பாகம் இரண்டு
கதையாசிரியர்: நிர்மலா சந்திரசேகர்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 117

பரபரப்பான சென்னையின் முக்கியமான பிரதானமான ஏரியாவில் உள்ள ஹோட்டல் அது, பரபரப்பான சாயங்கால நேரம். எக்கசக்கமான கூட்டம்.
உள்பக்க ஹாலில், கடைசி நாலு சேர் போடப்பட்டிருந்தது.முதலில் உட்கார்ந்திருந்த முப்பது வயது வாலிபர், போன் பார்த்தபடியே அமர்ந்திருந்தவர்,
எதிர் வரிசையில் அமர்ந்திருந்த, அவர் வயது ஒத்த வரை பார்த்ததும் தெரிந்தவர் போல, “ஹாய் ரவி எப்படிஇருக்கே? என்ன இந்த பக்கம்?” என்று கேட்டவுடன், ரவி எழுந்து வந்து அவர் அருகில் உள்ள நாற்காலியில் வந்து அமர்ந்தவர்.
“எத்தனை தடவை சொல்றது, என்னை ரவின்னு கூப்பிடாதே, கூப்பிடாதேன்னு .நான் ரவி இல்லை, ரவிமோகன்னு கூப்பிடுன்னு சொல்றது” என்றார் ரவி என்கிற ரவிமோகன்.
“இப்ப நீயும் அதே தப்புதான் பண்றே ரவி மோகன். நான் சிவாவா? சிவகார்த்திகேயன் தானே”
“ஆமா” என்றார் ரவி மோகன்.
“பின்ன ஏன் சிவான்னு கூப்பிடறே” என்று செல்லமாக கோபித்துக்கொண்ட சிவகார்த்திகேயன்.
“என்ன ஆர்டர் பண்ண. ரவி மோகன்” என்றார் சிவா என்கிற சிவகார்த்திகேயன்.
“சாம்பார் இட்லிக்கு தானே இங்க வர்றோம். அத பண்ணிட்டேன்” என்றார் ரவி மோகன்.
“எனக்கும் சொல்லிடு” என்றார் சிவகார்த்திகேயன்.
“அட நம்ம மாலா சாரி லீலா வர்ராடா” என்றார் ரவி மோகன்.
“ஹலோ லீலா இங்க வந்து உட்காரு”
எங்கேயோ குரல் வரவே, குரல் வந்த திசையை கேட்டு இவர்கள் இருக்கும் பார்த்து இடத்தை கண்டு படித்து அவர்கள் பக்கம் வந்தமர்ந்தாள்.
“உனக்கும் இட்லி, சாம்பார சொல்லிடறேன்” என்று இவர்கள் டேபிள் சர்விஸ் பார்க்கும் சர்வரிடம் ஆர்டர் பண்ணுவிட்டு,
“என்ன லீலா இன்டர்வுயூ போனது என்னாச்சு” என்றதற்கு,
“எனக்கு அதுல இஷ்டமில்லை. அப்பா சொன்னதால போனேன்”.
“ஆமா நம்ம ட்ரீம் ப்ராஜக்ட் என்னாச்சு. பராசக்தி பார்ட் 2 எடுக்றோம் இல்ல க்ளைமாக்ஸ்ல ரவிமோகன் இறக்கல. நம்ம கதை 2026 ல வர்றாப்போல ஆரம்பிக்கறோம். இந்த ‘டூ ‘ல செம காஸ்ட்யூம் இருக்கனும் எனக்கு” என்றாள் லீலா.
“எனக்கும் ஒரு ஜோடி இருக்கனும்”. இது ரவி மோகன்.
அதற்குள் பக்கத்து டேபிளுக்கு பூரி செட் வைக்க வந்த பிரகாஷ் என்கிற சர்வரை இவர்கள் பார்க்க,
“ஹேய் பிரகாஷ், ஜீவீ பிரகாஷ் வா வா” என்றவுடன் கையில் இருந்த பூரி செட்டை கேட்டவர்களிடம் வைத்து விட்டு இவர்களிடம் வந்து பிரகாஷ் அமர்ந்து கொண்டார்.
“சரி ஏதாவது பாட்டு செட்டாச்சா இல்லையா?” என்றார் ரவி மோகன்.
“ஆச்சு ஆச்சு. ரவி மோகன் சார் ஜோடி ஒருபக்கம், சிவா சார்” என்றதும்,
“நோ நோ சிவகார்த்திகேயன்னு சொல்லனும் னு, எத்தனை தடவை சொல்றேன்” என்றதும்,
“சரி சரி சிவகார்த்திகேயன் சார் ஒரு பக்கம் டூயட்பார்ட் டூல”
“எத எதிர்க்கலாம்.மொழி வேண்டாம். இந்த தடவை வைப்ஃ ஐ எதிர்க்கலாம் என் வைப்ஃ டார்ச்சர் தாங்கல.” என்றார் ரவி மோகன்.
“அப்ப டூயட் ஷாங் கேக்கற.” இது ஜீவீ பிரகாஷ்.
“அது ட்ரீம் ஸாங்கா மாத்திடலாம். நெறய காஷ்டீயூம் இருக்கனும்.பாரீன்ல ஷூட்டிங். ஜீவீ பிரகாஷ் நோட் பண்ணிக்கோ.”
“ரவிமோகன் சார், உங்க ரெண்டு பேருக்கும் நானே ஜோடியா நடிக்கறேனே டபுள் ஆக்ட்” இது லீலா.
தூரத்தில் இவர்கள் உரையாடலை காதால் கேட்க முடியவில்லை என்றாலும், இவர்களை பார்த்தவாறே இருந்த ஹோட்டல் ஓனர் சண்முகம்,
அருகில் ஆர்டர் எடுத்துக்கொண்டிருந்த சர்வர் தேவாவை கூப்பிட்டு,
“ஏன் தேவா, யார் இவங்க மூனு பேரு. கூட நம்ம பிரகாஷ் வேற வேல செய்யாம, அவங்க கூட ஒக்காந்து அரட்ட அடிச்சிட்டு. கூப்பிடு அவன. போய் வேலைய பாக்க சொல்லு”.
“சார் அவங்க மூனு பேரும் இப்படி தான் அடிக்கடி சினிமா சம்மந்தமா பேசுவாங்க ‘செகண்ட் பார்ட்’ எடுக்கறேன்னு ‘டிஸ்கஷன்’ல இருப்பாங்க”
“சரிப்பா அவங்க பேசட்டும், பெறகு சாப்பிட்டு போகட்டும் .இந்த பிரகாஷ்ப்பையன் வேல நேரத்தில, அதுவும் பிஸியான நேரத்தில் இப்படி அரட்டை அடிக்கலாமா.போய் வேலய பாக்க சொல்லுப்பா.”
“முடியாது சார் கோவிச்சிப்பான். பெறகு வேலய விட்டுடுவான். அவன் அப்பா தான் இங்க ‘சீப் குக்’. அவர் கைப்பக்குவத்துக்கு தான் இந்த ஹோட்டல் ஓடுது.”
“அவங்க நாலு பேரும் பேசற வரைக்கும் பேசிட்டு போகட்டும் விடுங்க சார். சலிச்சதும் அவங்களே போயிடு வாங்க சார்” என்றான் தேவா.
“நான் போயி கேட்டா என்ன ஆகும்?” என்றார் சண்முகம்,
“இப்படி தான் சார் முன்ன இருந்த ஓனர் கேட்டாரு.”
“ஏன் என்னாச்சு அவருக்கு?”
“அவர் போய் கேட்கும் போது, ‘இட்லி கடை’ பார்ட் டூ பத்தி டிஸ்கஷ் பண்ணி பேசிட்டிருந்தாங்க”
“இவர் போய் கேட்க போனவரை, நீங்க தான் இட்லி கடை பார்ட் டூ ப்ரடூயூஸ் பண்ணனும்னு போட்டு ஒக்கற வச்சி”
“ஓனர் சாருக்கு, ப்ரஷர் ஏறி ஸ்ட்ரோக் வந்து, ஹோட்டல வந்த வெலைக்கு ‘ஒனர் வைப்ஃ’ வித்துட்டு, இப்ப இந்த தெரு கடைசில சமோஸா, வடைனு தள்ளு வண்டில விக்கறாங்க”.
“ஐய்யய்யோ அப்படி அறுப்பாங்கலா?”
“ஆமா சார்.ஒரு ஒரு மணி நேரமோ, ரெண்டு மணி நேரமோ பேசிட்டு போகட்டும் விட்டுடுங்க சார்.” என்றதும்,
சண்முகம் கல்லாவை விட்டு எழுந்தார்.
“தேவா கொஞ்சம் கல்லாவை பாத்துக்கோ. நான் போய் என்ன ஏதுன்னு கண்டுக்குனு வர்றேன்” என்று பராசக்தி 2 வை நெருங்கினார்.
தேவா, “இவர் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாரோ.பிபி எகிர போகுது”.
சண்முகம் அவர்களை நெருங்கி,
“என்ன தம்பிகளா சாப்பிட்டாச்சா. என்ன பிரகாஷ் இவங்களை நல்ல கவனிச்சியா.”
கோபித்துக்கொள்வார் என்று நினைத்த இவர்கள், இப்படி வாஞ்சையுடன் கேட்டதும் குதுகலமானார்கள் நால்வரும் .
“சார் பராசக்தி படம் நீங்க பார்த்திரிப்பீங்கன்னு நினைக்கிறேன். ‘இந்தி எதிர்ப்பு’ பத்தனது தான். பார்ட் 2 எடுத்தா சேன்ஸே இல்ல நல்லா வரும். அத பத்தி தான் டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தோம்” என்றார் சிவா.
“புரொடியூசர் பத்தி தான் பேசிட்டிருந்தோம். நீங்களே வந்துட்டீங்க. பண்ணிடலாமா சார்.” என்று கேட்ட பிரகாஷிடம்.
“தாராளமா அதுக்காக தான் நானே எழுந்து வந்தேன்.” என்றார் சண்முகம்
“எப்ப ஆரம்பிக்லாம்” என்றதும் நால்வரும் உற்சாகமாயினர்.
குஷியில் “சார். இதில லீலா டபுள் ரோல் பண்ணிடலாம்னு சொல்றா. 2026ல ஆரம்பிக்கறோம் கதையை. நம்ம எஸ்.கே தான்” என்ற ரவிமோகனை இடைமறித்த சண்முகம்,
“பராசக்தி 2ல நான்தான் ஹீரோ ரோல் பண்ணப்போறேன். ரவியும் சிவாவும் ஹீரோவுடைய சகோதரர்கள்.”
“சார், ஹீரோ சிவகார்த்திகேயன்னுக்கு ஒரு ப்ரதர் தான் சார் படத்தில.” என்று கேட்ட பிரகாஷிடம்,
“இல்ல இல்ல, நான் சொல்றத நல்லா கேளுங்க. நான் ஹீரோ சிவாஜி”
ரவி மோகனை பார்த்து “நீ ஜட்ஜ் சகஸ்வரநாமம்”
சிவகார்த்திகேயனை பார்த்து “நீ எஸ்.எஸ்.ஆர்.கால் ஊனமானவர்.”
“லீலா, நீ பண்டரிபாய். ‘புது பெண்ணின் மனதை தொட்டுப்போனவரே உங்க எண்ணத்தை சொல்லி விட்டுப்போங்கன்னு பாடனும்….”
“பிரகாஷ், நீ நல்லா ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ன்னற மாதிரி ஷாங்.”
“‘தா தா தா..உன் இதயத்தை தா தா’ ன்னு நான் லீலாவைப்பார்த்து பாடறா மாதிரி எனக்கு ஒரு ‘ஷாங்’ கண்டிப்பா வேணும்.” என்று அவர் மேலே சொல்ல சொல்ல,
நால்வரும் வெலவெலுத்து போக,
“என்ன, என்ன எல்லாரும் மயங்கி சாய்ஞ்சிடீங்க?” என்ற சண்முகம்,
“டேய் தேவா, தேவா என் ட்ரயர்ல அந்த பி.பி மிஷின் இருக்கும், சீக்கிரமா எடுத்து வாடா..”.