாகரிக விதிகள் அவர்களைச் சிக்கவைத்துவிடும். என் கருத்துப்படி, அவருக்கும் அது நன்றாகவே தெரிந்திருந்தது.
ரொசாரியா குளியலறைக்குச் சென்றபோது, நான் ஆண்ட்ரியாவிடம் திரும்பி, கோபமாக, “சில நாட்களா? ஆண்ட்ரியா! நீ மூன்று நாட்கள் என்றுதானே சொன்னாய்!” என்று கிசுகிசுத்தேன்
வீட்டுப்பாடத்தைச் செய்யாத குழந்தையின் முகபாவத்துடன் அவன் சொன்னான்: “கண்ணே, நான் என்ன செய்வது? அவர் என் அம்மா. அவர் தனியாக இருக்கிறார். இன்னும் சில நாட்கள்தானே , என்று கூறியவன் வேறு கேள்விகளுக்கு இடமளிக்காது அந்தைடத்தைவிட்டு அகன்றுவிடுகிறான்.
ரொசாரியா அந்த ‘சில நாட்களை’ ஒரு வாரமாக மாற்றினார். பிறகு இரண்டு வாரங்களாக. பிறகு ஒரு மாதமாக. ஆனால், எல்லாம் ஒரே நேரத்தில் நடந்துவிடவில்லை..அவர் மிகவும் புத்திசாலியாக இருந்தார்.
சிறிய சிறிய அடிகளாக முன்னேறினார். “நான் ஞாயிற்றுக்கிழமை வரை தங்குவேன்.”பிறகு ஞாயிற்றுக்கிழமை அன்று: “சரி, இப்போது ஞாயிற்றுக்கிழமை ஆகிவிட்டது. போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் திங்கட்கிழமை அன்று கிளம்பிவிடுவேன்.”பிறகு திங்கட்கிழமை அன்று: “ஆ, ஆனால் புதன்கிழமை சந்தை இருக்கிறதே, நான் உனக்கு சில நல்ல திரைச்சீலைகள் வாங்க நினைத்தேன், புதன்கிழமை வரை காத்திருக்கிறேன்.”இப்படியாக, ஒன்றன்பின் ஒன்றாகச் சாக்குப்போக்குகளைச் சொல்லி, என் மாமியார் ஒருபோதும் வெளியேறாத விருந்தாளியைப் போல என் வீட்டில் குடியேறிவிட்டார்.இரண்டு வாரங்களுக்குப் பிறகு, எங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. அதுவும் நல்ல விதமாக அல்ல.
அலாரம் இருந்து ஆரம்பிக்கலாம்…. நானும் ஆண்ட்ரியாவும் காலையில் அமைதியாக எழுந்திருப்போம். மௌனமாகக் காபி அருந்துவோம், பிறகு இருவரும் அவரவர் வேலைகளுக்குத் தயாராவோம்
ரொசாரியா, அப்படி இல்லை.அவர் 6:30 மணிக்கு எழுந்திருப்பார். ஏழு மணிக்கு, நான் அரைத் தூக்கத்தில் சமையலறைக்குள் காலடி எடுத்து வைக்கும் போது, அவர் ஏற்கெனவே அங்கே இருப்பார்.அழகாக உடையணிந்து, ஒப்பனை செய்துகொண்டு, வானொலியை ஒலிக்கவிட்டபடி… , என்னிடம் சொன்னார்: “காலை வணக்கம், உறங்கும் அழகியே! நான்உனக்குக் காபி போடுகிறேன்!”ஆனால், அதிகமாகத் தூங்குவது உங்கள் இரத்த ஓட்டத்திற்குத் தீங்கானது என்பது உங்களுக்குத் தெரியுமா?
காலை ஏழு மணிக்கு.எழுவதற்கும் இரத்த ஓட்டத்துக்கும் முடிச்சுப்போடுகிறார்…!
என் ஒழுங்கில் இருந்த வீட்டைத்தான் எப்படியெல்லாம் மாற்றிவிட்டார்!.ரொசாரியா ஒருபோதும் சும்மா உட்கார்ந்ததில்லை. ஏற்கனவே சுத்தமாக இருந்த பொருட்களையும் அவர் சுத்தம் செய்தார். பொருட்களை நகர்த்தினார். துவைக்கத் தேவையில்லாத திரைச்சீலைகளையும் துவைத்தார்.ஒரு நாள் நான் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்தபோது, சோபாவைக் காணவில்லை.
அதன் பின்புறத்தைச் சுத்தம் செய்வதற்காக அதை நகர்த்திய அவர், அது வரவேற்பறையின் மறுபுறத்தில் வைத்தால் அழகாக இருக்கும் என முடிவு செய்தார்.மற்றொரு நாள், அவர் என்னுடைய சலவைத்தூளைத் தூக்கி எறிந்துவிட்டு, அதற்குப் பதிலாகத் தன்னுடையதை எடுத்து வைத்தார்.மற்றொரு நாள், அவர் சலவை செய்யத் தேவையில்லாத உள்ளாடைகள் உட்பட, என்னுடைய எல்லா உடைகளையும் சலவை செய்தார். அவற்றை அவருக்கே உரிய பாணியில், ஒரு ‘அழகான’ முறையில் மடித்துவைத்தார்; அதை மீண்டும் எப்படிச் அயன் பண்ணுவது என்று எனக்குத் தெரியவில்லை.
.மூன்று வாரங்களுக்குப் பிறகு, ரொசாரியா ஏற்கெனவே போலோனியாவில் பாதிப் பேருடன் நட்பாகியிருந்தார். கீழ்த்தளத்தில் இருக்கும் மரியாவுடனும். தெரு மூலையில் காய்கறிக் கடை வைத்திருக்கும் என்ரிக்கோவுடனும். தோட்டத்தில் நான் சந்தித்த பேர்லாவுடனும், தரைத்தளத்தில் வசிக்கும் சராவுடனும்… இன்னும் பலர் அவரது நட்புவட்டத்துக்குள், இந்த நண்பர்கள் அவ்வப்போது என் வீட்டிற்குக் காபி அருந்த வருவார்கள்.ஒரு நாள் மதியம் நான் வேலையிலிருந்து மிகவும் களைப்புடன் திரும்பி வந்தேன்.
எனக்கு அறிமுகமில்லாத நான்கு பெண்கள் என் வரவேற்பறையில் அமர்ந்து சிரித்துக் கொண்டே என் பிஸ்கட்டுக்களைச் சாப்பிட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன்.ரொசாரியா என்னை அறிமுகப்படுத்தினார்: “பெண்களே, இவள் எலினா, என் மகனின் காதலி! எலினா, வா, உட்கார், பிஸ்கட் சாப்பிடு!” என் பிஸ்கட்டுகள்….என் வரவேற்பறையில்…. நான் ஒரு விருந்தாளி என்பது போல எனக்கு வழங்கப்பட்டது. ஆனால், அந்த நண்பர்கள் விஷயம் மோசமானதாக இல்லை.
மிக மோசமான விஷயம் அந்தத் தொலைபேசிச் சம்பவம்தான்…ரொசாரியா, அரங்கு ஒன்றில் நின்று பலர்முன் பேசுவது போல மிக உரத்த குரலில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவருக்குக் காது சரியாகக் கேட்கவில்லையா அல்லது தன் நண்பர்கள் காது கேளாதவர்கள் என்று அவர் நினைத்தாரா…என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் அழைப்பு எடுக்கும் போது, அந்தக் கட்டிடம் முழுவதற்கும் அவர் குரல் கேட்கும். அவர் . ஒரு நாளில் பலதடவைகள் போன் பண்ணுவார்,,எப்போதும்.அவருடைய சகோதரிகளுக்கு, கிராமத்தில் உள்ள அவருடைய நண்பர்களுக்கு, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு உறவினருக்கு (பன்னிரண்டு மணி நேர நேர வித்தியாசம் இருப்பதால், சில சமயங்களில் அதிகாலை மூன்று மணிக்கு).
ஒரு நாள் மாலை, நானும் ஆண்ட்ரியாவும் ஒரு திரைப்படம் பார்க்க முயன்று கொண்டிருந்த போது,அவர் ‘ரீத்தா’ என்ற தன் நண்பியிடம் எங்கள் வாழ்க்கையின் எல்லா விவரங்களையும் சொல்வதைக் கேட்டோம்:நாங்கள் என்ன சாப்பிட்டோம், ஆண்ட்ரியா எவ்வளவு சம்பாதிக்கிறான்.. எம் இருவருக்கும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வமில்லாதிருப்பது… அது அவருக்கு கவலைதருவது என எல்லாவற்றையும் உழறிக்கொட்டிக்கொண்டிருந்தார்….
உணவு. விடயத்திலும் எத்தனையோ சங்கடங்கள்…அவர் வந்தபின்பு
குளிர்சாதனப்பெட்டி எப்போதும் நிரம்பி வழியும். ஒவ்வொரு வேளை உணவின்போதும் அதே காட்சிதான்: “சாப்பிடு, எலினா, நீ ஒல்லியாக இருக்கிறாய். இன்னும் கொஞ்சம்.”
“என்ன, உனக்குப் பிடிக்கவில்லையா? இதை நான் குறிப்பாக உனக்காகத்தான் செய்தேன். இன்னும் கொஞ்சம் தான்.”
ஒரு மாதத்தில் என் எடை மூன்று கிலோ கூடியது. அதன் பிறகு என் கால்சட்டையின் ஜிப்பை மாட்ட முடியவில்லை.நான் ரோசாரியாவிடம் சொன்னபோது, அவர் புன்னகைத்து, “பார்த்தாயா? இப்போது நீ நன்றாக இருக்கிறாய்! முன்பு, நீ ஒரு பேயைப் போல இருந்தாய்!” என்றார் பார்க்கவேண்டுமே…
இரவுகளில் படுக்கையில், நான் ஆண்ட்ரியாவுடன் தீவிரமாக விவாதிக்கத் தொடங்கி விட்டேன்… ரொசாரியா இப்போது நிரந்தரமாகத் தூங்கும் இடம், எங்களுடைய அறைக்குச் சரியாக அடுத்திருந்தது.இடைச் சுவர் மிகவும் தடிமனற்று இருந்தால் வாய்விட்டுக் கதைக்கவும் முடியாது கிசுகிசுப்பாகவே கதைக்க வேண்டி இருந்தது.
“ஆண்ட்ரியா. என்னால் இதை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது.”.”ஆண்ட்ரியா. அவர் என் உள்ளாடையை இஸ்திரி செய்தார்.”
எலினா அது விசித்திரமாகத்தான் இருக்கிறது. ஆனால் அம்மாவுக்கு. உன் மீது பாசம் அதிகம் …அவர் உன்னை நேசிக்கிறார்
“உள்ளாடை. விசயம் மிகவிம் அந்தரங்கமானது ஆண்ட்ரியா! இது வேடிக்கை இல்லை!,இது எம்முடைய வீடு! அவரிடம் நீ இது பற்றிப் பேச வேண்டும்” …நான் அழுத்திக் கூறுகிறேன் . அவன் பெருமூச்சு விட்டான்., “நீ சொல்வது சரிதான், அன்பே. நான் நாளை அம்மாவுடன் பேசுகிறேன். சத்தியமாக,” என்றான். நாளை….. ஆண்ட்ரியாவின் அந்த நாளை ஒருபோதும் வரவில்லை.ஆண்ட்ரியாவைப் பற்றி நான் சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும், ஏனென்றால் இந்தக் கதைக்கு அவன்தான் முழுப் பொறுப்பு. ஆண்ட்ரியா ஒரு தன்னம்பிக்கை மிக்க மனிதந்தான் ஆனால்….
தன் தாயுடன் முன், முற்றிலும் வேறு ஒரு மனிதனாக மாறிவிடுவான்.வாழ்க்கையில், அவன் ஒரு வங்கியில் பணிபுரிகிறான், மற்றவர்களின் பணத்தை நிர்வகிக்கிறான், தினமும் பக முக்கியமான முடிவுகளை எடுக்கிறான்.
ஆனால் ரோசாரியாவின் முன்னால், அவன் மீண்டும் ஒரு குழந்தையாக மாறிவிடுவான். தன் தாயைக் கோபப்படுத்திவிடுவோமோ என்று பயப்படும் ஒரு எட்டு வயதுச் சிறுவனாக மாறுவிடுவான்
ஒரு நாள் மாலை நான் இதை அவனுக்குச் சுட்டிக்காட்டினேன்.
”ஆண்ட்ரியா, உனக்குப் புரிகிறதா? நீ வேலையிடத்தில் முப்பது பேருக்குப் பொறுப்பாக இருக்கிறாய். அப்படியிருக்க, உன் அம்மாவை வீட்டுக்குப் போகச் சொல்ல உன்னால் முடியாதா?”
அவன், மிகவும் தீவிரமாக: “எலினா, உனக்குப் புரியவில்லை. நான் சிறுவனாக இருந்தபோது என் அம்மா எப்படிப்பட்டவராக இருந்தார் என்பது உனக்குத் தெரியாது.அம்மா எனது படிப்பிலும் உடல் ஆரோக்கியத்திலும் முழுமையான அர்பணிப்போடு இருந்து நல்ல ஒழுக்கத்துடன் வளர்த்ததால்தான் நான் இன்று நல்ல தொழிலில் நல்ல நிர்வாகியாக இருக்கிறேன்..”
“ஆனால் அவள் உன் தாய்! நீ அவரைக் காதலிக்கிறாய்!”
“நிச்சயமாக நான் அவளைக் காதலிக்கிறேன்! அதனால்தான் என்னால் அவரிடம் பேசமுடியாது!”
நான் ஆண்ட்ரியாவை அவன் தாயுடன் குறைந்தபட்சம் ஒரு முறையாவது பேச வைக்க முயன்றேன். அவனும் உண்மையில் ஒரு முறை முயற்சித்தான்.மதியம் முழுவதும் அவன் தனக்குத்தானே சொற்றொடர்களை முணுமுணுத்துக்கொண்டு, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தயாராவதை நான் பார்த்தேன்.
அவன் வரவேற்பறைக்குள் சென்று, தன் தாயின் அருகில் அமர்ந்து, “அம்மா, கேளுங்க, நானும் எலினாவும் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல நினைத்தோம்…” என்றான்.அவன் பேசி முடிப்பதற்குள் ரோசாரியா, “ஆ, நீ சொன்னது நல்லது!” என்றார்.நான் உங்களிடம் இன்னொன்றும் சொல்ல விரும்பினேன்: நான் திருமதி மீரியத்தை மூன்றாவது மாடியில் சந்தித்தேன், பாவம்.அவள் மிகவும் தனிமையாக உணர்கிறாள், அதனால் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவிற்கு அவள் வரலாம் என்று அவளிடம் சொன்னேன். நான் ஏற்கெனவே கோழிக்கறி வாங்கிவிட்டேன். நீ என்ன சொல்ல நினைத்தாய், அன்பே?
ஆண்ட்ரியாவின் வாய் அடைத்துக்கொண்டது “…ஒன்றுமில்லை, அம்மா. நேற்றைய லசானியா மிகவும் சுவையாக இருந்தது.” அவன் வாலைச் சுருட்டிக்கொண்டு அறைக்குள் திரும்பி நடந்து செல்வதை நான் பார்த்தேன்.
அப்போது நான் ஒரு விஷயத்தை உணர்ந்தேன்: இந்தச் பிரச்சினையை யாராவது தீர்க்க வேண்டுமென்றால், அது என்னால்தான். முடியும்.
ஆண்ட்ரியாவால் ஒருபோதும் முடிந்திருக்காது.
பிரச்சனை என்னவென்றால்:” பாவப்பட்ட, தனிமையான வயதான பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றிய கொடியவள்’ என்ற பெயரைப் பெறாமல், ஒரு மாமியாரை எப்படி வெளியே அனுப்புவது?என்பதுதான் அதுதான் ஆபத்தாக இருந்தது. நான் ரொசாரியாவிடம், “நீங்கள் இங்கிருந்து போக வேண்டும்” என்று சொல்லியிருந்தால், நானே ஒரு அரக்கியாக மாறியிருப்பேன்., அந்தத் தருணத்தில், எனக்கும் அவனுடைய அம்மாவுக்கும் இடையில், ஆண்ட்ரியா எந்தப் பக்கம் நிற்பான் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. பொறுமையின் எல்லைக்குச் செல்வதற்கு முன், நான் ஏதாவது . முயற்சி செய்ய வேண்டும் என முடிவெடுத்து உண்மையாகவே முயற்சி செய்தேன்.நான் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில்தான் முடிந்தது.
ஒரு நாள் நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “ரோசாரியா, உங்களுக்குத் தெரியுமல்லவா, நானும் ஆண்ட்ரியாவும் மாலை நேரங்களில் தனியாகச் சிறிது நேரம் செலவிடுவது வழக்கம்” என்று
சொன்னேன்.இது நமக்கான தருணம்.” அவர் மாலையில் தன் அறையினுள் ஓய்வெடுக்கலாம் என்பதை நான் அவருக்கு மென்மையாகத் தெரிவிக்க விரும்பினேன். அவர் புரிதலுடன் தலையசைத்தார்: “நிச்சயமாக, அன்பே!”
நீங்கள் சொல்வது சரிதான்! இன்றிரவு நான் உங்களைத் தனியாக விட்டுவிடுகிறேன்.” என்று கூறிவிட்டு, மாலையில் அவர் எங்களுடன் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்.
ஒவ்வொரு காட்சி பற்றியும் உரக்கக் கருத்துரைத்தார் – அவர் மனனிலையில் சொல்வதானால், தான் தனக்குள் கதைப்பதால் எங்களுக்குத் தொந்தரவு இல்லை என்று கருதினார்.
இரண்டாவது முயற்சியாக: வீட்டிற்கு வெளியே அவருக்குச் செய்வதற்கு ஏதாவது ஒன்றைக் கொடுப்பதுபற்றி. நான் நினைத்தேன்: அவருக்கு ஒரு செயலைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், அவர் சில மணிநேரம் வெளியே இருப்பார் என்னால் நிம்மதியாக மூச்சுவிட முடியும்
.நகராட்சி நீச்சல் குளத்தில் பெண்களுக்கான ஒரு அருமையான வாட்டர் ஏரோபிக்ஸ் வகுப்பு பற்றி அவரிடம் சொன்னேன். ரோசாரியா அதில் மிகவும் மகிழ்ச்சியுடன் சேர்ந்துகொண்டார்..பிரச்சனை என்னவென்றால், அவர் என்னையும் கூடவே அழைத்துச் செல்ல ஆரம்பித்ததுதான். “எலினா, உனக்கும் நான் பணம் செலுத்தியுள்ளேன்! நாம் ஒன்றாகப் போகலாம்! அது உன் இரத்த ஓட்டத்திற்கு நல்லது!”
அவரை இரண்டு மணி நேரம் அனுப்பிவிடுவதற்குப் பதிலாக,சனிக்கிழமை காலைகளில், நான் என் மாமியாருடனும், எழுபது வயதுடைய எட்டு மூதாட்டிகளுடனும் நீச்சல் குளத்தில் தண்ணீரில் கைகளை நீட்டி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தேன்.
மூன்றாவது, மிகவும் நம்பிக்கையற்ற முயற்சிதான்: நான் ஆண்ட்ரியாவை ஒருவித ‘நாடகத்தில்’ ஈடுபடுத்த முயன்றேன். எங்களிருவருக்கும் மாலையில் மிகவும் தீவிரமான மற்றும் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய ஒரு கடமை. இருப்பது போல் பாசாங்கு செய்த் தொடங்கினோம்.
ஒவ்வொரு மாலையும் நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லத் தொடங்கினோம்.
அதனால் ரோசாரியா சலிப்படைந்து ஒருவேளை வீட்டிற்குச் சென்றுவிடக்கூடும் . நாங்கள் ஒரு போலியான மாலை நேர சமையல் வகுப்பை உருவாக்கினோம்.மூன்று மாலைப்ப் பொழுதுகள் நாங்கள் வகுப்புக்குச் செல்வது போல் பாசாங்கு செய்து வீட்டை விட்டு வெளியே சென்றோம். சிறிது நேரம் தனியாக இருப்பதற்காக நாங்கள் பீட்சா சாப்பிடவோ அல்லது நடைப்பயிற்சி செய்யவோ வெளியே சென்றோம். அது பலனளித்ததா?
நான்காவது நாள் மாலையில் ரொசாரியா எங்களிடம், “இந்தச் சமையல் வகுப்பு மிகவும் அருமையாக இருக்கிறது! நானும் சேர்ந்துவிட்டேன்! நாங்கள் மூவரும் நாளை செல்வோம்!” என்று சொன்னார்.,
அப்படி ஒரு பாடநெறியே இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. பெரும் தர்மசங்கடமாக இருந்தது.ரொசாரியாவுக்குக் கோபம் கூட வரவில்லை, அவர் சாதாரணமாக, “ஓ, நீ தனியாக இருக்க விரும்பினாயா? அதைச் சொன்னால் போதாதா!” என்றார். அது அவ்வளவு எளிதான காரியம் என்பது போல…
எல்லா வழிகளும் ஒரே சுவருக்குத்தான் இட்டுச் சென்றன.ரொசாரியா நீரைப் போன்றவர்: அவறூக்கு முன்னால் எந்தத் தடையை வைத்தாலும், அதை ஒரு புன்னகையுடன் கடந்து சென்றுகொண்டே இருந்தார்.
என் சொந்த வீட்டிலேயே நான் ஒரு கைதி போல உணரத் தொடங்கினேன். சரியாக இரு மாதங்கள் கழிந்தன., என் பொறுமையின் எல்லையே அதுதான்.
அது ஒரு சனிக்கிழமை., நான் மிகவும் விரும்பிய ஒன்றை ஏற்பாடு செய்திருந்தேன்: எனக்கும் ஆண்ட்ரியாவுக்கும் மட்டும் வீட்டில் ஒரு இரவு உணவு. ஒரு காதல் இரவு உணவு….நாங்கள் தனியாக ஒரு நிமிடம் செலவழித்து வாரங்கள் ஆகிவிட்டன, எம்மிருவருக்குமான தனிமை எனக்குக் காற்றைப் போலத் தேவைப்பட்டது.நான் நல்ல ஒயினை வாங்கியிருந்தேன், எல்லாவற்றையும் தயார் செய்திருந்தேன், மெழுகுவர்த்திகளைக்கூட வாங்கியிருந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் ரொசாரியாவுக்கு எச்சரித்திருந்தேன்: “ரொசாரியா, ஆண்ட்ரியாவும் நானும் சனிக்கிழமை இரவு உணவு சாப்பிடுகிறோம். அந்த இரவு எம் இருவருக்குமானது. நீங்கள் உங்கள் அறையில் ஓய்வெடுக்கலாம், சரியா?”
அதற்கு அவர்: “நிச்சயமாக, அன்பே! ஒரு காதல்மயமான மாலை! எவ்வளவு அருமை! நான் நிச்சயமாக உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன். நான் இங்கே இல்லாதது போல் பாசாங்கு செய்கிறேன்.” என்றார்,
“சனிக்கிழமை இரவு. மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருந்தன.ஒயின் ஊற்றப்பட்டது. நானும் ஆண்ட்ரியாவும் இறுதியாகத் தனியாக, நேருக்கு நேர் அமர்ந்தோம். ஒரு மாதத்தில் எங்களின் முதல் காதல் தருணம். ரோசாரியாவின் படுக்கையறைக் கதவு திறந்தது.அவர் ஒரு மேலங்கியை அணிந்தபடி வெளியே வருகிறார். “மன்னிக்கவும், குட்டிப் புறாக்களே, நான் ஒரு குவளை தண்ணீர் எடுத்துவரப் போகிறேன். நான் இங்கே இல்லை, நான் உங்களைக் கவனிக்காதது போல் பாசாங்கு செய்யுங்கள்.” அவர் சமையலறைக்குள் சென்று தண்ணீரை எடுத்து வருகிறார்.படுக்கையறைக்குத் திரும்பிச் சென்றவர் நிற்கிறார். மேசையைப் பார்க்கிறார். “ரொம்ப அருமை. ஆனால் சிவப்பு ஒயினுடன் மீனா? இல்லை, அன்பே. உனக்கு வெள்ளை ஒயின்தான் தேவை.”இரு, குளிர்சாதனப் பெட்டியில் ஒரு பாட்டில் இருக்கிறது.”
“ரோசாரியா, பரவாயில்லை, நிஜமாகவே-“
நான் தடுக்க முயலுகிறேன்.
“முடியவே முடியாது! இரண்டு நிமிடங்கள்!” அவர் சமையலறைக்குச் செல்கிறார். வெள்ளை ஒயினுடன் திரும்பி வருகிறார்.
இரவு 10:55 மணி
“மூடியைத் திற. ஊற்று. சரி. இப்போது பரவாயில்லை. அப்புறம், மன்னிக்கவும் எலினா, ஆனால் காகித மேசை விரிப்புக்கு இவ்வளவு அருகில் மெழுகுவர்த்திகள்? எல்லாம் தீப்பிடித்துவிடும்.””இரு, நான் அவற்றை நகர்த்துகிறேன்.” அவர் மெழுகுவத்திகளை நகர்த்தினார். “அதோ. இப்போது சரி. இந்த மாலையை மகிழ்ச்சியாகக் கழி., நான் இங்கே இல்லை.” இறுதியாக அவர் அறைக்குத் திரும்பினார்.நானும் ஆண்ட்ரியாவும் மௌனமாக இருந்தோம். அந்தக் காதல் மாலை பாழானது. அந்தத் தருணம் பாழானது.மெழுகுவர்த்திகள் நகர்த்தப்படுவதையும், ஒயின் மாற்றப்படுவதையும், எனது இனிமையான மாலைப் பொழுது புன்னகையுடன் துண்டு துண்டாகச் சிதைக்கப்படுவதையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எனக்குள் ஏதோ ஒன்று பொங்கி எழுவதை உணர்ந்தேன். அது வெறும் எரிச்சல் அல்ல. அது உண்மையான கோபம். என் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.
நான் ஆண்ட்ரியாவிடம், தாழ்ந்த ஆனால் மிகவும் உறுதியான குரலில் சொன்னேன்: “நாளை அவர் கிளம்புகிறார். ஒன்று அவர் போக வேண்டும், அல்லது நான் போக வேண்டும். நீயே முடிவு செய்.”இரண்டு மாதங்களில் நான் தீவிரமாக இருக்கிறேன் என்பதை ஆண்ட்ரியா முதன்முறையாகப் புரிந்துகொண்டான். அவன் தலையசைத்தான். “நீ சொல்வது சரிதான். நான் நாளை அம்மாவிடம் பேசுகிறேன். நிஜமாகவே. சத்தியமாக.”இந்த முறை, நல்லவேளையாக, அவன் உண்மையாகவே முயற்சி செய்தான். ஆனால், நாங்கள் நினைத்தபடி காரியங்கள் நடக்கவில்லை.அடுத்த நாள் காலை, ஞாயிற்றுக்கிழமை, நான் எதையாவது செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் எழுந்தேன். நான் சரியாகத் தூங்கவில்லை, நான் பேசவேண்டியவை என் மனதில் தயாராக இருந்தன..ஆண்ட்ரியாவால் சமாளிக்க முடியவில்லை என்றால், நான் பேசியே ஆகவேண்டும். ஆனால் நான் சமையலறைக்குள் நுழைந்தபோது, ரொசாரியா அங்கே இல்லை. விசித்திரமாக இருக்கிறது.
ரோசாரியா எப்போதும் ஏழு மணிக்குச் சமையலறையில் இருப்பார். நான் கடிகாரத்தைப் பார்த்தேன்: மணி எட்டரை. விருந்தினர் அறைக் கதவு இன்னும் மூடப்பட்டிருந்தது.நான் மெதுவாகத் தட்டினேன். பதில் இல்லை. நான் கதவைத் திறந்தேன். ரோசாரியா, தன் மேலாடையுடனேயே, ஒரு பழைய புகைப்படத்தைக் கையில் பிடித்தபடி கட்டிலில்
அமர்ந்திருந்தார்.நான் உள்ளே வந்ததை அவர் கவனிக்கவில்லை, நான் இதற்கு முன் பார்த்திராத ஒன்றைக் கண்டேன்: ரோசாரியா அழுது கொண்டிருந்தார்.அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட, மௌனமாக அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவாறு இருந்தார். “ரோசாரியா என்ன நடக்கிறது?”அவர் சட்டென்று திரும்பி, தன் கண்களை வேகமாகத் துடைத்துக்கொண்டு, புன்னகைக்க முயன்றார்.
“ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை, அன்பே. மன்னிக்கவும்.”
ஒரு கிழவியின் உளறல்.
“இப்போது நான் எழுந்து சென்று காபி போடப்போயிருக்க வேண்டும் .” ஆனால் நான் அவருக்குப் பக்கத்தில் படுக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கையில் வைத்திருந்த புகைப்படத்தைப் பார்த்தேன்.அது ஒரு பழைய புகைப்படம்: இளமையாகவும் அழகாகவும் இருந்த ரோசாரியா, சிரித்துக்கொண்டே ஒருவரைக் கட்டிப்பிடித்திருந்தார். அவர் ஆண்ட்ரியாவின் தந்தை.”இன்றுடன் இரண்டு வருடங்கள் ஆகின்றன,” என்று ரோசாரியா மென்மையாகக் கூறினார். “ஜியோவானி மறைந்து சரியாக இரண்டு வருடங்கள் ஆகின்றன. நவம்பர் இருபத்தெட்டாம் தேதி….நான் ஆண்ட்ரியாவிடம் சொல்லவில்லை, அவனை வருத்தப்பட வைக்க நான் விரும்பவில்லை. ஆனால் அதனால்தான்… அதாவது,…அதனால்தான் நான் வந்தேன்.”
நான் மௌனமாக இருந்தேன்., எனக்குத் தெரிந்த வரையில் முதல் முறையாக, ரொசாரியா ஒரு வலிமையான பெண்ணைப் போல நடிப்பதை நிறுத்தினார்.அவர் மெதுவாகப் பேசத் தொடங்கி, என்னிடம் உண்மையைச் சொன்னார். “எலினா, என்னால் இனி வீட்டில் இருக்க முடியாது.அந்த வீடு மிகவும் பெரியதாகவும் மிகவும் அமைதியாகவும் இருந்தது. ஜியோவானி எல்லா இடங்களிலும் இருந்தார்: அவரது சாய்வு நாற்காலி, அவரது கோப்பை, அவரது செய்தித்தாள் …எல்லாம் எங்கே .நான் காலையில் எழுந்தபோது …எதுவுமே இல்லாத வெறுமை….
எனக்குப் பேசுவதற்கு யாரும் இல்லை.
என்னுடன் காலை உணவு சாப்பிட யாரும் இல்லை.நான் நாள் முழுவதும் யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பேன். அதன் அர்த்தம் என்னவென்று உனக்குத் தெரியுமா, அன்பே?”
“உன் பேச்சைக் கேட்க யாருமில்லை என்பதால் நாட்கணக்கில் மௌனமாக இருந்தாயா?”இரக்கத்துடன் எண்ணிக்கொள்கிறேன்.
அவள் அந்தப் புகைப்படத்தை இறுகப் பற்றிக்கொண்டாள். “நான் இங்கு, உன்னிடம் வந்தபோது, மீண்டும் உயிர் பெற்றது போல் உணர்ந்தேன்.”சமைத்துக் கொடுக்க ஒருவர் இருந்தார். காலையில் பேச ஒருவர் இருந்தார். வீடு நிறைய ஆட்கள் இருந்தார்கள். இதனால்தான் இங்கு தங்குவதற்காக நான் தொடர்ந்து சாக்குப்போக்குகளைச் சொல்லிக்கொண்டிருந்தேன், எனக்குத் தெரியும்.திரைச்சீலைகள்,
சலவைத்தூள், இதெல்லாம் சாக்குப்போக்குகள்தான். உண்மை என்னவென்றால், என்வீட்டில் கவிழ்ந்துகிடக்கும் அந்த அமைதிக்குத் திரும்புவதற்கு நான் பயந்தேன். என்னை மன்னித்துவிடு, எலினா. நான் ஒரு மோசமான மாமியாராக இருந்தேன்.நான் நாளை வீட்டுக்குத் திரும்பிப் போகிறேன். நீங்கள் சொல்வது சரிதான். ஒரு இளம் தம்பதிக்குத் தனிமை தேவை.” அவர் மீண்டும் அழத் தொடங்கினார்
நான் இன்னும் நெருங்கி அவர் அருகில் அமர்ந்தேன். என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை,: அவர் கையை இறுகப் பற்றிப் பிடித்தேன்.இரண்டு வருடங்களுக்குப் பிறகு அணை உடைந்து போனது போல அவர் தொடர்ந்து பேசினாள். “உனக்குத் தெரியுமா, எலினா, பிரச்சினை வெறும் மௌனம் மட்டுமல்ல.”பிரச்சனை என்னவென்றால், நான் யார் என்றே எனக்கு இப்போது தெரியவில்லை. நாற்பது ஆண்டுகளாக நான் ஜியோவானியின் மனைவியாக இருந்தேன்.நான் இருவருக்காக பொருட்கள் வாங்கினேன், இருவருக்காக சமைத்தேன், ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் நடனமாடச் சென்றோம், கோடைக்காலத்தில் கடற்கரைக்குக் காரில் சென்றோம். எல்லாமே இருவருக்காகத்தான்.இப்போதா? இப்போது நான் ஒரு பெரிய வீட்டில் வசிக்கும் தனிமையான கிழவி. நான் இனி யாருடைய மனைவியும் அல்ல.நான் இனி யாருக்கும் தாய் இல்லை, ஏனென்றால் ஆண்ட்ரியா வளர்ந்துவிட்டான், அவனுக்கு நீயும் கிடைத்துவிட்டாய், அதுவும் நியாயமாகவே. அதனால் நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன்: இனி என்னால் என்ன பயன்?யாருக்கு நான் தேவை? “நான் எதற்கு இருக்கிறேன், யாருக்கு நான் தேவை?”
அவரின் சோகம் எனது இதயத்தினை ஓர் பகுதியைக் குத்தியது.ஏனென்றால், கடந்த வாரங்கள் அனைத்திலும், என் தளபாடங்களை நகர்த்திய,என் எல்லா விடயங்களிலும் தலையிடும் ஒரு மாமியாரை மட்டுமே நான் பார்த்திருந்தேன்.அதற்கு பதிலாக, என் கண்முன்னே உலகில் தனக்கான இடத்தை இழந்த ஒரு பெண் இருந்தாள்.
மீண்டும் பயனுள்ளவள் எனறு தானே உணர்வதற்காக, இன்னும் யாருக்கோ தேவைப்படுவதாகத் தன்னை நிருவ முனையும் ஒரு பெண் இருந்தாள்.
முந்தைய நாள் அவரை வெளியேற்ற நினைத்திருந்த எனது இதயம் கனத்தது. திடீரென்று, எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் கிடைத்ததாக் உணர்ந்தேன்.ஆறரை மணி அலாரங்கள். ஒவ்வொரு அமைதியையும் நிரப்ப வேண்டிய தேவை…. வீட்டிற்கு அழைக்கப்பட்ட நண்பர்கள். இடைவிடாத சமையல்.
அதில் தொந்தரவாக இருக்க வேண்டும் எனற எண்ணம் இருக்கவில்லை.தனிமையை அதன் வெறுமையை எதிர்கொண்டதால் ஏற்பட்ட பயம்…. அவரிடம் கொடுப்பதற்கு ஏராளமான அன்பு இருந்தும்,
அதைக் கொடுக்க யாருமில்லாமல் வெற்றிடத்தில் சுழன்ற உள்ளத்தின் பரிதவிப்பு ….
.அந்த ஞாயிற்றுக்கிழமை, நான் மனதுக்குள்ளேயே உருப்போட்டிருந்தவற்றை மௌனத்துக்குள் கரைத்துக் கொள்கிறேன். முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் செய்தேன்.
நான் சமையலறைக்குச் சென்று, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நானே காபி தயாரித்துவிட்டு, ஆண்ட்ரியாவை அழைத்தேன்.
நான் அவனிடம் எல்லாவற்றையும் சொன்னேன்: அந்தப் புகைப்படம், ரோசாரியாவின் அந்த இரண்டு வருடவாழ்வின், தனிமை, வெறுமைபற்றி விபரித்தேன் …ஆண்ட்ரியா மௌனமாக இருந்தாள்.பிறகு அவன் உட்கார்ந்து தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டான். “எவ்வளவு முட்டாள்தனம்,” என்றான்.
நான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்.
என் அம்மா துன்பப்பட்டுக் கொண்டிருந்தார், அவரது ஏக்கங்களைக் கண்டுகொள்ளாத அடி முட்டாளாக இருந்து விட்டேன்.அவர் எங்களைத் தொந்தரவு செய்ததாக எண்ணினேன்.. என்ன ஒரு மோசமான மகன்.” கழிவிரக்கத்தால் புலம்பினான் அவன்
“நீ மோசமானவன் இல்லை,” என்று அவனிடம் சொன்னேன். “உனக்குப் புரியவில்லை.”எனக்கும் அது புரியவில்லை. புன்னகைக்குப் பின்னால் எல்லா வருத்தங்களையும் வலிகளையும் மறைப்பதில் உன் அம்மா கைதேர்ந்தவர்.”
நானும் ஆண்ட்ரியாவும் அமர்ந்து அதைப் பற்றி யோசித்தோம்.உண்மை தெளிவாக இருந்தது: ரொசாரியாவால் எங்களுடன் வாழ முடியாது.
இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட எங்கள் அமைதி …அழித்துவிட்டது,
இது எங்களுக்கு மட்டுமல்ல அவருக்கும் நியாயமானதாயில்லை.
ஆனால், அவரைத் தனிமையில் இறப்பதற்காக அந்த அமைதியான வீட்டிற்குத் திருப்பி அனுப்பவும் எங்களால் முடியவில்லை.
எங்களுக்கு ஒரு மூன்றாவது வழி தேவைப்பட்டது.ஒரு வாரமாக கலந்துரையாடி நாங்கள் இருவரும் சேர்ந்து மூன்றாவது தீர்வைக் கண்டறிந்தோம். முதலாவதாக: ரொசாரியா வீட்டிற்குத் திரும்புவார்.அவரது சுதந்திரம், அவரது கண்ணியம், அவரது வாழ்க்கை…..அதனால் காப்பாற்றப்படும்
ஆனால், அவர் மௌனத் தின் பிடியில் தனியாக இல்லை.என்ற உணர்வை ஏற்படுத்தும் பொறுப்பை இருவரும் ஏற்றுக்கொண்டோம்: மாதத்திற்கு ஒரு வார இறுதியில் அவர் எங்களிடம் வர வேண்டும் என்று நாங்கள் முன்மொழிந்தோம்.திடீரென அல்ல, நிரந்தரமாகவும் அல்ல. திட்டமிடப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட, ஒரு வார இறுதியில் . அவரது லசானியாவுடனும் அவரின் அரட்டையுடனும்.இது ஒரு அழகான விஷயம்,
முற்றுகை போல் அல்லாது ஒரு வசந்தகாலத் தென்றலாய் அவர் வருகை அமையும்.
அதேபோல் நாம் இருவரும் மாதத்தில் இரண்டு நாட்கள் ரொசாரியாவின் வீட்டில் சென்று தங்குவது,,,,மூன்றாவதாக, இது ஆண்ட்ரியாவின் யோசனை, அது மிகச் சிறப்பாக இருந்தது என்று நான் சொல்லியே ஆக வேண்டும்:ரொசாரியா வசிக்கும் நகரில், செயல்பாடுகள், சுற்றுலாக்கள் மற்றும் வகுப்புகளை ஏற்பாடு செய்யும் ஒரு முதியோர் மையம் இருந்தது.
ரொசாரியாவுக்குத் தேவைப்பட்டது அதுதான்: மக்கள், அரட்டை, ஒரு சமூக வாழ்க்கை…….
அவரைச் சம்மதிக்க வைப்பதற்காக, முதல் நாளில் அவருடன் தானும் உடன் செல்ல ஆண்ட்ரியா முடிவு செய்தான்.நாங்கள் ரொசாரியாவிடம் அந்தத் திட்டத்தை முன்வைத்தபோது, அவர் முதலில் அதை எதிர்த்தாள் “முதியோர் மையமா? நான் நன்றாக இருக்கிறேன்!”…..ஆனால் பிறகு, நாங்கள் அவரை அங்கு நிரந்தரமாக இருக்க அனுப்பி வைக்கவில்லை என்பதை அவர் மெதுவாகப் புரிந்துகொண்டார். அவர் மீண்டும் வாழத் தொடங்குவதற்கு நாங்கள் உதவுகிறோம்.என்பதைப் புரிந்துகொண்டார்.
ரொசாரியா, தான் ‘மூன்று நாட்களுக்கு’ வந்திருந்த வியாழக்கிழமைக்குப் பிறகு, சரியாக இரண்டு மாதங்கள் கழித்து, ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வீடு திரும்பினார்.
அவர் எங்களுக்கு வீட்டைப் பழுதின்றி விட்டுச் சென்றிருந்தார்; ஒரு மாதத்திற்குப் போதுமான லசானியா மற்றும் ரகு முதலியவற்றால் நிரம்பிய ஃப்ரீசரையும் விட்டுச் சென்றிருந்தார்.
சமையலறை மேசையில் ஒரு கடிதம் இருந்தது; அதை நான் பத்திரமாக வைத்து அவ்வப்போது மீண்டும் படித்து வந்தேன். அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “அன்புள்ள எலினா மற்றும் ஆண்ட்ரியா, என்னைப் பொறுத்துக்கொண்டதற்கு நன்றி.”நான் உங்களால் சகிக்க முடியாதவளாக இருந்தேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என் வாழ்க்கையை நான் இழந்துவிட்டேன் என்று நினைத்த தருணத்தில், நீங்கலள் அதை எனக்குத் திரும்பக் கொடுத்தீர்கள்… நான் உங்களை நேசிக்கிறேன். பி.கு.எலினா, சரியான சலவைத்தூள் அந்தப் பச்சை நிறமுடையதுதான், அதை மறந்துவிடாதே. நான் இன்னமும் அதைத்தான் வாங்குகிறேன். அவர் சொல்வது சரிதான்.
இப்போது சில மாதங்கள் கடந்துவிட்டன. எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. மாதத்தில் ஒரு வார இறுதியில் ரோசாரியா எங்களிடம் வருகிறார், அது நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தருணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.அவரை வெளியேற்ற விரும்பிய நான், இப்போது அவருடைய வருகைக்காகக் காத்திருக்கிறேன். ஏனென்றால், ரொசாரியாவுடன், அவருடைய லாசானியாவுடனும் , அரட்டையுடனும் கேட்கப்படாத ஆலோசனைகளுடனும் கழிக்கும் ஒரு வார இறுதி மிகவும் அழகானது.இது இரண்டு மாத முற்றுகையிலிருந்து வேறுபட்டது. இது சரியான அளவு.கொண்டது.
மாத இறுதியில் நாங்கள் ரோசாரியாவின் கிராம வீட்டுக்குச் செல்லுகிறோம் அழகிய மலைசாரலில் அமைந்த இயற்கை அழகு கொஞ்சும் சூழலில் அந்த வீடு அமைந்திருக்கிற்து. நகரத்தின் நெருக்கடியிலும் வேலையின் நெருக்குவாரத்திலும் இருந்து முற்றாக விடுபட்டு ரொசாரியாவின் உபசரிப்பில் நாமும் திழைக்கிறோம். இருநாட்கள் மூவரும் ஒன்றாக ஆற்றங்கரையில் நடந்து செல்லும்போது உள்ளத்தில் புத்துணர்ச்சி பொங்கி எழுகிறது.ரொசாரியா தனக்குமட்டுமல்ல எங்களுக்கும் ஒரு புதிய வாழ்வை தொடங்கி வைத்துவிட்டார்.
ரொசாரியா அந்த முதியோர் இல்லத்தின் ராணியாகிவிட்டார்.அவர் அந்த இல்லத்தில் ஒரு சமையல் வகுப்பை ஏற்பாடு செய்துவிட்டார். அவருக்கு இப்பொழுது ஒரு நண்பர்கள் குழு உள்ளது. அவர் வெனிஸ், புளோரன்ஸ் ஆகிய இடங்களுக்கும், கடந்த மாதம் வியன்னாவுக்கும் கூட சுற்றுலா சென்று வருகிறார்..தனிமையால் தவித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு, இப்போது என்னை விடப் பரபரப்பான வேலைகள் இருக்கின்றன.
எல்லாவ்ற்றுக்கும் மேலாக , இதிலிருந்து ஆண்ட்ரியா ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டாள். தன் தாய் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனையல்ல, மாறாக அவர் சொல்வதைக் கேட்க வேண்டியவர் என்பதை அவன் புரிந்துகொண்டான். இப்போது அவன் வாரத்திற்கு இரண்டு முறை அவளுக்குத் தொலைபேசி செய்கிறான்.அவர்கள் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள். சமீபத்தில் ஒரு நாள் அவன் தொலைபேசியில், “ஆமாம் அம்மா, நீங்கள் சொல்வது சரிதான், மீனுடன் வெள்ளை ஒயின், எனக்குத் தெரியும்,” என்று புன்னகைத்தபடியே சொன்னான்.
சில சமயங்களில் அந்த இரண்டு பரபரப்பான மாதங்களைப் பற்றி நான் நினைத்துப் பார்ப்பதுண்டு.ஆறரை மணி அலாரம் பற்றி, எனது இஸ்திரி செய்த உள்ளாடைகளைப் பற்றி, மெழுகுவர்த்திகள் நகர்த்தப்படுவதைப் பற்றி, என் வரவேற்பறையில் இருந்த அந்த நான்கு பெண்களைப் பற்றி. இப்போது அதையெல்லாம் நினைத்து எனக்குச் சிரிப்பு வருகிறது.ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த ஞாயிற்றுக்கிழமை காலையையும், ரொசாரியாவின் கையில் இருந்த புகைப்படத்தையும், அவரது கண்ணீரையும் தான் நான் நினைக்கிறேன்.ஒருவர் ஏன் அப்படி நடந்துகொள்கிறார் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளாமலேயே, அவரைப் பற்றித் தீர்ப்பளிப்பது எவ்வளவு எளிது என்பதைப் பற்றி நான் யோசிப்பதுண்டு.என் மாமியார் மூன்று நாட்கள் வந்துவிட்டு, இரண்டு மாதங்கள் தங்கிவிட்டார். என் வாழ்வில் நடந்தவற்றிலேயே அதுதான் மிகவும் சோர்வூட்டும் விஷயமாக இருந்தது.என்னமோ உண்மைதான்
ஆனால் அதுவே , நான் ஒருபோதும் கற்பனை செய்யாத ஒரு விசித்திரமான வழியில், அது என் வாழ்வின் மிகப்பெரிய பரிசுகளில் ஒன்றாகவும் இருந்தது.
ஆனாலும் – அடுத்த முறை அவர் ‘நான் மூன்று நாட்கள் இங்கே இருப்பேன்’ என்று சொல்லும்போது… நான் முதலில் மெழுகுவர்த்திகளை எடுத்து மறைத்துவிடுகிறேன்.
– இத்தாலிய மொழியில் இருந்து மொழிபெயர்ப்பு
![]() |
வாசுகி நடேசன் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் கலாநிதி க சொக்கலிங்கம், தெய்வானை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சொக்கன் என்ற புனைபெயரில் எல்லோராலும் அறியப்படும் சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாசுகி யாழ் இந்துக்கல்லூரியில்த மது உயர்கல்வியைக் கற்றார். பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து கலைமாணி பட்டதை பெற்றோர். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் ஆ.சண்முகதாஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் "சங்க இலக்கியங்களில் மருதத்திணையின்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
காயம்
தங்க-பிரகாஷ்
October 6, 2026
மேலோர்
ஜூனியர் தேஜ்
October 6, 2026
இளிச்சவாயன் பட்டம்
ஸ்ரீ.தாமோதரன்
October 6, 2026
