பொங்கலோ, பொங்கல்!
(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மறுநாள் பொங்கல். போகியன்று பொன்னி வீடு வாசலை யெல்லாம் மெழுகிச் செம்மண் பூசி, அரிசி மாக்கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில். அங்கே வந்த அமிர்தம், “கன்னியை எங்கே. காணோம்? கைக்குச் சரியா ஒரு பெண்ணை வச்சுக்கிட்டு இந்த வேலை யெல்லாம் நீ சேஞ்சிக்கிட்டிருக்கியே!” என்றாள்.
“குழந்தைக்கு என்ன தெரியும்,அக்கா! இந்த வயசிலே நம்ம இருக்கும்போதே அதன் இடுப்பை ஓடிச்சிட்டா, போற இடத்திலே மாடா உழைக்கணுமே!” என்றாள் பொன்னி.

உண்மையில் அவர்களுக்குள் எந்த உறவும் இல்லா விட்டாலும், தங்களை உடன் பிறந்த சகோதரிகளைப்போல் அவர்கள் பாவித்துக்கொள்வது வழக்கம்.
“ஆமாம், போற இடத்திலேகூட ‘குழந்தைக்கு என்ன தெரியும்?’னு அவங்க சும்மா இருப்பார்களாக்கும்!” என்றாள் அமிர்தம்.
“அதுக்குத்தான் இத்தனை நாளா அவளை அருமை தெரிஞ்சி வச்சிருக்கிற இடமாப் பார்த்துக் கிட்டு இருக்கேன்!”
“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அப்படிப் பார்த்துக்கிட்டு இருப்பே? இந்த நாட்டுப்புறத்திலே ஒரு வயசுக்கு வந்த பெண்ணை இப்படி வச்சுக்கிட்டு இருக்கிறதுன்னா, அடி வயித்திலே நெருப்பைக் கட்டி வச்சிருக்கிற மாதிரியாச்சே!”
“அதுக்கென்ன பண்றது, அக்கா! எதுக்கும் வேளை வரவேணாமா? என்னமோ, தை பிறந்திடிச்சி; இனிமே ஏதாச்சும் வழி பிறக்காமலா போயிடும்?”
“நம்மப்பாட்டுக்குப் பேசாம இருந்தா வழி தானாப் பிறந்திடுமா, என்ன? பிடிக்கிறவங்களைப் பிடிச்சிக் காலா காலத்திலே கன்னிக்குக் கல்யாணத்தைப் பண்ணிக் கண்ணாலே பாருங்கோ!” என்று சொல்லிவிட்டுக் கொஞ்சம் செம்மண்ணை வாங்கிக்கொண்டு அமிர்தம் தன் வீட்டுக்குச் சென்றாள்.
***
அமிர்தம் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் பொன்னியின் கணவனான முருகப்பன், பொங்கலுக்கு வேண்டியவற்றை யெல்லாம் சேகரித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான். அவற்றையெல்லாம் பார்வையிட்ட பொன்னி, “நாலு மஞ்சள் கொத்து கொண்டு வர மறந்துட்டீங்களே!” என்றாள்.
“ஆமாம், மறந்துட்டேன்! வீட்டுக்கிட்ட வந்த போதுதான் கவனம் வந்தது. நல்ல வேளையா அப்போ நம்ம காளப்பன் எதிரே வந்தான். அவங்கிட்டச் சொல்லியிருக்கேன்; இப்போ கொண்டுவந்துடுவான்!” என்றான் முருகப்பன்.
‘காளப்பன்’ என்றதும் உள்ளே இருந்த கன்னி மேலே என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்க ஆரம்பித்தாள்.
அதற்கேற்றாற்போல், “காளப்பன் என்றதும் தான் கவனம் வருது. நம்ம கன்னியை அவனுக்குக் கல்யாணம் செஞ்சிக் கொடுத்துட்டா, என்ன?” என்று கேட்டாள் பொன்னி.
“அதுதான் நானும் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.வெளைஞ்ச நெல்லை யெல்லாம் வரிகாரன், கடன்காரன், வேலைக்காரன் இவன்களுக்கெல்லாம் கொட்டிக் கொடுத்தாச்சு. அந்த வைக்கோலையெல்லாம் பிரி கட்டிக் களத்து மேட்டிலேயே போட்டு வச்சிருக்கேன். அதைப் பட்டணத்துக்குக் கொண்டு போய் வித்தா, ஒரு ஐம்பது ரூபாயாச்சும் கிடைக்கும். அதைக் கொண்டுதான் இந்த மாசக் கடைசியிலே நம்ம கன்னிக்குக் கல்யாணத்தை முடிச்சுடணும்.”
இதைக் கேட்டதும் கன்னியின் கண்கள் கலங்கின. அவள், தான் காதலித்த கண்ணப்பனையே கல்யாணம் செய்துகொள்ள இருந்தது முருகப்பனுக்கு எப்படித் தெரியும்?
***
ஆற்றங் கரைக்குக் ‘குடுகுடு’ வென்று ஓடி வந்து மணல் வீடு கட்டி விளையாடிய நாளிலிருந்தே கண்ணப்பனுக்குக் கன்னியைத் தெரியும். கன்னி அரும்பாடு பட்டுக் கட்டிய மணல் வீட்டை அரைக் கணத்தில் அழிப்பதின் மூலம் தன் அன்பை வெளியிடுவான் அவன். அவள் அழுவதைப் பார்த்துச் சிரிப்பதில் அப்பொழுதெல்லாம் அவனுக்கு ஒரு தனி ஆனந்தம்.
பத்து வயதுப் பாலகியானபோது, பட்டிக்காட்டு வழக்கப்படி களத்து மேட்டுக்கு வேலை செய்ய வருவாள் கன்னி. அவள் நாற்றுப் பிடுங்கி நடுவதைப் பார்த்துக் கொண்டு ஒரு நிமிஷங்கூடக் கண்ணப்பனால் சும்மா இருக்க முடியாது. அவள் வேலையைப் பிடுங்கித் தானே செய்வதில் அவனுக்கு ஒரு திருப்தி.
இப்படிச் செய்யும்போது சில சமயம் முருகப்பன் பார்த்துவிடுவான். அப்படிப் பார்க்கும்போது, “ஏண்டா, கண்ணா! இப்படி வலிய வந்து வேலை சேஞ்சுட்டு அப்புறம் என்னைக் கூலி கேட்கலாம்னு பார்க்கிறயா?” என்று வேடிக்கையாகக் கேட்பான்.
“எனக்கு நீ கூலி கொடுக்க வேணாம், மாமா! எல்லாம் கன்னி கொடுப்பா!” என்பான் கண்ணப்பன், அவளைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே.
ஒரு சமயம் கார்த்திகையின்போது கண்ணப்பன் ‘ஆணங்காய் மாவலி’ சுற்றிக் கொண்டிருந்தான். அப்போது அவன் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கன்னியின்மேல் ஒரு சிறு நெருப்புப் பொறி பட்டுவிட்டது. அதன் காரணமாக அவளுடைய புத்தம் புதிய பாவாடை பொத்தலாகி விட்டது. கன்னி, “அம்மா அடிப்பாளே!” என்று அழ ஆரம்பித்து விட்டாள். அவள் அழுவதைப் பார்க்கக் கண்ணப்பனுக்குச் சகிக்கவில்லை. கன்னியைத் தூக்கிக்கொண்டு கடைத் தெருவுக்கு ஓடினான். அதே மாதிரி ஒரு புதுப் பாவாடையை வாங்கிக் கொடுத்து அவளைச் சமாதானம் செய்தான். அப்பொழுது கன்னி, “இதே மாதிரி எங்கத் தாத்தா செத்துப் போனாக்கூட நீ வாங்கிக் கொடுப்பியா?” என்று விளையாட்டாகக் கேட்டாள்.
இந்தக் கேள்விக்குக் கொஞ்சங்கூடத் தயங்காமல், “வாங்கிக் கொடுப்பேனே!” என்றான் கண்ணப்பன்.
இந்தச் சம்பவங்களை யெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைத்துப் பார்த்தபோது, கன்னியின் உள்ளம் கவலையின் எல்லையைக் கடந்தது. அவளால் அழுகையை அடக்க முடியவில்லை; விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டாள்.
“ஏன், குழந்தை அழுவுது?” என்று பொன்னியைப் பார்த்துக் கேட்டான் முருகப்பன்.
“போன வருசம் பொங்கலுக்கு இருந்த உங்க அம்மா இந்த வருசம் இல்லையே, அதுக்கு அழறாப்போல இருக்குது!” என்றாள் பொன்னி.
இதைக் கேட்டதும் திண்ணையில் உட்கார்ந்துகொண்டிருந்த முருகப்பன் எழுந்து ‘திடுதிடு’வென்று உள்ளே ஓடினான்.”அதுக்கா அம்மா, அழறே? அவுங்க எல்லாம் புண்ணியம் செய்தவங்க; பொழுதோடே போயிட்டாங்க! நம்ம என்னதான் அழுதாலும் அவுங்க திரும்பி வரப் போறாங்களா?” என்று சொல்லி, முருகப்பனும் அவளுடன் சேர்ந்து அழுதான்.
கன்னிக்கு என்ன சொல்வதென்று ஒன்றும் புரிய வில்லை; அவள் ‘திருதிரு’வென்று விழித்தாள்.
நல்லவேளையாக அந்தச் சமயத்தில் ஒரு பண்ணையாள் இரைக்க இரைக்க ஓடி வந்து, “யார் அம்மா, வீட்டிலே? களத்துமேட்டிலே உங்க வைக்கோற் போர் எல்லாம் எரிஞ்சிச் சாம்பலாக் கிடக்குது!” என்று இரைந்தான்; கன்னி பிழைத்தாள்!
முருகப்பன் வெளியே ஓடோடியும் வந்து, “ஐயய்யோ! அந்த வைக்கோற் போருக்கு மேலேதானே எங்க அப்பா காவலாய்ப் படுத்துக்கிட்டு இருந்தாரு!” என்று அலறிக் கொண்டே களத்துமேட்டை நோக்கி ஓடினான்.
பொன்னியும் புலம்பிக்கொண்டே அவனைப் பின் தொடர்ந்தாள்.
“பயப்படாதீங்க ; உங்க அப்பாவுக்கு ஒண்ணும் ஆபத்து இல்லே! வைக்கோற்போரின் ஒரு பக்கத்தில் தீப்பிடிக்கும்போதே கண்ணப்பன் அந்த வழியே வந்தானாம். அவன் உடனே வைக்கோற் போரின்மீது ஏறி, தூங்கிக்கொண்டிருந்த கிழவனைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கி வந்துவிட்டானாம். பெரியவர் ரொம்பவும் பயந்துபோய்ப் பேச்சுமூச்சு இல்லாமற் போய்விட்டாராம். அவருடைய மயக்கத்தைத் தெளிய வைப்பதற்காகக் கண்ணப்பன் அவரைப் பக்கத்திலிருக்கும் தன் வீட்டுக் குக் கொண்டுபோயிருக்கிறானாம்!” என்று வழியிலேயே விஷயத்தைச் சொல்லிவிட்டான் அந்தப் பண்ணையாள்.
முருகப்பன் தம்பதிகளுக்குப் போன உயிர் திரும்பி வந்ததுபோல் இருந்தது. அவர்கள் நேரே களத்து மேட்டுக்குப் போகாமல் கண்ணப்பன் வீட்டுக்கே சென்றனர். கிழவன் மூர்ச்சை தெளிந்து எழுந்து ஒரு கயிற்றுக் கட்டிலின்மேல் உட்கார்ந்துகொண்டிருந்தான்.
கண்ணப் பன் கீழே உட்கார்ந்து, ஒரு குவளையில் இளநீரை ஊற்றிக் கிழவனுக்குக் குடிப்பாட்டிக்கொண்டிருந்தான்.
“அப்பா! உடம்பு இப்போ எப்படி இருக்குது?” என்று கேட்டான் முருகப்பன்.
“இதுக்குத்தானே, நான் ராத்திரியே அவரைக் காவலுக்கு அனுப்ப வேண்டாம்னு சொன்னேன்!” என்றாள் பொன்னி.
“நானுந்தானே போகவேண்டாம்னு சொன்னேன் ‘நீ போய்ப் படுத்துக்கோடா; நான் போய்ப் பார்த்துக் கிறேன்’னு அவரே தானே சொல்லிட்டு வந்தாரு!” என்றான் முருகப்பன்.
இந்தச் சமயத்தில், “ஆன கல்யாணத்துக்கு மேளம் எதுக்குடா?” என்றான் கிழவன்.
அந்த க்ஷணமே முருகப்பனும் பேச்சை மாற்றிக் கொண்டு, “கண்ணப்பா! நீ சேஞ்ச உதவிக்குப் பதிலா நான் என்ன செய்யப் போறேன்?” என்றான்.
“வேறே என்னடா உதவி? நம்ம கன்னியைப் பிடிச்சி அவன் கையிலே கொடுத்துட வேண்டியதுதான்!” என்றான் கிழவன்.
“அப்படியே சேஞ்சுடலாம். ஆனா நம்ம கன்னியின் கல்யாணத்துக்கு அந்த வைக்கோற் போரைத்தானே நான் நம்பியிருந்தேன்? அது தான் இப்படி ஆயிடிச்சே!”
“ஆனா என்ன? கல்யாணத்துக்குன்னா எவனைக் கேட்டாலும் கடன் கொடுத்துட்டுப் போறான்!” என்று அடித்துச் சொன்னான் கிழவன்.
அதற்குமேல் ஒன்றும் சொல்ல முடியாமல் முருகப்பன் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான். “அவருடைய இஷ்டத்துக்கு மேலே நாம் என்ன சொல்ல முடியும்?” என்றாள் அவள்.
இந்தச் சம்பாஷணையை ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த கண்ணப்பனின் உள்ளம் உணர்ச்சியின் எல்லையை எட்டிப் பிடித்துக்கொண்டிருந்தது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, முருகப்பனும் பொன்னியும் கிழவனைக் கூட்டிக்கொண்டு தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். நடந்த விஷயங்களை யெல்லாம் அவர்கள் சொல்லக் கேட்ட கன்னிக்குக் கவலை நீங்கியதோடு, கார்த்திகை தீபத்தன்று நடந்த அந்தச் சம்பவமும் ஞாபகத்திற்கு வந்தது.
“இந்தமாதிரி எங்க தாத்தா செத்துப்போனுக்கூட வாங்கிக் கொடுப்பயா?”
“ஓ! வாங்கிக் கொடுப்பேனே!”
“அப்பொழுது அவர் அப்படிச் சொன்னது இப்பொழுது சரியாய்த்தானே போச்சு!” என்று எண்ணி அவள் வியந்தாள்.
ஆனால், அந்த வைக்கோற்போரை வேண்டுமென்றே கொளுத்தியவன் கண்ணப்பன்தான் என்பது மட்டும் அப்போது கன்னிக்குத் தெரியாது!
– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.
![]() |
விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க... |