போட்டி ஒழிந்தது
(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ஏ அப்பா, எத்தனை நாளாகத்தான் என் பிழைப் பிலே மண்ணைப் போட்டுக் கொண்டிருப்பாய், இன்னுமா உன் மனது இளகவில்லை…?”
“சரிதான் உன்வேலையைப் பார்!”

“வரவர உன் கருவம் அதிகமாகிறது. பாவிப்பயலே, காலையிலே வந்த ஒரு சவாரியைக்கூடத் தட்டிக் கொண்டு ஓடுகிறாயே, நீ நன்றாக இருப்பாயா….?
“நான் நன்றாக இருப்பதும், கெட்டுக் கிடப்பதும் உன் கணக்கிலே இல்லை. உன்பாட்டை நீ பார்த்துக் கொள்!”
இழுவைவண்டி நிலையத்திற்கு வந்ததுமே, சவாரி கிடைத்த சந்தோசத்தில் சண்முகம் இழுவைவண்டியை இழுத்துக்கொண்டு காற்றாய்ப் பறந்தான். அதைப் பார்த்த நாகப்பன் உள்ளம் அனலாய் எரிந்தது. வயது தொங்கிப்போன காலத்திலே நாளைக்கு இரண்டு ரூபா யாவது உழைக்காவிட்டால் அவர்கள் வாழ்வதுதான் எப்படி? அவர்கள் என்பது நாகப்பனும் அவன் ஒரே புதல்வியான தங்கத்தையுஞ் சேர்த்துத்தான். எந்தத் தொழிலுக்குமே போட்டி உண்டுதான். ஆனால் ஏழை கள் மத்தியிலே எழுகிற போட்டியைப் போன்ற வேதனை தரும் நிகழ்ச்சி வேறொன்றிருக்கமுடியாது. நாகப்பனுக்கு இப்பொழுது வயது அறுபத்தைந்தை யடுத்துவிட்டது. அவன் வாலிபம் தொடங்கிய நாட்களிலிருந்து முதுமை முத்திரையிட்டுள்ள இந்நாட்கள் வரை செய்துவந்த செய்துவந்த தொழில் ஒன்றே ஒன்றுதான். இழுவைவண்டி இழுப்பது!
அந்த நாட்களில் எல்லாம் நாகப்பன் வண்டியிலே சவாரி செய்ய வழக்கறிஞர்கள், வர்த்தகர்கள் முதல் சகலருமே போட்டியிட்டுக்கொண்டு வருவார்கள். அவ் வளவு வேகம், ஓட்டம் ஓடுவான் நாகப்பன். இப்போ தென்றால் அத்தனை வேகம் அவனுக்கில்லை. அவனுட லுக்கில்லை. அதனாலே அவனிடம் சவாரியை நாடுபவர் களும் குறைந்துவிட்டனர். போதாக் குறைக்குத் தொழி லில் போட்டியிட வேறு ஆட்களும் வந்துவிட்டனர். அந்தப் பட்டினம் காரையும், இரயிலையும் காணாத காலத்திலிருந்து நாகப்பனின் இழுவைவண்டியைக் கண் டிருக்கிறது. எப்படியிருந்துதான் என்ன? இப்பொழுது தான் கார்கள், குதிரைவண்டிகள் என்பவற்றுடன் சவா ரிக்காரர்கள் திருப்தியடைகிறார்களே போதாதற்குப் பொலிகாளைகள் போன்ற தடியர்களும் இழுவைவண்டி வைத்துக்கொண்டு வந்துவிட்டார்கள், நாகப்பனுடன் போட்டியிட! பிழைப்பு, என்ன பொத்துக்கொண்டா வந்து விழும்?
வேதனைத் தீ பற்றி எரிய ஒரு இலைச்சுருட்டினை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டே நாகப்பன் வண்டியில் சாய்ந்துகொண்டு எண்ணமிடலானான். அவன் ஆத்திரம் எல்லாம் சண்முகம் மேலேதான். “அவன் என்னதான் ‘வசியம்’ வைத்திருக்கிறானோ! வருகிறவர்க ளெல்லாம் அவனிடமல்லவா சவாரி பேசுகிறார்கள்’ என்று அவன் மனம் அடித்துக்கொண்டது. மறுபுறம் பிழைப்பே அரிதாய்ப்போன இந்தக் காலத்திலே ‘மள மள’வென்று வளர்ந்து, கதிர் ஈனத் தயாராக நிற்கும் குரக்கன் பயிரைப்போலக் கலியாணத்திற்குக் காத்து நிற்கும் தாயில்லாப் பெண்ணான தங்கத்தை நினைக்க அவனுள்ளம் நிலைதடுமாறியது. எரிந்து முடிந்த சுருட் டுத் துண்டை எறிந்துவிட்டுக் கண்ணை மூடிக் கொண்டான்.
அவன் கண்ணை விழித்தபோது கண்ட காட்சி……! ஆச்சரியத்தால் உள்ளம் ஒரு முறை விரிந்து சுருங்கி யது. மறு கணம் “தங்கம்!” அவனையறியாமலே அந்த அழைப்புப் புறப்பட்டுவிட்டது. தங்கம் அவனை நோக்கி அடியெடுத்து நடந்து வந்தாள். சண்முகம் ஒன்றுமறி யாதவன் போல வண்டியை இழுத்துக்கொண்டுபோய் மரநிழலில் நிறுத்திவிட்டு நிம்மதியாக உட்கார்ந்து விட்டான்!
“தங்கம், அவனுடன் உனக்கென்ன பேச்சு!”
“ஒன்றுமில்லையப்பா, உன் அப்பா தூங்கிக்கொண் டிருக்கிறாரே, நீ என்ன அவருக்குக் காவலிருக்கிறாயா?” என்றார். “நான் காவல் இருக்கவில்லை. அவருக்குக் கஞ்சி கொண்டுவந்தேன்” என்றேன். “அப்படியா, அவரிடம் சொல், வீணாக என் மேலே துள்ளிக்குதிக்க வேண்டாமென்று! நான் ஏன் அவர் பிழைப்பைத் தட்டிப் பிடுங்கப்போகிறேன்” என்றார். அவ்வளவுதான்! நீங்கள் கூப்பிட்டீர்கள், வந்துவிட்டேன்.”
“அவன் கிடக்கிறான் தலைக்கனம் பிடித்தவன். நீ கஞ்சியை ஊற்று” கஞ்சியைச் சிரட்டையில் வாங்கி “மடக், மடக்க கென்று குடிக்கத் தொடங்கினான் நாகப்பன்.
“ஏனப்பா, அவரைத் ‘தலைக்கனம் பிடித்தவன்’ என்று ஏசுகிறீர்கள். அவர் அப்படி ஒன்றும் கெட்டவராகத் தெரியவில்லையே!”
“பின்னே என்ன பிள்ளை, காலையிலே எனக்கு வந்த ஆள் அவனைக் கண்டதும் அவனிடமல்லவா சவாரி போகிறார். இப்படியே எல்லா நாளும் நான் ‘காக்கா’ கலைத்தால் வண்டி வாடகைக்கே திண்டாடவேண்டுமே…”
“அதற்காக அவரைத் திட்டி என்ன காண்பது? எல்லாம் நமது காலம்!”
“சரி பிள்ளை, நீ வீட்டுக்குப் போ. இதிலே நின் றால் இன்றைக்கு அரைக்காசுகூடக் காணமுடியாது. நான் புகையிரதநிலையப் பக்கமாகப் போய்ப் பார்க்கி றேன்.”
தங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டுப் புகையிரத நிலையப் பக்கமாக வண்டியை இழுத்துக்கொண்டு நடந்தான் நாகப்பன்.
அடுத்து இரண்டு நாட்களாக நாகப்பனையே அந்தப் பக்கம் காணவில்லை. சண்முகம் கூட “ஏது, அவர் கூட இப்படித் தாமதிக்கிறாரே” என்று தனக்குள் ஆச்சரியப்பட்டுக்கொண்டான். அன்று காலை தங்கம் தலையில் காய்கறிக் கூடையைத் தாங்கிக்கொண்டு நடப்பதைக் கண்டதும் அவனுக்கு ‘எங்கே உன் அப்பா’ என்று கேட்டுவிடலாமா என்று தோன்றியது! முன்பின் யோசியாமல் அப்படியே கேட்டும்விட்டான். தங்கம் முதலில் வாயே திறக்கவில்லை. இரண்டாம் முறையும் அவன் அதே கேள்வியைக் கேட்கவே அவள் வாய் திறந்தாள்.
“அவர் காய்ச்சலாகக் கிடக்கிறார், இரண்டு நாளாக! அன்றைக்கு மழையிலே நன்றாக நனைந்துவிட்டார்!” அப்படிச் சொல்லும்போதே தங்கத்தின் கண்கள் நீரைச் சிந்தின.
“பாவம், அவர் ஏன் இப்படிக் கட்டப்படவேண்டும்? உனக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து வைத்துவிட்டால் அவர் நிம்மதியாக இருக்கலாமே!” சண்முகத்தின் பேச்சில் இனந்தெரியாத ஒருவகைக் குறும்பு இழை யோடியது!
கலியாணப் பேச்சை எடுத்ததும் அவள் முகம் நாணத்தால் சிவந்தது. ‘நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு ‘விர்’ரென்று நடக்கத் தொடங்கினாள், அவனைச் சட்டை செய்யாதவள் போல.
அவள் வாளிப்பான உடலும், கொள்ளை அழகும் சண்முகத்தின் மனதை அப்படியே அள்ளிக்கொண்டு போய்விட்டன!
“ஏ, பிள்ளை, உன் அப்பாவுக்கு ஏதாவது ஆபத் தென்றால் என்னிடம் சொல்ல மறந்திடாதே. நான் என் னாலானதைச் செய்யப்பார்க்கிறேன்.
தொலையில் நடந்து கொண்டிருந்த தங்கத்தின் காதுகளில் இவ்வார்த்தைகள் ‘வேய்ங்குழல்’ பொழி கீதமாகப்பட்டது. ஏனென்றால் சண்முகத்தின் ஆண்மை ததும்பும் உடலமைப்பில், கவர்ச்சிகரமான முகவெட்டில், அரும்பு மீசையில், கரும்புப்பேச்சில், மின்னலென ஒளிரும் புன்சிரிப்பில் அவனை முதன்முதல் சுண்ட பொழுதே அவள் உள்ளத்தைப்பறி கொடுத்து விட்டாள்.
“மங்கைதான் வாராளோ, என் மையலைத் தீராளோ ” என்று பாடிக் கொண்டே சண்முகம் இரண்டுநாள் களை வண்டி இழுப்பதில் கழித்து விட்டான். தங்கத்தை அந்தப்பக்கமே காணவில்லை. நாகப்பனின் கதியும் என்னவாயிற்று என்று தெரியவில்லை. ‘போயாவது பார்க்கலாமா?’ என்று கூடச் சண்முகம் ஒருதடவை எண்ணினான். “சே, எப்படி இருந்தாலும் நம்மைத் துரும்பாகக்கூட மதிக்காத அந்த மனிதன் வீட்டுக்கு எப்படிப் போவது?” அவன் மனம் பின்னுக்கிழுத்தது. இந்தமனப் போராட்டத்தில் மூன்றாம் நாளுடன் அவன் மல்லாடிக் கொண்டிருந்தான். இருட்டும் நேரமாகிவிட் டது. சில்லென்ற குளிர்காற்று மயிர்த்துவாரங்களில் ஊசி கொண்டு குத்துவது போல, ஊளையிட்டுக் கொண்டுவீசியது. ‘பட், பட்’ டென்று மழைத்துளிகள் பூமித்தாயின் மடியில் ‘பொல பொலென்று’ உதிர்ந்தன. ‘இனி’யார் சவாரிக்கு வரப் போகிறார்கள் என்ற எண் ணத்துடன் சண்முகம் வண்டியை இழுத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமானான். தூரத்தில் யாரோ ஒருபெண் ஓட்டமும் நடையுமாய் வருவது அவன் கண்களிற் பட்டது. தங்கந்தான் வருகிறாளோ?
கொஞ்சநேரம் தாமதித்தான் சண்முகம்.
அவன் எண்ணியது பிழைத்துப் போகவில்லை. தங்கம் அவனிடமேவந்து கொண்டிருந்தாள்!
“என்ன தங்கம், என்ன அவசரம்? இப்படி ஓடிவருகிறாயே…”
“அப்பா மிகவும் கட்டப்படுகிறார். பட்டினத்து மருத்துவரை அழைத்துப் போனேன். ஊசிபோட வேண்டும். பத்துரூபா இல்லாவிட்டால் முடியாதென்று போய்விட்டார். நான் என்ன செய்வேன்….”
அவள் கண்கள் நீரை ஆறாய்ப்பெருக்கின. தேகம் ‘படபட’த்தது. “தங்கம் பயப்படாதே. நீ வீட்டுக் ருப்போ; நான் இதோ அவரை அழைத்துக் கொண்டு வருகிறேன்”.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வண்டியை இழுத்துக் கொண்டு ஓடினான் சண்முகம்!
மருத்துவர் வந்தார். ஊசிபோட்டார். “பயப்பட வேண்டியதில்லை, குணமடைந்து விடும்” என ஆறுதல் சொன்னார். சண்முகம் வண்டியிலேயே அவரை அழைத்துக் கொண்டுசென்றான். நேரம் போய்க் கொண்டிருந்தது. சப்தநாடியும் அடங்கிக்கிடந்த நாகப்பனுக்கு உணர்வுவந்தது. தங்கம் நடந்தவற்றை யெல்லாம் ஒன்றும் மறைக்காமற் சொன்னாள். நாகப்பன் ஒன்றுமே பேசவில்லை. “சண்முகம் இப்பொழுது வருவானா?” என்று கேட்டான்.
“வருவார்!” என்றாள் அவள். ஆனால் சண்முகம் வரவேயில்லை! அந்த இரவு முழுவதும் தங்கத்திற்கு நித்திரையும் வரவேயில்லை.
விடிந்ததும் நாகப்பன் தங்கத்தை அழைத்து சண்முகத்தைக் கூட்டி வருமாறு கூறினான்.
“அவர் வரமாட்டேன் என்றால்”, அவள் கேட்டாள்.
“நான் அழைத்துக் கொண்டுவரச் சொன்னதாகச் சொல். அவன் வருவான்!”
தங்கம் நடந்தாள், ஓடினாள், இல்லை; பறந்தாள்!
மனதிற் கொண்ட மணாளன் கிடைக்கப்போகிறான் என்ற மகிழ்ச்சியில்!
சண்முகம் வந்தான்.
“இப்படிவா, சண்முகம்…!” நாகப்பனின் குரலில் பாசம் இழையோடியது. “தங்கம் இப்படி வா…” நாணம் நடமிட, நாகப்பன் பக்கம் நகர்ந்து நின்றாள் தங்கம்.
“சண்முகம் – தங்கம்” இருவர் கரங்களையும் முதுமைபடர்ந்து நிற்கும் நாகப்பனின் கரங்கள் ஒன்று சேர்க்கையில் அவன் உதடுகள் ‘போட்டி ஓழிந்தது’ என்று முணுமுணுத்தன.
– வாழ்வு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).
![]() |
நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க... |