பால் வண்ணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2025
பார்வையிட்டோர்: 4,664 
 
 

‘நான் அவுஸ்திரேலியா வந்திருந்தபோது, நீ இங்குதான் இருக்கின்றாய் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் திருமணம் செய்யாமல், தனித்து இருக்கின்றாய் என்றபோது மனமுடைந்து போனேன். நான் உன்னைச் சந்திக்க விரும்புகின்றேன்’ என்று தொலைபேசியில் கேட்டபோது தயங்காமல் ‘தாராளமாக’ என்றாய்.

ஏறத்தாழ முப்பது வருடங்களில் என்னை மறந்திருப்பாய் என நினைத்திருந்தேன்.

சிட்னி நகரின் மத்தியில், இருபத்திநான்கு தளங்கள் கொண்ட குடியிருப்பில், இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீட்டில், “வாருங்கள்… வாருங்கள்..” என முகம் மலர வரவேற்றாள். என்னை அடிமுதல் நுனிவரை கணப்பொழுதில் அளவெடுத்தாள். வாழ்க்கையில் லெளகீக இன்பங்களை அனுபவித்து சருகாகிப் போய்விட்ட எனக்கு, அவளின் இளமைத் தோற்றம் வியப்பைத் தந்தது. பிக்ஸி ஹேர்கட்டுடன், பாவாடை சட்டையில் நின்றாள். அலங்காரங்கள் எதுவும் இல்லை. மாசுமறுவற்ற கனிந்த பழமொன்று, சுவைக்கப்படாமலே, காலத்துடன் தன்னளவில் சுருங்கிப் போயிருப்பதாக உணர்ந்தேன்.

வீடு பளிசென்று அழகாக இருந்தது. டாம்பீகமான பொருட்கள் எதுவும் இல்லை.

“நான் உங்களை மதியச் சாப்பாட்டிற்கல்லவா அழைத்திருந்தேன். நீங்கள் இரவுச் சாப்பாட்டிற்கு வந்திருக்கின்றீர்கள்…” இரண்டுமணி நேரம் தாமதமாக வந்துவிட்டதை இப்படி அழகாகச் சொன்னாள்.

“மன்னிக்க வேண்டும். அவுஸ்திரேலியா எனக்குப் புதிது. அக்காவின் கணவர் ரவுணுக்குள் கார் ஓடமாட்டார். என்னைத் தங்களுக்கு அருகேயுள்ள ஸ்ரேஷனில் இறக்கிவிட்டார். நான் றெயின் எடுத்து, றாம் எடுத்துவரத் தாமதமாகிவிட்டது. ஒரு பேராசிரியைக்கு நேரம் பற்றிய கரிசனை என்னவென்று எனக்குத் தெரியும்…”

சிரித்துவிட்டு, “அப்படியில்லை. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். அதுதான். முதலில் சாப்பிடுவோம். பின்னர் கதைப்போம்.” சாப்பாட்டு மேசைக்குக் கூட்டிச் சென்றாள். மேசையில் எனக்கு எதிராக நின்றுகொண்டு உணவு பரிமாறினாள்.

“நீங்கள் சாப்பிட்டு விட்டீர்கள்தானே?”

“அது எப்படி விருந்தாளியைவிட்டு நான் சாப்பிட முடியும்?” தனக்கும் ஒரு பிளேற் எடுத்துக் கொண்டாள்.

விருந்தாளி… இன்று நான் ஒரு விருந்தாளியாகிப் போனேன்… நான் சாப்பிடுவதை நிறுத்தி அவளையே பார்த்தபடி இருந்தேன்.

“பாக்கிறது இருக்கட்டும். முதலிலை சாப்பிடுங்கோ. பிறகு நிறையப் பாக்கலாம், கதைக்கலாம்.”

சாப்பிடும்போது பழைய நினைவுகள் வரவே புரைக்கடித்தது.

“மன்னிக்கவும். தண்ணீர் வைக்க மறந்து போனேன்” எழுந்து சென்று இரண்டு கண்ணாடிக்குவளைகள் எடுத்துவந்து நீர் ஊற்றினாள். இதமான சுடுநீர். குடித்தும் புரை நிற்கவில்லை. எழுந்து வந்து, தன் இடது கையினால் என் தலையில் மெதுவாக மூன்று தடவைகள் தட்டினாள்.

“சாப்பாடு சரியில்லைப் போல… அதுதான்” சொல்லிவிட்டு மறுகரையில் போய் இருந்து உணவருந்தத் தொடங்கினாள்.

சமையல் பிரமாதம் இல்லைத்தான். அதைச் சொல்ல முடியாது.

“சா…! தேவாமிர்தம்…. சமையல் பக்குவம் பிரம்மாதம்” சொல்லியபடி மளமளவென்று சாப்பிட்டேன்.

சாப்பாட்டின் பின்னர் பழங்கள் வெட்டித் தந்தாள். சாப்பிட்டுக்கொண்டே கதைத்தோம். இடையே இரண்டு தொலைபேசி அழைப்புகள் அவளுக்கு வந்தன. அவளின் அப்பா நாளை ஞாயிற்றுக்கிழமை வருவதாகச் சொன்னார்.

“அப்பா வந்தால் இரண்டு மூன்று நாட்கள் என்னுடன் தங்கிச் செல்வார். மற்றும்படி அண்ணா குடும்பத்துடன் இருக்கின்றார்.”

எங்கள் நீண்ட உரையாடல் – பெரும்பாலும் அவளின் நண்பர்களைப் பற்றியும், என்னுடைய நண்பர்களைப் பற்றியுமாக அமைந்தது.

“என்னுடைய குடும்பம் பற்றிக் கேட்க மாட்டீரா?”

“இல்லை… நீங்கள் சொன்னால் கேட்பேன்.”

“மனைவி சமீபத்தில் இறந்து போனாள். இரண்டு பிள்ளைகள். திருமணம் முடித்துவிட்டார்கள்.”

அவள் இருக்கையைவிட்டு எழுந்து மனதிற்குள் தியானித்துக் கொண்டாள்.

“மனைவியின் இழப்பிற்கு எனது ஆழ்ந்த கவலை. எப்படி இறந்தார்?”

“நிறைய வருத்தங்கள். எதுவென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது!”

`எல்லாம் கரைகண்டு, பிள்ளைகுட்டிகளையும் பேரப்பிள்ளைகளையும் கண்டு, மனைவியையும் இழந்த பின்னர் தான் என்னைச் சந்திக்க வந்தீர்களா?’ என என்னைக் கேட்கவில்லை. என் மனைவியின் இழப்பிற்கு மெளன அஞ்சலி செலுத்துகின்றாள்.

திடீரென்று, “உங்கள் வலது காலுக்கு என்னவாயிற்று? சாதுவா இழுத்து இழுத்து நடக்கின்றீர்களே!” எனக் கேட்டாள்.

“ஏன்….? அப்படிப் பெரிசா வித்தியாசம் தெரியுதா?” சிரித்தேன். என் சிரிப்புடன் அவளும் கலந்துகொண்டாள்.

“இல்லை… முந்தி நான் சந்திச்ச போது இல்லைத்தானே! அதுதான் கேட்டேன்.”

“அதை விடுங்க… அது ஒண்டும் பெரிய குறையா எனக்குத் தெரியேல்லை…”

“சரி… இப்ப வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டீர்களா?”

“இல்லை… இன்னும் சில வருடங்கள் இருக்கு.”

ஜன்னல் சீலையை விலத்தி வானத்தைப் பார்த்தாள். வானம் தன் அந்திம நேரத்திற்குப் போயிருந்தது. தூரத்தே நகரின் வண்ணமயமான காட்சி கண்ணுக்கு விருந்தானது. சிட்னி துறைமுகப்பாலம்’,ஒப்ரா ஹவுஸ்’ இரண்டும் பனிப்புகாரினுள் பொத்திப்பொத்தி முகம் காட்டின.

“இரவு தங்கி காலை புறப்படுங்கள். அவசரம் ஒன்றும் இல்லைத்தானே?” அவளின் கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது. அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தேன். என்னைப் பரீட்சைக்கு உட்படுத்தி சங்கடத்தில் ஆழ்த்திவிட்டாளே!

“என்ன சத்தத்தைக் காணோம்… உங்கள் விருப்பம். நான் வற்புறுத்த மாட்டேன்.”

“இல்லை… அதற்குரிய ஆயத்தங்களுடன் வரவில்லையே!”

“ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள். உங்களுக்குத் தேவையான சகலமும் என்னிடம் இருக்கின்றன.”

நான் அக்காவுக்கு தொலைபேசினேன். “நான் இன்று இரவு வரமாட்டேன். காலையில் வருகின்றேன். நண்பருடன் தங்குகின்றேன்” சொல்லிவிட்டு அவளைப் பார்த்தேன். அவள் புன்முறுவல் செய்தாள்.

எங்கள் இருவருக்குமிடையேயான உரையாடல் மீண்டும் ஆரம்பமானது, நீண்டது. அவளின் கண்டுபிடிப்புகள், கற்பித்தல் முயற்சிகள் பற்றி விசாரித்து அறிந்து கொண்டேன்.

”யூனிவசிட்டிக்கு நடந்து போக எனக்கு 6 நிமிடங்கள் போதும். நான் இருக்கும் இருபதாவது மாடியில் இருந்து கீழ் இறங்கத்தான் 2 நிமிடங்கள் தேவை.”

அவள் தன் பல்கலைக்கழகப் புதினங்களையும், நான் என் தொழில் சார்ந்தவற்றையும் கதைத்து முடிக்க இரவாகிவிட்டது. கதைப்பதற்கு இனி எதுவும் இல்லையென்றபோது –

“இங்கே நான் இருப்பதை எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?”

“அதுவா? இலங்கையில் கஸ்டப்படும் மாணவர்களுக்கு உதவும் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், அக்கா வீட்டிற்கு வந்திருந்தார். அவரின் பெயரை மறந்துவிட்டேன். அவருடன் கதைக்கும் போது அறிந்து கொண்டேன்.”

அவள் சிரித்துவிட்டு, “நல்ல அமைப்பு. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகின்றார்கள். போரினால் தந்தையை தாயை வாழ்வாதாரங்களை இழந்த பல மாணவர்கள் இருக்கின்றார்கள்” என அந்த அமைப்பைப்பற்றி நிறையவே சொல்லிச் சென்றாள். தான் அப்படிப்பட்ட மாணவர்களில் ஆறுபேருக்கு, அந்த அமைப்பினூடாக உதவி செய்கின்றேன் என்பதை மறைத்துவிட்டாள்.

உறங்கப் போகும் சமயத்தில் அணிவதற்கு மாற்று உடுப்புகள் தந்தாள். மருந்துகள் போட நீர் வேண்டும் என்று கேட்டபோது, தேநீர் தந்தாள். பல் துலக்க பிறஸ் – பேஸ்ற் என்று எந்தக் குறையும் வைக்கவில்லை. சுவாமி தரிசனம் செய்தபின், எனக்கும் திருநீற்றுக் குறியிட்டாள். “சரியான சுவாமி பக்தை போல..”

திருநீற்றுக்குறி வாழ்க்கை நிலையற்றது, இருக்கின்ற காலத்தை நல்லவிதமாக வாழ்ந்து முடியுங்கள் என்பதைத்தானே சொல்கின்றது.

“உங்களுக்குப் புது இடம் எண்டபடியாலை லைற்றைக் கொஞ்சம் தணிய வைச்சிருக்கிறேன். ஏதாவது தேவை எண்டா தயங்காமக் கதவைத் தட்டுங்கோ. எனக்குக் கொஞ்சம் லப்ரொப்பில் வேலை இருக்கு. குட் நைற்.”

“குட் நைற்.”

எனக்கான அறைக்குள் நுழைந்து கொண்டேன்.

“ஏதாவது போரடிச்சால் பாட்டுப் போட்டுக் கேளுங்கோ. என்னட்டைப் பழைய பாட்டுகள் தான் இருக்கு. அப்பா வாற நேரங்களில விரும்பிக் கேட்பார்” மறு அறையில் இருந்து குரல் வந்தது.

“ஓ… இது அப்பாவின் அறையோ?” நான் மெதுவாகத்தான் கேட்டேன். ஆனாலும் பதில் வந்தது.

“இப்போது உங்களின் அறை!”

“ஓகே… ஒகே… தாங்ஸ்.”

அருகேயிருந்த பழைய காலத்து ரேப் றைக்கொட்டரைப் பார்த்தேன். அது நாம் இருவரும் முதன்முதலாக சந்தித்துக்கொண்ட காலத்திற்கு என்னை அழைத்துச் சென்றது.


உனக்கு ஞாபகம் இருக்கின்றதா?

முதன்முதலில் உன்னைச் சந்தித்த நாட்களில், நான் உன்னைத் திருமணம் செய்ய விரும்புகின்றேன்’ என்று சொன்னபோது, நீ என்னை ஏறிட்டுப் பார்த்தாய்.என்னில் என்ன இருக்கின்றது’ என்பது போன்ற பார்வை. அப்போது உனக்கு பத்தொன்பது அல்லது இருபது வயதுதான் இருக்கும். இருப்பினும் திடீரென்று தயங்காமல், `நான் படிக்க விரும்புகின்றேன்’ என்று சொன்னாய்.

உண்மை. அப்போது நீ பல்கலைக்கழக அனுமதி பெற்று படிப்பதற்கான ஆயத்தங்களில் இருந்தாய். நான் படிப்பை முடித்து ஒன்றரை வருடங்கள் இருக்கும். நாட்டுச் சூழ்நிலை காரணமாக படிப்பைத் தொடரமுடியாமல், நான் வேலை செய்யும் இடத்தில் – எனது செக்‌ஷனில் செய்முறைப் பயிற்சிக்காக வந்திருந்தாய். உன்னுடன் மூன்று பெண்களும் ஒரு ஆணும் வந்திருந்தார்கள். பெண்கள் நிறையப் படிக்க வேண்டும், வாழ்க்கையில் அவர்கள் உன்னத நிலையை அடைய வேண்டும். அதில் எனக்கு மாற்றுக்கருத்து இருந்ததில்லை.

ஒன்றைக் கவனித்தீரா? நான் உன்னைச் சந்தித்து ஒரு மாதத்திற்குள்ளேயே உன் மீது கண் வைத்துவிட்டேன். உனது திறமைகள் கூட என்னை வியப்பில் ஆழ்த்தின. உன்னுடைய அகன்ற முட்டைக்கண்களில் சொக்கிவிட்டேன். நான் உன்னைக் காதலிக்கின்றேன்’ என்று சொல்லாமல்திருமணம் செய்ய விரும்புகின்றேன்’ என்றுதான் சொன்னேன். காதல் என்ற ஒன்றை நீ விரும்பமாட்டாய் என்பதை உனது நடவடிக்கைகள் மூலம் அறிந்துகொண்டேன். தினமும் திருநீற்றுக்குறியும் சந்தணப்பொட்டுடனும் திரியும் சாமியார் கோலம் உன்னுடையது. எனக்கும்கூட காதலில் அவ்வளவு அக்கறை கிடையாது. என் நண்பர்கள் `நீ அழகில்லை. குட்டையான தோற்றம் கொண்டவள். நாகரீகமான ஆடைகள் அணியத் தெரியாது’ என்றெல்லாம் என்னைக் கேலி செய்தார்கள்.

ஆனாலும் என்ன? உன் பதில் என்னை சிந்திக்க வைத்தது.

`நான் படிக்க விரும்புகின்றேன்’

என்னுடைய கேள்விக்கு நான் உங்களை விரும்பவில்லை’ என்று சுருக்கமாகச் சொல்லி வெட்டியிருக்கலாம். பிரச்சினை அத்துடன் முடிந்திருக்கும். ஆனாலும் நீ அப்படிச் சொல்லவில்லை.காத்திருங்கள்’ என்ற அர்த்தத்தில் நான் அதை எடுத்துக் கொள்வதா?

இடியப்பச்சிக்கலில் சிலகாலம் நான் உன்னைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டேன். எங்களுக்கான தொடர்பு சரிவராமல் போகக்கூடும் என்ற கணத்தில், ஞாபகத்திற்காக உன்னைக் கொண்டு ஒரு புத்தகத்தின் சில பக்கங்களைப் பிரதிபண்ணித் தரமுடியுமா என்று கேட்டேன். சுப்பீரியர் என்ற முறையில், கொஞ்சம் அதிகாரத்துடன் அப்படி நான் கேட்டதாக நீ நினைக்கக்கூடும். இருப்பினும் மறுக்காமல் மணிமணியான உன் கையெழுத்தில் எழுதித் தந்தாய்.

இருப்பினும் உள்மனதில் இருந்துகொண்ட மிருகமொன்று, இதையும் செய்து பார்த்துவிடு என்றது. ஒரு புரளியைக் கிழப்பி தீர்க்கமானதொரு முடிவை எடு என தினமும் என்னைத் தொந்தரவு செய்தது. ஒரு கடிதம் ஒன்றை எழுதி உன்முகவரியிட்டு அனுப்பி வைத்தேன். ஒருவேளை கடிதம் உன் கையில் கிட்டாமல், உன்குடும்பத்தில் வேறொருவரிடம் சிக்கிவிட்டால் என்னும் கள்ளநோக்கில் அதற்கொரு உபாயமும் செய்து வைத்தேன்.

`அன்பின் நண்பிக்கு,

உன் கடிதம் கிடைத்தது. உன் குடும்பம் பற்றிய தகவல்கள் எல்லாம் அறியத் தந்ததற்கு நன்றி. அண்ணா தங்கைகளின் மத்தியில் உன்னுடைய நிலைப்பாட்டையும் தெரிவித்திருந்தாய். பெற்றோரின் கண்டிப்பு பற்றியெல்லாம் எழுதியிருந்தாய்.. ‘

இப்படியெல்லாம் கடிதத்தில் எழுதியிருந்தேன். பார்ப்பவர் கண்ணுக்கு, நீ எனக்கு முன்பு ஒரு கடிதம் எழுதியிருந்தாய் என்ற தோற்றம் கொடுக்கும் வகையில் அந்தக் கடிதத்தை வரைந்திருந்தேன். எப்படியோ அந்தக் கடிதத்தை நீயும் படித்திருப்பாய். ஆனாலும் எந்தவித பிரச்சினையும் உன்னால் கிழம்பவில்லை. என்னில் நீ கொண்டிருக்கும் மரியாதையை அது உணர்த்துவதாக நான் நினைத்தேன்.

நான் எந்தவொரு கடிதமும் எழுதவில்லை’ என்பதற்கு எத்தனை தெய்வங்களையெல்லாம் நீ சாட்சிக்கு அழைத்திருப்பாய் என்பதை நான் அறிவேன். ஒரு பெண் இவ்வளவு நல்லவளாக இருப்பது என்பது என் நெஞ்சை மேலும் கிளறி உன்மேல் உன்மத்தம் கொள்ளவைத்தது. உன்னுடைய நோக்கம் எதுவெனத் தீர்க்கமாகத் தெரிந்ததும் விலகிக் கொண்டேன். உன் நோக்கம் பல்கலைக்கழகப் படிப்புடன் மட்டுப்படுத்துவதாக இருந்திருந்தால், காத்திருந்திருப்பேன். ஆனால் உனதுவெளி’ பெரியது என்பதைப் புரிந்து கொண்டேன்.

கடிதத்திற்கான பலன் கிட்டயபோது காலம் கடந்துவிட்டிருந்தது. எனக்குத் திருமணம் நிட்சயம் செய்யப்பட்டிருந்தது.

உன் அண்ணா `எங்கள் இருவரினதும் எதிர்காலம்’ குறித்து என்னைச் சந்திக்க விரும்பியபோது, நான் என் திருமணதிற்கான அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குடுத்துக் கொண்டிருந்தேன்.

இன்று?

நீ உனது நோக்கத்தை எட்டிவிட்டாய். ஆனால் அதுவே பூரணத்துவமான வாழ்க்கை என நீ நினைக்கின்றாயா? உனது திருமணத்தைத்தான் நான் சொல்கின்றேன். நிட்சயமாக உனது பெற்றோர்கள் உனக்கொரு திருமணத்தைச் செய்து வைக்கவே விரும்பியிருப்பார்கள். ஆனால் நீ… படிப்பை முடித்து, உன் நோக்கம் நிறைவேறியபின் அதற்கான காலம் கடந்துவிட்டிருந்ததை உணர்ந்திருப்பாய், அல்லது உண்மையிலேயே அப்படிப்பட்ட சிந்தனை உனக்கு இல்லாமலும் இருந்திருக்கலாம்.

நீ இத்தனை வருடங்களாக தொழிலும் வீடுமாக – தனியாக இருப்பதாக அறிந்தேன். அப்பாவுடன் இருந்திருக்கலாம். அவருக்குக்கூட கஸ்டத்தைக் குடுக்க நீ விரும்பவில்லை.

இவ்வளவும் அறிந்த பின்னரும், எப்படி உன்னைச் சந்திக்காமல் நான் இலங்கை திரும்புவேன். வாழ்க்கை மீண்டும் ஒருதடவை நம் சந்திப்பை விரும்பும்போது, நாம் ஏன் அதற்குத் தடையாக இருக்க வேண்டும்?

நீங்களும் சந்திப்பதை விரும்பியிருந்தீர்கள்.


இரவு என்னால் நன்றாக உறங்க முடியவில்லை. மனசில் ஒரு கொந்தளிப்பு. இன்றைய நாளில் உன்னுடைய நிர்மலமான முகத்தின் வண்ணத்தை நான் பார்த்தேன். வெள்ளை மனதின் பேரழகைத் தரிசித்தேன். நான் நினைப்பது போல் அல்லாமல், அதற்கென்றொரு மறுபக்கம் இருக்கின்றதா? நான் வீட்டிற்குப் போவதற்கான சகல வழிகள் இருந்தும், இரவு இங்கே என்னை ஏன் தங்க வைத்தாய்? நான் கூட அதற்கொரு மறுப்பைச் சொல்லி நடையைக் கட்டியிருக்கலாம்.

நீ உன் வாய் திறந்து எதுவும் சொல்லாமல், எப்படி நான் உன்னைப் புரிந்து கொள்வது?

நான் தானே என் உட்கிடக்கையை முப்பது வருடங்களுக்கு முன்னமே சொல்லிவிட்டேனே! நீ கூட உன் பதிலை அறுத்து உறுத்துத்தான் சொன்னாய். `நான் படிக்க வேண்டும்’ அதன் விளக்கம், அதன் எல்லை இன்று கடந்துவிட்டதா?

ரேப் றக்கோடரின் சத்தத்தை மெதுவாகக் குறைத்து வைத்து, அதன் ஆளியை அமுக்கினேன்.

`பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்’

ஆண்குரலைத் தொடர்ந்து பெண்குரல் சோடி சேர்கின்றது.

`கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்’

ரேப் றக்கோடரை நிறுத்திவிட்டு, படுக்கையில் இருந்து எழுந்து கொண்டேன். மெதுவாக அடியெடுத்து அவளின் அறை நோக்கிச் செல்கின்றேன். மணிக்கூட்டு முள்ளின் சத்தம் தவிர்ந்து வேறு எந்த ஒலிகளும் இல்லை. அவளின் அறைக்கதவு அகன்று திறந்தே கிடக்கின்றது. உள்ளே கட்டிலில் அமர்ந்தபடி மடிக்கணினியில் ஏதோ பார்த்தபடி இருந்தாள். படுக்கையின் மேல், முப்பது வருடங்களுக்கும் முன்னர் எடுத்த புகைப்படம் முட்டைக்கண் சிமிட்டுகின்றது. வேல் போல் புருவம் கொண்டு, மான் போல் மயக்கி, வண்ணங்கள் காட்டுகின்றது. அப்படியே மெதுவாகத் திரும்பி எனது அறை நோக்கி நகரும்போது,

“என்ன உறக்கம் வரவில்லையா? வாருங்கள். உள்ளே வாருங்கள்.”

அவளின் கால்புறம் அசைந்து போர்வை விலகுகின்றது. கொலுசு வெண்ணிறத்தில் மினுக்குகின்றது.

அறையினுள் இரண்டுபக்கச் சுவர்களோரமும் புத்தக அலுமாரிகள் இருந்தன.

“உங்கள் புத்தகங்களை நான் பார்க்கலாமா?”

“தாராளமாக!”

ஒவ்வொரு புத்தகமாகப் பார்த்துக் கொண்டு வந்தேன். தலைப்புகளே புரியாத ஆங்கிலப்புத்தகங்கள், என்னை வியக்க வைக்கின்றன. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது நானே முதல்மாணவனாக வருவேன். பின் பல்கலைக்கழகம் சென்றபோது, என்னைவிடப் பல புத்திசாலிகள் இருந்ததைக் கண்டேன். இவளோ பல்கலைக்கழகத்திலேயே `பொஸ்ற்’ கிளாசில் தேறி, பி.எச்.டி வரைக்கும் சென்று இன்னமும் படித்துக்கொண்டே இருக்கின்றாள்.

இமைக்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்த அவள், “உங்களை ஒன்று கேட்கவேண்டும். முப்பது வருடங்களுக்கு முன்னர் நடந்தவை. அப்போது ஐ பி கே எவ் இருந்த காலம். நாட்டுச் சூழ்நிலை காரணமாக, நான் அப்போது வீட்டைவிட்டுப் பொதுவாக வெளியே எங்கும் செல்வதில்லை. அப்படி இருந்தும் என்னுடைய கிராமத்தில், இரண்டொரு தடவைகள் உங்களை நான் வீதியில் சந்தித்திருந்தேன். ஒரு தடவை என்னுடைய வீட்டுக்கு முன்னாலும்…”

“சந்தித்தீர்கள். சரி… ஏதாவது என்னுடன் கதைத்தீர்களா?”

“உங்களுக்கே தைரியம் இல்லை. நான் எப்படிக் கதைப்பதாம். இப்போது அதைப்பற்றி ஏன் கேட்கின்றேன் என்றால், உங்கள் கிராமத்திற்கும் எங்கள் கிராமத்திற்குமிடையே 15 கிலோமீட்டர்கள் இடைவெளிதான் இருக்கும். இடையே குறைந்தது ஆறு, ஐ பி கே எவ் காம்புகளாவது இருந்திருக்கும். அந்த இக்கட்டான நேரத்தில், எப்படி தைரியத்துடன் இவற்றையெல்லாம் தாண்டி வந்தீர்கள்? எத்தனை தடவைகள் அப்படி வந்திருப்பீர்கள்?”

”நாற்பது தடவைகள் வந்திருக்கின்றேன் என்றால் நீங்கள் நம்புவீர்களா?”

“நாற்பது?”

”நாற்பத்தோராவது தடவை புறப்பட்டேன். ஆனா உம்முடைய கிராமத்துக்கு வந்து சேரவில்லை. இடையிலை ஐ பி கே எவ் பிடித்துக் கொண்டார்கள். ஐந்துநாட்கள் காம்பில் வைத்திருந்தார்கள்.”

“ஓ… மை கோட்” என்றபடியே மடிக்கணினியை மூடி வைத்தாள். என் கால்களைப் பார்த்தாள். கண்களை தன் இரண்டு கைகளினாலும் பொத்திக் கொண்டாள். நீண்ட நேரமாகத் திறக்கவேயில்லை. விரல் இடுக்குகளினூடாக கண்ணீர் கசிவது தெரிந்தது. அழுகின்றாளா? நிலைமையைச் சமாளிப்பதற்காக, நான் அவ்விடத்தை விட்டு விலகி அறைக்குள் வந்து படுக்கையில் சாய்ந்து கொண்டேன்.

ஒருவேளை நான் தான் அவளை ஏமாற்றிவிட்டேனோ?

“நீங்கள் என்னுடன் வாழப் போகின்றீர்களா?” என்றொரு கேள்வி அவள் என்னைக் கேட்டிருந்தால் என் பதில் எதுவாக இருந்திருக்கும்? அல்லது நான் அப்படியொரு கேள்வியை அவள் முன் வைத்து, “நானும் உங்களைப் போல நிறைவான வாழ்க்கை தான் வாழ்ந்திருக்கின்றேன்” என்றொரு பதிலை அவள் சொல்லியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?

நூல் வேலியைத் தகர்த்து எறியும் எண்ணம் நம் இருவருக்கும் இல்லை. அதன்பின்னர் நாம் இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.

நிர்மலமான விடியல் வேளையில் அவள் என் கால்களைத் தட்டி “ரீயா கோப்பியா வேண்டும்?” என்றாள்.

நான் “உங்கள் விருப்பம்” என்றேன். அவள் சிரித்துவிட்டு “ரீ போட்டுக் கொண்டு வாறேன்” என்றாள்.

இயற்கை நம் இருவரையும் ஏன் இப்போதுகூடச் சேர்த்து வைக்கவில்லை? இருவருக்குமே எந்தவித கடமைகளும் இப்பொழுது இல்லைத்தானே!

வீட்டை விட்டுப் பிரியும்போது, அவள் என் கையை மெதுவாகப் பற்றியபடியே, “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

நான் குனிந்து அப்படியே கையை உயர்த்தி, அவளது கை மணிக்கட்டில் முத்தமிட்டேன்.

“அவுஸ்திரேலியா வரும்போதெல்லாம் என்னை வந்து சந்தியுங்கள். மருந்துகளைத் தவறாது எடுங்கள். அடிக்கடி ரெலிபோனில் கதைப்போம்.”

`லிப்ற்’ இருக்குமிடம் வந்து வழியனுப்பி வைத்தாள்.

தொடர் மாடியை விட்டுக் கீழ் இறங்கியதும், அண்ணாந்து பார்த்தேன். ஓங்கி வானளாவி நிற்கும் இந்தக் கட்டடத்தில், அவளது குடியிருப்பு எதுவாக இருக்கும்? கண்கள் துளாவுகின்றன. `உயர’ என்பதைத் தவிர வேறென்ன சொல்லமுடியும்!

– செம்பியன் செல்வன் ஆ.இராஜகோபால் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் (2021) முதல் பரிசு பெற்றது.

– ஞானம் சஞ்சிகையில் (2022) வெளிவந்தது.

Sudhakar கே.எஸ்.சுதாகர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகின்றார். இவரின் முதல் சிறுகதை "இனி ஒரு விதி செய்வோம்" ஈழநாடு வாரமலரில் வெளியானது. இவர் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழை, வீமன்காமத்தைச் சேர்ந்தவர். தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் ஆங்கில மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பயின்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர். நோர்வே தமிழ் சங்கம்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *