கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 25, 2025
பார்வையிட்டோர்: 1,393 
 
 

(1960ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-22

11. ஆபுத்திரன் வரலாறு

வாரணாசிரமம் என்னும் இடத்தில் அபஞ்சிகன் என்னும் அந்தணனொருவன் இருந்தான். அவன் மனைவி சாலி. அவள் தீயொழுக்கமுடையவளா. யிருந்தாள். ஆனால், பின்னர் அதற்காக மனம் வருந்தி அப்பாவத்தை நீக்குவதற்காக இந்தியா வின் தென்கோடியிலுள்ள ‘கன்னியாகுமரி என்னும் தீர்த்தத்தில் தீர்த்தமாட விரும்பி, அங்கே செல்லும் புண்ணிய யாத்திரிகர் குழாத் துடன் சென்றாள். அவள் அப்பொழுது பூரண கருப்பவதியாயிருந்தும் அதனைப் பொருட்படுத் தாது செல்லும்பொழுது, வழியிலே பிரசவ வேதனையால் வருந்தி, நடுயாமத்தில் இரு ளடர்ந்த காடொன்றில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். பெற்றவள் அக் குழந்தைக்காகச், சிறிதும் இரங்காது, யாரும் செல்லாத தோட் டத்தில் அக் குழந்தையை வைத்துவிட்டு நீங்கி னாள். தாயில்லாமையால் உணவு பெறாது வருந் துகின்ற குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, ஒரு பசு அங்கே வந்து அக் குழந்தையின் துன்பம் நீங்குமாறு தன்னுடைய நல்ல பாலை ஊட்டி நாவால் நக்கி ஏழு நாட்கள் வரை பாதுகாத்து நின்றது. 

இஃது இங்ஙனமாக, வயனங்கோடு என்னு மிடத்திலுள்ள இளம்பூதி என்னும் அந்தணன் ஒருவன், தன் மனைவியுடன் அவ்வழியே வந்தான். வந்தவன், அக் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு மிக்க துன்பத்துடன் அவ்விடம் சென்றான். பிள் ளைப்பேறற்ற அவன், பசுவினால் பாதுகாக்கப் பட்டுக் கிடக்கும் அக் குழந்தையைக் கண்டதும் ‘இவன் ஆமகனல்லன் ; என்மகன்,’ என்று கூறி, அக் குழந்தையைத் தூக்கி, ‘நமக்கோர் நம்பி பிறந்தான், எனது சுற்றம் பெருகுவதாக,’ என்று சொல்லி, அக் குழந்தையுடன் ஊர் சென்று தன் உறவினர்களுடன் குழந்தையை வளர்த்து வந்தான். 

அக் குழந்தை வளர்ச்சிபெற்று உரிய காலத்தே தன் குலத்துக்குரிய கல்விகளைக் கற்று வந்தான். அந்தணர்கள் அறியவேண்டுவன அனைத்தையும் அவன் அறிந்தபின்னர், அவ்வூரி லுள்ள ஓரந்தணன் வீட்டிற்கு ஒருநாட் சென் றான். அங்கே ஒரு பசு கட்டுத்தறி யொன்றிற் கட்டப்பட்டிருந்தது. அதன் கொம்புகளிற் பல நிறங்கள் பொருந்திய மாலை சுற்றப்பட்டிருந்தது. கொல்லும் தொழிலையுடைய வேடரது வில்லுக் குப் பயந்து ஓடி, அவர்களது வலையில் அகப்பட்டு வருந்தும் மான்போல, பெருமூச்செறிந்து அது கரைந்து புலம்பிக் கொண்டிருந்தது. அதற்கு மலர்கள் அணியப்பட்டிருந்ததனால் அது மறுநாட் காலையில் நிகழவிருக்கும் யாகத்திற் பலியிடப்பட இருப்பதை ஆபுத்திரன் அறிந்துகொண்டான். அப் பசுவிற்கு நேரவிருந்த கொடிய இடரை எண்ணி மனம் வருந்திய ஆபுத்திரன், எப்படி யாவது அந்தப் பசுவைக் காப்பாற்றுவது என்று உறுதிகொண்டான். ஆகவே; நள்ளிரவில் யாருங் காணாது சென்று, அப் பசுவைத் திருட்டுத்தனமாக  அவிழ்த்துக்கொண்டு அவ்விரவிலேயே கல்லும் குழியும் நிரம்பிய வழிகளைக் கடந்து சென்றான். 

திருட்டு எப்படியோ கண்டுபிடிக்கப்பட்டது. பார்ப்பனர் அவனை அகப்படுத்தி, “புலைச் சிறு மகனே, ஏன் இந்த ஆவைத் திருடினாய் ; கூறு,” என்று, அவனைக் கோலால் நையப்புடைத்துக் கேட்டனர். இதற்கிடையே அப் பசு தன்னைப் பிடித்தவரிடமிருந்து திமிறித் தப்பிக்கொண்டு, குடர் புறப்படும்படியாகத் தலைவனைத் தன் கொம்பாற் குத்திவிட்டுக் காட்டிலே ஓடிற்று. 

அப்பொழுது ஆபுத்திரன் அந்தணர்களை நோக்கி “பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாதீர் கள் ; அரசனால் விடப்பட்ட முடிக்குரிய காணி களிலே, தானே முளைக்கும் பசும்புல்லை உண்டு, இவ்வுலகிலே தான் பிறந்தநாள் முதல் எவருக்கும் எந்தத் தீங்கும் செய்யாது மனிதனுக்கு இனிய பாலை அருள் உணர்ச்சியோடு தருகிற இப் பசுவுடன், உமக்கு வந்த பகைமை என்ன ? அது எக்காரணத்தால் வந்தது? இதனை நீங்கள் கொல்லத் துணிந்ததேன்,” என்று கேட்டான். 

உயிர்களுக்கு முதல்வனாகிய நான்முகனால் எமக்கு அருளப்பட்ட வேதத்தை நீ அறியமாட் டாதவனாகையால், அதனை இகழ்ந்தாய்; மயங்கு கின்ற உள்ளம்கொண்ட சிறியவன் நீ; நீ மனிதன் அல்லன்; நீ மகனல்லன் என்பதற்குப் பொருத்த மானவனே; நீ விலங்கின் மரபினனேயன்றி வேறன்று;'” என்று, அந்தணர்கள் ஆபுத்திரன் மேற் சீறி யுரைத்தனர். 

இளைஞன் எதிர்வாதிட்டான். 

“அசலன், மானின் மகன் ; சிருங்கி, பசுவின் மகன் ; விருஞ்சி, புலியின் மகன் ; அறிவுடையோ ராற் புகழப்படும் கேசகம்பளன், நரியின் மகன்; இவர்களெல்லாம் உங்களாற் போற்றித் துதிக்கப் படும் முனிவர்கள் ; அங்ஙனமாக, என்னை விலங்கின் மகன் என்று இகழ்தல் ஏன்?” 

ஆபுத்திரனின் இவ் வார்த்தைகளைக் கேட்ட பார்ப்பனர்களில் ஒருவன் கடுஞ் சினங்கொண்டு, இச் சிறுவனுடைய வரலாற்றை யான் அறி வேன் ; கன்னியாகுமரியில் நீராடிவிட்டு வருத் தத்துடன் வந்த சாலியென்னும் ஒரு பார்ப்பனி யைக் கண்டு, ‘உன் ஊர் யாது? நீ எதற்காக வருந்துகின்றனை? இங்கு வந்ததேன்?’ என வினாவினேன். அவள், தான் வாரணாசியென்னும் ஊரிலுள்ள ஆரண உவாத்தியாயனாகிய ஓரந்த ணன் மனைவியென்றும் தான் ஒழுகிய தீய ஒழுக் கத்தாற் கணவனைப் பிரிந்து கன்னியாகுமரிக்கு நீராடச் செல்லுகையிற் கொற்கை நகரத்துக்குக் காதவழிதூரத்துக்கு அப்பாலுள்ள இடையர் சேரியை அடுத்த காட்டில் ஆண்குழந்தை ஒன் றைப் பெற்று ஆங்குள்ள ஒரு தோட்டத்தில் விட்டுப்போனதாகவும் கூறி, அப்படிப்பட்ட தனக்கும் விமோசனம் உண்டா? என்று துன் புற்று அழுதாள். அவள் பெற்ற பிள்ளையே இவன். இதைச் சொல்லுவதால் யாது பயன்? என்று இதுகாறும் சொல்லாதிருந்தேன். இவன், பொது மகன் ; இவனைத் தீண்டாதேயுங்கள்,” என்று கூறினான். 

ஆபுத்திரன் சிரித்து, “வானகத்து ஆடல் நங்கையாகிய திலோத்தமையின் புத்திரர்கள் பெரிய முனிவர்களாக இருந்ததை நீவிர் அறிந்த தில்லையா ? அவர்கள் உங்கள் குல முதற்குரவர் கள் அல்லரோ ? அவர்கள் நான்முகனுக்கு ஆடல் நங்கையிடம் பிறந்த குழந்தைகள் அல்லரோ ? அங்ஙனமாக, சாலியைப்பற்றி நீங்கள் எங்ஙனம் அவதூறு கூறல் முடியும்,” என்று கூறினான். 

ஆபுத்திரனை வளர்த்த இளம்பூதி, அவனை அசுத்தன் என அறிந்து, அவனைத் தன் வீட்டில் ஏற்க மறுத்தான். பார்ப்பனர் அவன் பசுத் திருடிய கள்வனென்று குற்றஞ்சாட்டி, அவனைத் துரத்திக் கூக்குரலிட்டனர். இந்நிலையில், ஆபுத் திரன் பார்ப்பனச்சேரியை விட்டகன்று தென் மதுரையை அடைந்தான். வீடு வீடாக வாயில் தோறுஞ் சென்று உணவு பெற்று குருடர், செவி டர், முடவர், முதியோர், ஆதுலர் என்போரை உண்பித்து மீதியைத் தானும் உண்டனன். இரவு நேரத்திற் பிச்சை ஏற்கும் ஓட்டைத் தலை- யணையாகக் கொண்டு சிந்தாதேவி கோயிலின் வெளிக் கூடத்தில் உறங்கினான். அவன் இரவல னாயினும் உயிர்களிடத்துக் கொண்ட அன்பின் மிகுதியால் அவன் எல்லையற்ற கொடையாளி யாக விளங்கினான்.

12. ஆபுத்திரன் அமுதசுரபியைக் கோமுகியிலிட்டமை 

ஒருநாளிரவு மழையும் இருட்டும் அதிகமாய் இருந்தன.சிந்தாதேவியின் கோயிலில் ஆபுத்திரன் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். அப் பொழுது, பயணம் செய்து அலுப்படைந்த இரவலர்கள் சிலர், அங்கே வந்தார்கள். பசி நோய் பொறுக்கமுடியாத அவர்கள், ஆபுத்திரனை எழுப்பி உணவு தரும்படி கேட்டார்கள். இரக்க நெஞ்சுடைய சிறுவன், தன்னிடம் உணவு இல் லாமையால் மனவருத்தம் அடைந்தான். அப் பொழுது அங்கே கோயில்கொண்ட சிந்தாதேவி என்னுந் தெய்வம் எழுந்தருளிவந்து “மகனே, நீ துயருறல் வேண்டாம். இப் பாத்திரத்தைப் பெற்றுக்கொள் ; நாடெல்லாம் வறுமையுற்றாலும் இவ்வோடு குறைவுபடாது வளர்ந்துகொண்டே யிருக்கும்.” என்று கூறி, தன் கையிலுள்ள அட் சய பாத்திரத்தை அவன் கையிற் கொடுத்தாள். உடனே, அவன் அளவுகடந்த மகிழ்ச்சியடைந்து, ”சிந்தாதேவி! கலைக்கோயில் கொண்டருளிய நந்தா விளக்கே! அறிவுடையோர் நாவிற்றங்கி யிருக்கும் தேவியே ! தேவர்களுக்குத் தலைவியே ! பூவுலகத்தோருக்கு முதல்வியே! மற்றையவர்கள் படுந் துன்பத்தைக் களையும் தாயே !” எனப் போற்றிப் பணிந்தான். அப்பாத்திரத்தைக் கொண்டு பசியால் வருந்திவந்த இரவலர்களுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தான். அன்றுமுதல் எல்லோருக்கும் அதனுதவியால் உணவு அளிப்பா னாயினான். 

பாண்டிநாட்டிற் பஞ்சம் பரவியது. நாடோ றும் ஆயிரக்கணக்கான ஏழைகள் அவனைச் சூழ்ந்து வந்து அவனிடமிருந்து உணவு பெற்று மகிழ்ந்தார்கள். விலங்குகளும் பறவைகளும் அவனை விட்டுப்பிரியாமல் அவனையே சூழ்ந்தன. அத்தனை பேருக்கும் உணவளித்தும் அவ்வுண் கலம் ஒருபோதும் குறைவுற்று வெறுமை யானதில்லை. 

இந்திரன், ஆபுத்திரனது புண்ணியச் செய லைத் தனது பாண்டுகம்பள நடுக்கத்தால் அறிந்து கொண்டான். பாண்டுகம்பள மென்பது, இந் திரனுக்குரிமையான ஒரு வெள்ளைக் கம்பளம். அதனுடைய அசைவைக்கொண்டு உலகிலுள்ள நிகழ்ச்சிகளை இந்திரன் அறிந்துகொள்ளுவான். அதன்மூலம் ஆபுத்திரனுடைய தருமச்செயலை அறிந்த இந்திரன், அவனுக்கு வரங்கொடுக்க நினைந்து ஒரு முதிய வேதிய வடிவங் கொண்டு அவன்முன் தோன்றி, “நான் இந்திரன்; உனது தருமச்செயலை அறிந்து உனக்கு வரமளிக்க வந்தேன். உனக்கு வேண்டியது யாது? உன் னுடைய தானத்தின் பயனைப் பெற்றுக்கொள்” என்று கூறினான். இதனைக் கேட்டதும் ஆபுத்திரன் விலாவிற நகைத்து, ‘அறஞ் செய்பவர்களோ, தவஞ் செய்பவர்களோ, துறவிகளோ எவருமில் லாத தேவர்கள் வதியும் நாட்டுக்கு இறைவனாகிய இந்திரனே, பசியால் வருந்தி வந்தவர்களுடைய பசியைத் தீர்த்து அவர்களுடைய இனிய முகத்தைக் காணுதற் குதவிசெய்கின்ற என் தெய்வப் பாத்திரம் ஒன்றே எனக்குப் போதியது. வேறொன்றும் வேண்டுவதில்லை” என்று இந்திரனை மதியாது கூறினான். 

தன்னை மதியாத ஆபுத்திரனின் வார்த்தை களாற் கோபமுற்ற இந்திரன், எங்கும் மிக்க மழையைப் பெய்வித்து, பயிர்கள் வளரும்படி செய்தான். இதனால், நாட்டிற் செல்வமும் உண வும் அதிகரித்தன; பசியால் வருந்துவோர் இலராயினர். 

ஆபுத்திரனிடம் உணவுபெற வருவோர் யாரும் இலராக, அவன் மதுரையை விட் டகன்று ஏழைகளையும் பசிப்பிணியால் வாடுபவர் களையும் தேடி ஊர்தோறும் போய், ‘உண்போர் யாரேனும் உண்டோ?” என்று வினாவத் தொடங் கினான். அது கேட்ட எல்லோருஞ் செல்வக் களிப் பால் அவனை இகழ்ந்தார்கள். உணவு பெறுபவர் இன்மையால் பெருஞ் செல்வத்தை இழந்தவன் போல வருந்தி அவன் தனியாக அலைந்து கொண்டிருந்தான். 

இங்ஙனமாக, கடல்வழியாகப் பயணஞ் செய்த வணிகர் சிலர், மழையின்மையாற் சாவக நாட்டோர் பசியால் மடிகின்றனர்,’ எனக் கூறியதைக் கேள்வியுற்ற ஆபுத்திரன், சாவகஞ் சென்று அந்நாட்டு மக்களின் துன்பந் தீர்க்கவேண்டுமென்று அந்நாடு செல்லுங் கப்ப லொன்றில் ஏறிச் சென்றான். 

பயணத்திடையே புயலொன்று ஏற்பட்டது. இதனாற் கப்பல் மணிபல்லவத் தீவினருகே நங்கூர மிட்டுத் தங்கியது. ஆபுத்திரன் கரையிலிறங்கித் தீவுக்குட் சென்றான். ஆனால், இரவுக்குட் சாதக மான காற்று வீசத்தொடங்கிற்று. அப்பொழுதும் ஆபுத்திரன் மணிபல்லவத் தீவினருகிலேயே இருந் தான். இறங்கிய ஆபுத்திரன், கப்பலில் ஏறி விட்டானென்று எண்ணிய மீகாமன், இருளிற் கப்பலைச் செலுத்திக்கொண்டு சென்றான். ஆபுத் திரன் திரும்பி வந்து கப்பல் போய்விட்டதை அறிந்தான். யாருமில்லாத அத் தீவிலே தான் தனியே அட்சயபாத்திரத்துடன் இருப்பது குறித்து அவன் பெரிதும் கலங்கினான். ‘பலருக்கு உணவளிக்கும் இப் பாத்திரத்தை நான் மட்டும் இருக்கும் இத்தீவில் வைத்திருந்து யாது பயன் ? என்று எண்ணி, அப்பாத்திரத்தைத் தொழுது *“மிக்க கருணையுடன் தருமத்தை மேற்கொண்டு உயிர்களைப் பாதுகாப்போர் யாராவது வரின் அவர் கையிற் புகுவாயாக. அவர் வருந்துணையும் வருடத்திற்கு ஒருநாள் நீ தோன்றுவாயாக” என்று சொல்லி ஆங்குள்ள கோமுகிப் பொய்கை யில் விட்டு, தானும் பட்டினியாயிருந்து உயிர் துறந்தான். 

ஆபுத்திரனுக்கு ஏழுநாள்வரை பாலூட்டி வளர்த்த பசுவானதுஅப்புண்ணிய விசேடத்தால், சாவகநாட்டிலே, தவளமலையிலே தவஞ்செய்து கொண்டிருந்த மண்முக முனிவனிடத்து, பொன் மயமான குளம்புகளையும் கொம்புகளையும் உடை யதாய்ச் சென்று ஈனுமுன்னே. பால் சுரந்து எல்லா உயிர்களுக்கும் உணவூட்டி வந்தது. முக்கால நிகழ்ச்சிகளையும் அறிய வல்ல மண்முக முனிவர், இப் பசுவயிற்றில் எல்லா உயிர்களையும் பாதுகாக்க வல்ல ஒரு விசேட புருடன் பொன்மயமான முட்டையினின்றும் தோன்றுவான்,” என்று கூறினார். 

தருமஞ்செய்யச் சந்தர்ப்பம் கிடையாமையினாலே, அது காரணமாகப் பட்டினியிருந்து மணிபல்லவத்தில் இறந்த ஆபுத்திரன், தன்னை ஏழு நாள்வரை பாலூட்டிக் காத்த பசுவையே நினைந்தவண்ணம் உயிர்விட்டானாதலின் மண்முக முனிவன் கூறியவாறே, அப் பசுவின் வயிற்றிலே தோன்றினான்.அவன் அங்ஙனம் தோன்றியதினம், வைகாசி மாதத்துப் பௌர்ணிமைத் தினமாகும். 

புத்திரப்பேறின்மையால் வருந்திக்கொண்டிருந்த பூமிசந்திரனென்னும் சாவக நாட்டரசன் மண்முக முனிவனை வணங்கி, அப்பசு பெற்ற குழந்தையை வாங்கி வளர்த்து வந்தான். அச் சிறுவன் சாவக நாட்டரசுரிமையைப் பெற்று ஆட்சி புரிந்தான். 

மேற்கூறிய வரலாறுகள் அனைத்தையும் மணி மேகலைக்கு அறவணவடிகள் கூறியபின்னர், அவளை நோக்கி, “இப்பொழுது யாது காரணத் தாலோ இந்நாட்டில் உயிர்கள் வறுமையால் வருந்துகின்றன. ஆகையால், இந்த அமுதசுர பியை நீ சும்மா வைத்திருத்தல் முறையன்று. ஏழைகளுக்கு உணவளிப்பதைவிட உயர்ந்த அறம் வேறில்லை,” என்று கூறினார். 

இங்ஙனம் கூறிமுடித்த மடத்துத் தலைவராகிய அறவண வடிகளிடமிருந்து, மணிமேகலை வணக்கத்துடன் விடைபெற்றுப் பிக்குணிக் கோலம் பூண்டு அப் பாத்திரத்தையுங் கையில் ஏந்திக் கொண்டு வீதியை அடைந்தாள். இவ்வாறு அவள் தெருவீதியை அடைந்தபோது மக்கள் திரண்டு அவளை மொய்த்தனர். 

இளவரசனாகிய உதயகுமாரனால் விரும்பப் பட்ட ஒரு நங்கை, இவ்வாறு பிக்குணிக்கோலம் பூண்டு ஆண்டி உடை அணிந்து, பிச்சை ஏற்க வெளிப்பட்டமையைக் கண்டு அவர்கள் வியப்புற்றார்கள். 

அப்பொழுது மணிமேகலை “கற்புடைய மகளிர் இடும் பிச்சையையே முதலில் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்” என்று சொல்ல, காய சண்டிகை என்னும் ஒரு மாது, “பெய்யென மழையைப் பெய்விக்கத்தக்க கற்புடைமை வாய்ந்த ஆதிரையின் வீடு இது; இதிற் புகுக ;” என மணிமேகலைக்குக் கூற, மணிமேகலை, “இந்த ஆதிரை என்பாள் யார்?” என வினாவினாள். அதற்குக் காயசண்டிகை பதில் கூறத் தெடங் கினாள். 

13. ஆதிரையின் வரலாறு 

ஆதிரை காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்திற் பிறந்தவள். இவள் கணவனின் பெயர் சாதுவன் என்பது. சாதுவன் ஒழுக்கங்கெட்டுத் தன் மனைவியைத் துறந்து கணிகை ஒருத்தியோடு தொடர்பு கொண்டு, அவள்பொருட்டுத் தன் செல்வமனைத்தையும் இழந்து வறியனாயினன். வறியனாயினமையால் அவனோடு தொடர்பு கொண்டிருந்த கணிகையும் அவனை நீங்கிச் சென் றாள். இதனாலும், தன் பொருளிழப்பினாலும் பெருந்துயருற்ற சாதுவன், மறுபடியும் பொரு ளீட்ட விரும்பி, வணிகர் கூட்டத்துடன் சேர்ந்து, கப்பலிற் சென்றான். அங்ஙனம் செல்லும்போது அவன் ஏறிச்சென்ற கப்பல் காற்று மிகுதியாற் கடலிற் கவிழ்ந்துவிட்டது. அப்பொழுது கடலில் அலைந்த சாதுவன், ஒடிந்த ஒரு மரத்துண்டைப் பற்றிக்கொண்டு கரையேறி, ஒரு மலைப்பக்கத்தை அடைந்தான். அது நாகர் என்னுஞ் சாதியார் வாழும் மலைப்பிரதேசமாகும். 

கடலிற் புரண்ட மற்றொரு சிலர், வேறொரு கப்பலில் ஏறி, காவிரிப்பூம்பட்டினத்தை அடைந் தனர். அவர்கள் மூலம் கப்பல் கவிழ்ந்த செய் தியை அறிந்த ஆதிரை, தன் கணவன் திரும்பி வராமையால் இறந்திருத்தல் வேண்டும் என நினைந்து, மிகவும் துன்பமுற்று அழுது புலம்பினாள் துயர் தாங்கமாட்டாது, ‘என் கணவன் சென்ற வழியே யானுஞ் செல்வேன்’ என முடிவுசெய்து, சுடுகாட்டை அடைந்து, ஒரு குழியிலே தீமூட்டி, அத் தீயுள் விழுந்தாள். ஆனால், அந்நெருப்பு அவளை எரிக்கவில்லை ; குளிர்ந்த நீர்போல இருந்தது. அதுகண்டு “நான் தீயுஞ் சுடாத பாவியாயினேன், என்செய்வேன்,” என ஏங்கும் பொழுது, “ஆதிரையே, உன் கணவன் நாகர் வாழும் மலைப்பக்கத்தை அடைந்து உயிரோடிருக் கிறான். இன்னும் சிலநாட்களுள் சந்திரதத்தன் என்னும் வணிகனுடைய கப்பல் மூலம் இங்கே வருவான். உன் மனத்துயரை ஒழி ;” என, ஓர் அசரீரி வாக்குக் கேட்டது. இதனால், ஆதிரை மனக்கவலை ஒழிந்து, கணவன் வருகைக்காகப் பல அறங்களையுஞ் செய்துகொண்டு அவனை எதிர்பார்த்திருந்தாள். 

இஃது இங்ஙனமாக, மலைப்பக்கத்தை அடைந்த சாதுவன், களைப்பால் ஒரு மரத்தின் நிழலிற் படுத்திருந்தான். அப்பொழுது அங்கே சில நாகர்கள் தோன்றினார்கள். அவர்கள் ஆடை யற்றவர்கள்; பயங்கர ரூபம் படைத்தவர்கள் ; மனிதரை உண்பவர்கள். அவர்கள் சாதுவனைக் கண்டதும் ‘இவனுடம்பு நமக்கு உணவாகும்’, என்று கருதி அவனை எழுப்பினர். 

சாதுவன் எழுந்ததும் நாகர்கள் பேசும் மொழியிலேயே அவர்களோடு உரையாடினான். அவனும் தமது மொழியிலே உரையாடியதைக் கேட்டவுடனேயே அவனை ஒரு பெரு மகனாக மதித்து, அவனை வணங்கி, தமது குருமகன் இருக்குமிடத்துக்கு வருமாறு வேண்டினர்; ; அவனும் அவர்களுடன் சென்றான். அங்கே கள்ளுக் காய்ச்சிய பானைகள், நிணங்கள், எலும்புகள் என்பன குவிக்கப்பட்ட குவியலின் மீது இடப்பட் டிருந்த ஓர் இருக்கையில் நாகர்களது தலைவன் வீற்றிருந்தான். அவனது பக்கத்திலே அவன் மனைவியுங் காணப்பட்டாள். இந்நிலை, ஒரு கரடி தன் பெண் கரடியுடன் கூடி ஓரிடத்தே இருப்பது போலக் காணப்பட்டது. நாகர் தலைவனைக் கண்ட சாதுவன் அவனுடன் இனிய மொழிகள் பேசி, அவனைத் தன்வசமாக்கிக்கொண்டான். 

நாகர்தலைவன், சாதுவன் ஆங்கு வந்த வர லாற்றை யறிந்து, தன் ஏவலாளரை அழைத்து, இவனுக்குக் கள்ளும் ‘ஊனும் கொடுங்கள்;’ எனக் கட்டளையிட்டான். இவற்றைக் கேட்ட சாதுவன், தன் இரு செவிகளையும் பொத்திக் கொண்டு, ” தனக்கு அவை வேண்டுவதில்லை,” எனக் கூறினான். 

சாதுவன் கூறியவற்றைக் கேட்டு ஆச்சரிய முற்ற நாகர் தலைவன், “நீ ஏன் இவைகளை வெறுக்கின்றாய்; இவைகளிலும் பார்க்க இன்பந் தரத்தக்கன யாவை? இருக்குமாயின் அவற்றை எங்களுக்குக் கூறுவாயாக”, எனக் கூறினான். 

“பிறந்தவர் இறப்பர்; இறந்தவர் பிறப்பர்; இறப்பும் பிறப்பும் உறங்குதலும் விழித்தலும் போன்றன. அறஞ்செய்வோர் மோட்சமடைவர். பாவம் செய்வோர் நரகம் அடைவர். கள்ளுண் ணலும் உயிர்களைக் கொல்லுதலும் பாவங்களாகும். அப் பாவங்களைச் செய்யின் நரகம் அடைதல் வேண்டும்.” என்று, சாதுவன் நாகர் தலைவனுக்கு விடையளித்தான். அப்பொழுது நாகர் தலைவன், சாதுவனை நோக்கிப் புன்னகை புரிந்து இன்முகங் காட்ட, அவர்களுக்கிடையே பின்வரும் உரையாடல் நிகழலாயிற்று. 

நாகர் தலைவன் : உடம்பை விட்டு உயிர் நீங்கும் போது வேறிடம் புகும் என்று கூறினை ; அவ்வுயிர் எவ்வாறு வேறிடம் செல்லும்? 

சாதுவன்: நமது உடம்பில் உயிர் இருக்கின்ற காலத்தில் யாதேனும் துன்பம் வந்தால் உடலால்” அதனை உணரல் முடிகிறது. உயிர் நீங்கிய பின் உடலை நெருப்பில் இட்டாலும், உடல் அதனை உணர்வதில்லை. இதனால், உடலிலிருந்து ஏதோ ஒன்று நீங்கிவிட்டது என்பது புலனாகிறது. அவ் வாறு போகிற உயிர் புகுவதற்கு ஓரிடம் வேண்டு மல்லவா? நாம் இரவிற் கனவு காணும்போது, நம் உடல் இருந்த இடத்திலேயே இருக்க, உயிர் வேறோர் இடத்துக்குச் செல்வதை உணருகின் றோம். இதிலிருந்து உடம்பை விட்டுப் பிரிந்த, உயிர், மற்றொரு யாக்கையை அடைகின்றதென் பதை உணரலாம். 

நாகர்தலைவன், சாதுவனுடன் செய்த சம்பா ஷணையின் மூலம் உண்மையை உணர்ந்து கள்ளை யும் ஊனையும், தான் விட்டு உயிர் வாழ்வதற்கு வழி ஒன்று கூறுமாறு சாதுவனைக் கேட்டான், சாதுவன், உடைந்த கப்பலிலிருந்து யாராவது வந்தால், அவர்களைக் கொல்லல் கூடாது என்றும், முதுமையுற்றுத் தாமே இறக்கும் உயிர்களின் உடம்பைத்தவிர வேறெதையுங் கொல்லல் கூடாது என்றுங் கூற, நாகர் தலைவன் அதனை ஒப்புக்கொண்டு அங்ஙனமே செய்வதாக வாக்களித்தான். 

கலங்கவிழப்பெற்றமையால் அம் மலைப்பக்கத்தை  யடைந்த மனிதர்களைக் கொன்று, அவர்களிடமிருந்து அதுவரை கவர்ந்த செல்வங் களையும் ஆடை ஆபரணங்களையும் நாகர் தலைவன் சாதுவனுக்குக் காட்டி விரும்பியவற்றை எடுத் துச் செல்லுமாறு கூறினான். அவன் அவ்வாறே எடுத்துக்கொண்டு சந்திரதத்தன் என்பவ னுடைய கப்பலில் ஏறிச் சென்று காவிரிப்பூம் பட்டினத்தை அடைந்தான். கணவன் வருகை யைக் கண்ட ஆதிரை கழிபேருவகையோடு அவனை வரவேற்று அவனோடு கூடி பல அறங் களையுஞ் செய்து வாழ்ந்திருக்கின்றாள் ; இவ்வாறு ஆதிரையின் மேம்பாட்டைக் காய சண்டிகை மூலம் அறிந்த மணிமேகலை, அவளிடம் முதன்முதற் பிச்சை ஏற்க விரும்பி, அவள் மனையிற் சென்று வாய்பேசாமற் சித்திரம்போல நின்றாள். நின்றவுடன், ஆதிரை அவளைத் தொழுது, “பாரக மடங்கலும் பசிப்பிணி அறுக” என வாழ்த்துரை கூறிக்கொண்டு அமுதசுரபி நிறையும்படியாக ஆருயிர் மருந்தான உணவை இட்டனள். 

14. காயசண்டிகையின் வரலாறு 

ஆதிரை அமுதசுரபியில் உணவை இடலும், தருமவழியாற் சம்பாதிக்கப்பட்ட பொருள் கொண்டு செய்யப்படும் தருமம், கணந்தோறும் வளர்ந்துகொண்டேயிருப்பது போல, அது எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து வளர்ந்து, வந் தோருடைய பசியை நீக்கிற்று. 

மணிமேகலையிடமிருந்து முதன்முதல் உணவு பெற்றவள் காயசண்டிகையென்னும் வித்தியா தரப் பெண்ணாவாள். இவளே, ஆதிரையின் வரலாற்றை மணிமேகலைக்குக் கூறியவள். அவள் வித்தியாதர உலகிலுள்ள காஞ்சனபுரத்தில் வசித்தவள். இவள் பொதியமலையின் வளங்களைக் காண விரும்பி, கணவனுடன் புறப்பட்டுச் செல் லும்போது இடையே காட்டாறு ஒன்று தென் பட்டது. அதன் கரையில் அவ்விருவருஞ் சிறிது நேரம் தங்கியிருந்தனர். அப்பொழுது விருச்சிகன் என்னும் முனிவன் ஒருவன், பனம்பழமளவு பருமனுடைய நாவற்கனியொன்றை ஒரு தேக் கிலையிலே வைத்துவிட்டு நீராடச் சென்றான். நீராடியபின்னர் முனிவன் அக் கனியை உண்ண எண்ணினான். அம் முனிவன் பன்னிரண்டு வருடம் உபவாசமிருந்து உண்பது வழக்கம். தேக்கிலை யிலே வைக்கப்பட்ட அக் கனி, தெய்வத்தன்மை வாய்ந்தது; பன்னிரண்டு வருடத்துக்கொரு முறை ஒரு கனியைத் தருவதாகிய ஒரு நாவல் மரத்திலே உண்டானது. அக் கனியை உண்போர் பன்னிரண்டு வருடம் பசியொழிந்திருப்பர். முனிவன் தேக்கிலையில் வைத்துச்சென்ற கனி யைக் காயசண்டிகை தன் காலாலே தட்டி அதனைச் சிதைத்தாள். நீராடி, பசியுடன் மீண்ட விருச்சிகன், அக் கனி காயசண்டிகையாற் சிதைக் கப்பட்டிருத்தலை அறிந்து, அக் கனியை உண்ணா மையால் மறுபடியும் அதுபோன்ற ஒரு கனியை உண்ண தான் மேலும் பன்னிரண்டு வருடம் பசி யுடன் இருத்தல் வேண்டுமே என்ற வருத்தம் எழ, கோபம் மிகுந்து, “யானைத்தீ என்னும் நோயாற் பன்னிரண்டு வருடம் தீராப் பசி கொண்டு வருந்தி, அடுத்தமுறை யான் இது போன்ற ஒரு கனியை உண்ணுந் தினத்தில் உன் பசி நீங்குவதாக, என, காயசண்டிகைக்குச் சாபமிட்டு அகன்றனன். 

விருச்சிகமுனிவனது சாபத்தால், பெரும்பசி யாகிய யானைத்தீ என்னும் வியாதியாற் பீடிக்கப் பட்ட காயசண்டிகைக்கு, அவள் கணவன் சிறந்த கனிகள், கிழங்குகள், காய்கள் முதலியவற்றை நிரம்பக் கொண்டுவந்து கொடுத்தும் அவள் பசி நீங்கவில்லை. அத்துடன் ஆகாய மார்க்கமாகச் செல்வதற்குரிய மந்திரத்தையும் அவளால் நினைவு கொள்ள முடியவில்லை. அதனால் வருந்திய அவள் கணவன், ”இத் தமிழ் நாட்டில் ஆற்றாத மக் களுக்கு அருந்துணைவர்களாகிய பெருஞ் செல்வர் கள் வாழும் காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்து அங்கே இருப்பாயாக,” என்று காயசண்டிகைக் குக் கூறி, அவளை விட்டுச் சென்றான். அவன் வருடம் ஒருமுறை இந்திரவிழா நிகழுங்காலத்து, காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்து அவளைச் சந்தித்து, துயருடள் பிரிவான். அத்தகைய காயசண்டிகை மணிமேகலையிடமிருந்து உணவு பெற்று உண்டதும் அவளது பெரும் பசிநோய் நீங்கிற்று. 

யானைத்தீ என்னும் பெரும் பசிநோய் நீங்கப் பெற்ற காயசண்டிகை ஒருபொழுதும் நீங்காத தாகிய கொடிய பசிநோயை நீக்கிய மணி மேகலையை வணங்கி, “இந்நகரில் முனிவர்கள் பலர் இருக்கும் சக்கரவாளக்கோட்டம் என்னும் ஓர் இடம் உண்டு. அதில் எவரும் எந்நேரமும் வந்து புகுவதற்கு வசதியாக எப்பொழுதும் திறக்கப்பட்ட கதவுள்ள உலக அறவி என்னும் பெயருடைய அம்பலம் ஒன்று உளது. அவ் விடத்துப் பசியால் வருந்தியவர்களும் தம்மைப் பாதுகாப்பார் எவருமில்லாதவராகிக் கொடிய பிணிவசப்பட்டோரும் கொடுப்பவர்களை எதிர் பார்த்துக் கூடியிருப்பர். ஆதலால், அங்கே சென்று அவர்கள் பசியைத் தீர்ப்பாயாக”, என்று சொல்லிவிட்டுத் தன்னூருக்குப் போயினள். 

மணிமேகலை, வீதியின் ஒரு பக்கத்தே ஒதுங்கிச் சென்று, உலக அறவியை அடைந்து, மூன்று முறை வலம் வந்து பணிந்து, அவ்வறவியி லுள்ள தெய்வமாகிய சம்பாபதியென்னும் தெய் வத்தையும் கந்திற்பாவையென்னுந் தெய்வப் பாவையையும் வணங்கி ஆங்குள்ளாரை நோக்கி, “இப்பாத்திரம் ஆபுத்திரனுக் குரிமையாயிருந்த அமுதசுரபி. உண்ணுதற்கு விருப்பமுள்ளோர் யாவரும் வருக,” என்று கூறினாள். அதுகேட்டுப் பலரும் வந்து உண்பாராயினர். இதனால் அங்கே ஒலி மிகுந்தது. 

15. மணிமேகலையும் உதயகுமாரனும் 

மணிமேகலை பிக்குணிக்கோலம் பூண்டு, பாத்திரம் ஏந்தி, பிச்சை ஏற்று உலக அறவி புகுந்தாள் என்பதை அறிந்த சித்திராபதி மனங் கொதித்துக் கடுஞ்சினங் கொண்டாள்; வெய் துயிர்த்துக் கலங்கினாள். “நாம் கணவரிறப்பின் அவருடன் உடன்கட்டை ஏறும் பத்தினிப்பெண் டிரல்லோம். யாழை மீட்டி இன்பமனுபவிக்கும் பாணன் இறந்துபடின் அவனுடன் சேர்ந்து இறந்துபோகாத யாழைப் போல்வோம். கோவலன் இறந்தது கேட்டு, தவச்சாலையை அடைந்து தாபதக்கோலம் பூண்ட மாதவியின் செயல் நகைப்புக்குரியது. ஆகையால், மணி மேகலை தவக்கோலங் கொள்வது நமது குல ஒழுக்கத்திற் கொவ்வாதது. மாதவி மகள் மணி மேகலை கொண்ட பிக்குணிக்கோலத்தை மாற்றி, அவளைப் பல நாளாக விரும்பிக்கொண்டிருக்கும் உதயகுமாரனால் அவளை அவனது தேரில் ஏற்று வித்துக்கொண்டு வருவேன். அங்ஙனஞ் செய்யே னாயின் இனி நான், நாடகக் கணிகையர் சூழலுக்குச் செல்லேன் ஆகுக, எனச் சபதங் கூறி, உதயகுமாரனுடைய அரண்மனையை அடைந்தாள். அடைந்து, ‘வீரமிக்க இள வரசனே, நீ நீடுவாழ்வாயாக ; மணிமேகலை இப் பொழுது நகர்ப்புறத்திலுள்ள உலக அறவியில் இருக்கிறாள். நீ அவளை உன்னுடன் இட்டுக் கொண்டு வரல்வேண்டும் என்பது என் விருப்பம்,” என உதயகுமாரனிடங் கூறினாள். 

உதயகுமாரன் முன்னர் உவவனத்தில் சுதமதி யுடன் சென்ற மணிமேகலையைக் கண்டு அவளைப் பெறமுடியாது மீண்டபோது, ஒரு தெய்வமாது அவன்முன் தோன்றி, அவள் தூய்மையை அவ னுக்கு அறிவுறுத்தியது. அந்நினைவு அவனுக்கு அப்பொழுது உண்டாக அதனைச் சித்திராபதிக் குக் கூறினான். 

சித்திராபதி, ”அவற்றை நீ பொருட்படுத்தாதே” என ஊக்க, உதயகுமாரன் தேரிலேறி, உலக அறவியை அடைந்தான். அவ்விடத்துக் குரியதோர் தெய்வமோ எனும்படி, வியக்கத் தக்க எழிலுடன் மணிமேகலை அவன்முன் தோன்றி, கையிலுள்ள அமுதசுரபியின் உதவி யால் அவளைச் சூழ்ந்து நின்ற ஏழைகளுக்கு உண விடத் தொடங்கினாள். அப்பொழுது உதய குமாரன் மணிமேகலையை அண்மி, “நீ தவக் கோலங் கொண்ட தெதன்பொருட்டு?’ என, வினாவினான். 

‘உதயகுமாரனே முற்பிறப்பில் இராகுலன் என்னும் பெயருடன் தன் கணவனாயிருந்தவன்’ என்னும் எண்ணம், மணிமேகலையின் மனத்தே தோன்ற, அதன்பொருட்டு அவனை வணங்குதல் முறையாகும் என எண்ணி, மணிமேகலை அவனை வணங்கினள். வணங்கி, இந்த உடம்பு துன்பத் தின் இருப்பிடம் ; துன்பத்துடனேயே பிறந்தது; நோயாலும் முதுமையாலும் துன்புற்றுத் துன்பத்திலேயே அழிகிறது. இதனை உணர்ந்து துறவுவாழ்வை மேற்கொண்டேன். வீரமிக்க இளவரசராகிய தங்களுக்கு, இதற்குமேல் நான் என்ன கூறல்முடியும். என் சொற்களில் மெய்ம்மை கண்டீரானால் அதன்பின் உம் மனம் விரும்பும் வழியைக் கடைப்பிடிப்பீராக” என்று கூறி, தன் வடிவை மாற்றுதலே அதன்மேற் செய்யத்தக்கதென எண்ணி, அவ்விடம் விட்டுக் கோயிலினுள்ளே சென்றாள். அங்கே, சம்பா பதியை வணங்கி, முன்பு மணிபல்லவத்தில் மணி மேகலா தெய்வம் உபதேசித்த மந்திரத்தைச் செபித்து, காயசண்டிகையின் வடிவத்தை அடைந்து அமுதசுரபியுடன் வெளியே வந்து நின்றாள். 

மணிமேகலையே அவ்வாறு வந்தாள், என்பதை உதயகுமாரன் அறிந்திலன். ‘ மணி மேகலை தன் கையிலுள்ள பிச்சைப் பாத் திரத்தைக் காயசண்டிகையிடம் கொடுத்து விட்டு, சம்பாபதி கோயிலுள் ஒளித்துக் கொண்டாள்,’ என்று நினைந்து, சம்பாபதியை வணங்கி, இங்குள்ள பாவைகளுடன் தானும் ஒரு பாவையாக ஒளித்துக் கொண்டிருக்கும் மணி மேகலையை நீ எனக்குக் காட்டாயாயின், நான் இவ்விடத்திலேயே பழி கிடப்பேன்” என்று சபதங் கூறினான். 

– தொடரும்…

– மணிமேகலை சரிதை, முதற் பதிப்பு: 1960, ஆறாம் வகுப்புக்குரியது, வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *