பொட்டு
(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசலில் நிற்கும் மாமரம் வசந்த காலத்தில் துளிர்ப்பதும் இலையுதிர் காலத்தில் இலைகளை வெளிநடப்புச் செய்து மொட்டையாய் நிற்பதும் கண்டால் மரம் காலத்தை அனுசரித்து வாழப்பழகியிருக்கும் முதிர்ச்சியை புரிந்துக் கொள்ளலாம்.
விடியலில் மரங்கள் உதிர்க்கும் இலைகளை கூட்டிப் பெருக்கி தண்ணீர் தெளித்து முற்றத்தை சுத்தப்படுத்தி விட்டுத்தான் வீட்டு வேலைகளை தொடங்குவாள் பொட்டு. அதுவும் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் என்றால் சொல்லவே வேண்டாம் வாசல் வளவுகளை கூட்டிப் பெருக்கி, குளித்து மெழுகி, பக்திப் பெருக்கோடு காளிக் கோயிலில் விளக்கேற்றி ஊதுவர்த்தியும் சாம்பிராணியும் மணக்கும் வரை அவள் ஓய மாட்டாள்.
கன்னியப்பில் பொட்டுவின் சுத்தபத்தம் பற்றி பேசாதவர்கள் யாரும் இல்லை. அதிலும் அவள் அடுப்பு மெழுகி கோலமிடும் அழகிருக்கிறதே அதைக் கண்டு வாயூறி பேசாதவர்கள் எவரும் இல்லை. வாசலை அலங்கரிக்கும் மரத்தடியில் கச்சிதமாய் நிற்கும் காளி சக்தியின் சொரூபமென்பதால் காளியை மனதார நினைத்துக் கொண்டு முத்துக்கல் போட்டு குறி சொன்னால் சொன்னச் சொல் தப்பாது. நூல் மந்திரித்து கட்டுவதானாலும் மைப்போட்டு பார்ப்பதானாலும் சுற்றுவட்டாரத்தில் அவளை
அவளை விட்டால் ஆளில்லை. தோட்டத்தில் யாராவது நோயில் விழுந்தால் டொக்டரைப் பார்க்கிறார்களோ இல்லையோ கட்டாயம் அவளிடம் விபூதி வாங்கிப் போடுவார்கள்.
பொட்டக்காப் பற்றி “அவ தெய்வப் பொறப்பாச்சே” “ஆம்பளைங்க வாடையே அவளுக்கு ஒத்துக்காது” ”குளிச்சி மொழுதி சுத்த பத்தமா நின்னா அந்த காளியே அவ கண்ணுல தெரிவாளே” என்று அம்மா சொல்லக் கேட்கும் போதெல்லாம் அவர் மீதான பக்தியும் மரியாதையும் இன்னும் கூடும்.
அந்தி நிறுவைக்குப் பின், நெற்றி நிறைய திருநீறைப் பூசிக் கொண்டு உட்கார்ந்து விட்டால் எட்டொன்பது மணிவரைக்கூட எழுந்திருக்க முடியாது. அதுவும் சூனியம் வெட்டுவதென்றால் ஒரு மணியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்போதெல்லாம் பொட்டுக்கு எடுபிடி வேலைகளைச் செய்பவன் கைத்தம்பித்தான்.
கைத்தம்பி கன்னியப்புக்கு எப்படி வந்தான் என்பது பெரியக்கதை முன்பெல்லாம் பாப்பாத்திதான் தோட்டந்தோட்டமாய் சாமி பார்ப்பதற்கும், மைப் போடுவதற்கும் போவாள் அப்படியொரு நாள் புதுக்காட்டுக்கு போயிருந்தப் போதுதான் கைத்தம்பியைக் கண்டாள்.
வெற்றுடம்பு வரிவரியாய் ஓடியிருக்கும் நெஞ்செலும்புகளைக் காட்ட, காற்சட்டையின் ஒரு பக்க இடுப்பு ஓரத்தை கையில் பிடித்துக் கொண்டு ஊழை ஒழுகும் வாயோடு நின்றிருந்தவனை கண்ட மாத்திரத்தில் அவளின் நெஞ்சில் இரக்கம் சுரந்து விட்டது. விசாரித்துப் பார்த்ததில் தாய் யாரோ வெளிநாட்டுகாரனோடு சோடைப் போனதால் வயிற்றில் வாங்கிக் கொண்டாள் என்றும் பிள்ளையைப் பெற்று போட்டுவிட்டு வெளிநாட்டுக்கு ஓடியவள்தான் கைத்தம்பியும் வளர்ந்து நிற்கிறான் ஆனால் இன்னும் அவள் பற்றி தகவலில்லை. என்பது தெரிய வந்தது.
நீலம் பூத்த கண்களும் செம்பட்டை தலையும் குங்குமப்பூ நிறமும் தான் அவனை ஏனையோரில் இருந்து வெட்டி விலக்கி காட்டும் தனித்துவங்கள். ரொபட் கென்னடியாகவோ ஜோன் டெய்லராகவோ பிறக்க வேண்டியவன் பாவம் பார்வதி வயிற்றில் வந்து விழுந்ததால் பரமசிவனானான் ஆனால் தோட்டத்துக்கு அவன் வெள்ளையன்தான் சோறு கண்ட இடம் சுகமென்று இருந்து விடுவான். தோட்டத்தில் எல்லா வீட்டு கைவேலைகளுக்கும் கைப்பிள்ளையானதால் பின்னர் கன்னியப்பு கைத்தம்பியானான்.
தனியனாய் சுற்றித்திரிந்த கைத்தம்பிக்கு பாப்பாத்தியின் அரவணைப்பு இதமாய் இருந்தது. காடே வனமென சுற்றித்திரிந்து விட்டு வந்தாலும் பொட்டுவின் கண்ணை கட்டிவிட்டு அவனை உபசரித்து விடுவாள். அதனால் இருவருக்கும் இடையில் சண்டை மூளும். அப்போதும் கைத்தம்பியை விட்டுக் கொடுக்க மாட்டாள் கிழவி. தனக்கு பின் பொட்டுக்கு கைத்தம்பிதான் துணை நிற்பான் என்று நம்பியிருந்தாள்.
பொட்டு தன்னை ஓடவிட்டு விரட்டுவதை பாப்பாத்தியிடம் முறையிட்டுக் கொண்டேயிருப்பான் அவன். தொட்டதற்கெல்லாம் கையோங்கி விடும் பொட்டு அவனை சாதாரணமாய் அலட்சியப்படுத்தி விடுவாள். அப்போதெல்லாம் உள்ளுக்குள் குமுறும் அவன் அவளை கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்ப்பான். கைத்தம்பி தோட்டத்தில் பத்து நாள் பேர் போடுவதே குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். அப்படியே பேர் போட்டாலும் சம்பளத்தை கண்ணில் காட்டமாட்டான். சம்பள நாட்களில் கிழவியின் வாயடைப்பதற்கு கால் போத்தல் சாராயத்தை வாங்கி ஊத்தினால் போதும் மட்டாகி விடுவாள். ஆனாலும் பொட்டுவின் வாயை அவனால் அடைக்க முடியாது.
“ஒன்ன வச்சி சொமக்கிறதே இங்க பெரும்பாடா இருக்கு இதுல ஊரு நாய்க்கெல்லாம் வடிச்சி கொட்ட வேண்டியிருக்கு” என்று சொல்லிக் கொண்டே அருகில் கிடந்த கிழவியின் எச்சில் பணிக்கத்தை எடுத்துச் சென்று காணில் கொட்டிக் கொண்டே “மானங் கெட்டதுக பொம்பள ஒழப்புல திங்குறதுக்கு போயி எவனயாவது நக்க வேண்டியதுதானே? என்று சொல்லிக் கொண்டே இரவு சாப்பிட்டு, காய்ந்துக்கிடக்கும் தட்டுகளை அருகில் கிடக்கும் பேசனில் எடுத்து கோபமாய் எறிய அவை ஒவ்வொன்றும் நங் நங்கென விழுந்து ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன.
இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தலையோடு போர்வையை போர்த்திக் கொண்டு மல்லாந்துக் கிடந்தான் அவன். டவுனில் எடுபிடி வேலைகளுக்கு சென்றான் என்றால் உலகத்தையே மறந்து விடுவான் கிடைக்கின்ற வேலைகளை செய்து விட்டு செல்லமுத்து பார் வாசலே தஞ்சமென்றுக் கிடப்பான். அப்போதெல்லாம் பொம்பிளைகளையே இதுவரை பார்த்திராத மாதிரி போற வாற பெண்களை வெறித்துப் பார்த்துக் கிடப்பான். அப்போது உள்ளுக்குள் முட்டி மோதும் மோகம் அவனை அணுவணுவாய் சிதைக்கும்.
யாரும் தன்னை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை அப்படியே பார்த்தாலும் முகம் உமிழும் அருவருப்பின் அடையாளங்கள் தன்னை அதிகமாய் காயப்படுத்தும் போதெல்லாம் செல்லமுத்து பாரில் நுழைந்து விடுவான். அவமானச்சின்னமாய் தன்னை பெற்றவள் மீது துாசண வார்த்தைகளை அள்ளி இறைப்பதோடு சமாதானமடைவான் தைத்தம்பி.
பொட்டு தனிமரமாய் நிற்பதைக் கண்டு பாப்பாத்தி உள்ளுக்குள் புழுங்கி கிடந்தாள்.
“காலம் இப்பிடியே ஓடாதுடி தனிமரமா நிக்கிறது நெருப்புல நிக்கிற மாதிரி இப்பையே சுதாகரிச்சிக்க இல்லனா நாலு நக்கு நக்கித்தான் சீபடனும் சொல்லிப்புட்டேன்.” என்று சொல்லிக் கொண்டே சிக்காய் கிடக்கும் தலை மயிரில் சீப்பை விட்டு இழுத்து போராடிக் கொண்டிருந்தாள் கிழவி.
“ஊரு ஒலகத்துல எவன்தான் குடிக்கல பொம்பளனா கொஞ்சம் பொறும வேணும்”அரும பெருமையாத்தான் தேடி வச்சேன் மவராசன் சத்தமாக் கொட நாலு வார்த்த பேச மாட்டது” “என்னா தண்ணிய போட்டுட்டு சாஞ்சிருவான் அது ஒன்னுத்தான்” “ஒனக்குத்தான் வாழ குடுத்து வைக்கல” பிச்சலும் புடுங்களுமா எத்தன காலத்துக்குத்தான் வாழுறது அதுத்தான் மவராசன் சாதி சனத்தோட போயி சேர்ந்துட்டது”
“அள்ளி எறச்சிட்ட இப்ப அள்ள முடியுதா? எதயும் ஒரு தடவைக்கு நாலு மொற யோசிக்கனும்” என்று சொல்லிக் கொண்டே தலைவாரி கொட்டிய பேன்களை தேடித் தேடி குத்திக் கொண்டிருந்தாள் கிழவி. “கொஞ்சம் பொத்துவியா? விடிஞ்சோன லொட லொடனு தொடங்கிற வேண்டியதுதான்” “ச்சீ இந்த வீட்டுல மனுசென் நிம்மதியா துாங்கக் கொட முடியாது” என்று போர்வையை விருட்டென விலக்கி எழுந்தப் போது போர்வை கிழவின் முகத்தில் பட்டென அறைந்து சுருண்டது.
“ஆம்பள ஆயிரஞ் செய்வாண்டி நீதான் பொறுத்துப் போகணும்” என்று தன் மீதுள்ள அக்கறையை கோபமாயும் ஏசிப்பேசியும் கிடந்த வாய் ஓய்ந்து இரண்டு மாதங்களாயிருந்தது.
கிழவியின் மறைவுக்கு பின்தான் பொட்டு தனிமையின் கூர்மையை உணர்ந்து தவித்தாள். தனிமையை விரட்டுவதற்கும் உள்ளுக்குள் புகைந்துக் கிடக்கும் வலிகளை ஆற்றுவதற்கும் காளிக் கோயிலே தஞ்சமெனக் கிடந்தாள். அதன் பின்தான் பொட்டு பொட்டம்மா ஆனாள்.
பாப்பாத்தி கிழவியின் மறைவு கைத்தம்பிக்கு பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. தலை மகனாய் நின்று எல்லா காரியங்களையும் அவனே செய்தான். கிழவியின் மறைவுக்கு பின் சில நாட்களாய் பார் பக்கமே போகாமல் இருந்த வரைக்கும் பொட்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள் ஆனால் அந்நிம்மதி நீடிக்கவில்லை.
அன்றொரு சம்பள நாள் தன் தவத்தை கலைத்து விட்ட கைத்தம்பி வயிறு முட்ட கள்ளைக் குடித்து நிதானத்தைத் தொலைத்திருந்ததோடு முழு போதையில் வந்து வாயிற் கதவினில் வீழ்ந்து அப்படியே துாங்கிப் போயிருந்தான்.
விடியல் காற்று குளிர்ந்திருந்தது.
இன்னும் தெளியாத போதை கைத்தம்பியின் கண்களை விடியல் வானமாக்கியிருந்தது.
அசந்து தூங்கிக் கிடந்தவனின் கால்கள் வீட்டு வாசல் கதவை மறித்துக்கிடக்க விடியலில் சாணித் தண்ணியோடு வந்து கதவை திறந்தவளுக்கு கோபம் தலைக்கேறியது.
“ஏன்டா சனியனே ஒனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா இங்க வந்துப் படுப்ப’
“ராத்திரி முழுக்க லாம்ப எரிச்சிகிட்டு பாத்துக்கிட்டு இருந்தா இங்க வந்து படுப்பியோ? நாயே”
“ஒன்ன சொல்லிக் குத்தமில்ல இந்த வீட்டுல கெடந்த கெழவிய சொல்லனும் நாய கழுவி நடு வீட்டுல வச்சாலும் நக்குமினு சும்மாவா சொன்னாங்க”
என்று கையில் இருந்த ஈர்க்குமாரினால் சரமாரியாகத் அவனைத் தாக்கத் தொடங்கியதும் நிலைக் குலைந்த கைத்தம்பிக்கு அப்போதும் போதை தெளிந்திருக்கவில்லை கையில் இருந்த சாணி வாளியை தலையிற் கொட்டியதோடு சமாதானமடைந்தாள் அவள். “அட என்னா? இப்பிடி பண்ணிப்புட்ட ஆயிரந்தான் இருந்தாலும் அவென் ஆம்பளடி” நாலு பேரு பாக்க இப்பிடி அடிக்கிறது நல்லது இல்ல”வயசுல சின்னவேன்கிறனால பொறுத்துக்கிட்டுப் போறான் ஒருநாள் இல்லாம ஒருநாள் எதுத்துட்டா அப்பொறம் நம்ம மூஞ்சில நாங்களே துப்பிக்கிற மாதிரி ஆயிரும் என்று அம்மாளக்கா வந்து அவளை உழுக்கும் வரை அவளின் கோபம் தணிந்திருக்கவில்லை.
எகிறிக் கொண்டு எழுந்தவன் அவிழ்ந்துக் கிடந்த சாரத்தை சுருட்டிப் பிடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினான். அன்று ஓடியவன்தான் அதற்கு பின் தோட்டப்பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை.
அன்றுடன் விட்டது பீடை என்று அவளும் முழமையாய் ஆன்மீகத்தில் கலந்தாள். பல தடவைகள் இப்படி வீட்டைவிட்டு ஓடியிருக்கிறான் அப்போதெல்லாம் வயிறு பசித்தால் இரண்டு நாட்கள் கூட நிற்க மாட்டான். ஆனால் இம்முறை ஐந்து நாட்களாகியும் வராமல் இருந்தது அவளுக்கு வியப்பாக இருப்பது அப்போதெல்லாம் அவனுக்காய் ஆக்கப்பட்ட சோறு விடியலில் நாய்களுக்குத்தான் கொட்டப்பட்டது.
தோட்டத்தில் பலரும் கைத்தம்பியை அங்கு கண்டதாகவும் இங்கு கண்டதாவும் வந்துச் சொல்வர். ஆனால் அவன் பேச்சை எடுத்தாலே எரிந்து விழுவாள் அவள். அந்த நாட்களில்தான் கிழவியின் மறைவு அதிகமாய் அவள் நெஞ்சை உருக்கியது. விடிய விடிய சிமிலி லாம்புக்கு எண்ணெய் வார்த்து எரித்துக் கொண்டே கைத்தம்பிக்காய் காத்துக் கிடந்தவளுக்கு அவன் வராமலே போனது இன்னும் பெருத்த வேதனையைத் தந்திருந்தது.
ஆடி மாதத்தில் பொட்டுக்கு ஓய்வென்பதே கிடையாது. சாமம் வரைக்கும் அண்டை அயல் தோட்டங்களில் உள்ளவர்கள் எல்லாம் வரிசை கட்டி நின்று விடுவதால் விபூதி மந்திரித்துக் கொடுப்பதும் முத்துக்கல் போட்டுப்பார்ப்பதும் என்று இயங்கிக் கொண்டேயிருப்பாள். சில நேரங்களில் தோட்டத்து வேலைக்கும் போகாமல் இருந்து விடுவாள். ஆனால் இப்போதெல்லாம் சூனியம் வெட்டுவதற்கு மட்டும் ஒப்புக் கொள்வதில்லை.
மழை ஆடிக்காற்றுடன் சோவெனப் பெய்துக் கொண்டிருந்தது.
குரலை தாழ்த்தி ரோசி லயத்தைச் சுற்றிச் சுற்றி குரைத்துக் கொண்டிருந்தது. பொட்டுவுக்கோ இருப்புக் கொள்ளவில்லை. வழமையாகவே கைத்தம்பியை கண்டு விட்டால் குரலை தாழ்த்தி குரைக்கும் அதே தொனியில் ரோசி குரைத்துக்கொண்டிருந்தது அவளுக்கு பெரும் ஆறுதலாய் இருந்தது. உள்ளுக்குள் அவனை எதிர்பார்த்துக் கிடக்கும் பொட்டு தாழிட்டுக்கிடக்கும் கதவை விடிந்தது கூட தெரியாமல் வெறித்துக்கிடந்தாள்.
இப்படி பல இரவுகளை அவள் அழுதே கரைத்திருந்தாலும் யாராவது அவன் பற்றி பேச்செடுத்து விட்டால் போதும் அவன் வீடு வந்து சேராத துயரினை தூசண வார்த்தைகளை அள்ளித் தெளித்து சமாதானம் அடைந்துப்போவாள்.
ஆடிக்காற்றும் தொடர்ச்சியான மழையும் பாட்டியை இருமலில் போட்டுத் தாக்க, இடைவிடாது இருமி இருமி எச்சில் பணிக்கத்தை நிறைத்துக் கொண்டிருந்தாள். பொதுவாகவே பாட்டி நோயில்று விழுந்து விட்டாள் பொட்டக்காவிடம்தான் விபூதி வாங்கிப் போடுவோம். அன்று மிகவும் முடியாதவளாகி மூச்சு விடுவதற்கே கஸ்டப்பட்டுக் கிடந்ததாள் பாட்டி. அம்மா நொய் நொய்யென குடையத் தொடங்கி விட்டாள் என்னை.
“எத்தன மொற சொன்னாலும் காதுல வாங்கிக்கவே மாட்டியே இருட்ட முன்னுக்கு போயி கொஞ்சம் விவுதி வாங்கிட்டு வாடினா கேக்க மாட்ட இப்ப பாத்தியா?” என்று என்னைத் திட்டிக் கொண்டே ஐடெக்ஸ் தைலத்தை பாட்டியின் தொண்டையில் இருந்து நெஞ்சு வரை பூசி தேய்விட்டுக் கொண்டே
“ஏன்டி இப்பிடி கத்திக்கிட்டு இருக்கேன் காதுலயே போட்டுக்க மாட்டேன்கிற ஒரு எட்டு எழும்பி போயி பொட்டு வூட்டுல லயிட் எரியுதானு பாரு”என்றதும் எழுந்து வந்து கதவை திறக்கிறேன் முகத்தில் அறைந்த காற்றும் சாரலும் உச்சி முதல் உள்ளங்கால் வரை நடுக்கியது.
வாசலில் நின்றவாறே “அம்மா’ பொட்டக்காவூட்டுல லைட் எரியுது” என்றதும் “அடச்சீ ஏன் இப்பிடி காட்டு கத்து கத்துற அப்பிடியே ஒரு எட்டு போயி நான் சொன்னேனு கொஞ்சம் விவுதி வாங்கிட்டு “என்றதும் அரைக்கதவை விருட்டென திறந்துக் கொண்டு மழையையும் பொருட்படுத்தாமல் பிடித்த ஓட்டத்தை என்னாலேயே வா” கட்டுப்படுத்த முடியவில்லை. ஓடி வந்த வேகத்தில் தொப்பென பொட்டுவின் வாசல் கதவில் விழுந்த வேகத்தில் தாழ்பாள் தெறித்துவிழ படாரெனத் திறந்த கதவு சுவரில் மோதியடங்கியது. அங்கே பொட்டு ஆவேசக் காளியென கயிற்றில் தொங்கிக் கிடந்தாள். அது என்னை மீள முடியா அதிர்ச்சியில் தள்ள குப்பென வியர்த்து கொட்டி உடல் நடுங்கத் தொடங்கியது. விருட்டென எழுந்து கத்திக் கொண்டே வீட்டை நோக்கி ஓடுகிறேன்.
ஊதுவர்த்தியும் சாம்பிராணியும் கமகமக்கும் பணிய லயத்தை கோர மரணத்தின் நெடி ஆக்ரமித்திருந்தது. தோட்டம் கூடிக் கூடி வாயோயாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தது. அது அவளின் கோர மரணத்தைப் பற்றி அல்ல அவள் வயிற்றில் ஜீவித்திருந்த கருவைப் பற்றி.
– ஞானம்
– மீன்களைத் தின்ற ஆறு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 2016, பெருவிரல் கலை இலக்கியா இயக்கம், இலங்கை.
![]() |
சிவனு, மனோகரன் (1978.09.17 - ) ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி. இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஞானம், தினமுரசு, தினக்குரல், சுடரொளி, மித்திரன், வடம், லண்டன், சுடரொளி, புதினம் ஆகியவற்றில் வெளியகியுள்ளன. ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடங்கி ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புக்களாகும். இவரது நூல்கள்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: July 6, 2025
பார்வையிட்டோர்: 844
