மனைவியின் தோள்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 2, 2025
பார்வையிட்டோர்: 150

(விழுப்புரம் நகருக்கு மேற்கில் உள்ள நகரம் – இன்று திருக்கோயிலூர் என்று வழங்கப்படும் திருக்கோவலூர். தமிழ் கூறும் நல்லுலகத்தின் பழைமையான நகரங்களில் ஒன்று. திருமாலைப் போற்றும் தீந்தமிழ்ப் பாசுரங்களை முதலாழ்வார்கள் மூவர் பாடிய இடம் இந்த திருக்கோவலூர். திருக்கோவலூரை கோநகரமாகக் கொண்ட நடுநாட்டை ஆண்டு வந்தவன் மாமன்னன் மலையமான் திருமுடிக்காரி . சங்கத் தமிழ் காலத்தில் இந்தப் பகுதியில் சிறப்புற செங்கோல் ஆட்சி நடத்தி வந்தவன்)
மழைக் காலத்து இரவு நேரம். நகர் உலா சென்று விட்டு கம்பீர நடையுடன் ஆஜானுபாகு உருவம் கொண்ட மாமன்னன் திருமுடிக்காரி , அரண்மனையில் தம்முடைய அரசி பங்கயப் பாவையின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தார். அரசர் வந்ததும் பணிப் பெண்கள் அந்த அறையிலிருந்து விரைவாக நகர்ந்து வெளியேறினர்.
மலர்ந்த முகத்துடன் அரசரைப் பார்த்த ராணி , அவரிடம் பால் குவளையைக் கொடுத்தாள் . அதனைப் பருகாமல் , கட்டிலில் வைத்து விட்டு , அரசர் மனைவியை இறுக அணைத்துக் கொண்ட போது அரசி அணைப்பிலிருந்து விடுபட்டாள். அந்த அறைக்குள் அவர்களது புதல்வி பதின் பருவ மங்கை பொற்செல்வி வந்து நின்றதுதான் காரணம்
அழகான, துருதுருவான, ஒடிசலான தோற்றம் கொண்ட பொற்கொடி, புன்னகை பூக்க பேசினாள் –
“இதில் என்னம்மா இருக்கிறது? எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இந்நாடே என்று பாவாணர் பாடி உள்ளனரே … நாட்டுத் தலைவனாக உள்ள எந்தையார் என் தாயுடன் மகிழ்வதை அடியாள் கண்களால் காண்பதைப் பேறாக கருதுவேன் “
திருமுடிக்காரியார், புதல்வியின் தோளை வாஞ்சையுடன் வருடினார். பேச்சை மாற்ற நினைத்த அரசி “பொற்கொடி.. நேற்று பெண்ணை ஆற்று வெள்ள நிலைமையை தந்தையார் பார்க்கச் சென்ற போது , கட்டுக் காவல் , மெய்க்காப்பாளர்களையும் மீறி எவனோ தந்தையார் மீது கத்தி வீசி விட்டான். நீ அறிவாயா?”
பொற்கொடி சிரித்தாள் .
“நான் என்ன சொல்கிறேன் … நீ என்னம்மா சிரிக்கிறாய் “
பொற்கொடி பதில் இறுத்தாள் –
“கவி வாக்கின் தன்மையை நினைத்தேன்.“
“என்ன கவி வாக்கு?“
“கடந்த வாரம் கபிலர் பெருமான் , தந்தையாரைப் பற்றி ஒரு பாடல் பாடினார் . தாங்கள் அறியவில்லையா? அந்தப் பாடலில் ‘உனக்கு என்று இருப்பது நிலையான கற்பினை உடைய உன் மனைவியின் தோள் மட்டுமே’ என்று தங்களைத்தான் சிறப்பித்துப் பாடி உள்ளார் கபிலர் பெருமான்.. அதற்கு ஒப்ப, ஆற்றுப் பெருக்கை அப்பா பார்வையிட்ட போது அவரை நோக்கி வந்த கத்தியின் குறி அப்பா மேல் வராமல் உடன் நின்ற நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள். கபிலர் பெருமான் சொன்னது உண்மைதானே. நீங்கள் அவருடைய சொத்து அவர் உங்கள் சொத்து. மகாராஜன் உலகை ஆளலாம் இந்த மகாராணி அவனை ஆளுவாள் என்று பாடினார்களே அது போல்”
ராணி, அரசரைப் பார்த்து “என்னென்ன பேசுகிறாள் பாருங்கள்..“ என்றாள்.
அரசர் “ஆமாம் அவள் பேச்சை செவி மடுத்து நாம் மகிழத் தான் வேண்டும் . திருவள்ளுவர் மொழிந்தாரே – தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது என்று”
பொற்கொடி பேசினாள் –
“ஆனால் தந்தையார் அவர்களே … நம் நாட்டை சிறப்பித்து பாடுகையில் கடல் இல்லாத நாடு என்று பாடி விட்டாரே … கடல் இல்லாது இருப்பது தனிச் சிறப்பா என்ன ? “
அரசர் , பொற்கொடியின் தளிர்கரங்களைப் பற்றிக் கொண்டு பேசினார்
“பொற்கொடி … தொன்மையான கோநகரங்களைக் கொண்ட நம் நிலத்து நாடுகள் எல்லாம் கடல்கோளுக்கு ஆட்பட்டு விட்டன. கடல்கோளால் பாண்டிய நாட்டின் கபாடபுரம் , சோழ நாட்டின் பூம்புகார் ஆகிய செழிப்பான நகரங்கள் அழிந்து பட்டது. அத்தகைய துன்பங்கள் நமக்கு நேர்ந்திட வாய்ப்பு இல்லை என்பதால் நம் பகுதியில் கப்பல் உலாவும் அலைகடல் இல்லாமல்போனதை நமது நாட்டின் தனிச்சிறப்பாக புலவர் பெருமான் பாடினார்.. “
பொற்கொடி பேசினாள் – “எனக்கு என்னவோ அதனை ஏற்க முடியவில்லை . எனக்கு கடல் பிடித்துப் போய்விட்டது. கடலைப் பற்றிப் படிக்கப் படிக்க கடல் என்னை வசீகரிக்கிறது. கடல் சூழ்ந்த உலகம் என்று தானே பெரியோர் உலகைப் பற்றிக் கூறுகின்றனர். நம் நாட்டில் கடலும் துறைமுகமும் இல்லாமல் போனது எனக்கு என்னவோ பெரும் குறையாகத் தான் தெரிகிறது.“
அரசி இடைமறித்தாள்
“அதனால் என்ன இளவரசி … கடல் உள்ள நகர் உள்ள நாட்டை ஆளும் இளம் அரசனுக்கோ இளவரசனுக்கோ உன்னைப் பேசி மணமுடித்து விடுகிறோம் . “
இளவரசி, அம்மாவின் அருகில் வந்து வெட்கத்துடன் அவள் தோளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
(இந்தப் புனைகதைக்கான ஆதாரம் – புற நானூற்றுப் பாடல் 122 – பாடியவர் – கபிலர் . பாடப்பட்டவன் – மலையமான் திருமுடிக்காரி . துறை இயன்மொழி திணை பாடாண்திணை – இந்தப் பாடலின் இறுதி அடி – வடமீன் புரையுங் கற்பின் மடமொழி அரிவை தோள் அளவு அல்லதை நினது இலை நீ பெருமிதத்தையே – பொருள் : மன்னா உனக்கென இருப்பது வடமீன் போல் நிலையான கற்பினை உடைய உன் மனைவியின் தோள் மட்டுமே இதுவே உனக்கு இருக்கும் பெருமிதம் )
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
