பூதக் கூண்டில் ஒற்றன்
கதையாசிரியர்: நெ.சி.தெய்வசிகாமணி, மரியாதைராமன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 13, 2025
பார்வையிட்டோர்: 435
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாம்பசிவம் என்பவன் சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து ஆயிரம் வராகன்கள் சேர்த்து விட்டான். அதனை ஒரு முடிப்பாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு மேலே துவரம் பருப்பைப் போட்டு மூடினான்.
ஒருமுறை அவன் தன் குடும்பத்தாருடன் வெளியூர் செல்ல நேரிட்டது. தன்னிடமிருந்த பணமுடிப்பைக் கொண்ட துவரம்பருப்புப் பானையை எவரிடமாவது கொடுத்துவிட்டுச் செல்ல நினைத்தான்.
அவ்வூரில் பொன்னுசாமி என்று ஒருவர் இருந்தார். அவரிடம் சாம்பசிவம் தன்னுடைய துவரம் பருப்புப் பானையைக் கொண்டு சென்றான்.
“அய்யா, இந்தப் பானை நிறையத் துவரம் பருப்பு இருக்கிறது. இதைப் பத்திரமாக வைத்திருந்து நான் ஊரில் இருந்து திரும்பி வந்ததும் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றான் சாம்பசிவம்.
“அதற்கென்ன! தாராளமாக வைத்து விட்டுப்போ!” என்றார் பொன்னுசாமி.
அந்தப் பானையில் துவரம் பருப்புதான் இருக்குமென்று பொன்னுசாமி நினைத்தார். ஏனென்றால் சாம்பசிவத்திடம் அவ்வளவு பொருள் இருக்குமென்று யாருக்கும் தெரியாது, அவ்வளவு எளிமையாக இருப்பான். எனவே அவன் துவரம் பருப்புப் பானையில் பணமுடிப்பு வைத்திருப்பான் என்று பொன்னுசாமி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
ஒரு நாள் பொன்னுசாமியின் வீட்டுக்கு விருந்தாளிகள் நிறையப்பேர் வந்துவிட்டார்கள். வீட்டில் துவரம் பருப்பு இல்லை. பொன்னுசாமியின் மனைவி “விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள். வீட்டில் துவரம் பருப்பு துளிக்கூட இல்லையே! சீக்கிரம் போய் வாங்கி வாருங்கள்!” என்றாள்.
“அவசரத்திற்கு சாம்பசிவம் கொடுத்துவிட்டுப் போன பானையில் இருந்து துவரம்பருப்பு எடுத்து கொள். பிறகு நிதானமாகக் கடையில் வாங்கி வந்து அதில் போட்டு நிரப்பி விடலாம்” என்றார் பொன்னுசாமி.
பொன்னுசாமியின் மனைவியும் துவரம் பருப்புப் பானையில் கையைவிட்டுப் பருப்பை எடுக்கும்போது பானையின் அடியில் ஏதோ முடிப்பு மாதிரி தட்டுப்பட்டது.
உடனே அவள் பானையைக் கவிழ்த்தாள். பானையின் அடியில் வைக்கப்பட்டியிருந்த பணமுடிப்பும் துவரம் பருப்புடன் சேர்ந்து வெளிப்பட்டது.
பணமுடிப்பைப் பார்த்த பொன்னுசாமியின் மனைவி, “சீக்கிரம் இங்கே வாங்க! இந்தப் பானைக்குள் ஒரு பணமுடிப்பு இருக்கிறது!” என்று தன் கணவனைப் பார்த்துச் சொன்னாள்.
பொன்னுசாமியும் அவ்விடம் வந்துபார்த்தார். பணமுடிப்பைப் பிரித்து உள்ளேயிருந்த நாணயங்களை எண்ணிப் பார்த்தார். ஆயிரம் வராகன்கள் இருந்தன.
“இதை எடுத்துப் போய்ப் பத்திரமாக வை. இதைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாதே!” என்று மனைவி யிடம் பணமுடிப்பைக் கொடுத்தனுப்பினார் பொன்னுசாமி.
பிறகு கடைக்குச் சென்று துவரம் பருப்பு வாங்கி வந்தார். பானை நிறையத் துவரம் பருப்பைப் போட்டுப் பழையபடி மூடிவிட்டார் பொன்னுசாமி.
சாம்பசிவம் ஊரில் இருந்து வந்தான்.
“அய்யா, என்னுடைய துவரம்பருப்புப் பானையைத் தருகிறீர்களா?” என்று கேட்டான்.
“நீ வைத்த இடத்திலேயே இருக்கிறது. எடுத்துச் செல்” என்றார் பொன்னுசாமி.
சாம்பசிவம், வீட்டுக்கு வந்து துவரம்பருப்புப் பானையைக் கவிழ்த்துப் பார்த்தான். உள்ளே பணமுடிப்பைக் காணவில்லை.
அவனுக்கு பகீர் என்று ஆகிவிட்டது. பொன்னுசாமியிடம் போய்க் கேட்டதில், “உன்னுடைய துவரம் பருப்புப் பானையை நான் தொடக்கூட இல்லை. நீ எப்படிக் கொடுத்தாயோ, அப்படியே திருப்பிக் கொடுத்துவிட்டேன். நீ கவன மறதியாக வேறு எங்கோ வைத்துவிட்டு என்பேரில் அபாண்டமாகப் பழி சுமத்துகிறாய்” என்றார் பொன்னுசாமி.
சாம்பசிவம் ஏமாற்றத்துடன் மரியாதைராமனிடம் சென்றான்.
“அய்யா, நான் வயிற்றுக்குக்கூடச் சரியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஆயிரம் வராகன்கள் சேர்த்து ஒரு முடிப்பாகக் கட்டித் துவரம் பருப்புப் பானையில் போட்டு வைத்திருந்தேன். அந்தப் பானையைப் பொன்னுசாமியிடம் கொடுத்துவிட்டு வெளியூர் சென்று திரும்பி வந்தேன். நான் வந்த பிறகு அவரிடமிருந்து வாங்கி வந்த துவரம் பருப்புப் பானையில் நான் வைத்திருந்த பணமுடிப்பைக் காணவில்லை. கேட்டதற்கு, “நான் பார்க்கவேயில்லை! என்று பொன்னுசாமி கூறுகிறார்” என்றான் சாம்பசிவம்.
“அய்யா, உங்கள் வழக்குச் சிக்கலானது. நீங்கள் அவரிடம் பணமுடிப்பு உள்ளே இருக்கிறது என்று ஆரம்பத்திலேயே சொல்லவில்லை. அதுவும் தவிர உங்களிடம் ஆயிரம் வராகன்கள் இருக்கும் என்று நம்பும்படியாகவும் நீங்கள் நடந்து கொள்ளவில்லை. நீங்கள் எவ்வளவு சொன்னாலும் உங்கள் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள்” என்றான் மரியாதைராமன்.
“ஐயோ, நீங்களும் கைவிட்டால் நான் வேறு எங்கே போவேன்” என்று அரற்றினான் சாம்பசிவம்.
“அவசரப்படாதே, பொன்னுசாமியைக் கூப்பிட்டு விசாரிக்கிறேன்” என்று கூறி சாம்பசிவத்தை அனுப்பி விட்டான் மரியாதைராமன்.
பொன்னுசாமி வந்ததும், “உங்கள் பேரில் சாம்ப சிவம் என்பவர் ஒரு பிராது கொடுத்திருக்கிறார். அவர் உங்களிடம் கொடுத்துச் சென்ற துவரம் பருப்புப் பானையில் ஆயிரம் வராகன்கள் கொண்ட பண முடிப்பு ஒன்று வைத்திருந்தாராம். திரும்ப வந்து வாங்கிச் சென்ற பின் அதில் பணமுடிப்பைக் காணவில்லை என்று புகார் செய்திருக்கிறார்” என்றான் மரியாதைராமன்.
“நான் ஒரு பாவமும் அறியேன். என் மீது அபாண்ட மாக வீண்பழி சுமத்துகிறான் சாம்பசிவம்” என்றார் பொன்னுசாமி.
“சரி நாளைய தினம் உங்கள் மனைவியுடன் வந்து நமது ஊர்க் கோயிலை மும்முறை வலம் வந்து சத்தியம் செய்ய வேண்டும்” என்றான் மரியாதைராமன்.
மறுநாள் மரியாதைராமன் ஒரு பூதக் கூண்டைத் தயாரிக்கச் சொன்னான். அதற்குள் எவரும் அறியா வண்ணம் ஓர் ஒற்றனை உட்கார வைத்துப் பொன்னு சாமியும் அவர் மனைவியும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைத் தமக்குத் தெரிவிக்கும் படி ஒற்றனிடம் கூறியிருந்தான் மரியாதைராமன்.
பொன்னுசாமியும் அவன் மனைவியும் மரியாதை ராமன் சபைக்கு வந்தனர். சபையில் ஒரு பூதக் கூண்டு இருப்பதைக் கண்டனர்.
அவர்களைப் பார்த்த மரியாதைராமன், “இந்தப் பூதக் கூண்டை நீங்கள் இழுத்தவாறே கோயிலை மும்முறை சுற்றி வந்து சத்தியம் செய்ய வேண்டும்” என்றான்.
பொன்னுசாமியும் அவன் மனைவியும் பூதக் கூண்டை இழுத்தவாறே கோயிலை வலம் வந்து கொண்டிருந்தனர்.
இரண்டாவது சுற்று வரும்போது, “ஆயிரம் வராகனுக்காக இந்தப் பூதக் கூண்டை இழுத்துக் கொண்டு கோயிலைச் சுற்றி வந்து சத்தியம் செய்கிறோமே!” என்று வருத்தத்துடன் தன் கணவனிடம் கூறினாள் பொன்னுசாமியின் மனைவி.
“அதெல்லாம் பார்த்தால் நடக்குமா? ஆயிரம் வராகன்கள் கிடைக்கும்போது இன்னும் ஐம்பது சுற்றுகள் சுற்றி வந்து சத்தியம் செய்யலாம். சும்மா கிடைக்குமா ஆயிரம் வராகன்கள்?” என்றான் பொன்னுசாமி.
இவர்கள் கோயிலைச் சுற்றி வந்து சத்தியம் செய்தவுடன் பூதக் கூண்டு மரியாதைராமன் சபைக்குக் கொண்டுவரப்பட்டது.
மரியாதைராமன் பூதக் கூண்டில் இருந்த ஒற்றனை வெளியே வரவழைத்து “பொன்னுசாமியும் அவர் மனைவியும் என்ன பேசிக் கொண்டார்கள்?” என்று கேட்டான்.
ஒற்றன் அவர்கள் பேசியதை ஒன்று விடாமல் கூறினான்.
“உங்கள் வாய் மூலமாகவே உண்மை வெளி வந்து விட்டது. இனி நீங்கள் தப்பமுடியாது” என்று மரியாதைராமன் கூறினான். பொன்னுசாமியிடம் ஆயிரம் வராகன்களை வாங்கி சாம்பசிவத்திற்குக் கொடுத்ததுடன் நில்லாமல், பொய்ச்சத்தியம் செய்த பொன்னுசாமிக்கும், அவர் மனைவிக்கும் நூறு வராகன்கள் அபராதம் விதித்தான்.
– மரியாதைராமன் கதைகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1981, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.
![]() |
பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்) மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும். புகழ்மிகு கதையிலக்கியங்கள் : விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க... |
