மட்டக்குச்சி
(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கவாலமலை அதிர்ச்சியில் உறைந்துக் கிடந்தது.
இதுவரை காலம் தோட்டம் சந்தித்திராத பெருமதிர்ச்சி என்பதனால்
தனை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை.
இடிவிழுந்தான் பள்ளத்தில் தோட்ட மக்கள் அனைவரும் திரண்டிருந்தனர்.
தோட்டத்து பெண்கள் தங்கள் கொங்காணிகளை இழுத்து வாயை மூடிக்கொண்டு விக்கித்து நின்றிருந்தனர்.
எல்லோரிடமும் அதிர்ச்சி உறைந்திருந்தது.
நெத்திக்காணில் வெள்ளக்கண்டாக்கு உப்பி ஊறி பிணமாய்க் கிடந்தான்.
அட்டைகள் அவனது உடல் ரத்தத்தை உறிஞ்சி உப்பியிருந்தன. கண்டாக்கின் உடல் முழுவதும் சிறு சிறு ரத்த காயங்களும் சிறாய்ப்புகளும் பதிந்திருந்தன. தொடைகளில் ரத்தம் வடிந்து காய்ந்திருந்தது. உதடு ஒரு பக்கமாய் வீங்கி கிழிந்திருந்தது. இரவு முழுவதும் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட குப்பைகளோடு குப்பையாய் கிடந்தான். யூகத்தின்படி அவன் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான் என்பதைத் ததான் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர்.
கைதூத்தலாய் பெய்யும் மழை நய்நய்யென பெய்துக் கொண்டிருந்தது.பள்ளத்தில் திரண்டிருந்த மக்களில் அநேகர் தம் உடல்களில் ஒட்டிக்கிடந்த அட்டைகளை மழித்து தள்ளிக் கொண்டிருந்தனர். யாருமே எதிர்பாராத நேரத்தில் விழுந்திருந்த பேரிடி எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. கண்டாக்கை கண்டாலே காததுாரம் ஓடிவிடும் தோட்டத்து சனங்களில் யாருக்கு இத்துணிச்சல் ஏற்பட்டது என்பதுதான் மர்மமாகவே இருந்தது.
வெள்ளைக் காற்சட்டையும் கட்டக்கம்பும் கண்டாக்கின் அடையாளங்கள். மிடுக்கு நடைநடந்து வந்தானென்றால் பார்த்து ரசிக்காதவர்களே இல்லையென்று சொல்லுமளவுக்கு அவனின் கம்பீரம் இருக்கும். சிவந்து பருத்த தன் தொடைகளை காட்டுவதிலும் அதனை எல்லோரும் பார்த்து ரசிக்கிறார்கள் என்பதிலும் அவனுக்குள் ஒரு பெருமையிருக்கும். உரோமங்கள் வளர்ந்து சாய்ந்திருக்கும் தொடையை தட்டித் தட்டி அவன் காட்டும் சண்டித்தனங்களுக்கு தோட்டத்து பெண்கள் அதிகமாய் பயந்துப் போவர். வார்த்தைகளால் தோட்டத்து பெண்களை இம்சிப்பதில் மகா புத்திசாலி மைனர் கணக்காய் தோட்டத்தில் சுற்றித்திரிந்த கண்டாக்குக்கு தோட்ட நிர்வாகமும் அடிபணியும் சின்னச் சின்ன தகறாறுகளுக்கு கூட கொலனி மக்களை ஒன்று திரட்டி கலவரமாக்கி விடுவதால் அவனுக்கு அனைவரும் அடங்கிப் போவர். ஒட்டு மொத்தத்தில் தோட்ட துரை மாதிரி தோட்டத்தை ஆட்டிப் படைப்பான். அதனால் நிகழ்ந்திருக்கும் கொடூரமான மரணத்துக்காக தோட்டம் கலங்கவில்லை. இவ்வளவு தைரியமாய் காதும் காதும் வைத்தாற் போல் காய் நகர்த்தியிருக்கும் அந்த தைரியசாலி யாரென்று அறிவதில்தான் பலரும் ஆர்வமாயிருந்தனர்.
“குருவிக்கூட்டுக்குள்ள குண்டு வைக்கிறாப்புல குடும்பத்த கெடுத்த பயசிறுக்கிக்கெல்லாம் இதுதான் கெதி”
“ஐயோனு அள்ளி வெச்ச மண்ணெல்லாம் சும்மா உடுமா? அடுத்தவங்க வாயில போட்ட மண்ணு இன்னைக்கு தான் வாயிலயே விழுந்திருச்சி பாத்தியா?” என்றொரு குரல் கூட்டத்தில் இருந்து எழுந்ததும்
“வல்லவனுக்கு வல்லவென் பொறக்காமலா இருப்பான்”
“மத்தவங்க வயித்தெரிச்சல்ல எத்தன நாளைக்குத்தான் ஆடுறது சொல்லுப் பாப்பம்” என்று இன்னொரு குரல் துணை சேர்ந்தது. “தோட்டத்துக்கு வந்த நாள்ல இருந்து கொஞ்ச அட்டகாசமா? கொறஞ்ச அட்டகாசமா பண்ணுனான் அது தான் கடவுளா பாத்து இப்பிடி செஞ்சிட்டான்.” என்று தோட்டம் வாயில் வந்தவற்றையெல்லாம் பேசி கொண்டிருந்தது.
தோட்டத்துக்கு பொலிஸ் வருவதும் போவதுமாய் இருந்தது. மர்மமாய் பலரும் பலவிதமாய் கிடந்து மறுவினர். இரவு ஏழு மணியானால் போதும் எல்லா வீடுகளிலும் விளக்குகள் துண்டிக்கப்பட்டு விடும். யாரும் சத்தமாய் கூட பேசுவது இல்லை அந்தளவுக்கு மக்களிடையே பீதி பரவியிருந்தது. தோட்டம் தந்த தகவலின் படி ஓட்டுலயத்து லெட்சிமி வீட்டை நோட்டமிடுவதில் பொலிசார் தீவிரம் காட்டியிருந்தனர்.
மலைமேடுகளில் கண்டாக்கோடு சல்லாபித்து திரிந்தவளுக்கு உறவென்று சொல்வதற்கு யாருமில்லை. வாழ்நாட்களில் பாதி நாட்களை போதையோடு கழித்திருந்த முனுசாமியும் அற்ப ஆயுளோடு சென்று சேர்ந்து விட்டான். அதன் பின்னர் ஒத்த மரமாய் நின்ற லெச்சுமிக்கு வெள்ளக்கண்டாக்கு துணையானான். மாதத்தில் பத்து நாள் பேர் போட்டால் போதும் முழு சம்பளம் வாங்கிவிடுவாள். மலை இடுக்குகளில் அவனோடு இணங்கிப் போவதோடு நின்று விடாமல் கொஞ்ச நாட்களாய் இரவில் வீடு வரை கண்டாக்கு வந்துப் போவது பற்றியும் தோட்டத்தில் பேசிக்கொண்டனர். ஆனால் கடந்த ஒரு மாத காலமாய் தோட்டத்து பதிவுக்காக இரண்டு அல்லது மூன்று நாள் பேர் போட்டுவிட்டு டவுனை ரோந்தடிப்பதற்கு பழகியிருந்தாள் லெச்சுமி.
எது எப்படி என்றாலும் அந்தி சாயும் நேரத்தில் தோட்டத்துக்கு வந்துவிடும் அவளை கடந்த சில நாட்களாய் தோட்டத்தில் காணாதது இன்னும் குழப்பமாகியிருந்தது.
இடி விழுந்தான் பள்ளத்தை பொலிஸார் அலசி ஆராய்ந்து துப்பு துலக்கிக் கொண்டிருந்தனர். ஏதாவது தடயங்கள் அங்கு கிடைக்குமா? என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அங்கு தீனி கிடைக்கவில்லை. வெள்ளக்கண்டாக்கு ரத்தவெள்ளத்தில் கிடந்த நிரையில் இருந்து ஐந்து ஆறு தேயிலை மரங்களைத் தாண்டி ஒடிந்து நொருங்கிப்போன மட்டக்குச்சிகளைத் தவிர துப்புதுலக்கிய பொலிஸாருக்கு வேறு தடயங்கள் கிடைக்கவில்லை.
சுமார் பத்துவருடங்களுக்கு முன்னர் ஆடிக்காற்றும் மழையும் சேர்ந்து அசுரமாய் வீசியடிக்க கிளைபரப்பி சடைத்து நின்ற பெரிய ஆலமரத்தில் விழுந்த இடி மரத்தை இரண்டாக பிளந்து வீழ்த்தியிருந்தது. அன்று முதல் ஆலமரத்தோப்பு இடிவிழுந்தான் பள்ளமாகியிருந்தது. இடியதிர்ச்சியில் விழுந்த மரம் ஒரு குறிப்பிட்ட பரப்பை பள்ளமாக்கியிருந்தது. அதனால் அகோரப்பட்டுக் கிடக்கும் பள்ளத்தை சொல்லித்தான் தோட்டத்து குழந்தைகளைக் கூட பயமுறுத்துவர்.
இடி இடித்து மரம் விழுந்த பிறகு யாரும் விறகு பொறுக்குவதற்கு கூட அந்தப்பக்கம் போவதில்லை.
ஆள்நடமாட்டம் இல்லாமல் போனதால் தேயிலை செடிகளுக்கு மேல் புற்கள் வளர்ந்திருந்தன. யாரும் அந்தப்பக்கம் போவதற்கு பயப்படுவதால் ஒதுக்குகாடாக அது மாறியிருந்தது. அதனால் காடாய் கிடந்த இடிவிழுந்தான் பள்ளத்தில் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்திருந்தது. சம்முகு மட்டும்தான் பன்றிக்கு வலை கட்டுவதற்கு போவான் வருவான். மழை நேரத்தில் வலை கட்டுவான் என்றால் சொல்லவே வேண்டாம் விடியற்காலையில் அவனுக்கு பன்றி விழுந்திருக்கும். அன்றைய நாள் அவனுக்கு கொண்டாட்டமாய் அமைந்துவிடும். காட்டுப் பன்றி என்றால் வெட்டிக் கூறு போடும் முன்னமே தோட்ட நிர்வாகத்திடம் விற்று தீர்க்கப்படும். அதனாலேயே வெறும் சம்முகை எல்லோரும் ”பன்டி சம்முகு” என்றுதான் அழைப்பார்கள்.
தோட்டத்தில் யாராவது பன்டி சம்முகு என்று கூறி விட்டால் போதும் புஸ்பம் வரிந்துக் கட்டிக் கொண்டு அவர்களோடு சண்டைக்கு கிளம்பி விடுவாள். அதனால் சண்முகத்துக்கும் புஸ்பத்துக்கும் சண்டை மூளும் “இப்பிடி கொலவுயிரும் குத்துயிருமா அடிச்சி கொல்லுறியே புள்ளகுட்டிகள நாங்க எப்பிடி வளக்கிறது?” என்று ஆதங்கப்படுவாள்.
“அடியே பொஸ்பம் கொன்னா பாவம் தின்னாப்பேச்சிடி இதுக்கெல்லாம் போயி புராணம் படிப்பியா?” என்று உதட்டை பிதுக்கி சேட்டை காட்டும் போதெல்லாம் புஸ்பமும் தன்னை மறந்து சிரித்துவிடுவாள்.
சண்முகத்துக்கு பதினைந்து வயசு இருக்கும் போதுதான் புஸ்பம் பூப்படைந்தாள் அன்று முதலே அவளின் மனசில் சண்முகு ஏறி இருந்து விட்டிருந்தான். நெஞ்சுக்குழிக்குள் சண்முகே உலகமாகியிருந்தான். முத்தாலம்மாள் கோயில் தோப்பில் காதல் வார்தைத்தைகளை பேசி பேசி மயக்கிய போதெல்லாம் கிரக்கத்தில் ஆழ்ந்திருந்த தருணங்களை புஸ்பம் அடிக்கடி அசைபோடுவாள். செல்லக் குறும்பும் சில்மிசங்களும் திருமணத்திற்கு பிறகும் தொடர்வதை புஸ்பம் பெரிதும் ரசிப்பாள். அந்நியோன்யமாய் வாழும் வாழ்க்கைக்கு அடையாளமாய் அழகிய பெண்குழந்தைக்கு தாயாகி இருந்தப் போதும் புஸ்பத்தின் இளமைப் பொலிவு இன்னும் மெருகேறியிருந்தது.
காதலில் திளைத்திருந்த காலங்களில் சண்முகு அடிக்கடி புஸ்பத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பான். இப்படித்தான் ஒரு வருசம் பிறந்தநாளுக்கு அவனளித்த பரிசால் அவள் பூரித்துப் போனாள். சிங்க மலை மேடுகளில் எல்லாம் அலைந்து திரிந்து தேடிக் கண்டடைந்த காட்டுத் திப்பிலி கம்பை காதலோடு பதமாக சீவி மோட்டுவாளையில் காயவைத்து நேராக்கி பின்னர் மட்டம் பார்த்து மஞ்சள் பெயிண்ட் பூசி எடுத்தான்.காதலோடு உருவான மட்டக்குச்சி வழமையான மட்டக்குச்சியை விடவும் கொஞ்சம் தடிப்பமாய் இருந்ததாலோ என்னவோ கம்பீரமாய் இருந்தது.
மறுநாள் வழமையாக சந்திக்கும் முத்தாள் அம்மாள் கோயில் தோப்புக்கு புஸ்பத்தை வரச்சொல்லிவிட்டு காத்திருந்தான் அந்தி நிறுவைக்கு பின்னர் யாருக்கும் தெரியாமல் கோயில் தோப்புக்கு அவளும் வந்து சேர்ந்தாள் மெல்லிய இருள் தோப்பெங்கும் பரவியிருந்தது தோப்பின் நிசப்தத்தில் சில நிமிடங்கள் காதலில் மூழ்கியிருந்தனர். இப்போது தோப்பு நன்றாகவே இருண்டிருந்தது. சண்முகு புஸ்பத்தை நன்றாக இறுகக் கட்டி நெற்றியில் அழுத்தமாய் முத்தம் பதித்து விட்டு நிரையில் சொருகியிருந்த தன் காதல் பரிசை உருவி எடுத்து நீட்டினான். மட்டக்குச்சி மெல்லிய இருட்டில் தங்கத் தகடாய் ஜொலித்தது. புஸ்பத்தின் கண்களில் நீர் முட்டியது மட்டக்குச்சியை தன் மார்போடு பொருத்தி இறுக அணைத்துக் கொண்டாள்.
அன்று முதல் மட்டக்குச்சி அவர்களின் காதல் சின்னமானது.
புஸ்பம் மலை மேடுகளில் கூடையோடு மாரடித்தாலும் முகத்தில் களைப்பிருக்காது. அன்றலர்ந்த ரோஜாவாய் வந்துப் போவாள். துடுக்குப் பேச்சும் உண்மைக்கு கட்டுப்படும் விசுவாசமும் புஸ்பத்திடம் குறையாது. மலையில் ஏதாவது தகராறுகள் வந்தால் கூட அதை நிர்வாகத்திடம் கொண்டு செல்லாமல் முடித்துவிடுவாள் எல்லோரும் அவள் வார்த்தைகளுக்கு செவிசாய்ப்பர்.
இடுப்பை சுற்றி இறுக்கமாய் கனுக்கால் வரைக்கும் கட்டப்பட்டிருக்கும் படங்கோடு அவளைப் பார்க்கும் போது தவிர்க்க முடியாமல் சீன பெண்மணிகள் நினைவுக்கு வந்துப் போவார்கள். கையில் இறுகப்பிடித்திருக்கும் மட்டக்குச்சி அவளை இன்னும் அழகாக காட்டும். வேட்டியை நேத்தியாய் மடித்து தலையில் போடப்பட்டிருக்கும் கொங்காணியோடு அவளைப் பார்த்தாள் தேவதையாய் தோன்றுவாள். கொஞ்சம் வெயில் பட்டாலும் முகம் கன்னி போன தக்காளியாய் சிவந்துவிடும் மட்டக்குச்சாட்டம் ஒல்லியாய் நிற்கும் புஸ்பத்திடம் தோட்டத்தில் எல்லோருக்கும் ஒரு மரியாதையிருக்கும்.
இந்தக் காவிய காதலில் யார் கண் பட்டதோ தெரியாது இடையிலோர் மறிப்பு விழுந்தது.
பனி இறங்கிய காலை பொழுது அரக்க பரக்க மலைக்கு ஓடி நிரையில் இறங்கி நாலு கொழுந்து கிள்ளி கூடையில் போட்ட போதுதான் ஒதுக்கு மலைக்கு துாக்கிப் போட்டிருக்கும் செய்தியை அறிந்தாள் புஸ்பம்.
“ஏம்மா பொஸ்பம் ஒன்ன துாக்கி ஒதுக்கு மலையில போட்டிருக்காங்க நீ அங்கப் போயி மட்டம் ஒடிக்கட்டாம். தோட்டத்துல உள்ள பயசிறுக்கிகளுக்கு கண்ண உறுத்திகிட்டே இருந்திச்சிப் போல என்னால ஒன்னும் செய்ய முடியல தாயி நல்லா இருக்கிற குடும்பத்துல கொழப்பத்த உண்டுப் பண்ணுறதையே பொழப்பா பண்ணிகிட்டு இருந்தா இப்பித்தான் நடக்கும் நீ போம்மா” என்று கங்காணி தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தப்போது
“அட இது என்னாங்கய்யா அநியாயமா இருக்கு? கேட்டுக் கேள்வி இல்லாம இப்பிடி ஆள மாத்திப் போடுறதுக்கு என்னா நடந்திருச்சி?”
“நான் என் வேலயில எப்பயும் சுத்தமாத்தானே இருந்திருக்கேன்?”
“றாத்தலுக்கு மேல கொழுந்தெடுத்து நாலு காசு சம்பாதிக்கிறது கண்ணக் குத்திருச்சிப் போல”
“வயசுப் போன எத்தனயோ பேரு ராத்தலுக்கு மேல் கொழுந்தெடுக்க முடியாம புது மலயில கெடந்து மாரடிக்குறாங்க எனக்கு என்னா ஆச்சுனு இப்பிடி மாத்திப் போட்டுட்டீங்க?”
என குழம்பியப் போதுதான் “எதுனாலும் போயி நம்ம வெள்ளக் கண்டாக்க கேள்”
“எங்கள கேட்டுகிட்டா தோட்டத்துல எல்லாம் நடக்குது” என்று வாயடைத்து நின்றார் கங்காணி.
“தோட்டத்துல அவரு வச்சதுதானே சட்டமா இருக்கு” என்றதும் புஸ்பத்துக்கு சுருக்கென்று தைத்தது. சுதாகரிக்துக் கொண்டு ஒதுக்கு மலைக்கு கிளம்பி விட்டாள்.
பல நாள் திட்டம் நிறைவேறிவிட்ட இறுமாப்பில் இறைச்சி துண்டைக் கண்ட நாயாய் புஸ்பத்தை கண்டு பல்லிளித்த கண்டாக்கு மலை மேட்டில் அவளை கண்டவுடன் விரசப் பார்வையால் சேட்டை காட்டியப் போது புஸ்பத்துக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கி வெடித்தது. பற்களை நறுநறுவெனக் கடித்துக் கொண்டாள்.
“ரோதமுனியப்பா இந்த மாதிரி பாவிபயலுகள பாத்துக்கிட்டு இன்னுமா அமைதியா இருக்க? ஒன்னோட ஆக்ரோசத்துல கொல்லிக்கண்ண பொசுக்கிப்புடு பொசுக்கிப்புடு” என்று முனுமுனுத்துக் கொண்டாள்.
கையில் கிடந்த கத்தியை கோப ஆவேசத்தோடு வீசி வீசி மேடு பள்ளமாய் வளர்ந்திருந்த வங்கிகளை வெட்டி மட்டம் ஒடித்துக் கொண்டிருந்தாள். கைகளை வீசி வீசி கத்தியால் மட்டம் ஒடித்துக் கொண்டிருந்வளின் கம்முகூட்டில் இருந்து வழிந்த வியர்வை ரவிக்கையை ஈரமாக்கியிருந்ததால் தன் கழுகு கண்ணால் அதனை பார்த்துக் கொண்டிருந்தான் கண்டாக்கு கோபத்தோடு முத்தானையை இழுத்து அடிவயிற்றில் சொருகிக் கொண்டு அவனை முறைத்தப் போதும் விரசமாய் நாக்கை துருத்தி நாக்கால் கன்னத்தை உப்பி சேட்டைக் காட்டியது அறுவருப்பாக இருந்தது.
“புது மலயில ராத்தலுக்கு மேல கொழுந்து எடுக்க நீ படுற கஸ்டத்த பாத்தா மனசு தாங்கல புஸ்பம் அதுதான் தொரைக்கி சொல்லி இங்கப் போட்டது நீ கஸ்டப்படாம வேல செய்யலாம் கொஞ்சம் ஒத்துழைச்சா சரி” என்று குழைந்தான் கண்டாக்கு.
“கொங்காணிய சரியாப் போடு வெயில்ல கெடந்து மொகம் செவந்திருச்சி” என்று நெருங்கி வந்தவன் “இப்பிடி மாடா கெடந்து ஒழைச்சு என்னாத்த வச்சிருக்க சொல்லுப் பாப்பம்?” என்று பேசிக்கொண்டே மீண்டும் நான்கு தேயிலை மரங்களைக் கடந்து பக்கத்துக்கு வந்திருந்தான். நெருங்கி வந்தவனிடம் இருந்து மணந்த சிகரட் நெடி அடி வயிற்றை குமட்டியது. அப்போது அவன் உதிர்த்த வார்த்தைகளில் பரவியிருந்த விரசம் அனல் தெறிக்கும் அவளின் கோபப் பார்வையால் சுட்டெரிந்துப்போனது ஆனால் கண்டாக்கின் கண்களில் மட்டும் கலவரத்தை காணமுடியவில்லை.
நேரம் பன்னிரெண்டு மணியைத் தாண்டியிருந்தது.
எல்லோரும் நிறுவைக்கு சென்றிருந்தார்கள்.மலையில் புஸ்பமும் கண்டாக்கும் மட்டும் தனிமை பட்டப் போது மனசு கிடந்து படபடத்தது. நெத்திக்காணில் இறங்கி ரோட்டுக்கு வந்தாள். அவன் அவளை மோப்பநாயாய் பின்தொடர்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவனோடு சேர்ந்து பயணிக்கும் சிகரட் நெடி ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருந்தது. ஓட்டமும் நடையுமாய் கருத்தரோட்டுக்கு வந்து சேர்ந்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
திடீரென பழைய மலையில் இவளை தூக்கிப் போட்டது பற்றி தோட்டத்தில் கண் காது மூக்கு வைத்து பேசத் தொடங்கியிருந்தனர். சண்முகு கோபக்காரன் மட்டுமில்லை முரட்டு சுபாவமும் கூட அதனால் பயந்துக் கொண்டே அவனிடம் இது பற்றி வாய் திறக்காமல் இருந்து விட்டாள்.
நாட்கள் ஓடியடைந்திருந்தன. கண்டாக்கின் சேட்டைகள் எல்லை மீறிப் போய்க்கொண்டிருந்தன.
அன்று மழை இலேசாய் தூறிக் கொண்டிருந்தது. பழைய மலையில் பாதிக்கு மேல் புள்ளதாச்சிகளே வேலை பார்ப்பதால் அரை நேரத்தோடு மலை சோபை இழந்து விடும். அதற்கு பின்னர் கண்டாக்கின் அட்டகாசம் தாங்க முடியாது. வலிந்து வலிந்து வந்து கதையளப்பான்.
பச்சை வார்த்தைகளால் பேசிப் பேசி அவளை இம்சித்துக் கொண்டிருந்தான். அப்போதெல்லாம் சண்முகின் முகமும் காதலும் அவளின் கோபத்தை தணிக்கும் மருந்துகளாகின. எல்லாவற்றையும் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக் கொள்ளும் புஸ்பத்தின் இயல்பு பேச்சும் கனிவும் மறைந்து இறுக்கமும் பயமும் குடிகொண்டிருந்தன. ராட்டினமாய் சுழலும் மனப்போராட்டத்தில் அவளது எண்ண அலைகளும் சுழன்றன.
குட்டிப் போட்ட நாயாய் கண்டாக்கு புஸ்பத்தை சுத்தத் தொடங்கியிருந்தான். அன்று அரை நாள் லீவு கேட்டுக் கொண்டு நின்றவளை குறுக்கு விசாரனை செய்வதாக சொல்லி ஏதேதோ கேட்டு அலம்பிக் கொண்டிருந்தவனிடம் “ஐயா வீட்டுல பொட்டுக்கூட வெறகு இல்ல அதுனால அடுப்பெரிக்க முடியல அதுதான் போயி கொஞ்சம் வெறகு பொறுக்கனும்” என்றதும் என்ன நினைத்தானோ தெரியாது
“சரி நீ போ” என்றதும் புஸ்பம் கிளம்பி விட்டாள்.
வானம் கருகருவென இருண்டிருந்தது. காய்ந்து கிடந்த சுள்ளிகளை எல்லாம் பொறுக்கி ஒன்று சேர்த்து கயிறை குறுக்காக போட்டு கட்டாக கட்டிவிட்டு நிமிர்ந்தப் போது புஸ்பம் திடுக்கிட்டுப் போனாள்.
நெத்திக் காணுக்கு கீழே பள்ளத்தில் பாம்பொன்று கீரியிடம் மாட்டிக் கொண்டிருந்தது. புஸ்பத்துக்கு நெஞ்சு படபடக்கத் தொடங்கியிருந்தது. விறகு கட்டை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு திரும்பியவளுக்கு இதயமே நின்றுவிடுமாற் போலிருந்தது. பக்கத்தில் கண்டாக்கு நின்றிருந்தான்.
வழியை மறித்து நின்றவனிடம் “ஐயா இது எல்லாம் நல்லதுக்கு இல்ல வழிய விடுங்க சண்முகுக்கு பன்டி குத்த மட்டுமில்ல மனுசன குத்தவும் தெரியும்”
நீ நெனைக்கிற மாதிரி பல்லு இழிக்கிற பொம்பள நான் இல்ல” என்றவளை தன் முரட்டு கரங்களால் அவளின் தலையில் இருந்த விறகு கட்டை திடுமென தள்ளிவிட்டான். புஸ்பம் நிலை தடுமாறிப் போனாள். விறகோடு சேர்ந்து விழுந்ததில் பிட்டத்தில் விழுந்த அடி வலியெடுத்தது. அவள் எதிர்பாராத நேரத்தில் மேலே விழுந்த கண்டாக்கு அவளை இறுக கட்டியப் போது திமிறிக் கொண்டு எழுந்தாள் புஸ்பம்.
வாரி சொருகியிருந்த கூந்தல் கலைந்து முகத்தை மறைத்திருந்தது. மேல்மூச்சும் கீழ்மூச்சும் வெப்பத்தை வாரி இரைக்க புலியெனப் பாய்ந்து மட்டக்குச்சியை கையில் எடுத்தாள் புஸ்பம்.
கண்டாக்கு மிரண்டுப் போனான். அப்போதுதான் அவன் கண்ணில் ஒரு கலவரத்தை காண முடிந்தது.
பள்ளத்தின் அடிவாரத்தில் கீரியிடம் இருந்து தப்புவதற்கு பாம்பு போராடிக் கொண்டிருந்தது. தன் வாலால் கீரியை அங்கிங்கு அசைய முடியாதபடி அமுக்கி பிடித்திருந்த பாம்பின் உடலில் கீரியின் பல் பட்ட காயங்கள் பதிந்திருந்தன. மரணத்தின் கோரப்பிடியில் கிடந்த பாம்பு திடுமென தன் வாலை சுருட்டி ஓங்கியடித்தில் கீரிக்கு வலியெடுத்திருந்தது. கீரியின் கோரப்பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட பாம்பு அசுர வேகத்தில் வெகுண்டெழுவதற்கும் வங்கியில் கிடந்த கருங்கல் சரிந்து விழுவதற்கும் சரியாக இருந்தது. சரிந்து விழுந்த கருங்கல்லால் கீரியின் தலை சிதற பாம்பு நிதானமாய் சென்றோடி பற்றையில் மறைந்தது.
பற்றை காடுகளுக்கு அப்பால் வளர்ந்து கிடந்த தேயிலை நிரையில் ரத்தம் தோய்ந்த மட்டக்குச்சிகள் ஒடிந்துக் கிடந்தன.
– மகுடம்
– மீன்களைத் தின்ற ஆறு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 2016, பெருவிரல் கலை இலக்கியா இயக்கம், இலங்கை.
![]() |
சிவனு, மனோகரன் (1978.09.17 - ) ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி. இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஞானம், தினமுரசு, தினக்குரல், சுடரொளி, மித்திரன், வடம், லண்டன், சுடரொளி, புதினம் ஆகியவற்றில் வெளியகியுள்ளன. ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடங்கி ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புக்களாகும். இவரது நூல்கள்…மேலும் படிக்க... |