மணமகன்!





அபிகாயில் என்டர்ப்ரைஸில் வேலை செய்யும் வையாபுரி சாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை யென்று எல்லோருக்கும் பெருங்கவலை.
அவரை மறித்து, ஆளாளுக்கு பொண்ணு சொல்லத் துணிந்து விட்டார்கள்..
ஷாதி.காம், சிம்ப்ளி மேரி.காம், தமிழ் சுயவரம்.காம், பாரத் மாட்ரிமோனியல். காம் என்று ஒரு சுற்று சுற்றி வந்தாயிற்று.. எதுவும் அவருக்கு ‘செட்’ ஆகவில்லை.
‘நீர்ல பார்த்தேன் உன் சீரை…. உப்பிலே பார்த்தேன் உன் துப்பை’ என்பதற்கேற்ப சிக்கனமும் நிர்வாகத் திறமையும் ஒருங்கே அமைந்த ஒரு பெண்ணை கற்பனையிலே இருத்திக்கொண்டு ‘துழாவி’யும் மனுசனுக்கு
எதுவும் வாய்க்கவில்லை. அவர் உறவுக்குள் எத்தனையோ பேர் ‘அழுது அழுது’ பார்த்துவிட்டுக் கைகழுவி விட்டார்கள்.
திருச்சி – கிராபட்டியில் கண்ணையன் சித்தப்பா வீட்டில் வளர்ந்தவன் வையாபுரி. பிறந்த ஆறு மாதத்தில் அவன் பெற்றோர் நிர்க்கதியாய் விட்டு விட்டு இறந்து போயினர்.
தொட்டிலில் பூப்போல மிதக்கும் வையாபுரி அவன் பாட்டியின் தாலாட்டில் நனைந்துகொண்டிருக்கும்போது –
அவன் தந்தையும் தாயும் மார்க்கெட்டிலிருக்கும் அரிசிக்கடைக்குப் போனவர்கள் திரும்பிவரவேயில்லை. ஒரு ரௌடி கும்பலின் கலாட்டாவில் பல கடைகள் நொறுக்கப்பட்டன. இவர்களுடைய அரிசிக்கடை உட்பட பத்து பேர் கொல்லப்பட்டனர். இறந்த அப்பாவிகளில் இவர்களும் அடங்கிப் போன துயரம்.
வையாபுரியின் சித்தப்பா கண்ணையன் வீட்டில் பாட்டியும் பேரனும் தஞ்சம் புக…
கல்வி, வேலை என்று வாழ்க்கை தொடர்ந்தது.
ஆரம்ப காலத்தில் திருச்சியில் அவனுக்கு ஒரு வேலை கிடைத்தது.சொற்ப சம்பளம். படிப்புக்கும், வேலைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், பாட்டிக்கு அதெல்லாம் புரியுமா என்ன?
பேரன் வையாபுரிக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்து விட்டுத்தான் கண்ணை மூடவேண்டும். இது அவள் கனவு. தன் ஆயுசு முடிவதற்குள் ஒரு மருமகள் இந்த வீட்டில் காலெடுத்து வைக்கவேண்டும்.என்பது அவள் ஆசை.
கண்ணையனுக்கு இது ஒரு பெரிய பாரமாயிருந்தது. “ஒரு நல்ல வேலை கிடைக்கட்டும் … அப்புறம் பார்க்கலாம்” இது வையாபுரியின் தீராத பாட்டு. அதற்குள் ஆறாண்டுகள் ஓடிவிட்டது.
கண்ணையன் விடுவதாக இல்லை. சொந்தம், தூரம், பக்கத்து ஊர் என்று சல்லடை போட்டு நாலைந்து பேரை ஃபோட்டோவில் காட்டி ஆசைப்படவைக்க முயற்சித்தார்.
ஊகூம். எதுவும் ஒத்து வரவில்லை.
குடும்ப ஜோசியர் ஒருவர் பணம் கறக்கும் வேலையில் இறங்கிவிட்டார். அவனுக்கும் நிறைய அழுதாயிற்று.
பாட்டியின் பரவசமும் வடியாத சூழ்நிலையில்-
ஒருநாள் பாட்டிக்கு பேச்சு மூச்சில்லை. ஏஜ் ரிலேடட் பிரச்சனைதான் என்று முடிவுக்கு வந்தார்கள். ஆனால், அவள் இதயம் பூரா பாரத்தாலும் கவலையாலும் அழுத்திக்கொண்டிருந்தவன் வையாபுரிதான்!
அவள் மரணத்துக்குப் பின்னர், அவனுக்கு அந்த ஊரில் நீடித்திருக்கபிடிக்கவில்லை.
பாட்டி செய்த புண்ணியமாகத்தான் இருக்குமோ என்னவோ, வையாபுரிக்கு சென்னையில் உயரிய வேலை கிடைத்தது.
அபிகாயில் என்டர்ப்ரைஸ் கம்பெனியில் ஃபைனான்ஸ் எக்சிகியூட்டிவாக இருக்கும் வையாபுரி சாருக்கான தேடல் இன்னும் தொடருகிறது.
யோசித்துப் பார்க்கும்போது இங்கு பணிபுரியும் சீதா கொஞ்சம் பொருந்தி வந்தாள்.
நாள்தோறும் பார்த்துப்பார்த்து விஷ் பண்ணுகிறவளைக்கூட அவரால் ‘கணக்கு’ப் பண்ணமுடியவில்லையே என்பது பல நலவிரும்பிகளின் ஆதங்கம்.
கலீக் பரமசிவன் ‘இடைத்தரகர்’ வேலை பண்ணிப் பார்த்தான். இது எப்படியும் ஒர்க்கவுட் ஆகும் என்கிற நம்பிக்கை அவனுக்கு. இன்னும் சொல்லப்போனால் அநேகர் அவனைத் தூண்டிவிட்டார்கள்.
ஒரே கம்பெனியாயிருந்தாலும் ஒருவருக்கொருவர் ‘பார்த்து’க் கொள்கிற அளவுக்கு அவகாசம் இருந்தது.
இருவரும் வெவ்வேறு செக்க்ஷன்களில் இருந்தார்கள். சீதா எச்.ஆர்.மானேஜராக இருந்தாள்.
சிலசமயம் வையாபுரி கெச்சை நடை போடுவார். ஆனால், ‘இந்த ஆள் சுத்த வேஸ்ட்டு…. பரகதியே கிடையாது!’ என்று முறுமுறுக்கிறவர்களும் இருக்கத்தான் செயகிறார்கள்.
ஒருநாள் சாயங்கால நேரத்துச் சாரல். யார் கையிலும் குடையில்லை.
எப்படியோ ஆஃபீஸ் முழுக்கக் கரைந்தாயிற்று.
பரமசிவன் சாளரத்தினூடே பார்த்தான். போர்டிகோவில் சீதாவும் சிஸ்டம் அனலசிஸ்ட் அகல்யாவும் நின்று கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் ஒரு பைக் வரவே அகல்யா முக்காடு போட்டவாறு ஈஷிக்கொண்டு போய்விட்டாள்.
வையாபுரி அறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
மெல்லப்பரவும் டிசம்பர் மாத மாலையிருள்.
சற்றும் யோசிக்காமல் பரமசிவன், வையாபுரி சார் அறைக்குப் போனான்.
“வாங்க பரமசிவன்… உட்காருங்க…கொஞ்சம் இருந்துட்டுப் போகலாம்..மழை விடட்டும்..”
அவர் அறையிலிருந்தே முற்றத்தைப் பார்க்கலாம். இன்னும் சீதா இருண்ட வானத்தை எட்டிஎட்டிப் பார்த்தவாறு கழுத்து வலிக்க நின்று கொண்டிருந்தாள்.
“அப்பறம் சார்…. என்ன முடிவு பண்ணினீங்க?”
“எதையே…. ஓ, அந்த சீதா மேட்டரா…?”
அவன் மெளனமாக அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீங்க எனக்காக எவ்வளவோ முயற்சி எடுக்கறீங்க தேங்க்ஸ்.”
“அது இருக்கட்டும்… இப்ப வாங்க.. இதுதான் நல்ல சான்ஸ்.. யாருமே இல்ல… அந்தப் பொண்ணு வெளியே தனியா நின்னுட்டிருக்கு… இலேசா காயை நகர்த்திப் பார்க்கலாம்.”
“அது வந்து பரமசிவன்… எனக்கு நாற்பதுக்கு மேலாயிருச்சு…அந்தப் பொண்ணுக்கு இப்பத்தான் தேர்ட்டி ப்ளஸ் ன்னு நெனைக்கிறேன்.”
“இருக்கட்டுமே சார்.. அதுக்கு இன்னும் செட் ஆகலியே..”
வையாபுரி பைய வெளியே எட்டிப் பார்த்தான். பரமசிவன் சொல்வது சரிதான். சீதா அங்கே தனிமையில் இருக்கிறாள்.
“அந்தப் பொண்ணுக்கு வயசிருக்கு.. வாழ்க்கை இருக்கு… நிறைய ஆப்ஷன் இருக்கு.. எனக்கு அப்படி இல்லையே பரமசிவன்!”
“சார்…. வாய்ப்பு மழை வடிவிலே வந்திருக்கு…. மெல்லக் கல்லைப் போட்டுப் பார்க்கலாம்… வாங்க சார்… நானும் கூட வர்றேன்..”
வையாபுரி இருக்கையில் நெளிந்துகொண்டிருந்தார், சில நிமிடங்களுக்கு.
“மிஸ்டர் பரமசிவன்… எப்படி ஆரம்பிக்கிறது?”
கை விரல்களைப் பின்னியவாறு, மூக்கின்மீது கட்டை விரல்களால் தட்டித் தட்டி யோசித்தார்.
குதிரையை நீர்நிலையருகே கொண்டுபோய் விடலாம். அதன் கழுத்தைப் பிடித்து நீருக்குள் அழுத்தவா முடியும்? அதுவாகக் குடித்தால்தான் உண்டு….
பரமசிவன் யோசித்தவாறு “சார்…. முதல்லே எழுந்திருங்க.. அதெல்லாம் தும்மல் மாதிரி தானா வந்திரும்.. நான் கூட இருக்கேனல்ல…” என்றான்.
வையாபுரி எழுந்து ரெஸ்ட் ரூமுக்கு போய், ஐந்து நிமிடம் கழித்து ட்ரிம்மாக வந்தார்.
இருவரும் அந்த அறையை விட்டு வெளியே நீண்ட லாபியில் நடந்து, போர்டிகோவை அடைந்ததும்—-
அங்கே யாரும் இல்லை. சீதாவின் சாயை கூட இல்லை.
வெளியே தூறல் நின்றிருந்தது..
ஒருமாதம் கழித்து-
சீதா அனைவருக்கும் ஸ்வீட் வழங்கிக்கொண்டிருந்தாள்.
எல்லோருக்கும் திருமணப் பத்திரிகை வைத்தாள்.
வையாபுரி சாரின் அறைக்குள் பரமசிவன் சீற்றத்துடன் நுழைந்தான்.
அவர் சீதாவின் அழைப்பிதழை புரட்டிக்கொண்டிருந்தார்.
“சாரி சார்… யூ ஆர் கெட்டிங் ஏஜ்ட்! இந்த நானிலத்திலே உங்களுக்கு எதுவும் செட் ஆகாது!”
வையாபுரியின் விழிகளில் சோகம் படர்ந்தது. முகத்தில் குழைவு. அதரங்களில் வறண்ட முறுவல். இதுதான் அவருடைய டிரேட் மார்க். இக்கட்டான நேரத்திலும்.
ஓராண்டுக்கு முன்பு –
இதே கம்பெனியில் வாசுகி என்பவள் சப்போர்ட் ஸ்பெஷலிஸ்டாக இருந்தாள். அவளும் சற்றேறக்குறைய முப்பதைக் கடந்தவள்தான், சீதாவைப் போல.
அவளுக்கு வையாபுரியைப் பிடித்திருந்தது. அவரைப் பற்றி நைசாக விசாரிக்கத் தொடங்கினாள்.
அதன் பின்னர்தான், ஒரு நல்ல முடிவோடு, செக்க்ஷன் ஹெட் மேடத்திடம் தன் ஆவலைத் தெரிவித்தாள்.
ரோகிணி மேடத்துக்கு இது நல்லதாகப்பட்டது. வெரி டீசண்ட் ப்ரபோசல்.
வையாபுரி சாரை சந்திக்கும் முன்பு, பரமசிவனிடம் அபிப்ராயம் கேட்டாள்.
“மேடம்…. நீங்க எடுத்த முடிவுக்கு வாழ்த்துகள்…. ஆனா மனுஷன் பாறை மாதிரி அசைய மாட்டேரே!”
“என்ன அப்படிச் சொல்றீங்க… மேரேஜ் பண்ணிக்கலாம்னு ஆசையே இல்லையா?”
“அப்படியெல்லாம் இல்லே… இந்த கம்பெனிலே அவரோட நெருக்கமாப் பழகுவது நான்தான்.. அப்படியிருந்துமே, அவரோட மனசுலே இருக்கற தேட்டம் என்னன்னு புரிஞ்சுக்கவெ முடிலே மேடம்..”
“வாசுகி நல்ல பொண்ணு… வரதட்சிணை கொடுக்க முடியாததுனாலே ரெண்டு மூணு அலையன்ஸ் நின்னு போச்சாம்… அந்தப் பொண்ணோட பிரதர் என் வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கார்.. கதைகதையாச் சொல்லிட்டு இருந்தார்.”
“இவர்கிட்டே அதெல்லாம் பிரச்சினை இல்லே…. ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் மேடம்…. தனக்கு வயசாயிருச்சு… கட்டிக்கப்போறவளே திருப்தியா நல்லா வச்சிக்க முடியுமான்னு யோசிக்கிறார்….”
“வேற எதாவுது பிரிச்சனையா?”
“நோ நோ… ஹி இஸ் ஃபெர்பெக்ட்லி ஆல் ரைட் மேடம்”
“அப்பறம் என்னதான் சொல்ல வர்றீங்க மிஸ்டர் பரமசிவன்?”
“எல்லோருமே சொல்லிப் பார்த்து.. அவர் யோசிச்சு நீட்டிக் கொட்டி முழங்குறதுக்குள்ளே அவளுக்கு வேற பக்கம் மேரேஜ் ஆகி …. அது ஒரு சங்கடமான செய்தி மேடம்.. தம்பதி சகிதம் ஊட்டிக்கு ஹனிமூன் போறப்ப
எதிர்பாராமே பிரேக்குக்கு பதிலா ஆக்சிலேட்டரிலே காலை வைக்கப்போய்….பர்லியார் கிட்டே ரோட்டோரத் திட்டுலே கார் மோதி நூறடிப் பள்ளத்துலே விழுந்துருச்சு…”
“அடப் பாவமே …. அவங்களுக்கு ஏதாச்சும்…”
“அந்தப் பொண்ணு வாசுகி ஸ்பாட்லே இறந்துருச்சு… பையன் பொழைச்சுட்டான்…”
நீண்ட நாள் இறுகிப்போன மனசோட வையாபுரி இருந்ததை கம்பெனியே உற்றுப் பார்த்தது.
ஒருநாள் வையாபுரி, பரமசிவனிடம் சொன்னார்.
“வேண்டாம்…. இனி எந்த ப்ரோபோசலும் கொண்டு வராதீங்க…. பாவம்…அந்த வாசுகி….”
“என்ன சார் நீங்க… பெஸ்சிமிஸ்ட்டா இருக்கீங்க.. ஆக்ஸிடென்ட் ஆனதற்கு நீங்க என்ன பண்ணுவீங்க?”
“என் மனசு உறுத்துது மிஸ்டர் பரமசிவன்!”
பரமசிவன், அவரை விநோதமாகப் பார்த்தான்.
சீதாவின் திருமண நாள் நெருங்கிக்கொண்டிருந்தது.
ஈசிஆர் ரோட்டிலுள்ள ஒரு ஓட்டலில் ரிசப்ஷன். கம்பெனி ஸ்டாஃப் எல்லோரும் கலந்துகொள்ள எதுவாக ரெண்டு பஸ் தயாராக இருந்தது.
வையாபுரி யோசனையில் ஆழ்ந்திருந்தார். உடம்பு சரியில்லையென்று நழுவி விடலாம். அல்லது திருச்சியில் சித்தப்பாவின் அவசர அழைப்பு.
அதுவும் பொண்ணு விஷயம் என்று திசை திருப்பிவிடலாம்.
இதெல்லாம் ஒரு சால்ஜாப்பு என்று எப்படியும் புரிந்துகொள்வார்கள்..
பரமசிவன் அவரை விடுவதாக இல்லை.
சீதா பரமசிவனுக்குப் பத்திரிகை வைக்கும்போது கண்டிப்புடன் சொன்னாள்.
“எப்படியும் வையாபுரி சாரை அழைச்சிட்டு வர்றது உங்க பொறுப்பு!”
வையாபுரி சாரிடமும் வலியுறுத்திச் சொன்னாள்.
‘தன் மேல் அவள் வைத்திருக்கிற மட்டு மரியாதைக்காவது, மதிப்புக்கொடுத்து சீதாவை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டிருக்கலாம்!’
வையாபுரி யோசித்துப் பார்த்தார் – காலங்கடந்து.
என்ன மானங்கெட்ட மனசு இது! கனிந்துவரும் சுபகாரியத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஒதுக்கித்தள்ளி ஆயிற்று.
இனிமேல்…
தாகூரின் போஸ்ட்மாஸ்டரை வதைத்த அதே ‘காலங்கடந்த உணர்வு’ வையாபுரியையும் விட்டுவைக்கவில்லை..
சீதாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஆடம்பரமாக நடந்துகொண்டிருந்தது.
ஆர்ப்பரிப்பில் மணமக்கள் திக்குமுக்காடினார்கள். வெகுமதிகளில் தொலைந்துபோனார்கள்.. வாழ்த்து மழையில் ஈரமாகிப்போனார்கள்.
‘மேட் ஃபார் ஈச் அதர்’ தம்பதியரைக் கரங்குலுக்கி ஆலாபித்தலில் வையாபுரி விலகி நிற்கவில்லை.
“வையாபுரி சார்… ஒரு சினிமா வசனம் சொல்லட்டுமா? முகூா்த்தப்பட்டு…நெத்தி நெறையப்பொட்டு… எப்படி ஜோடிப்பொருத்தம்?…” பரமசிவன் கேட்டான்.
“பரமசிவன்… இந்த ஜோடிதான் பார்ப்பதற்கு லட் சணமாவும், திருத்தமாவும் இருக்கு… சீதா எனக்கு எப்படிப் பொருந்திவருவா?”
என்ன மனிதர் இவர்? இந்த உலகத்தில் இருக்கிற ஜோடியெல்லாம்பொருந்தியா அமைகின்றன? இந்த வையாபுரி சாருக்கு எப்படித்தான் புரியவைப்பதோ?
வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் ஒளி பெற்று தெட்பம் பெறுபவன்தான் தெளிஞன்!
ஒரு வாரங்கழிந்தது.
கம்பெனியிலுள்ள அனைவருக்கும் சீதா லஞ்ச் ஏற்பாடு பண்ணியிருந்தாள்.
ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டல் அது.
பகல் பன்னிரண்டு மணியளவில் ஒரு தொலைபேசி செய்தி வந்தது.
அலுவலகமே திமிலோகப்பட்டது. ஆளாளுக்கு கம்பலையுடன் ஓடினார்கள்.
பரமசிவன் சடுதியில் வையாபுரி அறையைவிட்டு வெளியே வந்தான்.
குரோம்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் எதிரே ஜிஎஸ்டி சாலையில் சிக்னலைத் தாண்டி உட்பகுதியில் நுழைந்து செல்லும் சாலை பரபரவென்றிருந்தது. ஒரு பைக் கீழே கிடந்தது.
அதை ஓட்டிக்கொண்டு வந்த சீதாவின் கணவன் கழுத்தில், எங்கிருந்தோ நீட்டிக்கொண்டுவந்த மஞ்சா கயிறு பாய்ந்து அறுக்க… அவன் நிலைதடுமாறி விழ…
அந்த கொடுந்துயா் நடந்தது. அவன் ஸ்பாட்டிலேயே இறந்துபோனான்.
அபிகாயில் என்டா்ப்ரைஸ் கம்பெனியே கூக்குரலிட்டது.
ஒரு வாரம் கழித்து –
அதே அலுவலகத்தில் ஒரு நாள் காலையில் அனைவரும் கண்ட காட்சிஅவா்களைத் திகைப்புறச் செய்தது.
வையாபுரியும் சீதாவும் கரம்கோர்த்தவாறு காரிலிருந்து இறங்கினார்கள்.
’ஜஸ் மேரீடு!’
![]() |
சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க... |