மாறாத காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 21, 2025
பார்வையிட்டோர்: 58 
 
 

1940 ஆம் ஆண்டு . திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள பொன்மலை. மதியம் . வெய்யில் வேளை . முல்லை நாடக குழுவினர் , ஊர் பெரியவர்கள் அவர்களுக்காக ஒதுக்கி இருந்த சத்திரத்தில் உண்ட களைப்பில் இருந்தனர் . தரையில் அமர்ந்த நிலையில் சிலர் உறங்கிக் கொண்டிருந்தனர். சிலர் உறங்காமல் ஒன்றிரண்டு நபர்களாக அங்கங்கே தரையில் ஜமக்காளத்தில் அமர்ந்து தாயம் ஆடிக் கொண்டிருந்தனர். அந்த நாடகக் குழுவின் தலைவர் , கனமான சரீரமும் மழித்த முகமும் கம்பீரத் தோற்றமும் கொண்ட வாத்யார் கிருஷ்ணன் , அந்த இடத்தை சுற்றி வந்தார். ” நாடக பாடத்தைப் படிக்காமல் விளையாடறீங்க தூங்கறீங்க ” என்று குரல் கொடுத்தார். ” இன்னிக்கு ஒரு நாள் விட்டுடுங்க சுவாமி ” என்று சத்திரத்தின் மூலையிலிருந்து ஒரு ஆண் குரல் ஒலித்தது. “சரி சரி ” என்று அவர் புன்னகை பூத்தார்.

அடுத்து நாயகி வேடமிடும் அழகிய , பருமனான தேகம் சிவந்த மேனி கொண்ட கல்பனா இருக்கும் அறைக்கு வந்தார். கல்பனா அருகில் ஒல்லியான அரைக்கால் சட்டை அணிந்த பதின் பருவ சிறுவன் நின்று கொண்டிருந்தான். தரையில் அமர்ந்து இருந்த கல்பனா எழுந்து நின்றாள்.

“சாப்பாடு நல்லா இருந்ததா அம்மா ? யார் இந்த பிள்ளையாண்டான் புதுசா ? “

வாத்யார் கேட்டார்.

“உணவு நல்லா இருந்தது … அப்பா … இவன் என்னோட மூத்த அண்ணனோட முதல் பிள்ளை பரணி … அத்தைய பார்க்க விழுப்பரத்திலிருந்து எப்படியோ நம்ம ஜாகை இருக்கற இடம் தெரிஞ்சு வந்திருக்கான் … இங்கேயே இருந்துடறேன் நம்ம குழுவுல சேர்ந்து நடிக்கிறேன் .. ஒன் கூடயே இருக்கேன் அத்தை ன்னு சொல்றான் … அதெல்லாம் சரிப்படாதுன்னு நான் வேப்பிலை அடிச்சுகிட்டு இருக்கேன்.. “

பரணி , பெரியவரின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான்.

எழுந்து நின்ற பரணியின் முதுகில் தட்டினார்.

“சாமர்த்தியத்தை பாரு கல்பனா .. நீ நாடகத்துல நடிக்க வந்ததற்கே ஒங்க அண்ணன் தம்பி அக்கா தங்கை எல்லாம் உன் கூட பேசறது இல்ல கடுதாசி போடறது இல்லேன்ற இவனையும் நடிகனாக்கி்ட்டா உடன்பிறப்புன்னு பார்க்காம உனக்கு சாபம் கொடுத்துடுவாங்களே … சரி இப்ப பள்ளிக்கூடம் எல்லாம் விடுப்பு தானே … ஒரு மாசம் இவனுக்கு அப்பியாசம் கொடு … சரஸ்வதி முடிவு எடுக்கட்டும் இவனுக்கு படிப்பா நடிப்பான்னு … “

கல்பனாவும் பரணியும் கைகூப்பினர். அவர் அங்கிருந்து சத்திரத்தின் மற்றொரு பகுதிக்குச் சென்றார்.


சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டு , துறுதுறுவென இருந்த பரணியை குழுவில் உள்ள அனைவருக்கும் பிடித்துப் போய் விட்டது.. சிலர் , அவனுடைய அத்தைக்குத் தெரியாமல் சொந்த வேலைகளுக்கும் அவனை ஏவலிட்டு வேலை வாங்கிக் கொண்டிருந்தனர். பரணி , அந்த நாடகக் குழுவின் முக்கிய அங்கமாகி விட்டான். வாத்யார் கிருஷ்ணனுக்கும் பணிவிடைகள் செய்து வந்ததால் அவருக்கும் பிடித்துப் போய் விட்டது. வந்து போகிறவர்கள் பலரைப் பார்த்தவராயினும் பரணியை மீண்டும் பள்ளியில் சேர்க்க அழைத்துப் போக அவனுடைய பெற்றோர்கள் வந்து விடுவார்களே என்று அவருக்கு கவலையும் வந்து விட்டது.

பெரு மழையால் நாடகக் கொட்டகையில் நாடகம் ரத்து ஆகி இருந்த ஒரு நாள் . மாலைப் பொழுது . பார்வையாளர்கள் பகுதியில் மழை ஒழுகாத இடத்தில் நாடக குழுவினரே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். எங்கேயோ வெளியே சென்று வந்த வாத்யார் , இவர்களைக் கடந்து கொட்டகையின் பின்புறம் உள்ள ஒப்பனைப் பகுதிக்குச் சென்றார். அங்கே கல்பனா , பரணியை அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். . வாத்யார் அவளைத் தடுத்தார்.

“நீ பெற்ற மகனாகவே இருந்தால் கூட அடிக்க கூடாது . உன் அண்ணி பெற்ற மகனை நீ எப்படி அடிக்கலாம் ? “

கேட்டார் வாத்யார். முகம் சிவந்திருந்த கல்பனா பேசினாள் –

“இவன் பார்த்த வேலை அப்படிப்பா … வெட்கத்தை விட்டு சொல்றேன். நான் பருவ மங்கையாக விழுப்புரத்தில் இருந்த போது ஒரு வாலிபர் என்னைக் காதலித்தார். அந்த கண்றாவி காதல் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. அப்பொழுது சாதாரண நிலையில் இருந்த அந்த ஆடவர் , பொன்மலையில் பெரிய தனவந்தர் வீட்டுக்கு தத்துப்பிள்ளையாக வந்திருக்கிறார் போலிருக்கிறது. அதைத் தெரிந்து கொண்ட இவன் , நம் குழுவில் இருக்கும் இவனுடைய கூட்டாளி கணேசனுடன் சேர்ந்து அவருடைய மாளிகைக்குள் அத்து மீறிப் போய் அவரிடம் எங்க அத்தையை கல்யாணம் பண்ணிக்கங்க என்று கேட்டிருக்கிறான். அவர் அப்புறம் பேசலாம் என்று இவர்களை விரட்டி விட்டிருக்கிறார் . இந்தக் காட்சியை தெருவில் நடந்து போன விகடகவி நேரில் பார்த்து விட்டு என்னிடம் வந்து சொன்னார். இவன் என்னிடம் மூச்சே விடவில்லை. இந்த அவமானம் தேவையா அப்பா நீங்களே சொல்லுங்கள் “

வாத்யார் பேசினார் – ” சரியா போச்சு இந்த வயசுல அந்தப் பையனுக்கு இருக்கிற பக்குவத்தையும் பொறுப்பையும் மெச்சுவதை விட்டு விட்டு இப்படியா அடிப்பர்கள் ? உன் அண்ணன் தம்பி , அக்கா கணவர் எல்லாம் பார்க்க வேண்டிய வேலையை உன் மருமகன் பார்த்திருக்கிறான். . அந்த நபருக்கு உன்னைப் போல் அழகான , கருத்தான பெண்ணை மணக்க கொடுத்து வைக்கவில்லை என்று எடுத்துக் கொள் . விடு . இதற்காக ஏன் கோபக்கனல் ? “

“கொடுப்பினை இருக்கிறது சுவாமி ” என்று ஓர் ஆண் குரல் கேட்டது. மூவரும் திரும்பிப் பார்த்தனர். அந்த நபர் , ஜரிகை வேட்டியும் விலையுயர்ந்த சட்டையும் அணிந்து இருந்தார் . சட்டையின் மீது அங்கவஸ்திரத்தை மாலை போல் அணிந்து கொண்டிருந்தார். அவருடைய வருகையால் அங்கு ஜவ்வாது மணம் வீசியது .

“யார் நீர் ? அனுமதி இல்லாமல் எங்கள் ஒப்பனை அறைக்கு நுழைந்து அநாகரிகமாக எங்கள் சம்பாஷணைக்குள் வருகிறீர் ? “

அந்த நபர் பேசினார் – “கேட்காமல் கொள்ளாமல் இங்கு வந்ததும் இடை மறித்துப் பேசியதும் தவறுதான். அடியேனுடைய பெயர் சுகுமாரன் .பெரியவர் தாங்கள் அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன். . தங்கள் சம்பாஷணையின் பொருளாக இருக்கும் மனிதன் நான்தான் . இந்த பிள்ளைகள் ரெண்டு பேரும் என்னைப் பார்க்க வந்த போது அசந்தர்ப்பம் . என்னுடைய சுவீகாரத் தந்தையாரின் தந்தை – தாத்தா நிலைமை கவலைக்கு இடமாக இருந்த தருணம். என்ன மாயமோ தாத்தா நேற்று முழுக்க முழுக்க சகஜ நிலைக்குத் திரும்பி விட்டார். இன்று தான் எனக்கு நேரம் கிடைத்தது. தங்களையே கல்பனாவின் தகப்பனாராக நினைத்து பெண் கேட்கிறேன் . தாங்கள் இசைவு தர வேண்டும். நாளையே என்னுடைய சுவீகாரப் பெற்றோருடன் வந்து தங்களை சந்திக்கிறேன். “

வாத்யாரின் முகம் மலர்ந்தது.

“அப்புறம் என்னம்மா .. அருணாசல கவிராயரின் இராமாயண நாடக கீர்த்தனை காவியத்தில் – இராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே நன்மை உண்டு ஒரு காலே என்று கைகேயி பாடுவது போல் ஒரு கீர்த்தனை . அதில் பாமரமே இனி என்ன பேச்சு ? பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாச்சு என்று வரும் . அது போல் உன்னுடைய காதலரே உன்னை ஏற்க வந்து விட்டார். நீ தான் சம்மதம் தெரிவிக்கணும்” என்றார் வாத்யார் . கல்பனா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

வாத்யார் மீண்டும் பேசினார் –

“இத்தனை நாள் அவர் உன்னுடன் தொடர்பில் இல்லாமல் இருந்ததற்கு காரணம் இருக்கலாம். பிறந்த குடும்பத்தின் நிலைமையை சுதாரிக்கச் செய்யத்தானே இன்னொரு வீட்டிற்கு சுவீகாரம் வந்திருக்கிறார். பொறுப்பான நபர்தான் . வீர்யம் பெரிசா காரியம் பெரிசா ன்னு உன் மனசுல போராடடமா ? நான் சொல்லுகிறேன் இவரை ஏத்துக்க சம்மதம் சொல்லு என்ன இனிமேல் உன்னை மாதிரி ஒரு நாயகியை எப்படி நான் உருவாக்கவேன்னு தெரியல உன் அண்ணன் பையனுக்கே ஸ்த்ரீ பார்ட் கொடுக்கணும் போலிருக்கு அவனும் அசப்புல அத்தை ஜாடையில தானே இருக்கான்…”

கல்பனா, திருமணத்திற்குச் சம்மதத்தைத் தெரிவிக்கும் விதமாக தலை கவிழ்ந்தாள். பரணி “பெண் வேஷமா எனக்கா அய்யிய்யோ” என்று அலறினான். வாத்யாரும் சுகுமாரனும் சிரித்தார்கள் .

– அத்தை மடி மெத்தையடி, சின்னஞ்சிறு புனைகதைகளின் தொகுப்பு.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *