பூங்கோதையின் கணவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2025
பார்வையிட்டோர்: 226 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிறந்த வீட்டிற்கு வந்திருந்த சமயம் பொழுது போகாமல் மொட்டை மாடியின் மீது நின்று கொண்டு, தொலைவில் தெரியும் ரயில்வே ஸ்டேஷனையும் அதற்கப்பால் தெரியும் நீல ஏரியையும் பார்த்துக் கொண்டிருந்தபோது பூங்கோதையின் நினைவு வந்தது. 

‘வந்து இரண்டு நாள்கள்தாமே ஆகியிருக்கின்றன? நாளைக்குக் கேட்போம். நாளைக்குக் கேட்போம்’ என்று நாளைத் தள்ளிக் கொண்டிருந்தேன். கடைசியில் இனியும் அம்மாவிடம் பூங்கோதையைப் பற்றிக் கேட்காமல் இருக்க முடியாது என்று என் மனம் தீர்மானித்து விட்டது. 

“ஏன் அம்மா! எதிர்வீட்டுப் பூங்கோதை எங்கே? அந்த ஜன்னல் அருகே யாரையும் காணோமே? வீடு ஏன் பூட்டிக் கிடக்கிறது?” என்று கேட்டேன். 

“அவளுக்குக் கல்யாணமாகி விட்டது; புக்ககம் கூடப் பட்டணத்தில் தான்!” என்றாள் தாயார். 

“கல்யாணத்துக்கு ஒரு கடிதம் கூடப் போடவில்லை பார்த்தாயா, அம்மா! சிநேகிதம் எல்லாம்…” என்று நான் கூறுவதற்குள், 

“இல்லை, இல்லை. நான்தான் அவளுக்கு உன் விலாசத்தைக் கொடுத்தேன்; கடிதம் வந்து சேரவில்லை போலிருக்கிறது!” என்றாள் தாயார். 

நான் கல்யாணம் கடிதம் கிடைக்காமல் போனதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், உடனே பூங்கோதையின் விலாசத்தை வாங்கிக் கொண்டேன். 

அன்று மாலையே என் பெண் சுகுணாவுடன் பூங்கோதையைச் சந்தித்தேன். 

பூங்கோதை என்னை அடையாளம் கண்டு கொண்டு விட்டாள். என்னால்தான் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கன்னங்கள் ஒட்டி, கவலைக் கோடுகள் அவள் முகத்தில் படர்ந்திருந்தன. 

கூடத்தில் அவள் தகப்பனார் இராமநாதன் உட்கார்ந்திருந்தார். “வா!’ என்று அவர் என்னை வரவேற்றார். 

நான் வந்த ஆனந்தத்தில் பூங்கோதைக்கு என்ன செய்வது என்று கூடப் புரியவில்லை. என் பெண்சுகுணாவை அழைத்து அன்புடன் அணைத்துக் கொண்டாள். “உன்னை அப்படியே உரித்து வைத்திருக்காளடி! ஆனால், மூக்குத்தான் அப்பாவின் மூக்கு!” என்றாள். 

“நீ எப்போது அவரைப் பார்த்திருக்கிறாய்?” என்றேன். 

”ஏன்… உன் கல்யாணத்தின்போதுதான்! அடுத்த தீபாவளிக்கு அதற்குப் பிறகு பொங்கலுக்குக்கூட வந்திருந்தாரே! நீதான் என் கல்யாணத்துக்கு வராமல் என்னையே மறந்து விட்டாய்! நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பேனா?” என்றாள். 

“அப்படியெல்லாம் நினைக்காதே, கோதை! உன்னை மறந்து விட்டிருந்தால் இப்போது தேடி வந்திருப்பேனா? அது இருக்கட்டும் உன் கணவர் வெளியே போயிருக்கிறாரா, குழந்தைகள் ஏதாவது உண்டா, உனக்கு?” என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டே போனேன். 

அவள் முகம் கறுத்தது. “ராஜி வா! மாடிக்குப் போகலாம்” என்று அவள் என்னை அழைத்துக் கொண்டு போனாள். 

சுகுணா தெருவில் விளையாடப் போய்விட்டாள். மாடியில் மனம் விட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். என் மகள் சுகுணா வீட்டுக்குப் போகத் தொந்தரவு செய்யத் தொடங்கிய பிறகே எனக்குச் சுய நினைவு வந்தது. 

“அடிக்கடி நீவந்து போனால்தான் என் மனத்துக்கு ஆறுதல் அளித்தது போலிருக்கும்” என்றாள் பூங்கோதை. 

இதைச் சொல்லுபோது அவளை அறியாமல் இரு துளி நீர் முத்துகள் கீழே விழுந்ததை நான் கண்டேன். 

“பாவம் பூங்கோதை! அவளுக்கு இப்படியா நேர வேண்டும்” என்ற எண்ணத்துடன் வீடு சென்ற எனக்கு மனதே சரியாக இல்லை. 

பூங்கோதையின் பெற்றோர் சுமாரான வசதி படைத்தவர்கள்: பூங்கோதை ஒரே பெண். எனக்குக் கல்யாணமாகும்போது அவள் தாயார் அவளுக்கும் கல்யாணம் செய்து விட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள். 

பூங்கோதைக்கு அப்பொழுதிலிருந்தே வரன் பார்த்து வந்தார்கள். சுலபமாக முடியும் தறுவாயிலிருக்கும் வரன்களை அவள் தந்தை தட்டிக் கழித்து வந்தார். கடைசியில் தூரத்து உறவு ஒருவரின் பிள்ளை கிடைத்தான். அந்த வரனையே தேர்ந்தெடுப்பதென்று அவள் தந்தை தீர்மானித்தார். 

பூங்கோதையை மணப்பதற்கு அவர்கள் வீட்டில்சில நிபந்தனைகளைப் போட்டனர். ‘பையனுக்குச் சீர் நிறையச் செய்ய வேண்டும்; பையன் மெடிக்கல் காலேஜில் படிக்கப் பிரியப்படுகிறான். அதற்காகும் செலவைப் பெண் வீட்டாரே ஏற்க வேண்டும். அதுவரை பெண் பிறந்த வீட்டிலே இருக்க வேண்டும்’. 

இராமநாதனுக்கு இந்த நிபந்தனைகள் எல்லாம் ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. ‘மருமகன் டாக்டருக்குப் படித்துப் பாஸ் செய்தால் பிரபல டாக்டராகப் போகிறான். அதனால் நமக்குத்தானே லாபம்? ஐந்து வருஷம் வரை பெண் வீட்டோடு இருந்தால் தப்பு ஒன்றுமில்லை; கோதைக்குச் சின்ன வயசுதானே? அவர்கள் சொல்வதுபோலப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டால் படித்துக் கொண்டே இருப்பாள். நாளைக்கு டாக்டர் கணவனுடன் பழக படித்திருந்தால் நல்லதுதானே’ என்று எண்ணி, பிள்ளை வீட்டாரின் நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு ரொக்கமாகக் காலேஜ் படிப்புக்கென ரூபாய் ஐயாயிரம் எண்ணிக் கொடுத்து விட்டார். 

கோதையின் தாயாருக்கு இதில் துளிக்கூடப் பிரியம் இல்லை. ஆனால், இராமநாதன் ஒன்றைச் செய்யத் தீர்மானித்துவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. 

கல்யாணமான இரண்டு மாதங்களுக்கெல்லாம் இராமநாதன் பட்டணத்துக்கே போய்விட்டார். பெண்ணை அங்கே படிக்க வைத்துக் கொண்டு, தம் சொந்த வீட்டில் தங்கியிருந்தார். மாப்பிள்ளை வீடும் அங்குதான். ஆனால், ஒருநாள் கூடச் சம்பந்தி வீட்டுப் பக்கத்தில் இவர் பெண்ணை அனுப்ப வேண்டுமே! – கிடையாது. அதனால் மருமகனின் படிப்புக்குக் குந்தகம் நேரிட்டால் என்ன செய்வது? – அதற்காக அவ்வாறு செய்து வந்தார். 

முதல் தீபாவளி. பூங்கோதை பருவ வயதிலிருந்தாள். தீபாவளி நெருங்க நெருங்க அவளுக்கு இயற்கையாக உண்டான ஓர் ஆர்வம் அந்த நாளை எதிர்நோக்கியது. முன்கூட்டியே இராமநாதன் மாப்பிள்ளையைத் தீபாவளிக்கு அழைத்திருந்தார். 

தீபாவளிக்கு முதல் நாள், இராமநாதன் மாப்பிள்ளை வீட்டுக்குக் காரை அனுப்பினார். கார் அரைமணி நேரம் கழித்துத் திரும்பி வந்தது; ஜன்னல் வழியே தெருவை நோக்கிக் கொண்டிருந்த கோதையின் கண்கள், காரின் பின் சீட்டைத் துழாவின. ஆனால்… 

ஆனால் என்ன? “அவர் வீட்டில் இல்லை, ஸார்!’ என்று டிரைவர் சொன்னான். 

மறுபடியும் இராமநாதனே காரில் கிளம்பிப் போனார். ஒரு மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தார். அவர் முகத்தில் ஈயாடவில்லை, கோதைக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளுடைய கனவு கலைந்தது. இந்தச்சம்பவத்தைச்சொன்னபிறகு, “இன்று மூன்று வருஷமாகிறது. இன்னும் நான் அவரைப் பார்க்கவில்லை. அவர் யாரோ ஒரு பள்ளிக்கூட சிநேகிதியுடன் சுற்றுகிறாராம். வீட்டிற்குக் கூட வருவதில்லையாம். எனக்குக் கல்யாணம் இல்லையென்று நானா அழுதேன்? கல்யாணம் என்று ஒன்றைச் செய்து கொண்டு இப்படித் திண்டாடும்படி ஆண்டவன் ஏன்தான் என் தலையில் எழுதினானோ!” என்றாள் அவள். 

இதைக் கேட்டதும் நான் அழுதே விட்டேன். அதற்கு மேல் அவளுடைய சோகக் கதையை அவள் வாய் மூலமாகக் கேட்க விரும்பாமல் நான் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். 


என் டாக்டர் சிநேகிதி சுசீலா, எல்.ஐ.எம். படித்தவள். மலையாளிப் பெண். என் குழந்தையை எடுத்துக் கொண்டு நான் அவளிடம் அடிக்கடி மருந்து வாங்கப் போவேன். அப்படிப் போகும்போது ஏற்பட்ட ஒரு பழக்கம் சிநேகமாக ஆகிவிட்டது. 

அவளும், வயதான தாயுமாக அந்த வீட்டில் குடித்தனம் இருந்தனர். பகல் வேளைகளில் அடிக்கடி நான் அங்கு சென்று பேசிக் கொண்டிருப்பேன். நல்ல தமிழ் பேசும் வாலிபன் ஒருவன் அப்போது அங்கே வருவான். 

‘ஹலோ!’ என்று குதூகலமாக அவனுடன் பேசக் கிளம்பி விடுவாள் சுசீலா. நானும் அத்துடன் விடைபெற்றுக் கொள்வேன். 

ஒருநாள் கல்யாணங்களைப் பற்றிப் பொதுவாகப் பேச்சு வந்தபோது ஆடவர்கள் வரதட்சணை என்றும், படிப்புக்கென்றும் கேட்பதைப் பற்றி நான் அங்கலாய்த்தேன். அத்துடன் பூங்கோதையின் சோகக் கதையையும் கூறினேன். 

டாக்டருக்குப் படிப்பதற்காக ஐயாயிரம் வேண்டும். பெண் அந்த ஐந்து வருடங்களும பள்ளியில் படிக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் போட்டுவிட்டு, பிறகு திரும்பிக் கூடப் பார்க்காமல் இருக்கும் கோதையின் கணவரைப் பற்றி கூறினேன். கட்டிய மனைவி இருக்க வேறு யாருடனோ அந்த ‘மகராசன்’ சுற்றுவதாகவும் சொன்னேன். 

சுசீலா எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு பேசாமல் இருந்தாள். நான் வழக்கம்போல் அவளிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். 

திடீரென உறவினர் முறையார் ஒருவர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போக வேண்டியிருந்ததால், நான் என் கணவருடன் கிளம்பி வெளியூருக்குச் சென்று பத்து பன்னிரண்டு நாள்கள் கழித்து வந்தேன். 

வரும்போது டாக்டர் சுசீலா வீட்டைப் பார்த்தேன். எப்பொழுதும் காலை வேளைகளில் நோயாளிகளின் கூட்டம் ‘ஜே ஜே’ என்றிருக்கும் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. 

‘எங்கே போயிருப்பாள்?’ என்று யோசித்துக் கொண்டே நான் என் வீட்டை அடைந்தேன். என் தாயார், என்னிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். மிகவும் கஷ்டப்பட்டுக் கொச்சைத் தமிழில் எழுதப் பட்டிருந்த அந்தக் கடிதத்தை டாக்டர் சுசீலா எழுதியிருந்தாள். எனக்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டது. கடிதத்தைப் பிரித்துப் படித்தேன். 

படித்து முடித்ததும், ஒரு பக்கம் சந்தோஷமும் இன்னொரு பக்கம் வருத்தமும் உண்டாயின. 

என்னதான் தைரியமாக இருந்தாலும் பெண்ணுள்ளம் சில சமயங்களில் ஏமாந்து விடுகிறது. அதற்கிணங்க, பூங்கோதையின் கணவன் சுந்தரமூர்த்தியைச் சந்திக்க நேரிட்டபோது அவனது பசப்பு வார்த்தைகளாலும், கவர்ச்சிகரமான பேச்சினாலும் சுசீலா மயங்கி விட்டாளாம். 

சுந்தரமூர்த்தியும் தனக்குக் கல்யாணமாகவில்லையென்றும் சுசீலாவையே கல்யாணம் செய்து கொள்வதாகவும் வாக்களித்தானாம். இதை எழுதிவிட்டு, ‘நல்ல சமயத்தில் நீ வந்து உன் தோழியின் துயரக் கதையைக் கூறினாய். எனக்குச் சந்தேகம் வலுத்து விசாரிக்க, உன் தோழியின் கணவன்தான் என்னை ஏமாற்றப் பார்த்தவன் என்று தெரிந்தது. எப்படியோ பெரும் பாதகம் செய்வதிலிருந்து நான் தப்பினேன். இந்தச் சென்னை நகரில் என்னைப் போன்ற இளம் பெண் துணிந்து டாக்டர் தொழிலைத் தனியே செய்வது ஆபத்துதான். நான் தாயாருடன் சொந்தக் கிராமம் செல்கிறேன். எங்கிருந்தாலும் நோயாளிகளுக்குத் தொண்டு செய்யலாமல்லவா? உனக்கு என் இதயப்பூர்வமான நன்றி!’ என்று அவள் கடிதத்தை முடித்திருந்தாள். 


கதை, நாவல்களில் வருவது போன்ற இச்சம்பவத்தால் என் மனம் குழம்பிற்று.குழம்பிய உள்ளத்துக்கு ஏதாவது மாறுதல் வேண்டுமென் பதற்காக அன்று மாலை என் கணவருடன் நான் சினிமாவுக்குச் சென்றேன். 

படம் தொடங்கும் சமயத்தில் ஒரு தம்பதி எங்களுக்கு முன் இருக்கையில் வந்து அமர்ந்தார்கள். அவர்கள் வேறு யாருமல்லர்; பூங்கோதையும் அவள் கணவனும்தான்! 

படம் முடிந்து வெளியே வரும்போது அவள் என்னை நெருங்கி, “ராஜி, என் கலி நீங்கிவிட்டதடி! என் கணவர் திடுதிப்பென்று மனம் மாறி ஒருநாள் வந்து விட்டாரடி. அந்தப் பழைய காதலி இவரை ஏமாற்றி விட்டாளாம். மன்னிப்புக் கேட்காத குறையாய், அழ மாட்டாத குறையாய் என்னிடம் எல்லாவற்றையும் சொன்னாரடி!” என்றாள். 

அவளது சோபையிழந்த முகத்தில் அப்பொழுது புதுப்பொலிவு பொங்கியது. 

நான் ஒரு மெளனப் புன்னகையுடன் அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன். 

– 1950

– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.

விக்கிரமன் கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார். ஆக்கங்கள் உதயசந்திரன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *