மம்மி அந்த அக்கா பாவம்




(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மம்மி, மம்மி இந்த ‘பேபி’ சரியான லக்கி.
ஏன் குஞ்சு அப்படிச் சொல்லுறீங்க? றஞ்சனி தன் சிறுவனைப் பார்த்துக் கேட்டாள்.
பாருங்க மம்மி, ‘பேபி’ ஆக இருக்கும் போதே இப்படிக் குட்டிக் கப்பலில பிரயாணம் செய்யுது. பார்த்தீங்களா மம்மி. அந்த ‘பேபி’ அதன் மம்மியின்ர கையுக்க இருந்துகொண்டு சிரிக் குது. சரியான ‘ஹப்பி’ போல இருக்குது மம்மி. நாங்கள் லண்டனில இப்படிச் சிறிய கப்பலில பிரயாணம் செய்யவில்லை. ஏன் மம்மி வீடு மாதிரி ‘கவர்’ பண்ணியிருக்கினம். வடிவான குட்டிக் கப்பல். அப்போ சிறீலங்காவுக்குப் போனால் இப்படி குட்டிக்கப்பலில போகலாம் தானே?
இலங்கையில் சரியான வெய்யில். அதுதான் பிரயாணம் செய்யும்போது வெய்யில் தாக்காமல் இருக்க ‘கவர்’ பண்ணியிருக்கினம் போல. ஏன் செல்லம்? நாங்கள் லீவு நாட்களில் பிரான்சுக்குப் போகும்போதெல்லாம் கப்பலில தானே ஆங்கிலக் கால்வாயைக் கடந்து போறனாங்கள். நீங்க இப்போ எத்தனை தடவை பிரயாணம் செய்து போட்டீங்கள். ஒவ்வொரு பாடசாலை லீவுக்கும் அதில தானே பிரான்சுக்குப் போய் வாறனீங்க.
இல்லை மம்மி. நாங்கள் போறது பெரிய கப்பல். அதில ஏறி விளையாட்டுச் சாமான்கள் வேண்டி விளையாடினனான். ‘மக்டோனால்’லில வேண்டிச் சாப்பிட்டனான். காசு போட்டு ‘கேம்’ விளையாடி ஆட்களைச் சுட்டனான். மேல்மாடி கீழ்மாடி என்று ஓடித்திரிந்து சத்தியும் எடுத்தனான். மம்மி நாங்க எல்லோரும் கப்பலுக்கு மேலே போய் நின்று, அந்த ‘ரைற்றானி’க் கப்பலில அந்த அன்ரியும், அங்கிளும் நின்று பார்த்தது மாதிரி சந்தோஷப்பட்டுப் பார்த்தனாங்கள். படமெடுத்த னாங்கள். ஆனால் எனக்கு இந்த பேபி போற மாதிரி குட்டிக்கப்பலில போகவேண்டும்.
சிறுவன் ஆங்கிலத்தில் அளந்துகொண்டி ருந்தான். தமிழ்த் தொலைக்காட்சியில் தமிழ் அகதிகளாக பிரயாணம் செய்யும் காட்சியால் றஞ்சனியின் மனது கசிந்துகொண்டிருக்க வேண்டும். சிறுவன் விட்டபாடில்லை. கேள்விகளை அதுவும் ஆங்கிலத்தில் தொடுத்துக்கொண்டிருந் தான். ஏழு வயதுச் சிறுவனுக்கு எப்படி விளங்கப்படுத்துவது? உருக்குலைந்த குடும்பங் கள், தாய்மார்கள், பச்சிளங்குழந்தைகள், சிறார் கள், இளம் வயதினர், வயோதிபர்கள்…
அருகில் இருந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் ‘அம்மம்மா’ ஊர்க்கதைகளைக் கூறிக்கொண்டிருந்தா.
உனக்குத் தெரியுமே பிள்ளை றஞ்சனி. அந்த பக்கத்து வீட்டுப் பிள்ளை இப்படித்தான் அகதிகளாக சின்னக் கப்பலில போகும்போது விபத்துக்குள்ளாகி இறந்திட்டுது என்றெல்லோ அறிந்தனாங்கள். அந்தப்பிள்ளை ‘மலர்’ உயி ரோட இருக்குதாம். வேறு ஒரு பொம்புளைதான் செத்ததாம். மாறிக் கதைகள் வந்ததாம்.
ஆ.. அப்படியோ! கேட்கச் சந்தோஷமாகவிருக்கு. மலரக்கா உயிரோடு இருக்கிறாவா? அவர்களின் அம்மா இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டுப்போனதுகள் அந்தக் குடும்பம். உங்களுக்கு விபத்தில் செத்த பொம்புளையைத் தெரியுமா அம்மா? றஞ்சனி கேட்டாள்.
இல்லைத் தெரியாது. எந்தத் தாயோ! மனதுகள் கரைந்தன.
றஞ்சனி உனக்கு ஊரில் இருந்த ஆட்களையும் வடிவாகத் தெரியாதுதான். அப்பாவோட போய் இருந்து, ஊருக்கு வெளியில தானே வேலையும் செய்தனி. நாங்கள் இருந்த ஊரிலயும் இப்போ ஒரு சனமும் இல்லையாம். இந்தியா, வெளிநாடுகளென்று அதிகமாகப் போய்விட்டார்களாம், வசதியில்லாத சனங்கள், சரியாகக் கஷ்டப்பட்டதுகள் வேற ஊர் களில போய் இருக்கினமாம். உண்மையாகச் சொல்லுறன் றஞ்சனி. எனக்கு இப்ப ஊருக்கு போய், அங்க இருக்கிற ஆட்களை, இடங்களைப் பார்க்க வேணும் போல இருக்கு. இப்போ அதிகமானோருக்கு ஊரில போய் வாழத்தான் விருப்பம். என்ன வெக்கையென்றாலும் அங்குள்ள சுகம், சந்தோஷம், சுதந்திரம் இங்கு கிடைக்குமா?
மம்மி, மம்மி ஏன் இவர்களெல்லாம் அழுது கொண்டிருக்கிறார்கள்? என்ன நடந்தது?
அச்சாப்பிள்ளைளெல்லோ! மம்மியைக் கொஞ்சநேரம் தொலைக்காட்சியைப் பார்க்க விடுங்கோ. நீங்கள் கதைத்துக்கொண்டிருந்தால் எனக்கும் என்ன நடந்தது என்று தெரியாது. இதனை நன்றாகப் பார்த்துவிட்டு, அவர்கள் ஏன் அழுகிறார்கள் என்று சொல்லுகிறேன். றஞ்சனி சிறுவனுக்குக் கூறினாள்.
மொழி விளங்காது பிள்ளைகள் படும் கஷ்டத்தை றஞ்சனி உணர்ந்தாள். பெரும்பாலும் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் தொலைக் காட்சிக்கு முன்னால் பிரச்சனைகள் தொடங்கி விடுகின்றன. ஆனால் தொலைக் காட்சியில் நாட்டுப் பிரச்சனைகளைப் பார்த்து அதனை என்ன என்று அறியத் துடிக்கின்றனரே! அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அப்பாடி, பிள்ளைகள் பாடசாலையால் வீட்டுக்கு வந்தால் தொலைக்காட்சிக்கு முன்னாலதான் சத்தியாக்கிரகம். கொஞ்சம் பொறுங்கோ மம்மி புறோக்கிராம் தொடங்கி விட்டது. உடுப்பு மாத்திறத்துக்கிடையில அது முடிந்துவிடும். அதை ‘மிஸ்’ பண்ணிவிடுவேன். ‘பிளீஸ்’ மம்மி வீட்டுக்குப் போடும் உடுப்பை நான் இருக்கிற இடத்தில கொண்டு வந்து மாத்துங்கோ.
என்ன அந்த அமெரிக்கன் கற்பனையில் உருவாக்கிற படங்கள்தான். சின்னப் பிள்ளை களின் மூளையையும் சுயமாகச் சிந்திக்க விடாது சின்னாபின்னமாக்குபவைதான் அவைகள். ‘ஸ்பைடர் மான்’, ‘சுப்பர் மான்’, ‘பாற் மான்’, ‘ஆர்கோனால்ட்’ என்று பட்டியல் தொடரும்…. பிறகு என்ன ‘புஸ் புஸ்’ என்று, வீட்டுச் சுவர்க ளிலும், வீட்டுக் குஷன்களிலும் ஒத்திகை நடக்கும்.
சரி, தமிழை வடிவாகக் கதைக்கத் தெரியாது. கருத்துக்கள் சரியாகத் தெரியாது. தமிழ்த் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு வந்தால் கொஞ்சம் சரியாகி விடும். வெளிநாடுகளிலும் இப்போ ஊடகங்கள் ஊடாக நல்ல பணிகள் செய்கினம். அப்போ தமிழ்த் தொலைக்காட்சியைப் பார்க்கட்டும் என்று போட்டால் ஒரே அழுகையும் கூக்குரலும் தான். செத்த வீடு மாதிரி. அடியப்பா, சனங்கள் இங்கே சிரிப்பதற்கே கஷ்டமான நிலையில வாழ்ந்துகொண்டு, அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளை இதுவா பார்க்கவேணும்? இல்லாவிட்டால் அபூர்வ மான சண்டைக் காட்சிகள், கட்டிப்பிடிக்கும் காதல் காட்சிகள். ஏன் மம்மி சினிமாவிலயும் எல்லாரும் அழுகினம்? தமிழ்ச் சினிமாவைப் பார்த்தாலும் எழுப்பும் கேள்விகள். தமிழ் சினிமா என்றால் ஒரு ‘மூடு’ போட்டுவிடுவாள் றஞ்சனி.
ஐரோப்பாவில பிறந்து வாழுகிற சிறுவன். எப்படி எமது நாட்டுப் பிரச்சனைகள், குடும்பப் பிரச்சனைகளை விளங்கப்படுத்துவது? இனி அவனுக்கு தமிழ் மொழியில விளங்கப்படுத்த, விளக்கப்படங்களடங்கிய அகராதியெல்லோ தயாரிக்க வேண்டும். சிறுவனின் ஆர்வத்துக்கு முழுக்குப் போடக்கூடாது. உளவியல் ரீதியாக சிந்திப்பதை, மனநிலையைக் கேள்விக் குறியாக்கி விடும். அவனின் இடத்துக்குக் கீழே இறங்கி வந்து அவனுக்கு ஏற்ப விளக்கமும் கொடுக்க வேண்டும். வெளிநாட்டுக்கு வந்து என்ன! அந்தர சீவியம் தான். யாராவது சந்தோஷமாக இருக்கி றார்களா? இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. பல்வேறு வடிவங்களில்.
வெளிநாடுகளுக்கு வந்தாலும், நாம் ஏன் எங்கள் மொழியைத் தொலைக்க வேணும்? றஞ்சனி தன்னையே நொந்து கொள்வதும் உண்டு. நாமே பிழைகளை விட்டு, தமிழே மொழியே கதைக்காமல், ஐரோப்பிய தாய்மொழியாகவும், உணர்வு மொழியாகவும் வாழும் பிள்ளைகள் எத்தனை! என்ன இருந்தாலும் சொந்த மொழி யின் பரிபாஷைகள் ஆனந்தம் தருவன. உயிர் ஊட்டக்கூடியன. உணர்ச்சி தருவன. அதிகமான நோபல் பரிசைப் பெற்றவர்கள் ஜேர்மனியர்களாம். என்ன அவர்கள் ஆங்கிலத்திலா புத்தகங்களை எழுதினார்கள். ஜேர்மன் மொழிக்குக் கிடைத்த வெற்றி. ஏன் முதன் முதலாக விண்வெளிக்கு நாயை அனுப்பி காலடி வைத்தவர்கள் ரஷ்ஷியர் கள்தான். அவர்களும் தாய்மொழியில் தான் பரிபாஷைகளைப் பகிர்ந்தார்களாம். ஏன் நாம் மட்டும் எமது மொழியைப் பேசக்கூடாது. ஆங்கி லத்தில் பேசினால்தான் மற்றவர்கள் எங்களை மதிப்பார்களோ!
எங்களில் எத்தனைபேர் மௌசு காட்டி வாழ்கிறோம். நாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் கட்டாயம் அந்தந்த நாட்டு மொழிக ளைப் படித்திருக்க வேண்டும். இல்லாவிடில் முடமாகிவிடுவோம். நாம் எத்தனை மொழிக ளையும் பயின்று கொள்ளலாம். நாம் அந்த மொழிகளை ஆளுமைப்படுத்தி ‘புதுமைப் பித்தன் மாதிரி’ உன்னதம் காணுகின்ற இலக்கியம் படைக்கப்போறதில்லை. ஆனால் அந்தந்த நாட்டுக்கு ஏற்பவும் எம்மை மாற்றிக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. றஞ்சனிக்குத் தெரியும் சில பெற்றோர்களுக்கு அந்த நாட்டு மொழி தெரியவில்லை என்று எத்தனை பிள்ளைகள் வெட்கப் படுவதுண்டு. பிறகென்ன பிள்ளைகள் பெற்றோர்களைத் திருத்தத் தொடங்குவார்கள். மொழி ஒரு புறமிருக்க உடைகள் உடுத்தும் விதம் கூட பிள்ளைகளுக்குப் பிடிப்பதில்லை. அவர்களுடைய நண்பர்கள் பகிடி பண்ணுவார்களாம். எமது நாட்டில் இருந்து வந்தவுடனேயே இந்த ஐரோப்பிய நாட்டு நடை, உடையோடு எப்படி ஒன்றிக்க முடியும் !
றஞ்சனி வீட்டிற்கு அவளின் நண்பர் ஒருவர் வந்தார். புகைப்படங்கள் பிடிக்கும் படப்பிடிப்பாளர். லண்டனில் எமது நாட்டு மக்களின் விழாக்களைப் படம் பிடிக்கும் தொழில் பார்ப்பவராம். பிறந்தநாள் வைபவங்கள், பதிவுத் திருமண விழாக்கள், திருமண விழாக்கள், புனித நீராட்டு விழாக்கள், முதற்சற்பிரசாத விழாக்கள், பாராட்டுவிழாக்கள், நூல் வெளியீட்டு விழாக் கள், பாடசாலை விழாக்கள், கலைவிழாக்கள், என்று எக்கச்சக்கமான விழாக்களாம். முந்தி ஊரில இருக்கேக்க இப்படி கண்டதுக்கும் விழாக்கோலம் பூண்டவையே ! அதுக்குள்ளும் இந்தப் புத்தக வெளியீடுகள் என்றால், பார்வை யாளர்களை விட பேச்சாளர்களே கூடுதலாக இருந்து விழாக்களை நடத்திப்போட்டு வருவார் கள். யார் புகைப்படங்கள் பிடித்தார்கள்? சீ எத்தனை திறமைசாலிகள் சுவடுகள் இல்லாமல் மறைந்து விட்டார்கள். இப்ப என்னவென்றால் விழாக்களில் வீடியோக்காரர்களும், புகைப்படம் பிடிப்பவர்களும் மிக முக்கியமானவர்கள். அவர் கள் சமூகமளிக்காவிட்டால் விழாக்கள் சோபிக் காது. ஏன் கலியாணத்தில் கூட வீடியோக்காரர் வரப் பிந்திவிட்டால் முகூர்த்த நேரங்கள் கடந்து விடும். தாலியும் கட்டமாட்டினமாம். சனங்கள் காத்திருக்க வேணுமாம். வீடியோ, படப் பிடிப்பாளர்கள் வந்த பின்னர்தான் ‘சட புட்’ என்று செய்வினமாம். குளிர் நாடுகளில் கொஞ்சம் வெய்யில் அடித்தால் காணும். படப்பிடிப்பாளர்களுக்கு ஓய்வே கிடையாதாம்.
லண்டனில் பதிவுத் திருமணத்தை படம் பிடித்து ஒழுங்குபடுத்திய ‘அல்பத்தை’ றஞ்சனிக் குக் காட்டினார். படப்பிடிப்பு பிரமாதம். முன் அட்டைகள், பின் அட்டைகள் மணமக்களால் பளிச்சிட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தன. ‘குளோஸ் அப்’ பில் எடுத்த படங்கள். பின் மட்டையில் வெள்ளைக்காரர் போன்று, மணமக்கள் இருவரும் உதடுகளை உதடுகளால் கௌவிக் கொண்டு ஆழ்ந்து முத்தம் கொடுக்கும் காட்சி. அதிகம் ஐரோப்பியரின் படங்கள் பார்த்து பயிற்சிகள் எடுத்திருக்கவேண்டும். உண்மை யைச் சொல்ல வேணும். தமிழ்ச் சினிமாவில அவள் அப்படியான காட்சியைப் பார்க்கவில்லை யாம். கட்டிப்பிடிச்சு உருளுவினம், தூக்குவினம், ஆடுவினம், முத்தக் காட்சிகளை கொஞ்சம் மறைச்சுத்தான் காட்டுவினம்.
ஓ….! எங்கட சனமும் வெள்ளைக்காரர்கள் மாதிரி மாறிவிட்டனர் என்றாள் றஞ்சனி.
றஞ்சனி, விடயம் தெரியுமே! அதில இருக்கிற மணமக்களுக்கு என்னில கொஞ்சம் கோபமாம்.
ஏனாம்? நல்ல வடிவாகத்தானே! படம் எடுத்திருக்கிறீங்கள். ஏன் காசு கூடக் கேட்டு விட்டீங்களோ?
இல்லை காசு ஒன்றும் பிரச்சனையில்லை. பொம்புளை ‘டென்மார்க்கில்’ இருந்து வந்தவ வாம். அவ சொன்னாவாம் முத்தம் கொடுக்கும் காட்சியை (Bright) ‘பிறைற்’ ஆக முன் மட்டையில் போடவில்லையாம். பின்மட்டையில் அதுவும் மங்கலாகப் போட்டுவிட்டேனாம்.
அது சரி. இவ்வளவு தூரம் ஐரோப்பிய கலாச்சாரத்தில ஒன்றிப்போய் விட்டினம் போல இருக்கு. அவர்கள் இங்கேதான் பிறந்து வளர்ந்த வர்களோ!
இல்லையாம். அவர்கள் இலங்கையில பிறந்து வளர்ந்து இப்போ கொஞ்சக் காலங்கள் தானாம் வெளிநாடுகளுக்கு வந்து.
அதுவும் அப்படியோ! ஐரோப்பியர்களிடம் நல்ல விடயங்கள் பல இருக்கின்றன. அவர்க ளோட ஒன்றுவதற்கு, இதுவல்ல. நண்பரோடு றஞ்சனியும் சேர்ந்து ‘கல கல’த்துச் சிரித்துக் கொண்டனர்.
றஞ்சனிக்கு ஞாபகம் வந்ததாம். அவளோட பிரான்சில வேலை செய்த ஒரு பிரெஞ்சுக்கார நண்பி கேட்டாளாம்.
என்ன உங்கட நாட்டுக்காற ஆட்களுக்கு ‘நன்றி, மன்னிப்பு’ போன்ற சொற்கள் வாயில் வரமாட்டுதோ? வாயால் சொல்லமாட்டார்களோ? என்று.
ஏன் அப்படிச் சொல்கிறாய்? சில வேளை களில் அவர்கள் நாட்டுக்கு வந்து புதிதானவர் களாக இருப்பார்கள். அல்லாவிடில் நீ பிரெஞ்சு’ப் பாஷையில் சொன்னது விளங்காமல் இருக்கலாம்.
போடி றஞ்சனி. பாஷை புரிவது, புரியாதது பிரச்சனையில்லை. முக பாவங்கள் கூட இருக் கடி. ஊமைகள் கூட கதைக்கிறதுக்கு சைகை கள் இருக்குதுதானே! நான் நேற்று பரீசுக்குப் போன போது சுரங்கப் பாதை ரெயின் எடுக்க வேண்டி இருந்தது. அப்போதுதான் அவதானித் தேன். எனக்குபின்னால் வந்தவர் உங்கள் நாட்டுக்காரர்தான். நிச்சயமாக. அவருக்காக கதவைத் திறந்து உதவி செய்தேன். ஆனால் அவர் நன்றி கூடச் சொல்லவில்லையடி. அது தான் பரவாயில்லை. எல்லோரையும் இடித்துக் கொண்டு ஓடிப்போய் அந்த ரெயினில் ஏறிப்போய் விட்டார். நான் அடுத்த ரெயின் தான் பிடித்துப் போக முடிந்தது. அங்கு நின்றவர்கள் ‘சிறீலங்கா’ ஆள் என்று சொல்லித்தான் கதைத்தார்கள். நான் இப்படிச் சொல்லுகிறேன் என்று குறை நினைக்காதேயடி.
நீ சொல்லுறதை நான் ஏற்றுக் கொள்கின் றேன். சிலவேளை அந்த ஆள் ஏதாவது அவசர அலுவலாகச் சென்றிருக்கலாம்.
எல்லோருமே அவசரமானவர்கள்தான். பரவாயில்லை றஞ்சனி. நீ எனது மனதுக்குப் பிடித்த நண்பியென்றபடியால் சொன்னனான். அதுவும் ஓர் ஆசிய நாட்டு நண்பியென்றால் நீதான். அப்போ உன்னோட தானே மனம் விட்டுக் கதைக்கலாம்.
கேட்கிறனென்று குளம்பாதே!
நான் குளம்பவில்லை. நீ சொல்லு. அப்போ தானே மற்றவர்கள் எங்களைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். மனதுக்க ஏதாவது வைத்துக் கொண்டு பழகக் கூடாது. நேர்மையாகக் கதைக்க வேணும். உண்மையான அன்போடு இருக்கவேண்டும். எனக்கும் போலி வேஷக் காரரைப் பிடிக்காது. றஞ்சனி கூறிக்கொண்டே இருந்தாள்.
றஞ்சனி, பெண்கள் பற்றி ஒரு கேட்கக் கூடாத கேள்வி. கோவிப்பாயா?
இல்லை கேள். நானும் பொம்பிளை தானே!
உங்கள் நாட்டு பெண்களில் அதிகமா னோருக்கு ஏன் ஆண்கள் மாதிரி கை, கால், முகம் எல்லா இடங்களிலும் உரோமங்களாக விருக்கிறது?
அது இயற்கைதானே! என்றாள் றஞ்சனி.
அதைத் துப்பரவு செய்யலாம் தானே! பெண்கள் அழகாக, பள பளப்பாகவல்லவா இருக்க வேணும்.
அது எப்படி பளபளக்கிறது? பிறஷ் ஆல பெயின்ற் அடிக்கவேணுமோ!
உனக்கு ஒன்றுமே தெரியாது றஞ்சனி.
இங்கு இதனை மழுக்குவதற்கு எத்தனையோ கிறீம்கள் இருக்கிறது றஞ்சனி.
அப்படியே! நான் நினைத்தேன் ஏதோ சாப்பிட வேணும் என்று.
நிச்சயமாக சாப்பாட்டு முறைகளிலயும், உணவுப் பழக்கங்களிலயும் உடல்வாசி அமையத் தான் செய்கின்றது. நீங்கள் சரியான உறைப்புத் தானே சாப்பிடுவீங்கள்?
ஓம். பழகிவிட்டது. எமது நாட்டில் எல்லோரும் உறைப்பாகத்தான் சாப்பிடுவோம். எங்கள் அம்மா சமைக்கும்போது மிளகாய், மிளகு, வெந்தயம், இஞ்சி, உள்ளி, என்று ஊருப்பட்ட சரக்குகள் போட்டுத்தான் கறிகள் சமைப்பா. எல்லாம் உடம்புக்குத் தேவையானது. வருத்தங்கள் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பா. நாங்களும் பழகிவிட்டோம்.
இங்கே அதிகம் குளிர் தானே! உடலை வெப்பமாக வைத்திருப்பதற்கு கொழுப்பு சீஸ், பால், பழங்கள் போன்ற உணவுகளையும், ‘வைன்’ போன்ற குடிவகைகளையும் சேர்த்துக் கொள்வோம்.
போடி, நாங்கள் குடிவகைகள் உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்.
அப்போ, நல்லா முந்திரிகைப் பழத்தை வேண்டிச் சாப்பிடு றஞ்சனி.
வேறு என்னடி எங்களைப் பற்றிக் கேட்கப் போகிறாய்?
நீ கோபிப்பாய் றஞ்சனி.
இவ்வளவுதான் என்னைப்பற்றிப் புரிந்து வைத்திருக்கிறாய்.
பஸ்சிலயோ, ரெயினிலயோ பிரயாணம் செய்யும்போது ஏன் உங்கள் நாட்டுக்காரர் பெரிய சத்தம் போட்டு ‘பட, பட, பட’ என்று ஏதோ வெடிக் கிறது மாதிரிக் கதைக்கிறவை.
எங்கட ‘மொழி’யின் ஒலி வடிவம் உனக்கு அப்படிக் கேட்டது போல. பிரெஞ்சு மொழி மாதிரி மெல்லிய காதல் மொழியல்ல. எங்கட மொழியுக் குள்ள காதலும் இருக்கு வீரமும் இருக்கு.
றஞ்சனி, நீ நல்லாக் கதைப்பாய், ஒன்றும் விட்டுக்கொடுக்காமல் சமாளிப்பாய்.
இல்லைச் சமாளிக்கவில்லை. உண்மையைத் தான் சொல்கிறேன். உனக்குத் தெரியுமா உங்கட பிரெஞ்சு மொழிக்கும், எங்கட தமிழ் மொழிக்கும் நிறைய இலக்கணத்தில் ஒற்றுமை இருக்கிறது.
அப்படியா!
படிச்சுப் பார். அப்போ விளங்கும்.
ஐயையோ! உங்கட நாட்டு மொழி எழுத்துக்களைப் பார்க்க தலை சுத்துது. எப்படி எழுதிறனீங்கள்? நெருங்கவே மாட்டேன்.
பார்த்தியா பயப்பிடுகிறாய்?
அது சரி றஞ்சனி நான் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை. ஏன் இரண்டு பேர் கதைக்கி றதுக்குக்கூட ஒலி பரப்பியில கதைக்குமாப்போல கதைக்கிறது?
உனக்குத் தெரியாதா? எங்கட நாட்டில பெரிய பெரிய வளவுகளுக்குள்ள தான் பெரிய வீடுகள். நாங்கள் சரியான சுதந்திரமாகத் தான் இருந்தனாங்கள். இங்கே போல கட்டிடங்களுக்க அடங்கி இருந்து கொண்டு, மேல் மாடிக்கு சத்தங்கேட்காமல் இருக்கவேணும். பக்கத்து வீட்டுக்கு சத்தம் கேட்கப் படாது என்று பயந்து கொண்டு கதைக்காமல் அடக்கி மெல்லமாக இருக்கத்தேவையில்லை. அப்படிப் பெரிய சத்தம் போட்டு கதைச்சுப் பழகிப்போட்டோம்.
அது வீடுகளில றஞ்சனி. பொது சனங்கள் இருக்கிற இடத்திலயும் அப்படியோ கதைப்பீங் கள்? நாங்கள் வாசிக்கிற பழக்கம் உடையவர் கள். இப்படிச் சத்தம் போடுவதால், வாசிப்பதை நிறுத்திவிட்டு அவர்களையெல்லோ பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கு.
எங்கடதுகள் ஏதாவது சீட்டுப் பிடிக்கிற காசுப் பிரச்சினை, வேலைப்பிரச்சினை, இயக்கங்களின்ரபிரச்சினை, ஊர்ப்பிரச்சினை கள், விசாப்பிரச்சினைகள் அல்லாவிடில் சினி மாவில வருகிற கதாநாயகர்களைப் பற்றிக் காரசாரமாகக் கத்தியிருக்குதுகள் போல. அதுதான் அவள் கண்டுவிட்டு என்னைக் குடையிறாள் என எண்ணிக்கொண்ட றஞ்சனி, எங்கட நாட்டில பொருட் சேதம், உயிர்ச்சேதம் மேலிட்ட பிரச்சினையடி. உனக்கு பிறகு விளக்கமாகச் சொல்லுவேன். இப்ப விளங்கப்படுத்த நேரமில்லை என்றுவிட்டாள் றஞ்சனி.
மம்மி, மம்மி ஒருவரும் Gun ஆல சுடயில்லை. என்ன மம்மி வெடிச்சுப் புகை வருகுது. ஏன் மம்மி அந்த அக்கா அழுகிறா?
சிறுவனின் முகம் கவலையால் மாறியிருந்ததை றஞ்சனி அவதானித்தாள்.
எங்கட நாட்டில சண்டை நேரம் நிலத்தில புதைத்து வைத்த கண்ணிவெடி’ வெடிச்சுப் போட்டுது. அந்த அக்காவுக்கு காலில காயம் வந்திட்டுது. Hospital க்குக் கொண்டுபோகினம். அதுதான் அந்த அக்கா அழுகிறா.
அது என்ன மம்மி கண்ணிவெடிகள்? ஏன் நிலத்தில புதைக்கிறவை?
கொஞ்சநேரம் பொறுங்கோ குஞ்சு. Landmines என்று சொல்லுறது. முந்தி ‘டயானா’ அன்ரிகூட தொலைக்காட்சியில ஆபிரிக்கப் பிள்ளைகளை வைத்துக்கொண்டு கதைத்தா. நீங்க பார்த்தனீங்கதானே ! அதுமாதிரித்தான். இன்னுமொரு ஐந்து நிமிடம் பொறுங்கோ. நிகழ்ச்சி முடிந்தவுடன் வடிவாக விளங்கப் படுத்துகிறேன்.
பிள்ளை றஞ்சனி. சொல்லிறனெண்டு கோபிக்காதை. இவன் சின்னவன் வித்தியாச மாகக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறான். அவனோட தமிழில கதை. தமிழைச் சொல்லிக் கொடு. ஆங்கிலம் என்பது ஏதோ ஒரு உயர்வான மொழி என்றும், அது கலந்து பேசினால்தான் கௌரவம் என்று சிலர் நினைக்கினம். உண்மை யாக நினைக்க வருத்தமாக இருக்கு. எல்லாம் தமிழ் மயம் என்று இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அந்த நிலையிலிருந்து நாம் நம்மைச் சிறிது தளர்த்திக் கொள்ளவேண்டும். இல்லையெனில் இளைய தலைமுறை தமிழைக் கண்டு விலகி ஓடி விடும் நிலைதான் வரும் பிள்ளை. சில பொருட்களுக்கான பெயர்களை ஆங்கில வடிவத்திலேயே சொல்லவேணும். அப்படிச் சொல்லைக்குள்ள எங்கட மொழி நடை கூட மாறலாம். அதுபற்றிப் பிரச்சினையில்லை. ஆனால் எங்கட நாட்டு மொழிகளைப் படிக்க வேண்டும். அவன் ஆங்கிலப் பள்ளி கூடத்துக்குப் போறபடியால் ஆங்கிலத்தில் தான் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பான். நீ அவனோட தொடர்ந்து தமிழில கதைச்சுப்பார். றஞ்சனியின் அம்மா தொடர்ந்து கொண்டே இருந்தா.
ஓம். அம்மா நீங்க சொல்லுறது சரிதான். இவனுடைய வகுப்பில இவனோட ஒரு சிங்களப் பையனும் படிக்கிறானாம். ‘பிரதாப் தான் தன்ர BEST FRIEND என்று அடிக்கடி கதைப்பான். வீட்டுக்கும் கூட்டிக்கொண்டுவந்து ஒன்றாகச் சாப்பிட்டு விளையாடுவார்கள். சில சிங்களச் சொற்களைக் கூடக் கலந்து பேசுவான். உண்மை யிலேயே எனக்குச் சரியான சந்தோஷமாகவே இருப்பதுண்டு. நான் நினைக்கிறேன் பிரதாப்பி னுடைய பெற்றோர் வீட்டில் சிங்கள மொழிதான் பேசுகிறார்களென்று. எவ்வளவு மகிழ்ச்சியாக விருக்கிறது இருவரும் நல்ல நண்பர்களாக விருப்பது. இந்தச் சிறுவனுக்கு எப்படி எங்கள் நாட்டுப் பிரச்சனையை விளங்கப்படுத்துவது? சிக்கலாகிவிடுவான். சின்னப்பிள்ளை தானே! விபரம் புரியட்டும்.
தொலைக்காட்சியில் ‘அசோகா ஹேந்தகம’ என்ற சிங்கள நெறியாளரின் ‘மே பாரே எண்ட’ (இந்த வழியால் வாருங்கள்) என்ற தொலைக்காட்சித் தொடர் போய்க் கொண் டிருந்தது.
மம்மி மம்மி இந்த Language தான் பிரதாப் ஆட்கள் கதைக்கிறவை. தனக்குத் தெரிந்த ‘அங்கிள்’ யாராவது தொலைக்காட்சியில் வந்தாலும் இதே கத்துத்தான்.
உண்மையில் மொழிகள் எதுவாகினும் தெரிந்திருக்கவேணும். இல்லாவிட்டால் வலது குறைந்ததுகள் மாதிரித்தான். றஞ்சனி பெரு மூச்சொன்றை உள் எடுத்து விட்டாள்.
மம்மி, மம்மி பாருங்க. இது என்ன மம்மி? ஏன் எல்லோரும் அந்த அக்காவைச் சுற்றி நிண்டு பார்த்து அழுகினம்? என்ன சொல்லினம் மம்மி.
அந்த அக்கா நல்லாக ‘டான்ஸ்’ ஆடுவாவாம் குஞ்சு. அவ டான்ஸ் கிளாசுக்குச் செல்லும்போது கண்ணிவெடி வெடிச்சு காலில பட்டுட்டுதாம். டொக்டர்மார் ஒரு காலை எடுத்து விட்டார்களாம். அதுதான் அந்த அக்காவின் அம்மா அழுகிறா.
மம்மி, இனி அந்த அக்கா எப்படி டான்ஸ் ஆடுவா?
இனி அந்த அக்கா டான்ஸ் ஆட முடியாதடா குஞ்சு.
எனக்கு சரியான கவலையாயிருக்குது மம்மி. அவவுக்கு நடக்கவும் ஏலாதுதானே மம்மி?
ஓம். ஒரு காலால் எப்படி நடக்கிறது. கஸ்ரம் தானே குஞ்சு. இப்படி கனக்க அக்காமாருக்கு, அண்ணாமார்களுக்கெல்லாம் கால்கள் இல்லை யாம். அதுதான் இங்கே லண்டனில காசு சேர்த்து பொய்க்கால் போட உதவி செய்யினம்.
அப்போ அந்த அக்காவுக்கு நாங்களும் உதவி செய்வோம் மம்மி. நாங்கள் ஒன்று செய்வோம் மம்மி. இந்த முறை பள்ளிக்கூட லீவுக்கு பிரான்சுக்குப் போகாமல் இலங்கைக்குப் போவோம். அங்கே அந்த அண்ணாமார், அக்காமார்களையும் பார்த்துக் கொண்டு வருவோம். நீங்க முந்திச் சொன்னீங்க. கண்டியில கனக்க யானைகள் இருக்குது என்று. அங்கே போய் யானைகளும் பார்த்திட்டு வருவோம்.
அப்போ பிளேன் ரிக்கற்றுக்கு காசு வைத்திருக்கிறீங்களோ குஞ்சு?
அம்மம்மாவிட்ட கேட்டால் ‘பாங்’ இல எடுத்துத் தருவா மம்மி.
அப்படியோ ! அதுசரி – நீங்க அந்த அண்ணா அக்காமாரைப் பார்க்கப் போறதென்றால் முதலில தமிழ் கதைக்கத் தெரியவேணும்.
ஏன் மம்மி அவர்கள் ‘இங்கிலிஷ்’ கதைக்க மாட்டினமோ !
அங்கே தமிழ்தான் கதைப்பினம்.
ஜெம்மா அன்ரி என்னோட போனில ‘இங்கிலிஷ்’ லயும் தானே கதைக்கிறவ. சரி மம்மி, நான் ‘றை’ பண்ணி தமிழில கதைச்சுப் பார்ப்பேன். நீங்களும் ரீச்சராகத் தானே இருந்தனீங்கள். தமிழ் சொல்லித் தாங்கோ மம்மி.
அச்சாக் குஞ்சு. இனிமேல் கொஞ்ச நேரத்தை ஒதுக்கி தமிழ் படிப்போம்.
மம்மி மம்மி என்ர பிறந்த நாளுக்கு ‘கேம்போய்’ வேண்டித்தாறது என்று தானே புறோமிஸ் பண்ணினனீங்க.
‘ஓம் வேண்டித் தருவோம் தானே !
மம்மி அந்த விளையாட்டுச் சாமானை ஆறுதலாக வேண்டுவோம். இப்போ வேண்டாம் மம்மி. அந்தக் காசை எல்லாம் சேர்த்து வைத்து அந்த அக்காவுக்கு கால் போடக் குடுப்பம். அந்த அக்கா பாவம்.
சிறுவனின் வார்த்தைகளைக் கேட்டுப் பிரமித்த றஞ்சனி, ‘எப்படியெடா குஞ்சு இப்படி யெல்லாம் யோசனை வருகுது’ அவனைக் கட்டியணைத்து முத்தங்களால் சொரிந்து கொண்டிருந்தாள்.
– ஞானம், டிசம்பர் 2005.
![]() |
நவஜோதி, ஜோகரட்னம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அகஸ்தியர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், விமர்சனங்கள், வானொலி உரைகள், வானொலி நாடகங்கள், குட்டிக்கதைகள் என்பவற்றை எழுதியுள்ளதுடன் எனக்கு மட்டும் உதிக்கும் சூரியனின் கவிதை என்னும் நூலையும் எழுதியுள்ளார். இவரது நூல்கள் எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன் மகரந்தச் சிதறல் மேலும் விவரங்கள் இவர் எனக்கு மட்டும் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்."மகரந்தச் சிதறல்" என்ற இவரது படைப்பு…மேலும் படிக்க... |