பச்ச குதிர

டேய் மச்சான் அவ என்ன பாக்குறளா இல்லையா? வேற எங்கியோ யாரையோ பாக்குற மாறி தெர்தே.
இல்ல மச்சான் உன்னதான் பாக்குறா, நாமளும் தெனம் இதேநேரம் வந்து பாக்குறோம். அவ செய்யுற அலட்டலுல தெர்துடா.
என்னாவோ மாச்சான் நீ சொல்றன்னு நம்புறேன் அப்பால அல்வா குட்த்துடபோறா.
மாணிக்கமும் பெருமாளும் ஒரே ஸ்கூலில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் பக்கத்து பக்கத்துவீடு வேறு .
பெருமாளுக்கு அப்பா கிடையாது அம்மா, அண்ணன் தங்கை இவன் நடுவில் பிறந்தவன் நினைவு தெரியும் முன்பே அவன் அப்பா தவறிவிட்டார் .அவர் விறகு தொட்டி (விறகு கடை) வைத்திருந்தார் அதை இப்போது அம்மா தான் பார்த்துக்கொள்கிறார். உதவியாக அண்ணனும் பெருமாளும் பார்த்துக்கொள்கிறார்கள் ,விறகு பிளந்து தருவதற்கு கூலிக்கு ஆட்கள் வருவார்கள் இரவுகளில் மாட்டுவண்டியில் பெரிய பெரிய மரத்துண்டாக வருவதை கூலிக்கு ஆள்வைத்து அறுத்து பிளந்து விறகாக விற்பனை செய்வார். பெருளாதாரத்தில் கொஞ்சம் பின்தங்கிய குடும்பம் சற்று உள்ளடங்கிய தெருவில் நடுவில் அவன் வீடு, முன்புறம் பாதியில் விறகு தொட்டியும் ,தொட்டியை ஒட்டி இடதுபுறம் இரண்டடி சந்துவிட்டு வரிசையாக மண்னை வைத்து கட்டப்பட்ட நான்கு
வீடுகள். அதில் கடைசி பெருமாளின் வீடு வீட்டின் பின்புறம் பெரிய இடம் அதில் பலவகையான மரங்கள் , வெட்டப்பட்டு பிளக்கப்பட்டு விற்பனைக்கும், பிளப்பதற்கும் தயாராக இருக்கும் .அதிகமாக சீமை முள்மரம் தண்டாகவும், கிளைகளவெட்டி கொம்பாக நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். புளியமரம்,தூங்குமூஞ்சி மரம் ,கருவேல மரம் அதிகமும், சவுக்கு மரம் குறைவாகவே வரும் , பெயர் தெரியாத காட்டுமரங்கள் முண்டும் முடிச்சும்மாக நிறைய வரும், வேரில்முடிச்சி உள்ள மரங்கள் அதிகம் ஹோட்டலுக்கு தான் போகும் .
அதிகம் முடிச்சிள்ள மரங்களை சம்மட்டி பெரிய உளி கொண்டு தான் பிளப்பார்கள். அது ஒரே அளவாக வராது, முடிச்சியுள்ள வேரின்பகுதிதான் நின்று எரியும் அதிக நேரம் தாங்கி எரிந்து ,அதன் கங்கும் கரியும் நிறைய கிடைக்கும். மரம் அடுக்கியதுபோக சிறிய அளவில் மறைப்பு வைத்து குளியல் அறையும் காலை கடன்களை கழிக்க ஆண்களும் பெண்களும் சற்று தொலைவில் இருக்கும் ஏரிக்கு போவார்கள்.
ஒரே ஒரு அறை போல வீடு ஓடு போடப்பட்டது, நாலு வீடும் ஒரே அளவாகவும் கொஞ்சம் நீளமாக இருக்கும் ,வெளியே ஓடு நீட்டப்பட்டு கட்டில் போடும் அளவு இடம், வீட்டினுள்ளே எதையும் வைத்து மறைக்காமல் அடுப்பு. அதிலேயே சமையல் இரவினில் அம்மாவும் தங்கையும் உள்ளே படுத்துக்கொள்வார்கள் பெருமாளும் அண்ணனும் கட்டிலில், தரையில் யாரவது ஒருவர் மாறி மாறி படுத்துக்கொள்வார்கள் குளிர்காலத்தில் நால்வரும் உள்ளே தான் .
மாணிக்கமும் பெருமாளும் தினமும் தொட்டிக்கு வெளியே பெஞ்ச் போல உள்ள கருங்கல் போடப்பட்ட இடத்தில் உட்கார்ந்து இரவு முழுவதும் நேரம் போவதே தெரியமல் பேசிக்கொண்டு இருப்பார்கள். சமயத்தில் அங்கேயே படுத்து தூங்குவதும் உண்டு.
பெருமாளு அவ உன்னத்தான்டா பாக்குறா ,ஆன பேசமாட்டேங்குறா இந்த மாசத்துகுள்ள அவள்ட்ட நீ பேசனும்டா என்றான் மாணிக்கம்.
அப்டியாடா சொல்ற ஆனா இவ்வள நாளா போயி பாக்குறோம் பாக்குற மாறி தெரியுது ஆனா பேசவரமாறி ஜாட தெரியலியே.
உனக்கு சமயத்துல மூள வேல செய்யாது பரபரப்பா ,அவ செய்யுற காரியத்த பாத்தா அப்டிதாண்டா தெரியுது.
பெருமாளும் மாணிக்கமும் இப்டி விளையாட்டு போக்காக முன்பு செய்த போது தான் ,அது நடந்தது ஸ்கூல் விட்டு வரும்போது கீழே கிடந்த மரக்குச்சியை எட்டி உதைத்து புட்பால் ஆட, அது சற்று தள்ளி மார்பில் புத்தகத்தை அணைத்தபடி வந்த அவளின் மேல் விழுந்தது. திட்டாமல் லேசாக சிரித்து விட்டு போக பெருமாளுக்கு தலைகால் புரியவில்லை முதல் முதலாக அவளை பார்த்தவன் திகைத்து நின்றுவிட்டான்.
சற்று ஒல்லியாகவும் உயரமாகவும் முன்புறம் படிய வாரிய , பின்னால் குதிரைவால் போல பின்னாமல் ரிப்பன் வைத்து கட்டப்பட்ட தலைமுடி, எப்பவாவது அபூர்வமாக இரட்டை ஜடை பின்னால் வருவாள் அட்டகாசமாக இருக்கும் . முகம் பார்பதற்கு எப்பொழுதும் பளிச்சென்றும், பொலிவு சற்றும் குறையாமல் பார்க்க வைக்கும். செம்பு நிறம், காதில் இருபக்கமும் கொஞ்சம் நீளமாக தொங்கும் வெள்ளை கலர் தொங்கட்டானோ இல்லை சில நாட்கள் வெள்ளை கலர் சாதாரண பிளாஸ்டிக் ஜிமிக்கியோ இருக்கும். எப்பொழுதும் வெள்ளை கலர்தான் போடுவாள் , கண்கள் ஒன்னரை கண்ணாக ஈர்ப்புடனும் சதா புண்ணகைக்கவும் செய்யும்.
சிலருக்கு ஒன்னரை கண்கள் இருந்தால் ஒரு மாதிரியாக இருக்கும் இவளுக்கு அப்படி தெரியாது, ஸ்கூல் யூனிபார்மில் மேலே வெள்ளை சட்டையும் கீழே நடுவில் வெள்ளையும் மேல்கீழ் இருபுறமும் இளநீல நிற பாவாடையும் , அணிந்து நடக்கும் போது (சாதாரண உடையில் ஒரே ஒரு முறை பார்த்தது) வேகமாவும் கொஞ்சம் ஒரு புறம் சாய்ந்து நடப்பாள் அதை வேறு அடிக்கடி சொல்லிக்கட்டுவான் பெருமாள்
மச்சான் அவ நடைய பாத்தியாடா வேகமா நடந்தாலும் ஒரு “கிக்” இருக்குல்ல?
ஆமாடா ஒரு பக்கமா சாஞ்சி போவும் மாடு மாறி என்பான் மாணிக்கம்.
வழக்கம் போல அவளை பாப்பதற்கு ஸ்கூல் விட்டவுடன் வேகமாக ஓடி வீட்டிற்கு வந்து புத்தகப் பையை வைத்து விட்டு, வீட்டில் அம்மாவின் “எங்கடா இவ்வளவு அவசரமா போற” என்ற கேள்வியை காதில் வாங்கியபடியே தெருவின் குறுக்கே நடந்து அங்கிருந்து, நேரே வேகமா மார்கெட் முனைவரை வந்து வலதுபுறம் திரும்பி இடதுபுறம் உள்ளபடியில் ஏறி பாண்டுரெட்டியார் கடையை தாண்டி ,கறிவேப்பிலை வாழை இலை கடைகளை தவிர்த்து பின்னால் இருக்கிற ,காலையில் மட்டும் ஆட்டுகறி வெட்டும் இடத்தின் வீச்சத்தை மூக்கு ஏற்காமல் முகம் சுளித்து பின்னால் இருக்கும்படியில் இறங்கி நின்று அவள் வருவதை எதிர்பார்த்து நிற்பது வழக்கம். ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் மார்பில் புத்தகத்தை இடதுகையால் அனைத்தவண்ணம் அவள் நடந்து வருவதை பார்பான் .அவள் தெருமுனை போகும்வரை பார்ப்பது வழக்கம். அவளும் ஒரிரு முறை திரும்பி பாப்பாள் அவள் கண்களில் பல சமயம் ஆச்சர்யக்குறியை கண்டிருக்கிறேன் .அவ்வளவு சீக்கிரம் அங்க வந்ததை எதிர்பாராததை போல இருக்கும். அது தான் அவளை மேலும் கவனிக்க தூண்டியது.
மச்சான் எவ்வளவு நாள்டா இப்டி அலைவ சீக்கிரம் ஒன்னோட லவ்வ சொல்லிடுடா அடுத்தது ப்ளஸ் ஒன் போப்போறம் அப்பால ஒன் இஸ்டம் என்றான் மாணிக்கம்.
இன்னும் கொஞ்ச நாள் பொறு” ஒய்” சொல்லிடலாம் சிரிக்கிறா இருந்தாலும் கொஞ்சம் ஓதறலா இருக்குடா , சீக்கிரம் சொல்லிடுவோம்.
மாணிக்கம் என்னாது சொல்லிடுவோமா என்ன மச்சான், என்னையும் சேக்குற நீ கேளு நீதான பின்னாடிய அலையுற .அவ வேற ஒன்னையே பாக்குறா இது சரிபடாதுடா சீக்கிரம் சொல்லிடு தொனைக்கு வேனும்னா வர்றேன் என்றான்.
ஹே ஆசைய பாரு நாதாண்டா ரூட்டுவுட்டது நா சொல்லிடுறேன் நீ தொனைக்கு வந்தாபோதும். சொல்லும்போது மட்டும் தள்ளிநின்னுக்க.
மச்சான் லட்டரா எழுதி குடுத்துடலாமா அது இன்னும் ஈசியா இருக்கும்ல.
ஆமாடா அப்பதான் கையோட கையா ரெண்டு பேரையும் மாட்டிவுட கஷ்டமே இருக்காது, அதெல்லாம் வேண்டாடா அப்படினா நா வரல கடைசிபரிட்சை எழுதுன அன்னக்கி பேசிடு அதுக்கப்புறம் ஸ்கூல் லீவுவிட்டு வாங்க சரியா?
ஆமா அதுவும் சரிதான் நல்ல ஐடியா. ஆனநமக்கு பரீட்சை அன்னிக்கு அவளுக்கு ஸ்கூல் இருக்குமா? தெரியலயே விசாரிக்கனும்டா.
ஸ்கூலில் இதுதொடர்புடைய வாத்தியாரிடம் ஏதோ சொல்லி தகவலை வாங்கி விட்டான்.
கடைசி பரீட்சை மதியம் ஒரு மணிக்கு முடிந்ததும் நாங்கள் வீட்டுக்கு வந்து ஸ்கூல்வுடுற நேரமாக பார்த்து மார்கெட் பின்னாடி போயி நின்றோம். தூரத்துல அவ வர்றத பாத்ததும் பெருமாளுக்கு ஒரு மாறி படபடப்பா ஆயிட்டான் அவள் கிட்ட நெருங்கியதும்.
கொஞ்சம் தள்ளி பின்னாடிய போனோம் .அவன நா கிள்ளி காது கிட்ட சொல்லி தைரியத்தை கொண்டு வரலாம்ன்னு பாத்தேன்.
கிட்டக்க போயி சொல்லுடா பரதேசின்னு .
ஒரு வழியாகிட்டக்கபோனோம் எனக்கு ஒரே ஒதறலா இருந்திச்சி.
பெருமாளு என்னாங்க ஒரு நிமிசம் நில்லுங்க ஒங்ககிட்ட பேசனும்னான்.
அவ என்னா தம்பி என்னா பேச போறீங்க ரெம்ப நாளா நானும் பாக்குறேன், இங்க வந்து நின்னுகிட்டு கொட்ட கொட்ட என்னயே பாக்குற அவன் ஒனக்கு தொனையா என்னாடா எங்கிட்ட கேக்க போற.
மாணிக்கத்த பாத்து, நீ இங்க வா ஒங்கப்பா எஞ்சினியர் தானே, நானே வந்து சொல்றேன் ரெண் பேரும் எம் பின்னாடியே சுத்துறாங்கன்னு .
எனக்கு நாக்கு மேல ஒட்டி கிச்சி. பேச்சே வரல. பயத்துல கை காலெல்லாம் நடுக்க ஆரம்பிச்சிருச்சி. பெருமாளு நெந்துட்டான் .
அவளே சொன்னா, ஏண்டா பத்தாவது படிக்குற உனக்கு பிளஸ் ஒன்னு படிக்குறவ மேல காதலா? ஒடுங்கடா இனிமே ஒங்கள எம் பின்னாடி பாத்தேன். அவ்வளவு தான் சொல்வேன் அப்புறம் பாத்துக்க .
பெருமாளுபஞ்சரான வண்டில ஓடுன டயாராயிட்டான்,
                ![]()  | 
                                பெயர் - வி.கலியபெருமாள். வயது - 53 புனைப்பெயர் - கலித்தேவன். ஊர் - சொந்த ஊர் தஞ்சாவூர். இப்போதும் தஞ்சை வாசி Cell No- 6383481360 படிப்பு - ITI ELECTRICIAN , D.EEE ELECTRICIAL தொழில் - மோட்டார் ரீவைண்டிங், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் வேலைகள். பிறப்பு, திருமணம், குழந்தைகள். 1971 ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி பிறந்தேன்.. தந்தை விராசாமி தாய் அகிலாண்டேஸ்வரி மூன்றாம் வகுப்பு…மேலும் படிக்க... | 
 கதையாசிரியர்: 
 கதைத்தொகுப்பு: 
                                    
 கதைப்பதிவு: July 15, 2025
 பார்வையிட்டோர்: 17,849  
                                    
                    
                      
                      
                      
விடலை காதலின் உணர்வுகள் மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளார்
சிறுகதைக்கே உரிய கடைசி நேர திருப்புமுனை மிகவும் அருமை